அண்ணா பல்கலை இணைப்பில் உள்ள இன்ஜினியரிங் கல்லுாரிகளில், மாணவர்கள் சேர்க்கைக்கான, 'ஆன்லைன்' பதிவு, மே, 3ல் துவங்கும்,'' என, உயர் கல்வித்துறை அமைச்சர், அன்பழகன் தெரிவித்தார். இன்ஜினியரிங் மாணவர் சேர்க்கைக்கான, 'ஆன்லைன் கவுன்சிலிங்' குறித்து, அமைச்சர் அன்பழகன் தலைமையில், சென்னையில், நேற்று அண்ணா பல்கலை வளாகத்தில், ஆலோசனை கூட்டம் நடந்தது.
சான்றிதழ் சரிபார்ப்பு : உயர் கல்வி துறை செயலர், சுனில் பாலிவால், தொழில்நுட்ப கல்வி இயக்குனரக கமிஷனர், விவேகானந்தன், அண்ணா பல்கலை பதிவாளர், கணேசன், மாணவர் சேர்க்கை கமிட்டியின் உறுப்பினர் செயலர், ரைமண்ட் உத்தரியராஜ் ஆகியோர் பங்கேற்றனர். அவகாசம் : கூட்டத்திற்கு பின், அமைச்சர் அன்பழகன் அளித்த பேட்டி:அண்ணா பல்கலை இணைப்பில், 567 கல்லுாரிகள் உள்ளன; அவற்றில், முதலாம் ஆண்டில், 2.50 லட்சத்திற்கும் மேற்பட்ட இடங்களுக்கு, மாணவர்கள் சேர்க்கை நடைபெறஉள்ளது. இந்த ஆண்டு முதல், ஆன்லைன் கவுன்சிலிங் நடத்தப்படுகிறது. கவுன்சிலிங்கில் பங்கேற்க மாணவர்கள், தங்கள் ஊர்களில் இருந்து, சென்னைக்கு வர வேண்டாம்; கணினி வாயிலாக, விரும்பும் கல்லுாரியை தேர்வு செய்யலாம்.
ஆன்லைன் விண்ணப்ப பதிவு, மே, 3ல் துவங்கு கிறது; மே, 30 வரை பதிவு செய்யலாம் விண்ணப்ப பரிசீலனைக்கு பின், ஜூன் முதல் வாரத்தில், விண்ணப்பதாரர்களின் சான்றிதழ்கள் சரிபார்க்கப்படும். இதற்கு, அந்தந்த மாவட்டத்தில் உள்ள உதவி மையங்களுக்கு, சான்றிதழ்களுடன் மாணவர்கள் செல்ல வேண்டும். சான்றிதழ் சரிபார்ப்புக்கு, ஒரு வாரம் அவகாசம் தரப்படும் அதன்பின், ஆன்லைன் கவுன்சிலிங் நடவடிக்கை துவங்கும். அதாவது, மாணவர்கள், தங்களுக்கு விருப்பமான கல்லுாரி மற்றும் பாடப் பிரிவை, ஆன்லைனில் தேர்வு செய்யலாம். இதற்காக, மாணவர்கள், தங்கள் மதிப்பெண் அடிப்படையில், தாங்களே கல்லுாரிகளை முன்னுரிமைப்படுத்தலாம்; எத்தனை கல்லுாரிகளை வேண்டுமானாலும், விருப்ப பட்டியலில் சேர்க்கலாம்.
ஆனால், தரவரிசை மற்றும் மதிப்பெண் அடிப்படையில், மாணவர்கள் விரும்பும் கல்லுாரியில், அவர்களுக்கு இடம் ஒதுக்கப்படும்
ஆன்லைன் கவுன்சிலிங்கில், மாணவர்களுக்கு உதவ, அனைத்து மாவட்டங்களிலும், 42 இடங்களில், உதவி மையங்கள் அமைக்கப்படும். இந்த பட்டியல், அண்ணா பல்கலை இணையதளத்தில் வெளியிடப்படும் விண்ணப்ப கட்டணமாக, தலித், பழங்குடியினர் மற்றும் அருந்ததியர் மாணவர்களுக்கு, 250 ரூபாயும், மற்ற மாணவர்களுக்கு, 500 ரூபாயும் நிர்ணயிக்கப்பட்டு உள்ளது. இந்த தொகையை, விண்ணப்ப பதிவின்போது, ஆன்லைனில் செலுத்த வேண்டும் பிளஸ் 2 தேர்வு முடிவு வர தாமதமானாலும், மாணவர்கள் கவலைப்பட வேண்டாம். அதற்கு ஏற்ப, கவுன்சிலிங் தேதி நிர்ணயிக்கப்பட்டுள்ளது.
மதிப்பெண்ணை தவிர, மற்ற விபரங்களை, மாணவர்கள் முதலில் நிரப்பி கொள்ளலாம். தேர்வு முடிவு வந்த பின், மதிப்பெண்ணை மட்டும் பதிவு செய்யலாம். மாணவர்களின் பதிவு எண் அடிப்படையில், அரசு தேர்வுத் துறையிடம், மதிப்பெண்களை பெற்று, அவற்றை விண்ணப்பங்களில் சேர்க்கவும் திட்டமிடப்பட்டு உள்ளது.இவ்வாறு அமைச்சர் கூறினார்.நேரடி கவுன்சிலிங்! விளையாட்டு பிரிவினர், மாற்று திறனாளிகள், தொழிற்கல்வி பிரிவு மாணவர்களுக்கு, ஒற்றை சாளர முறையில், நேரடி கவுன்சிலிங் நடத்தப்படும். தலித் மற்றும் அருந்ததியர் பிரிவினருக்கான காலி இடங்களை நிரப்ப, துணை கவுன்சிலிங்; மீதம் உள்ள இடங்களுக்கான துணை கவுன்சிலிங் ஆகியவையும், நேரடியாகவே நடக்கும்.
இந்த பிரிவினர், விண்ணப்பத்தை மட்டும், ஆன்லைனில் சமர்ப்பிக்க வேண்டும்.சந்தேகம் தீர்க்க தனி தளம்! கவுன்சிலிங்கின் ஒவ்வொரு கட்ட நடவடிக்கையிலும், மாணவர்களின் மொபைல் போன் எண்ணுக்கு, எஸ்.எம்.எஸ்., வழி தகவலும், இ - மெயில் வழி தகவலும் அனுப்பப்படும். கவுன்சிலிங் தொடர்பான சந்தேகங்கள் மற்றும் கூடுதல் விபரங்களை, www.annauniv.edu என்ற, அண்ணா பல்கலை இணையதளத்திலும், tnea.ac.in என்ற, கவுன்சிலிங் இணையதளத்திலும் தெரிந்து கொள்ளலாம். மேலும் விபரங்களுக்கு, 044 2235 9901 - 20 என்ற, தொலைபேசி எண்களில் தொடர்பு கொள்ளலாம்.