அடுத்த வருடம் எஸ்.எஸ்.எல்.சி., பிளஸ்-2 படிக்கப்போகும் மாணவர்களுக்கு கோடை விடுமுறையிலும் அரசு பள்ளிகளில் வகுப்பு தொடங்கியது.
2 வருடம் பாடம் படிப்பு
தமிழ்நாட்டில் சில மாவட்டங்களில் சில தனியார் பள்ளிகளில் 8-வது வகுப்பு தேர்ச்சி பெற்ற மாணவர்கள் 9-வது வகுப்பு பாடங்களை படிக்காமல் எஸ்.எஸ்.எல்.சி. பாடங்களையும், எஸ்.எஸ்.எல்.சி. தேர்ச்சி பெற்ற மாணவர்கள் 11-வது வகுப்பு பாடங்களை படிக்காமல் நேரடியாக பிளஸ்-2 பாடங்களையும் படிக்க வைக்கப்படுகிறார்கள்.
இந்த சம்பவம் கடந்த பல வருடங்களாக நடக்கிறது. அதாவது ஒரு வருட பாடங்களை 2 வருடம் படிக்கும் இந்த பள்ளிகளில் மாணவர் சேர்க்கை கிடைப்பது மிக சிரமம். அதுபோல கல்வி கட்டணமும் அந்த பள்ளிகளில் அதிகம். 2 வருடம் ஒரே பாடங்களை படிப்பதால் பெரும்பாலும் இந்த பள்ளி மாணவர்கள்தான் எஸ்.எஸ்.எல்.சி. மற்றும் பிளஸ்-2 தேர்வுகளில் மாநில, மாவட்ட அளவில் முதல் இடம் பெற்று வருகிறார்கள்.
உயர்கல்வியில்மிளிர முடியவில்லை
ஆனால் அந்த பள்ளிகளில் படிக்கும் பெரும்பாலான மாணவர்கள் புரிந்து படிக்காத காரணத்தால் அண்ணா பல்கலைக்கழக வளாகத்தில் உள்ள கிண்டி என்ஜினீயரிங் கல்லூரியில் பி.இ. சேர்ந்தவர்கள்கூட கணிதத்தேர்வில் தோல்வி அடைகிறார்கள். காரணம் இவர்கள் 11-வது வகுப்பு கணிதத்தை படிக்காதது என்று கூறப்படுகிறது. அதாவது இந்த மாணவர்களால் உயர் கல்வியில் பிரகாசிக்க முடியவில்லை.
இந்த பள்ளிகளின் நடவடிக்கைகளை பார்த்து தமிழ்நாட்டில் உள்ள பெரும்பாலான தனியார் மெட்ரிகுலேசன் பள்ளிகளில் 9-வது வகுப்பு பாடம் நடத்துகிறார்கள். 11-வது வகுப்பையும் நடத்துகிறார்கள். ஆனால் அவர்கள் கோடை விடுமுறையில் ஒரு மாதம் மட்டும் எஸ்.எஸ்.எல்.சி., பிளஸ்-2 படிக்கப்போகும் மாணவர்களுக்கு பாடத்தை நடத்துகிறார்கள்.
அரசு பள்ளிகளில் வகுப்பு தொடங்கியது
இதை அறிந்த அரசு பள்ளி தலைமை ஆசிரியர்கள் நாமும் கோடை விடுமுறையில் வகுப்பு நடத்தலாம் என்று கருதி தமிழ்நாட்டில் உள்ள அரசுப்பள்ளிகளில் அடுத்த வருடம் பிளஸ்-2 படிக்கப்போகும் மாணவ-மாணவிகளுக்கு பாடம் நடத்த முடிவு செய்துள்ளனர். சில பள்ளிகளில் காலை 9 மணி முதல் பகல் 12 மணிவரை நடத்தப்படுகின்றன. இது குறித்து மாணவர்கள் கூறியதாவது:-
பிளஸ்-2 பாடம் எடுக்கும் வகுப்பு கோடை விடுமுறையில் தொடங்கி உள்ளது. ஒருவாரம் வேதியியல் பாடம் நடத்த திட்டமிட்டு வேதியியல் தொடங்கி உள்ளனர். அடுத்த வாரம் கணிதம் நடத்த உள்ளனர். அதற்கு அடுத்தவாரம் இயற்பியல் நடத்த இருக்கிறார்கள். ஏப்ரல் 22-ந்தேதி வரை வகுப்பு நடத்தப்பட இருக்கிறது. ஆனால் இந்த முறை அனைத்து பள்ளிகளிலும் அல்ல. சில பள்ளிகளில் மட்டுமே நடைமுறைக்கு வந்துள்ளது.
இவ்வாறு மாணவர்கள் தெரிவித்தனர்.