தமிழக அரசின் 2016-17ம் ஆண்டுக்கான பட்ஜெட் வருகிற 21ம் தேதி சட்டசபையில் தாக்கல் செய்யப்படுகிறது. உள்ளாட்சி தேர்தல் வர உள்ளதால் பல்வேறு கவர்ச்சிகரமான அறிவிப்புகள் அதில் இடம்பெறலாம் என தெரிகிறது. சில பொருட்களுக்கு புதிய வரிகள் விதிக்கப்பட வாய்ப்புள்ளது. தமிழகத்தில் கடந்த மே 16ம் தேதி சட்டப்பேரவை பொதுத் தேர்தல் நடைபெற்றது. இதில் அதிமுக 133 இடங்களை கைப்பற்றி, முதல்வர் ஜெயலலிதா தலைமையில் அமைச்சர்கள் பதவியேற்றனர். இதைத்தொடர்ந்து, இந்த ஆண்டுக்கான முதல் சட்டப்பேரவை கூட்டம் கடந்த மாதம் 16ம் தேதி நடந்தது. அன்றைய தினம் தமிழக கவர்னர் ரோசய்யா உரையாற்றினார். 4 நாட்கள் கூட்டம் நடைபெற்று, ஒத்தி வைக்கப்பட்டது.இதையடுத்து, தமிழக அரசின் 2016-17ம் ஆண்டுக்கான பட்ஜெட் கூட்டம் எப்போது தொடங்கும் என்ற பரபரப்பு ஏற்பட்டிருந்தது. இந்தநிலையில், 21ம் தேதி சட்டப்பேரவை கூடும் என்று அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது. இதுகுறித்து, சட்டப்பேரவை செயலாளர் ஜமாலுதீன் நேற்று வெளியிட்ட அறிவிப்பு:
தமிழக சட்டமன்ற பேரவையின் அடுத்த கூட்டத்தை வருகிற 21ம் தேதி (வியாழக்கிழமை) காலை 11 மணிக்கு தலைமை செயலகத்தில் உள்ள சட்டப்பேரவை மண்டபத்தில் பேரவை தலைவர் தனபால் கூட்டியுள்ளார். அன்று காலை 11 மணிக்கு 2016-17ம் ஆண்டிற்கான திருத்திய நிதிநிலை அறிக்கை பேரவைக்கு அளிக்கப்பெறும். இவ்வாறு கூறப்பட்டுள்ளது. இதன்படி, நிதி அமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் 2016-17ம் ஆண்டுக்கான பட்ஜெட்டை தாக்கல் செய்ய உள்ளார். அன்றைய கூட்டம் முடிவடையும். அதன் பின்னர், சபாநாயகர் தனபால் தலைமையில் அலுவல் ஆய்வுக்குழு கூட்டம் நடைபெறும். இதில் எத்தனை நாட்கள் பட்ஜெட் மீதான விவாதம் நடத்துவது மற்றும் துறைவாரியான மானியக்கோரிக்கை மீது எத்தனை நாட்கள் விவாதம் நடத்துவது என்பது குறித்து கலந்து ஆலோசித்து முடிவு அறிவிக்கப்படும். அனேகமாக, பட்ஜெட் தொடர் ஒரு மாதம் நடைபெறும் என்று கூறப்படுகிறது.
விரைவில் உள்ளாட்சி தேர்தல் நடைபெற உள்ளதால் பல்வேறு புதிய அறிவிப்புகளை வெளியிட அதிமுக அரசு முடிவு செய்துள்ளது. பால் விலையை குறைப்பது, மேலும் டாஸ்மாக் கடைகளை மூடுவது, அரசு கல்லூரிகளில் காலியாக உள்ள விரிவுரையாளர் பணியிடங்களை நிரப்புவது, பள்ளிகளில் காலியாக உள்ள ஆசிரியர் பணியிடங்களை நிரப்புவது மற்றும் அதிமுக அரசு தேர்தலின் போது அறிவித்த பல்வேறு கவர்ச்சிகரமான திட்டங்களுக்கான அறிவிப்புகள் வெளியிடப்படும் என்று கூறப்படுகிறது. ஒரு சில பொருட்களுக்கு வரி விதிக்கப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.