இலவச SMS களை உடனுக்குடன் பெற ON tnptfmani என்று type செய்து 9870807070 என்ற எண்ணிற்கு அனுப்பி இலவச குறுந்தகவல்களை(SMS) பெறுங்கள். DND (Do NOT Disturb) சர்வீஸ்ல் உள்ள எண்கள் அதனை(DND) நீக்கிய பிறகே இச்சேவையை பெறமுடியும். plz call 1909

Monday, November 17, 2014

பதிவு செய்தும் இன்னும் ஆதார் அட்டை கிடைக்கலையா? "ஆன்-லைனில்' பதிவிறக்கம் செய்ய வசதி dinamalar


உடற்கூறுகள் பதிவு செய்தவர்களில் இன்னும் பலருக்கு அடையாள அட்டை கிடைக்கவில்லை என்ற புகார் எழுந்துள்ளது. அதனால், "ஆன்-லைன்' மூலமாக, ஆதார் அட்டையை பதிவிறக்கம் செய்து
கொள்ளக்கூடிய வசதி ஏற்படுத்தப்பட்டுள்ளது, என, அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

திருப்பூர் மாவட்டத்தில், கடந்தாண்டு ஜூலை மாதம், தேசிய மக்கள் தொகை பதிவேடு மற்றும் ஆதார் அடையாள அட்டைக்கான பதிவு முகாம் நடைபெற்றது. ஏழு தாலுகாக்களிலும் முதல்கட்ட முகாம் நிறைவடைந்தது. மக்கள் குடிபெயர்வது அதிகமாக இருந்ததால், ஆதார் பதிவில் விடுபட்டவர்கள் எண்ணிக்கை அதிகரித்தது. விடுபட்டவர்களுக்காக இரண்டாம் கட்ட முகாம், பிப்., மாதம் துவங்கும் என்று அறிவிக்கப்பட்டது. கிராம நிர்வாக அலுவலகங்கள் மற்றும் வரி வசூல் மையங்களில் படிவம் பெற்று, விண்ணப்பிக்க அறிவுறுத்தப்பட்டது.
விடுபட்டவர்களும், அதன்படி விண்ணப்பித்துள்ளனர்.

திருப்பூர் மாவட்டத்தில் கண்டறியப்பட்ட 23 லட்சம் பேரில், 15 லட்சத்து 700 பேரிடம் முதல்கட்ட பதிவு முடிந்துள்ளது. உடற்கூறு பதிவு செய்தவர்களுக்கு, இரண்டு மாதங்களுக்குள் தபால் மூலம் ஆதார் அட்டை அனுப்பி வைக்கப்படுகிறது. மொபைல் எண் கொடுத்திருந்தால், எஸ்.எம்.எஸ்., மூலம் தகவல் தெரிவிக்கவும் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. முறையாக பதிவு செய்தவர்கள், தபாலுக்காக காத்திருக்காமல், "ஆன்-லைன்' மூலமாக அட்டைகளை பதிவிறக்கம் செய்து கொள்ளலாம், என, அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
ஆதார் அட்டை பதிவு திட்ட அதிகாரிகள் கூறியதாவது:

ஆதார் அட்டை பெற வேண்டியவர்கள், http://resident.uidai.net.in/web/resident/ chekaadhaarstatus என்ற இணைதளமுகவரியில் சென்று, தங்களது கார்டு விவரங்களை தெரிந்து கொள்ளலாம். பதிவை உறுதி செய்தபின், http://eaadhaar.uidai.gov.in என்ற முகவரியில், தங்களின் ஆதார் அட்டையை பதிவிறக்கம் செய்து கொள்ளலாம்.ஆதார் அட்டையில் தவறான விவரங்கள் பதிவாகியிருந்தால், http://resident.net.in /updatedata என்ற இணையதள முகவரிக்கு சென்று, விவரங்களை சரிசெய்து, பிறகு பதிவிறக்கம் செய்து கொள்ளலாம். ஒவ்வொருவருக்கும், பிரத்யேக ஆதார் எண் வழங்கப்படுவதால், "ஆன்-லைனில்' பதிவிறக்கம் செய்வதில் பிரச்னை வராது. ஆதார் விவரங்களை தெரிந்துகொள்ள, 1800 300 1947 என்ற கட்டணமில்லா எண்ணை தொடர்பு கொள்ளலாம்.இவ்வாறு, அவர்கள் கூறினர்.

எஸ்.எம்.எஸ்., வசதி : பதிவு செய்தும், ஆதார் அட்டை கிடைக்காதவர்கள், மொபைலில் uid என டைப் செய்து ஒரு இடைவெளி விட்டு, status என டைப் செய்து, முகாமில் வழங்கப்பட்ட ஒப்புகை சீட்டில் உள்ள 14 இலக்க எண்ணை டைப் செய்து, 51969 என்ற எண்ணுக்கு எஸ்.எம்.எஸ்., அனுப்ப வேண்டும். அரை மணி நேரத்துக்குள், ஆதார் அட்டை குறித்த தகவல் எஸ்.எம்.எஸ்., வாயிலாக அனுப்பி வைக்கப்படும். இதுவரை பதிவு செய்யாதவர்கள், வரும் ஜன., மாதம் அந்தந்த தாலுகா அலுவலகங்களில் விண்ணப்பித்து, பதிவு செய்து, அட்டை பெற்றுக்கொள்ளலாம், என, அதிகாரிகள் மேலும் தெரிவித்தனர்.

பள்ளிகளில் அதிகரிக்கும் வன்முறை; மாணவர்களுக்கு சிறப்பு ‘கவுன்சிலிங்’


பள்ளி மாணவர்கள் மத்தியில், அதிகரிக்கும் வன்முறைகளை தவிர்க்க, பிரச்னைகளுக்குரிய மாணவர்களை கண்டறிந்து தனித்தனியாக சிறப்பு கவுன்சிலிங் வழங்க, கல்வித்துறை திட்டமிட்டுள்ளது.

தமிழகத்தில், பள்ளி மாணவர்கள் மத்தியில், சினிமா, ’டிவி’, மொபைல் போன், இன்டர்நெட் உள்ளிட்ட, பல்வேறு காரணங்களால், வன்முறை சம்பவங்கள் அதிகரித்து வருகின்றன. கடந்த சில ஆண்டுகளில், மாணவர்கள் ஈடுபடும் குற்றச்சம்பவங்கள், பெருமளவில் அதிகரித்துவிட்டது.

மாணவர்களிடையே ஏற்பட்டுள்ள திடீர் வன்முறை எண்ணங்களால், பெற்றோர்களும், சமூக ஆர்வலர்களும் அதிர்ச்சியடைந்துள்ளனர். சாதாரண பிரச்னைகளுக்கு கூட, மாணவர்கள் வன்முறையிலும், கொலைவெறித் தாக்குதலிலும் ஈடுபடும் காரணத்தை அறிந்து, உடனடி தீர்வு காண வேண்டிய சூழல் ஏற்பட்டுள்ளது.

கோவை மாவட்டத்தில், 1300க்கும் மேற்பட்ட அரசு, அரசு உதவிபெறும், தனியார் பள்ளிகள் செயல்பட்டு வருகின்றன. இதில், ஆறு லட்சம் மாணவர்கள் படித்து வருகின்றனர். பள்ளி ஆசிரியரை தாக்குதல், மிரட்டுதல் போன்ற சம்பவங்கள் கோவை மாவட்டத்திலும், ஆங்காங்கே அரங்கேறி வருகின்றன. குறிப்பாக, உயர்நிலை மேல்நிலைப்பள்ளி மாணவர்களிடம் வன்முறை சம்பவங்கள் தலை தூக்குவதை காணமுடிவதாக, ஆசிரியர்கள் கவலை தெரிவித்துள்ளனர்.

மாணவர்களை பென்சில், பேனாவால் குத்துதல், விளையாட்டு பாடவேளை நேரங்களில், திட்டமிட்டு பந்தால் எறிந்து தாக்குதல் போன்ற செயல்களில் ஈடுபடுவதாகவும் பெற்றோர் தரப்பில் புகார் செய்யப்படுகிறது. இதில், மாணவியரும் விதிவிலக்கல்ல.

கல்விக் கூடங்களில் வன்முறை கலாசாரத்தை தடுக்கும் முயற்சியில், நடமாடும் உளவியல் ஆலோசனை மையத்தின் மண்டல உளவியல் நிபுணர் உதவியோடு மாணவர்களுக்கு, ’சிறப்பு கவுன்சிலிங்’ வழங்கப்பட்டு வருகிறது.

ஒரு சில பள்ளிகளில் ஆசிரியர், தலைமையாசிரியர் மற்றும் மாணவர்கள் மத்தியில் சரியான உறவுமுறை அமையாததன் காரணமாக, மாணவர்களின் மனப்போக்கு மாறுவதுடன், கல்வித்தரமும் பாதிக்கப்படுகின்றது.

மண்டல உளவியல் நிபுணர் அருள்ஜோதி கூறுகையில்,”மாணவர்கள் மத்தியில், கவனிக்கும் தன்மை குறைந்து வருகிறது. பல்வேறு பயிற்சிகள் வழங்கப்பட்ட பின்பே, மாணவர்களின் கவனத்தை ஒருங்கிணைக்க முடிகிறது. குறிப்பாக, உயர்நிலை, மேல்நிலைப்பள்ளி மாணவ, மாணவிகளிடம் சிறிய அளவிலான வன்முறை சம்பவங்களை தொடர்ந்து காண முடிகிறது. இதை கண்டுகொள்ளாமல் விடும் பட்சத்தில், பெரும் விளைவுகளை எதிர்கொள்ள வேண்டியுள்ளது.

தற்போது, சில பள்ளிகளில் தலைமையாசிரியர்கள், ஆசிரியர்கள் மத்தியில் காணப்படும் முரண்பாடுகள் மாணவர்களிடம் தாக்கத்தை ஏற்படுத்துகிறது. இதனால், ஆசிரியர்களுக்கு பயிற்சிகள் வழங்கி வருகிறோம். மாணவர்கள் மத்தியில், சிறிதளவில் உருபெற்றிருக்கும் வன்முறைகளை களைய, அனைத்து பள்ளிகளிலும், பிரச்னைகளுக்குரிய மாணவர்களை கண்டறிந்து தனிப்பட்ட முறையில் கவுன்சிலிங் வழங்க திட்டமிட்டுள்ளோம்.

மேலும், பெற்றோர்களின் பங்களிப்பு மிகவும் வருத்தமளிக்கும் வகையில் உள்ளது. தங்களது பிள்ளைகளின் நிலையை அறிந்துகொள்ள பள்ளிக்கு அழைத்தாலும், வருவதில்லை. இதுபோன்ற குடும்பச் சூழலே பெரும்பாலான பிள்ளைகளுக்கு அதிகப்படியான வன்முறை உணர்வுகளை தூண்டுகின்றது. இவ்வாறு, அவர் தெரிவித்தார்.

Sunday, November 16, 2014

தனியார் நர்சிங் கல்லூரிகளில் படித்தவர்களுக்கும் அரசு வேலை: உச்சநீதிமன்றம் அதிரடி உத்தரவு


தனியார் நர்சிங் கல்லூரிகளில் படித்தவர்கள், அரசு மருத்துவமனைகள் மற்றும் ஆரம்ப சுகாதார நிலையங்களில் பணியில் அமர்த்தப்படுவர் என்ற, தமிழக அரசின் உத்தரவு சரியானதே என, உச்ச நீதிமன்றம் திட்டவட்டமாக தெரிவித்துள்ளது.

தனியார் நர்சிங் கல்லூரிகளில் படித்தவர்களை விட, அரசு நர்சிங் கல்லூரிகளில் படித்தவர்களுக்கு, பணி நியமனத்தின்போது, முன்னுரிமை வழங்க வேண்டும் என்ற கோரிக்கையை ஏற்க முடியாது எனவும் உச்ச நீதிமன்றம் கூறிவிட்டது.

சம அளவில்

கடந்த 2012ல், தமிழக அரசு உத்தரவு ஒன்றைப் பிறப்பித்தது. அதில், தனியார் நர்சிங் கல்லூரிகளில் படித்தவர்களும், அரசு மருத்துவமனைகள் மற்றும் ஆரம்ப சுகாதார நிலையங்களில் பணி அமர்த்தப்படுவர் என தெரிவிக்கப்பட்டது. இதன்மூலம், அரசு நர்சிங் கல்லூரிகளில் படித்த மாணவியரும், தனியார் நர்சிங் கல்லூரிகளில் படித்த மாணவியரும், சம அளவில், அரசுப் பணி நியமனம் பெற வழிவகை செய்யப்பட்டது.

தமிழக அரசின் இந்த உத்தரவை எதிர்த்து, சென்னை உயர் நீதிமன்றத்தில், அரசு நர்சிங் கல்லூரி மாணவியர் வழக்கு தொடர்ந்தனர். அந்த வழக்கு தள்ளுபடி செய்யப்பட்டது. ஆனாலும், சென்னை உயர்நீதிமன்ற தீர்ப்பை எதிர்த்து, உச்ச நீதிமன்றத்தில் அப்பீல் மனு தாக்கல் செய்தனர்.

மனுவை விசாரித்த நீதிபதிகள் பிறப்பித்த உத்தரவு: அரசு மருத்துவமனைகள் மற்றும் ஆரம்ப சுகாதார நிலையங்களுக்கு, செவிலியர்களை நியமனம் செய்யும்போது, அரசு நர்சிங் கல்லூரிகளில் படித்த மாணவியருக்கு மட்டுமே, முன்னுரிமை வழங்கினால், அது, மற்ற துறைகளின் நியமனங்களிலும் பாதிப்பை ஏற்படுத்தி விடும்.

குழப்பம் ஏற்படும்

நர்சிங் மாணவியர் கேட்பதுபோல, அரசு மருத்துவக் கல்லூரிகளில் படித்தவர்கள், தங்களுக்கு மட்டுமே அரசு மருத்துவமனைகளில் வேலை தர வேண்டும் என்றும், அரசு சட்டக் கல்லூரியில் படித்தவர்கள், தாங்கள் மட்டுமே நீதிபதியாக வேண்டும் என்றும் கேட்க ஆரம்பித்தால், குழப்பம்தான் ஏற்படும். அரசு கல்லூரிகளில் படித்தவர்களுக்கு மட்டுமே முன்னுரிமை தர ஆரம்பித்தால், தனியார் கல்லூரிகளில் படித்தவர்கள் எல்லாம், வேலைவாய்ப்புக்கு எங்கே போவது என்ற நிலையும் உருவாகும்.

எனவே, அரசு மருத்துவமனைகளுக்கான செவிலியர் பணி நியமனங்களின்போது, அரசு நர்சிங் கல்லூரிகளின் மாணவியருக்கே, முன்னுரிமை வழங்க வேண்டும் என்ற கோரிக்கையை ஏற்க முடியாது. அரசு மற்றும் தனியார் நர்சிங் கல்லூரிகள் என, இரண்டையும் சமமாகவே கருத முடியும். அரசு பணி நியமனங்களின்போது, இரு தரப்பினருக்கும், சமமான வாய்ப்பு வழங்கிட வேண்டும். இவ்வாறு நீதிபதிகள் உத்தரவிட்டனர்.

சிரமப்பட்டு பயிற்சி பெறுகின்றனர்

வழக்கு விசாரணையின்போது, அரசு நர்சிங் கல்லூரி மாணவியர் தரப்பில் ஆஜரான வழக்கறிஞர் முன்வைத்த வாதம்: தனியார் கல்லூரிகளில், எளிதாக இடம் கிடைத்து விடுகிறது. ஆனால், அரசு நர்சிங் கல்லூரிகளில், விதிமுறைகளுக்கு உட்பட்டு இடம்பெற்று, மிகுந்த சிரமப்பட்டு பயிற்சி பெறுகின்றனர். மேலும், அரசு நர்சிங் கல்லூரிகளில் படிப்பவர்களே, அரசு மருத்துவமனைகளுக்கு அதிகம் சென்று பணிபுரிகின்றனர்.

அதனால், அதிக அளவில் பயிற்சி பெற்று, கூடுதல் தகுதிகளுடன் இருக்கின்றனர். நர்சிங் பயிற்சியின்போதே, அரசுக்காக வேலை செய்து, அரசோடு சேர்ந்து செயல்படுகின்றனர். எனவே, அரசு பணி நியமனங்களின்போது, அரசு நர்சிங் கல்லூரி மாணவியருக்கே முன்னுரிமை வழங்க வேண்டும். இவ்வாறு அவர் வாதிட்டார்.

Saturday, November 15, 2014

பயனளிக்காத புதிய பென்ஷன் திட்டம்: ஆசிரியர் குடும்பங்கள் பாதிப்பு

புதிய திட்டத்தில் சேர்ந்து ஓய்வு பெற்ற மற்றும் உயிரிழந்த, 326 ஆசிரியர்களுக்கு பணப்பலன் கிடைக்காததால் அவர்களது குடும்பத்தினர் பாதிக்கப்பட்டுள்ளனர். புதிய ஓய்வூதிய திட்டம் 2003 ஏப்., 1ல் இருந்து செயல்படுத்தப்பட்டு வருகிறது. இதுவரை, இரண்டு லட்சம் அரசு ஊழியர்கள், ஆசிரியர்கள் சேர்க்கப்பட்டுள்ளனர்.

ஊதியத்திற்கு தகுந்தாற்போல் கருவூலத்திலிருந்து மாதந்தோறும் பணம் பிடித்தம் செய்யப்படுகிறது. இந்த திட்டத்தில் சேர்ந்து 2009 க்கு பின் ஓய்வு பெற்ற மற்றும் உயிரிழந்த அரசு ஊழியர்கள், ஆசிரியர்களுக்கு இதுவரை எந்தவித பணப்பலனும் வழங்கப்படவில்லை. தகவல் உரிமைச்சட்டத்தின் கீழ் பெறப்பட்ட தகவல் அடிப்படையில் தொடக்கல்வித்துறையில் ஓய்வுபெற்ற மற்றும் உயிரிழந்த, 79 ஆசிரியர்களுக்கும் பள்ளிக்கல்வித்துறையில் ஓய்வு பெற்ற மற்றும் உயிரிழந்த, 247 ஆசிரியர்களுக்கும் பணப்பலன் வழங்கப்படவில்லை என்பது தெரியவந்துள்ளது.

ஓய்வுபெற்ற ஆசிரியர்களும், உயிரிழந்த ஆசிரியர்களின் குடும்பத்தினரும் பாதிக்கப்பட்டுள்ளனர். தகவல் உரிமை சட்டத்தின் கீழ் தகவல் பெற்ற திண்டுக்கல்லை சேர்ந்த வழக்கறிஞர் ஜெபஜேம்ஸ் கூறியதாவது: பொதுநல நோக்கத்துடன் தகவல்களை கேட்டு பெற்றேன். புதிய ஓய்வூதிய திட்டத்தில் பணப்பலன் கொடுப்பது தொடர்பாக எந்த அரசு உத்தரவும் வழங்கப்படவில்லை என அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். அரசு ஊழியர்கள், ஆசிரியர்களிடம் இருந்து பிடித்தம் செய்த பணத்தை கூட வழங்காதது அதிர்ச்சியாக உள்ளது. இவ்வாறு அவர் கூறினார்.

அரசு பள்ளியில் 10 மதிப்பெண் வாங்கினால் பிளஸ் 1 'பாஸ்': உதவிபெறும் பள்ளியில் 60 வாங்க வேண்டுமாம்

பிளஸ் 1 தேர்ச்சி மதிப்பெண் நிர்ணயத்தில், பள்ளிகளுக்கிடையே, அதிக முரண்பாடு இருப்பது, தகவல் அறியும் உரிமை சட்டத்தின் மூலம், அம்பலமாகி உள்ளது. அரசு பள்ளிகளில், பாடத்திற்கு, 10 மதிப்பெண் வீதம் வாங்கினால், பிளஸ் 1 பாஸ் எனும் நிலையில், அரசு உதவிபெறும் பள்ளிகளில், 40 முதல் 60 மதிப்பெண் வரை நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

பிளஸ் 1 வகுப்பில், பொதுவாக மாணவர்களை, அதிகளவில் தோல்வி அடைய செய்வதில்லை. வருகைப் பதிவேடு மற்றும் பாடங்களில், ஓரளவிற்கு மதிப்பெண் பெற்றிருந்தால், 'பாஸ்' போட்டு விடுகின்றனர். இந்த நிலை, அரசு பள்ளிகளிலும், மெட்ரிக் பள்ளிகளிலும் மட்டுமே காணப்படுகின்றன. அரசு உதவிபெறும் பள்ளிகளில், பாடத்திற்கு, 40; 50; 60 மதிப்பெண் என, நிர்ணயித்து, மாணவர்களை, அதிகளவில், தோல்வி அடையச் செய்கின்றனர் என்ற அதிர்ச்சித் தகவல், தகவல் அறியும் உரிமை சட்டத்தின் மூலம், அம்பலத்திற்கு வந்துள்ளது. பிளஸ் 1 வகுப்பில், மாணவர் தேர்ச்சிக்கான மதிப்பெண்ணை, அனைத்து பள்ளிகளுக்கும் பொருந்தும் வகையில், பள்ளி கல்வித்துறை, எந்த அளவுகோலையும் நிர்ணயிக்கவில்லை.

மாறாக, அந்தந்த பள்ளி ஆசிரியர் குழுவே, தேர்ச்சிக்கான மதிப்பெண்ணை நிர்ணயிக்கிறது. அரசு உதவி பெறும் பள்ளிகள், பிளஸ் 2 தேர்வில், 100 சதவீத தேர்ச்சியில் குறை வந்துவிடக் கூடாது என்பதற்காக, சுமாராக படிக்கக் கூடிய மாணவர்களை, பிளஸ் 1 வகுப்பிலேயே, வடிகட்டுவது, தற்போது தெரிய வந்துள்ளது. சென்னையைச் சேர்ந்த வழக்கறிஞர், முத்தரசன், தகவல் அறியும் உரிமை சட்டத் தின் மூலம், அரசு மற்றும் உதவிபெறும் பள்ளிகளின் வெவ்வேறு வகையான மதிப்பெண் நிலவரத்தை அறிந்துள்ளார். அவர் கூறியதாவது:

சென்னை, ஷெனாய் நகரில் உள்ள சென்னை பெண்கள் மேல்நிலைப் பள்ளியில், 2012 13ம் கல்வி ஆண்டில், பிளஸ் 1 தேர்ச்சிக்கு, ஆங்கிலம், இயற்பியல் உள்ளிட்ட சில பாடங்களுக்கு, தலா , 10 மதிப்பெண் நிர்ணயித்துள்ளனர். கணிதம், வணிகவியல் போன்ற பாடங்களுக்கு, 15 மதிப்பெண் என, நிர்ணயித்துள்ளனர். ராயப்பேட்டையில் உள்ள, வெஸ்லி மேல்நிலைப் பள்ளியில், தலா, 40 மதிப்பெண் என்றும், வில்லிவாக்கம், சிங்காரம்பிள்ளை மேல்நிலைப்பள்ளியில், தலா, 60 மதிப்பெண் என்றும் நிர்ணயித்துள்ளனர். அரசு பள்ளிகளில், 10 மதிப்பெண் முதல், 15 மதிப்பெண் வரை தான் உள்ளது. உதவி பெறும் பள்ளிகளில் மட்டும், 40 மதிப்பெண், 60 மதிப்பெண் என, நிர்ணயிப்பது, எந்த வகையில் நியாயம். உதவி பெறும் பள்ளிகளில், மாணவர்களை, அதிகளவில், 'பெயில்' ஆக்குகின்றனர்.

கல்வித்துறை, அனைத்து வகை பள்ளிகளுக்கும், ஒரே வகை மதிப்பெண்ணை, தேர்ச்சிக்கு நிர்ணயம் செய்ய வேண்டும். இவ்வாறு, முத்தரசன் கூறினார். கல்வித்துறை வட்டாரம் கூறுகையில், 'இந்த பிரச்னையை, செயலரின் கவனத்திற்கு கொண்டு சென்று, விரைவில் சரி செய்யப்படும். அனைத்து வகை பள்ளிகளுக்கும், பிளஸ் 1 தேர்ச்சிக்கு, சரிசமமான மதிப்பெண் நிர்ணயம் செய்யப்படும்' என, தெரிவித்தது.

Friday, November 14, 2014

தனியார் பள்ளிகளில் 25% ஒதுக்கீடு: 1.39 லட்சம் மாணவர்கள் சேர்ப்பு: பள்ளி கல்வித் துறைச் செயலர் சபிதா

    நலிவுற்ற, வாய்ப்பு மறுக்கப்பட்ட குழந்தைகளுக்கு தனியார் பள்ளிகளில் 25 சதவீத ஒதுக்கீட்டின் கீழ் கடந்த இரண்டு ஆண்டுகளில் 1 லட்சத்து 39 ஆயிரத்து 805 பேர் சேர்க்கப்பட்டுள்ளனர் என மாநில பள்ளி கல்வித் துறைச் செயலர் சபிதா கூறினார். பள்ளி கல்வித் துறை சார்பில் குழந்தைகள் தின விழா, டாக்டர் எஸ்.ஆர். அரங்கநாதன் விருது வழங்கும் விழா வெள்ளிக்கிழமை (நவ.14) கொண்டாடப்பட்டது. இதில் பள்ளி கல்வித் துறை அமைச்சர் கே.சி. வீரமணி பங்கேற்று கட்டுரை, பேச்சுப் போட்டி, பல்வேறு விளையாட்டுப் போட்டிகளில் வெற்றி பெற்ற மாணவ, மாணவிகளுக்கு பரிசுகளையும் சான்றிதழ்களையும் வழங்கியதோடு, சிறந்த 30 நூலகர்களுக்கு டாக்டர் எஸ்.ஆர். அரங்கநாதன் விருதுகளையும் வழங்கி கௌரவித்தார்.

இந்நிகழ்ச்சியில் பள்ளி கல்வித் துறைச் செயலர் சபிதா பேசியது: வேறு எந்த மாநிலத்திலும் இல்லாத அளவுக்கு பள்ளி கல்வித் துறை மேம்பாட்டுக்காக தமிழக அரசு ரூ. 64 ஆயிரத்து 485 கோடி நிதி ஒதுக்கியுள்ளது. இதில் மாணவ, மாணவிகளுக்கு வழங்கப்படும் 14 வகை நலத் திட்டங்களுக்காக மட்டும் ரூ. 10 ஆயிரம் கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டிருக்கிறது. பள்ளி மாணவ, மாணவிகளுக்கு தரமான கல்வி கிடைக்க வழி செய்யும் வகையில் காலியாக இருந்த 76,338 ஆசிரியர் பணியிடங்களை நிரப்ப தமிழக அரசு உத்தரவிட்டு, இதுவரை 72,557 ஆசிரியர் பணியிடங்கள் நிரப்பப்பட்டுள்ளன.

அதுமட்டுமின்றி, ஆசிரியர் அல்லாத 15,820 பணியிடங்களை நிரப்ப தமிழக அரசு பிறப்பித்த உத்தரவின் அடிப்படையில், இதுவரை 8,881 பணியிடங்கள் நிரப்பப்பட்டுள்ளன. கல்வி உரிமைச் சட்டத்தின் அடிப்படையில் நலிவுற்ற, வாய்ப்பு மறுக்கப்பட்ட குழந்தைகளுக்கு தனியார் கல்லூரிகளில் 25 சதவீத இடஒதுக்கீடு வழங்கப்பட வேண்டும் என்ற நிபந்தனையை முழுமையாக அமல்படுத்துவதில் தமிழக அரசு தீவிர முனைப்பு காட்டியது. அதன் காரணமாக, வேறு எந்த மாநிலத்திலும் இல்லாத அளவுக்கு 2013-14 கல்வியாண்டில் 49,864 மாணவ, மாணவிகள், 2014-15 கல்வியாண்டில் 89,941 மாணவ, மாணவிகள் என மொத்தம் 1 லட்சத்து 39 ஆயிரத்து 805 நலிவுற்ற மாணவர்கள் இந்த சட்டத்தின் கீழ் தனியார் பள்ளிகளில் சேர்க்கப்பட்டுள்ளனர்.

இதற்காக மத்திய அரசின் சார்பில் தமிழகத்துக்கு பாராட்டும் தெரிவிக்கப்பட்டது என்றார் அவர். விழாவில் முன்னதாக, பள்ளி மாணவ, மாணவிகளின் கலை நிகழ்ச்சிகள் நடத்தப்பட்டன.

அனைத்துப் பள்ளிகளிலும் கழிப்பறை வசதி: அரசுக்கு உயர் நீதிமன்றம் உத்தரவு B

   தமிழகத்தில் உள்ள அனைத்து அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளிலும் கழிப்பறை வசதி ஏற்படுத்த கோரும் மனுவை பரிசீலித்து உரிய நடவடிக்கை எடுக்குமாறு, தமிழக அரசுக்கு சென்னை உயர் நீதிமன்ற மதுரைக் கிளை வெள்ளிக்கிழமை உத்தரவிட்டுள்ளது. மதுரை கிருஷ்ணாபுரம் காலனியைச் சேர்ந்த ஆனந்தராஜ் தாக்கல் செய்த மனுவை விசாரித்த உயர்நீதிமன்ற தலைமை நீதிபதி எஸ்.கே.கவுல், நீதிபதி வி.தனபாலன் ஆகியோர் அடங்கிய அமர்வு இவ்வாறு உத்தரவிட்டது.

மனுவில், தமிழகத்தில் 1442 பெண்கள் பள்ளிகளிலும், 4278 ஆண்கள் பள்ளிகளிலும் கழிப்பறைகள் இல்லை. 2080 பள்ளிகளில் கழிப்பறைகள் பயனற்றதாக உள்ளன. மாணவர்கள் திறந்தவெளியைக் கழிப்பிடமாக பயன்படுத்துகின்றனர். இதனால் நோய்த் தொற்றுகிறது என்று தகவல் வெளியாகி உள்ளது. கல்வித்துறை இணைய தளத்தில், 4375 பள்ளிகளில் கழிப்பறை வசதி இல்லை என்றும் அதில் மாணவர்கள் படிக்கும் 4060 பள்ளிகள் உள்ளதாகவும் குறிப்பிடப்பட்டு உள்ளது.

அனைத்து பள்ளிகளிலும் குடிநீர், கழிப்பறை வசதிகளை நிறைவேற்றுமாறு மாநில அரசுகளுக்கு உச்சநீதிமன்றம் 2012-இல் உத்தரவிட்டது. இந்த உத்தரவை தமிழக அரசு நிறைவேற்றவில்லை. எனவே அனைத்து அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளிலும் கழிப்பறைகளை ஏற்படுத்திடவும் அவற்றை பராமரிக்க போதிய பணியாளர்களை நியமிக்கவும் பள்ளிக் கல்வித் துறைக்கு உத்தரவிட வேண்டும் என குறிப்பிட்டுள்ளார். இம்மனு உயர்நீதிமன்ற தலைமை நீதிபதி எஸ்.கே.கவுல், நீதிபதி வி.தனபாலன் ஆகியோர் அடங்கிய அமர்வு முன்னிலையில் விசாரிக்கப்பட்டது.

பின்னர் நீதிபதிகள் பிறப்பித்த உத்தரவில், அனைத்து அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளிலும் கழிப்பறைகள் ஏற்படுத்தி, அவற்றை பராமரிக்க போதிய பணியாளர்களை நியமிக்க வேண்டும் என்ற மனுதாரரின் கோரிக்கையை அரசு பரிசீலனை செய்து உரிய நடவடிக்கையை எடுக்க வேண்டும். மேலும் உத்தரவை நிறைவேற்றியது தொடர்பான தகவல்களை அவ்வப்போது இணையதளத்தில் வெளியிட வேண்டும். 6 வாரங்களில் அறிக்கை தாக்கல் செய்ய வேண்டும் என குறிப்பிட்டுள்ளனர்.

ஆன் - லைன் வழி தேர்வு திட்டம்: ரத்து செய்ய தேர்வாணையம் முடிவு


கடந்த 8ம் தேதி, 'ஆன் - லைன்' வழியில் நடந்த குரூப் 2 முதன்மை தேர்வில், பெரும் குளறுபடி ஏற்பட்டதன் எதிரொலியாக, ஆன்-லைன் வழி தேர்வை ரத்து செய்ய, அரசுப் பணியாளர் தேர்வாணையமான, டி.என்.பி.எஸ்.சி., முடிவு செய்துள்ளது. தேர்வாணையத்தின் முன்னாள் தலைவர், நட்ராஜ், ஆன்-லைன் வழி தேர்வை அமல்படுத்தினார். குறைந்த தேர்வர்கள் பங்கேற்கும் தேர்வில் மட்டும், புதிய திட்டத்தை அமல்படுத்தினார். இந்த வகை தேர்வு, தேர்வாணைய அலுவலகத்தில் மட்டும் நடந்து வந்தது. இதனால், எந்த பிரச்னையும் ஏற்படவில்லை.

கடந்த 8ம் தேதி, குரூப் 2 முதன்மைத் தேர்வு, மாநிலம் முழுவதும், 44க்கும் மேற்பட்ட மையங்களில் நடந்தது. 12 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் பங்கேற்ற இந்த தேர்வு, இரு தாள்களாக நடத்தப்பட்டது. காலையில், ஆன்-லைன் வழியிலான தேர்வும், பிற்பகலில், விரிவாக விடை அளித்தல் முறையிலான தேர்வும் நடந்தது. இதில், ஆன்-லைன் வழியிலான தேர்வில், பெரும் குளறுபடி ஏற்பட்டது. பல இடங்களில் மின்சாரம் இல்லாததாலும், சில மையங்களில், 'சர்வர்' முடங்கியதாலும், குறித்த நேரத்தில், தேர்வு துவங்கவில்லை. மறைமலை நகர் அருகே உள்ள ஒரு மையத்தில், ஒரு அறையில், 'சர்வர்' கோளாறால், தேர்வெழுத முடியாத 43 தேர்வர்கள், போராட்டம் நடத்தினர். கடைசியில், இவர்களுக்கு, மறுநாள் புதிய தேர்வு நடத்தப்பட்டது.

சென்னை செங்குன்றத்தில் அமைக்கப்பட்ட மையத்திலும், 'சர்வர்' பிரச்னை ஏற்பட்டது. இப்படி, பல மையங்களில் குளறுபடி ஏற்பட்டதன் காரணமாக, ஆன்-லைன் வழி தேர்வு, தேவைதானா என, தேர்வாணையம் ஆலோசித்து வருகிறது. மின்சார பிரச்னையையும், தொழில்நுட்ப பிரச்னையை யும், தவிர்க்க முடியாது என்பதால், ஆன்-லைன் வழி தேர்வை ரத்து செய்ய, தேர்வாணையம் முடிவு செய்துள்ளது. இது குறித்து, விரைவில், 'போர்டு' கூட்டத்தில் ஆலோசித்து, முடிவு எடுக்கப்பட உள்ளது. சரியாக திட்டமிடாததால் தோல்வியில் முடிந்த திட்டம்: பெரிய அளவில் நடத்தப்படும் எந்தத் திட்டத்தையும், அரசு அதிகாரிகள் திறம்படக் கையாள்வதில்லை என்ற குற்றச்சாட்டு, அடிக்கடி எழுகிறது. அரசு செயல்படுத்தும் இலவச திருமணமானாலும், நலத் திட்ட உதவிகளானாலும், எப்போதும் குழப்பமே மிஞ்சுகிறது.

தாலிக்குத் தங்கம் திட்டத்தில் கூட, பயனாளிகளுக்கு, திருமணமாகி, குழந்தை பிறந்த பிறகே, அரசின் தங்கத் தாலி கொடுக்கப்படுகிறது. டி.என்.பி.எஸ்.சி., தேர்வில், அதிக அளவில் தேர்வர்கள் கலந்து கொள்வர் என்பது, அரசு அதிகாரிகளுக்கு முன்கூட்டியே தெரிந்தும், போதுமான அளவு ஏற்பாடுகள் செய்திருக்கவில்லை. தேர்வு மையங்களைத் தேர்ந்தெடுக்கும்போதே, அவற்றில், மின் வசதி, கம்ப்யூட்டர் சர்வர் வசதிகள் உள்ளனவா என்பதைச் சரிபார்க்க வேண்டியது, தேர்வு நடத்தும் அமைப்பின் கடமை. 'ஏற்பாடுகளை துல்லியமாகச் செய்யாமல், மேம்போக்காக கடமையாற்றும் அதிகாரிகளின் போக்கே, இத்தகைய குழப்பங்களுக்குக் காரணம்' என, தேர்வர்கள் கூறுகின்றனர்.