வாக்காளர் அடையாள அட்டைகளை, இனி, டிரைவிங் லைசென்ஸ் போல, கனமான பிளாஸ்டிக் கார்டுகளாக வழங்க, தேர்தல் ஆணையம் திட்டமிட்டுள்ளது. இதுதொடர்பாக, துணை தேர்தல் ஆணையர் அலோக் சுக்லா கூறியதாவது: தற்போது வாக்காளர் அடையாள அட்டை, வாக்காளரின் கறுப்பு வெள்ளை புகைப்படத்துடன், வெள்ளை பேப்பரில் தயாரிக்கப்பட்டு, பின், அது லேமினேஷன் செய்யப்பட்டு வழங்கப்படுகிறது. இதைமாற்றி, டிரைவிங் லைசென்ஸ் அல்லது கிரெடிட் கார்டு போல, வண்ணப் புகைப்படத்துடன், கனமான பிளாஸ்டிக் கார்டுகளில், வாக்காளர் அடையாள அட்டைகளை வழங்க, தேர்தல் ஆணையம் திட்டமிட்டுள்ளது.
பிளாஸ்டிக் கார்டுகளில் தயாராகும், வாக்காளர் அடையாள அட்டைகள், முதலில், அசாம் மற்றும் நாகாலாந்து மாநிலங்களில் வழங்கப்படும். இதற்காக, இம்மாநிலங்களில் கட்டணம் எதுவும் வசூலிக்கப்படாது. புதிய வகை, வாக்காளர் அடையாள அட்டைகள் வழங்க, ஒரு நபருக்கு, 50 ரூபாய் செலவாகும். இருந்தாலும், நீண்ட காலத்திற்கு, இந்த அட்டைகள் சேதமடையாமல் இருக்கும். அதேநேரத்தில், மற்ற மாநிலங்களில், தற்போதைய வாக்காளர் அடையாள அட்டைகளை மாற்றி, பிளாஸ்டிக் கார்டுகளிலான, கனமான அடையாள அட்டைகளை வாங்க விரும்புவோருக்கு, 50 ரூபாய்க்கு குறைவாக கட்டணம் வசூலிக்கப்படும். இவ்வாறு அலோக் சுக்லா கூறினார்.