ஊழல் தடுப்பு விழிப்புணர்வு வாரத்தை அரசு அலுவலங்களில் கடைப்பிடிக்க வேண்டும் என்று அனைத்துத் துறை தலைவர்கள், செயலாளர்களுக்கு தலைமைச் செயலர் மோகன் வர்கீஸ் சுங்கத் உத்தரவிட்டுள்ளார். இதற்கான சுற்றறிக்கையை மத்திய கண்காணிப்பு ஆணையம் தமிழக அரசுக்கு அனுப்பியுள்ளது.
ஊழலை ஒழிக்கும் வகையிலும், அதுதொடர்பான விழிப்புணர்வை பொது மக்களிடையே ஏற்படுத்தவும் ஆண்டுதோறும் ஊழல் தடுப்பு விழிப்புணர்வு வாரம் கடைப்பிடிக்கப்பட்டு வருகிறது. அதன்படி, இந்த ஆண்டு அக்டோபர் 27-ஆம் தேதி முதல் நவம்பர் 1-ஆம் தேதி வரை ஒரு வார காலத்துக்கு அனைத்து அரசுத் துறைகளிலும் ஊழல் தடுப்பு விழிப்புணர்வு வாரத்தை கடைப்பிடிக்க மத்திய கண்காணிப்பு ஆணையம் அறிவுறுத்தியுள்ளது. இது தொடர்பாக தமிழக தலைமைச் செயலாளர் மோகன் வர்கீஸ் சுங்கத்துக்கு அந்த ஆணையம் அனுப்பியுள்ள சுற்றறிக்கையில் கூறியிருப்பதாவது:
"ஊழலை எதிர்ப்போம்-தொழில்நுட்பத்தை ஊக்குவிப்போம்' என்ற தலைப்பில் விழிப்புணர்வு பிரசாரம் இந்த ஆண்டு மேற்கொள்ளப்படுகிறது. அதாவது, அரசு அலுவலகங்களை நேரடியாக நாடாமல், மின்ஆளுமை முறையின் மூலம் தொழில்நுட்ப வசதிகளைப் பயன்படுத்தி அரசின் சேவைகளைப் பெறலாம் என்பதை அடிப்படை நோக்கமாகக் கொண்டு இந்த ஆண்டுக்கான ஊழல் தடுப்பு விழிப்புணர்வு வாரம் கடைப்பிடிக்கப்பட உள்ளது. ஊழல் என்பது நாட்டின் பொருளாதார மேம்பாட்டையும், இலக்குகளை அடைவதிலும் பெரும் பாதிப்பை ஏற்படுத்துகிறது என ஊழல் கண்காணிப்பு ஆணையம் தனது சுற்றறிக்கையில் தெரிவித்துள்ளது. செயல் திட்டங்கள்: சுற்றறிக்கையின் அடிப்படையில், அனைத்துத் துறை செயலாளர்கள், தலைவர்களுக்கு மோகன் வர்கீஸ் சுங்கத் பிறப்பித்துள்ள உத்தரவு விவரம்:
வரும் 27-ஆம் தேதி முதல் நவம்பர் 1-ஆம் தேதி வரை ஒரு வார காலத்துக்கு அனைத்து அரசு அலுவலகங்களிலும் ஊழல் தடுப்பு கண்காணிப்பு வாரத்தைக் கடைப்பிடிக்க வேண்டும். ஊழல் எதிர்க்கும் வாசகங்கள் அடங்கிய பேனர்கள், சுவரொட்டிகளை அரசு அலுவலகங்களின் பிரதான பகுதிகளில் அனைவரும் பார்க்கும் வகையில் வைக்க வேண்டும். ஊழல் தடுப்பு குறித்த கருத்தரங்குகள், பயிலரங்குகளுக்கு ஏற்பாடு செய்ய வேண்டும். கல்லூரி, பள்ளி மாணவ-மாணவிகளிடையே ஊழல் எதிர்ப்பு பற்றிய விவாதங்களையும், கட்டுரைப் போட்டிகளையும் நடத்தி பரிசுகளை அளிக்க வேண்டும். ஊழல் எதிர்ப்பு தொடர்பாக சிறப்பு மலர்களை வெளியிட ஊக்குவிக்கலாம். உள்ளூர் பகுதிகளில் ஊழல் தடுப்பு விழிப்புணர்வு தொடர்பான நிகழ்வுகளில் தன்னார்வ அமைப்புகளையும், சேவை மனப்பான்மை கொண்ட கூட்டமைப்புகளையும் இணைத்து நிகழ்ச்சிகளை நடத்தலாம் என்று தலைமைச் செயலாளர் மோகன் வர்கீஸ் சுங்கத் தெரிவித்துள்ளார்.
ஊழல் தடுப்பு விழிப்புணர்வு வாரத்தை ஒட்டி, அரசு அலுவலகங்களில் ஊழல் எதிர்ப்பு உறுதிமொழியும் எடுக்கப்பட உள்ளன.