இலவச SMS களை உடனுக்குடன் பெற ON tnptfmani என்று type செய்து 9870807070 என்ற எண்ணிற்கு அனுப்பி இலவச குறுந்தகவல்களை(SMS) பெறுங்கள். DND (Do NOT Disturb) சர்வீஸ்ல் உள்ள எண்கள் அதனை(DND) நீக்கிய பிறகே இச்சேவையை பெறமுடியும். plz call 1909

Friday, September 04, 2015

குளம்,கடலில் குளிக்க மாணவர்களுக்குத் தடை

'மாணவர்களை, நீர்நிலைகள் அருகே செல்ல அனுமதிக்கக் கூடாது; கடலில் குளிக்க விடக்கூடாது' என, தலைமை ஆசிரியர்களுக்கு, பள்ளி கல்வித்துறை உத்தரவிட்டுள்ளது.மாணவர்களின் பாதுகாப்பு கருதி, அனைத்து பள்ளி தலைமை ஆசிரியர்களுக்கும், மாவட்ட முதன்மை கல்வி அதிகாரிகள் மூலமாக, அனுப்பப்பட்டுள்ள சுற்றறிக்கையில் கூறப்பட்டுள்ளதாவது:

பள்ளி வளாகங்களை, குப்பை, கூளங்கள், புதர்கள், தேவையற்ற செடிகள் இன்றி சுத்தமாக பாதுகாக்க வேண்டும். மாணவ, மாணவியரை, குளம், குட்டை மற்றும் நீர்நிலைகள் அருகே செல்ல அனுமதிக்கக் கூடாது; கடல் அருகில் இருந்தால், அங்கு குளிக்க விடக்கூடாது. பள்ளி வளாகத்தில் உயர்மின் அழுத்தக் கம்பி இருந்தால், அதை பத்திரமாக அகற்ற வேண்டும். பள்ளியில் உள்ள நீர்த்தேக்கத் தொட்டி, கழிவுநீர்த் தொட்டி மற்றும் குடிநீர்த் தொட்டி போன்றவை மூடப்பட்டுள்ளதா என்பதை உறுதி செய்ய வேண்டும். அத்துடன், ஒவ்வொரு பள்ளியிலும், கண்டிப்பாக முதலுதவி பெட்டி இருக்க வேண்டும். இதுதவிர, மாணவர்களின் பாதுகாப்புக்கு தேவையான, மற்ற பல நடவடிக்கைகளையும் எடுக்க வேண்டும்.இவ்வாறு சுற்றறிக்கையில் கூறப்பட்டுஉள்ளது

Thursday, September 03, 2015

ஆண் குழந்தைகளுக்கான "பொன்மகன் பொது வைப்பு நிதித் திட்டம்': இன்று அறிமுகப்படுத்துகிறது அஞ்சல் துறை

இந்திய அஞ்சல் துறை சார்பில், செல்வமகள் சேமிப்புத் திட்டத்தைத் தொடர்ந்து, ஆண் குழந்தைகளுக்கான -பொன்மகன் வைப்பு நிதி- திட்டம் வெள்ளிக்கிழமை முதல் அறிமுகம் செய்யப்படுவதாக, சென்னை நகர மண்டல அஞ்சல் துறைத் தலைவர் மெர்வின் அலெக்ஸாண்டர் தெரிவித்தார். இதுகுறித்து வியாழக்கிழமை அவர் வெளியிட்ட செய்திக்குறிப்பு: தமிழகத்தில் "செல்வமகள் சேமிப்புத் திட்டம்' பெரும் வரவேற்பைப் பெற்றது. இதை முன்னிட்டு, ஆண் குழந்தைகளிடமும் சேமிப்பு எண்ணத்தை அதிகரிக்கும் வகையில்,"பொன்மகன் வைப்பு நிதி' என்கிற திட்டம் தொடங்கப்படவுள்ளது.

இந்திய அஞ்சல் துறையால் அறிமுகம் செய்யப்படும் இந்தத் திட்டம் வெள்ளிக்கிழமை முதல் நடைமுறைக்கு வருகிறது. இதுவரை, தமிழகத்தில் செல்வமகள் சேமிப்புத் திட்டத்தின் கீழ் 10.6 லட்சத்துக்கும் மேற்பட்ட கணக்குகள் தொடங்கப்பட்டுள்ளன. செல்வமகள் சேமிப்புத் திட்டம் பற்றிய விழிப்புணர்வு நிகழ்ச்சிகளின்போது, ஆண் குழந்தைகளுக்கும் இதுபோன்ற திட்டத்தைத் தொடங்க வேண்டும் எனப் பல்வேறு தரப்பில் இருந்து கோரிக்கைகள் விடுக்கப்பட்டன. ஆகையால், இதைக் கருத்தில் கொண்டு குறைந்த, நடுத்தர வருமானமுள்ள குடும்பங்களில் சேமிப்புப் பழக்கத்தை உருவாக்கும் வகையில், "பொன்மகன் பொது வைப்பு நிதி' என்ற பொது வைப்பு நிதி திட்டம் தொடங்கப்படுகிறது. இந்தத் திட்டத்தின் கீழ் செலுத்தப்படும் தொகைக்கு "80-சி' பிரிவில் வருமான வரி விலக்கு அளிக்கப்படும். பத்து வயதுக்கு கீழுள்ள குழந்தைகள் பாதுகாவலர் உதவியோடு, பொன்மகன் பொது வைப்பு நிதி திட்டத்தின் கீழ் கணக்கு தொடங்கலாம்.

பத்து வயதுக்கு மேற்பட்ட குழந்தைகள் தாங்களாகவே கணக்கு தொடங்கலாம். இந்தத் திட்டத்தின் கீழ், கணக்கு தொடங்குவதற்கு எந்தவிதமான வயது வரம்பும் கிடையாது. தற்போதைய நிதியாண்டில் இந்தக் கணக்குகளுக்கு 8.7 சதவீதம் வட்டி வழங்கப்படும். அதே நேரத்தில், இந்தக் கணக்கின் வாயிலாகக் கிடைக்கும் வட்டிக்கு வரி விலக்கும் உண்டு. "பி' பிரிவில் வரும் அனைத்து அஞ்சல் நிலையங்களும், இந்தக் கணக்குக்கான முன் தொகையை ஏற்றுக் கொள்ளும். ஒரு ஆண்டுக்கு குறைந்தபட்சம் ரூ.100-ம், அதிகபட்சம் ரூ.1.5 லட்சம் வரையிலும், முன் பணமாகச் செலுத்தலாம். இதில் கடன் வசதி, செலுத்திய தொகையைத் திரும்பப்பெறும் வசதிகளும் உண்டு. அண்ணாசாலையில் உள்ள தலைமை அஞ்சல் அலுவலகத்தில் வெள்ளிக்கிழமை காலை 10 மணிக்கு பொன்மகன் பொது வைப்பு நிதித் திட்ட அறிமுக நிகழ்ச்சி நடைபெறும்.

திட்டம் பற்றிய கூடுதல் விவரங்களுக்கு அருகிலுள்ள அஞ்சல் நிலையங்கள் வாயிலாக அறிந்து கொள்ளலாம் என அந்தச் செய்திக்குறிப்பில் மெர்வின் அலெக்ஸாண்டர் தெரிவித்துள்ளார்.

இன்று எட்டாம் வகுப்பு 'ரிசல்ட்'

எட்டாம் வகுப்பு தனித்தேர்வர்களுக்கான தேர்வு முடிவு, இன்று வெளியிடப்படுகிறது. இதுகுறித்து, தேர்வுத்துறை வெளியிட்ட அறிப்பில், 'மே மாதம் நடந்த, எட்டாம் வகுப்பு தனித்தேர்வர்களுக்கான பொதுத் தேர்வு முடிவு, இன்று வெளியிடப்படும். தேர்வு எழுதிய மையத்தில் மதிப்பெண் பட்டியலை பார்த்து கொள்ளலாம். சான்றிதழ் வழங்கும் தேதி, பின்னர் அறிவிக்கப்படும்' என, கூறப்பட்டுள்ளது.

புகாரில் சிக்கினால் இடமாறுதல் இல்லை:ஆசிரியர் பயிற்றுனர்களுக்கு நிபந்தனை

அனைவருக்கும் கல்வி இயக்கத்தின்கீழ் பணிபுரியும் ஆசிரிய பயிற்றுனர்கள் மனமொத்த இடமாறுதலுக்கு பள்ளிக்கல்வித்துறை நிபந்தனை விதித்துள்ளது.அவை வருமாறு: புதிய பணியிடத்தில் மூன்று ஆண்டுகளுக்கு மேல் பணிபுரிந்திருக்கக்கூடாது. எந்தப்பாடப்பிரிவை சார்ந்தவரோ அதே பாடப்பிரிவைச் சேர்ந்தவரையே அவரது இடத்தில் பணியமர்த்த வேண்டும். எவ்வித புகாரும் இருக்கக்கூடாது என நிபந்தனை விதிக்கப்பட்டுள்ளது.

இதற்கான விண்ணப்பங்களை மாவட்ட கூடுதல் முதன்மைக்கல்வி அலுவலகங்களில் பெற்று செப்.,10க்குள் சமர்ப்பிக்க வேண்டும் செப்.,11,12ல் விண்ணப்பங்கள் பரிசீலிக்கப்படும். மாவட்ட அளவிலான மனமொத்த மாறுதல் உத்தரவு செப்.,14, மாவட்டம் விட்டு மாவட்டத்திற்கான மாறுதல் உத்தரவு செப்.,15ல் வழங்கப்படும், என, பள்ளிக்கல்வித்துறை இயக்குனர் கண்ணப்பன் தெரிவித்துள்ளார்.

Wednesday, September 02, 2015

திறந்தநிலை பல்கலைக்கழகத்தில் அடுத்த ஆண்டு முதல் பி.எஸ்சி. படிப்புகள் அறிமுகம்

தமிழ்நாடு திறந்தநிலை பல்கலைக்கழகத்தில் அடுத்த ஆண்டு முதல் பி.எஸ்சி. அறிவியல் பட்டப் படிப்புகள் அறிமுகம் செய்யப்பட உள்ளன. 2016-17 கல்வியாண்டு முதல் இந்தப் படிப்புகளில் மாணவர் சேர்க்கையையும் பல்கலைக்கழகம் நடத்த உள்ளது. தொலைநிலைக் கல்வி வாயிலாக விலங்கியல், தாவரவியல், வேதியியல், இயற்பியல் தொடர்பான இளநிலை பட்டப் படிப்புகள் தொடங்கப்பட உள்ளன என தமிழக அரசின் உயர் கல்வித் துறை கொள்கை விளக்கக் குறிப்பு 2015-16 இல் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த நிலையில், இந்தப் படிப்புகளைத் தொலைநிலைக் கல்வி முறையில் அறிமுகம் செய்வதற்கான நடவடிக்கைகளைத் தமிழ்நாடு திறந்தநிலைப் பல்கலைக்கழகம் ஏற்கெனவே மேற்கொண்டு தயார் நிலையில் உள்ளது. இதுகுறித்து பல்கலைக்கழகத்தின் துணைவேந்தர் சந்திரகாந்தி ஜெயபாலன் தொலைபேசி மூலம் "தினமணி'க்கு அளித்த பேட்டி: தொலைநிலைக் கல்வி முறையில் பி.எஸ்சி. விலங்கியல், தாவரவியல், வேதியியல், இயற்பியல் படிப்புகளை அறிமுகம் செய்வதற்கான நடவடிக்கைகளை பல்கலைக்கழகம் தீவிரமாக மேற்கொண்டு வருகிறது. இந்தப் படிப்புகளை அறிமுகம் செய்வதற்கு பல்கலைக்கழகத்தின் கல்வி வாரியக் குழு, ஆட்சிமன்றக் குழு ஆகியவற்றின் ஒப்புதலும் பெறப்பட்டு விட்டது. இந்த அறிவியல் படிப்புகளில் இடம்பெறும் செய்முறை பயிற்சிகளை மாணவர்கள் நேரடியாக மேற்கொள்ள வசதியாக அந்தந்தப் பகுதிகளில் உள்ள குறிப்பிட்ட கல்லூரிகளில் ஏற்பாடு செய்து தரப்படும்.

செய்முறைத் தேர்வையும் அந்தக் கல்லூரியிலேயே மாணவர்கள் மேற்கொள்ளலாம். இதற்காக தமிழகம் முழுவதும் பல்வேறு கல்லூரிகளுடன் புரிந்துணர்வு ஒப்பந்தம் மேற்கொள்வதற்கான நடவடிக்கைகளைப் பல்கலைக்கழகம் அடுத்தகட்டமாக எடுக்க உள்ளது. எனவே, அறிவியல் பட்டப் படிப்புகளைத் தொலைநிலைக் கல்வி முறையில் அறிமுகம் செய்வதில் எந்தச் சிக்கலும் இல்லை. 2016-17 கல்வியாண்டு முதல் இந்தப் படிப்புகளில் மாணவர் சேர்க்கை நடத்தப்படும் என்றார். இதுகுறித்து பல்கலைக்கழக மானியக் குழு (யுஜிசி) துணைத் தலைவர் ஹெச். தேவராஜ் கூறியது: அடிப்படை அறிவியல் படிப்புகளை ஏற்கெனவே சில கல்வி நிறுவனங்கள் தொலைநிலைக் கல்வி முறையில் வழங்குவதாக தகவல்கள் தெரியவந்துள்ளது.

அவ்வாறு தொலைநிலைக் கல்வி மூலம் இந்தப் படிப்புகளை நடத்துவது சாத்தியமில்லாத ஒன்று. செய்முறை பயிற்சிகளை மாணவர்கள் முழுமையாகப் பெறுவது கடினம். இதற்கு யுஜிசி அனுமதி வழங்காது. இருந்தபோதும் இதுகுறித்து ஆய்வு மேற்கொள்ளப்படும் என்றார்.

'ஜாக்டோ' கூட்டமைப்பு அக்.8ல் வேலைநிறுத்தம்

பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி அக்., 8ல் ஒருநாள் வேலை நிறுத்தம் செய்ய 'ஜாக்டோ' கூட்டமைப்பு முடிவு செய்துள்ளது.மத்திய அரசுக்கு இணையான ஊதியம், புதிய பென்ஷன் திட்டம் ரத்து, பணி பாதுகாப்பு, 2004 முதல் 2006 வரை தொகுப்பூதியத்தில் நியமிக்கப்பட்ட ஆசிரியர்களுக்கு பணிநியமன நாளில் இருந்து காலமுறை ஊதியம் வழங்க வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி ஆசிரியர் சங்கங்கள் தனித்தனியாக போராடி வந்தன.

இக்கோரிக்கைகளை அரசு நிறைவேற்றாத தால் 27 ஆசிரியர் சங்கங்கள் ஒருங்கிணைந்து 'ஜாக்டோ' அமைப்பு உருவாக்கி, ஆக., 1 ல் சென்னையில் உண்ணாவிரதம் இருந்தன. இதில் எதிர் கட்சித்தலைவர்கள் பங்கேற்றனர். போராட்டம் நடத்தி ஒரு மாதத்திற்கு மேலாகியும் எவ்வித அரசு அறிவிப்பும் இல்லாததால் அக்., 8 ல் ஒரு நாள் வேலைநிறுத்தம் செய்ய 'ஜாக்டோ' கூட்டமைப்பு முடிவு செய்துள்ளது. தமிழ்நாடு பட்டதாரி ஆசிரியர் கழக தலைவர் கிருஷ்ணதாஸ் கூறியதாவது: முதற்கட்டமாக அக்., 8 ல் ஒரு நாள் அடையாள வேலைநிறுத்தத்தில் ஈடுபடுவோம். அரசு கண்டுகொள்ளாவிட்டால் பல கட்ட போராட்டங்களை தொடர்ந்து நடத்து வோம், என்றார்.

பி.எட்., படிக்க இன்று விண்ணப்பம்

பி.எட்., மாணவர் சேர்க்கை விண்ணப்பம், இன்று முதல், 10ம் தேதி வரை, 13 மையங்களில் கிடைக்கும் என, வெலிங்டன் சீமாட்டி கல்வியியல் நிறுவனம் அறிவித்துள்ளது. வரும், 11ம் தேதி மாலை, 5:00 மணிக்குள் விண்ணப்பங்களை தாக்கல் செய்ய வேண்டும். இதற்கான விவரங்கள் மற்றும் விதிமுறைகளை, http://www.ladywillingdoniase.com/ என்ற இணையதளத்தில் அறிந்து கொள்ளலாம்.பி.இ., - பி.டெக்., படித்தோருக்கும், இந்த ஆண்டு முதல், பி.எட்., படிப்பில் சேர அனுமதி வழங்கப்படுகிறது.

மேம்படுத்தப்பட்ட புதிய 1000 ரூபாய் நோட்டு

கள்ள நோட்டு புழக்கத்தை தடுக்கும் வகையில் பாதுகாப்பு அம்சங்களுடன் கூடிய புதிய ஆயிரம் ரூபாய் நோட்டுகளை வெளியிட ரிசர்வ் வங்கி முடிவு செய்துள்ளது. ரூபாய் சின்னத்துடன் 'எல்' என்ற ஆங்கில எழுத்து இணைக்கப்பட்டும், எண்களின் அளவு சிறிய வடிவில் ஆரம்பித்து பெரிய எழுத்தில் முடிக்கும் யுக்தியும் இப்புதிய ரூபாய் நோட்டுகளில் பயன்படுத்தப்படவுள்ளது

Tuesday, September 01, 2015

பத்தாம் வகுப்பு,பன்னிரண்டாம் வகுப்பு காலாண்டுத்தேர்வு அட்டவணை வெளியீடு

பத்தாம் வகுப்பு மற்றும் பிளஸ் 2 வகுப்புகளுக்கான காலாண்டு பொதுத்தேர்வு அட்டவணையை பள்ளிக்கல்வித்துறை அறிவித்துள்ளது. பத்தாம் வகுப்பு அட்டவணை:

செப். 14 - தமிழ் முதல் தாள், 15ம் தேதி - தமிழ் 2ம் தாள், 16ம் தேதி - ஆங்கிலம் முதல்தாள், 18ம் தேதி - ஆங்கிலம் 2ம் தாள், 21ம் தேதி - கணிதம், 23ம் தேதி - அறிவியல், 25ம் தேதி - சமூக அறிவியல். பிளஸ் 2 அட்டவணை: செப். 10 - தமிழ் முதல்தாள், 11ம் தேதி - தமிழ் 2ம் தாள், 14ம் தேதி - ஆங்கிலம் முதல் தாள், 15ம் தேதி - ஆங்கிலம் 2ம் தாள், 16ம் தேதி - வணிகவியல், மனையியல், புவியியல் தேர்வு. செப் 18 - கணிதம், நுண்ணுயிரியல், விலங்கியல், சத்துணவு மற்றும் உணவு வகைப்பாடு, ஆடை வடிவமைப்பு, உணவு மேலாண்மை மற்றும் குழந்தைப் பராமரிப்பு, அரசியல் அறிவியல், நர்சிங், நர்சிங் (பொது), கணக்குப்பதிவியல் மற்றும் தணிக்கை தேர்வுகள்.

செப். 21 - இயற்பியல், பொருளாதாரம், ஜெனரல் மெஷினிஸ்ட், எலக்ட்ரானிக்ஸ் எக்யூப்மென்ட், டிராப்ட்ஸ்மேன் சிவில், எலக்ட்ரிக்கல் மெஷினிஸ், ஆட்டோ மெக்கானிக், டெக்ஸ்டைல் டெக்னாலஜி, ஆபீஸ் மேனேஜ்மென்ட். செப் 22 - தொடர்பு ஆங்கிலம், இந்திய நாகரிகம், கணினி அறிவியல், பயோவேதியியல், புள்ளியியல், பொதுத்தமிழ். செப். 23 - வேதியியல், கணக்குப்பதிவியல். 25ம் தேதி - உயிரியல், தாவரவியல், வரலாறு, வணிக கணிதம். மாநிலம் முழுவதும் செப். 26 முதல் அக். 4 வரை காலாண்டு தேர்வு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. இவ்வாறு பள்ளிகல்வித்துறை அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.

​ஒரே பதிவெண்; ஒருங்கிணைக்கப்பட்ட மதிப்பெண் சான்றிதழ்: அமைச்சர் தகவல்

மேல்நிலை / இடைநிலை தேர்வெழுதும் தேர்வர்களுக்கு ஒவ்வொரு பருவ தேர்வின் போதும் தனித்தனி பதிவெண் வழங்கும் முறைக்கு பதிலாக ஒரு தேர்வருக்கு ஒரே பதிவெண் வழங்கும் புதிய நடைமுறை அறிமுகப்படுத்தப்படும் என்று பள்ளி கல்வித்துறை அமைச்சர் வீரமணி தெரிவித்துள்ளார்.

பள்ளி கல்வித்துறை மீதான மானிய கோரிக்கையின் போது பேசிய அவர், மாணவர்களுக்கான புதிய கற்றல் இணையதளம் அமைக்கப்படும் என்றார். மேலும், 10 மற்றும் 12ம் வகுப்பு மாணவர்களுக்கு ஒருங்கிணைக்கப்பட்ட மதிப்பெண் சான்றிதழ் வழங்கும் திட்டம் அறிமுகப்படுத்தப்படும் என்று அமைச்சர் தெரிவித்தார்.

All india general strike demand s

இன்று நாடு தழுவிய அளவில் போராட்டம் நடத்தும் தொழிற்சங்கங்கள் முன் வைக்கும் கோரிக்கைகள்

#தொழிலாளர் நலச்சட்ட விதிகளை எந்தவித விதிவிலக்கும் இன்றி அமல்படுத்த வேண்டும்

#குறைந்தபட்ச மாத சம்பளம் 15 ஆயிரம் ரூபாய் என நிர்ணயிக்க வேண்டும்

#அமைப்பு சாரா தொழில்துறைக்கு சமூக பாதுகாப்பு வழங்க வேண்டும்

#மோட்டார் வாகனச் சட்டத்திலுள்ள பாதகமாக அம்சங்களை கைவிட வேண்டும்

#அரசுப் பொதுத்துறை நிறுவனங்களை தனியார் மயமாக்கக் கூடாது மற்றும் பொதுத்துறை நிறுவன பங்குகளை தனியாருக்கு விற்பதை நிறுத்த வேண்டும்

#புதிய ஓய்வூதிய திட்டத்தை திரும்பப் பெற வேண்டும்

#விண்ணப்பித்த 45 நாட்களில் தொழிற்சங்கங்களுக்கு அங்கீகாரம் வழங்க வேண்டும்

#விலைவாசி உயர்வைக் கட்டுப்படுத்த வேண்டும்
என்பன உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி தொழிற்சங்கங்கள் வேலைநிறுத்தத்தில் ஈடுபட்டுள்ளன.

பி.இ. முடித்தவர்கள் பி.எட். படிக்கலாமா? அமைச்சர் விளக்கம்

தேசிய ஆசிரியர் கல்வியியல் கவுன்சில் (என்.சி.டி.இ.) வழிகாட்டுதலின் அடிப்படையிலேயே பொறியியல் முடித்தவர்கள் பி.எட். படிப்பில் சேர அனுமதி வழங்கப்படுவதாக உயர் கல்வித் துறை அமைச்சர் பி. பழனியப்பன் கூறினார். சட்டப் பேரவையில் உயர் கல்வித் துறை மானியக் கோரிக்கை மீதான விவாதத்தின்போது, இந்திய கம்யூனிஸ்ட் சட்டப் பேரவை உறுப்பினர் பொன்னுப்பாண்டி பேசுகையில், ""பி.எட். படிப்பை பொறியியல் முடித்தவர்களும் படிக்கலாம் என இம்முறை அறிவிப்பு வெளியிடப்பட்டிருக்கிறது. அப்படியானால், பி.இ. முடிப்பவர்கள் பள்ளிகளில் ஆசிரியராகப் பணியில் சேரமுடியுமா என்ற சந்தேகமும், குழப்பமும் ஏற்படுகிறது'' என்று கூறினார்.

இதற்குப் பதிலளித்து உயர் கல்வித் துறை அமைச்சர் கூறியது: ஆசிரியர் கல்வியியல் (பி.எட், எம்.எட்.) படிப்புகளுக்கான புதிய வழிகாட்டுதலை தேசிய ஆசிரியர் கல்வியியல் கவுன்சில் (என்.சி.டி.இ.) வகுத்து அளித்துள்ளது. அதன் அடிப்படையில், பொறியியல் படிப்பில் இயற்பியல், வேதியியல் போன்ற பாடங்களைத் துணைப் பாடமாக எடுத்துப் படித்தவர்கள் மட்டுமே பி.எட். படிப்பில் சேர அனுமதி அளித்துள்ளது. இந்த புதிய நடைமுறை நிகழாண்டு முதல்தான் நடைமுறைக்கு வர உள்ளது. அவ்வாறு அவர்கள் சேர்ந்து, படித்து முடிக்கின்றபோது பள்ளிகளில் பணிபுரிகின்ற வாய்ப்பு அளிக்கப்படும் என்றார்.

ஆசிரியர் தகுதித்தேர்வு அறிவிப்பு இல்லை

அரசு மற்றும் தனியார் பள்ளிகளில், பல ஆயிரம் ஆசிரியர் பணியிடங்கள் காலியாக உள்ளன; இவற்றில் சேர, எட்டு லட்சம் பட்டதாரிகள் காத்திருக்கின்றனர். ஆனால், ஆசிரியர் தகுதித்தேர்வு மற்றும் நியமனம் குறித்து, பள்ளிக்கல்வித் துறை மானிய கோரிக்கையிலோ, அமைச்சர் பதில் உரையிலோ, அரசு எந்த அறிவிப்பையும் வெளியிடவில்லை.

தமிழகத்தில், 50 ஆயிரம் அரசு, அரசு உதவிபெறும் மற்றும் தனியார் பள்ளிகள் உள்ளன; இவற்றில், 1.50 கோடி மாணவ, மாணவியர் படிக்கின்றனர். இவர்களுக்கு, மத்திய அரசு உத்தரவுப்படி, குறைந்தது, நான்கு லட்சம் ஆசிரியர்கள் தேவை; ஆனால், இதில், 30 சதவீத இடங்களில் ஆசிரியர்கள் இல்லை. காத்திருப்பு: அதேநேரத்தில், ஆசிரியர் பணிக்காக, பி.எட்., மற்றும் எம்.எட்., படித்து விட்டு, எட்டு லட்சம் பேர், தமிழகம் முழுவதும் உள்ள வேலைவாய்ப்பு அலுவலகங்களில் பதிவு செய்து காத்திருக்கின்றனர். இவர்கள், அரசு மற்றும் தனியார் பள்ளிகளில் ஆசிரியராக சேர, மாநில அரசின் ஆசிரியர் தகுதித்தேர்வில், கட்டாயம் தேர்ச்சி பெற வேண்டும்.ஆனால், இரு ஆண்டுகளாக, ஆசிரியர் தகுதித்தேர்வு அறிவிக்கப்படவில்லை.

எனவே, பெரும்பாலான பட்டதாரிகள் தகுதித்தேர்வு எழுதி, தனியார் பள்ளியில் கூட சேர முடியாமல் பாதிக்கப்பட்டுள்ளனர். சட்டசபை தேர்தல் வரும் முன், தமிழக அரசு, புதிதாக ஆசிரியர் தகுதித்தேர்வை அறிவித்து, ஆசிரியர்களை நியமனம் செய்யும் என, பட்டதாரிகள் எதிர்பார்த்திருந்தனர். ஆனால், நேற்றைய பள்ளிக்கல்வித் துறை மானிய கோரிக்கையில், இதுகுறித்து எந்த அறிவிப்பும் வெளியிடப்படாததால், அவர்கள் ஏமாற்றம் அடைந்து உள்ளனர். போட்டி தேர்வு: சிறப்புபாடங்களுக்கு மட்டும், 1,188 பேர் போட்டித் தேர்வு மூலம் தேர்வு செய்யப்படுவர் என, கூறப்பட்டு உள்ளது. .

இதுகுறித்து, அதிகாரிகளிடம் விசாரித்த போது, 'ஆசிரியர் தகுதித்தேர்வில் இட ஒதுக்கீடு மற்றும் மதிப்பெண் சலுகை வழங்குவது தொடர்பான வழக்கு, உச்ச நீதிமன்றத்தில் நிலுவையில் உள்ளதால், புதிய நியமனங்களுக்கு நடவடிக்கை எடுக்க முடியவில்லை' என, தெரிவித்தனர். 1,390 சிறப்பு ஆசிரியர்கள் நியமிக்க நடவடிக்கை:பள்ளிக்கல்வி மானியத்தில், அரசின் கொள்கை குறிப்பில் கூறப்பட்டு உள்ளதாவது: கடந்த நான்கு ஆண்டுகளில், 76 ஆயிரத்து, 338 பாட வாரியான ஆசிரியர் பணியிடங்களில், 72 ஆயிரத்து, 843 பணியிடங்கள், இதுவரை நிரப்பப்பட்டு உள்ளன. பார்வையற்ற இளங்கலை பட்டம் பெற்ற, 654 பேருக்கு, சிறப்பு ஆசிரியர் தகுதித்தேர்வில் பங்கேற்க, பயிற்சி வழங்கப்பட்டது. இதன் தொடர்ச்சியாக, பழங்குடியின பட்டதாரிகள், 906 பேருக்கு, 66 லட்சம் ரூபாய் செலவில், மாநில கல்வியியல் ஆராய்ச்சி மற்றும் பயிற்சி நிறுவனம் சார்பில் பயிற்சி தரப்படும்.மாற்றுத்திறனாளிகளின் இடைநிலை கல்விக்கு, அரசு பள்ளிகளில், 202 சிறப்பு ஆசிரியர் பணியிடங்கள், ஆசிரியர் தேர்வு வாரியம் மூலம் நிரப்பப்படும்.

மேலும், சிறப்பு ஆசிரியர் பணியிடங்களில், பள்ளிக்கல்வி, தொடக்கக் கல்வி உள்ளிட்டவற்றுக்கு, 1,188 பேர் தேர்வு செய்யப்பட உள்ளனர்; இவர்களுக்கு, ஆசிரியர் தேர்வு வாரியம் மூலம், போட்டித்தேர்வு விரைவில் அறிவிக்கப்படும். அரசு கலை, அறிவியல் கல்லுாரிகளுக்கு, 530 விரிவுரையாளர் மற்றும் உதவி பேராசிரியர், இன்ஜி., கல்லுாரிகளுக்கு, 192 உதவி பேராசிரியர், அரசு தொழில்நுட்பக் கல்லுாரிகளுக்கு, 605 உதவி பேராசிரியர் காலியிடங்கள் உள்ளன; இவற்றை நிரப்ப, விரைவில் பணிகள் மேற்கொள்ளப்படும். பள்ளிகளின் நிர்வாக வசதிக்கு, உதவியாளர், இளநிலை உதவியாளர், தட்டச்சர், சுருக்கெழுத்து தட்டச்சர், ஆய்வக உதவியாளர் மற்றும் துப்புரவாளர் போன்ற இடங்களை நிரப்ப, அரசு ஒப்புதல் அளித்துள்ளது.இவ்வாறு அதில் கூறப்பட்டு உள்ளது.

Monday, August 31, 2015

தள்ளாடுது எஸ்.எஸ்.ஏ. சர்ச்சையில் ஆர்.எம்.எஸ்.ஏ., கல்வித் திட்டங்களுக்கு விரயமாகிறதா மத்திய அரசு நிதி

கல்வித்துறையில் கட்டாய கல்வி, மாணவர் கற்றல் திறன், பள்ளிகளின் அடிப்படை கட்டமைப்புகளை மேம்படுத்தும் நோக்கத்தில், அனைவருக்கும் கல்வித் திட்டம் (எஸ்.எஸ்.ஏ.,) மற்றும் அனைவருக்கும் இடைநிலைக் கல்வித் திட்டங்கள் (ஆர்.எம்.எஸ்.ஏ.,) ஏற்படுத்தப்பட்டன.முறையே 2002 மற்றும் 2009ம் ஆண்டுகளில் நடைமுறைக்கு வந்த இத்திட்டங்களுக்கு ஆண்டிற்கு ரூ.ஆயிரம் கோடிக்கு மேல் மத்திய அரசு, மாநில அரசுகள், 75:25 விகிதத்தில் நிதி ஒதுக்கீடு செய்கின்றன.

ஆனால் இத்திட்டங்கள் செயல்பாடு குறித்து பல சர்ச்சைகள் எழுந்துள்ளன.குறிப்பாக, எஸ்.எஸ்.ஏ., திட்டத்தில் பல்வேறு மாற்றங்கள் நிகழ்ந்து வருவதால் ஆசிரியர்கள் அதிருப்தி அடைந்து வருகின்றனர். தள்ளாட்டம்: மாணவர்கள் கற்றல் திறனை ஆய்வு செய்து மேம்படுத்துவதற்காக மாநில அளவில், 380 வட்டார வள மையங்கள் (பிளாக் ரிசோர்ஸ் சென்டர்ஸ்) உருவாக்கப்பட்டன. இவற்றை கண்காணிக்க மேற்பார்வையாளர் நியமிக்கப்பட்டனர். ஆனால், நிதிப் பற்றாக்குறை எனக் காரணம் காட்டி, 2013ம் ஆண்டில் இப்பணியிடங்களில் இருந்தவர்கள் கல்வித்துறைக்கு மாற்றம் செய்யப்பட்டனர்.

மாவட்ட அளவில் திட்டங்களை கண்காணிக்கும் கூடுதல் முதன்மை கல்வி அலுவலர்கள் நியமிக்கப்பட்டனர். ஆனால் தற்போது, 11 மாவட்டங்களில் இப்பணியிடங்கள் காலியாக உள்ளன. இவற்றை நிரப்ப இதுவரை நடவடிக்கை இல்லை.சர்ச்சையில் ஆர்.எம்.எஸ்.ஏ.,: இதேபோல் நடப்பாண்டில் ஆர்.எம்.எஸ்.ஏ., திட்டத்தில், 200 பள்ளிகளுக்கு மட்டுமே இதுவரை வகுப்பறை வசதி ஏற்படுத்தப்பட்ட நிலையில், 1250 தொடக்க மற்றும் உயர்நிலை பள்ளிகளுக்கு வகுப்பறை வசதி இல்லை. ஆனால் கட்டட வசதி ஏற்படுத்துவதற்கு முன்பே மாணவர் அமர 'ஸ்டீல் பெஞ்ச்' வசதி, புத்தகம் மற்றும் அலமாரி வசதிகள் பள்ளிகளில் மேற்கொள்ள ஆர்வம் காட்டுகின்றனர். இதுகுறித்து தலைமையாசிரியர்கள் சிலர் கூறியதாவது:'

ஸ்டீல் பெஞ்ச்' ஒன்று, ரூ.10 ஆயிரம் வீதம் ஒரு பள்ளிக்கு 40 'ஸ்டீஸ் பெஞ்ச்கள்' வாங்க அதிகாரிகள் வற்புறுத்துகின்றனர். ஆனால், அவற்றின் தரத்தை ஒப்பிட்டால் ரூ.5 ஆயிரம் கூட மதிப்பிட முடியவில்லை. அதேபோல் ஆண்டிற்கு ரூ.25 ஆயிரத்திற்கு நுாலகங்களுக்கான புத்தகங்கள் வாங்க அறிவுறுத்தப்படுகிறது. ஆனால் மாணவர்களுக்கு தேவையான புத்தகங்களை வாங்க முடியவில்லை. அதிகாரிகள் குறிப்பிடும் புத்தகங்களை மட்டும் தான் வாங்கமுடிகிறது. அறிவியல் ஆய்வக உபகரணங்கள் வாங்கும் விஷயத்திலும் தலையீடு உள்ளது என்றனர். இத்திட்டங்களுக்கு ஒதுக்கப்படும் நிதியை ஏனோதானோ என பயன்படுத்தாமல் மாணவர் நலன், பள்ளி மேம்பாட்டிற்காக பயன்படுத்தும் வகையில், இன்று (செப்.,1) நடக்கும் கல்வி மானிய கோரிக்கையில் வழிகாட்டுதல்களை அரசு அறிவிக்க வேண்டும் என ஆசிரியர்கள், கல்வியாளர்கள் எதிர்பார்க்கின்றனர்

தேசிய திறனாய்வு தேர்வுக்கு விண்ணப்பிக்க அவகாசம்

பத்தாம் வகுப்பு முடித்த மாணவர்கள், பிளஸ் 1, பிளஸ் 2 படிக்கும் போது, மாதம், 1,250 ரூபாய்; பட்டம் மற்றும் பட்ட மேற்படிப்பு படிக்கும் போது, மாதம், 2,000 ரூபாய் கல்வி உதவித்தொகை, மத்திய அரசால் வழங்கப்படுகிறது.இதற்கான நுழைவுத் தேர்வு, முதலில் மாநில அளவில் நடக்கும். அதில் தேர்ச்சி பெறுவோருக்கு, தேசிய அளவில் தேர்வு நடக்கும்.

மாநில தேர்வு, தமிழகத்தில், நவ., 8ம் தேதி நடக்கிறது. இதற்கான அறிவிப்பை, பள்ளிக் கல்வித்துறையின் அரசுத் தேர்வுகள் துறை அறிவித்துள்ளது. தேர்வு எழுத விரும்புவோர், பள்ளி தலைமை ஆசிரியர் மூலம் விண்ணப்பிக்க வேண்டும். 'விண்ணப்பம் சமர்ப்பிப்பதற்கான அவகாசம், வரும், 5ம் தேதி வரை நீட்டிக்கப்பட்டுள்ளது. தலைமை ஆசிரியர்கள், வரும், 10ம் தேதி வரை, விண்ணப்பங்களை பதிவேற்றம் செய்யலாம்' என, தேர்வுத்துறை இயக்குனர் (பொறுப்பு) வசுந்தரா தேவி தெரிவித்துள்ளார்

377 ஆசிரியர்கள்ராதாகிருஷ்ணன் விருதுக்கு தேர்வு

மறைந்த முன்னாள் ஜனாதிபதி ராதாகிருஷ்ணனின் பிறந்த நாளான, வரும், 5ம் தேதி, ஆசிரியர் தினம் கொண்டாடப்படுகிறது. இந்த தினத்தில், ஒவ்வொரு ஆண்டும் சிறந்த ஆசிரியர்களை தேர்வு செய்து, அவர்களுக்கு, டாக்டர் ராதாகிருஷ்ணன், 'நல்லாசிரியர்' விருது வழங்கப்படுகிறது. இந்த ஆண்டு, தமிழகம் முழுவதுமுள்ள பல பள்ளிகளில் பணியாற்றும், 377 ஆசிரியர்கள், ராதாகிருஷ்ணன் விருதுக்கு தேர்வாகியுள்ளனர். தொடக்கப் பள்ளி, 201; உயர்நிலை மற்றும் மேல்நிலைப் பள்ளி, 134; மெட்ரிக், 30; ஆங்கிலோ இந்தியன் பள்ளி, இரண்டு; கல்வி ஆராய்ச்சி மற்றும் பயிற்சி நிறுவன ஆசிரியர்கள், 10 பேர் தேர்வு செய்யப்பட்டுள்ளனர்.-