அரசின் மானிய திட்ட பலன்கள், பொதுமக்களின் வங்கி கணக்கில் நேரடியாக வரவு வைக்கப்படும், நேரடி பணபரிமாற்ற திட்டம், வரும் ஜூலை முதல் மேலும், 78 மாவட்டங்களுக்கு விரிவுப்படுத்தப்படுகிறது. அரசின் மானிய திட்ட உதவிகள், அதன் பலன்கள், மக்களுக்கு நேரடியாக சென்று சேரும் வகையில் கொண்டு வரப்பட்ட, மத்திய அரசின் நேரடி பணபரிமாற்ற திட்டம் குறித்த தேசிய கமிட்டி கூட்டம், பிரதமர் மன்மோகன் சிங் தலைமையில், நேற்று டில்லியில் நடந்தது.
் இக்கூட்டத்தில், முக்கிய முடிவுகள் எடுக்கப்பட்டன. அதன் விவரம் வருமாறு: "ஆதார்' அடையாள அட்டை அடிப்படையில், செயல்படுத்தப்படும் இந்த திட்டம், விரைவில் நாடு முழுவதும் பரவலாக்கப்படும்.முதல் கட்டமாக, 43 மாவட்டங்களில் இத்திட்டம் அமல்படுத்தப்பட்டது. இதை தொடர்ந்து, ஜூலை 1ம் தேதி முதல், 78 மாவட்டங்களில் திட்டம் அமல்படுத்தப்பட உள்ளது. இதில், ஒடிசா, மேற்கு வங்கம், உ.பி., உத்தரகண்ட், பீகார், சத்தீஸ்கர் ஆகிய மாநிலங்களின், குறிப்பிட்ட மாவட்டங்கள் தேர்ந்தெடுக்கப்பட்டு உள்ளன. சமையல் காஸ் சிலிண்டர்களுக்காகன மானியம், பயனாளிகளின் கணக்கில் வரவு வைக்கும் திட்டம் வரும் மே, 15ம் தேதி முதல், 20 மாவட்டங்களில் அமல்படுத்தப்பட உள்ளது. சமையல் காஸ் சிலிண்டர்களுக்கு மத்திய அரசு, ஆண்டுதோறும், 4,000 கோடி ரூபாய் மானியம் அளிக்கிறது மொத்தம், 9 சிலிண்டர்கள் மானிய விலையில் அளிக்கப்படுகிறது. ஆதார் அடையாள அட்டை முழமையாக வழங்கப்பட்ட மாவட்டங்களில், இத்திட்டம் அமல்படுத்தப்படும்.
பின், படிப்படியாக மற்ற இடங்களுக்கும் அமல்படுத்தப்பட உள்ளது. இதற்காக, சமையல் காஸ் வாடிக்கையாளர்களின் வங்கி கணக்கு விவரங்கள் கோரப்பட்டுள்ளன. வங்கிகள் மட்டுமல்லாது, மானிய தொகை, தபால் அலுவலக கணக்குகளில் வரவு வைக்கும் வகையில், அக்., 1ம் தேதி முதல் விரிவுப்படுத்தப்படும்.பயனாளிகளின் வங்கிக் கணக்கு மற்றும் பிற விவரங்களை, முழுமையாக மின்னணு முறையில் மாற்றுவதற்கும், அனைவருக்கும், "ஆதார்' அடையாள அட்டை கிடைப்பதற்கும் தேவையான முயற்சிகள், இரட்டிப்பு உத்வேகத்துடன் செயல்படுத்தப்படும்.