மத்திய மனிதவள மேம்பாட்டு அமைச்சகம் அண்மையில் வெளியிட்ட தேசியக் கல்விக் கொள்கை வரைவறிக்கையில் உள்ள சில அம்சங்கள், தேசியக் குழந்தைகள் கொள்கையைக் கேள்விக்குறியாக்கும் வகையில் உள்ளதாக விமர்சிக்கப்படுகிறது.
புதிய பரிந்துரைகள் அடங்கிய வரைவு கல்விக் கொள்கையின் ஒரு பகுதியை மத்திய மனிதவள மேம்பாட்டு அமைச்சகம் அண்மையில் தனது இணையதளத்தில் வெளியிட்டது. பொதுமக்கள், கல்வியாளர்களின் கருத்துகளை அறிவதற்காக இந்த வரைவு கொள்கையின் ஒரு பகுதி தற்போது வெளியிடப்பட்டுள்ளது. இதுதொடர்பான கருத்துகள், யோசனைகளை மத்திய மனிதவள மேம்பாட்டு அமைச்சகத்துக்கு அனுப்ப ஜூலை 31 கடைசித் தேதியாகும்.
இந்த வரைவு கல்விக் கொள்கையில் இடம் பெற்றிருக்கும் சில முக்கிய அம்சங்கள், தேசியக் குழந்தைகள் கொள்கையைக் கேள்விக்குறியாக்கும் வகையில் உள்ளதாகத் தற்போது புகார் எழுந்துள்ளது. குழந்தைகளின் அடிப்படை உரிமைகள்: 18 வயதுக்கு உள்பட்ட அனைவரும் குழந்தைகள் என்று, குழந்தைகள் தொடர்பான தேசியக் கொள்கையின் செயல் திட்டத்தில் வரையறை செய்யப்பட்டுள்ளது. அத்துடன், தேசியச் சொத்தான குழந்தைகளுக்கு வாழும் உரிமை, வளர்ச்சி, கல்வி, பாதுகாப்பு, சமூகப் பங்கேற்பு ஆகியவற்றுக்கு முழு உரிமை உண்டு. மதம், இனம், மொழி, பாலினம், பிறப்பிடம், வகுப்பு, மொழி, சமூகம், பொருளாதாரம் ஆகிய அனைத்திலும் சம உரிமை வழங்கப்பட வேண்டும்.
ஒவ்வொரு மாநிலத்திலும் குழந்தைகள் கல்வி, கற்றலுக்கான சூழல், உள்கட்டமைப்பு வசதிகள் செய்து தரப்பட வேண்டும். குழந்தைத் தொழிலாளர் முறைக்கு மறைமுக அனுமதியா?: 6 முதல் 14 வயது வரையிலான குழந்தைகளுக்கு அடிப்படை உரிமையான கல்வி உயர்நிலை வரை, தரத்துடன் வழங்கப்பட வேண்டும். குழந்தைத் தொழிலாளர்கள், புலம் பெயர்ந்த, கடத்தப்பட்ட, தெருவோரக் குழந்தைகள் என அனைத்து வகைக் குழந்தைகளும் பாதுகாக்கப்பட்டு, உரிய கல்வி வழங்கப்பட வேண்டும் என்று, குழந்தைகளுக்கான தேசியக் கல்வி கொள்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது. இந்த நிலையில், தற்போது வெளியிடப்பட்டுள்ள கல்வி வரைவுக் கொள்கையில், இடைநிற்றல் மாணவர்கள், வேலை செய்யும் குழந்தைகள் முழுநேரப் பள்ளிக்குச் செல்ல வேண்டிய அவசியம் இல்லை. அவர்கள் திறந்தநிலைப் பள்ளி மூலம் படித்துப் பயன்பெறலாம் என்று கூறப்பட்டுள்ளது.
இதன்மூலம், குழந்தைத் தொழிலாளர் முறை முற்றிலும் ஒழிக்கப்பட வேண்டும் என்ற குழந்தைகள் தொடர்பான கொள்கையைக் கவனத்தில் கொள்ளாமல், அதை ஊக்குவிக்கும் விதத்தில் தேசிய வரைவு கல்விக் கொள்கை அமைந்துள்ளதாகக் கல்வியாளர்கள் கூறுகின்றனர். இதுகுறித்து பொதுப் பள்ளிகளுக்கான மாநில மேடை அமைப்பின் பொதுச் செயலர் பு.பா. பிரின்ஸ் கஜேந்திரபாபு கூறியதாவது:
இந்தப் புதிய வரைவறிக்கையின் முன்முனைவின்படி, கல்வியில் பின்தங்கிய மாணவர்களுக்கு உரிய தீர்வு வழங்கப்பட வேண்டும் என்று கூறப்பட்டுள்ளது. ஆனால், என்ன தீர்வு எனத் தெளிவாக இல்லை. அத்துடன் பொருளாதாரத்தில் பின்தங்கிய, புலம் பெயர்ந்த குழந்தைகளுக்கு மாற்றுப் பள்ளித் திட்டத்தின் கீழ் பயிற்சி அளிக்கப்படும் என்று கூறுவது, அனைவருக்கும் சமமான கல்வி என்பதிலிருந்து மாறுபடுவதுபோல் உள்ளது. மேலும் கணிதம், அறிவியல், ஆங்கிலப் பாடங்களுக்குப் பொதுவான பாடத் திட்டம் அமைக்கப்படும் என்பது மாநிலங்களின் உரிமையைப் பறிப்பது போல உள்ளது. மறுக்கப்படும் உயர் கல்வி வாய்ப்பு: மாணவர்கள் தங்களது உயர் கல்வியை பத்தாம் வகுப்பிலேயே முடிவு செய்ய வேண்டும் என்பது போலவும், தேர்ச்சியை உறுதி செய்யவும், பகுதி-ஏ, பகுதி-பி எனப் பிரித்து முக்கியப் பாடங்கள் ஒரு பிரிவிலும், தொழில் கல்வி மற்ற பிரிவிலும் என இரு பிரிவுகளில் ஒன்றைத் தேர்ந்தெடுக்க வேண்டும் என்று கூறப்பட்டுள்ளது. ஒருவேளை தொழில் கல்வியைத் தேர்ந்தெடுக்கும் மாணவர், பின்னாளில் அறிவியலில் பட்டம் பெற எண்ணினால் அதற்கு வாய்ப்பு மறுக்கப்படுகிறது.விருப்பமான கல்வி மாணவர்களுக்கு மறுக்கப்படுவது, அடிப்படைக் கல்வி உரிமைக்கு ஊறு விளைவிப்பது போல உள்ளது என்றார் அவர். இதுவிஷயத்தில் அனைத்துத் தரப்பு மக்களின் கருத்துகளையும் அறிந்து, உரிய முடிவுகளை மத்திய மனிதவள மேம்பாட்டு அமைச்சகம் எடுக்க வேண்டும் என்பதே கல்வியாளர்களின் மையக் கருத்தாக உள்ளது.