சிபிஎஸ்இ பள்ளிகளில் இரண்டாம் வகுப்பு வரை படிக்கும் மாணவர்களுக்கு வீட்டுப் பாடம் வழங்கக் கூடாது என பிறப்பிக்கப்பட்ட உத்தரவு மாநிலப் பாடத் திட்டத்தில் படிக்கும் மாணவர்களுக்கும் பொருந்தும் என, சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
இதுதொடர்பாக வழக்குரைஞர் புருஷோத்தமன் உயர் நீதிமன்றத்தில் தாக்கல் செய்த மனுவில், "சிபிஎஸ்இ பள்ளிகளில் ஒன்று முதல் மூன்றாம் வகுப்பு வரை படிக்கும் மாணவர்களுக்கு என்சிஇஆர்டி விதிகளை மீறி 8 பாடங்கள் பயிற்றுவிக்கப்படுகின்றன.
மேலும் 1, 2 -ஆம் வகுப்பில் படிக்கும் மாணவர்களுக்கு வீட்டுப் பாடம் கட்டாயமாக்கப்பட்டுள்ளது.
தனியாரிடமிருந்து புத்தகங்களை வாங்க வேண்டும் என்பதற்காக தனியார் பள்ளிகள் குழந்தைகளிடம் இந்த பாடங்களை திணித்து வருகின்றனர்.
அதிகமான சுமையை சுமக்கும் குழந்தைகள் மனதளவில் பாதிக்கப்படுகின்றனர். எனவே சிபிஎஸ்இ பள்ளிகள் என்சிஇஆர்டி பாடத்திட்டத்தை மட்டுமே பின்பற்ற உத்தரவிட வேண்டும்' எனக் கோரியிருந்தார்.
இந்த வழக்கை விசாரித்த உயர் நீதிமன்றம், "சிபிஎஸ்இ பள்ளிகளில் 1, 2 -ஆம் வகுப்புகளுக்கு வீட்டுப் பாடம் கொடுக்கக் கூடாது என்றும், என்சிஇஆர்டி பாடத் திட்டத்தை மட்டுமே கட்டாயமாக பின்பற்ற வேண்டும் எனவும் உத்தரவிட்டது. மேலும், இரண்டாம் வகுப்பு வரை இரண்டு பாடங்களும், 3 முதல் 5 -ஆம் வகுப்பு வரை நான்கு பாடங்கள் மட்டுமே பயிற்றுவிக்க வேண்டும்' என்றும் அந்த உத்தரவில் குறிப்பிடப்பட்டிருந்தது.
இந்த வழக்கு நீதிபதி என்.கிருபாகரன் முன் விசாரணைக்கு வந்தது. அப்போது மத்திய அரசு தரப்பில் ஆஜரான வழக்குரைஞர், இந்த உத்தரவு தொடர்பாக அனைத்து மாநில அரசுகளுக்கும் கடிதம் அனுப்பப்பட்டுள்ளது.
ஆனால் இதுவரை எந்த மாநில அரசும் பதிலளிக்கவில்லை என தெரிவிக்கப்பட்டது.
இதைப் பதிவு செய்து கொண்ட நீதிபதி, அனைத்து மாநில அரசுகளும், யூனியன் பிரதேசங்களும் இந்த உத்தரவை அமல்படுத்தும் வகையில் விரிவான உத்தரவு பிறப்பிப்பதாக தெரிவித்தார்.
மேலும் இந்த உத்தரவு சிபிஎஸ்இ பள்ளிகளுக்கு மட்டுமல்ல, மாநில பாடத் திட்டத்தில் படிக்கும் மாணவர்களுக்கும் பொருந்தும்.
இந்த உத்தரவை அமல்படுத்தும் வகையில் தமிழகத்தில் மாநில பாடத் திட்ட பள்ளிகளுக்குச் சுற்றறிக்கை அனுப்பப்பட்டுள்ளதா என கேள்வி எழுப்பிய நீதிபதி, இந்த சுற்றறிக்கையை அனுப்ப தவறினால் நீதிமன்ற அவமதிப்பு நடவடிக்கை எடுக்க நேரிடும் என எச்சரித்து விசாரணையை ஒத்திவைத்தார்.
No comments:
Post a Comment