Thursday, January 05, 2017
பொங்கல் போனஸ் உண்டா? : அரசு ஊழியர்கள் கலக்கம்
வாக்காளர் அடையாள அட்டை : தேர்தல் கமிஷன் புதிய ஏற்பாடு
புதிதாக சேர்க்கப்பட்டுள்ள வாக்காளர்களுக்கு, அரசு இ - சேவை மையங்களில், இலவச அடையாள அட்டை வழங்கப்பட உள்ளது,'' என, தமிழக தலைமை தேர்தல் அதிகாரி, ராஜேஷ் லக்கானி தெரிவித்தார். இதுகுறித்து, அவர் கூறியதாவது: அனைத்து சட்டசபை தொகுதிகளிலும், இறுதி வாக்காளர் பட்டியல் வெளியிடப்பட்டுள்ளது.
புதிதாக, 15.04 லட்சம் வாக்காளர்கள் சேர்க்கப்பட்டுள்ளனர். இவர் களுக்கு, வாக்காளர் அடையாள அட்டை, ஜன., 25க்கு பின் வழங்கப்படும். தற்போதே அடையாள அட்டை பெற விரும்புவோர், அரசு இ - சேவை மையங்களுக்கு சென்று, 25 ரூபாய் கட்டணம் செலுத்தி, பெற்றுக் கொள்ளலாம். புதிய வாக்காளர்களுக்கு, அடையாள அட்டை வழங்குவதற்காக, புதிய மென்பொருள் தயார் செய்துள்ளோம். இதன்மூலம், புதிய வாக்காளர்களுக்கு, ஜன., 25க்கு பின், அவர்களின் மொபைல் எண்ணுக்கு, எஸ்.எம்.எஸ்., மூலம் ரகசிய குறியீட்டு எண் அனுப்பப்படும்.
அந்த எண்ணை, அரசு இ - சேவை மையங்களில் காண்பித்து, இலவசமாக அடையாள அட்டையை பெறலாம். புதிய அடையாள அட்டை வந்து சேரவில்லை என்ற புகாரை தவிர்க்க, இந்த ஏற்பாட்டை செய்ய உள்ளோம். இவ்வாறு அவர் தெரிவித்தார். சென்னை முதலிடம்! : வாக்காளர் எண்ணிக்கையில், சென்னை முதலிடத்தில் உள்ளது. இம்மாவட்டத்தில், 20.07 லட்சம் ஆண்கள்; 20.51 லட்சம் பெண்கள் என, மொத்தம், 40.58 லட்சம் வாக்காளர்கள் உள்ளனர். அதற்கு அடுத்த இடங்களை, காஞ்சிபுரம், திருவள்ளூர் மாவட்டங்கள் பெற்றுள்ளன. அரியலுார் மாவட்டத்தில், மிகக்குறைந்த வாக்காளர்கள் உள்ளனர். இம்மாவட்டத்தில், 2.49 லட்சம் ஆண்கள்; 2.51 லட்சம் பெண்கள் என, மொத்தம், ஐந்து லட்சம் வாக்காளர்கள் மட்டுமே உள்ளனர்
டி.இ.ஓ., பதவி 19ல் நேர்காணல்
டி.இ.ஓ., பதவிக்கான நேர்காணல், வரும், 19ல் நடக்கும் என, தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையமான, டி.என்.பி.எஸ்.சி., அறிவித்துள்ளது. தேர்வு கட்டுப்பாட்டு அதிகாரி ஷோபனா வெளியிட்டுள்ள அறிவிப்பு: மாவட்ட கல்வி அலுவலரான, டி.இ.ஓ., பதவிக்கான, 11 காலியிடங்களுக்கு முதன்மை எழுத்துத் தேர்வு, 2015 ஆகஸ்டில் நடந்தது; 2,432 பேர் பங்கேற்றனர். மதிப்பெண், இட ஒதுக்கீடு அடிப்படையில், தேர்வான, 30 பேருக்கு நேர்காணல், வரும், 19ல், சென்னை, டி.என்.பி.எஸ்.சி., அலுவலகத்தில் நடக்கும்
தமிழக அரசுப் பதிவேட்டில் பெயர்மாற்றம் செய்துகொள்வதற்கான வழிமுறைகள்.
🌺 வீட்டில் ஒரு பெயர் வைத்திருப்பார்கள், விரும்புவது வேறு பெயராக இருக்கும். சிலர் பெற்றோர் வைத்த பெயரை மாற்ற நினைப்பதும் உண்டு. தவிர, ஒருவர் தன் பெயரை நியூமராலஜிப்படியோ, ஜாதகப்படியோ அல்லது ஒரு நல்ல தமிழ்ப் பெயரையோ சூட்டிக்கொள்ளவும் விரும்பலாம்.
சரி, அதற்குரிய வழிமுறைகள் என்ன?
🌺 பெயர் மாற்றம் செய்வதற்கான தகுதிகள்:
🔷 தமிழ்நாட்டில் வசிக்கும் எவரும் விண்ணப்பிக்கலாம்.
🔷 விண்ணப்பதாரர் 60 வயதுக்கு மேல் உள்ளவரானால் பதிவுபெற்ற மருத்துவரிடமிருந்து Life Certificate அசலாகப் பெற்று இணைக்க வேண்டும்.
🌺 தேவையான ஆவணங்கள்:
🔵 பிறப்பு / கல்விச் சான்றிதழ் நகல் இணைக்க வேண்டும்.
🔵 பிறப்பு / கல்விச் சான்றிதழ் இல்லாதவர்கள் வயதை நிரூபிக்க அரசு மருத்துவரிடம் உரிய சான்றிதழ் பெற்று சமர்ப்பிக்க வேண்டும்.
🔵 சமீபத்தில் எடுக்கப்பட்ட விண்ணப்பதாரரின் புகைப்படத்தை, அதற்கென அளிக்கப்பட்டுள்ள இடத்தில் ஒட்டி, தமிழக / மத்திய அரசின் அ மற்றும் ஆ பிரிவு அலுவலர்கள் / சான்று உறுதி அலுவலரிடமிருந்து சான்றொப்பம் பெறப்பட வேண்டும்.
🔵 பிற மாநிலத்தில் பிறந்து, தமிழ்நாட்டில் வசிப்பவர்கள் - தமிழ்நாட்டில் வசிப்பதற்கு ஆதாரமாக உணவுப் பங்கீட்டு அட்டை/கடவுச் சீட்டு/வாக்காளர் அடையாள அட்டை/ வட்டாட்சியரிடமிருந்து பெறப்பட்ட இருப்பிடச் சான்றிதழ் இதில் ஏதேனும் ஒன்றின் சான்றிட்ட நகல் இணைக்க வேண்டும்.
🔵 தத்து எடுத்துக்கொண்டு, அதனால் பெயர் மாற்றம் செய்வோர் தத்துப் பத்திரத்தின் சான்றிட்ட நகலை இணைக்க வேண்டும்.
🔵 மண முறிவு செய்து, அதனால் பெயர் மாற்றம் செய்வோர் நீதிமன்றத் தீர்ப்பை சான்றிட்ட நகலாக இணைக்க வேண்டும்.
🌺 கட்டணம்:
🔷 பொதுவாக பெயர் மாற்றக் கட்டணம் 09-02-2004 முதல் ரூ.415 மட்டும்.
🔷 தமிழில் பெயர் மாற்றக் கட்டணம் ரூ.50 மற்றும் அரசிதழ் & அஞ்சல் கட்டணம் ரூ.65.
🌺 செலுத்தும் முறை:
🔵 அலுவலகத்திற்கு நேரில் சென்று காலை 10.00 மணி முதல் 1.00 மணி வரை, பிற்பகல் 2.00 மணி முதல் 3.00 மணி வரை பணமாகச் செலுத்தலாம்.
🔴 அஞ்சல் மூலம் செலுத்த:
உதவி இயக்குநர் (வெளியீடுகள்),
எழுதுபொருள் அச்சுத் துறை ஆணையரகம்,
சென்னை-600 002
என்ற பெயரில் தேசியமயமாக்கப்பட்ட வங்கி வரைவோலை மூலம்.
பண விடைத்தாள்/ அஞ்சல் ஆணைகள் ஏற்றுக் கொள்ளப்படாது.
🌺 விண்ணப்பிக்கும் முன் கவனிக்க வேண்டியவை:
🔷 பெயர் மாற்றத்திற்கான காரணம் தெரிவிக்க வேண்டும்.
🔷 பழைய பெயர் ( ம ) புதிய பெயரில், என்கிற (Alias) என்று பிரசுரிக்க இயலாது.
🔷 பிரசுரம் செய்யப்பட்ட அரசிதழில் அச்சுப்பிழைகள் ஏதுமிருப்பின் அவற்றை ஆறு மாதங்களுக்குள் சரிசெய்து கொள்ள வேண்டும்.
🔷 அதற்குப்பின் பிழைகளை திருத்தம் செய்யக்கோரும் எவ்விதக் கோரிக்கையும் கண்டிப்பாக ஏற்கப்பட மாட்டாது.
🔷 பெயர் மாற்ற அறிவிக்கை தமிழ்நாட்டைச் சேர்ந்தவர்களுக்கு மட்டுமே.
🔷 அதற்கான உறுதிமொழியை உரிய இடத்தில் அளிக்க வேண்டும்.
🔷 விண்ணப்பத்துடன் இணைக்கும் அனைத்து நகல்களிலும் கெசட்டட் அலுவலரிடம் கையெழுத்துப் பெற்று இணைக்க வேண்டும்.
🌺 நிபந்தனைகள்:
🔵 விண்ணப்பதாரர் தவிர வேறு எவரும் எவ்வித தொடர்பும் கொள்ளக் கூடாது.
🔵 பணம் செலுத்துவது தொடர்பாக விண்ணப்பதாரருக்கு நினைவூட்டு ஏதும் அனுப்பப்பட மாட்டாது.
🔵 இத்துறையால் வழங்கப்பட்ட விண்ணப்பப் படிவம் மட்டுமே ஏற்றுக் கொள்ளப்படும்.
🔵 வெளியில் அச்சிட்ட அல்லது ஒளிப்பட நகல் படிவம் ஏற்றுக் கொள்ளப்பட மாட்டாது.
🌺 எப்படி பெறுவது ?
🔷 அரசிதழை நேரில் பெற விருப்பம் தெரிவிப்பவர்கள், அரசிதழ் பிரசுரிக்கப்பட்ட 5 நாட்களுக்குள் நேரில் வந்து அரசிதழை பெற்றுக்கொள்ள வேண்டும்.
🔷 தவறினால் அரசிதழ் தபால் மூலம் உரிய நபருக்கு அனுப்பப்படும்.
🔷 தபால் மூலம் அனுப்பப்படும் அரசிதழ்கள், தபால்துறை மூலம் திருப்பப்படும் பட்சத்தில், அரசிதழ்கள், உரிய நபர்களுக்கு மீண்டும் தபால் மூலம் அனுப்பப்படமாட்டாது.
🔷 இது போன்ற நிகழ்வுகளில், உரிய நபர்கள் 6 மாதங்களுக்குள் நேரில் வந்து, தபால்துறை மூலம் திருப்பப்பட்ட, அவர்களுக்கான அரசிதழ்களைப் பெற்றுச் செல்லலாம்.
🌺 விண்ணப்பத்தில் கையெழுத்திடும்முன்:
🔵 சுவீகாரம் தொடர்பாக பெயர் மாற்றம் செய்யும் பட்சத்தில், சுவீகாரம் எடுத்துள்ள தந்தை (ம) தாயார் மட்டுமே, பெயர் மாற்றம் செய்ய விண்ணப்பித்து, படிவத்தில் உரிய இடத்தில் கையொப்பம் இட வேண்டும்.
🔵 விண்ணப்பத்தில் விண்ணப்பதாரர் மட்டுமே கையொப்பம் இடவேண்டும்.
🔵 விண்ணப்பதாரர் 18 வயது பூர்த்தி அடையாதவராக (Minor) இருந்தால், தந்தை, தாயார் அல்லது பாதுகாப்பாளர் மட்டுமே கையொப்பம் இட வேண்டும்.
🔵 பாதுகாப்பாளராக இருப்பின் அவர் பாதுகாப்பாளராக நியமிக்கப்பட்டதற்கான ஆணை நகல் (Legal Guardianship Order) சான்றொப்பம் பெறப்பட்டு இணைக்கப்பட வேண்டும்
Wednesday, January 04, 2017
2300 ஆசிரியர்களுக்கு நோட்டீஸ்
2300 ஆசிரியர்களுக்கு நோட்டீஸ்.
தமிழகம் முழுவதும் துறை முன் அனுமதியின்றி உயர்கல்வி பயின்ற 2300 தொடக்க பள்ளி ஆசிரியர்களுக்கு விளக்கம் கேட்டு நோட்டீஸ் அனுப்ப உத்தரவிடப்பட்டுள்ளது. தொடக்க கல்வியில் இடைநிலை ஆசிரியர் பயிற்சி மற்றும் இளங்கலை பட்டத்துடன் பி.எட்., முடித்து இடைநிலை மற்றும் பட்டதாரி ஆசிரியர்கள் பணி நியமனம் செய்யப்படுகின்றனர். பணியேற்றதற்கு பின் இவர்கள் முதுகலை, எம்.பில்., அல்லது பி.எச்டி., போன்ற உயர் பட்டப் படிப்புகள் பயில தொடக்க கல்வித்துறையில் முன் அனுமதி பெற வேண்டும்.இதற்காக 2009ம் ஆண்டிற்கு முன் சம்மந்தப்பட்ட மாவட்ட தொடக்க அலுவலர் அல்லது உதவி தொடக்க கல்வி அலுவலர் அளவிலேயே அனுமதி அளிக்கப்பட்டது.
அனுமதி பெறமுடியாத பட்சத்தில் படிப்பு முடித்தவுடன் அவர்களுக்கு 'பின்னேற்பு' அனுமதி அளிக்கப்பட்டது. உயர் படிப்புகளுக்கு ஊக்கத்தொகை அளிக்கப்பட்டதால் இதில் பல முறைகேடு நடந்ததாக புகார்கள் எழுந்தன. இதனால் 2009க்கு பின் உயர்கல்வி படித்த ஆசிரியர்களுக்கு 'பின்னேற்பு' அனுமதி பெற வேண்டும் என்றால், துறை செயலர் ஒப்புதல் பெறுவது கட்டாயமாக்கப்பட்டது. ஆனாலும் 2009ம் ஆண்டிற்கு பின் மாநில அளவில் 2300 ஆசிரியர்களுக்கு மேல் உயர்கல்வி முடித்து 'பின்னேற்பு' அனுமதிக்கு விண்ணப்பித்து காத்திருக்கின்றனர். அவர்களுக்கு பணப் பலனும் கிடைக்கவில்லை. இந்நிலையில் தொடக்க கல்வி இயக்குனர் இளங்கோவன் அனைத்து மாவட்ட தொடக்கக்கல்வி அலுவலர்களுக்கு அனுப்பிய உத்தரவில், 'முன் அனுமதி பெறாமல் உயர்கல்வி பயின்ற ஆசிரியர்களிடம் ஏன் ஒழுங்கு நடவடிக்கை எடுக்கக் கூடாது என்பதற்கான உரிய விளக்கம் பெற்று, ஒரு வாரத்திற்குள் அனுப்பி வைக்க வேண்டும்,' என உத்தரவிட்டுள்ளார். இதனால் ஆசிரியர்கள் கலக்கத்தில் உள்ளனர்.
ஆசிரியர் சங்க நிர்வாகிகள் கூறுகையில், "மாநில அளவில் உயர்கல்வி பயின்று 2300 பேர் 'பின்னேற்பு' அனுமதிக்கு காத்திருக்கின்றனர். அனுமதி அளிக்க பல்வேறு சங்கங்களும் தொடர்ந்து வலியுறுத்தின. இந்நிலையில் விளக்கம் கேட்டு நோட்டீஸ் அனுப்ப உத்தரவிடப்பட்டுள்ளது.
ஆசிரியர்களின் விளக்கம் ஏற்கப்பட்டால் அவர்களுக்கு பணப்பலன் உட்பட சலுகைகள் கிடைக்கும் என எதிர்பார்க்கிறோம்," என்றனர்.
சமச்சீர் கல்வி: பாடத்திட்டம், கற்பித்தல் முறைகளில் புதிய உத்திகள்: உயர் நீதிமன்றத்தில் தமிழக அரசு தகவல்
சமச்சீர் கல்வி பாடத்திட்டத்தில் மாற்றங்கள் கொண்டு வரப்பட்டதோடு, கற்பித்தல் முறைகளில் புதிய உத்திகள் பின்பற்றப்படுகின்றன என்று சென்னை உயர் நீதிமன்ற மதுரைக் கிளையில் தமிழக அரசு தெரிவித்துள்ளது. கால மாற்றத்துக்கு ஏற்ப சமச்சீர் கல்வி பாடத்திட்டத்தில் மாற்றம் கொண்டு வர வேண்டும் என்ற பத்திரிகை செய்தியை, சென்னை உயர் நீதிமன்ற மதுரைக் கிளை தாமாகவே முன்வந்து வழக்காக எடுத்துக்கொண்டது.
இந்த வழக்கு ஏற்கெனவே விசாரணைக்கு வந்தபோது, பள்ளிக் கல்வித் துறை இயக்குநர் பதிலளிக்க நீதிமன்றம் உத்தரவிட்டிருந்தது. நீதிபதிகள் ஏ. செல்வம், பி. கலையரசன் ஆகியோர் அடங்கிய அமர்வின் முன்பு, இந்த வழக்கு புதன்கிழமை விசாரணைக்கு வந்தது. அப்போது, பள்ளிக் கல்வித் துறை இயக்குநர் எஸ். கண்ணப்பனின் பதில் மனு தாக்கல் செய்யப்பட்டது.
அதில், ஆதாரமற்ற தகவல்களின் அடிப்படையில் செய்தி வெளியாகியுள்ளது. 1 முதல் 9 ஆம் வகுப்பு வரை முப்பருவத் தேர்வு முறை அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. இதன் மூலம், மாணவர்கள் தேர்வு நேரத்தில் சந்திக்கும் மன அழுத்தம் உள்ளிட்டவை குறைக்கப்பட்டுள்ளது. கடந்த 2009-2010ஆம் கல்வியாண்டில் 1 முதல் 10ஆம் வகுப்பு வரையிலான பாடத்திட்டம் மாற்றி அமைக்கப்பட்டது. இந்தப் பாடத்திட்டம் கல்வி ஆராய்ச்சி மற்றும் பயிற்சிக்கான தேசிய கவுன்சிலின் நிபுணர்கள் மூலம் உருவாக்கப்பட்டது.
சமுத்துவ சமுதாயம், பேரிடர் மேலாண்மை, சுயஒழுக்கம் உள்ளிட்ட பல்வேறு ஒழுக்க நெறிகளை உள்ளடக்கியது. இது தவிர, 9 மற்றும் 10 ஆம் வகுப்பு மாணவர்களுக்கு ஒலி, ஒளி குறுந்தகடுகள் மூலம் கற்பித்தல் வகுப்புகள் நடத்தப்படுகின்றன. இதன் மூலம், 15 லட்சம் மாணவர்கள் பயனடைந்துள்ளனர். மேலும், 3 முதல் 8ஆம் வகுப்பு வரையிலான மாணவர்களுக்கு ஆங்கிலப் பாடங்களை ஒலி குறுந்தகடுகள் மூலம் கற்பிக்க முடிவு செய்துள்ளோம். இதுவரை 3 முதல் 5ஆம் வகுப்பு வரை இந்தத் திட்டம் செயல்படுத்தப்பட்டுள்ளது. இந்த குறுந்தகடுகளுக்கான மொழிபெயர்ப்புப் பணி 240 ஆசிரியர்களைக் கொண்டு செய்யப்பட்டுள்ளது.
காது கேட்காத, வாய் பேச முடியாத மாற்றுத்திறனாளி மாணவர்களுக்கு சைகை மொழியில் கற்பித்தலுக்கான சோதனை முயற்சி திண்டுக்கல் மாவட்டத்தில் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. தொழில்நுட்பங்களைப் பயன்படுத்தி கல்வி கற்பிப்பதில் தமிழக அரசு முன்னோடியாகத் திகழ்கிறது. மாணவர்களுக்கு சிறந்த கல்வியை வழங்குவதற்காக ஆசிரியர்களுக்கும் அவ்வப்போது பயிற்சிகள் அளிக்கப்படுகின்றன. மேலும், மாணவர்களுக்கு இலவச மடிக்கணினி, சீருடை உள்ளிட்ட 16 விதமான உதவிகளை அரசு வழங்குகிறது. இந்த உதவிக்கு 2015-2016 வரை ரூ. 3 ஆயிரத்து 45 கோடி ஒதுக்கப்பட்டது. மாணவர்கள் உதவிக்கான நிதி ஒவ்வொரு ஆண்டும் உயர்த்தப்படுகிறது. இவற்றை கண்காணிக்க மாவட்ட வாரியாக தனி அலுவலர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர்.
கல்வி தரத்தை மேம்படுத்த அரசு நடவடிக்கை எடுத்து வருவதால், இந்த மனுவைத் தள்ளுபடி செய்யவேண்டும் என்று குறிப்பிடப்பட்டிருந்தது. இதை ஏற்றுக்கொண்ட நீதிபதிகள், தமிழகத்தில் கல்வித் தரத்தை மேம்படுத்த மேற்கொள்ளப்பட்டு வரும் நடவடிக்கைகளை தொடர்ந்து செயல்படுத்த உத்தரவிட்டு வழக்கை முடித்து வைத்தனர்.
இறுதி வாக்காளர் பட்டியல் வெளியீடு
தமிழக இறுதி வாக்காளர் பட்டியலில் 5 கோடியே 92 லட்சம் வாக்காளர்கள் இடம் பெற்று உள்ளனர் என்று தலைமை தேர்தல் அதிகாரி ராஜேஷ் லக்கானி தெரிவித்தார்.
வாக்காளர் பட்டியல்
இதுதொடர்பாக தமிழக தலைமை தேர்தல் அதிகாரி ராஜேஷ் லக்கானி வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறி இருப்பதாவது:–
1.1.2017–ஐ தகுதியேற்படுத்தும் நாளாக கொண்டு மேற்கொள்ளப்பட்ட வாக்காளர் பட்டியல் சிறப்பு சுருக்கமுறை திருத்தம், 1.9.2016 அன்று வரைவுப்பட்டியல் வெளியீட்டுடன் தொடங்கியது.
வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்க்க, நீக்க, திருத்த, இடமாற்றம் செய்ய விண்ணப்பங்கள் 1.9.2016–ம் தேதியில் இருந்து 30.9.2016–ம் தேதி வரை பெறப்பட்டன. இந்த சிறப்பு சுருக்கமுறை திருத்த காலத்தின்போது பெயர் சேர்த்தலுக்கு 15,85,603 விண்ணப்பங்கள் பெறப்பட்டு அதில் 15,04,233 விண்ணப்பங்கள் ஏற்கப்பட்டன. இடப்பெயர்ச்சி, இறப்பு மற்றும் இரட்டைப்பதிவு ஆகியவற்றின் காரணமாக மேற்கொள்ளப்பட்ட நீக்கல்கள் 3,84,369 ஆகும்.
5.92 கோடி வாக்காளர்கள்
திருத்தல்களுக்கு 10,50,192 விண்ணப்பங்கள் பெறப்பட்டதில், 10,46,784 விண்ணப்பங்கள் ஏற்கப்பட்டன. தொகுதிக்குள்ளேயே முகவரி மாற்றம் செய்ய 2,51,257 விண்ணப்பங்கள் பெறப்பட்டன. அதில் 2,33,561 விண்ணப்பங்கள் ஏற்கப்பட்டன.
2017–ம் ஆண்டு இறுதி வாக்காளர் பட்டியலின்படி தமிழ்நாட்டில் தற்போது 5.92 கோடி வாக்காளர்கள் (ஆண் வாக்காளர்கள் – 2.93 கோடி, பெண் வாக்காளர்கள் – 2.99 கோடி மற்றும் மூன்றாம் பாலினத்தவர் 5,040) உள்ளனர். ஆண் வாக்காளர்களை விட பெண் வாக்காளர்கள் சுமார் 6 லட்சம் பேர் அதிகம் உள்ளனர்.
புதிய வாக்காளர் புகைப்பட அடையாள அட்டைகள் வாக்குச்சாவடி நிலை அலுவலர்கள் மூலம் 10.2.2017 வாக்கில் வழங்கப்படும்.
இறுதி வாக்காளர் பட்டியல்படி, தமிழகத்தில் அதிக வாக்காளர்கள் கொண்ட சட்டமன்ற தொகுதி காஞ்சீபுரம் மாவட்டத்தின் சோழிங்கநல்லூர் சட்டமன்ற தொகுதி ஆகும். இங்கு மொத்தம் 6,22,333 வாக்காளர்கள் உள்ளனர். (ஆண்கள் – 3,12,816, பெண்கள் – 3,09,443, மூன்றாம் பாலினத்தவர் 74). இத்தொகுதியில் 18–19 வயதுடைய 7,935 இளைய வாக்காளர்கள் உள்ளனர். (ஆண்கள் – 4,278, பெண்கள் – 3657).
தொடர் திருத்த நடைமுறை
தமிழகத்தில் குறைந்த வாக்காளர்கள் கொண்ட சட்டமன்ற தொகுதி நாகப்பட்டினம் மாவட்டத்தில் உள்ள கீழ்வேளூர்(தனி) சட்டமன்ற தொகுதி ஆகும். இத்தொகுதியின் மொத்த வாக்காளர்கள் 1,66,920 ஆவர். (ஆண்கள் – 82,515, பெண்கள் – 84,404, மூன்றாம் பாலினத்தவர் 1).
பணித்தொகுதி வாக்காளர் அதிகமுள்ள சட்டமன்ற தொகுதி மதுரை மாவட்டத்தில் உள்ள திருமங்கலம் சட்டமன்ற தொகுதி ஆகும். (2,806 பேர்).
வெளிநாடுவாழ் வாக்காளர்கள் 624 பேரின் பெயர்களும் வாக்காளர் பட்டியல்களில் சேர்க்கப்பட்டுள்ளன.
வாக்காளர் பட்டியல்களை, தலைமைத் தேர்தல் அதிகாரியின் வலைதளமான http://elections.tn.gov.in என்ற வலைதளத்திலும் காணலாம். வாக்காளர் பட்டியல் தொடர் திருத்த நடைமுறை தற்போது செயல்பாட்டில் உள்ளது. தகுதியுள்ள எவரும் தங்கள் பெயர் வாக்காளர் பட்டியலில் இடம் பெறாமலிருந்தால், பெயர் சேர்க்க விண்ணப்பிக்கலாம். தலைமைத் தேர்தல் அதிகாரியின் வலைதளத்தின் மூலமாக இணைய வழியில் விண்ணப்பிக்குமாறு பொதுமக்கள் கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள். இவ்வாறு அதில் கூறப்பட்டு உள்ளது.
ஆசிரியர் தகுதி தேர்வின் மறு பிரதி சான்றிதழ் பெறலாம்
ஆசிரியர் தகுதித்தேர்வில் சான்றிதழ் பெறாதோருக்கு, மறு பிரதி சான்றிதழ் வழங்க, பள்ளிக்கல்வித் துறை ஏற்பாடு செய்துள்ளது. தமிழக பள்ளிக்கல்வித் துறையின் கீழ் செயல்படும், ஆசிரியர் தேர்வு வாரியமான, டி.ஆர்.பி., 2012, 2013 மற்றும் 2014ல், ஆசிரியர் தகுதித்தேர்வை நடத்தியது.
2012 தேர்வில், தேர்ச்சி பெற்றோருக்கு, மாவட்ட முதன்மை கல்வி அதிகாரியான, சி.இ.ஓ., அலுவலகங்கள் வழியே, தகுதி சான்றிதழ் வழங்கப்பட்டது. பின், 2013, 2014 தேர்வுகளில் பங்கேற்றோருக்கு, டி.ஆர்.பி.,யின் இணையதளத்தில் பதிவிறக்கம் செய்யலாம் என, அறிவிக்கப்பட்டது. அவ்வாறு, பதிவிறக்கம் செய்யாதோருக்கு, சான்றிதழ் மறு பிரதி வழங்கப்பட உள்ளது.
ஆசிரியர் தகுதி சான்றிதழின் மறு பிரதி தேவைப்படுவோர், டி.ஆர்.பி.,யின் இணையதளத்தில் உள்ள விண்ணப்பத்தை பூர்த்தி செய்து, சி.இ.ஓ., பரிந்துரைப்படி, டி.ஆர்.பி.,க்கு விண்ணப்பிக்கலாம். ஆவணங்கள் சரிபார்க்கப்பட்டு, மறு பிரதி சான்றிதழ், பதிவு தபாலில் அனுப்பப்படும் என, டி.ஆர்.பி.,யின் உறுப்பினர் செயலர், உமா தெரிவித்துள்ளார்.
முதுநிலை ஆசிரியர் காலி பணியிடம் அதிகரிப்பு : பள்ளி கல்வித்துறை மவுனம்
அரசு மேல்நிலை பள்ளிகளில், காலியாக உள்ள, 2,700 முதுநிலை பட்டதாரி ஆசிரியர் காலியிடங்கள் நிரப்பப்படாததால், பிளஸ் 2 மாணவர்கள் பாதிக்கப்பட்டுள்ளனர்.
அரசு மேல்நிலை பள்ளிகளில், 2013 - 14, 2014 - 15ம் ஆண்டுகளில் உருவான, 1,807 காலியிடங்கள், 2016 மே மாதம் நிரப்பப்பட்டன. பின், 2015 - 16ல் உருவான, 2,125 காலியிடங்களை நிரப்ப, பள்ளி கல்வித்துறைக்கு, தமிழக அரசு அனுமதி அளித்தது. இதில், 50 சதவீதமான, 1,063 பணியிடங்கள் பதவி உயர்வின் மூலம் நிரப்ப முடிவானது. மீதமுள்ள, 1,062 பணியிடங்கள், போட்டித் தேர்வின் மூலம் நிரப்பப்படும் என, அறிவிக்கப்பட்டது.
அறிவிப்பு வெளியாகி, ஓர் ஆண்டு நெருங்கியும், இன்னும் பணி நியமன பணிகள் துவங்கவில்லை. அதனால், பிளஸ் 1 மற்றும் பிளஸ் 2 மாணவர்களுக்கு, பல பள்ளிகளில் பாடம் நடத்த, ஆசிரியர் இல்லாத நிலை ஏற்பட்டுள்ளது. இது குறித்து, ஆசிரியர் சங்கத்தினர் கூறியதாவது: மேல்நிலை பள்ளிகளில், தற்போது வரை, 2,700 இடங்கள் காலியாக உள்ளதால், பாடம் நடத்துவதில் சிக்கல் ஏற்பட்டுஉள்ளது. ஆசிரியர் இல்லாத பள்ளிகளில், அனுபவமில்லாத புதிய பட்டதாரிகளை, தற்காலிக அடிப்படையில் நியமித்து, நிலைமையை சமாளித்து வருகிறோம். இவ்வாறு அவர் கூறினார்.
'நீட்' தேர்வு அறிவிப்பு எப்போது? : தமிழக மாணவர்கள் எதிர்பார்ப்பு
மருத்துவப் படிப்புக்கான, 'நீட்' நுழைவுத் தேர்வு அறிவிப்பு, இன்னும் வெளியிடப்படாததால், தமிழக மாணவர்கள் கவலை அடைந்துள்ளனர். நாடு முழுவதும், அனைத்து மருத்துவப் படிப்புகளுக்கும், நுழைவுத் தேர்வு கட்டாயம் என, இந்திய மருத்துவ கவுன்சில் அறிவித்தது. எம்.பி.பி.எஸ்., - பி.டி.எஸ்., படிப்பில் சேர, நீட் நுழைவுத் தேர்வு எழுத வேண்டும் என்ற, இந்திய மருத்துவ கவுன்சிலின் உத்தரவுக்கு, உச்ச நீதிமன்றம், 2016ல் அனுமதி அளித்தது.
இதற்கு, தமிழகம், ஆந்திரா, மஹாராஷ்டிரா உட்பட, பல மாநிலங்களில் எதிர்ப்பு எழுந்தது. எதிர்த்த மாநிலங்களில், மாநில ஒதுக்கீடு இடங்களுக்கு, கடந்த கல்வி ஆண்டுக்கு மட்டும், நீட் எழுதத் தேவையில்லை என, விலக்கு அளிக்கப்பட்டது. அதேநேரத்தில், தனியார் கல்லுாரி மாணவர் சேர்க்கைக்கு, நீட் கட்டாயம் ஆனது. இந்த ஆண்டு நீட் தேர்வு தொடர்பாக, எந்த மாநிலத்திற்கும் விலக்கு அளிக்கப்படவில்லை. மே மாதம் நடக்கவுள்ள நீட் தேர்வுக்கு, வழக்கமாக டிசம்பரில், விண்ணப்ப பதிவு துவங்கும். ஆனால், இந்த ஆண்டு இன்னும் விண்ணப்ப பதிவு துவங்கவில்லை.
நீட் தொடர்பான அறிவிப்பு, ஒரு மாதத்திற்கு மேல் தாமதமாகியுள்ளது. இதுகுறித்து, தேர்வை நடத்தும், சி.பி.எஸ்.இ., எனப்படும் மத்திய இடைநிலை கல்வி வாரிய அதிகாரிகள் கூறுகையில், 'நீட் தேர்வு குறித்து, இந்திய மருத்துவ கவுன்சில் சட்டத்தில், திருத்தம் கொண்டு வரப்பட உள்ளது. இந்த மசோதா நிறைவேற்றிய பிறகே, அறிவிப்பு வெளியாகும்' என்றனர்.இதற்கிடையில், பல்வேறு மாநிலங்களும், இந்த ஆண்டே, தங்கள் மாநில மொழிகளில், நீட் தேர்வு எழுத அனுமதி பெற்று வருகின்றன. இதுவரை, ஹிந்தி, ஆங்கிலம் மட்டுமின்றி, குஜராத்தி, மராத்தி, அசாமி, பெங்காலி மற்றும் தெலுங்கு ஆகிய மொழிகளில், நீட் எழுத அனுமதி அளிக்கப்பட்டுள்ளது. இதில், தமிழுக்கு இன்னும் அனுமதி கிடைக்கவில்லை. பிளஸ் 2 பொதுத்தேர்வு துவங்க, இரு மாதங்களே உள்ள நிலையில், திடீரென நீட் கட்டாயம் என அறிவிக்கப்பட்டால், என்ன செய்வது என, தமிழக மாணவர்கள் குழப்பத்தில் உள்ளனர்.