இலவச SMS களை உடனுக்குடன் பெற ON tnptfmani என்று type செய்து 9870807070 என்ற எண்ணிற்கு அனுப்பி இலவச குறுந்தகவல்களை(SMS) பெறுங்கள். DND (Do NOT Disturb) சர்வீஸ்ல் உள்ள எண்கள் அதனை(DND) நீக்கிய பிறகே இச்சேவையை பெறமுடியும். plz call 1909

Sunday, October 26, 2014

மழை காலத்தில் மாணவர் பாதுகாப்பு நடவடிக்கை: தொடக்க கல்வி இயக்குநரகம் உத்தரவு

    மழை காலத்தில், பள்ளி வளாகங்களில், மாணவர்கள் பாதுகாப்புடன் இருப்பதை உறுதி செய்யும் வகையில், பல்வேறு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை, பள்ளி தலைமை ஆசிரியர் எடுக்க வேண்டும் என, தொடக்க கல்வி இயக்குனரகம் உத்தரவிட்டுள்ளது. தொடக்கக் கல்வி இயக்குனர், இளங்கோவன், மாவட்ட தொடக்க கல்வி அலுவலர்களுக்கு அனுப்பியுள்ள சுற்றறிக்கை: தமிழகத்தில், பரவலாக பருவ மழை பெய்து வருகிறது. மழைக் காலங்களில் பள்ளி வளாகத்திற்குள் மழைநீர் தேங்கக் கூடாது. தேங்கும் நீரை, மின் மோட்டார் மூலம், உடனுக்குடன் அகற்ற நடவடிக்கை எடுக்க வேண்டும்.

   ஆறு, ஏரி, குளம், குட்டை, வாய்க்கால் உள்ளிட்ட, நீர் பிடிப்பு பகுதிகளுக்கு அருகில் மாணவர்கள் செல்லாதவாறு கண்காணிக்க வேண்டும். உணவு இடைவேளை, காலை, மாலை இடைவேளை நேரங்களில், மாணவர் பாதுகாப்பை உறுதிசெய்ய வேண்டும்.

     பள்ளி வளாகத்தில், மின் கசிவு ஏற்படாத வகையில், மின் சாதனங்களையும், மின் கம்பிகளையும் கவனமாக பராமரிக்க வேண்டும். இந்த மின் சாதனங்களை, மாணவர்கள் தொடாதவாறு, ஆசிரியர் கண்காணிக்க வேண்டும். இவ்வாறு இயக்குனர் தெரிவித்துள்ளார்.

அந்தந்த தேர்வு மையங்களிலேயே அக்.27 முதல் மதிப்பெண் சான்றுகள்

     "பிளஸ் 2 தனி தேர்வு எழுதிய மாணவர்கள் அந்தந்த தேர்வு மையங்களில் அக்.27 முதல் மதிப்பெண் சான்றுகளை பெறலாம்” என அரசு தேர்வுத்துறை இயக்குனர் தேவராஜன் தெரிவித்தார். அவரது உத்தரவு: செப்டம்பர்-அக்டோபரில் நடந்த பிளஸ் 2 துணை தேர்வு எழுதிய தனி தேர்வர்கள் (தட்கல் தேர்வர் உட்பட) மதிப்பெண் சான்றுகளை, அக்.27, பிற்பகம் 2 மணி முதல் தேர்வு எழுதிய மையங்களில் பெறலாம். தேர்வு முடிவுகள் இணையதளத்தில் வெளியிடப்படாது.

இம்மாணவர்கள் மதிப்பெண் சான்றுகளை பெற்று, விடைத்தாள் நகல் மறுகூட்டலுக்கு விண்ணப்பிக்க விரும்பினால், கல்வி மாவட்ட அளவில் உள்ள அரசு தேர்வுகள் சேவை மையத்தில் அக்.29 முதல் 31ம் தேதி வரை உரிய கட்டணத்துடன் ஆன்லைன் கட்டணம் ரூ.50 செலுத்தி பதிவு செய்யலாம். விடைத்தாள் நகல் பெற, மொழிப் பாடங்களுக்கு தலா ரூ.550, பிற பாடங்கள் ஒன்வொன்றிற்கும் ரூ.275, மறுகூட்டலுக்கு மொழி பாடங்கள், உயிரியியல் பாடங்களுக்கு தலா ரூ.305, மற்ற பாடங்களுக்கு தலா ரூ.205 கட்டவேண்டும். தேர்வுத்துறை அறிவிக்கும் நாளில் இணையதளத்தில் விடைத்தாள் நகலை டவுன்லோடு செய்யலாம் என்றார்.

Saturday, October 25, 2014

மழைக் கால பாதுகாப்பு நடவடிக்கை மேற்கொள்ள இயக்குநர் அறிவுரை

https://app.box.com/s/e8o093rl2z8rgqbmjpuy

பிரிட்ஜ் கோர்ஸ் விரைவில் வரும்

உயர்நிலை, மேல்நிலைப் பள்ளிகளில், ஒன்பதாம் வகுப்பு படிக்கும் பின்தங்கிய மாணவர்களுக்கு, குறைந்தபட்ச பாடத் திட்டங்களை மட்டுமே நடத்தி தேர்ச்சியடைய செய்வதற்கான, பிரிட்ஜ் கோர்ஸ் திட்டம், நடப்பாண்டு எப்போது துவங்கும் என்ற எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது.

கோவை மாவட்டத்தில், அரசு, அரசு உதவி பெறும் உயர்நிலை மற்றும் மேல்நிலைப் பள்ளிகள் உள்ளன. இதில், அரசு பள்ளிகளில் மட்டும் படிக்கும் ஒன்பதாம் வகுப்பு மாணவர்களுக்கு, கற்றலில் ஆர்வத்தை ஏற்படுத்தி, அதிக மதிப்பெண்கள் பெற செய்வதற்காக, அனைவருக்கும் இடைநிலை கல்வித்திட்டம் (ஆர்.எம்.எஸ்.ஏ.,) சார் பில், பிரிட்ஜ் கோர்ஸ் கடந்தாண்டு துவங்கப்பட்டது.

கட்டாய கல்வி உரிமச்சட்டப்படி, எட்டாம் வகுப்பு வரை படிக்கும் அனைத்து மாணவர்களையும், பள்ளிகளில் தேர்ச்சியடைய செய்ய வேண்டும் என விதி உள்ளது. இதனால், கல்வியில் பின்தங்கிய நிலையில், ஒன்பதாம் வகுப்புக்குள் நுழையும் மாணவர்களால், தேர்ச்சி பெற முடியா சூழல் ஏற்படுகிறது.

சராசரி மதிப்பெண்களுடன் தேர்ச்சியடைந்தாலும், பொதுத்தேர்வில் அதிக மதிப்பெண்கள் பெறுவது கடினம். இந்த முரண்பாட்டை தவிர்க்கவே, ஒன்பதாம் வகுப்புகளில் பிரிட்ஜ் கோர்ஸ் திட்டம் துவங்கப்பட்டது. இத்திட்டப்படி, காலாண்டுத் தேர்வு முடிவில், குறைந்த மதிப்பெண்கள் பெற்றுள்ள மாணவர்களை தனிக்குழுவாக்கி, பிரத்யேக ஆசிரியர்கள் வாயிலாக, பாடத்திட்டங்கள் கையாளப்படுகின்றன.

இதில், கடந்தாண்டு தமிழ், ஆங்கிலம், கணிதம் உள்ளிட்ட மூன்று பாடங்களுக்கு மட்டும் வகுப்புகள் துவங்கப்பட்டன. இந்த வகுப்புகளை, வேலையில்லா பட்டதாரி ஆசிரியரை கொண்டோ அல்லது பாட ஆசிரியர்கள் வாயிலாகவோ நடத்த அனுமதிக்கப்படுகிறது.

குறிப்பிட்ட பாடத்திட்டங்களை மட்டும் நடத்தி, தேர்வு வைத்து, கற்றலை எளிமைப்படுத்த உத்தரவிடப்பட்டது. தவிர, பத்தாம் வகுப்புக்கு, தொடர்ச்சியாக வரும் பாடங்கள் மீதும், பிரத்யேக கவனம் செலுத்தப்பட்டது. இதனால், ஒன்பதாம் வகுப்பில் தேர்ச்சி விகிதம் அதிகரித்ததோடு, பத்தாம் வகுப்பிலும் பாடங்களை உள்வாங்கி கொள்வதாக, ஆசிரியர்கள் கருத்து தெரிவித்துள்ளனர்.

இத்திட்டம், நடப்பாண்டில் விரைவில் துவக்க வேண்டும் என்ற எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது. ஆர்.எம்.எஸ்.ஏ., திட்ட அதிகாரிகள் சிலர் கூறுகையில், "நடப்பாண்டுக்கான பிரிட்ஜ் கோர்ஸ் அறிவிப்பு விரைவில் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது. இதில், கூடுதலாக, அறிவியல், சமூக அறிவியல் பாடங்களுக்கும், குறைந்தபட்ச பாடத்திட்டங்களை வரையறுத்து, வகுப்புகள் துவங்க நடவடிக்கை எடுக்கப்படும்.

பிரிட்ஜ் கோர்ஸ் வாயிலாக, அதிக மதிப்பெண்கள் எடுக்கும் மாணவர்களுக்கு இணையாக, பின்தங்கிய மாணவர்களது கல்வி தரத்திலும் முன்னேற்றத்தை ஏற்படுத்த முடியும். இதற்காக, ஒன்பதாம் வகுப்பு மாணவர்களது மதிப்பெண் பட்டியல், பின்தங்கிய மாணவர்களின் விபரம் குறித்த தகவல்களை சேகரிக்க பள்ளிகளுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது" என்றனர்.

Friday, October 24, 2014

தொடக்கக் கல்வி - அனைத்து மாவட்டத் தொடக்கக் கல்வி அலுவலர்கள் ஆய்வு கூட்டம் 28.10.2014 அன்று சென்னையில் நடைபெறுகிறது.

எட்டாம் வகுப்பு வரை கட்டாய தேர்ச்சி அவசியமா? மாநிலங்களின் கருத்தை கேட்கிறது மத்திய அரசு


இலவச மற்றும் கட்டாயக் கல்வி சட்டத்தின் (ஆர்.டி.இ.,) படி, 'எட்டாம் வகுப்பு வரை கட்டாய தேர்ச்சி' என்ற நிலையால், அந்தந்த வகுப்பிற்குரிய திறனை பெறாமல், அடுத்தடுத்த வகுப்புகளுக்கு மாணவர் வந்துவிடுவதால், பெரிய வகுப்புகளில், மாணவர் திணறும் நிலை ஏற்பட்டுள்ளது. இதனால், கட்டாய தேர்ச்சியின் அவசியம் குறித்து, மாநில அரசுகள், கருத்து தெரிவிக்குமாறு, மத்திய மனிதவள மேம்பாட்டு அமைச்சகம் கேட்டுள்ளது.ஆர்.டி.இ., சட்டத்தில், எட்டாம் வகுப்பு வரை, கட்டாயம் தேர்ச்சி பெறச் செய்ய வேண்டும் என, கூறப்பட்டு உள்ளது.

இதை அப்படியே வேத வாக்காக எடுத்துக் கொண்டு, அனைத்து மாணவர்களையும், அடுத்தடுத்த வகுப்புகளுக்கு, 'புரமோட்' செய்து விடுகின்றனர். குறிப்பாக, அரசு பள்ளி ஆசிரியர்கள், இப்படி செய்கின்றனர். ஆனால், தனியார் பள்ளிகள், சரியாக படிக்காத மாணவருக்கு, சிறப்பு பயிற்சி அளித்து, தனியாக சிறப்புத் தேர்வை நடத்தி, அதில் தேறினால், அடுத்த வகுப்பிற்கு, 'புரமோட்' செய்கிறது. சாதக, பாதகங்கள்: கட்டாய தேர்ச்சியினால், ஒவ்வொரு வகுப்பிற்குரிய திறனை, மாணவர்கள் பெறாமலேயே, ஒன்பதாம் வகுப்பிற்கு வந்துவிடும் நிலை உள்ளது. அதற்கு அடுத்த ஆண்டில், 10ம் வகுப்பு பொதுத்தேர்வை எதிர்கொள்ளும் நிலைக்கு, மாணவர்கள் தள்ளப்படுகின்றனர்.பிரச்னையின் அபாயத்தை உணர்ந்துள்ள மத்திய அமைச்சகமும், கட்டாய தேர்ச்சியினால் ஏற்பட்டுள்ள சாதக, பாதக அம்சங்களை ஆராய துவங்கி உள்ளது.இது தொடர்பாக, மாநில அரசுகள், கருத்து தெரிவிக்குமாறு, மத்திய மனிதவள மேம்பாட்டு அமைச்சகம் கேட்டுள்ளதாகவும், 'கட்டாய தேர்ச்சி தேவையில்லை' என, ஆந்திரா, கர்நாடகா உள்ளிட்ட சில மாநிலங்கள் வலியுறுத்தி உள்ளதாகவும், கல்வித் துறை வட்டாரம் தெரிவிக்கிறது.

தமிழக அரசு தரப்பில், இதுவரை எவ்வித கருத்தும் தெரிவிக்கப்படவில்லை என, கல்வித் துறை வட்டாரம் தெரிவித்தது. மறந்து விடுகின்றனர்: இந்த விவகாரம் குறித்து, கல்வியாளர், பிரின்ஸ் கஜேந்திரபாபு கூறியதாவது:எட்டாம் வகுப்பு வரை கட்டாய தேர்ச்சி என்பதை, ஆசிரியர்கள் தவறாக புரிந்து கொண்டுள்ளனர். மாணவர்கள், ஒவ்வொரு வகுப்பிற்குரிய கற்றல் அறிவை, முழுமையாக பெற வேண்டும், அதற்கேற்ப கற்பிக்க வேண்டும் என்பதை, ஆசிரியர்கள் மறந்து விடுகின்றனர்.

சட்டத்தை, ஆசிரியர்கள் தங்களுக்கு சாதகமாக்கிக் கொண்டு, கற்பித்தலில் மெத்தனம் காட்டு கின்றனர். சட்டத்தில் உள்ள எந்த பிரிவையும் நீக்க வேண்டிய அவசியமே இல்லை.ஒவ்வொரு வகுப்பிற்கும், பாட வாரியாக ஆசிரியர்கள் இருந்தால், அவர், சரியான முறையில் கற்பித்தல் பணியை செய்தால், அனைத்து மாணவர்களும், கண்டிப்பாக, அந்தந்த வகுப்பிற்குரிய அறிவை பெறுவர். மாணவர் - ஆசிரியர் விகிதாசார கணக்கீடு, இங்கே தவறாக கணக்கிடப்படுகிறது.ஒரு பள்ளியில், 60 மாணவர் இருந்தால், இரண்டு ஆசிரியர்கள் போதும் என, அரசு கருதுகிறது. ஆனால், 60 பேரும், பல வகுப்புகளில், பிரிந்து இருப்பர்.அப்போது, வகுப்பு வாரியாக, பாட வாரியாக, தனித்தனி ஆசிரியர்கள் இருந்தால் தான், கற்பித்தல் பணி சிறப்பாக இருக்கும். இதுபோன்ற நிலை, பல அரசு பள்ளிகளில் இல்லாதது தான் பிரச்னை.இவ்வாறு, பிரின்ஸ் கூறினார்

பள்ளிகளுக்கு சனிக்கிழமை விடுமுறை இல்லை : தொடர்ந்து லீவு அறிவித்ததன் எதிரொலி

  கன மழை காரணமாக, பெரும்பாலான மாவட்டங்களில், ஒரு வாரமாக தொடர் விடுமுறை அறிவிக்கப்பட்டதன் காரணமாக, இழப்பு ஏற்பட்ட பள்ளி வேலை நாட்களை ஈடு செய்ய, இனி, வாரந்தோறும், சனிக்கிழமைகளில், பள்ளிகளை நடத்த, தலைமை ஆசிரியர்கள் முடிவு செய்துள்ளனர். தமிழகத்தில், வட கிழக்கு பருவ மழை தீவிரம் அடைந்துள்ளது. தலைநகர் சென்னையில் துவங்கி, தென் மாவட்டங்கள் வரை, பரவலாக, பெரும்பாலான மாவட்டங்களில், ஒரு வாரமாக மழை, கொட்டி வருகிறது. இதனால், கடந்த வாரம், சென்னை, காஞ்சிபுரம், திருவள்ளூர், விழுப்புரம், திண்டுக்கல் உட்பட, பல மாவட்டங்களில், தொடர்ந்து பள்ளிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டது.

இந்த நாட்களை ஈடுகட்ட, இனி, வாரந்தோறும், சனிக்கிழமைகளில், பள்ளிகளை நடத்த, தலைமை ஆசிரியர்கள் முடிவு செய்துள்ளனர். இது குறித்து, தமிழ்நாடு பட்டதாரி ஆசிரியர் கூட்டமைப்பின் பொதுச்செயலர், பேட்ரிக் ரைமாண்ட் கூறியதாவது: தொடக்க கல்வித்துறை யின் கீழ் இயங்கும் ஆரம்ப, நடுநிலைப் பள்ளிகள், ஆண்டுக்கு, 220 நாட்களும், பள்ளி கல்வித்துறையின் கீழ் இயங்கும், உயர்நிலை, மேல்நிலைப் பள்ளிகள், ஆண்டுக்கு, 210 நாட்களும், வேலை நாட்களாக உள்ளன.

பருவ மழை காலத்தில், இதுபோன்று, பள்ளிகளுக்கு, அவ்வப்போது விடுமுறை அறிவிப்பது வழக்கம். இந்த முறையும், அதிக நாட்கள் விடுமுறை அறிவிக்கப்பட்டது. எத்தனை நாட்கள் இழப்பு ஏற்பட்டதோ, அத்தனை நாள், சனிக்கிழமைகளில், பள்ளிகளை நடத்தி, கற்பித்தல் பணி, ஈடுகட்டப்படும். இது தொடர்பாக, அந்தந்த பள்ளி தலைமை ஆசிரியர்களே முடிவு செய்ய, கல்வித்துறை அனுமதித்துள்ளது.இவ்வாறு, பேட்ரிக் தெரிவித்தார்.

சர்தார் வல்லபாய் படேல் பிறந்த தினமான அக்டோபர் 31ம் தேதியை, தேசிய ஒற்றுமை தினமாக ஆண்டுதோறும் கொண்டாட முடிவு செய்திருப்பதாக மத்திய அரசு அறிவித்துள்ளது.



இந்த தினத்தில், அரசு மற்றும் பொதுத்துறை நிறுவனங்கள் தேசிய ஒற்றுமை தின உறுதிமொழியை எடுப்பதற்கான நிகழ்ச்சிகளுக்கு ஏற்பாடு செய்ய வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. உறுதி மொழி எடுப்பதோடு, அனைத்துத் தரப்பு மக்களும் பங்கேற்கும் வகையில் ஒற்றுமையை வலியுறுத்தும் நிகழ்ச்சிகளுக்கு ஏற்பாடு செய்யுமாறு மத்திய மாநில அமைச்சர்கள், யூனியன் பிரதேச நிர்வாகிகள் கேட்டுக் கொள்ளப்பட்டிருக்கிறார்கள். பள்ளி, கல்லூரி மாணவர்களும் இதில் பங்கேற்கும் வகையில், தேவையான நடவடிக்கைகளை எடுக்குமாறு மத்திய மனித வள மேம்பாட்டு அமைச்சகம் கேட்டுக்கொண்டுள்ளது. காவல் துறை, தேசிய ஆயுதப் படை, தேசிய மாணவர் படை உள்ளிட்டவை மாலையில் அணிவகுப்புகளை நடத்த வேண்டும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தேசிய ஒற்றுமை தினத்தை முன்னிட்டு, அக்டோபர் 31ம் தேதி, நடத்தப்பட உள்ள மராத்தான் ஓட்டத்தை தொடங்கிவைக்கும் பிரதமர் நரேந்திர மோடி, ஓட்டத்திலும் பங்கேற்க உள்ளதாக மத்திய தகவல் மற்றும் ஒலிபரப்புத்துறை அமைச்சர் பிரகாஷ் ஜவதேகர் தெரிவித்துள்ளார். மேலும், அன்றைய தினத்தில், வானொலி மூலம் நாட்டு மக்களுக்கு, பிரதமர் மோடி உரையாற்றுவார் எனவும் அவர் கூறியுள்ளார்.

Thursday, October 23, 2014

மதிப்பெண் சான்றிதழ், மாற்றுச் சான்றிதழ் உள்ளிட்ட கல்விச் சான்றிதழ்களில் மாணவர்களின் சாதி மற்றும் இடஒதுக்கீடு தொடர்பான விவரங்களை குறிப்பிடுவதற்கு சிபிஎஸ்இ தடை விதித்துள்ளது.

பள்ளி, கல்லூரிகளில் மாணவர்கள் படிப்பை முடிக்கும்போது அவர்களுக்கு மாற்றுச் சான்றிதழ் (டி.சி.) வழங்கப்படும். அதில் அவர்கள் படித்த பள்ளியின் பெயர், படிப்பு காலம், அங்க அடையாளங்கள், சாதி பெயர், இடஒதுக்கீடு (எஸ்சி, எஸ்டி, பிசி, எம்பிசி) ஆகிய விவரங்கள் இடம்பெற்றிருக்கும். மதிப்பெண் சான்றிதழில் சாதி, இடஒதுக்கீடு விவரங்கள் பொதுவாக குறிப்பிடப்படுவதில்லை.

மாணவர்கள் மேற்படிப்புக்குச் செல்லும்போது, சாதி சான்றிதழ் தேவைப்படும். அப்போது, அதற்காக தாலுகா அலுவலகங்களில் விண்ணப்பிக்கும்போது, சாதி, இடஒதுக்கீடு விவரங்கள் அடங்கிய பள்ளி மாற்றுச் சான்றிதழ் முக்கிய ஆதாரமாக கொள்ளப்படுகிறது. மாற்றுச் சான்றிதழ் நகலை சாதி சான்றிதழ் பெறுவதற்கான விண்ணப்பத்துடன் இணைக்குமாறு அறிவுறுத்தப்பட்டிருக்கும்.

சிபிஎஸ்இ மாணவர்கள்

மாநில பாடத்திட்டத்தில் படிக்கும் மாணவர்களுக்கு வழங்கப்படும் மாற்றுச் சான்றிதழில் சாதி, இடஒதுக்கீடு விவரங்கள் கட்டாயம் இடம்பெற்றிருக்கும். ஆனால், மத்திய இடைநிலை கல்வி வாரியத்தின் (சிபிஎஸ்இ) கீழ் படிக்கும் மாணவர்களைப் பொருத்தவரையில், எல்லா சிபிஎஸ்இ பள்ளிகளும் இந்த விவரங்களை மாற்றுச் சான்றிதழில் குறிப்பிடுவது கிடையாது. ஒருசில பள்ளிகள் மட்டும் குறிப்பிட்டு வருகின்றன.

சிபிஎஸ்இ 10-ம் வகுப்பு, 12-ம் வகுப்பு படிக்கும் மாணவர்கள் பொதுத்தேர்வு எழுதுவதற்கு முன்பாக அவர்களின் பெயர், தந்தை பெயர், தாய் பெயர், பாடங்கள், சாதி, இடஒதுக்கீடு (எஸ்சி, எஸ்டி, ஓபிசி) போன்ற விவரங்கள் அவர்களிடமிருந்து பெற்று ஆன்லைனில் பதிவேற்றம் செய்யப்படும். பெயர், பெற்றோர் பெயர், தேர்வெழுதும் பாடங்கள் போன்ற பெரும்பாலான விவரங்கள் தேர்வுக்காகவும், சான்றிதழ் வழங்குவதற்காகவும் பெறப்படுகின்றன.

சாதி, இடஒதுக்கீடு குறிப்பிட தடை

சாதி, இடஒதுக்கீடு தொடர்பான தகவல்களை மாணவர்களிடம் இருந்து பெற்றாலும் அவற்றை மதிப்பெண் சான்றிதழ், மாற்றுச் சான்றிதழ் உள்ளிட்ட கல்விச் சான்றிதழ்களில் குறிப்பிடக்கூடாது என்று அனைத்து சிபிஎஸ்இ பள்ளிகளுக்கும் உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

இதுகுறித்து சிபிஎஸ்இ சென்னை மண்டல அதிகாரி டி.டி.சுதர்சன் ராவிடம் கேட்டபோது, “மதிப்பெண் சான்றிதழ் களில் சாதி, இடஒதுக்கீடு தொடர்பான விவரங்கள் குறிப்பிடப்படுவது இல்லை. ஆனால், ஒருசில பள்ளிகளில் மாற்றுச் சான்றிதழ்களில் இந்த விவரங்களை குறிப்பிட்டு விடுகிறார்கள். அவற்றை தவிர்ப்பதற்காக இந்த உத்தரவு வெளியிடப் பட்டிருக்கலாம்” என்று தெரிவித்தார்.

பொது பணிகள் - இணை கல்வித் துகுதி நிர்ணயம் - பத்தாம் வகுப்பு தேர்ச்சி பெற்ற பின்னர் இரண்டு ஆண்டு ஆசிரியர் பட்டயப் பயிற்சி பட்டய சான்று (DIPLOMA IN TEACHER TRAINING), மேல்நிலைக் கல்விக்கு(+2) இணையாக கருதி தமிழக உத்தரவு

https://drive.google.com/file/d/0ByAQcFNqemV0bEN3aGhHcWJPTzA/view?usp=sharing

    மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வில் தமிழகத்திலிருந்து எழுதிய மாணவர்களில் இரண்டு தாள்களையும் சேர்த்து வெறும் 89 மாணவர்கள் மட்டுமே தேர்ச்சி பெற்றுள்ளனர். தமிழகத்தில் இரண்டு தாள்களையும் 5,767 பேர் எழுதினர். இலவச கட்டாயக் கல்வி உரிமைச் சட்டம் அமலுக்கு வந்த பிறகு, ஒன்று முதல் எட்டாம் வகுப்பு வரை ஆசிரியர் ஆவதற்கு ஆசிரியர் தகுதித் தேர்வில் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். சி.பி.எஸ்.இ. பாடத் திட்டப் பள்ளிகள், கேந்த்ரிய வித்யாலய பள்ளிகள் உள்ளிட்டவற்றில் பணியாற்றுவதற்கு சி.பி.எஸ்.இ. நடத்தும் மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வில் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.

கடந்த செப்டம்பர் 21-ஆம் தேதி மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு நடைபெற்றது. முதல் தாள் தேர்வை நாடு முழுவதும் 2 லட்சத்து 6,145 பேர் எழுதினர். இதில் 24,629 பேர் தேர்ச்சி பெற்றனர். இரண்டாம் தாள் தேர்வை 4 லட்சத்து 54 ஆயிரத்து 268 பேர் எழுதினர். இதில் 12,843 பேர் தேர்ச்சி பெற்றனர். மாவட்ட வாரியாக இந்தத் தேர்வில் தேர்ச்சி பெற்றவர்களின் விவரங்களை சி.பி.எஸ்.இ. வெளியிட்டுள்ளது. அதில் இடம்பெற்றுள்ள விவரங்கள்: தமிழகத்தில் மொத்தம் 5,767 பேர் தேர்வை எழுதினர். இதில் முதல் தாள் தேர்வை 1,210 பேர் எழுதினர்.

முதல் தாள் தேர்வு எழுதியவர்களில் 39 பேர் (3.22 சதவீதம்) மட்டுமே தேர்ச்சி பெற்றனர். 11 மாவட்டங்களில் ஒருவர் கூட தேர்ச்சி பெறவில்லை. இரண்டாம் தாள் எழுதிய 4,557 பேரில் 50 பேர் மட்டுமே (1 சதவீதம்) தேர்ச்சி பெற்றனர். இதிலும் 11 மாவட்டங்களில் யாரும் தேர்ச்சி பெறவில்லை. வேலூர், விருதுநகர், திருவாரூர், நீலகிரி, ராமநாதபுரம், புதுக்கோட்டை உள்ளிட்ட மாவட்டங்களில் யாரும் தேர்ச்சி பெறவில்லை.

10ம் வகுப்பு பொதுத்தேர்வு தனித்தேர்வர் விண்ணப்பிக்கலாம்

அடுத்த ஆண்டு நடக்கும், 10ம் வகுப்பு பொதுத்தேர்விற்கு தகுதியான தனித்தேர்வர்கள், அக்., 29 முதல் நவ., 7ம் தேதி வரை, கல்வி மாவட்ட, தேர்வுத்துறை சேவை மையங்களில், ஆன்- -- லைனில் பதிவு செய்யவேண்டும் என, அரசு தேர்வுகள் இயக்ககம் அறிவித்துள்ளது. இது குறித்து வெளியிடப்பட்ட செய்திக்குறிப்பு: செப்டம்பர், அக்டோபரில் நடந்த, 10ம் வகுப்பு துணைத் தேர்வு எழுதிய தனித்தேர்வர்கள், மதிப்பெண் சான்றுகளை, நாளை 25ம் தேதி, அவர்கள் தேர்வு எழுதிய மையங்களில் நேரில் சென்று பெற்றுக் கொள்ளலாம்; முடிவுகள், இணையதளத்தில் வெளியிடப்பட மாட்டாது.

மறுக்கூட்டலுக்கு விண்ணப்பிக்க விரும்பும் தனித்தேர்வர்கள், அரசு தேர்வுத்துறை சேவை மையங்களில், அக்., 27 முதல் 29ம் தேதி வரை நேரில் சென்று, ஆன்-லைனில் பதிவு செய்ய வேண்டும். மறு கூட்டலுக்கு, இரு தாள் கொண்ட பாடத்திற்கு, 305 ரூபாய், ஒரு தாள் பாடத்திற்கு, 205 ரூபாய் கட்டணமாக செலுத்த வேண்டும். அடுத்த ஆண்டு மார்ச் மற்றும் ஏப்ரலில் நடக்கும், 10வகுப்பு பொதுத்தேர்வுக்கு விண்ணப்பிக்க விரும்பும் தனித்தேர்வர்கள், அக்., 29 முதல் நவ., 7ம் தேதி வரை, கல்வி மாவட்ட வாரியாக உள்ள அரசுத் தேர்வுத்துறை சேவை மையங்களுக்கு நேரில் சென்று, விண்ணப்பங்களை ஆன் - லைனில் பதிவு செய்ய வேண்டும். இந்த தேர்வு சார்ந்த மேலும் விவரங்களை, www.tndge.in என்ற இணையதளத்தில் காணலாம்.

Tuesday, October 21, 2014

அரசு அலுவலகங்களில் ஊழல் தடுப்பு வாரம் B

 
    ஊழல் தடுப்பு விழிப்புணர்வு வாரத்தை அரசு அலுவலங்களில் கடைப்பிடிக்க வேண்டும் என்று அனைத்துத் துறை தலைவர்கள், செயலாளர்களுக்கு தலைமைச் செயலர் மோகன் வர்கீஸ் சுங்கத் உத்தரவிட்டுள்ளார். இதற்கான சுற்றறிக்கையை மத்திய கண்காணிப்பு ஆணையம் தமிழக அரசுக்கு அனுப்பியுள்ளது.

ஊழலை ஒழிக்கும் வகையிலும், அதுதொடர்பான விழிப்புணர்வை பொது மக்களிடையே ஏற்படுத்தவும் ஆண்டுதோறும் ஊழல் தடுப்பு விழிப்புணர்வு வாரம் கடைப்பிடிக்கப்பட்டு வருகிறது. அதன்படி, இந்த ஆண்டு அக்டோபர் 27-ஆம் தேதி முதல் நவம்பர் 1-ஆம் தேதி வரை ஒரு வார காலத்துக்கு அனைத்து அரசுத் துறைகளிலும் ஊழல் தடுப்பு விழிப்புணர்வு வாரத்தை கடைப்பிடிக்க மத்திய கண்காணிப்பு ஆணையம் அறிவுறுத்தியுள்ளது. இது தொடர்பாக தமிழக தலைமைச் செயலாளர் மோகன் வர்கீஸ் சுங்கத்துக்கு அந்த ஆணையம் அனுப்பியுள்ள சுற்றறிக்கையில் கூறியிருப்பதாவது:

"ஊழலை எதிர்ப்போம்-தொழில்நுட்பத்தை ஊக்குவிப்போம்' என்ற தலைப்பில் விழிப்புணர்வு பிரசாரம் இந்த ஆண்டு மேற்கொள்ளப்படுகிறது. அதாவது, அரசு அலுவலகங்களை நேரடியாக நாடாமல், மின்ஆளுமை முறையின் மூலம் தொழில்நுட்ப வசதிகளைப் பயன்படுத்தி அரசின் சேவைகளைப் பெறலாம் என்பதை அடிப்படை நோக்கமாகக் கொண்டு இந்த ஆண்டுக்கான ஊழல் தடுப்பு விழிப்புணர்வு வாரம் கடைப்பிடிக்கப்பட உள்ளது. ஊழல் என்பது நாட்டின் பொருளாதார மேம்பாட்டையும், இலக்குகளை அடைவதிலும் பெரும் பாதிப்பை ஏற்படுத்துகிறது என ஊழல் கண்காணிப்பு ஆணையம் தனது சுற்றறிக்கையில் தெரிவித்துள்ளது. செயல் திட்டங்கள்: சுற்றறிக்கையின் அடிப்படையில், அனைத்துத் துறை செயலாளர்கள், தலைவர்களுக்கு மோகன் வர்கீஸ் சுங்கத் பிறப்பித்துள்ள உத்தரவு விவரம்:

வரும் 27-ஆம் தேதி முதல் நவம்பர் 1-ஆம் தேதி வரை ஒரு வார காலத்துக்கு அனைத்து அரசு அலுவலகங்களிலும் ஊழல் தடுப்பு கண்காணிப்பு வாரத்தைக் கடைப்பிடிக்க வேண்டும். ஊழல் எதிர்க்கும் வாசகங்கள் அடங்கிய பேனர்கள், சுவரொட்டிகளை அரசு அலுவலகங்களின் பிரதான பகுதிகளில் அனைவரும் பார்க்கும் வகையில் வைக்க வேண்டும். ஊழல் தடுப்பு குறித்த கருத்தரங்குகள், பயிலரங்குகளுக்கு ஏற்பாடு செய்ய வேண்டும். கல்லூரி, பள்ளி மாணவ-மாணவிகளிடையே ஊழல் எதிர்ப்பு பற்றிய விவாதங்களையும், கட்டுரைப் போட்டிகளையும் நடத்தி பரிசுகளை அளிக்க வேண்டும். ஊழல் எதிர்ப்பு தொடர்பாக சிறப்பு மலர்களை வெளியிட ஊக்குவிக்கலாம். உள்ளூர் பகுதிகளில் ஊழல் தடுப்பு விழிப்புணர்வு தொடர்பான நிகழ்வுகளில் தன்னார்வ அமைப்புகளையும், சேவை மனப்பான்மை கொண்ட கூட்டமைப்புகளையும் இணைத்து நிகழ்ச்சிகளை நடத்தலாம் என்று தலைமைச் செயலாளர் மோகன் வர்கீஸ் சுங்கத் தெரிவித்துள்ளார்.

ஊழல் தடுப்பு விழிப்புணர்வு வாரத்தை ஒட்டி, அரசு அலுவலகங்களில் ஊழல் எதிர்ப்பு உறுதிமொழியும் எடுக்கப்பட உள்ளன.

"நெட்' தேர்வு அறிவிப்பு: விண்ணப்பிக்க நவ.15 கடைசி

கல்லூரி, பல்கலை உதவிப் பேராசிரியர் பணிக்குத் தகுதி பெறுவதற்கு தேசிய அளவில் நடத்தப்படும் "நெட்' (தேசிய தகுதித் தேர்வு) தேர்வை மத்திய இடைநிலைக் கல்வி வாரியம் (சி.பி.எஸ்.இ.) அறிவித்துள்ளது. இதுவரை யுஜிசி (பல்கலைக்கழக மானியக் குழு) நடத்தி வந்த இந்தத் தேர்வை, முதல்முறையாக 2014 டிசம்பரில் சி.பி.எஸ்.இ. நடத்துகிறது.

இனி ஆண்டுக்கு இரு முறை இந்தத் தேர்வை சி.பி.எஸ்.இ.தான் நடத்தவுள்ளது. http://cbsenet.nic.in/cbsenet/Welcome.aspx என்ற இணையதளத்தில் துறைகள் என்ற பிரிவில் இந்த அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இந்தத் தேர்வுக்கான விண்ணப்பத்தை ஆன்-லைனில் சமர்ப்பிக்க நவம்பர் 15 கடைசித் தேதியாகும். அறிவிக்கப்பட்ட வங்கிக் கிளைகளில் தேர்வுக் கட்டணத்தைச் செலுத்த நவம்பர் 18 கடைசித் தேதியாகும். "ஆன்-லைன்' விண்ணப்பத்தை நவம்பர் 19-ஆம் தேதிக்குள் பிரதி எடுத்துக் கொள்ள வேண்டும். பிரதி எடுத்த விண்ணப்பத்தைச் சம்பந்தப்பட்ட ஒருங்கிணைப்பு மையத்தில் சமர்ப்பிக்க நவம்பர் 25 கடைசித் தேதியாகும்.