13-12-18
பள்ளி காலை வழிபாடு செயல்பாடுகள்:
திருக்குறள் : 103
பயன்தூக்கார் செய்த உதவி நயன்தூக்கின்
நன்மை கடலின் பெரிது.
உரை:
இன்ன பயன் கிடைக்கும் என்றுஆராயாமல் ஒருவன் செய்த உதவியின் அன்புடைமையை ஆராய்ந்தால் அதன் நன்மை கடலைவிட பெரியதாகும்.
பழமொழி:
Every cock will crow upon its dung hill
தன் ஊரில் யானை; அயலூரில் பூனை
பொன்மொழி:
தோல்வியின் அடையாளம் தயக்கம்!
வெற்றியின் அடையாளம் துணிச்சல்!
துணிந்தவர் தோற்றதில்லை!!
தயங்கியவர் வென்றதில்லை!
இரண்டொழுக்க பண்பாடு :
1.நான் என்னுடைய வாழ்நாளில் யாருடைய உடலுக்கும் மனதிற்கும் துன்பம் தரமாட்டேன் .
2.துன்பப்படுவோர்க்கு என்னால் முடிந்த உதவிகளை செய்வேன் .
பொது அறிவு :
1) யுவான் நாணய முறை எந்த நாட்டில் பின்பற்றப்படுகிறது?
சீனா
2) யூரோ நாணய முறை எந்தெந்த நாடுகளில் பின்பற்றப்படுகிறது?
பிரான்ஸ், ஜெர்மனி, பெல்ஜியம், ஆஸ்திரியா, கிரீஸ்
நீதிக்கதை :
ரொட்டித் துண்டு!
தொடர்ந்து சில ஆண்டுகளாக மழையே பெய்யவில்லை. அந்த ஊரில் கடும் பஞ்சம் நிலவியது. மக்கள் பசியால் வாடினர். நல்ல உள்ளம் படைத்த செல்வந்தர் ஒருவரிடம் அந்த ஊர் மக்கள் சென்றனர்.
“”ஐயா! பெரியவர்களாகிய நாங்கள் எப்படியோ பசியைப் பொறுத்துக் கொள்கிறோம். சிறுவர், சிறுமியர்கள் என்ன செய்வர்? இந்த நிலையில் நீங்கள் கட்டாயம் உதவி செய்ய வேண்டும்…” என்று வேண்டினர்.
இளகிய உள்ளம் படைத்திருந்த அவர், “”இந்த ஊரில் குழந்தைகள் யாரும் பசியால் வாட வேண்டாம். ஆளுக்கொரு ரொட்டி கிடைக்குமாறு செய்கிறேன். என் வீட்டிற்கு வந்து ரொட்டியை எடுத்துச் செல்லச் சொல்லுங்கள்!” என்றார்.
மாளிகை திரும்பிய அவர், தன் வேலைக்காரனை அழைத்தார். “”இந்த ஊரில் உள்ள குழந்தைகளின் எண்ணிக்கையைக் கணக்கெடுத்துக் கொள். ஆளுக்கொரு ரொட்டி கிடைக்க வேண்டும். கூடவும் கூடாது, குறையவும் கூடாது.
நாளையிலிருந்து ரொட்டிகளைக் கூடையில் சரியான எண்ணிக்கையில் வைத்துக்கொண்டு வீட்டிற்கு வெளியே இரு…” என்றார்.
மறுநாள், வேலைக்காரன் ரொட்டிக் கூடையுடன் வெளியே வந்தான். அங்கே காத்திருந்த சிறுவர், சிறுமியர் அவனைச் சூழ்ந்து கொண்டனர். கூடையை அவர்கள் முன் வைத்தான் அவன்.
பெரிய ரொட்டியை எடுப்பதில் ஒவ்வொருவரும் போட்டி போட்டனர். ஆனால், ஒரே ஒரு சிறுமி மட்டும் அமைதியாக இருந்தாள். எல்லாரும் எடுத்துச் சென்றது போக, மிஞ்சி இருந்த சிறிய துண்டை எடுத்துக் கொண்டு அங்கிருந்து மகிழ்ச்சியுடன் சென்றாள் அவள்.
இப்படியே தொடர்ந்து நான்கு நாட்கள் நிகழ்ந்தது. எல்லாவற்றையும் கவனித்துக் கொண்டிருந்தார் செல்வந்தர்.
ஐந்தாம் நாளும் அப்படியே நடந்தது. எஞ்சியிருந்த சிறிய ரொட்டியை எடுத்துக் கொண்டு புறப்பட்டாள் அந்த சிறுமி.
தன் வீட்டிற்கு வந்தவள், தன் தாயிடம் அதைத் தந்தாள். அந்த ரொட்டியைப் பிய்த்தாள் தாய். அதற்குள் இருந்து ஒரு தங்கக்காசு கீழே விழுந்தது.
அந்தத் தங்கக் காசை எடுத்துக் கொண்டு செல்வந்தரின் வீட்டிற்கு வந்தாள் சிறுமி.
“”ஐயா! இது உங்கள் தங்கக் காசு. ரொட்டிக்குள் இருந்தது. பெற்றுக் கொள்ளுங்கள்!” என்றாள் அவள்.
“”சிறுமியே! உன் பொறுமைக்கும், நற்பண்பிற்கும் நான் அளித்த பரிசே இந்தத் தங்கக் காசு. மகிழ்ச்சியுடன் இதை எடுத்துக் கொண்டு வீட்டிற்குச் செல்…” என்றார் செல்வர்.
துள்ளிக் குதித்தபடி ஓடி வந்த அவள், நடந்ததை தன் தாயிடம் சொன்னாள்.
இன்றைய செய்தி துளிகள் :
1.அரசு பள்ளிகளில் LKG,UKG - வகுப்புகள் ஜனவரி-21ல் தொடக்கம்: அமைச்சர் செங்கோட்டையன்
2.முல்லை பெரியாறில் விரைவில் புதிய அணை கட்டப்படும் : கேரள முதல்வர் திட்டவட்டம்
3.ஐந்து மாநில சட்டப்பேரவை தேர்தலில், ராஜஸ்தான், சட்டீஸ்கர், மத்தியப் பிரதேசம் ஆகிய மாநிலங்களில் காங்கிரஸ் ஆட்சியை கைப்பற்றி உள்ளது.
4.தமிழகத்தின் கடலோர பகுதிகளில் டிசம்பர் 15, 16-ம் தேதி மிக கனமழைக்கு வாய்ப்பு: வானிலை மையம் தகவல்
5.சீனாவின் குவாங்ஷுவில் நடைபெறும் உலக பாட்மிண்டன் சம்மேளன டூர் பைனல்ஸ் போட்டியின் முதல் ஆட்டத்தில் பி.வி.சிந்து வெற்றி பெற்றுள்ளார்.