"இம்மாதம், 27ம் தேதி, பக்ரீத் பண்டிகை கொண்டாடப்படும்' என, அரசு தலைமை ஹாஜி அறிவித்துள்ளார்.இது குறித்து, அரசு தலைமை ஹாஜி, முப்தி ஹாஜி சலாஹூதீன் முஹம்மது அய்யூப் வெளியிட்டுள்ள அறிக்கையில், "இந்தாண்டுக்கான பக்ரீத் தியாகத் திருநாள், வரும், 27ம் தேதி, கொண்டாடப்படும்' என தெரிவித்துள்ளார்.
Friday, October 19, 2012
வி.ஏ.ஓ. பணி நியமனத்துக்கு இடைக்காலத் தடை
் கிராம நிர்வாக அலுவலர்கள் (வி.ஏ.ஓ.) பணி நியமனத்தில் தாழ்த்தப்பட்டோருக்கான பின்னடைவுக் காலியிடங்களுக்கான நியமனத்துக்கு உயர் நீதிமன்றம் இடைக்காலத் தடை விதித்துள்ளது. இது தொடர்பாக தருமபுரி மாவட்டம் அரூரைச் சேர்ந்த பி. ரமேஷ்குமார் மனு தாக்கல் செய்துள்ளார்.
தாழ்த்தப்பட்டோருக்கான பின்னடைவு காலியிடங்கள் உள்பட மொத்தம் 3,484 வி.ஏ.ஓ. காலிப் பணியிடங்களை நிரப்புவதற்கான எழுத்துத் தேர்வு கடந்த ஆண்டு பிப்ரவரி 20-ஆம் தேதி நடைபெற்றது. வழக்கமான காலிப் பணியிடங்களுக்குத் தேர்வு எழுதியவர்களுக்கு கடந்த ஆண்டு ஜூலை 19-ஆம் தேதியும், தாழ்த்தப்பட்டோருக்கான பின்னடைவு காலிப் பணியிடங்களுக்காகத் தேர்வு எழுதியவர்களுக்கு செப்டம்பர் 13-ஆம் தேதியும் முடிவுகள் வெளியிடப்பட்டன. தாழ்த்தப்பட்டோர் பின்னடைவு காலியிடங்களுக்காகத் தேர்வு எழுதியவர்களில் எனக்கு 126-வது இடம் கிடைத்தது. தகுதிப் பட்டியலில் 165-வது இடம் உள்பட பட்டியலில் என்னைவிட பின்னே இருந்த பலருக்கு பணி நியமனம் வழங்கப்பட்டுள்ளது. ஆனால் 126-வது இடம் பெற்றிருந்த எனக்குப் பணி வாய்ப்பு வழங்கப்படவில்லை. ஆகவே, சட்ட விதிகளுக்கு முரணாக நடைபெற்ற இந்தப் பணி நியமனத்துக்குத் தடை விதிக்க வேண்டும். எனக்கு வி.ஏ.ஓ. பணி வாய்ப்பு வழங்குமாறு டி.என்.பி.எஸ்.சி.க்கு நீதிமன்றம் உத்தரவிட வேண்டும் என்று அந்த மனுவில் ரமேஷ்குமார் கோரியிருந்தார்.
இந்த மனு நீதிபதி எஸ். நாகமுத்து முன்னிலையில் வெள்ளிக்கிழமை விசாரணைக்கு வந்தது. அப்போது, இம்மாதம் 30-ஆம் தேதி வரை வி.ஏ.ஓ. பணிக்கான நியமன ஆணை அனுப்புவதை நிறுத்தி வைப்பதாக டி.என்.பி.எஸ்.சி. சார்பில் ஆஜரான வழக்குரைஞர் உறுதி அளித்தார். இதனைத் தொடர்ந்து, இந்த மனு தொடர்பாக டி.என்.பி.எஸ்.சி. தரப்பில் விரிவான பதிலளிக்க வேண்டும் என்றும், நீதிமன்றத்தில் உறுதியளிக்கப்பட்டபடி வரும் 30-ஆம் தேதி வரை யாருக்கும் பணி நியமன ஆணையை அனுப்பக் கூடாது என்றும் நீதிபதி உத்தரவிட்டார். இதையடுத்து, விசாரணை வரும் 30-ஆம் தேதிக்கு ஒத்திவைக்கப் பட்டது.
்
Thursday, October 18, 2012
கல்வி உதவி தொகைக்கான போட்டி தேர்வு அறிவிப்பு
மத்திய அரசின் கல்வி உதவி தொகைக்கான போட்டி தேர்வு, வரும், டிசம்பர் 30ல் நடக்கிறது. தேர்வுத்துறை அறிவிப்பில் கூறப்பட்டுள்ளதாவது
: போட்டி தேர்வு, அனைத்து கல்வி மாவட்ட தலைநகரங்களில் நடக்கும். இதற்கான விண்ணப்பங்களை, நவ., 1 முதல், 9ம் தேதி வரை, www.dge.tn.nic.in என்ற, தேர்வு துறையின் இணையதளத்தில் இருந்து, பதிவிறக்கம் செய்து கொள்ளலாம். அரசு, மாநகராட்சி, நகராட்சி மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளில், நடப்பு கல்வியாண்டில், எட்டாம் வகுப்பு பயிலும் மாணவ, மாணவியர், இத்தேர்வில் பங்கேற்கலாம். மாணவரின் பெற்றோர் ஆண்டு வருவாய், 2.5 லட்சம் ரூபாய்க்குள் இருக்க வேண்டும். தேர்வெழுத தகுதி வாய்ந்த மாணவ, மாணவியர், கடந்த ஆண்டு, ஏழாம் வகுப்பு, முழு ஆண்டு தேர்வில், எஸ்.சி., - எஸ்.டி., பிரிவு மாணவர், 50 சதவீத மதிப்பெண்களும், இதர பிரிவு மாணவ, மாணவியர், 55 சதவீத மதிப்பெண்களும் பெற்றிருக்க வேண்டும்.
பதிவிறக்கம் செய்யும் விண்ணப்பத்தில், புகைப்படத்தை ஒட்டி, தேர்வு கட்டணம், 50 ரூபாய் உடன், பள்ளி தலைமை ஆசிரியரிடம், விண்ணப்பிக்க வேண்டும். தேர்வு, இரு பகுதிகளை கொண்டது. பகுதி ஒன்றில், மனத்திறன் தேர்வு; பகுதி இரண்டில், படிப்பறிவு தேர்வு. ஒவ்வொரு பகுதிக்கும், தலா, 90 நிமிடங்கள் வழங்கப்படும். படிப்பறிவு தேர்வில், எட்டாம் வகுப்பு முதல் மற்றும் இரண்டாம் பருவத்தில் இருந்து, கேள்விகள் கேட்கப்படும். அறிவியலில், 35 கேள்விகள், கணிதத்தில், 20, சமூக அறிவியலில், 35 என, 90 கேள்விகள் கேட்கப்படும். தலா, 1 மதிப்பெண்கள். மனத்திறன் தேர்வுக்கு, பாடப் பகுதி கிடையாது. இப்பகுதியிலும், 90 கேள்விகள் கேட்கப்படும். இவ்வாறு தேர்வு துறை தெரிவித்துள்ளது.
சிறப்பு ஆசிரியர்கள் 1,524 பேர் நியமனம் : தேர்வு பட்டியல் தயார
பள்ளி கல்வித் துறையில், 1,524 சிறப்பு ஆசிரியர்கள் நியமனத்திற்கான தேர்வு பட்டியல், ஆசிரியர் தேர்வு வாரிய இணையதளத்தில் வெளியிடப்பட்டு உள்ளது. இதுகுறித்து, வாரியம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு:
பள்ளி கல்வித் துறையில், உடற்கல்வி, ஓவியம், தையல் உள்ளிட்ட பிரிவுகளில், 1,524 சிறப்பு ஆசிரியர்கள்; அரசு பொறியியல் கல்லூரிகளில், 152 உதவி பேராசிரியர்கள்; அரசு, "பாலிடெக்னிக்' கல்லூரிகளில், 139 விரிவுரையாளர்கள் நியமிக்கப்பட உள்ளனர். இதற்கான, வேலைவாய்ப்பு பதிவு மூப்பு மற்றும் இன சுழற்சி அடிப்படையிலான தேர்வு பட்டியல், ஆசிரியர் தேர்வு வாரியத்தின் www.trb.tn.nic.in இணையதளத்தில் வெளியிடப்பட்டுள்ளது. இம்மாதம், 1ம் தேதி, ஐகோர்ட் பிறப்பித்த உத்தரவின்படி, முதுநிலை ஆசிரியர் பணியிடங்களும், நிரப்பப்பட உள்ளன. தேர்வு பட்டியலில் இடம் பெற்றோருக்கு, விரைவில் கடிதம் அனுப்பப்படும்.
ரயில் "தத்கால்' முன்பதிவுக்கு வருது தனி விண்ணப்பம்!
ரயில் டிக்கெட், "தத்கால்' முன்பதிவுக்கு, தனி விண்ணப்பம் விரைவில் அறிமுகப்படுத்தப்படுகிறது. ரயில் டிக்கெட் முன்பதிவில், கடைசி நேர பயணிகளுக்காக அறிமுகப்படுத்தப்பட்ட, "தத்கால்' முன்பதிவில் நடக்கும் முறைகேடுகளை தடுக்க, பலவித நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகின்றன. "தத்கால்' முன்பதிவுக்கு அடையாள அட்டை, நேர மாற்றம் என, பலவித நடவடிக்கைகள் எடுத்த போதும், முன்பதிவுக்கு வரிசையில் நிற்பவர்களை வேறுபடுத்தி பார்க்க முடியவில்லை.
மேலும், இப்போது வழங்கப்படும் விண்ணப்பம், வழக்கமான முன்பதிவு, ரத்து, "தத்கால்' ஆகியவற்றுக்கும் ஒன்றாக உள்ளது. இதை பயன்படுத்தி, இடைத்தரகர்கள் முறைகேட்டில் ஈடுபடுகின்றனர். இதை தடுக்க, "தத்கால்' முன்பதிவுக்கு என்று, தனி விண்ணப்பத்தை அறிமுகப்படுத்த, ரயில்வே நிர்வாகம் முடிவு செய்துள்ளது. இது விரைவில் அறிமுகப்படுத்தப்படும்
. "தத்கால்' விண்ணப்பம் இளஞ்சிவப்பு நிறத்தில் இருக்கும்.மேலும், முகவரி உட்பட பிற தகவல்களை தவறாகக் குறிப்பி ட்டால், அதற்குரிய அபாரதம் அல்லது தண்டனை என்ன என்பதை எச்சரிக்கும் வகையில், விண்ணப்பத்தில் எச்சரிக்கை குறிப்புகள் இடம் பெற்று இருக்கும்.
Wednesday, October 17, 2012
பள்ளிகளில் ஒவ்வொரு வகுப்பிலும் புகார் பெட்டி : கல்வி துறைக்கு, தேசிய ஆணையம் உத்தரவு-Dinamalar News
""அனைத்து வகை பள்ளிகளிலும், ஒவ்வொரு வகுப்பிலும், புகார் பெட்டி அமைக்க, கல்வித்துறை நடவடிக்கை எடுக்க வேண்டும்,'' என, தேசிய குழந்தை உரிமை பாதுகாப்பு ஆணைய தலைவர், சாந்தா சின்கா உத்தரவிட்டார்.
இந்த ஆணையத்தின் சார்பில், தமிழகம் மற்றும் புதுச்சேரியில் நிகழ்ந்த குழந்தை உரிமை மீறல்கள் குறித்த, இரண்டு நாள் பொது விசாரணை, சென்னையில் நேற்று துவங்கியது. இதற்காக, குழந்தை உரிமை மீறல் சம்பவங்களில் பாதிக்கப்பட்டோர், விசாரணை செய்த போலீசார், கல்வித்துறை அதி காரிகள் உள்ளிட்ட பலதுறையைச் சேர்ந்த அதிகாரிகள், பொது விசாரணையில் ஆஜராக வேண்டும் என, தேசிய கமிஷன் உத்தரவிட்டிருந்தது. அதன்படி, பல்வேறு துறையைச் சேர்ந்த அதிகாரிகள், விசா ரணைக்கு வந்தனர். கல்வித்துறை முதன்மை செய லர் சபிதா, பள்ளிக்கல்வி இயக்குனர் தேவராஜன், தொடக்க கல்வி இயக்குனர் ராமேஸ்வரமுருகன் மற்றும் முதன்மைக் கல்வி அலுவலர்கள், தன்னார்வ தொண்டு நிறுவனங்களைச் சேர்ந்த பிரதிநிதிகளும், கூட்டத்திற்கு வந்திருந்தனர்.
62 உரிமை மீறல்கள் : இரு மாநிலங்களிலும் நிகழ்ந்த, 62 உரிமை மீறல்கள் குறித்த சம்பவங்கள், விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்பட்டன. இதில், கல்வி உரிமை மறுத்தல், குழந்தை தொழிலாளர், உடல் ரீதியான தண்டனை அளித்தது, குழந்தை கடத்தல், பாலியல் கொடுமைகள் என, பல்வேறு உரிமை மீறல் சம்பவங்கள் இடம் பெற்றிருந்தன. விழுப்புரம் மாவட்டம், செஞ்சி தாலுகா, செத்தவரை கிராமத்தைச் சேர்ந்த, 13 வயது சிறுமி, கடந்த ஏப்ரல் மாதம், அதே கிராமத்தைச் சேர்ந்த ஒருவரால், பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டது குறித்து, விசாரணை நடந்தது. பாதிக்கப்பட்ட சிறுமி, பேச முடியாமல் அழுததைக் கண்டு, பார்வையாளர்கள் கடும் வேதனை அடைந்தனர்.
மிரட்டல் புகார் : "போலீசார் சரிவர நடவடிக்கை எடுக்கவில்லை; உடனடியாக மருத்துவமனையில் சேர்த்து, உரிய சிகிச்சை அளிக்க நடவடிக்கை எடுக்கவில்லை' என, சிறுமியின் தாய் குற்றம் சாட்டினார்; மேலும், தங்களுக்கு, தொடர்ந்து மிரட்டல்கள் வருவதாகவும் தெரிவித்தார். இதற்கு டி.எஸ்.பி., அளித்த பதில் திருப்தி அளிக்காததால், ""பாதிக்கப்பட்ட சிறுமிக்கென தனியாக வக்கீலை நியமித்து, அவருக்கு உரிய நீதி கிடைக்க, காவல்துறை நடவடிக்கை எடுக்க வேண்டும்,'' என, சாந்தா சின்கா உத்தரவிட்டார். மேலும், ""சிறுமி விரும்பும் பள்ளியில், கல்வியைத் தொடர, கல்வித்துறை நடவடிக்கை எடுக்க வேண்டும். பாதிக்கப்பட்ட மாணவிக்கு, 50 ஆயிரம் ரூபாய் இழப்பீடு வழங்கவும், காவல்துறை நடவடிக்கை எடுக்க வேண்டும்,'' என, அவர் தெரிவித்தார். பள்ளிக் கல்வித்துறை செயலர் சபிதா பேசுகையில்,
""சிறுமி, எந்தப் பள்ளியில் சேர விரும்பினாலும், அந்தப் பள்ளியில் சேர்ப்பதற்கு, அரசு உரிய நடவடிக்கை எடுக்கும்,'' என்றார். புகார்பெட்டி : இரண்டாவதாக, சென்னை, வெட்டுவாங்கேணியைச் சேர்ந்த, 11 வயது சிறுமி, அருகில் உள்ள செயின்ட் ஜோசப் மேல்நிலைப்பள்ளியில் (அரசு உதவிபெறும் பள்ளி) படித்து, பள்ளி ஆசிரியையின் கொடுமைக்கு ஆளாகி, ஜூனில், "கெரசின்' ஊற்றி தீ வைத்து, தற்கொலை செய்து கொண்டார். இந்த சம்பவம் தொடர்பாக, பள்ளி நிர்வாகத்தின் செயல்பாடுகளை, சாந்தா சின்காவும், முன்னாள் துணைவேந்தர் வசந்தி தேவியும், கடுமையாக கண்டித்தனர். மாணவியரை ஆசிரியை கொடுமைப்படுத்தியது குறித்து, தங்களுக்கு எதுவும் தெரியாது என, பள்ளி தாளாளர் தெரிவித்தார். இதற்கு, ""பள்ளியில் நடப்பது எதுவுமே தெரியாமல், எப்படி ஒரு நிர்வாகம் இருக்க முடியும்? மாணவியரிடம், குறைகளை கேட்டறியும் வழக்கத்தை கடைபிடித்தீர்களா?'' என, பல்வேறு கேள்விகளை, வசந்திதேவி கேட்டார். இதையடுத்து, ஆணைய தலைவர் சாந்தா சின்கா கூறியதாவது:
சம்பந்தபட்ட பள்ளி மட்டுமில்லாமல், அனைத்து வகை பள்ளிகளிலும், ஒவ்வொரு வகுப்பிலும், புகார் பெட்டி அமைப்பதற்கு, கல்வித்துறை நடவடிக்கை எடுக்க வேண்டும். மாணவ, மாணவியரிடம், முறையாக குறைகளை கேட்டறிந்து, அதை நிவர்த்தி செய்ய, பள்ளி நிர்வாகங்களும், கல்வித்துறையும் நடவடிக்கை எடுக்க வேண்டும். இவ்வாறு சாந்ததின்கா தெரிவித்தார்.
அக்., 19, 20 ல் பட்டதாரி ஆசிரியர்கள் பதவி உயர்வு ஆன் லைன் கவுன்சிலிங்
பட்டதாரி ஆசிரியர் பதவி உயர்வு ஆன் லைன் கவுன்சிலிங், அக்., 19, 20ம் தேதிகளில் நடக்கவுள்ளதாக, பள்ளிக் கல்வித்துறை தெரிவித்துள்ளது. பள்ளிகளில் பட்டதாரி ஆசிரியர்களாக பணியாற்றும் 430 பட்டதாரி ஆசிரியர்களுக்கு, உயர்நிலைப்பள்ளி தலைமையாசிரியராக பதவி உயர்வு வழங்கப்படவுள்ளது.
இதற்கான ஆன் லைன் கவுன்சிலிங், அக்., 19, 20 ம் தேதிகளில் நடக்கவுள்ளது. பதவி மூப்பு அடிப்படையில், எண்கள் வழங்கப்பட்டுள்ளன. அக்., 19 காலை 9 முதல் 12.30 மணி வரை, 967 முதல் 1116 எண் உள்ளவர்களுக்கும், பிற்பகல் 1.30 முதல் மாலை 5 மணி வரை, 1117 முதல் 1216 வரை எண் உள்ளவர்களுக்கும் நடக்கிறது. அக்., 20 காலை 9 முதல் மதியம் 12.30 மணி வரை, 1217 முதல் 1366 வரை எண் உள்ளவர்களுக்கும், பிற்பகல் 1.30 முதல் மாலை 5 மணி வரை, 1367 முதல் 1466 வரை எண் உள்ளவர்களுக்கும் நடக்கவுள்ளது.
சுப்ரீம்கோர்ட் உத்தரவு உடனடியாக நிறைவேறுமா?-
"அனைத்து வகை பள்ளிகளிலும், ஆறு மாதங்களில், கழிப்பறை வசதி, குடிநீர் வசதி உள்ளிட்ட அடிப்படை கட்டமைப்பு வசதிகளை செய்து தர வேண்டும்" என, சமீபத்தில், சுப்ரீம் கோர்ட் உத்தரவிட்டது.
இந்த உத்தரவை, தமிழகத்தில், ஆறு மாதங்களுக்குள் நிறைவேற்ற முடியுமா என்பது, கேள்விக்குறியாக உள்ளது. சுற்றுச்சூழல் மற்றும் நுகர்வோர் பாதுகாப்பு மையம் என்ற, தன்னார்வ அமைப்பு, தொடர்ந்த வழக்கில், "அனைத்து வகை பள்ளிகளிலும், கழிப்பறை வசதி, குடிநீர் வசதி உள்ளிட்ட அடிப்படை கட்டமைப்பு வசதிகளை, ஆறு மாதங்களில் ஏற்படுத்திட, மத்திய, மாநில அரசுகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்" என, இம்மாதம், 3ம் தேதி, சுப்ரீம் கோர்ட் உத்தரவிட்டது.
தமிழகத்தில், தற்போது, பள்ளிகளில் உள்ள அடிப்படை வசதிகள் குறித்த புள்ளி விவரங்கள் சேகரிக்கப்பட்டு வருகின்றன. இந்தப் பணிகள், நவம்பர் இறுதியிலோ அல்லது டிசம்பர் முதல் வாரத்திலோ முடிவடையும் என, எதிர்பார்க்கப்படுகிறது. இந்த கணக்கெடுப்பு தகவல்கள் கிடைத்தபிறகே, எத்தனை பள்ளிகளில், அடிப்படை வசதிகள் உள்ளன; எத்தனை பள்ளிகளில், போதிய அளவிற்கு, அடிப்படை வசதிகள் நிறைவேற்ற வேண்டியுள்ளது என்பதை தெரிந்துகொள்ள முடியும். இந்த புள்ளி விவரங்கள் அடிப்படையில், தேவை உள்ள பள்ளிகளுக்கு, அடிப்படை வசதிகளை நிறைவேற்ற, திட்டங்கள் தீட்டி, அரசின் அனுமதிபெற வேண்டும். அதன்பின், டெண்டர் விட்டு, பணிகளை நிறைவேற்ற, நடவடிக்கைஎடுக்க வேண்டும்.
பட்ஜெட் நெருங்கிக் கொண்டிருக்கும் நிலையில், புதிய திட்டங்கள் குறித்த அறிவிப்புகள், கடைசி நேரத்தில் தனியாக வெளியாவதற்கு வாய்ப்புகள் இல்லை என, துறை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. எனவே, புள்ளி விவரங்கள் அடிப்படையில், தீட்டப்படும் புதிய திட்டங்கள் குறித்த அறிவிப்புகள், வரும் பட்ஜெட்டிலோ அல்லது பள்ளிக்கல்வி மானியக் கோரிக்கையிலோ வெளியாகலாம். அதனால், ஆறு மாதங்களுக்குள், திட்டப் பணிகளை முடிப்பதற்கு, நடைமுறையில் சாத்தியமில்லை என, கல்வித்துறை கை விரிக்கிறது. இந்த ஆண்டு, அரசுப் பள்ளிகளில், 3,769 குடிநீர் வசதிகள், 4,373 மாணவர் கழிப்பறை வசதிகள், மாணவியருக்கென, 7,262 கழிப்பறை வசதிகள், 7,907 கூடுதல் வகுப்பறைகள், 3.81 லட்சம் மீட்டரில், பள்ளிகளுக்கு சுற்றுச்சுவர் உள்ளிட்ட பல்வேறு அடிப்படை கட்டமைப்புதிட்டங்கள், 1,507 கோடி ரூபாய் செலவில் நிறைவேற்றுவதற்கு திட்டமிடப்படது. இப்பணிகளில், 90 சதவீதத்திற்கும் அதிகமான திட்டங்கள் முடிக்கப்பட்டுள்ளதாக, கல்வித்துறை வட்டாரங்கள் தெரிவித்தன. இந்த திட்டங்களை உள்ளடக்கிய பள்ளிகள் போக, மேலும் அடிப்படை வசதிகள் தேவைப்படும் பள்ளிகள் எண்ணிக்கை, குறைவாகவே இருக்கும் என, கல்வித்துறை எதிர்பார்க்கிறது. இந்தப் பள்ளிகளுக்கு, வரும் கல்வியாண்டில், தேவையான அளவிற்கு உள்கட்டமைப்பு வசதிகள் ஏற்படுத்தப்படும் என, துறை வட்டாரங்கள் தெரிவித்தன.
"தமிழகத்தில் 46% பள்ளிகளில் கழிப்பிட வசதியில்லை"-
அடிப்படை சுகாதார வசதிகள் மற்றும் மாணவ, மாணவிகளுக்கென தனித்தனி கழிப்பிட வசதி இல்லாத காரணத்தால், பொருளாதார நிலையில் பின்தங்கிய குடும்பங்களைச் சேர்ந்த மாணவிகள், பள்ளிப் படிப்பை தொடருவதற்கு தயக்கம் காட்டுவது, தனியார் நிறுவனம் நடத்திய ஆய்வில் தெரியவந்துள்ளது.
சைல்டு ரைட்ஸ் அண்டு யூ (Child Rights and You) என்ற தன்னார்வ தொண்டு நிறுவனம் நடத்திய இந்த ஆய்வில், பொருளாதாரத்தில் பின்தங்கிய பிரிவைச் சேர்ந்த சென்னையில் உள்ள 100 குடும்பங்களிடம் கேள்விகள் கேட்கப்பட்டன. இவர்களில் 94 சதவிகிதம் பேர், போதிய சுகாதார வசதி இல்லாத காரணத்தினால், தங்களின் பெண் குழந்தைகளை, பள்ளிகளில் இருந்து நிறுத்தி விடுவதாக கூறினர். இதே நிறுவனம், டெல்லி, கொல்கத்தா, மும்பை, பெங்களூரு உள்ளிட்ட பல்வேறு முன்னணி நகரங்களிலும் ஆய்வை நடத்தியது. தமிழகத்தில் செயல்படும் 46% பள்ளிகளில் முறையான கழிப்பிட வசதி இல்லை என்பதும் இந்த நிறுவனம் நடத்திய ஆய்வில் தெரியவந்துள்ளது.
மாணவிகளுக்கு உரிய பாதுகாப்பு இல்லாதது, பெண் ஆசிரியர்கள் பற்றாக்குறை, இளம் வயதிலேயே திருமணம் போன்ற பல்வேறு காரணங்களால், மாணவிகளின் எண்ணிக்கை சரிந்து வருவதாக அந்த ஆய்வு முடிவுகள் சுட்டிக்காட்டியுள்ளன. இந்த ஆய்வில் சென்னையைச் சேர்ந்த பெற்றோர் பலருக்கு, கட்டாயக் கல்விச் சட்டத்தின் கீழ், மாணவிகளுக்கு முறையான, சுகாதாரமான கழிப்பிட வசதியை பள்ளிகள் செய்து தர வேண்டும் என்ற விதிமுறை தெரிந்திருக்கவில்லை என்பதும் கண்டறியப்பட்டுள்ளது. மேலும் 85% பெற்றோருக்கு கட்டாயக் கல்விச் சட்டம் என்ற சட்டம் இருப்பதே தெரியவில்லை. ்
Tuesday, October 16, 2012
பட்டதாரி ஆசிரியர் விரைவில் நியமனம்
தொடக்க கல்வித் துறைக்கு, ஒதுக்கீடு செய்யப்பட்ட பட்டதாரி ஆசிரியர், விரைவில் பணி நியமனம் செய்யப்பட உள்ளனர்.கடந்த, 2008-09, 09-10, 10-11 ஆகிய, மூன்று ஆண்டுகளில், நிரப்பப்படாத, 319 பட்டதாரி ஆசிரியர் பணியிடங்களுக்கு, கடந்த ஜூனில், டி.ஆர்.பி., சான்றிதழ் சரிபார்ப்பை நடத்தியது.
அதன்பின், இறுதி தேர்வுப் பட்டியலையும் வெளியிட்டது. இவர்களில், பள்ளிக் கல்வித்துறைக்கு ஒதுக்கீடு செய்யப்பட்ட, 149 பட்டதாரி ஆசிரியர், 10ம் தேதி பணி நியமனம் செய்யப்பட்டனர். தொடக்க கல்வித்துறைக்கு ஒதுக்கீடு செய்யப்பட்ட, 83 பட்டதாரி ஆசிரியர், ஒரு வாரத்திற்குள், பணி நியமனம் செய்யப்படுவர் என, துறை வட்டாரங்கள் தெரிவித்தன.மதுரை மற்றும் கோவை மாநகராட்சி பள்ளிகளுக்கு ஒதுக்கீடு செய்யப்பட்ட, 19 பணிஇடங்கள், நிரப்பப்பட்டு விட்டன. இதர துறைகளுக்கு ஒதுக்கீடு செய்யப்பட்ட, ஆசிரியர்களை நியமனம் செய்வதற்கு, சம்பந்தப்பட்ட துறைகள் நடவடிக்கை எடுத்து வருகின்றன.
கல்வித்துறையில் தகவல் மேலாண்மை :ஆன்லைன் முறை டிசம்பரில் துவக்கம்
்தமிழகத்தில் பள்ளி கல்வி துறையில், அனைத்து பள்ளிகளின் நிலை குறித்த தகவல்கள், பதிவு செய்யப்பட்டு வருகிறது. டிசம்பர் முதல் இந்த தகவல்களை, ஆன்லைனில் பெறலாம்.தமிழகத்தில் அனைவருக்கும் கல்வி மற்றும் இடைநிலை கல்வி திட்டம் இணைந்து, கல்வி தகவல் மேலாண்மை முறைக்கான தகவல் சேகரிக்கும் பணியில் இறங்கியுள்ளது.
இதற்காக மாவட்டம்தோறும், பள்ளி தலைமை ஆசிரியர்களுக்கு, படிவங்கள் வழங்கப்பட்டு, பள்ளிகள் குறித்து தகவல் சேகரித்தனர். இப்பணி நேற்றுடன் முடிவடைந்தது. வட்டார மற்றும் மாவட்ட அளவில் சரிபார்க்கப்பட்டு, வரும் 21ம் தேதி, கம்பயூட்டரில் பதிவேற்றம் செய்யப்பட உள்ளது. பள்ளி கல்வி இயக்குனரகத்திற்கு நவ., 30க்குள் கம்ப்யூட்டர் பதிவுகள் அனுப்பப்படும். டிசம்பர் முதல், பள்ளிகள் மற்றும் ஆசிரியர்களின் விபரங்கள் குறித்து, tn.nic.gov.inஎன்ற முகவரியில் தெரிந்து கொள்ளலாம். மேலும் www.communication.tn.schools.gov.in என்ற இணையதளம் மூலம், கல்வித்துறை வட்டார அலுவலர்கள் மற்றும் மாவட்ட அலுவலர்கள் தங்களுக்குள், தகவல் பரிமாற்றம் செய்யவும், மாநில அலுவலர்கள் நேரடியாக பள்ளி, வட்டார மற்றும் மாவட்ட அளவில் தொடர்பு கொள்ளவும் முடியும்.
10 நாட்களில் டி.இ.டி தேர்வு கீ-ஆன்சர் வெளியீடு-
ஆசிரியர் தகுதி மறுதேர்வின், "கீ-ஆன்சர்" 10 நாட்களில் வெளியிடப்படுகிறது. அக்டோபர் 14ல் நடந்த, டி.இ.டி., மறு தேர்வில், 4.75 லட்சம் பேர் பங்கேற்றனர். ஜூலையில் நடந்த தேர்வை விட, இப்போது நடந்த தேர்வு, எளிதாக இருந்ததாலும், தேர்வு நேரத்தை, மூன்று மணி நேரமாக அதிகரித்து வழங்கியதாலும், அதிகம் பேர் தேர்ச்சி பெறுவர் என, டி.ஆர்.பி., எதிர்பார்க்கிறது. இதற்கிடையே, கேள்விகளுக்கான விடைகளை (கீ-ஆன்சர்), 10 நாளில் வெளியிட, டி.ஆர்.பி., திட்டமிட்டுள்ளது.
தற்போது, மாவட்டங்களில் இருந்து, விடைத்தாள் கட்டுகள், சென்னைக்கு வந்து கொண்டிருக்கின்றன. விடைத்தாள், ஸ்கேன் செய்வதற்கு முன்பே, விடைகளை வெளியிட்டால், ஏதாவது முறைகேடு நடப்பதற்கு வழி வகுத்தது போல் ஆகிவிடும் என்பதால், ஸ்கேன் செய்யும் பணிகள் முடிந்தபின், விடைகளை வெளியிட, டி.ஆர்.பி., தீர்மானித்துள்ளது.
தேர்ச்சி விகிதம் அதிகரிக்க மாணவர்களை தத்தெடுக்க உத்தரவு-
அரசு பள்ளிகளில் தேர்ச்சி விகிதத்தை அதிகரிக்க, 10 ,12ம் வகுப்பில் தலா பத்து மாணவர்களை தத்தெடுத்து, தினமும் அவர்களை கண்காணிக்க அரசு உத்தரவிட்டுள்ளது.
அரசு உயர்,மேல்நிலைப் பள்ளிகளில் பிளஸ் 2 மற்றும் 10ம் வகுப்புகளில், ஆண்டுதோறும் தேர்ச்சி விகிதம் அதிகரிக்கவும், அனைவரும் இடைநிலை கல்வியை கடக்கவும், அரசு புதிய உத்தரவு பிறப்பித்துள்ளது. இதன்படி, ஒவ்வொரு பள்ளியிலும், 10, 12ம் வகுப்பிற்கு பாடம் நடத்தும் ஆசிரியர்கள், குறைந்தது தலா பத்து மாணவ, மாணவிகளை தத்தெடுக்க வேண்டும். தங்களது கட்டுப்பாட்டிலுள்ள மாணவர்களிடம், தினமும் தங்களது பாடம் தவிர, மற்ற ஆசிரியர்கள் நடத்தியவை, வீட்டு பாடங்களை கண்காணிக்க வேண்டும்.
அவர்களை பொதுத் தேர்வில் அதிக மார்க் எடுக்க வைப்பதுடன், தேர்ச்சி விகித்தை அதிகரிக்க செய்ய வேண்டும். மாணவர்கள் தேர்வில் தோல்வியை தழுவினாலும், பள்ளிக்கு சரியாக வராவிட்டாலும், சம்பந்தப்பட்ட ஆசிரியரே பொறுப்பு. இதற்கான உத்தரவு, முதன்மை கல்வி அலுவலர்கள் மூலம் அமல்படுத்தப்பட்டுள்ளது. ஆசிரியர் ஒருவர் கூறுகையில்,
"அரசு பள்ளிகளில் மாணவர்களை தத்தெடுப்பது, ஆசிரியர்களுக்கு கூடுதல் சுமை. மாணவர்கள், ஆசிரியர் இடையே தகுந்த ஒத்துழைப்பு தேவை. ஒழுக்கமில்லாத மாணவ, மாணவிகளை கண்டிக்கக்கூடாது என, உத்தரவு இருக்கும் போது, ஒழுக்கமற்றவர்களை திருத்திக் கொண்டு வருவதில் சிரமம் ஏற்படும். பெற்றோர்களும் ஒத்துழைக்க வேண்டும், என்றார்