வீட்டுக் கடன் இல்லாமல் சொந்த வீடு என்ற எண்ணத்தை இன்று யாரும் நினைத்துகூடப் பார்க்க முடியாது. சொந்த வீடு வாங்குவதில் வீட்டுக் கடன் அந்தளவுக்கு முக்கியத்துவம் பெற்றுள்ளது. ஒருவர் எந்த வீட்டை வாங்கலாம் என்ற முடிவைகூட விரைவாக எடுத்துவிடுவார்.
ஆனால், எந்த வங்கியில் வீட்டுக் கடன் வங்கலாம் என்பதில் குழம்பிவிடுவார். பொதுத் துறை வங்கியில் வாங்கலாமா, தனியார் வங்கியில் வாங்கலாமா எனக் குழப்பம் அதிகரிக்கும். விரைவாக எந்த வங்கியில் வங்கிக் கடன் கிடைக்கும் என்றும் கணக்குப் போடுவார்கள். வீட்டுக் கடன் வழங்குவதில் பொதுத்துறை, தனியார் வங்கிகளுக்கு இடையே உள்ள வித்தியாசங்கள் என்ன?
இன்று வீட்டுக் கடன் வழங்காத வங்கிகளே இல்லை என்று சொல்லிவிடலாம். எல்லா பொதுத் துறை வங்கிகளும் வீட்டுக் கடன்களை வழங்கி வருகின்றன. பொதுத் துறை வங்கிகளுக்குப் போட்டியாகத் தனியார் வங்கிகளும், வீட்டு வசதி நிறுவனங்களும் வீட்டுக் கடன்களைப் போட்டி போட்டு வழங்கி வருகின்றன. எல்லாப் பொதுத்துறை வங்கிகளும் வீட்டுக் கடனை வழங்கி வருகின்றன என்றாலும், ஒருசில பொதுத்துறை வங்கிகளே வீட்டுக் கடன் வழங்குவதில் மிகத் தீவிரமாக இருக்கின்றன என்பதுதான் உண்மை.
தனியார் வங்கிகளைவிடப் பொதுத் துறை வங்கிகளில் வீட்டுக் கடனுக்கான வட்டிக் குறைவாக இருக்கும் என்று பலரும் சொல்லக் கேட்டிருப்போம். அது உண்மைதான். பொதுத்துறை வங்கிகளில் கடனுக்கான வட்டி பெரும்பாலும் சிறிது குறைவாக இருக்கும். காரணம், பொதுத் துறை வங்கிகளுக்கு நிதித் திரட்டும் செலவு (அதாவது, காஸ்ட் ஆஃப் ஃபண்ட்ஸ்) குறைவு என்பதுதான் காரணம். அதனால் வீட்டுக் கடனை குறைந்த வட்டியில் பொதுத்துறை வங்கிகளால் தர முடிகிறது என்று காரணம் கூறப்படுகிறது. ஆனால், தனியார் வங்கிகளுக்கு நிதி திரட்டும் செலவு அதிகமாக இருப்பதால் அவற்றால் அரசு வங்கிகளுடன் போட்டி போட்டுக்கொண்டு குறைவான வட்டியில் கடன் தர முடிவதில்லை என்றும் சொல்லப்படுகிறது.
தனியார் வங்கியில் வீட்டுக் கடன் விரைவாகக் கிடைக்கும் என்றும் பொதுத் துறை வங்கிகளில் தாமதமாகக் கிடைக்கும் என்ற ஒரு கருத்து எப்போதும் உண்டு. தனியார் வங்கிகளில் வீட்டுக் கடன் கேட்டு மனு கொடுத்த உடனேயே அதற்கான பணிகள் தொடங்கிவிடும். வங்கியின் பிரதிநிதி கடன் கேட்டவரை அணுகி என்னென்ன தேவை என்பதையெல்லாம் சொல்லிவிடுவார். மேலும் நேரடியாக வந்து விண்ணப்பம் கொடுப்பது, ஆவணங்களை வாங்கிச் செல்வது, வழக்கறிஞரிடம் சட்ட ஆலோசனைக் கேட்பது என நமக்கு வேலையே வைக்கமாட்டார். வீடு அல்லது அலுவலகம் வந்துகூட எல்லாவற்றையும் முடித்துத் தருவார்.
ஆனால், பொதுத் துறை வங்கிகளில் நிலவரம் அப்படியில்லை. கடன் கேட்பவர்தான் எல்லாவற்றுக்கும் வங்கியை அணுக வேண்டும். பொதுத் துறை வங்கிகளில் ஆட்கள் பற்றாக்குறை இருப்பதால் நேரடியாக வந்து விண்ணப்பம் கொடுப்பது, ஆவணங்களை வாங்கிச் செல்வது போன்றவற்றை எதிர்பார்க்க முடியாது. மேலும் தனியார் வங்கியில் வீட்டுக் கடனை வாடிக்கையாளருக்குப் பெற்றுத் தரும் பிரதிநிதிக்கு ஊக்கத் தொகைக் கொடுப்பதும் உண்டு என்பதால் தனியார் வங்கிப் பிரதிநிதிகள் கால நேரம் பார்க்காமல் பணியாற்றவும் செய்கிறார்கள். மேலும் தனியார் வங்கியில் ஒவ்வொரு மாதமும் இவ்வளவு வீட்டுக் கடன் வழங்க வேண்டும் என்ற இலக்கும் உள்ளது. இதன் காரணமாகவும் வீட்டுக் கடன் விரைவாக வழங்கப்படுகிறது.
பொதுத் துறை வங்கிகளைப் பொறுத்தவரை ஆவணங்களை நிதானமாக ஆராயும். கட்டுமான அப்ரூவல் விஷயத்தில் பொதுத் துறை வங்கிகள் சிறிதும் சமரசம் செய்துகொள்வதில்லை. சொத்தில் எந்தப் பிரச்சினையும் இல்லை என்பதை முடிவு செய்த பிறகே வீட்டுக் கடன் வழங்க அனுமதி வழங்கப்படுகிறது. தனியார் வங்கியிலும் ஆவணங்களைத் தீவிரமாகவும் நுணுக்கமாகவும் ஆராய்ந்தே வீட்டுக் கடன் தருவார்கள். என்றாலும், பொதுத் துறை வங்கியில் அதற்குக் கூடுதல் காலம் எடுத்துக்கொள்ளப்படுவதும் உண்டு.
பொதுத் துறை வங்கிகளைவிடத் தனியார் வங்கியில் விரைவாகக் கடன் கிடைத்தாலும் வட்டிக் கடன் சிறிது கூடுதலாக இருக்கும். சுமார் 0.50 முதல் 1 சதவீதம் வரை கூடுதலாக இருக்க வாய்ப்புண்டு. உதாரணமாகத் தனியார் வங்கியில் ஒருவர் 20 லட்சம் ரூபாயை 9.90 சதவீத வட்டி வீதத்தில் 20 ஆண்டுகளுக்கு வாங்கியிருக்கிறார் என்று வைத்துக்கொள்வோம். இதில் கூடுதலாக 1 சதவீத வட்டியைக் கணக்கிட்டால்கூட சுமார் 2 லட்சம் ரூபாய் கூடுதல் வட்டியாக வருகிறது. அரை சதவீதம் என்றால்கூட 1 லட்சம் ரூபாய் வந்துவிடுகிறது.
தனியார் வங்கியிலும், பொதுத் துறை வங்கியிலும் வீட்டுக் கடன் வாங்குவதில் இவ்வளவு விஷயங்கள் உள்ளன. எந்த வங்கியில் வீட்டுக் கடன் வாங்குவது சிறந்தது என்பது இனி உங்கள் கையில்தான்!