பங்களிப்பு ஓய்வூதியத் திட்டத்தில் உள்ள 2 லட்சம் தமிழக அரசு ஊழியர்களின் ஓய்வூதியக் கணக்கு விவரங்கள் வெளியிடப்பட்டுள்ளன. இந்தத் திட்டத்திலுள்ள ஊழியர்கள் தங்களது 2011-12- ஆம் ஆண்டுக்கான வருடாந்திர கணக்கு அறிக்கையை கருவூலங்களில் சம்பளம் பெற்று வழங்கும் அதிகாரிகளிடம் (டி.டி.ஓ.) பெற்றுக்கொள்ளலாம் என சென்னையிலுள்ள முதன்மை கணக்குத் தணிக்கை அலுவலகம் அறிவித்துள்ளது.
அரசு ஊழியர்கள் 29.02.12 ஆம் தேதி எந்த அலுவலகத்தில் பணியாற்றினார்களோ அந்த அலுவலகத்துக்கான டி.டி.ஓ.விடம் இந்த அறிக்கையைப் பெற்றுக்கொள்ளலாம். கருவூலங்களுக்கு இந்த கணக்கு அறிக்கைகள் சி.டி.க்களில் அனுப்பப்பட்டுள்ளதாகவும் கணக்கு தணிக்கைத் துறை தெரிவித்துள்ளது. 2003 ஏப்ரல் 1-ஆம் தேதிக்குப் பிறகு பணியில் சேர்ந்த அனைத்து அரசு ஊழியர்களுக்கும் பங்களிப்பு ஓய்வூதியத் திட்டத்தின் கீழ் சேர்க்கப்பட்டுள்ளனர். மொத்தம் உள்ள 6 லட்சம் ஊழியர்களில் 2 லட்சம் பேர் பங்களிப்பு ஓய்வூதியத் திட்டத்தின் கீழ் வருகின்றனர். இந்தத் திட்டத்தின் படி, அரசு ஊழியர்கள் தங்களது அடிப்படை ஊதியத்தில் 6 சதவீதம் முதல் 10 சதவீதம் வரை ஓய்வூதிய திட்டத்துக்குச் செலுத்தலாம். அதற்கு நிகரான தொகையை ஓய்வூதியத் திட்டத்துக்கு மாநில அரசு வழங்கும்.
இதுவரை பங்களிப்பு ஓய்வூதியத் திட்டத்தின் கீழ் மொத்த தொகையை ஊழியர்கள் அறிந்துகொள்ள முடியாமல் இருந்தனர். இப்போது நாடாளுமன்றத்தில் புதிய ஓய்வூதியச் சட்ட மசோதா நிறைவேற்றப்பட்டதைத் தொடர்ந்து அனைத்து கணக்கு விவரங்களும் கருவூலங்களுக்கு அனுப்பப்பட்டுள்ளன. இந்த கணக்கு அறிக்கையில் கொடுக்கப்பட்டுள்ள விவரங்களில் ஏதேனும் மாறுபாடுகள் இருந்தாலோ அல்லது மேலும் தகவல் தேவைப்பட்டலோ கீழ்க்கண்ட முகவரியிலோ, தொலைபேசியிலோ தகவல் தெரிவிக்கலாம்.
வர்ஷினி அருண், துணை மாநில கணக்காயர் (நிதி), மாநில முதன்மை கணக்காயர் அலுவலகம் (கணக்கு மற்றும் பணி வரவு), அண்ணாசாலை, சென்னை - 18. தொலைபேசி: 044-24314477. மேலும் விவரங்களுக்கு http:www.agae.tn.nic.in