ஆசிரியர் பொது மாறுதலில் கல்வி அதிகாரிகள் கடைபிடிக்க வேண்டிய நெறிமுறைகளில் சில திருத்தங்களை செய்து அரசாணை வெளியிடப்பட்டுள்ளது. இந்த ஆண்டுக்கான பொதுமாறுதல் கவுன்சலிங் கடந்த 19ம் தேதி முதல் நடக்கிறது. பணியிட மாறுதல் வழங்கும் போது தொடக்க மற்றும் பள்ளிக் கல்வித்துறை அதிகாரிகள் கடைபிடிக்க வேண்டிய வழிகாட்டு நெறிமுறைகள் குறித்து ஏற்கனவே ஒரு அரசாணை வெளியிடப்பட்டது. அதைப் பின்பற்றி தற்போது மாறுதல் கவுன்சலிங் நடந்து வருகிறது. இதற்கிடையே, அந்த அரசாணையில் சில திருத்தங்களை செய்து அரசு உத்தரவிட்டுள்ளது.
இதுகுறித்து, பள்ளிக் கல்வித்துறை செயலாளர் உதயசந்திரன் நேற்று வெளியிட்ட அரசாணையில் கூறி உள்ளதாவது: பள்ளிக் கல்வித்துறையின் கீழ் இயங்கும் பலவகை பள்ளிகளில் பணியாற்றும் ஆசிரியர்களுக்கு 2017-18ம் கல்வி ஆண்டுக்கான பொதுமாறுதல் வழங்க கடைபிடிக்க வேண்டிய நெறிமுறைகள் குறித்து ஆணை வெளியிடப்பட்டன. இந்நிலையில், பள்ளிக் கல்வி இயக்குநர் கேட்டுக் கொண்டதற்கு இணங்க ஏற்கனவே வெளியிடப்பட்ட அரசாணையில் சில திருத்தம் செய்யப்பட்டுள்ளது. இதன்படி, ஒரு பணியிடத்துக்கு ஒருவருக்கு மேல் மாறுதல் கேட்டால் கடைபிடிக்க வேண்டிய நெறிமுறைகள் வருமாறு:
* முற்றிலும் கண் பார்வையற்றவர்கள்.
* இதய மாற்று அறுவை சிகிச்சை, சிறுநீரக மாற்று அறுவை சிகிச்சை செய்தவர்கள், டையாலிசிஸ் சிகிச்சை மேற்கொள்பவர்கள்.
* கடுமையாக பாதிக்கப்பட்ட புற்றுநோயாளிகள்.
50 சதவீதம் அதற்கு மேல் மற்றும் 50 சத வீதத்துக்கு கீழ் ஊனமுற்ற மாற்றுத் திறனாளிகளுக்கான சான்று பெற்றவர்கள்.
5 ஆண்டுக்கு மேல் மற்றும் 5 ஆண்டுகளுக்கு கீழ் ஆசிரியர்களாக பணியாற்றும் ராணுவ வீரர்களின் மனைவி.
* விதவைகள் மற்றும் 40 வயதை கடந்த திருமணம் செய்து கொள்ளாத முதிர் கன்னியர்.
* மன வளர்ச்சி குன்றிய மற்றும் மாற்றுத் திறனாளி குழந்தைகள் உள்ள பெற்றோர் ஆசிரியர்களாக இருப்பவர்கள்.
* ஒரே இடத்தில் குறைந்தபட்சம் 3 ஆண்டுகள் அதற்கு மேலும் பணியாற்றிய ஆசிரியர்கள்.
* மேற்கண்ட வகையில் சிறப்பு முன்னுரிமை அடிப்படையில் கடந்த ஆண்டு மாறுதல் பெற்றவர்கள், இதே வகையிலான முன்னுரிமையின் அடிப்படையில் 2 ஆண்டுக்கு மாறுதல் பெற இயலாது.