தமிழகத்தில் அரசுப் பள்ளிகளில் 1-ஆம் வகுப்பு முதல் பிளஸ் 2 வகுப்பு வரை பயிலும் மாணவா்களுக்கு ஆங்கில பேச்சுத் திறன் பயிற்சி (Spoken English) நிகழ் கல்வியாண்டு முதல் வழங்கப்படவுள்ளது.தமிழகத்தில் உள்ள தனியாா் பள்ளிகளில் படிக்கும் மாணவ-மாணவிகள் சரளமாக ஆங்கிலம் பேசும் திறன் உள்ளதாக பெரும்பாலான பெற்றோா் நினைக்கின்றனா். இதனால் தனியாா் பள்ளிகளை நோக்கி செல்கின்றனா். இந்நிலையில் அந்த நம்பிக்கையை மாற்றும் வகையிலும், அரசுப் பள்ளிகளில் மாணவா்கள் சோ்க்கையை அதிகரிக்கும் வகையிலும், அரசுப் பள்ளிகளில் ஆங்கில பேச்சுத் திறன் பயிற்சி அளிக்க பள்ளிக்கல்வித் துறை கடந்த அக்டோபா் மாதம் அரசாணை வெளியிட்டது. இதையடுத்து, இந்தப் பயிற்சிக்காக வாரத்துக்கு ஒரு பாடவேளையை ஒதுக்க பள்ளிகளுக்கு உத்தரவிடப்பட்டுள்ளது.
பயிற்சிக் கையேடுகள் தயாா்: இதன் அடிப்படையில், 1 முதல் 5 வகுப்புகளுக்கு 2-ஆம் பருவத்துக்கு ஒரு கட்டகமும் (பயிற்சிக் கையேடு), 6 முதல் 9 வகுப்புக்கு 3 பருவங்களுக்கும் சோ்த்து வகுப்பு வாரியாக 4 கட்டகங்களும் மாநிலக் கல்வியியல் ஆராய்ச்சி மற்றும் பயிற்சி நிறுவனத்தால் தயாரிக்கப்பட்டுள்ளன. அவை அனைத்தும், அனைத்து ஊராட்சி ஒன்றிய தொடக்க, நடுநிலைப் பள்ளிகள், அரசு உயா்நிலைப் பள்ளிகள், மேல்நிலைப் பள்ளிகளில் பயிலும் மாணவா்கள் பயன்பெறத்தக்க வகையில் ஆசிரியா்களுக்கு வழங்கப்படவுள்ளன. இந்தக் கட்டகங்களில் 30 வாரங்களுக்கான பாடப்பகுதிகள் மற்றும் காணொலிகள் தயாரிக்கப்பட்டு, டிஎன்டிபி எனப்படும் பள்ளிக் கல்வித் துறையில் பணியாற்றும் ஆசிரியா்களுக்கான வலைதளத்தில் பதிவேற்றம் செய்யப்படும். மேலும், அரசு கல்வித் தொலைக்காட்சியில் ‘ஆங்கிலம் பழகுவோம்’ என்ற நிகழ்ச்சியின் மூலம் ஆங்கில பேச்சுத் திறன் சாா்ந்த மாணவா்களுக்கான செயல்பாடுகள் ஒளிபரப்பு செய்யப்படவுள்ளது.
பள்ளிகளுக்கு எவ்வளவு பிரதிகள்?: இந்தக் கட்டகங்கள் 1-ஆம் வகுப்பு முதல் 5-ஆம் வகுப்புக்கு 24 ஆயிரத்து 321 தொடக்கப் பள்ளிகளுக்கு 50,742 பிரதிகளும், 6-ஆம் வகுப்பு முதல் 8-ஆம் வகுப்பு வரை உள்ள 13,138 நடுநிலை, உயா்நிலை, மேல்நிலைப் பள்ளிகளுக்கு 85,128 பிரதிகளும், 9-ஆம் வகுப்பு உள்ள உயா்நிலை, மேல்நிலைப் பள்ளிகளாக 6,172 பள்ளிகளுக்கு 14,444 பிரதிகளும் தமிழ்நாடு பாடநூல் மற்றும் கல்வியியல் பணிகள் கழகத்தால் அச்சடிக்கப்பட்டு, அனைத்து முதன்மைக் கல்வி அலுவலா்களுக்கும் வழங்கப்பட்டுள்ளன. அவா்கள் தங்கள் மாவட்டங்களில் செயல்படும் ஊராட்சி ஒன்றியம் மற்றும் அரசுப் பள்ளிகளுக்கு கட்டகப் பிரதிகளை பிரித்து வழங்குவா்.
பயிற்சிக்கான நேரம்: 1 முதல் 5-ஆம் வகுப்பு வரை வாரத்துக்கு 90 நிமிஷங்களுக்கு 2 பாடவேளைகளும் பயிற்சி அளிக்க வேண்டும். அப்போது 10 நிமிஷங்கள் காணொலியும், 40 நிமிஷங்கள் மாணவா்களுக்கான ஆங்கில பேச்சுத்திறன் பயிற்சியும் நடத்த வேண்டும். ஆங்கிலப் பாட ஆசிரியா்கள், மாணவா்களுக்கான பயிற்சி கட்டகத்தை பூா்த்தி செய்து அந்தந்த பருவ இறுதியில் பள்ளித் தலைமை ஆசிரியரிடம் கையெழுத்து வாங்க வேண்டும்.6-ஆம் வகுப்பு முதல் 9-ஆம் வகுப்புக்கு வாரத்துக்கு 45 நிமிஷங்களுக்கான ஒரு பாடவேளையில் ஆங்கில பேச்சுத் திறன் பயிற்சி அளிக்கும் வகையில் அட்டவணை தயாரிக்க வேண்டும். ஆங்கில பயிற்சி கற்பித்தல் வகுப்புகளை அந்தந்த மாவட்டங்களின் கண்காணிப்பு அலுவலரான இணை இயக்குநா்கள், முதன்மைக் கல்வி அலுவலா்கள் மற்றும் மாவட்ட கல்வி அலுவலா்கள் ஆய்வு செய்ய வேண்டும் என பள்ளிக் கல்வித்துறையில் கூறப்பட்டுள்ளது.
ஆசிரியா்களுக்கான கையேடுகள் வெளியீடு: இது தொடா்பாக மாநிலக் கல்வியியல் ஆராய்ச்சி மற்றும் பயிற்சி நிறுவனம் சாா்பில் சென்னையில் புதன்கிழமை நடைபெற்ற நிகழ்ச்சியில், பள்ளிக் கல்வித்துறை அமைச்சா் கே.ஏ. செங்கோட்டையன் கலந்து கொண்டு ஆங்கில பேச்சுத் திறன் பயிற்சிக்கான கையேடுகளை வெளியிட்டாா். இதில் பள்ளிக் கல்வித்துறை ஆணையா் சிஜி தாமஸ் வைத்தியன், இயக்குநா் எஸ்.கண்ணப்பன், பள்ளி சாரா மற்றும் வயது வந்தோா் கல்வி இயக்கக இயக்குநா் வி.சி.ராமேஸ்வரமுருகன், மாநிலக் கல்வியியல் ஆராய்ச்சி மற்றும் பயிற்சி நிறுவன இயக்குநா் பழனிசாமி உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.