இலவச SMS களை உடனுக்குடன் பெற ON tnptfmani என்று type செய்து 9870807070 என்ற எண்ணிற்கு அனுப்பி இலவச குறுந்தகவல்களை(SMS) பெறுங்கள். DND (Do NOT Disturb) சர்வீஸ்ல் உள்ள எண்கள் அதனை(DND) நீக்கிய பிறகே இச்சேவையை பெறமுடியும். plz call 1909

Saturday, February 10, 2018

கல்விக்கடன் விண்ணப்பம்


மாணவர்கள் கல்விக்கடனுக்காக விண்ணப்பிக்கும் போது ஆன்லைனில் மூலம் அனுப்பப்படும் விண்ணப்பங்களை மட்டுமே ஏற்க வேண்டும் என்று வங்கிகளுக்கு அரசு சார்பில் கண்டிப்பான உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

இதன் மூலம், கல்விக்கடன் வழங்குவதில் வெளிப்படைத்தன்மையும், ஊழல் இல்லாத சூழலும், திறன்மிகு வகையில் செயல்படுத்தவும் இந்த திட்டத்தை செயல்படுத்தியுள்ளது.

இதற்காக "வித்யாலட்சுமி"எனும் போர்ட்டலை மத்திய அரசு செயல்படுத்தியுள்ளது. அந்த போர்டெல் மூலமே மாணவர்கள் கல்விக் கடனுக்கு விண்ணப்பிக்க வேண்டும். இந்த வித்யா லட்சுமி போர்டெல் என்பது மாணவர்களுக்கு வழங்கப்படும் உதவித்தொகை மட்டுமின்றி, கல்விக்கடன் தொகை குறித்தும் நிர்வகிக்கும்.

இந்த போர்டல் மூலம் இதுவரை 36 வங்கிகள் 13 ஆயிரத்து 190 மாணவர்களுக்கு கல்விக் கடனை ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.

இது குறித்து வித்யா லட்சுமி போர்டலை நிர்வகிக்கும், என்எஸ்டிஎல் இ நிர்வாக அமைப்பின் தலைமை நிர்வாக அதிகாரி ககன் ராய் நிருபர்களிடம் கூறுகையில், "மத்திய நிதி அமைச்சகத்தின் நிதிச்சேவை அமைப்பு சமீபத்தில் பிறப்பித்த உத்தரவில், நாட்டில் உள்ள அனைத்து வங்கிகளும் மாணவர்களின் கல்விக்கடன் விண்ணப்பத்தை நேரடியாக பெறக்கூடாது என உத்தரவிட்டுள்ளது.

அதற்கு மாற்றாக, வித்யா லட்சுமி எனும் போர்டல் மூலமே கல்விக்கடன் விண்ணப்பங்களை பெற வேண்டும். அதன் மூலமே கல்விக்கடன் தொடர்பான பணிகள், ஒதுக்கீடு அனைத்தும் நடைபெற வேண்டும் எனத் தெரிவித்துள்ளது.

ஏற்கனவே லட்சக்கணக்கான மாணவர்கள் வித்யா லட்சுமி போர்டலுக்கு வந்து பதிவு செய்து, கல்விக்கடனுக்கு விண்ணப்பித்து வருகின்றனர். அதேசமயம், கல்விக்கடனுக்கு விண்ணப்பிக்கும் மாணவர்களில் போலியானவர்களையும் கண்டுபிடிக்கும் வசதியும் இதில் உள்ளது. இதன் மூலம் எதிர்காலத்தில் கல்விக்கடன் வழங்குவது எளிதாகும், வெளிப்படைத்தன்மையுடன் இருக்கும்

இவ்வாறு அவர் தெரிவித்தார்.

நாடட்டில் கல்விக்கடன் வழங்குவதில் மிகப்பெரிய சரிவு ஏற்பட்டதைத் தொடர்ந்து, மத்திய அரசு இந்த போர்ட்டலை தொடங்க உத்தரவிட்டது.

Thursday, February 08, 2018

மே 6-இல் நீட் தேர்வு: விண்ணப்பிக்க மார்ச் 9 கடைசி


எம்.பி.பி.எஸ்., பி.டி.எஸ். மருத்துவப் படிப்புகளில் சேர்க்கை பெறுவதற்கான "நீட்' (தேசிய அளவிலான தகுதித் தேர்வு) தேர்வுக்கான அறிவிக்கையை மத்திய இடைநிலைக் கல்வி வாரியம் (சிபிஎஸ்இ) வியாழக்கிழமை வெளியிட்டது. வரும் மே 6-ஆம் தேதி நடைபெறும் நீட் தேர்வுக்கு விண்ணப்பிக்க மார்ச் 9 கடைசி நாளாகும்.

விண்ணப்பிக்க ஆதார் எண் கட்டாயமாக்கப்பட்டுள்ளது. அரசு மற்றும் தனியார் மருத்துவக் கல்லூரிகளில் உள்ள எம்.பி.பி.எஸ்., பிடிஎஸ் மருத்துவப் படிப்புகளுக்கான அனைத்து இடங்களும் "நீட்' தகுதித் தேர்வு அடிப்படையிலேயே மாணவர் சேர்க்கை நடத்தப்படுகிறது. கடந்த ஆண்டு முதல் நாடு முழுதும் நீட் தேர்வு நடத்தப்படுகிறது. தமிழகத்தில் நீட் தேர்வுக்கு எதிராகப் போராட்டங்கள் நடத்தப்பட்டாலும் உச்ச நீதிமன்ற உத்தரவு காரணமாக கடந்த ஆண்டு தடையின்றித் தேர்வு நடந்தது. இதனால், தமிழக அரசுப் பள்ளிகளில் படிக்கும் மாணவர்களை இத்தேர்வுக்குத் தயார் செய்வதற்காக, தமிழக அரசு இலவசப் பயிற்சி மையங்களை அமைத்து பயிற்சியளித்து வருகிறது.

முதல் கட்டமாக 100 பயிற்சி மையங்கள் அமைக்கப்பட்டுள்ளன. தேர்வு எப்போது?: இந்தச்சூழலில் 2018-ஆம் ஆண்டுக்கான தேர்வு மே 6-இல் நடைபெற உள்ளது என்ற அறிவிப்பை சி.பி.எஸ்.இ. வியாழக்கிழமை வெளியிட்டது. இந்தத் தேர்வில் பிளஸ் 2 இயற்பியல், வேதியியல், உயிரியல் பாடங்களில் இருந்து 180 கொள்குறி தேர்வு முறை (நான்கு விடைகளில் சரியான ஒன்றைத் தேர்ந்தெடுப்பது) அடிப்படையில் கேள்விகள் கேட்கப்படும். காலை 10 மணி முதல் மதியம் 1 மணி வரை தேர்வு நடைபெறும். தகுதி: தேர்வை எழுத விரும்பும் மாணவர்கள் பிளஸ் 2 தேர்ச்சியுடன் இயற்பியல், வேதியியல், உயிரியல் அல்லது உயிரி தொழில்நுட்பப் பாடங்களில் 50 சதவீத மதிப்பெண்களுடன் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். எஸ்.சி., எஸ்.டி. மாணவர்களாக இருந்தால் இந்த மூன்று பாடங்களிலும் 40 சதவீத மதிப்பெண்களுடனும், மாற்றுத்திறனாளி மாணவர்கள் 45 சதவீத மதிப்பெண்களுடனும் தேர்ச்சி பெற்றிருந்தால் போதுமானது.

வயது வரம்பு: தேர்வுக்கு விண்ணப்பிப்பவர்களுக்கு 17 வயது நிரம்பியிருக்க வேண்டும். உச்ச வயது வரம்பு 25. ஆதார் கட்டாயம்: தேர்வுக்கு விண்ணப்பிக்க ஆதார் எண் கட்டாயமாகும். விண்ணப்பிக்கும் போது ஆதார் எண் உள்ளிட்ட விவரங்களை மாணவர்கள் சமர்ப்பிக்க வேண்டும். வெளிநாடு வாழ் இந்தியர்கள் அல்லது வெளிநாட்டவர்களாக இருந்தால் கடவுச் சீட்டு எண் உள்ளிட்ட விவரங்களைப் பதிவு செய்ய வேண்டும். கட்டணம் எவ்வளவு?: தேர்வுக்கு விண்ணப்பிக்கும் எஸ்.சி. எஸ்.டி. மாணவர்களுக்கான கட்டணம் ரூ. 750. இதர பிரிவு மாணவர்களுக்கு கட்டணம் ரூ. 1,400. ஆன்-லைன் விண்ணப்பம்: நீட் தேர்வுக்கு சி.பி.எஸ்.இ., இணையதளத்தின் (www.cbseneet.nic.in) வழியாகவே விண்ணப்பிக்க வேண்டும்.

பள்ளி மாணவர் விபத்து காப்பீட்டுக்கு அரசாணை: அமைச்சர் செங்கோட்டையன்


தமிழகத்தில் பள்ளி மாணவர்களுக்கு விபத்துக் காப்பீட்டுத் திட்டத்தைச் செயல்படுத்த அரசாணை பிறப்பிக்கப்பட்டுள்ளதாக பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையன் கூறினார். தமிழகத்தில் வரும் மார்ச் மாதம் பத்தாம் வகுப்பு, பிளஸ் 1 மற்றும் பிளஸ் 2 வகுப்புகளுக்குப் பொதுத்தேர்வுகள் நடைபெறவுள்ளன. இதைத் தொடர்ந்து தேர்வு மையங்கள் அமைப்பது, முறைகேடுகளைத் தடுப்பதற்கான வழிமுறைகள் குறித்த ஆலோசனைக் கூட்டம் சென்னையில் வியாழக்கிழமை நடைபெற்றது.

இக்கூட்டத்தில் 32 மாவட்ட முதன்மை, மாவட்டக் கல்வி அலுவலர்கள் பங்கேற்றனர். இக்கூட்டத்தில் பங்கேற்ற பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் கே.ஏ.செங்கோட்டையன் செய்தியாளர்களிடம் கூறியது: மாணவர்கள் 20 முதல் 30 கிலோ மீட்டர் தொலைவு பயணம் செய்து பொதுத்தேர்வு எழுதி வந்தனர். இதனால் மாணவர்களுக்கு ஏற்படும் பல்வேறு இடர்பாடுகளைக் கருத்தில் கொண்டு இப்போது 10 கிலோ மீட்டர் தொலைவுக்குள் தேர்வு மையங்கள் அமைக்கப்பட்டுள்ளன.

இந்த ஆண்டு பத்தாம் வகுப்பு, பிளஸ் 1, பிளஸ் 2 வகுப்புகளில் மொத்தம் 27.29 லட்சம் மாணவர்கள் பொதுத்தேர்வு எழுதவுள்ளனர். இதற்காக கூடுதலாக 515 தேர்வு மையங்கள் அமைக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. தேர்வில் முறைகேட்டில் ஈடுபடுவோரைக் கண்காணிக்க கண்காணிப்புக் கேமரா அமைப்பது குறித்து ஆலோசித்து வருகிறோம். நீதிபோதனை புத்தகம்: பள்ளிகளில் ஆசிரியர்கள்- மாணவர்கள் தாக்கப்படும் சம்பவம் வருத்தமளிக்கிறது. மன அழுத்தம் காரணமாகவே இந்தப் பிரச்னை ஏற்படுகிறது. இதுபோன்ற சம்பவங்கள் இனி நடைபெறாத வகையில் ஆசிரியர்கள், மாணவர்களுக்கு உளவியல் ஆலோசனைகள் வழங்கப்படும். ஆசிரியர்களுக்கு கீழ்ப்படிதல், மரியாதை செலுத்துதல் உள்ளிட்ட நற்பண்புகளைப் பயிற்றுவிக்கும் வகையில், அடுத்த ஆண்டு நீதிபோதனைகள் குறித்த புத்தகம் அனைத்து மாணவர்களுக்கும் வழங்கப்படும்.

ஒழுக்கத்துடன் நல்ல பழக்கங்களை மாணவர்கள் கடைப்பிடிக்க வேண்டும் என்பதை மையமாகக் கொண்டு இந்தப் புத்தகத்தை உருவாக்கி வருகிறோம். 48 மணி நேரத்துக்குள்...தமிழக மாணவர்களுக்கு விபத்துக் காப்பீட்டுத் திட்டம் செயல்படுத்தப்படவுள்ளது. அதன்படி பாதிக்கப்பட்ட மாணவர்கள் குடும்பத்துக்கு 48 மணி நேரத்தில் காப்பீட்டுத் தொகை வழங்க ஏற்பாடு செய்யப்படும். விபத்தில் உயிரிழக்கும் மாணவர் குடும்பத்திற்கு தலா ரூ.1 லட்சம், பலத்த காயமடையும் மாணவர்களுக்கு ரூ.50 ஆயிரம், காயமடைந்த மாணவர்களுக்கு ரூ.25 ஆயிரம் வழங்கப்படும். இதற்கான அரசாணை வெளியிடப்பட்டுள்ளது என்றார்.

விடுப்பு எடுக்காமல் பணியாற்றிய 15 ஆயிரம் ஆசிரியர்களுக்கு சான்று


அரசு பள்ளிகளில் பணியாற்றும், 4.5 லட்சம் ஆசிரியர்களில், விடுப்பே எடுக்காத, 15 ஆயிரம் பேருக்கு, பள்ளி கல்வித்துறை சார்பில், வரும், 12ம் தேதி, நற்சான்றிதழ் வழங்கப்படுகிறது.அரசு பள்ளிகளின் உள்கட்டமைப்பு மற்றும் மாணவர்களின் கல்வித்தரத்தை உயர்த்தும் வகையில், தமிழக பள்ளிக்கல்வித்துறை, பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டுள்ளது.

இதன்படி, புதிய பாடத்திட்டம் அமலுக்கு வர உள்ளது; பொது தேர்வுகளில், தரவரிசை முறை ஒழிக்கப்பட்டுள்ளது. தமிழ் வழியில் சிறந்த மதிப்பெண் எடுக்கும் மாணவர்களுக்கு, உதவித் தொகை வழங்கப்படுகிறது; ஆசிரியர்களுக்கு நல்லாசிரியர் விருது மட்டுமின்றி, கனவு ஆசிரியர் விருதும் அறிவிக்கப்பட்டு உள்ளது. இந்நிலையில், விடுப்பு எடுக்காத ஆசிரியர்களை ஊக்கப்படுத்தும் வகையில், நற்சான்றிதழ் வழங்கும் திட்டத்தை, அமைச்சர் செங்கோட்டையன் அறிவித்துள்ளார். தமிழக பள்ளிக்கல்வி மற்றும் தொடக்க கல்வித்துறையில், 4.5 லட்சத்துக்கும் மேற்பட்ட ஆசிரியர்கள் பணியாற்றுகின்றனர்.

ஒவ்வொரு பள்ளியிலும், தினமும் குறைந்த பட்சம், 10 சதவீதம் பேர் விடுப்பு எடுப்பதாக, புகார்கள் உள்ளன. பள்ளிக்கல்வித்துறை ஆய்வில், 15 ஆயிரம் ஆசிரியர்கள் மட்டுமே, மிக குறைந்த நாட்கள் விடுப்பு எடுத்தது தெரியவந்துள்ளது. இவர்களுக்கு, வரும், 12ம் தேதி, நற்சான்றிதழ் வழங்கப்பட உள்ளது. 'இந்த நற்சான்றிதழ் வழங்குவதால், மற்ற, 4.35 லட்சம் ஆசிரியர்களும், அடுத்த ஆண்டில் நற்சான்றிதழ் பெறுவதற்கான உத்வேகத்தை ஏற்படுத்த முடியும்' என, அதிகாரிகள் தெரிவித்தனர்.

Wednesday, February 07, 2018

நீட்' தேர்வுக்கு புதிய விதிகள் அறிவிப்பு; தனித்தேர்வர், தொலைநிலை படித்தவருக்கு தடை

மருத்துவ படிப்புக்கான, 'நீட்' தேர்வு விதிகள் திருத்தப்பட்டுள்ளன. தனித் தேர்வர்கள், தொலைநிலை படித்தவர்கள், நீட் தேர்வு எழுத தடை விதிக்கப்பட்டுள்ளது.

இந்திய மருத்துவ கவுன்சில் சட்டத்தில், இளநிலை மருத்துவ படிப்புக்கான ஒழுங்குமுறை விதிகள், மீண்டும் திருத்தப்பட்டுள்ளன. அவற்றில், நீட் தேர்வு குறித்த, புதிய விதிகள் சேர்க்கப்பட்டுள்ளன. 'இவை, இளநிலை மருத்துவ படிப்புக்கான ஒழுங்குமுறைகள் - 2017 என்ற பெயரில் அழைக்கப்படும்' என, மத்திய சுகாதார அமைச்சகம் அறிவித்துள்ளது.

இந்த விதிகள், நீட் தேர்வை நடத்தும், மத்திய இடைநிலை கல்வி வாரியமான, சி.பி.எஸ்.இ.,க்கு அனுப்பப்பட்டுள்ளன. புதிய விதிகளின்படி, தேர்வை நடத்த, மத்திய அரசு உத்தரவிட்டுள்ளது.

புதிய விதிகள் வருமாறு:

● பார்லிமென்டில் கொண்டு வரப்பட்ட சட்டத்தின்படி, ஜனாதிபதியின் ஒப்புதல் பெறப்பட்ட விதிகளின்படி, இளநிலை மற்றும் முதுநிலை மருத்துவ படிப்புகளில் சேர, தேசிய தகுதி மற்றும் நுழைவு தேர்வான, நீட் தேர்வில் தேர்ச்சி பெற வேண்டும்

● இந்த தேர்வை எழுத விரும்பும் மாணவர்கள், மருத்துவ படிப்பில் சேரும் ஆண்டின், டிச., 31ல், 17 வயது நிறைந்தவர்களாக இருக்க வேண்டும். தேர்வு நடக்கும் நாளில், 25 வயதுக்கு மேற்பட்டவராக இருக்க கூடாது. இதில், பொது பிரிவு தவிர, மற்ற இனத்தவர்கள் மற்றும் மாற்று திறனாளிகளுக்கு, அதிகபட்ச வயதில், ஐந்து ஆண்டுகள் கூடுதல் சலுகை வழங்கப்படும்

● பத்தாம் வகுப்பு முடித்து, பிளஸ் 1, பிளஸ் 2 என, பள்ளிகளில் படித்திருக்க வேண்டும். மத்திய அரசு நடத்தும் தொலைநிலை கல்வியான, திறந்தநிலை பள்ளியில் படித்தவர்கள் மற்றும் பள்ளிக்கு செல்லாத தனித்தேர்வர்கள், நீட் தேர்வு எழுதஅனுமதிக்கப்பட மாட்டார்கள்

● இயற்பியல், வேதியியல், தாவரவியல், விலங்கியல் அல்லது உயிரியல் மற்றும் உயிரி தொழில்நுட்பவியலான, 'பயோ டெக்னாலஜி' பாடப்பிரிவுகளில் படித்திருத்த வேண்டும். பிளஸ் 2வில் வேறு பிரிவுகளில் படித்து, உயிரியல் மற்றும் உயிரி தொழில்நுட்பவியல் படிப்புகளை கூடுதலாக எடுத்திருந்தால், தேர்வு எழுத அனுமதி கிடையாது

● பொது பிரிவு மாணவர்கள், இயற்பியல், வேதியியல், தாவரவியல், விலங்கியல் அல்லது உயிரியல் ஆகிய பாடங்களில், பிளஸ் 2 தேர்வில், ஒட்டுமொத்தமாக குறைந்தபட்சம், 45 சதவீத மதிப்பெண் பெற்றிருக்க வேண்டும். ஆதிதிராவிடர், பழங்குடியினர் மற்றும் பிற்படுத்தப்பட்ட இனத்தவர், குறைந்தபட்சம், 40 சதவீத மதிப்பெண் பெற வேண்டும். மாற்று திறனாளி மாணவர்களுக்கு, 5 சதவீத இடங்கள் தனியாக ஒதுக்கப்படும்.இவ்வாறு விதிகள் அறிவிக்கப்பட்டுள்ளன.

Tuesday, February 06, 2018

வெயிட்டேஜ் முறையே தொடரும்

"வெயிட்டேஜ் முறையே தொடரும்" : தமிழக அரசு முடிவு!
-மலையரசு

அரசுப் பள்ளிகளில் நிலவும் காலிப் பணியிடங்களை நிரப்புவதற்காக, 'ஆசிரியர் தகுதித் தேர்வு' (TET) கொண்டுவரப்பட்டது.

இதையடுத்து நடந்த தகுதித் தேர்வில் வெற்றிபெற்றவர்களுக்கு, வேலைவாய்ப்பு வழங்கப்பட்டது. இதனிடையே, காலிப் பணியிடங்களின் எண்ணிக்கைக் குறைவாக இருக்க, பள்ளி, கல்லூரி மற்றும் ஆசிரியர் பட்டயப் படிப்பில் பெற்ற மதிப்பெண்களின் அடிப்படையில் வெயிட்டேஜ் முறை அறிமுகப்படுத்தப்பட்டது. இதில் தேர்ச்சி பெற்றவர்களில் 30 ஆயிரத்துக்கும் மேற்பட்டவர்கள் வெயிட்டேஜ் முறையில் பின்தங்கி இருந்ததால், வேலை வாய்ப்பு வழங்கப்படாமல் இருந்தது. வெயிட்டேஜ் முறையில் பாதிக்கப்பட்டவர்கள், உயர் நீதிமன்றத்திலும் உச்ச நீதிமன்றத்திலும் வழக்குத் தொடுத்தனர்.

இந்த வழக்கின் விசாரணையில், ‛வெயிட்டேஜ் முறை சரியானதுதான். இனி, தமிழக அரசு இதுகுறித்து தகுந்த முடிவெடுத்துக்கொள்ளலாம்’ என தமிழக அரசுக்கு சாதகமாகவே தீர்ப்பு வந்தது. இருப்பினும், தொடர்ந்து தமிழக அரசு குழப்பத்தில் இருந்தது. இந்த நிலையில் வெயிட்டேஜ் முறையைத் தொடரவே தற்போது அரசு முடிவுசெய்துள்ளது. 2013-ம் ஆண்டு முதல் பின்பற்றப்பட்ட வெயிட்டேஜ் முறையைத் தொடர தமிழக அரசு முடிவுசெய்துள்ளதாகத் தகவல் வெளியாகியுள்ளது. இதனால், ஆசிரியர்கள் நியமனம் 'டெட்' முறையிலா அல்லது வெயிட்டேஜ் முறையிலா என்ற குழப்பத்தைத் தற்போது அரசு தெளிவுபடுத்தியுள்ளது.

வெயிட்டேஜ் மதிப்பெண் முறைப்படி, தகுதித்தேர்வு மதிப்பெண்களில் 60 சதவிகிதம் மட்டுமே கணக்கில் கொள்ளப்படும். மீதமுள்ள 40 சதவிகித வெயிட்டேஜ் மதிப்பெண்களிலிருந்து கணக்கிடப்படும். டெட் தேர்வில் எடுக்கப்பட்ட 60 மதிப்பெண்களுடன், 12 -ம் வகுப்பிலிருந்து 15 மதிப்பெண்களும், டிப்ளமோவிலிருந்து 25 மதிப்பெண்களும் சேர்த்து, வெயிட்டேஜ் கணக்கிடப்படும்

அரசுப் பள்ளிகளுக்கு செய்தித்தாள்: பள்ளிக் கல்வித்துறை நடவடிக்கை


மாணவர்களின் வாசிப்புத் திறனை மேம்படுத்துவதற்காக 31 ஆயிரத்து 322 அரசு, தொடக்க, நடுநிலைப்பள்ளிகளுக்கு செய்தித்தாள் வழங்க பள்ளிக் கல்வித்துறை நடவடிக்கை எடுத்துள்ளது. சட்டப் பேரவையில் 2017-2018-ஆம் கல்வியாண்டில் பள்ளிக் கல்வித்துறை மானியக் கோரிக்கையின்போது மாணவர்கள் தங்களது பொது அறிவை மேம்படுத்திக் கொள்ளவும், மொழித்திறன்களை வளப்படுத்திடவும் பள்ளிகளுக்கு நாளிதழ்கள், சிறுவர் இதழ்கள் வழங்கப்படும் என்ற அறிவிப்பு வெளியிடப்பட்டது.

இதையடுத்து தொடக்கக் கல்வித்துறையைச் சேர்ந்த 31 ஆயிரத்து 322 அரசு, ஊராட்சி ஒன்றியத் தொடக்க, நடுநிலைப்பள்ளிகளுக்கு ஒரு தமிழ் நாளிதழ், ஒரு சிறுவர் இதழ் வழங்க ரூ.4.83 கோடி செலவாகும் என மதிப்பிடப்பட்டது. இருப்பினும் இந்தக் கல்வியாண்டில் மூன்று மாதங்கள் மட்டுமே எஞ்சியுள்ளதால் பிப்ரவரி, மார்ச் மாதங்களில் பணி நாள்களுக்கு நாளிதழ் வாங்கிக் கொள்வதற்கான தொகையை அரசுக்கு தமிழ்நாடு பாடநூல், பணிகள் கழகம் வழங்கியுள்ளது.

இதையடுத்து அரசு தொடக்க, நடுநிலைப்பள்ளிகள் இந்த இரு மாதங்களுக்கான நாளிதழ்களை வாங்கிக் கொள்ளலாம், அதற்கான தொகை அவர்களுக்கு வங்கிக் கணக்கு மூலம் அனுப்பி வைக்கப்படும் என தொடக்கக் கல்வி இயக்ககம் அறிவுறுத்தியுள்ளது.

79.78 லட்சம் பேர் வேலைவாய்ப்பு அலுவலகத்தில் பதிவு


வேலைவாய்ப்பு அலுவலகத்தில் அரசு வேலைக்காக பதிவு செய்து காத்திருப்போரின் எண்ணிக்கை 79.78 லட்சமாக உள்ளது. கடந்த ஜனவரி 31-ஆம் தேதி நிலவரப்படி வேலைவாய்ப்பு அலுவலகத்தில் பதிவு செய்து காத்திருப்போரின் எண்ணிக்கை குறித்த விவரங்களை வயது வாரியாக தமிழக அரசு வெளியிட்டுள்ளது.

அதன்படி, 18 வயதுக்குள் உள்ள பள்ளி மாணவர்கள் 20 லட்சத்து 69 ஆயிரத்து 337 பேரும், 18 முதல் 23 வயது வரையுள்ள பலதரப்பட்ட கல்லூரி மாணவர்கள் 17 லட்சத்து 9 ஆயிரத்து 845 பேரும், 24 முதல் 35 வயது வரையுள்ளவர்கள் 30 லட்சத்து 46 ஆயிரத்து 619 பேரும், 36 வயது முதல் 56 வயது வரையுள்ள முதிர்வு பெற்ற பதிவுதாரர்கள் என்ற வகையில் 11 லட்சத்து 46 ஆயிரத்து 898 பேரும் வேலைவாய்ப்பு அலுவலகத்தில் பதிவு செய்துள்ளனர். மேலும், 57 வயதுக்கு மேற்பட்டவர்கள் 5 ஆயிரத்து 730 பேர் பதிவு செய்து காத்திருப்பதாக தமிழக அரசு தனது இணையதளத்தில் தெரிவித்துள்ளது. மொத்தமாக, 79 லட்சத்து 78 ஆயிரத்து 429 பேர் அரசு வேலைக்காக காத்திருப்பதாகக் கூறப்பட்டுள்ளது

பிளஸ்1 தேர்வு அகமதிப்பெண் பட்டியல் : மார்ச் 28 க்குள் ஒப்படைக்க உத்தரவு


பிளஸ் 1 செய்முறை தேர்வு அகமதிப்பெண் விபரங்களை பதிவு செய்து இயக்குனரகத்தில் ஒப்படைக்க தலைமையாசிரியர்களுக்கு உத்தரவிடப்பட்டுள்ளது.பிளஸ் 1 மாணவர்களுக்கு இக் கல்வியாண்டு முதல் முறையாக செய்முறைத் தேர்வு நடத்தப்படுகிறது.இத்தேர்வு பிப்., 16ல் துவங்கி 28 ம் தேதி வரை நடக்கிறது.

செய்முறை தேர்வு 30 மதிப்பெண்களுக்கு நடத்தப்படும்.மாணவர் வருகையை கல்வியாண்டின் ஆரம்ப நாள் முதல் 31.1.2018 தேதி வரை கணக்கிட்டும் 3 மதிப்பெண் வழங்கப்படும். தலைமையாசிரியர்கள் பிளஸ் 1 மாணவர்களின் பெயர் பட்டியலை பெற்று அக மதிப்பெண் பதிவேற்றம் செய்ய வேண்டும்.மதிப்பெண்களை பதிவு செய்த பட்டியலை தலைமையாசிரியர்கள் மாவட்ட கல்வி அலுவலகத்தில் ஒப்படைக்க வேண்டும். தலைமையாசிரியர்கள் பிப்.6 முதல் 13 ம் தேதிக்குள் மதிப்பெண் பட்டியலை இணைய தளத்தில் பதிவிறக்கம் செய்ய வேண்டும். மார்ச் 15 முதல் 23 ம் தேதி வரை இணையதளத்தில் மதிப்பெண்ணை பதிவேற்றம் செய்ய வேண்டும்.

அகமதிப்பீட்டு பட்டியலை மாவட்ட கல்வி அலுவலகத்தில் மார்ச் 26 ம் தேதிக்குள் ஒப்படைக்க வேண்டும்.மாவட்ட கல்வி அலுவலர்கள், மண்டல தேர்வு துணை இயக்குனரிடம் மார்ச் 28 ம் தேதிக்குள் மதிப்பெண் பட்டியலை ஒப்படைக்க வேண்டும். மண்டல துணை இயக்குனர்கள் அகமதிப்பீடடு பட்டியலை ஏப்ரல் 2 ம் தேதி தேர்வு துறை இயக்குனர் அலுவலகத்தில் ஒப்படைக்க வேண்டும் என, பள்ளி கல்வி இயக்குனர் உத்தரவிட்டுள்ளார்.

தகவல்

ஆதார்' அட்டையை, பிளாஸ்டிக் அட்டையில், 'பிரின்ட்' செய்வது, 'லேமினேட்' செய்வது தேவையில்லாத ஒன்று. அவ்வாறு செய்வதால், உங்களுடைய தகவல்கள் திருடப்பட வாய்ப்பு உள்ளதாக, ஆதார் ஆணையம் எச்சரித்துள்ளது.

பாதுகாப்பு:

ஆதார் பாதுகாப்பு தொடர்பாக, ஆதார் ஆணையத்தின் தலைமை செயல் அதிகாரி, பூஷண் பாண்டே வெளியிட்டுள்ள செய்தி: ஆதார் எண் ஒதுக்கப்பட்டதற்கான கடிதம், ஆதார் அட்டை, மொபைல் ஆதார், சாதாரண காகிதத்தில் பதிவிறக்கம் செய்யப்பட்ட ஆதார் அட்டைகளையே பயன்படுத்தலாம். அதே நேரத்தில், சிலர், பிளாஸ்டிக் அட்டையில் ஆதார் அட்டை பதிவு செய்துதருவதாகவும், 'லேமினேட்' செய்து தருவதாகவும் கூறுகின்றனர்.
இதற்காக, 50 - 300 ரூபாய் வரை, கட்டணமாக வசூலிக்கின்றனர். இது, தேவையில்லாத ஒன்று. இவ்வாறு லேமினேட் செய்வதால், ஆதார் அட்டையில் உள்ள, க்யூ.ஆர்., எனப்படும், தகவல்கள் பதிவு, சரியான முறையில் பதிவாகாது. அதனால், அந்த அட்டைகளை பயன்படுத்த முடியாத நிலை ஏற்படும்.

தேவையில்லாதது :

இது தவிர, நம் ஆதார் எண்களை அவர்களுக்கு கொடுக்கும் போது, அதை சிலர் தவறாக பயன்படுத்திக் கொள்ள வாய்ப்பு ஏற்படுகிறது. அதனால், பிளாஸ்டிக் அட்டையில் பதிவு செய்வது, லேமினேட் செய்வது போன்றவை, தேவையில்லாத ஒன்று என்பதுடன், நம் பாதுகாப்புக்கு எதிராகவும் உள்ளது; இதை தவிர்க்க வேண்டும். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

⛺412 நீட் தேர்வு பயிச்சி மையங்கள் பட்டியல்.....👇👇👇

Click below

https://app.box.com/s/s9ag0r9r7dyjxrqeytnmbfro1lqpr49p

Monday, February 05, 2018

கனவு ஆசிரியர்' விருதுக்கு ஆன் லைன் விண்ணப்பம்?


கனவு ஆசிரியர்' விருது குறித்து எழும் சர்ச்சைகளுக்கு, முற்றுப்புள்ளி வைக்கும் நோக்கில், 'ஆன் லைன்' மூலம் விண்ணப்பிக்கும் நடைமுறையை அமல்படுத்த, கல்வித் துறை திட்டமிட்டு உள்ளது. அரசு பள்ளிகளில் பணிபுரியும் துடிப்பான, இளம் ஆசிரியர்களுக்கு, நடப்பாண்டில் முதன்முறையாக, 'கனவு ஆசிரியர்' விருது அறிவிக்கப்பட்டு உள்ளது.

இதற்கு விண்ணப்பிக்க, ஜன., 29ம் தேதியுடன், அவகாசம் முடிந்த நிலையில், நேற்று அனைத்து மாவட்டங்களில் இருந்தும், தலா, 12 ஆசிரியர்கள் பட்டியல் அனுப்ப, இயக்குனர், இளங்கோவன் உத்தரவிட்டிருந்தார். இந்நிலையில், பள்ளிக்கல்வித் துறை இயக்குனரகத்தில் இருந்து, முதன்மை கல்வி அலுவலகங்களுக்கு, விருதுக்கு தகுதியானோர் பட்டியல், அனுப்ப வேண்டாமென, நேற்று காலை தெரிவிக்கப்பட்டது. இதோடு, கனவு ஆசிரியர் விருதுக்கு, ஆன்லைனில் விண்ணப்பிக்கும் நடைமுறை கொண்டு வரப்படும் எனவும், தகவல் வெளியாகி உள்ளது. முதன்மை கல்வி அலுவலர், அய்யண்ணனிடம் கேட்ட போது, ''கனவு ஆசிரியர் விருதுக்கு, ஆன்லைனில் விண்ணப்பிக்கும் நடைமுறை குறித்து, அதிகாரபூர்வ தகவல் இல்லை. ஆனால், விரைவில் தகவல் வெளியாகலாம்,'' என்றார்

Sunday, February 04, 2018

அங்கன்வாடி ஊழியர்களுக்கு 15 நாள் கோடை விடுமுறை : விரைவில் அரசாணை


அங்கன்வாடி மைய ஊழியர்களுக்கு மே மாதம் தலா 15 நாட்கள் அமைப்பாளருக்கும், உதவியாளருக்கும் கோடை விடுமுறை விட அரசு முடிவு செய்துள்ளது.தமிழகத்தில் 54,439 அங்கன்வாடி மையங்களில் 25 லட்சம் குழந்தைகள் பயில்கின்றனர். இவர்களுக்கு மத்திய அரசு திட்டத்தில் இணை உணவும், மாநில அரசு திட்டத்தில் மதிய உணவும் வழங்கப்படுகின்றன.

பள்ளி, கல்லுாரிகளுக்கு கோடை விடுமுறை விடப்படுகின்றன. ஆனால் அங்கன்வாடி மையங்களுக்கு இல்லை.பெரும்பாலான மையங்களில் ஆஸ்பெஸ்டாஸ் மேற்கூரையே உள்ளன. இதனால் குழந்தைகளுக்கு அம்மை, கொப்புளங்கள் போன்ற வெப்ப நோய் தாக்குகின்றன. இதையடுத்து பெற்றோர் தங்கள் குழந்தைகளை அனுப்ப மறுத்து வருகின்றனர். ஊழியர்கள் மட்டும் பணிக்கு செல்லும் நிலை உள்ளது. இதையடுத்து கோடை விடுமுறை கேட்டு அங்கன்வாடி மைய ஊழியர்கள் போராடி வருகின்றனர்.

ஆண்டில் 300 நாட்களும் அங்கன்வாடி குழந்தைகளுக்கு இணை உணவு கொடுக்க உச்சநீதிமன்றம் உத்தரவிட்டுள்ளதால் விடுமுறை விட அரசு தயக்கம் காட்டியது. கோரிக்கைகளை வலியுறுத்தி தமிழ்நாடு அங்கன்வாடி ஊழியர் மற்றும் உதவியாளர் சங்கத்தினர் சென்னையில் ஒருங்கிணைந்த குழந்தைகள் வளர்ச்சி திட்ட இயக்குனர் அலுவலகம் முன்பு பிப்., 6 முதல் பிப்., 8 வரை தொடர் தர்ணா போராட்டத்தில் ஈடுபடுவதாக அறிவித்தனர்.பிப்., 1 சங்க நிர்வாகிகளுடன் அதிகாரிகள் பேச்சுவார்த்தை நடத்தினர். இதில் ஊதிய முரண்பாடுகளை களைவதாகவும், மையங்கள் மூடாதபடி மே மாதம் தலா 15 நாட்கள் அமைப்பாளர்களுக்கும், உதவியாளர்களுக்கும் விடுமுறை விடப்படும் என, தெரிவித்தனர். விரைவில் விடுமுறைக்கான அரசாணை வெளியாக உள்ளது.

BRT ஒருங்கிணைப்பாளர்களுக்கு மாற்றுப்பணி வழங்குதல் சார்பு