இலவச SMS களை உடனுக்குடன் பெற ON tnptfmani என்று type செய்து 9870807070 என்ற எண்ணிற்கு அனுப்பி இலவச குறுந்தகவல்களை(SMS) பெறுங்கள். DND (Do NOT Disturb) சர்வீஸ்ல் உள்ள எண்கள் அதனை(DND) நீக்கிய பிறகே இச்சேவையை பெறமுடியும். plz call 1909

Thursday, November 08, 2018

அரசு ஊழியர்களுக்கு 'ஐ.டி., கார்டு' கட்டாயம்


தமிழகத்தில் உள்ள அரசு அலுவலகங்கள், பள்ளி மற்றும் கல்லுாரி அலுவலகங்களில் பணியாற்றும் ஊழியர்கள், பெரும்பாலும், தங்கள் அடையாள அட்டையை அணிந்திருப்பதில்லை. இதனால், ஊழியர்கள் யார், பொதுமக்கள் யார் என, பிரித்து பார்க்க முடியவில்லை. இந்நிலையில், அனைத்து அரசு அலுவலகங்களிலும், ஊழியர்கள் அடையாள அட்டை அணிந்தே பணியாற்ற வேண்டும் என, இந்த ஆண்டு, ஜூலையில், சென்னை உயர் நீதிமன்றம் உத்தர விட்டது.

இந்த உத்தரவை பின்பற்றி, அனைத்து பள்ளி, கல்லுாரி அலுவலகங்கள் மற்றும் அரசின் பிற துறை அலுவலகங்களில், புகைப்படத்துடன் கூடிய அடையாள அட்டை அணிந்து, பணியாற்ற வேண்டும் என, அரசு சார்பில், சுற்றறிக்கை அனுப்பப்பட்டுள்ளது.

ஓய்வூதியம் வட்டி உயர்வு

பங்களிப்பு ஓய்வூதிய திட்டத்தின் கீழ், பிடித்தம் செய்யப்படும் தொகைக்கான வட்டி, உயர்த்தி அறிவிக்கப்பட்டுஉள்ளது.புதிதாக பணியில் சேர்ந்த, அரசு ஊழியர்களுக்கு, பங்களிப்பு ஓய்வூதிய திட்டம் அமல்படுத்தப் பட்டு உள்ளது. இத்திட்டத்தின் கீழ், பிடித்தம் செய்யப்படும் தொகைக்கு, ஜூலை, 1 முதல், செப்., 30 வரையிலான காலத்திற்கு, 7.6 சதவீதம் வட்டி நிர்ணயம் செய்யப்பட்டிருந்தது.

தற்போது, அக்., 1 முதல், டிச., 31 வரையிலான காலத்திற்கு, 8 சதவீதம் வட்டி நிர்ணயம் செய்து, தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது. இதற்கான அரசாணையை, நிதித்துறை செயலர், சண்முகம் வெளியிட்டுள்ளார்.

Wednesday, November 07, 2018

குழந்தைகள் தினம்: பள்ளிகளுக்கு இலவச டிவிடி


குழந்தைகள் தின கொண்டாட்டத்தை முன்னிட்டு, பள்ளிகளுக்கு இலவச டி.வி.டி. வழங்கும் திட்டத்தை குழந்தைகளுக்கான இந்திய திரைப்பட சமூகம் (சி.எஃப்.எஸ்.ஐ.) அறிவித்துள்ளது. இதுகுறித்து வெளியிடப்பட்ட செய்திக்குறிப்பு: மத்திய தகவல் மற்றும் ஒலிபரப்பு அமைச்சகத்தின்கீழ் இயங்கிவரும் சிஎஃப்எஸ்ஐ, குழந்தைகளுக்கான பிரத்யேக திரைப்படங்களைத் தயாரித்து வருகிறது.

இந்தத் திரைப்படங்கள் பொழுதுபோக்கு மட்டுமின்றி இளம் மனங்களில், நீதி போதனைகளை வளர்ப்பதற்கும் உதவுகின்றன. குழந்தைகள் தின கொண்டாட்டத்தை முன்னிட்டு, பள்ளிகளில் குழந்தைகள் தொடர்பான திரைப்படங்களை திரையிட வசதியாக இலவச டி.வி.டி.-க்களை சி.எஃப்.எஸ்.ஐ. வழங்கவுள்ளது. விருப்பமுள்ள பள்ளிகள் 044 -2498 1159 என்ற தொலைபேசி எண்ணைத் தொடர்பு கொள்ளலாம் என அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

நேரு பிறந்தநாள்: அரசுப் பள்ளி மாணவர்களுக்கு வாழ்த்து அட்டை வழங்க ஏற்பாடு


முன்னாள் பிரதமர் ஜவாஹர்லால் நேருவின் பிறந்த நாளான நவம்பர் 14 -ஆம் தேதி, பள்ளிக் குழந்தைகளின் புகைப்படத்துடன்கூடிய வாழ்த்து அட்டைகளை அரசுப் பள்ளி மாணவர்களுக்கு வழங்க பள்ளிக் கல்வித் துறை ஏற்பாடு செய்துள்ளது. முன்னாள் பிரதமர் ஜவாஹர்லால் நேருவின் பிறந்த நாளான நவம்பர் 14 -ஆம் தேதி, ஆண்டுதோறும் குழந்தைகள் தினமாக கொண்டாடப்படுகிறது. இதையொட்டி புதிய திட்டம் ஒன்றை பள்ளிக் கல்வித் துறை செயல்படுத்த உள்ளது.

இதன்படி, தமிழகத்தில் 5,000 அரசுப் பள்ளிகளில் தொடக்க கல்வி படிக்கும் மாணவர்களுக்கு, நவம்பர் 14-ஆம் தேதி குழந்தைகள் தின வாழ்த்து அட்டைகள் வழங்கப்பட உள்ளன. அதில் அந்தந்த குழந்தைகளின் புகைப்படங்களை இணைத்து அவர்களுக்கே வழங்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. இந்த வாழ்த்து அட்டைகளை பள்ளி ஆசிரியர்கள் மாணவர்களுக்கு வழங்குவார்கள். முதல்கட்டமாக 32 மாவட்டங்களில் 65 பள்ளிகளுக்கு வாழ்த்து அட்டைகளை பள்ளிக் கல்வித் துறை அனுப்பி வைத்துள்ளது.

Tuesday, November 06, 2018

பயோமெட்ரிக் வருகைப்பதிவு

ஆசிரியர்களுக்கு பயோ மெட்ரிக் வருகை பதிவேடு முறை : அரசாணை வெளியீடு

அரசுப் பள்ளிகளில் ஆசிரியர்களுக்கு பயோ-மெட்ரிக் வருகைப்பதிவு முறை அமல்படுத்தப்படும் என கடந்த மே மாதம் 30ஆம் தேதி நடந்த பள்ளிக்கல்வித்துறை மானியக் கோரிக்கை மீதான விவாதத்தின் போது அமைச்சர் கே.ஏ.செங்கோட்டையன் அறிவித்தார். அதன்படி, தமிழகத்தில் உள்ள அனைத்து பள்ளிகளிலும் பயோமெட்ரிக் முறையை அமல்படுத்துவதற்கான அரசாணை வெளியிடப்பட்டுள்ளது. 3 ஆயிரத்து 688 உயர்நிலைப்பள்ளி, 4 ஆயிரத்து 40 மேல்நிலைப்பள்ளி என மொத்தம் 7 ஆயிரத்து 728 பள்ளிகளில் பயோமெட்ரிக் பொருத்தப்பட உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

இந்த திட்டத்தை நிறைவேற்ற 15 கோடியே 30 லட்சம் நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளதாக அந்த ஆணையில் கூறப்பட்டுள்ளது. இதன் மூலம் ஆசிரியர்கள் மற்றும் மாணவர்கள் பள்ளிக்கு தாமதமாக வருவதை தவிர்க்க முடியும் என பள்ளிக்கல்வித்துறை நம்பிக்கை தெரிவித்துள்ளது. ஏற்கனவே,  பயோமெட்ரிக் வருகை பதிவு திட்டம், பெரம்பலூர் அரசு பள்ளிகளிலும், போரூர் பெண்கள் மேல்நிலைப்பள்ளியில் சோதனை அடிப்படையில் நடைமுறையில் உள்ள குறிப்பிடத்தக்கது. 

MORNING PRAYER 7-11-18

பள்ளி காலை வழிபாட்டு செயல்பாடுகள் - 07.11.18
திருக்குறள்

அதிகாரம்:இனியவை கூறல்

திருக்குறள்:91

இன்சொலால் ஈரம் அளைஇப் படிறிலவாம்
செம்பொருள் கண்டார்வாய்ச் சொல்.

விளக்கம்:

அறம் அறிந்தவர் வாயிலிருந்து பிறந்து, அன்பு கலந்து உள்நோக்கம் இல்லாது வருவதே இனிய சொல்.

பழமொழி

Many hands make work light

கூடி வாழ்ந்தால் கோடி நன்மை
இரண்டொழுக்க பண்பாடு

* முடிந்த அளவு தேவையில்லா பொருட்கள் வாங்குவதைத் தவிர்ப்பேன்.
* மறு சுழற்சி செய்யக்கூடிய பொருட்களையே வாங்கி என்னால் இயன்ற அளவு சுற்றுச்சூழல் பாதுகாப்புக்கு உறுதுணையாக இருப்பேன்.

பொன்மொழி

மனிதன்

நல்ல குறிக்கோளை அடைவதற்காகத் தொடர்ந்து முயலும் மனிதனின் செயல்பாடே பிற்காலத்தில் அனைவரும் படிக்கும் வரலாறாக மாறுகிறது.

     - கார்ல் மார்க்ஸ்

பொது அறிவு

1. கியூபா நாட்டை கண்டு பிடித்தவர் யார்?

கிறிஸ்டோபர்
கொலம்பஸ்

2. பியானோ என்பதன் அர்த்தம் என்ன?

மெல்லிசையாக இசைக்க வேண்டியது

தினம் ஒரு பாரம்பரிய உணவுப் பொருளின் மகத்துவம்

கடுக்காய்



1.  கடுக்காய் வறட்சி, பசியின்மை, தோல் நோய்கள், குடல் புண்கள், காமாலை, பல்நோய், கண்நோய்கள், கோழை, மூலம் இருமல் ஆகியவற்றைப் போக்கும்.

2. காயங்களை ஆற்றுவதற்கும் தீப்புண்களை ஆற்றுவதற்கும் கடுக்காய் முக்கியமானதாகும்.

English words and meaning

Wight ( Human ) மனிதன்
White.      வெண்மை
Whimper. தேம்பி அழுதல்
Whittle.
துண்டாக்கு( செதுக்கு)
Whim.     விருப்பம்

அறிவியல் விந்தைகள்

* கம்பளி பூச்சிகள் தாங்கள் பிறந்த இடத்தில் உள்ள இலைகளை மட்டுமே உண்ண வேண்டும். வேறு இடம் சென்று உண்ண ஆரம்பித்தால் அழிவுதான்
* அட்டை பூச்சிகளுக்கு 300 பற்கள் உண்டு
* உறுப்பு மாற்று அறுவை சிகிச்சை செய்த பிறகு மருத்துவர்கள் அந்த இடத்தில் அட்டை பூச்சியை கடிக்க வைத்து இரத்த ஓட்டம் சரி செய்வது உண்டு.
* வண்ணத்துப் பூச்சிகள் தங்கள் கால்களினால் உணவை ருசி பார்க்கும்.

நீதிக்கதை

தலைவன்

அந்தக் காட்டில் புறாக்கூட்டம் ஒன்று வசித்து வந்தது. ஒருநாள் எதேச்சையாக அந்தப் பக்கம் வந்த பருந்தின் கண்களில் புறாக்கூட்டம் தென்பட்டது. புறாக்களைப் பார்த்த பருந்துவுக்கு எச்சில் ஊறியது. ஏதாவது ஒரு புறா தனியாக வரும்; அதை எப்படியாவது தின்று விடலாம் என்று நீண்ட நேரமாக மறைந்து நின்றது. ஆனால், ஒரு புறா கூட கூட்டத்தை விட்டு தனியாகப் பிரிய வில்லை. இரை தேடும்போது கூட ஒன்றாகவே இருந்தன. எனவே, தந்திரத்தால் மட்டுமே இவை களை வெல்ல முடியும் என நினைத்து, அதைச் செயல்படுத்த ஆரம்பித்தது.

இரை தேடிக்கொண்டிருந்த புறாக்களிடம் சென்று, `அழகிய புறாக்களே! நீங்கள் அனைவரும் ஒற்றுமையோடு இருப்பது எனக்கு மகிழ்ச்சியாக உள்ளது. ஆனால், என்னைப்போல வலிமை வாய்ந்த ஒருவர் உங்க ளுக்குத் தலைவனாக இருந்தால், யாராலும் உங்களை எதுவும் செய்ய முடியாது' என கனிவோடு கூறியது. பருந்தின் பேச்சில் மயங்கிய புறாக்கள், அதைத் தங்களுடைய தலைவனாக ஏற்றுக் கொண்டன.

அன்று முதல் தினமும் ஒவ்வொரு புறாவாக காணாமல் போய்க் கொண்டிருந்தன. இதனால் மற்ற புறாக்கள் கவலைப்பட ஆரம்பித்தன. பருந்தும் அவர்களோடு சேர்ந்து கவலைப்படுவதாக நடித்தது. ஆனால், கொஞ்ச நாளிலேயே புறாக்கள் காணாமல் போவதற்குக் காரணம் பருந்து தான் என்பதைக் கண்டுபிடித்து விட்டன. எல்லாப் புறாக்களும் ஒன்று சேர்ந்து அந்தப் பருந்தை அடித்துத் துரத்தின.

(எதிரியைக் கூடவே வைத்துக் கொண்டால், இழப்புகள் மட்டுமே மிஞ்சும்.)

இன்றைய செய்திகள்

07.11.18

* ஜிப்மர் செவிலியர் கல்லுாரியின் முதலாமாண்டு மாணவிகள் 13வது ஆண்டு தீப ஔி ஏற்றி உறுதி மொழி ஏற்கும் விழா, அப்துல் கலாம் கலையரங்கில் நடந்தது.

* இந்தியாவில் தயாரிக்கப்பட்ட முதல், அணுசக்தியால் இயங்கும்,கடலில் இருந்து ஏவுகணை தாக்குதல் நடத்தும் திறன் படைத்த ஐ.என்.எஸ்.அரிஹாந்த் என்ற நீர்மூழ்கி கப்பல் தன் முதல் வெள்ளோட்டத்தை வெற்றிகரமாக நிறைவு பெற்றது.

* அவசர தேவைக்கு எண் 100-ஐ அழைப்பதை வேகமாக பொதுமக்களுக்காக உதவிடும் காவலன் ஆப் செயலியை காவல்துறை அறிமுகப்படுத்தியுள்ளது.

* இந்தியா, மேற்கிந்தியத் தீவு அணிகளுக்கு இடையிலான 2-வது டி20 கிரிக்கெட் ஆட்டம் இன்று லக்னோவில் நடைபெறவுள்ளது. இந்த ஆட்டத்தில் வென்று டி20 கிரிக்கெட் தொடரை வெல் லும் முனைப்பில் இந்திய அணி களமிறங்கியுள்ளது.

* வங்கதேசம் அதிர்ச்சித் தோல்வி: 17 ஆண்டுகளுக்குப் பிறகு அயல்நாட்டில் டெஸ்ட் வெற்றி பெற்றது ஜிம்பாப்வே.

Sunday, November 04, 2018

ஆன்லைன் மூலம் கற்பித்தல்: பள்ளிகளில் ஆய்வு நடத்த முடிவு


பள்ளி மாணவர்களுக்கு ஆன்லைன் மூலம் கற்பிக்க அறிமுகப்படுத்தப்பட்டுள்ள க்.யூ. ஆர். கோடு, தீக்ஷா செயலி ஆகியவை எவ்வாறு செயல்படுத்தப்படுகின்றன என்பது குறித்து பள்ளிகளில் ஆய்வு நடத்தப்படவுள்ளது. தமிழக பள்ளிகளில் புதிய பாடத்திட்டத்தின் அடிப்படையில், "க்யூ.ஆர்.,' கோடு மூலமாக கற்பிக்கும் முறை நிகழாண்டு அறிமுகம் செய்யப்பட்டுள்ளது.

இதன் மூலம் ஆசிரியர்கள் மட்டுமல்லாமல், பெற்றோரும் பாடத்திட்ட கருத்துகளை தெரிந்து கொள்ள முடியும். இத்துடன் " தீக்ஷா' செயலியில் உள்ள விடியோகளை பதிவிறக்கி வகுப்புகளில் கையாளவும், ஆன்லைன் தேர்வு நடத்தவும் ஆசிரியர்களுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது. இந்தத் திட்டங்கள் செயல்படும் விதம் குறித்து, பள்ளிக் கல்வித்துறையின் "தீக்ஷா' திட்ட குழுவினர், பள்ளிகளில் முன்னறிவிப்பின்றி ஆய்வு நடத்தவுள்ளனர்.

இது குறித்து "சமக்ர சிஷ்யா அபியான்' கூடுதல் திட்ட இயக்குநர் குப்புசாமி வெளியிட்ட அறிக்கையில், "மத்திய அரசு உருவாக்கிய, தீக்ஷா செயலியில், மாநில பாடத்திட்டத்திற்கான, டிஜிட்டல் கருத்துகள் அதிகளவில் இடம்பெற்றுள்ளன. இதைப் பயன்படுத்தும் பள்ளிகளை ஊக்குவிக்கவும், ஆசிரியர்களிடம் இருந்து, புதிதாக இச்செயலியில் சேர்க்கப்பட வேண்டியவை குறித்த, கருத்துக்களைப் பெறவும் பள்ளிகளில் ஆய்வு மேற்கொள்ளப்படும்' எனக் கூறப்பட்டுள்ளது.

Friday, November 02, 2018

அரசு உதவி பெறும் பள்ளிகளில் ஆசிரியர் பணியிடங்கள்: கல்வித் துறை புதிய உத்தரவு


அரசு உதவி பெறும் தனியார் பள்ளிகளில் மாணவர் குறைவாக உள்ள இடங்களில் ஆசிரியர் பணியிடங்களை ரத்து செய்ய உத்தரவிடப்பட்டுள்ளது. தமிழக அரசுப் பள்ளிகளில் மாணவர் - ஆசிரியர் விகிதப்படி மாணவர் எண்ணிக்கையைவிட அதிக ஆசிரியர்கள் உள்ளனர். குறிப்பாக, 35 மாணவர்களுக்கு, ஒரு ஆசிரியர் இருக்க வேண்டிய நிலையில் பல பள்ளிகளில், 35 மாணவர்களுக்கு இரண்டுக்கும் மேற்பட்ட ஆசிரியர்கள் உள்ளனர். இதையடுத்து, அதிகமாக உள்ள ஆசிரியர்கள், அங்கிருந்து மாற்றப்பட்டு, தேவை உள்ள பள்ளிகளில் நியமிக்கப்படுகின்றனர்.

ஆனால், அரசு உதவி பெறும் பள்ளிகளில் இதுபோன்ற இடமாறுதல் செய்ய முடியவில்லை. எனவே, உபரியாக ஆசிரியர்கள் உள்ள அரசு உதவி பெறும் தனியார் பள்ளிகளில் ஆசிரியர்கள் ஓய்வு பெறும்போது அந்தப் பணியிடங்களை ரத்து செய்ய உத்தரவிடப்பட்டுள்ளது. ஓய்வு பெறுவோர் பணியிடத்தில் புதியவர்களை நியமிக்காமல் அரசிடம் ஒப்படைக்குமாறு மாவட்டக் கல்வி அதிகாரிகளுக்கு, தொடக்கக் கல்வி இயக்குநர் கருப்பசாமி உத்தரவிட்டுள்ளார்.

Thursday, November 01, 2018

அனைத்து மாவட்டங்களிலும் மாதிரிப் பள்ளிகள்: அரசாணை வெளியீடு


தமிழகத்தில் மாவட்டத்துக்கு ஒரு அரசு மேல்நிலைப் பள்ளி வீதம் 32 மாவட்டங்களிலும் மாதிரிப் பள்ளிகளை ஏற்படுத்த அரசாணை வெளியிடப்பட்டுள்ளது. இது குறித்து பள்ளிக் கல்வித் துறை முதன்மைச் செயலர் பிரதீப் யாதவ் பிறப்பித்துள்ள அரசாணை விவரம்:

தமிழக சட்டப்பேரவையில் விதி 110-ன் கீழ் மாவட்டத்துக்கு ஒரு அரசு மேல்நிலைப்பள்ளி வீதம் 32 மாவட்டங்களிலும் தேர்ந்தெடுக்கப்பட்ட 32 பள்ளிகளுக்குத் தேவையான உள்கட்டமைப்பு வசதிகளை ஏற்படுத்தி கல்வி கற்பிக்கும் தரத்தை மேலும் உயர்த்தும் வகையிலும், வளர்ந்து வரும் அறிவியல் மற்றும் தொழில்நுட்ப வளர்ச்சிக்கேற்ப இந்தப் பள்ளிகள் மாதிரிப் பள்ளிகளாக செயல்படும் வகையிலும் ஒரு பள்ளிக்கு ரூ.50 லட்சம் வீதம் மொத்தம் ரூ.16 கோடி செலவில் மாதிரிப் பள்ளிகள் உருவாக்கப்படும் என்ற அறிவிப்பை முதல்வர் எடப்பாடி கே.பழனிசாமி கடந்த ஜூன் 1-ஆம் தேதி வெளியிட்டார்.

என்னென்ன வசதிகள்?: இதன்படி மாவட்டத்துக்கு ஒரு அரசு மேல்நிலைப் பள்ளி வீதம் 32 மாவட்டங்களில் 32 அரசு மேல்நிலைப்பள்ளிகளை தெரிவு செய்து அந்தப் பள்ளிகளில் உயர் தொழில்நுட்பக் கணினி ஆய்வகம், திறன் வகுப்பறை, முழுமையான உபகரணங்களுடன் கூடிய ஆய்வகம், சோலார் விளக்குகள், கண்காணிப்பு கேமராக்கள், வகுப்பறைகளில் கண்ணாடி இழையிலான கரும்பலகைகள், மாணவர்களுக்கு நவீன வசதியுடன் கூடிய விளையாட்டுத் திடல், நுண்கலைத் திறனை வளர்ப்பதற்கான வசதிகள், பள்ளிக் கட்டடங்கள் ஆகிய உள்கட்டமைப்பு வசதிகளை ஏற்படுத்தி மாதிரிப் பள்ளிகளாக உருவாக்கப்படும்.

இவற்றை உலகத் தரம் வாய்ந்த வசதிகளுடன் கூடிய முன்மாதிரியான மாதிரிப் பள்ளிகளாக உருவாக்கி தரமான கல்வியை அளிக்க இந்த அரசாணை வழிவகுக்கிறது. இதன்படி, எல்.கே.ஜி. முதல் பிளஸ் 2 வகுப்பு வரை ஒரே பள்ளியில் தொடங்கி, சில பிரிவுகள் ஆங்கில வழிக் கல்வியில் மாற்றியமைப்படும். இந்தத் துறையின் முன்னோடித் திட்டங்களை செயல்படுத்துவதில் இந்தப் பள்ளிகளுக்கு முன்னுரிமை அளிக்கப்படும். மாணவர்- ஆசிரியர் விகிதாச்சாரப்படி கூடுதல் ஆசிரியர்களை தேவையின் அடிப்படையில் மாறுதல் மூலம் பணி நியமனம் செய்யவும், மாணவர்கள் கல்வி மட்டுமின்றி கலை, விளையாட்டிலும் சிறந்து விளங்க அனைத்து வசதிகளுடன் கூடிய மாதிரிப் பள்ளிகளாக அமைத்திடலாம் எனக் கருதி அரசு அவ்வாறே ஆணையிடுகிறது.

ரூ.16 கோடி ஒதுக்கீடு: மேலும் 32 மாதிரிப் பள்ளிகளுக்கு தேவையான அடிப்படை வசதிகள், இதர வசதிகளை உருவாக்கவும், மேம்படுத்தவும் பள்ளி ஒன்றுக்கு ரூ.50 லட்சம் வீதம் 32 பள்ளிகளுக்கு ரூ.16 கோடியை நிர்வாக ஒப்பளிப்பு வழங்கி அரசு ஆணையிடுகிறது. மீதமுள்ள ரூ.10 கோடியே 50 லட்சத்து 16 ஆயிரத்தை சட்டப்பேரவை, நாடாளுமன்ற உறுப்பினர்களின் பங்களிப்பு, சமூகப் பங்களிப்பு திட்டங்கள் மூலம் பெறுவதற்கு பள்ளிக் கல்வி இயக்குநர் நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் என அதில் கூறியுள்ளார்.

மோமோ எனும் இணையதள ஆபத்து: மாணவர்களிடம் விழிப்புணர்வு ஏற்படுத்த உத்தரவு


மோமோ உள்ளிட்ட ஆபத்தான இணையதள விளையாட்டுகளின் தீமைகள் குறித்து மாணவ, மாணவிகளிடம் விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும் என அனைத்து மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர்களுக்கு பள்ளிக் கல்வித்துறை உத்தரவிட்டுள்ளது. இது குறித்து பள்ளிக் கல்வி இயக்குநர் வி.சி.ராமேஸ்வரமுருகன் அனைத்து மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர்களுக்கு அனுப்பியுள்ள சுற்றறிக்கை விவரம்:

மோமோ என்ற சவால் விளையாட்டு, முன்பின் அறிமுகம் இல்லாத நபர்களின் செல்லிடப்பேசி எண்களைத் தொடர்பு கொண்டு, இதன் குழு உறுப்பினர்களால் சவால்கள் அழைப்பாக விடுக்கப்படுகிறது. இந்த தீய விளையாட்டு மாறுபட்ட, வேறுபாடுகளுடன் கூடிய, பயங்கரமான சவால்கள் நிறைந்த தனி மனிதர்களுக்கு தீங்கு விளைவிக்கக் கூடியதும், விளையாட்டின் முடிவாக தற்கொலை செய்து கொள்வதும் மட்டுமே சவாலின் இறுதி முடிவாக அமையும் வகையில் உருவாக்கப்பட்டுள்ளது.

ப்பான் மோமோ பொம்மை குழந்தையின் உருவம் பொறித்த முத்திரையுடன் கொடூரமான கண்களுடன் பயமுறுத்தக் கூடிய மோமோ விளையாட்டானது வாட்ஸ் ஆஃப் பதிவிறக்கத்தின் மூலம் குழந்தைகள், பருவ வயதினர்கள், ஈடுபடும் விளையாட்டாளர்கள் இவர்களை தவறான வழியில் உட்படுத்துகின்ற சவால்களில், தன்னை மறந்து ஈடுபடுமாறு செய்து தொடர் வன்முறை செயல்களுக்கு இட்டுச் செல்கிறது. தொடர் சவால்களில் பங்கு பெறும் வகையில் ஆர்வத்தைத் தூண்டியும், பயமுறுத்தக் கூடிய உருவங்கள் மூலம் மிரட்டியும் ஒளிப்பதிவுகள், விடியோ பதிவுகள் மூலம் மாணவ, மாணவிகளை தனது கட்டுப்பாட்டிலிருந்து வழுவச் செய்து விளையாட்டினை எந்தவொரு சூழ்நிலையிலும் தவிர்க்க இயலாது, தொடர்ந்து விளையாடும் வகையில் இதன் கட்டுப்பாட்டாளர்களால் வடிவமைக்கப்பட்டுள்ளது.

இந்தியாவில் இந்த விளையாட்டை விளையாடிக் கொண்டிருக்கும்போது தற்கொலை செய்து கொள்ளும் நிகழ்வுகள், செய்திகள், ஊடகங்கள் மூலமாகத் தெரிய வருகிறது. பள்ளி மாணவர்களுக்கு பாதுகாப்பான கல்வி கற்கும் சூழலை ஊக்குவிக்கவும், பள்ளிகளில் தகவல் தொழில்நுட்பம் கருவிகள் மூலம் மாணவர்களுக்கு தீங்கிழைக்கும் இணையதள செயல்களிலிருந்தும் மீட்கும் பொருட்டு உரிய நடவடிக்கைகள் எடுக்கவும் அனைத்து மாவட்ட முதன்மைக் கல்வி அதிகாரிகளுக்கு அறிவுறுத்தப்படுகிறது. யோகா- உடற்பயிற்சியில் ஈடுபடுத்த...: இணையதள விளையாட்டுகளில் ஈடுபடுவதால் மாணவ, மாணவிகளின் கற்கின்ற நேரம் விரயமாவதுடன் அவர்களின் மனநிலை தேவையில்லாத குழப்பங்களுக்கு உட்படுவதால் கல்வி கற்கும் தன்மையில் கவனமின்மை ஏற்படும். இது குறித்து மாணவர்களுக்கு உரிய முறையில் அறிவித்து யோகா, உடற்பயிற்சி, மைதானத்தில் விளையாடக் கூடிய விளையாட்டுகளில் அதிகளவில் பங்கேற்கச் செய்து அவர்களது உடல் மற்றும் மனவளத்தை மேம்படுத்த உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்.

மேலும், இணையதள விளையாட்டுகளினால் ஏற்படும் தீமைகளை பெற்றோர் ஆசிரியர் சந்திப்பு மற்றும் தொடர்பான கூட்டங்களில் தனியொரு கூட்டப் பொருளாக வைத்து பெற்றோர் புரிந்து கொள்ளும் வகையில் அவர்களுடன் விவாதித்து, மாணவர்களின் கல்வி மற்றும் வாழ்க்கைத் தரத்தில் முன்னேற்றக் கூடிய நடவடிக்கைகளை மேற்கொள்ள தலைமையாசிரியர்களுக்கு அறிவுறுத்த அனைத்து மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர்கள் கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள் என அதில் கூறியுள்ளார்.

2-11-18- Morning prayer

2-11-18
பள்ளி காலை வழிபாடு செயல்பாடுகள்:

திருக்குறள்:78

அன்பகத் தில்லா உயிர்வாழ்க்கை வன்பாற்கண்
வற்றல் மரந்தளிர்த் தற்று.

உரை:
அகத்தில் அன்பு இல்லாமல் வாழும் உயிர் வாழக்கை வளமற்ற பாலைநிலத்தில் பட்டமரம் தளிர்த்தாற் போன்றது.

பழமொழி :

Desire is the root of all evil

ஆசையே எல்லாத் தீங்கிற்கும் காரணம்

பொன்மொழி:

அதிர்ஷ்டத்தின்
விளையாட்டுதான்
ஒரு மனிதனின்
வாழ்க்கை.

இரண்டொழுக்க பண்பாடு :

1.நான் என்னுடைய வாழ்நாளில் யாருடைய உடலுக்கும் மனதிற்கும் துன்பம் தரமாட்டேன் .

2.துன்பப்படுவோர்க்கு என்னால் முடிந்த உதவிகளை செய்வேன் .

பொது அறிவு :

1.கேரளா அரசு சின்னம்?
இரண்டு யானைகள், மத்தியில் சங்கு, அசோக சக்கரம்

2.கர்நாடகா அரசு சின்னம்?
மத்தியில் இரட்டைத் தலைகளுடன் தும்பிக்கையுள்ள இரண்டு சிங்கம், சத்யமேவ ஜெயதே வாசகம்

நீதிக்கதை

(The Gardener and the Monkeys)

 அது ஒரு அழகிய கிராமம். அந்த கிராமத்தில் தோட்டக்காரன் ஒருவன் வாழ்ந்து வந்தான். அவன் தினமும் தோட்டத்தில் உள்ள செடி கொடிகளுக்கு தண்ணிர்  ஊற்றி வந்தான். அவன் தண்ணிர் ஊற்றும்போதெல்லாம் அங்கு சில குரங்குகள் வந்து விளையாடும்.

பல வருடங்கள் அங்கேயே இருந்ததால் தோட்டக்காரனும் குரங்கும் நண்பர்களாயிருந்தன. தோட்டக்காரன் செய்யும் காரியங்களைப் பார்த்துப் பார்த்து குரங்குகளும் அப்படியே செய்து வந்தன.

ஒருமுறை தோட்டக்காரன் பக்கத்து ஊருக்குப் போக வேண்டியிருந்தது. குரங்குகளை அழைத்து விஷயத்தைச் சொன்னான்.

குரங்குகளுக்கு சந்தோஷம். ஆனால், அவற்றுக்கு ஒரு பிரச்னை. எந்தச் செடிக்கு எவ்வளவு தண்ணீர் ஊற்றுவது என்று தெரியவில்லை.

''அது ஒண்ணும் பெரிய பிரச்னயில்லை. வேர் பெரியதாக இருந்தால் நிறைய தண்ணீர் ஊத்துங்க. சிறிய வேரா இருந்தால் கொஞ்சமா தண்ணீர், ஊத்துங்க'' என்று யோசனை சொன்னான்.

வெளியூர் போய் திரும்பி வந்து தோட்டத்தப் பார்த்த தோட்டக்காரனுக்கு அதிர்ச்சி. அத்தனை செடிகளும் பிடுங்கப்பட்டு காய்ந்து கிடந்தன. ''என்னாச்சு?'' என்றான் தோட்டக்காரன்.

''வேர் பெருசா இருக்கா, சின்னதா இருக்கானு பார்க்கிறக்காக, செடியெல்லாம் பிடுங்கினோம்'' என்றன குரங்குகள்.

நீதி: புத்தியில்லாதவர்களிடம் பொறுப்பை கொடுப்பது, புத்தியில்லாத செயல்.

இன்றைய செய்தி துளிகள்

1.தீபாவளி பண்டிகையொட்டி ஸ்வீட் கடைகளை ஆய்வு செய்ய குழுக்கள் : உணவு பாதுகாப்பு அதிகாரி தகவல்

2.வனத்துறை ஊழியர்களுக்கு தமிழக அரசு தீபாவளி போனஸ், கருணைத் தொகை அறிவிப்பு

3.தமிழகம், புதுச்சேரியில் வடகிழக்கு பருவமழை துவங்கிவிட்டது: சென்னை வானிலை ஆய்வு மையம்

4.தீபாவளியை முன்னிட்டு நவ.5 வரை நியாய விலை கடைகள் திறப்பு: தமிழக அரசு அறிவிப்பு

5.5-வது ஒருநாள் போட்டியில் வெ.இண்டீஸை 9 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வீழத்தி தொடரை கைப்பற்றியது இந்தியா