15-10-18
பள்ளி காலை வழிபாடு செயல்பாடுகள்:
திருக்குறள்:65
மக்கள்மெய் தீண்டல் உடற்கின்பம் மற்றுஅவர்
சொற்கேட்டல் இன்பம் செவிக்கு.
உரை:
மக்களின் உடம்பைத் தொடுதல் உடம்பிற்கு இன்பம் தருவதாகும்: அம் மக்களின் மழலைச் சொற்களைக் கேட்டால் செவிக்கு இன்பம் தருவதாகும்.
பழமொழி :
Charity begins at home
தனக்குப் போகத்தான் தானமும் தர்மமும்
பொன்மொழி:
உலகில் எப்படி வாழ்வது என்பதையாவது தெரிந்து கொள்ளும் அளவுக்கு உன்னை நீயே அறிந்து கொள்; அதுவே வாழ்க்கையில் நீ அடையத்தக்க பெரும் பேறு.
- ஜேம்ஸ் டக்ஸில்
இரண்டொழுக்க பண்பாடு :
1.நான் என்னுடைய வாழ்நாளில் யாருடைய உடலுக்கும் மனதிற்கும் துன்பம் தரமாட்டேன் .
2.துன்பப்படுவோர்க்கு என்னால் முடிந்த உதவிகளை செய்வேன் .
பொது அறிவு :
1.உலகின் மிகப்பெரிய வைரச் சுரங்கம் எங்குள்ளது?
தென் ஆப்பிரிக்கா
2.தென் ஆசியாவின் மிகப்பெரிய நூலகம் எங்கு உள்ளது?
சென்னை
நீதிக்கதை
அதிசயக்குதிரை
கிருஷ்ண தேவராயரின் படைகளுள் குதிரைப் படையும் ஒன்று. குதிரைப்படையும் வலிமையுள்ளதாக இருந்தது சண்டை இல்லாத காலங்களில் குதிரைகளைப் பராமரிக்க மந்திரிகளில் ஒருவர் ஒரு யோசனை சொன்னர்.
அதாவது ஒரு வீட்டிற்கு ஒரு குதைரையையும் அதற்குத் தீனி போடுவதற்கு ஒரு குறிப்பிட்ட தொகையும் கொடுக்கப்பட்டு வந்தது. அத்தொகையைப் பெற்றுக்கொண்டு குதிரையை நன்கு ஊட்டளித்து வளர்த்தனர். அதே போல் தெனாலிராமனுக்கும் ஒரு குதிரை கொடுக்கப்பட்டது.
ஆனால் தெனாலிராமனோ ஒரு சிறிய கொட்டகையில் குதிரையை அடைத்து வைத்து புல் போடுவதற்கு மட்டுமே ஒரு சிறிய தூவாரம் வைத்திருந்தான். அந்த துவாரத்தின் வழியாக புல்லை. நீட்டியவுடன் குதிரை வெடுக்கென வாயால் கௌவிக் கொள்ளும். மிகவும் சிறிதளவு புல் மட்டுமே தினமும் போட்டு வந்தான். அதனால் அக்குதிரை எலும்பும் தோலுமாக நோஞ்சானாக இருந்தது.
குதிரைக்குத் தீனி வாங்கிப் போடும் பணத்தில் தெனாலிராமன் நன்கு உண்டு
கொழுத்தான். ஒரு நாள் குதிரைகள் எப்படி இருக்கின்றன என்று காண அனைவருக்கும் செய்தி அனுப்பி குதிரைகளை அரண்மனைக்கு வரவழைத்தார் மன்னர்.
அதன்படி குதிரைகள் அனைத்தும் அரண்மனைக்குக் கொண்டு வரப்பட்டன மன்னர் குதிரைகளைப் பார்வையிட்டார். குதிரைகள் அனைத்தும் மிக திருப்திகரமாக இருந்ததால் மன்னர் மகிழ்ச்சியடைந்தார்.
அங்கிருந்த தெனாலிராமனை அழைத்து “உன் குதிரையை ஏன் கொண்டு வரவில்லை” என மன்னர் கேட்டார். அதற்கு தெனாலிரானோ “என் குதிரை மிகவும் முரட்டுத்தனமாக இருக்கிறது. அதை என்னால் அடக்க முடியவில்லை. அதனால் தான் இங்கே கொண்டு வர வில்லை.” என்றான்.
“குதிரைப்படைத் தலைவரை என்னுடன் அனுப்புங்கள். அவரிடம் கொடுத்தனுப்புகிறேன்” என்றான் இதை உண்மையென்று நம்பிய மன்னர் குதிரைப்படைத் தலைவனை தெனாலிராமனுடன் அனுப்பினார்.
குதிரைப்படைத்தலைவருக்கு நீண்ட தாடியுண்டு குதிரைப் படைத்தலைவரும் அந்த துவாரத்தின் வழியாக குதிரையை எட்டிப் பார்த்தார். உடனே குதிரை அது புல்தான் என்று நினைத்து அவரது தாடியைக் கவ்விப் பிடித்துக் கொண்டது. வலி பொறுக்கமாட்டாத குதிரைப் படைத்தலைவர் எவ்வளவோ முயன்றும் தாடியை குதிரையிடமிருந்து விடுவிக்க முடியவில்லை. இச்செய்தி மன்னருக்கு எட்டியது. மன்னரும் உண்மையிலேயே இது முரட்டுக் குதிரையாகத்தான் இருக்கும் என்று எண்ணி தெனாலிராமன் வீட்டுக்கு விரைந்தார்.
அங்கு குதிரையின் வாயில் குதிரைப்படைத் தலைவரின் தாடி சிக்கி இருப்பதை அறிந்து அந்தக் கொட்டகையைப் பரிக்கச் செய்தார். பின் குதிரையைப் பார்த்தால் குதிரை எலும்பும், தோலுமாக நிற்பதற்குக் கூட சக்தியற்று இருந்ததைக் கண்டு மன்னர் கோபங்கொண்டு அதன் காரணத்தைத் தெனாலிராமனிடம் கேட்டார்.
அதற்குத் தெனாலிராமன் “இவ்வாறு சக்தியற்று இருக்கும் போதே குதிரைப்
படைத்தலைவரின் தாடியை கவ்விக்கொண்டு விடமாட்டேன் என்கிறது. நன்கு உணவு ஊட்டி வளர்த்திருந்தால் குதிரைப் படைத் தலைவரின் கதி அதோகதிதான் ஆகி இருக்கும் ” என்றான்.
இதைக் கேட்ட மன்னன் கோபத்திலும் சிரித்து விட்டார். பின்னர் தெனாலிராமனை மன்னித்து விட்டார்.
இன்றைய செய்தி துளிகள்:
1.் உலகத்தரம் வாய்ந்த அறிவியல் ஆய்வகம் 672 பள்ளிகளில் அமைக்கப்படும் - அமைச்சர் செங்கோட்டையன்
2.கற்றல் குறைபாடுடைய மாணவர்களைக் கட்டாயப்படுத்தி பள்ளியில் இருந்து வெளியேற்றக் கூடாது எனத் தனியார் பள்ளிகளுக்கு பள்ளிக் கல்வித்துறை அறிவுறுத்தியுள்ளது
3.கர்நாடகாவில் வேகமாக பரவும் பன்றிக்காய்ச்சல்: இதுவரை 456 பேர் பாதிப்பு
4.நதிநீர் பிரச்சனையை தீர்க்க புதிய சட்டம்.. முதலமைச்சர்கள் அடங்கிய குழுக்களை அமைக்க மத்திய அரசு திட்டம்
5.மேற்கிந்திய தீவுக்கு எதிரான 2-வது டெஸ்ட் போட்டியில் வெற்றி பெற்று தொடரை வென்றது இந்திய அணி