Tuesday, October 31, 2017
மாணவர் சேர்க்கை: சைனிக்
சைனிக் பள்ளியில் மாணவர் சேர்க்கை
-முத்துக்கமலம்
தேசியப் பாதுகாப்புக் கல்வி நிறுவனத்தில் (National Defence Academy) சேர்க்கை பெறுவதற்கான கல்வி, உடல்நிலை மற்றும் மனநிலை போன்றவைகளை உருவாக்கும் நோக்கத்துடன் இந்தியா முழுவதும் சைனிக் பள்ளிகள் அமைக்கப்பட்டிருக்கின்றன. இப்பள்ளிகளில் தமிழ்நாட்டில் திருப்பூர் மாவட்டம், உடுமலைப்பேட்டை வட்டம், அமராவதி நகரில் அமைந்திருக்கும் சைனிக் பள்ளியும் ஒன்றாக இருக்கிறது.
இந்தப் பள்ளியில் 2018 - 2019 ஆம் கல்வியாண்டில் 6 மற்றும் 9 ஆம் வகுப்புகளில் காலியாக இருக்கும் இடங்களுக்கான மாணவர் சேர்க்கைக்கான அறிவிப்பு வெளியிடப்பட்டிருக்கிறது. இடங்கள் மற்றும் தகுதி: இப்பள்ளியில் 6 ஆம் வகுப்பில் 80 இடங்களுக்கும், 9 ஆம் வகுப்பில் காலியாக இருக்கும் இடங்களுக்கும் மாணவர் சேர்க்கை நடைபெறும். இப்பள்ளிக்கு மாணவிகள் விண்ணப்பிக்க இயலாது. 6 ஆம் வகுப்பில் சேர்க்கை பெற விரும்புபவர்கள் 2.7.2007 முதல் 1.7.2008 ஆம் தேதிக்குள் பிறந்திருக்க வேண்டும்.
9ஆம் வகுப்பில் சேர்க்கை பெற விரும்புபவர்கள் 2.7.2004 முதல் 1.7.2005ஆம் தேதிக்குள் பிறந்திருக்க வேண்டும் மற்றும் அங்கீகாரம் பெற்ற பள்ளி ஒன்றில் எட்டாம் வகுப்பு படித்துக்கொண்டிருப்பவராக இருக்க வேண்டும். இட ஒதுக்கீடு: இப்பள்ளியில் காலியாக இருக்கும் இடங்களில் எஸ்.சி. பிரிவினர் 15%, எஸ்.டி. பிரிவினர் 7.5% இட ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.
இந்த ஒதுக்கீட்டு இடங்கள் தவிர்த்து மீதமுள்ள இடங்களில் 67% இடங்கள் தமிழக மாணவர்களுக்கும், 33% இடங்கள் பிற மாநிலம், யூனியன் பிரதேசம் மற்றும் தமிழகத்தைச் சேர்ந்த மாணவர்களுக்குத் தேர்ச்சித் தரப்பட்டியலின்படி வழங்கப்படும். மேற்காணும் அனைத்து இட ஒதுக்கீட்டிலும் 25% முன்னாள் ராணுவத்தினர் குழந்தைகளுக்கு வழங்கப்படும்.
விண்ணப்பிக்கும் முறை: அமராவதி நகர் சைனிக் பள்ளியில் மாணவர் சேர்க்கைக்கான விண்ணப்பம் மற்றும் விளக்கக் குறிப்பேடு ஆகியவை 30.11.2017 வரை வழங்கப்படும். விண்ணப்பம் மற்றும் விளக்கக் குறிப்பினைப் பெற விரும்புபவர்கள் ‘முதல்வர்,சைனிக் பள்ளி, அமராவதி நகர் - 642102, உடுமலைப்பேட்டை வட்டம், திருப்பூர் மாவட்டம்’ எனும் முகவரிக்கு அமராவதி நகரிலிருக்கும் பாரத ஸ்டேட் வங்கியில் பெறத்தக்க வகையில் பொதுப்பிரிவினர் ரூ.400, எஸ்.சி.,எஸ்.டி. பிரிவினர் ரூ.250-க்கு வங்கி வரைவோலையைப் பெற்று வேண்டுகோள் கடிதம் இணைத்து அனுப்பிப் பெற்றுக் கொள்ளலாம்.
இணையதளம் வழியாகவும் விண்ணப்பிக்க முடியும். நிரப்பப்பட்ட விண்ணப்பங்கள் பள்ளிக்குச் சென்றடைய வேண்டிய கடைசி நாள்: 5.12.2017.
நுழைவுத்தேர்வு: இப்பள்ளியின் மாணவர் சேர்க்கைக்கான அகில இந்திய நுழைவுத் தேர்வு 7.1.2018 அன்று நடைபெறும். 6 ஆம் வகுப்புக்கு அமராவதி நகர் மற்றும் புதுச்சேரி ஆகிய இடங்களிலும், 9 ஆம் வகுப்புக்கு உடுமலைப்பேட்டை, புதுச்சேரி மற்றும் சென்னை ஆகிய இடங்களிலும் நடைபெறும்.
எழுத்துத் தேர்வு அடிப்படையிலான தகுதிப்பட்டியல் 8.2.2018 அன்று வெளியிடப்படும். அதன் பின்னர் நேர்காணல் மற்றும் மருத்துவப் பரிசோதனை 19.2.2017 முதல் 10.3.2017 வரை நடைபெறும். இறுதியாகத் தகுதிப் பட்டியல் மற்றும் காத்திருப்போர் பட்டியல் 19-3-2017 அன்று வெளியிடப்படும்.
மாணவர் சேர்க்கை: எழுத்துத் தேர்வு, நேர்முகத்தேர்வு மற்றும் மருத்துவப் பரிசோதனை அடிப்படையில் மேற்காணும் இட ஒதுக்கீட்டு நடைமுறைகளைப் பின்பற்றி மாணவர் சேர்க்கை நடைபெறும்.
இப்பள்ளிக்கும் தனியார் பயிற்சி மையங்களுக்கும் எவ்விதத் தொடர்பும் இல்லை என்பதைக் கவனத்தில் கொள்ள வேண்டும்.இப்படிப்புக்கான சேர்க்கை குறித்து மேலும் விவரங்களை அறிய http://sainikschoolamaravathinagar.edu.in எனும் பள்ளியின் இணையதளத்தைப் பார்வையிடலாம் அல்லது 04252 - 256246 எனும் பள்ளியின் தொலைபேசி எண்களில் தொடர்பு கொண்டு தகவல்களைப் பெறலாம்.
486 இ-சேவை மையத்தில் வண்ண வாக்காளர் அட்டை:தமிழகம் முழுவதும் அமல்படுத்தப்பட்டது
தமிழகம் முழுவதும் 486 இ சேவை மையங்களில் ரூ.30 கொடுத்து பிளாஸ்டிக் வண்ண வாக்காளர் அட்டை பெற்றுக்கொள்ளும் திட்டம் செயல்முறைக்கு வந்துள்ளது. தமிழகம் முழுவதும் 264 தாலுகாக்களில் 486 இ சேவை மையங்கள் இயங்கி வருகின்றன. இங்கு வருவாய், சாதி சான்றிதழ், கல்வி சான்றிதழ் உள்ளிட்ட பல்வேறு சான்றிதழ்களும், திருமண உதவித்தொகை, பெண் குழந்தை உதவி திட்டம் என்ற இலவச திட்டங்களுக்கு விண்ணப்பிக்கப்படுகிறது.
மேலும் இதன் மூலம் வரி கட்டுவது உள்பட 100 வகையான சேவைகள் பொதுமக்களுக்காக வழங்கப்பட்டு வருகிறது. தற்போது பிளாஸ்டிக் வண்ண வாக்காளர் அடையாள அட்டை வழங்கப்பட்டு வருகிறது. இசேவை மையங்களில் வாக்காளர்களின் புகைப்படம் உள்ளிட்ட முழு விபரங்கள், தகவல் தொழில்நுட்ப துறையிடம் தேர்தல் துறை வழங்கி உள்ளது. வாக்காளர்கள் இசேவை மையங்களுக்கு சென்று வாக்காளர் பட்டியல் வரிசை எண்ணை கூறியதும் கைக்கு அடக்கமான பிளாஸ்டிக் வண்ண வாக்காளர் அட்டை வழங்கப்பட்டு வருகிறது.
இதற்காக ₹30ஐ கட்டணமாக செலுத்த வேண்டும். வாக்காளர் அட்டை தொலைந்தாலும் இசேவை மையங்களுக்கு சென்று அடையாள எண்ணை கூறி புதிய அட்டை பெற்றுக்கொள்ளலாம். தற்போது இசேவை மையங்களில் வாக்காளர்களை புகைப்படம் எடுத்து அதை வண்ண அடையாள அட்டையில் பதிந்து தர வசதிகள் உள்ளன. மேலும் பழைய வாக்காளர் அடையாள அட்டையை காண்பித்தும் வண்ண வாக்காளர் அடையாள அட்டையை பெற்றுக்கொள்ளலாம்.
இதுகுறித்து அதிகாரிகளிடம் கேட்டபோது, முன்பு தேர்தல் அலுவலகத்தில் வாக்காளர்கள் புகைப்படம் மற்றும் வாக்காளர் அடையாள அட்டை நகலை ஸ்கேன் செய்து சென்னை தேர்தல் துறைக்கு அனுப்பப்பட்டது. இதை மும்பையில் உள்ள தனியார் நிறுவனத்திற்கு அனுப்பி பிளாஸ்டிக் வண்ண வாக்காளர் அடையாள அட்டை வழங்கப்பட்டு வந்தது. தற்போது 5 நிமிடத்தில் வண்ண வாக்காளர் அடையாள அட்டையை பெற்றுக்கொள்ளும் திட்டத்தை அரசு அமல்படுத்தி உள்ளது’ என்றனர்.
அரசு ஊழியருக்கு புதிய ஊதிய அறிவிப்பு: நவம்பர் 30 -இல்தான் அமல்
அரசு ஊழியர்கள், ஆசிரியர்களுக்கு ஏழாவது ஊதியக் குழு பரிந்துரைகள் நடைமுறைப்படுத்தப்பட்டாலும், ஊதிய உயர்வானது நவம்பர் மாதத்தில் இருந்தே நடைமுறைக்கு வருகிறது. இதனால், உயர்த்தப்பட்ட மாத ஊதியத்தை நவம்பர் 30 -ஆம் தேதிதான் அரசு ஊழியர்கள், ஆசிரியர்கள் பெற முடியும். மேலும், அக்டோபர் மாதத்துக்கான நிலுவைத் தொகை, 20 நாள்களில் அளிக்கப்படும் என நிதித் துறை தெரிவித்துள்ளது.
தமிழக அரசு ஊழியர்கள், ஆசிரியர்களுக்கு ஏழாவது ஊதியக் குழுவின் பரிந்துரைகள் நடைமுறைப்படுத்தப்பட்டுள்ளன. இந்த பரிந்துரைகளின்படி, ஒவ்வொரு ஊழியருக்கும் மாத ஊதியமானது உயர்த்தி அளிக்கப்பட்டுள்ளது. இந்த உயர்த்தப்பட்ட ஊதியமானது, அக்டோபர் 30 -ஆம் தேதியே வழங்கப்படும் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில். தமிழக அரசின் நிதித் துறையானது புதிய உத்தரவைப் பிறப்பித்துள்ளது. நவம்பர் இறுதியில் முழுமையாக... இந்த உத்தரவுப்படி, புதிய ஊதிய விகிதம், நவம்பர் மாத இறுதியில் இருந்து (நவ.30) நடைமுறைக்கு வரும்.
ஊதியம் வழங்குவதற்கான மின்னணு சம்பளப் பட்டியலானது, உயர்த்தப்பட்ட ஊதிய விகிதத்துக்கு தகுந்தாற்போன்று திருத்தம் செய்யப்பட வேண்டும். இதற்காக, தேசிய தகவலியல் மையம் கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளது. இந்தப் பணிகள் முடிந்ததும், நவம்பர் 30 -இல் உயர்த்தப்பட்ட ஊதியம் அளிக்கப்படும். அக்டோபர் 30 -ஆம் தேதியன்று, பழைய ஊதியமே அளிக்கப்பட்டுள்ளது. இதனால், அக்டோபர் மாதத்துக்கான உயர்த்தப்பட்ட ஊதியமானது நிலுவைத் தொகையாக நவம்பர் 20 -ஆம் தேதிக்குள் வழங்கப்படும் என தமிழக அரசு தெரிவித்துள்ளது.
ஆசிரியர் இடமாறுதலுக்கு புதிய கட்டுப்பாடுகள்
தமிழகத்தில், அரசு பள்ளி ஆசிரியர்களை, நிர்வாக காரணங்களில் மாற்றுவதற்கு, புதிய கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளன.அரசு பள்ளி ஆசிரியர்களுக்கு, மே மாதம் கோடை விடுமுறையின்போது, பொது கவுன்சிலிங் முறையில், விருப்ப இடமாறுதல் வழங்கப்படுகிறது.
மற்ற மாதங்களில், விருப்ப இடமாறுதல் வழங்குவது கிடையாது. அதேநேரம், நிர்வாக காரணங்களால், ஆசிரியர்கள் இடம் மாற்றப்படுகின்றனர்.இந்த மாறுதலில், புதிய விதிகள் ஏற்படுத்த, பள்ளிக் கல்வி இயக்குனர், இளங்கோவன் மற்றும் தொடக்க கல்வி இயக்குனர், கார்மேகம் ஆகியோர், தமிழக அரசுக்கு கடிதம் எழுதினர். அதை, பள்ளிக் கல்வி முதன்மை செயலர், பிரதீப் யாதவ் ஏற்று, புதிய கட்டுப்பாடுகளை விதித்துள்ளார். அதன்படி, 'நிர்வாக மாறுதல்களை, மாவட்ட முதன்மை கல்வி அதிகாரி அல்லது மாவட்ட தொடக்க கல்வி அதிகாரிகள் மேற்கொள்ள வேண்டும்' என, கூறப்பட்டுள்ளது.
'கடுமையான புகார்கள்,ஒழுங்கு நடவடிக்கை போன்ற நிர்வாக காரணங்களால், மாறுதல் வழங்கலாம். நிர்வாக மாறுதல்களை பொறுத்தவரை, முதல் மற்றும் இரண்டாம் பருவ தேர்வு விடுமுறை காலங்களில் மட்டும், வழங்க வேண்டும். மற்ற நேரங்களில் மாற்றினால், மாணவர்களின் கற்றல் பணி பாதிக்கும். இதை, அதிகாரிகள் கடைபிடிக்க வேண்டும்' என, பள்ளிக் கல்வி முதன்மை செயலர் அறிவித்துள்ளார்.
அனுமதியின்றி உயர் கல்வி படித்த ஆசிரியர்களுக்கு, 'கிடுக்கிப்பிடி'
அரசின் அனுமதி பெறாமல், உயர் கல்வி படித்த, 4,300ஆசிரியர்கள் மீது, ஒழுங்கு நடவடிக்கை எடுக்க, அரசு உத்தரவிட்டு உள்ளது. அரசு ஊழியர்கள் மற்றும் ஆசிரியர்கள், பணியில் இருக்கும் போது, மேற்படிப்பு படிக்க, பாஸ்போர்ட் எடுக்க, வெளிநாடு செல்ல மற்றும் சொத்துகள் வாங்க, அரசிடம் முன் அனுமதி பெற வேண்டும். அனுமதி பெறாவிட்டால், சம்பந்தப்பட்டோர் மீது, 'சஸ்பெண்ட், டிஸ்மிஸ்' உள்ளிட்ட, பல நடவடிக்கைகள் பாயும்.
இந்நிலையில், தமிழக பள்ளிக்கல்வித் துறையில், தொடக்கப் பள்ளிகளில் பணியாற்றும், 4,300 ஆசிரியர்கள், தங்கள் துறையின் முன் அனுமதி பெறாமல், உயர் கல்வி படித்துள்ளனர்.படித்து முடித்த பின், பின் ஏற்பு அனுமதி தரும்படி, கல்வித் துறைக்கு கடிதம் கொடுத்துள்ளனர். இது குறித்து, பள்ளிக்கல்வித் துறை அதிகாரிகள் விசாரணை நடத்தி, துறை செயலரிடம் அறிக்கை தாக்கல் செய்தனர்.
இதையடுத்து, முன் அனுமதி பெறாதவர்கள் மீது, ஒழுங்கு நடவடிக்கை எடுத்து, அதன் அறிக்கையை தாக்கல் செய்ய, தொடக்கக் கல்வி இயக்குனரகத்துக்கு உத்தரவிடப்பட்டு உள்ளது. அதனால், நடவடிக்கையில் இருந்து தப்பிக்க, சம்பந்தப்பட்ட ஆசிரியர்கள், சங்க நிர்வாகிகளை அணுகி வருகின்றனர்.
Monday, October 30, 2017
அரசு ஊழியர்களுக்கு ஊதியம்: புது உத்தரவு
அரசு ஊழியர்களுக்கு, ஏழாவது ஊதியக்குழு பரிந்துரை அடிப்படையில், ஊதிய உயர்வை அறிவித்த தமிழக அரசு, அக்டோபர், முதல் நடைமுறைக்கு வரும் என, அறிவித்திருந்தது. அதைத்தொடர்ந்து, ஊதிய உயர்வு வழங்குவதற்கான பணிகள் துவங்கின. இந்நிலையில், நிதித்துறை செயலர், சண்முகம் நேற்று வெளியிட்ட உத்தரவில், 'அரசு ஊழியர்களுக்கு, நவம்பருக்கான ஊதியம், புதிய ஊதிய உயர்வுக்கேற்ப வழங்கப்படும். அத்துடன், அக்டோபருக்கான நிலுவை தொகையை சேர்த்து வழங்க, துறைத்தலைவர்கள் மற்றும் சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்' என, தெரிவித்துள்ளார்.
பிளஸ் 2 துணைத்தேர்வு இன்று, 'ரிசல்ட்'
பிளஸ் 2 துணைத்தேர்வுக்கான முடிவுகள், இன்று வெளியாகின்றன. அரசு தேர்வுத்துறை இயக்குனர், வசுந்தராதேவி வெளியிட்ட செய்திக்குறிப்பு: பிளஸ் 2 தனித்தேர்வர்களுக்கு, செப்டம்பரில் நடந்த துணை தேர்வு முடிவுகள், இன்று பிற்பகலில் வெளியிடப்படுகின்றன. தேர்வர்கள், www.dge.tn.gov.in என்ற இணையதளத்தில், தற்காலிக மதிப்பெண் சான்றிதழ்களை பதிவிறக்கம் செய்யலாம். விடைத்தாள் நகல் பெறவும், மறுகூட்டலுக்கும், நவ.,2 முதல், நவ., 4 வரை, முதன்மை கல்வி அலுவலகங்களுக்கு சென்று விண்ணப்பிக்கலாம். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
Saturday, October 28, 2017
வாக்காளர் பட்டியலுடன், 'ஆதார்' இணைப்பு
வாக்காளர் பட்டியலில் குளறுபடிகள் ஏற்படுவதையும், ஒன்றுக்கும் மேற்பட்ட இடங்களில், வாக்காளர் பெயர் இடம் பெறுவதையும் தவிர்க்க, வாக்காளர் பட்டியலுடன், வாக்காளர்களின், 'ஆதார்' எண்களை இணைக்க, தேர்தல் கமிஷன் திட்டமிட்டு உள்ளது. அதற்கான அனுமதியை, உச்ச நீதிமன்றத்திடம் பெற, நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது.நகர பகுதிகளில், வாடகை வீட்டில் வசிப்போர், அவ்வப்போது வீடு மாறுகின்றனர். அவர்கள், புதிய முகவரிக்கு சென்றதும், அந்தப் பகுதி வாக்காளராக, பெயர் சேர்க்க விண்ணப்பிக்கின்றனர்.
அதே நேரத்தில், ஏற்கனவே உள்ள பெயரை நீக்க விண்ணப்பிப்பதில்லை.இதன் காரணமாக, ஒரே வாக்காளரின் பெயர், பட்டியலில், ஒன்றுக்கும் மேற்பட்ட இடங்களில் இருக்கிறது. இதே போல், வாக்காளர் இறந்து விட்டாலும், அவரது உறவினர்கள், அவர் பெயரை, வாக்காளர் பட்டியலில் இருந்து நீக்குவதில்லை. இதன் காரணமாக, வாக்காளர்கள் எண்ணிக்கை, அதிகரித்தபடியே உள்ளது.அரசியல் கட்சியினர், கள்ள ஓட்டு போடுவதற்காக, ஏராளமானோர் பெயரை, பல இடங்களில் சேர்த்து விடுகின்றனர். உள்ளூர் அதிகாரிகள், அரசியல் நெருக்கடி காரணமாக, அவற்றை கண்டு கொள்வதில்லை.அதன் காரணமாக, தேர்தல் கமிஷனால், 100 சதவீதம், சரியான வாக்காளர் பட்டியலை தயாரிக்க முடியாத நிலை உள்ளது. இப்பிரச்னைகளுக்கு தீர்வு காண, வாக்காளர் பட்டியலில், வாக்காளர்களின் ஆதார் எண்ணை இணைக்க, தேர்தல் கமிஷன் முடிவு செய்தது.
அதற்கான பணிகளையும், சில ஆண்டுகளுக்கு முன் துவக்கியது. ஆதார் எண்ணை வைத்து, ஒன்றுக்கு மேற்பட்ட இடங்களில் உள்ள வாக்காளர்களின் பெயர்களை நீக்க, தேர்தல் கமிஷன் முடிவு செய்தது. ஆனால், வாக்காளர்களின் ஆதார் எண்ணை பெற, உச்ச நீதிமன்றம் தடை விதித்தது.இதனால், வாக்காளர்களின் ஆதார் எண்ணை இணைக்கும் பணி நிறுத்தப்பட்டது. தற்போது, ரேஷன் கார்டு, வங்கிக் கணக்கு, மொபைல் போன் எண் போன்றவை, ஆதார் எண்ணுடன் இணைக்கப்படுகின்றன. எனவே, 'வாக்காளர் பட்டியலுடனும், ஆதார் எண்ணை இணைக்க, அனுமதிக்க வேண்டும்' என, தேர்தல் கமிஷன், உச்ச நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்துள்ளது. அதனால், 'விரைவில் அனுமதி கிடைக்கும்' என, தேர்தல் கமிஷன் அதிகாரிகள் நம்பிக்கை தெரிவித்து உள்ளனர்
Friday, October 27, 2017
குறைந்தபட்ச ஓய்வூதியம் ரூ.7,850: தமிழக அரசு உத்தரவு
ஓய்வூதியம், குடும்ப ஓய்வூதியம் பெறுவோருக்கு குறைந்தபட்ச ஓய்வூதியத் தொகையாக ரூ.7,850 நிர்ணயிக்கப்பட்டுள்ளது. ஏழாவது ஊதியக் குழு பரிந்துரைகளை தமிழக அரசு நடைமுறைப்படுத்தியுள்ளது. அரசு ஊழியர்கள், ஆசிரியர்களைப் போன்று, ஓய்வூதியம், குடும்ப ஓய்வூதியம் பெறுவோருக்கும் நடைமுறைப்படுத்தப்படும் என அரசு தெரிவித்துள்ளது.
இது தொடர்பாக நிதித் துறை கூடுதல் தலைமைச் செயலாளர் க.சண்முகம் வெளியிட்ட உத்தரவு: ஓய்வூதியம், குடும்ப ஓய்வூதியம் பெறுவோருக்கான தொகைகள் உயர்த்தப்பட்டுள்ளன. குறைந்தபட்ச ஓய்வூதியம் மற்றும் குடும்ப ஓய்வூதியமாக ரூ.7,850 நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. இந்தத் தொகைக்கு குறைவான தொகையை ஓய்வூதியமாக பெற்று வந்தால் அவர்களுக்கு ரூ.7,850 ஓய்வூதியமாக அளிக்கப்படும்.
ஓய்வு பெற்ற அரசு ஊழியர்கள், ஆசிரியர்களுக்கு அவர்கள் பெற்ற ஓய்வூதியத் தொகையில் 2.57 பெருக்கல் காரணியைக் கொண்டு ஓய்வூதியம், குடும்ப ஓய்வூதியம் உயர்த்தி அளிக்கப்படும்.
டிஜி' லாக்கரில் மாணவர் சான்றிதழ்: புதிய திட்டம் துவக்கம்
தமிழகத்தில், அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளில் பயிலும், மாணவ - மாணவியரின், 10ம் வகுப்பு மற்றும் பிளஸ் 2, மதிப்பெண் சான்றிதழ்களை, 'டிஜி லாக்கர்' திட்டத்தின் கீழ், பாதுகாக்கும் திட்டம் துவக்கப்பட்டு உள்ளது. இது தொடர்பாக, தமிழக தகவல் தொழில்நுட்ப துறை அதிகாரிகள் கூறியதாவது:
மத்திய அரசின், 'டிஜிட்டல் இந்தியா' திட்டத்தின் கீழ், www.digilocker.gov.in என்ற இணையதளத்தில், முக்கிய ஆவணங்களை, 'டிஜிட்டல்' வடிவில் சேமித்து வைக்கும் திட்டம் அமலில் உள்ளது. அதில், ஆதார் எண் வழியாக, ஒருவரின் வாகன உரிமம், வாகன பதிவுச்சான்று போன்ற அசல் ஆவணங்களை பதிவேற்றி, பாதுகாப்பாக வைக்கும் வசதி உள்ளது. தற்போது, தமிழக அரசு பள்ளிகளில், 10 மற்றும் பிளஸ் 2 தேர்ச்சி பெறும் மாணவ - மாணவியரின், மதிப்பெண் சான்றுகளை, பதிவேற்றம் செய்யும் திட்டத்தை துவக்கி உள்ளோம்.
முதல் கட்டமாக, சென்னை, விருகம்பாக்கத்தில் உள்ள அரசு பள்ளி, மாணவர்களின், மதிப்பெண் சான்றிதழ்கள், பதிவேற்றம் செய்யப்பட்டுள்ளன. இதுபோல, படிப்படியாக, அனைத்து அரசு பள்ளிகளிலும் அமல்படுத்தப்படும். இதனால், நேர்முக தேர்வு, சேர்க்கை போன்ற நேரங்களில், அசல் சான்றை, மாணவர்கள் எடுத்து செல்ல தேவை இல்லை. இவ்வாறு அவர்கள் கூறினர்.
Thursday, October 26, 2017
புதிய சட்டம் வருகிறது போர்வெல் போட திடீர் கட்டுப்பாடு
தமிழகத்தில் நிலத்தடி நீர் அதல பாதாளத்திற்கு சென்று விட்டதால் நிலத்தடி நீர் பயன்பாட்டை கட்டுப்படுத்த புதிய சட்டம் கொண்டு வருவது குறித்து தமிழக அரசுக்கு பொதுப்பணித்துறை பரிந்துரை செய்திருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. தமிழகத்தில் கடந்த 15 ஆண்டுகளில் இல்லாத அளவுக்கு 30 மாவட்டங்களில் நிலத்தடி நீர் அதல பாதாளத்திற்கு சென்று விட்டது. அதுவும் 400 முதல் 600 அடிக்கு கீழ் சென்று விட்டது. இந்நிலையில், பொதுப்பணித்துறை நீர் ஆய்வு நிறுவனம்-ஐஐடி உடன் இணைந்து சமீபத்தில் ஒரு ஆய்வு நடத்தியது. அதில், நிலத்தடி நீர் மட்டம் வரைமுறை இல்லாமல் பயன்படுத்தப்படுவதாலும், அதிகபட்ச ஆழத்தை போட்டு வணிக ரீதியாக நிலத்தடி நீர் உறிஞ்சப்படுவதாலும் நீர் மட்டம் சரிவுக்கு முக்கிய காரணம் என்பது ெதரிய வந்தது.
இதை தொடர்ந்து நிலத்தடி நீர் பயன்பாட்டை கட்டுப்படுத்த புதிய சட்டம் கொண்டு வர வேண்டும் என்று தமிழக அரசுக்கு பரிந்துரை செய்திருப்பதாக கூறப்படுகிறது. இதுகுறித்து பெயர் வெளியிட விரும்பாத பொதுப்பணித்துறை அதிகாரி ஒருவர் கூறியதாவது: தமிழகத்தில் கடந்த 2003ம் ஆண்டு குடிநீர் பற்றாக்குறை அதிகமாக இருந்ததால் நிலத்தடி நீர்அளவுக்கு அதிகமாக உறிஞ்சப்படுவதை தடுக்க தமிழ்நாடு நிலத்தடி நீர் சட்டம் 2003 கொண்டு வரப்பட்டது. இந்த சட்டத்தின்படி குறு, சிறு விவசாயிகள், விவசாய தேவைக்காக நிலத்தடி நீரை பயன்படுத்த இந்த சட்டம் தடை விதித்தது.
மேலும் தனியார் லாரி மூலம் நிலத்தடி நீரை எடுத்து சென்றால் நிலத்தடி நீர் ஆணையத்திடம் முன் அனுமதி வாங்க வேண்டும் உள்ளிட்ட பல்வேறு விதிமுறை பின்பற்ற அறிவுறுத்தப்பட்டது. ஆனால், இந்த சட்டத்திற்கு பல்வேறு தரப்பில் இருந்து எதிர்ப்பு இருந்ததால் சட்டம் ரத்து செய்யப்பட்டது. இந்நிலையில், தற்போது நிலத்தடி நீர் மட்டம் அதல பாதாளத்திற்கு சென்று விட்டது. எனவே, நிலத்தடி நீர் பயன்பாட்டை கட்டுப்படுத்த வேண்டிய அவசியம் ஏற்பட்டுள்ளது. இதற்காக, புதிய சட்டம் கொண்டு வர தமிழக அரசுக்கு பொதுப்பணித்துறை பரிந்துரை செய்துள்ளது.
இந்த சட்டம் கொண்டு வரப்படும் பட்சத்தில் அபாயகரமான, மிகவும் அபாயகரமான பகுதிகளில் வணிக பயன்பாட்டிற்கு நிலத்தடி நீர் எடுக்கப்படுவது முற்றிலுமாக தடுக்கப்படும். அதே நேரத்தில் தனி வீடு, 6 குடியிருப்பு கொண்ட அடுக்கு மாடி வீடுகளை தவிர்த்து, அதற்கு மேல் உள்ள அடுக்குமாடி குடியிருப்புகளுக்கு கட்டாயம் அனுமதி பெற்று போர்வெல் போட வேண்டும் என்பது போன்ற விதிமுறைகள் கடுமையாக கடைபிடிக்கப்படும். இவ்வாறு அவர் கூறினார்.