Friday, April 26, 2013
Thursday, April 25, 2013
ரயில்வே டிக்கெட் முன்பதிவு மே1 முதல் 60 நாளாகிறது
ரயில் டிக்கெட்டுக்கு முன் பதிவு செய்யும் நாட்கள், நான்கு மாதத்தில் இருந்து, இரண்டு மாதங்களாக குறைக்கப்படுகிறது. முன் பதிவு நாட்களை குறைக்க வேண்டும் என, பலதரப்பில் இருந்து கோரிக்கை வந்தது. இதையடுத்து, முன் பதிவு நாட்களை, 120 நாளிலிருந்து, 60 நாட்களாக குறைக்க ரயில்வே முடிவு செய்தது. மே, 1ம் தேதி முதல், முன்பதிவு காலம், 60 நாட்களாக அமலுக்கு வருகிறது. இந்த மாற்றம், உண்மையான பயணிகளுக்கு பயனுள்ளதாக இருக்கும் என, ரயில்வே உயர் அதிகாரி ஒருவர் கூறினார்.
குரூப் 4 தேர்வில் வெற்றி பெற்ற 597 பேருக்கு ஏப்.,29 ல் கவுன்சிலிங்
டி.என்.பி.எஸ்.சி., குரூப்- 4 தேர்வில் வெற்றி பெற்ற 597 பேருக்கு, இளநிலை உதவியாளர் உள்ளிட்ட பணிகளுக்கு, இம் மாதம் 29 ல் "கவுன்சிலிங்' நடக்கிறது. கடந்த 2012 ஜூலையில், 10 ஆயிரத்து 500 இளநிலை உதவியாளர்கள், தட்டச்சர்,சுருக்கெழுத்தர் காலி பணியிடங்களுக்கு அறிவிப்பு வெளியானது. தேர்வு நடந்த பின், கடந்த ஆண்டு டிசம்பரில் தேர்வு செய்யப்பட்டோர் பட்டியல், வெளியிடப்பட்டது. அதே மாதத்தில் கலந்தாய்வு நடந்து, நியமன ஆணை பெற்று பணியில் சேர்ந்தனர். ஏற்கனவே அரசு பணியில் உள்ளோரும், இந்த தேர்வில் வெற்றிபெற்றனர். அவர்களுக்கு விரும்பிய துறை கிடைக்காததால், அவர்கள் இந்த பணியில் சேரவில்லை.
இதுபோல் 597 பணி இடங்கள், பணி நியமனம் செய்யப்படாமல் இருந்தது. இந்த பணியிடங்களுக்கு, 2012 ல் டி.என்.பி.எஸ்.சி.,தேர்வு எழுதியோர் பட்டியிலில் இருந்து, மேலும் 597 பேர் தேர்வு செய்யப்பட்டுள்ளனர். அவர்களின் பட்டியல் டி.என்.பி.எஸ்.சி., இணைய தளத்தில் வெளியிடப்பட்டுள்ளது. இவர்களுக்கு, இம் மாதம் 29 ல், சென்னை டி.என்.பி.எஸ்.சி., அலுவலகத்தில் பணிநியமன "கவுன்சிலிங்' நடக்கிறது. தேர்வில் வெற்றி பெற்று மறு "கவுன்சிலிங்' அழைக்கப்பட்டு, துறை ஒதுக்கீடு பெறாமல் காத்திருப்பில் உள்ள 150 பேரின் நிலை குறித்து இது வரை தகவல் வெளியாகவில்லை.
திருப்பூரில் 10 இளநிலை உதவியாளருக்கு பணி நியமனம் உத்தரவு
தமிழ்நாடு அரசுப்பணியாளர் தேர்வாணையம் தொகுதி 4 தேர்வில் வெற்றிபெற்ற திருப்பூர் மாவட்டத்தை சேர்ந்த 10 பேர் வியாழக்கிழமை நடந்த கலந்தாய்வு மூலமாக மாவட்ட கல்வித்துறை அலுவலகங்கள், அரசுப் பள்ளிகளிóல் இளநிலை உதவியாளர் பணிக்கான நியமன உத்தரவுகளை பெற்றனர். தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் மூலமாக தொகுதி 4 தேர்வில் வெற்றி பெற்று கல்வித்துறையில் இளநிலை உதவியாளர் பணிக்கு தேர்வுசெய்யப்பட்டவர்களுக்கு அந்தந்த மாவட்டங்களில் கலாந்தாய்வு நடைபெற்றது.
திருப்பூர் மாவட்டத்திற்கான இக்கலந்தாய்வு ஜெய்வாபாய் மாநகராட்சி பெண்கள் மேல்நிலைப் பள்ளியில் நடைபெற்றது. மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர் நா.ஆனந்தி, திருப்பூர் மாவட்ட கல்வி அலுவலர் எம்.ஜெயலட்சுமி முன்னிலையில் இக்கலந்தாய்வில் 10 பேர் பங்கேற்றனர். திருப்பூர் மாவட்டத்தில் மாவட்ட, தொடக்க கல்வி அலுவலகங்கள், அரசுப் பள்ளிகளில் 44 இளநிலை உதவியாளர் பணியிடங்கள் காலியாக உள்ளநிலையில் கலந்தாய்வில் பங்கேற்றவர்கள் தாங்கள் விரும்பிய பள்ளிகளை தேர்வு செய்தனர். இந்த 10 பேரில் 8 பேர் தாங்கள் விரும்பிய அரசுப் பள்ளிகளை தேர்வு செய்தனர். ஒருவர் மாவட்ட கல்வி அலுவலகத்திலும், மற்றொருவர் தொடக்கக் கல்வி அலுலகத்தில்(தெற்கு) பணியாற்ற விருப்பம் தெரிவித்து, பணியிடங்களை தேர்வு செய்தனர். கலந்தாய்வில் இவர்களுக்கு பணி நியமன உத்தரவுகள் வழங்கப்பட்டன.
Wednesday, April 24, 2013
ஒப்பந்த அடிப்படையில் ஆசிரியர் பணி:விண்ணப்பங்கள் வரவேற்பு
தொடக்கக் கல்வித் துறையில் 6 முதல் 8 வகுப்புகள் உள்ள பள்ளிகளில் உடற்கல்வி ஆசிரியர், ஓவிய ஆசிரியர், இசை ஆசிரியர், தையல் ஆசிரியர் பணியிடங்களுக்கு ஒப்பந்த அடிப்படையில் பணிபுரியத் தகுதியானவர்களிடம் இருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. தாற்காலிக அடிப்படையில் நியமனம் செய்யப்படுபவர்களுக்கு மாத ஊதியமாக ரூ. 5,000 வழங்கப்படும். தகுதி மற்றும் திறமையின் அடிப்படையில், கல்வித்துறை அலுவலர்களைக் கொண்டு குழுவால் நேர்முகத் தேர்வு நடத்தப்பட்டு, பணி நாடுநர்கள் தேர்வு செய்யப்பட உள்ளனர். இவர்கள் ஒரு பள்ளியில் தினசரி மூன்று மணி நேரம் பணிபுரிய வேண்டும்.
வாரம் ஒன்றுக்கு மொத்தம் 9 மணி நேரம் பணி நேரமாகும். பணி நாடுநர்கள் கோவை மாவட்டத்தைச் சேர்ந்தவராக இருத்தல் வேண்டும். மேலும், கோவை மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலகத்தில் பெயரைப் பதிவு செய்து, அப்பதிவு தொடர்ந்து நடப்பில் இருக்க வேண்டும். விண்ணப்பப் படிவத்துடன் சாதிச் சான்று நகல், இருப்பிடச் சான்று நகல், 10-ஆம் வகுப்பு, 12-ஆம் வகுப்பு மதிப்பெண் சான்றுகள், வேலைவாய்ப்பு அலுவலகப் பதிவு அட்டை நகல் ஆகியவற்றை அனுப்ப வேண்டும். 137 பணியிடங்கள்: உடற்கல்வி ஆசிரியர் பணிக்கு 49 இடங்களும், ஓவிய ஆசிரியர் பணிக்கு 52 இடங்களும், இசை, தையல், கணினி, தோட்டக்கலை, வாழ்க்கைத் திறன், தகவல் தொடர்புத் திறன், கட்டுமான ஆசிரியர் பணிகளுக்கு 36 இடங்களும் உளளன.
விண்ணப்பங்களை சுய விலாசமிட்ட ரூ. 5 மதிப்புள்ள அஞ்சல் வில்லை ஒட்டப்பட்ட உறையுடன் ஒப்படைத்து, ஏப்ரல் 26-ஆம் தேதி முதல் பெற்றுக் கொள்ளலாம். முதன்மைக் கல்வி அலுவலகம், கூடுதல் முதன்மைக் கல்வி அலுவலகம், மாவட்டக் கல்வி அலுவலகம், மாவட்ட தொடக்கக் கல்வி அலுவலகங்களில் விண்ணப்பங்களைப் பெற்றுக் கொள்ளலாம். பூர்த்தி செய்த விண்ணப்பங்களை ஏப்ரல் 30-ஆம் தேதி கோவை மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலகத்தில் மாலை 5 மணிக்குள் ஒப்படைக்க வேண்டும் என்று, முதன்மைக் கல்வி அலுவலர் அ.ஞானகௌரி தெரிவித்துள்ளார்.
Tuesday, April 23, 2013
மாநில தேர்தல் கமிஷன் தொலைபேசி எண்கள் மாற்றம்
மாநில தேர்தல் கமிஷனின் தொலைபேசி எண்கள் மாற்றப்பட்டுள்ளன. சென்னை, கோயம்பேடு நூறடிச் சாலையில், மாநில தேர்தல் கமிஷன் அலுவலகம் இயங்கி வருகிறது. உள்ளாட்சி தேர்தல் உள்ளிட்ட பணிகள், இங்கு மேற்கொள்ளப்படுகின்றன. அலுவலக தொலைபேசி எண்கள் மாற்றப்பட்டுள்ளது குறித்து, மாநில தேர்தல் கமிஷன் அலுவலகம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு: மாநில தேர்தல் கமிஷனர் 044 - 23635020 மாநில தேர்தல் கமிஷனர் தனிச்செயலர் 004 - 423635030 மாநில தேர்தல் கமிஷன் 044 23635010, 044 - 23635011 முதன்மை தேர்தல் அதிகாரி 044 - 23635016 மாநில தேர்தல் கமிஷன் மக்கள் தொடர்பு அதிகாரி 044 - 23635017
400 அரசு பள்ளிகளில் ஆங்கில வழி பாடப்பிரிவு துவக்கம்
வரும் கல்வி ஆண்டில், 400 அரசு பள்ளிகளில், ஆங்கில வழியில் வகுப்புகள் துவங்க முடிவு செய்யப்பட்டு உள்ளது. அரசு ஆரம்ப மற்றும் நடுநிலைப் பள்ளிகளில், மாணவ, மாணவியர் சேர்க்கையை அதிகப்படுத்த, 32 மாவட்டங்களைச் சேர்ந்த கல்வித்துறை அதிகாரிகளிடம், பகுதி வாரியாக தொடக்க கல்வித்துறை, சென்னையில் ஆலோசனை நடத்தி வருகிறது. கடந்த, 15ம் தேதி முதல், இந்த ஆலோசனை கூட்டங்கள் நடந்து வருகின்றன.
ஒரு நாளைக்கு, இரண்டு அல்லது மூன்று மாவட்டங்கள் வீதம், வரும், 30ம் தேதி வரை, கூட்டங்கள் நடக்கும். தொடக்க கல்வித்துறை இயக்குனர் ராமேஸ்வர முருகன் தலைமையில் நடக்கும் கூட்டத்தில், மாவட்ட அனைவருக்கும் கல்வி திட்ட முதன்மைக் கல்வி அலுவலர், மாவட்ட தொடக்க கல்வி அலுவலர்கள் பங்கேற்று வருகின்றனர். வரும் கல்வி ஆண்டில், அனைத்து அரசு ஆரம்ப மற்றும் நடுநிலைப் பள்ளிகளில், மாணவர் சேர்க்கையை அதிகரித்தல், மாணவர்களுக்கான, அரசின் பல்வேறு இலவச நலத்திட்டங்களை செயல்படுத்துதல், கட்டாயக்கல்வி உரிமை சட்டத்தின் அம்சங்கள் உள்ளிட்ட பல்வேறு அம்சங்கள் குறித்து, கூட்டத்தில் விவாதிக்கப்படுகிறது. ஆங்கிலவழி வகுப்புகளை விரிவாக்கம் செய்யும் திட்டத்தில், எந்தெந்த பள்ளிகளை சேர்ப்பது என்பது குறித்தும், கூட்டத்தில் விவாதிக்கப்படுகிறது. மாணவர்களிடம், ஆங்கிலவழி கல்விக்கு, அதிக வரவேற்பு இருப்பதை கருத்தில்கொண்டு, முதல் கட்டமாக, கடந்த ஆண்டு, மாவட்டத்திற்கு, 10 பள்ளிகள் வீதம், 308 பள்ளிகளில், ஆங்கிலவழி வகுப்புகள் துவங்கப்பட்டன.
இத்திட்டம், வரும் கல்வி ஆண்டில், மேலும், 400 பள்ளிகளுக்கு விரிவு படுத்தப்படும். இது குறித்த அறிவிப்பு, பள்ளிக்கல்வி மானிய கோரிக்கையின்போது, சட்டசபையில் வெளியிடப்படும் என, துறை வட்டாரங்கள் தெரிவித்தன.
தமிழ், ஆங்கில திறமையை சோதிக்க தேர்வு மாணவன் தேர்ச்சி பெறாவிட்டால் ஆசிரியருக்கு ஊதிய உயர்வு ரத்து
மாணவனுக்கு தமிழ், ஆங்கிலப்புலமை இல்லையென்றால் பாடம் கற்பிக்கும் ஆசிரியர்கள் மீது நடவடிக்கை எடுக்க கல்வித்துறை முடிவு செய்துள்ளது. இதில் அதிகபட்ச தண்டனையாக ஆசிரியர்களின் ஊதிய உயர்வு ரத்து செய்யப்படும் என்று கல்வித்துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். தகுதி தேர்வில் தேர்ச்சி பெற முடியாமல் ஏராளமான ஆசிரியர்கள் சிரமப்படுகின்றனர். இந்நிலையில், வேலை கிடைத்த ஆசிரியர்களின் நிலைமை அதைவிட பரிதாபமாக உள்ளது. கல்வி தரத்தை உயர்த்தும் எண்ணத்தில் அரசு எடுக்கும் முயற்சிகள் பாராட்டுக்குரியதுதான்.
ஆனால், அரசு பள்ளிகளில் போதிய உள்கட்டமைப்பு வசதிகள் இல்லாமல் கல்வியை தரம் உயர்த்த முயல் வது இயலாத காரியம் என்கின்றனர் கல்வியாளர்கள். இந்த கோடை விடுமுறையையாவது சந்தோஷமாக கழிக்கலாம் என்று கருதிய ஆசிரியர்களுக்கு கல்வித்துறையின் அதிரடி அறிவிப்பு கலக்கத்தை ஏற்படுத்தி உள்ளது. அதாவது, வரும் 2013,14ம் கல்வி ஆண்டில் ‘பேஸ் லைன் சர்வே’ என்ற கணக்கெடுப்பை எடுக்க கல்வித்துறை முடிவு செய்துள்ளது. இது 1ம் வகுப்பு முதல் 8ம் வகுப்பு படிக்கும் மாணவர்களிடையே நடத்தப்படவுள்ளது. மாணவர்களுக்கு தமிழ், ஆங்கிலம் வாசிக்கும் திறன், கணக்கு பாடத்தில் கூட்டல், கழித்தல் உள்ளிட்ட பயிற்சிகள் அடங்கிய தேர்வு, கல்வி ஆண்டின் தொடக்கத்தில் வைக்கப்படவுள்ளது
. இதில் தேர்ச்சி பெறாத மாணவ, மாணவிகளுக்கு கற்று கொடுத்த ஆசிரியர்கள், சம்பந்தப்பட்ட பள்ளி தலைமை ஆசிரியர்களின் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என்று கல்வித்துறை எச்சரித்துள்ளது. அதிகபட்ச தண்டனையாக ஆசிரியர்களின் ஊதிய உயர்விலும் ‘கை’ வைக்கப்படும் என்று கல்வித்துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். தொடர்ந்து, அரசு பள்ளிகளில் மாணவர்களின் சேர்க்கையை வரும் கல்வி ஆண்டில் அதிகரிக்க, கல்வித்துறையில் அரசு செய்து வரும் இலவச சீருடை, நோட்டு புத்தகம் உள்ளிட்ட நலத்திட்டங்களை பெற்றோரிடம் கூற வேண்டும். மாணவர்கள் பள்ளிக்கு சுத்தமாக வர வேண்டும். அப்படி வரவில்லை என்றால் சம்பந்தப்பட்ட ஆசிரியர், பள்ளி தலைமை ஆசிரியர் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என்று கல்வித்துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். கல்வித்துறையின் இந்த அறிவிப்பு ஒட்டு மொத்த தலைமை ஆசிரியர்களையும். ஆசிரியர்களையும் கதி கலங்க வைத்துள்ளது. இது தொடர்பாக கடந்த சில தினங்களுக்கு முன்பு சென்னையில் கூட்டம் நடத்தப்பட்டுள்ளது.
இதில் கல்வித்துறை உயரதிகாரிகள் பங்கேற்றுள்ளனர். கூட்டத்தில் தெரிவிக்கப்பட்ட அறிவிப்புகளை தற்போது, மாவட்ட வாரியாக கல்வி அதிகாரிகள், தலைமை ஆசிரியர்களிடம் தெரிவித்து வருகின்றனர்.
கல்வித்துறை உதவியாளர் நாளை மறுநாள் பணி நியமனம்
பள்ளி கல்வித்துறையில், 563 இளநிலை உதவியாளர்களை பணி நியமனம் செய்வதற்கான கலந்தாய்வு, நாளை மறுநாள், நடக்கிறது.பள்ளி கல்வித் துறையில், காலியாக உள்ள, ஆசிரியர் அல்லாத காலி பணியிடங்கள், படிப்படியாக நிரப்பப்பட்டு வருகின்றன. குரூப்-4 தேர்வில் தேர்வு பெற்ற இளநிலை உதவியாளர்கள், 563 பேர், பள்ளி கல்வித்துறையில், பணியமர்த்தப்படுகின்றனர். இவர்களை, பணி நியமனம் செய்வதற்கான கலந்தாய்வு, நாளை மறுநாள் காலை, 10:00 மணிக்கு, மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலகங்களில் நடக்கிறது. தேர்வு பெற்றோர், அவரவர் சொந்த மாவட்டத்தில் உள்ள, முதன்மைக் கல்வி அலுவலகத்திற்கு, நாளை காலை, 9:00 மணிக்கு, நேரில் ஆஜராக வேண்டும் என, பள்ளி கல்வித் துறை அறிவுறுத்தி உள்ளது. "ஆன்-லைன்' வழியில், கலந்தாய்வு நடக்கிறது.
பெட்ரோல் விலை லிட்டருக்கு ரூ.2.50 வரை குறைய வாய்ப்பு
சர்வதேச சந்தையில் கச்சா எண்ணெய் விலை குறைந்துள்ளதாலும், இந்திய நாணயத்தின் மதிப்பு உயர்ந்து வருவதாலும் பெட்ரோல் விலை மீண்டும் குறைய வாய்ப்பு உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இதன்படி பெட்ரோல் விலை லிட்டருக்கு ரூ.2 முதல் ரூ.2.50 வரை குறைய வாய்ப்பு இருப்பதாகவும், இது குறித்து பெட்ரோல் நிறுவனங்கள் ஆலோசனை நடத்த இருப்பதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.
Monday, April 22, 2013
வாசிப்பு, நேசிப்பு, யோசிப்பு, சுவாசிப்பு: இன்று உலக புத்தக தினம்
கதை சொல்லிகள் இல்லாமல் போயிருந்தால், கடந்த காலங்கள் தெரியாமல் போயிருக்கும். புத்தகங்கள் இல்லை என்றால், நிகழ்காலம் கூட இறந்த காலமாய் மாறிவிடும். புத்தகங்கள் உயிரற்ற காகித குவியல்கள் அல்ல; உயிர்ப்போடு வாழும் மனித மனங்கள். நம்மோடு எப்போதும் இருக்கும், கேள்வி கேட்காத, விடை விரும்பாத ஆசிரியர்கள்."எனது வாழ்க்கையை புரட்டியது புத்தகம் தான்', என சொல்வோர் பலர். ஆயுதத்தின் வலிமையை விட, சக்தி வாய்ந்த இந்த புத்தகங்கள், சமூக மாற்றத்திற்கான திறவுகோல். புத்தகத்தை, அன்றாடம் தங்கள் வாழ்வில் ருசிக்கும் சிலரது பக்கங்கள்...
எம்.பி.பி.எஸ். படிப்பில் சேர மே 5–ந் தேதி முதல் விண்ணப்பம்
18 அரசு மருத்துவ கல்லூரிகள் பிளஸ்–2 முடித்த மாணவர்கள் தேர்வு முடிவை எதிர்பார்த்தபடி உள்ளனர். பிளஸ்–2 தேர்வு முடிவு மே மாதம் 6–ந் தேதியில் இருந்து 10–ந் தேதிக்குள் வெளியிட அரசு தேர்வுத்துறை மும்முரமாக உள்ளன. தமிழ்நாட்டில் அரசு பொது மருத்துவ கல்லூரி, ஸ்டான்லி மருத்துவ கல்லூரி, கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவ கல்லூரி உள்ளிட்ட 18 அரசு மருத்துவ கல்லூரிகள் உள்ளன.இந்த கல்லூரிகளில் மொத்தம் 2 ஆயிரத்து 145 மாணவர்கள் சேர்ந்து படிக்க முடியும். இந்த இடத்தில் 15 சதவீத இடங்கள் அகில இந்திய அளவில் நடைபெறும் பொதுத்தேர்வில் கலந்துகொள்பவர்களுக்கு ஒதுக்கப்படும். எனவே மீதம் உள்ள 1,823 இடங்கள் மட்டும் தமிழகத்திற்கு கிடைக்கும்.
இந்த இடங்களை நிரப்பவும், தனியார் மருத்துவ கல்லூரிகளில் உள்ள அரசு ஒதுக்கீட்டு இடங்களை நிரப்பவும் மருத்துவ படிப்பிற்கான விண்ணப்ப படிவம், பிராஸ்பெக்டஸ் அச்சடிக்கப்பட்டுள்ளன. மே 5–ந் தேதி முதல் விண்ணப்பம் எம்.பி.பி.எஸ். படிப்பில் சேர்வதற்கான விண்ணப்ப படிவம் மே மாதம் 5–ந் தேதி முதல் வழங்கப்படுகிறது. விண்ணப்ப படிவம் தமிழ்நாட்டில் உள்ள அனைத்து அரசு மருத்துவ கல்லூரிகளில் கிடைக்கும். விண்ணப்பிக்க கடைசி நாள் மே 20–ந் தேதி.கவுன்சிலிங் ஜூன் மாதம் 21–க்கு முன்னதாக நடத்தி முடிக்கப்படும்.இப்போது திருவண்ணாமலையில் இந்த கல்வி ஆண்டு முதல் புதிய மருத்துவ கல்லூரி செயல்படத்தொடங்கும். அதன் மூலம் இந்த வருட மாணவர் சேர்க்கை தொடங்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. திருவண்ணாமலை மருத்துவ கல்லூரி தொடங்கினால் 100 எம்.பி.பி.எஸ். இடங்கள் கிடைக்கும். அதில் அகில இந்திய இடஒதுக்கீட்டுக்கு 15 இடங்கள் போய்விடும்.
அதுபோல சென்னை அரசு பொது மருத்துவ கல்லூரியில் இப்போது 165 எம்.பி.பி.எஸ். இடங்கள் உள்ளன. இந்த கல்லூரியில் மேலும் 85 மாணவர்களை சேர்க்க அகில இந்திய மருத்துவ கவுன்சிலிடம் சென்னை மருத்துவ கல்லூரி விண்ணப்பித்துள்ளது.சென்னை ஸ்டான்லி மருத்துவ கல்லூரியில் எம்.பி.பி.எஸ். இடங்கள் 150 உள்ளன. மேலும் 100 இடங்கள் கேட்கப்பட்டுள்ளது.
பொறியியல் படிப்புகளுக்கு மே 4 முதல் விண்ணப்பம்
பொறியியல் படிப்புகளுக்கு மே மாதம் 4ம் தேதி முதல் விண்ணப்பம் வழங்கப்படும் என அண்ணா பல்கலை துணைவேந்தர் காளிராஜ் அறிவித்துள்ளார். மேலும் அவர், இந்த விண்ணப்பங்கள், மே 20ம் தேதி வரை விநியோகம் செய்யப்படும். பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்களை சமர்ப்பிக்க
Sunday, April 21, 2013
மகாவீர் ஜெயந்தி - தமிழகத்தில் விடுமுறை 23.04.2013 அன்றா? அல்லது 24.04.2013 அன்றா?
மத்திய அரசு அலுவலகங்கள் அனைத்தும் 23.04.2013 அன்று விடுமுறை என்றும் மற்றும் நாட்காட்டியின் படியும் 23.04.2013 அன்று விடுமுறை என்றும் தகவல்கள் வருவதால் தமிழ்நாட்டில் விடுமுறை 23.04.13 அன்றா? 24.04.13 அன்றா? என்ற குழப்பம் ஆசிரியர்கள்/ அரசு ஊழியர்கள் மத்தியில் எழுந்துள்ளது. மகாவீர் ஜெயந்தி 24.04.2013 அன்று தமிழக அரசின் அதிகாரபூர்வ விடுமுறை பட்டியலின் படி கடைபிடிக்கப்படும் என்று தெரிவிக்கப்படுகிறது. இதில் ஏதேனும் மாற்றம் இருக்கும் பட்சத்தில் முறையான அறிவிப்பு தமிழக அரசால் அறிவிக்கப்படும் என்று எதிர்ப்பார்க்கப்படுகிறது.
எனவே விடுமுறை குறித்து எவ்வித குழப்பம் அடைய தேவையில்லை என்று கேட்டுகொள்கிறோம். தொடக்கக் கல்வி துறையின் கீழ் திருச்சி, மதுரை, சிவகங்கை, வேலூர் மற்றும் திண்டுக்கல் ஆகிய மாவட்டங்களில் உள்ள பள்ளிகளுக்கு 24.04.2013 புதன்கிழமை விடுமுறை அளித்து உத்தரவிடப்பட்டுள்ளது.
Saturday, April 20, 2013
கோவையில் ஆரம்பப்பள்ளி ஆசிரியர்கள் ஆர்ப்பாட்டம்
தமிழ்நாடு ஆரம்பப்பள்ளி ஆசிரியர் கூட்டணியின் கோவை மாவட்டக்கிளை சார்பில் கோவை மாவட்ட தொடக்கக்கல்வி அதிகாரி அலுவலகம் முன்பு கண்டன ஆர்ப்பாட்டம் நடந்தது. மாவட்ட தலைவர் மணிகண்டன் தலைமை தாங்கினார். மாநில மகளிர் செயற்குழு உறுப்பினர் ஜெயலட்சுமி முன்னிலை வகித்தார். ஆர்ப்பாட்டத்தில் பங்கேற்றவர்கள்,
கோவை மாவட்ட தொடக்கக்கல்வி அதிகாரி பழிவாங்கும் நடவடிக்கையில் ஈடுபடுவதாகவும், அதை கண்டித்து கோஷங்களை எழுப்பினார்கள். இதில் மாவட்ட செயலாளர் ஆனந்தராமன், மாவட்ட துணைத்தலைவர்கள் அறிவழகன், தங்கபாசு, தெய்வாணை, மாவட்ட துணை செயலாளர்கள் வசந்தகுமார், பாபு, ராமதிலகம், வட்டார செயலாளர்கள் தண்டபாணி, இக்னேசியஸ் ஜோசப் அந்தோணி, திருநாவுக்கரசு, ரமேஷ்குமார், சந்திரகுமார், விஜயகுமார், பழனிக்குமார் உள்பட பலர் கலந்து கொண்டனர். முடிவில் மாவட்ட பொருளாளர் கருப்புச்சாமி நன்றி கூறினார்.
கோவை மாநகராட்சியில் பள்ளி குழந்தைகளுக்கு கல்வி திறனை மேம்படுத்த புதிய திட்டம்: மேயர் செ.ம.வேலுச்சாமி தகவல் -
புதிய சாப்ட்வேர் தமிழகத்திலேயே முதன்முறையாக கோவை மாநகராட்சியில் எவரான் கல்வி நிறுவனத்தின் சார்பில் இலவசமாக புதிய சாப்ட்வேர் மூலம் பள்ளி குழந்தைகளின் கல்வி திறனை மேம்படுத்தும் வகையில் திட்டம் செயல்படுத்தப்பட உள்ளது. அது குறித்து செயல்விளக்கம் செய்து காண்பிக்கப்பட்டது. இந்த திட்டத்தின் மூலம் பள்ளியில் ஒரு குழந்தையை சேர்ப்பது முதல் படித்து முடித்து வெளியில் செல்வது வரை அவர்களின் படிப்பு, நடத்தை, முன்னேற்றத்துக்கு தேவையான வழிமுறைகள் அனைத்தையும் அதன் மூலம் அறிந்து கொள்ளலாம்.
இதில் குழந்தைகளுக்கு தேவையான வினா வங்கியை ஆசிரியர்களே உருவாக்கிக்கொள்ளலாம். விரைவில் செயல்படுத்த முடிவு மேலும் பெற்றோர் வீட்டில் இருந்தபடியே தங்களுடைய குழந்தைகளின் கல்வி திறனை அறிந்து கொள்ள முடியும். மாணவர்கள் வருகை, ஆசிரியர்கள் நடத்திய பாடங்கள், மாணவர்கள் எழுதிய தேர்வுகள், அதற்கான முடிவுகள் அனைத்தையும் இணைய தளம் மூலம் தெரிந்து கொள்ளலாம். இந்த திட்டம் கோவை மாநகராட்சியில் விரைவில் செயல்படுத்தப்பட உள்ளது. இவ்வாறு மேயர் செ.ம.வேலுச்சாமி தெரிவித்தார்.
தேர்வு / தேர்ச்சி அனுமதி பெற உதவி தொடக்கக்கல்விஅலுவலரிடம் சமர்பிக்க வேண்டியவைகள
் *மதிப்பெண் பதிவேடு
*தேர்ச்சி தரநிலை விபரப்பட்டியல் *மக்கள் தொகை சுருக்கம்
*5+ குழந்தைகள் பெயர்ப்பட்டியல் *இடைநின்றவர் பெயர்ப்பட்டியல் / இன்மை அறிக்கை *பள்ளியில்சேராதவர் பெயர்ப்பட்டியல் / இன்மை அறிக்கை *மாற்றுத்திறனாளிகள்பெயர்ப்பட்டியல் / இன்மை அறிக்கை *குழந்தைதொழிலாளர்பெயர்ப்பட்டியல் / இன்மை அறிக்கை
*EER சுருக்கம்
*பள்ளி வேலை நாட்கள் விபரம் *கோடைவிடுமுறை அனுமதி
Friday, April 19, 2013
ஆன்-லைனில் ஆசிரியர் பயிற்சி விண்ணப்பம்
தொடக்க கல்வி பட்டயத்தேர்வு எழுதும், தனித் தேர்வர்களுக்கான விண்ணப்பங்களை ஆன்லைனில் பெறும் வசதி அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. அரசு சார்பில், மாவட்டம் தோறும் நடத்தப்பட்டு வரும் ஆசிரியர் கல்வி மற்றும் பயிற்சி நிறுவனத்தில் (டயட்) கடந்த கல்வி ஆண்டுக்கான இறுதி தேர்வு 2012 ஜூன்-ஜூலையில் நடந்தது. தவிர, தனியார் ஆசிரியர் பயிற்சி நிறுவனங்களின் தேர்வும் அப்போதே நடந்தது. ஆசிரியர் பயிற்சி தேர்வுகளில் தவறிய மாணவர்களுக்கும், அடுத்த ஆண்டே எழுதும் விதமாக தனித்தேர்வுகள் நடத்தப்படுகிறது.
இந்த தனித் தேர்வுகளுக்கான விண்ணப்பங்களை ஆன்லைனில் பெற்று விண்ணப்பிக்கும் முறை தற்போது அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. இதற்கு முன், ஒவ்வொரு ஆண்டும் தனித் தேர்வு எழுதுவோர், அந்தந்த மாவட்டத்தில் உள்ள ஆசிரியர் கல்வி மற்றும் பயிற்சி நிறுவனத்தில், தான் விண்ணப்பங்களை பெற்று அங்கேயே விண்ணப்பிக்க வேண்டும். அவ்வாறு விண்ணப்பங்களை பெறுவதில், நடைமுறை சிக்கல்களும், சிரமங்களும் இருந்தன. இதைபோக்கும் வகையில், தனித் தேர்வு எழுதுவோர், tn.govt.in/dge என்ற இணையதளத்தில், விண்ணப்பங்களை பதிவிறக்கம் செய்து பெறலாம்.
விண்ணப்பத்தில் 1 முதல் 4 ம் பக்கம் வரை விண்ணப்பிப்பதற்கான, அனைத்து விபரங்களும், ஐந்து, ஆறாம் பக்கத்தில் விண்ணப்பங்களை பூர்த்தி செய்வதில் பின்பற்ற வேண்டிய அறிவுரைகளும் இடம் பெற்றிருக்கும். ஏப்., 18 முதல் 29 ம் தேதி வரை, இணையதளத்தில் விண்ணப்பங்களை பெறலாம். விண்ணப்பங்களை பூர்த்தி செய்து, ஏப்., 29 மாலை 5 மணிக்குள் அந்தந்த மாவட்ட டயட் அலுவலகத்தில் சமர்பிக்க வேண்டும்,என தெரிவிக்கப்பட்டுள்ளது.
"தினத்தந்தி' அதிபர் சிவந்தி ஆதித்தன் மறைவு
் "தினத்தந்தி' நாளிதழ் அதிபர் சிவந்தி ஆதித்தன் (76) சென்னையில் வெள்ளிக்கிழமை இரவு காலமானார். கடந்த சில நாள்களாக உடல் நலம் பாதிக்கப்பட்டிருந்த அவர், சென்னையில் உள்ள தனியார் மருத்துவமனையொன்றில் சிகிச்சை பெற்று வந்தார். சில தினங்களுக்கு முன்பு முதல்வர் ஜெயலலிதா அவரை மருத்துவமனையில் சந்தித்து நலம் விசாரித்தார். இந்த நிலையில் வெள்ளிக்கிழமை அவரது உடல்நிலை மோசமடைந்தது. மாலையில் அவரது உயிர் பிரிந்தது.
தினத்தந்தி நாளிதழின் நிறுவனர் மறைந்த சி.பா.ஆதித்தனாரின் மகன் சிவந்தி ஆதித்தன் 27.9.1936 அன்று பிறந்தார். சென்னை மாநிலக் கல்லூரியில் பட்டப் படிப்பு முடித்த அவர், ஆதித்தனார் மறைவுக்குப் பிறகு தினத்தந்தி நிர்வாகத்தைப் பொறுப்பேற்று நடத்தி வந்தார். தந்தி டி.வி. தொலைக்காட்சி நிறுவனத்தையும், ஹலோ எப்.எம். வானொலியையும் அவர் நிர்வகித்து வந்தார். ஆதித்தனார் கலை அறிவியல் கல்லூரி உள்பட பல கல்லூரிகளை நடத்தி வந்தார்.
பத்திரிகைத் துறை, கல்வித் துறை மட்டுமின்றி விளையாட்டுத் துறையிலும் சிவந்தி ஆதித்தன் சிறந்து விளங்கினார். இந்திய ஒலிம்பிக் சங்கத்தின் தலைவராக அவர் பணியாற்றியுள்ளார். வாலிபால் விளையாட்டுக்கு அவர் ஆற்றிய சேவையைப் பாராட்டி சர்வதேச வாலிபால் சம்மேளனம் அவருக்கு தங்கப் பதக்கம் வழங்கி கெüரவித்துள்ளது. மத்திய அரசு கடந்த 2008-ஆம் ஆண்டு பத்மஸ்ரீ விருது வழங்கி அவரை சிறப்பித்தது. மதுரை காமராசர் பல்கலைக்கழகம் உள்பட பல்வேறு பல்கலைக்கழகங்கள் அவருக்கு டாக்டர் பட்டங்களை வழங்கியுள்ளன. அவரது இறுதிச் சடங்கு பெசன்ட் நகர் மயானத்தில் சனிக்கிழமை (ஏப்ரல் 20) பிற்பகல் 3 மணிக்கு நடைபெறவுள்ளது.