இலவச SMS களை உடனுக்குடன் பெற ON tnptfmani என்று type செய்து 9870807070 என்ற எண்ணிற்கு அனுப்பி இலவச குறுந்தகவல்களை(SMS) பெறுங்கள். DND (Do NOT Disturb) சர்வீஸ்ல் உள்ள எண்கள் அதனை(DND) நீக்கிய பிறகே இச்சேவையை பெறமுடியும். plz call 1909

Sunday, May 27, 2018

பள்ளிகளில் உளவியல் ஆலோசனை வழங்க ஆசிரியர், ஆசிரியைகளை பொறுப்பாளர்களாக நியமிக்க கல்வித் துறை அறிவுறுத்தல்


தமிழகத்தில் செயல்பட்டு வரும் அனைத்து வகைப் பள்ளிகளிலும் மாணவர், மாணவிகளின் உளவியல் ரீதியான பிரச்னைகளுக்கு தீர்வு காணும் வகையில் பணி மூப்பு ஆசிரியர், ஆசிரியைகளை பொறுப்பாசிரியர்களாக நியமிக்க வேண்டுமென கல்வித்துறை அறிவுறுத்தியுள்ளது.

இது தொடர்பாக தமிழ்நாடு பள்ளிக் கல்வி இயக்குநர், அனைத்து மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர்களுக்கும் அனுப்பியுள்ள சுற்றறிக்கை: பள்ளிகளில் மாணவர்கள் எதிர்கொள்ளும் உளவியல் ரீதியான பிரச்னைகளை கண்டறிந்து அவற்றுக்குத் தீர்வு காணும் வகையில் மாநில அளவில் குழு அமைத்து செயல்படுத்த சென்னை உயர்நீதிமன்றம் ஆணையிட்டுள்ளது.

இதன்படி, பள்ளிக் கல்வி இயக்குநரை தலைவராகவும், நாட்டு நலப்பணித் திட்ட இணை இயக்குநரை உறுப்பினர்-செயலராகவும், முதன்மைக் கல்வி அலுவலர்களை உறுப்பினர்களாகவும் கொண்டு மாநில அளவிலான குழு அரசால் அமைக்கப்பட்டுள்ளது. இதில் உளவியல் மருத்துவர்கள், கல்வியாளர்கள் இடம் பெற்றுள்ளனர். உளவியல் பொறுப்பாசிரியர்: ஒவ்வொரு மாவட்டத்திலும் முதன்மைக் கல்வி அலுவலர் தலைமையில் குழு அமைத்து அதன் மூலம் பள்ளி மாணவர்களுக்கு ஏற்படும் உளவியல் ரீதியான பிரச்னைகளை கண்டறிந்து நடவடிக்கை மேற்கொள்ள அரசு அறிவுறுத்தியுள்ளது.

இன்றைய சூழலில் பள்ளி மாணவர்கள் சிலர் தேர்வு பயம், வளர் இளம் பருவ பிரச்னைகள், மன அழுத்தம் உள்ளிட்ட உளவியல் பிரச்னைகளால் எளிதில் பாதிக்கப்பட்டு எதிர்மறையான செயல்களில் ஈடுபடுகின்றனர். மாணவர்களின் எதிர்காலம் மற்றும் அவர்களின் நலனைக் கருத்தில் கொண்டு ஒவ்வொரு பள்ளியிலும் பணிமூப்பு மற்றும் தகுதி, திறமை வாய்ந்த ஓர் ஆண் ஆசிரியர், ஒரு பெண் ஆசிரியர் உளவியல் ஆலோசனை வழங்க பொறுப்பாசிரியர்களாக நியமிக்கப்பட வேண்டும். ஆண் ஆசிரியர்கள் மாணவர்களுக்கும், பெண் ஆசிரியர்கள் மாணவிகளுக்கும் தேவையின் அடிப்படையில் உளவியல் ஆலோசனை வழங்க வேண்டும். இந்த பொறுப்பாசிரியர்களுக்கு உளவியல் ஆலோசனை வழங்குவது சார்ந்த பயிற்சிகளை வழங்க வேண்டும்.

அனைத்து வகை பள்ளிகளிலும்...:

இந்த உளவியல் பொறுப்பாசிரியர்கள் அரசுப் பள்ளிகள், அரசு உதவி பெறும் பள்ளிகள், சுயநிதி பள்ளிகள், சிபிஎஸ்இ, ஐசிஎஸ்இ, ஐபி உள்ளிட்ட அனைத்து வகை பள்ளிகளிலும் நியமிக்கப்பட வேண்டும். பள்ளிகளில் பொறுப்பாசிரியர்கள் நியமிக்கப்பட்டுள்ள விவரங்களை ஆய்வு அலுவலர்கள் ஆய்வு செய்ய வேண்டும். இதற்கென பள்ளிகளில் தனியாக பதிவேடு பராமரிக்க வேண்டும் என சுற்றறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

Saturday, May 26, 2018

Tentative training date


கட் ஆப்’ மதிப்பெண்களை கணக்கிடுவது, கல்லூரிகளை தேர்ந்து எடுப்பது குறித்த வீடியோ அண்ணா பல்கலைக்கழகம் வெளியிட்டது


அண்ணா பல்கலைக்கழகம் இந்த வருடம் ஆன்லைன் மூலம் கலந்தாய்வை நடத்த உள்ளது. இதற்காக ஆன்லைன் மூலம் மாணவ-மாணவிகள் விண்ணப்பித்து வருகிறார்கள். ஆனால் மாநில பாடத்திட்டத்தில் பிளஸ்-2 படித்த மாணவர்கள் மதிப்பெண்ணை விண்ணப்பத்தில் பூர்த்தி செய்யவேண்டியதில்லை.

காரணம், அரசு தேர்வுத்துறையில் இருந்து மாணவர்களின் மதிப்பெண்கள் அடங்கிய சி.டி. அனுப்பப்பட்டு அண்ணாபல்கலைக்கழக என்ஜினீயரிங் சேர்க்கை செயலாளர் பேராசிரியர் ரைமண்ட் உத்தரியராஜ் பெற்றுள்ளார். மதிப்பெண்ணை விண்ணப்பத்தில் பூர்த்திசெய்யும் பணியை அண்ணாபல்கலைக்கழகம் செய்து கொண்டிருக்கிறது.

என்ஜினீயரிங் சேர உள்ள மாணவர்களுக்கு கட்-ஆப் மதிப்பெண் முக்கியம். அது தெரிந்தால் தான் அவர்களுக்கு எந்த கல்லூரி கிடைக்கும் என்று கணக்கிட முடியும்.

பிளஸ்-2 தேர்வில் கணிதம் பாடத்தில் 200 மதிப்பெண் எடுத்ததை 2 ஆல் வகுக்கவேண்டும். அப்போது கிடைக்கும் மதிப்பெண்ணுடன், இயற்பியல் பாடத்தில் எடுத்த மதிப்பெண்களை 4 ஆல் வகுத்து வரும் எண்ணை கூட்டவேண்டும். மேலும் வேதியியல் பாடத்தில் எடுத்த மதிப்பெண்களை 4 ஆல் வகுத்து கிடைக்கும் எண்ணையும் கூட்டவேண்டும். அப்படி கூட்டினால் கிடைக்கும் மதிப்பெண்தான் கட் ஆப். இதை எப்படி கட்-ஆப் மதிபெண் வருகிறது என்று தெரிந்துகொள்ள வீடியோ மற்றும் ஆடியோ அண்ணாபல்கலைக்கழகம் தனது இணையதளத்தில் ( www.tnea.ac.in) வெளியிட்டுள்ளது.

மேலும் அந்த கட்-ஆப் மதிப்பெண்களை கொண்டு கல்லூரிகளை தேர்ந்து எடுப்பது எப்படி என்பது குறித்தும் விவரமாக வெளியிடப்பட்டுள்ளது. மாணவ-மாணவிகள் அந்த வீடியோவை பார்த்து அதில் கூறியபடி செய்தால் கல்லூரிகளை தேர்ந்து எடுக்கலாம்.

நேற்றுவரை 1 லட்சத்து 20 ஆயிரத்து 569 மாணவ-மாணவிகள் விண்ணப்பித்துள்ளனர். இதுகுறித்து ரைமண்ட் உத்தரியராஜ் கூறியதாவது:-

கட்-ஆப் குறைவது, கூடுவது குறித்து எதுவும் கூறமுடியாது. பிளஸ்-2 சி.டி.யை முழுவதும் பார்த்தால்தான் தெரிந்துகொள்ளமுடியும். கூடிய மட்டும் கட்-ஆப் மதிப்பெண்கள் குறைய வாய்ப்பு உள்ளது. அவ்வாறு குறைந்தால் கடந்த ஆண்டு பிளஸ்-2 முடித்து இப்போது விண்ணப்பிக்கும் மாணவர்களுக்கு நல்ல கல்லூரி கிடைக்க வாய்ப்பு உள்ளது.

இன்ஜி., கவுன்சிலிங் கட் ஆப் பட்டியல் மாவட்டம் வாரியாக விபரஙர்கள் வெளியீடு


அண்ணா பல்கலை நடத்தும், இன்ஜினியரிங் கவுன்சிலிங்கில் பங்கேற்கும் மாணவர்களின் வசதிக்காக, இன்ஜி., கல்லுாரிகளின் சென்ற ஆண்டு, 'கட் - ஆப்' மதிப்பெண் பட்டியல் வெளியிடப்பட்டுள்ளது.அண்ணா பல்கலை இணைப்பில் உள்ள, 550க்கும் மேற்பட்ட இன்ஜினியரிங் கல்லுாரிகளுக்கான, மாணவர்கள் சேர்க்கைக்கு, தமிழக அரசு சார்பில், அண்ணா பல்கலையில் கவுன்சிலிங் நடத்தப்படுகிறது.

ஒற்றைச் சாளர முறையில் நடந்து வந்த கவுன்சிலிங், இந்த ஆண்டு முதல், ஆன்லைனில் நடத்தப்படும் என, அறிவிக்கப்பட்டுள்ளது.கவுன்சிலிங்கில் பங்கேற்க விரும்பும் மாணவர்களுக்கான, ஆன்லைன் விண்ணப்பப் பதிவு, மே, 3ல் துவங்கியது. அடுத்த மாதம், 2ம் தேதி வரை, விண்ணப்பிக்க அவகாசம் வழங்கப்பட்டுள்ளது.இந்நிலையில், கவுன்சிலிங்கில் பங்கேற்கும் மாணவர்களுக்கு வழிகாட்டும் விதமாக, கூடுதல் தகவல்களை, அண்ணா பல்கலை வெளியிட்டுள்ளது.

அண்ணா பல்கலை இணைப்பில் உள்ள, 550க்கும் மேற்பட்ட கல்லுாரிகளில், தேர்வு எழுதிய மாணவர்களின் எண்ணிக்கை மற்றும் தேர்ச்சி விகிதம் வெளியிடப்பட்டுள்ளது. அண்ணா பல்கலையின்,https://www.annauniv.eduஎன்ற, இணையதளத்தில், இந்த தகவல்கள் வெளியிடப்பட்டுள்ளன.அதே போல, இன்ஜினியரிங் படிப்பில் சேர்வதற்கான, கட் - ஆப் மதிப்பெண் பட்டியல், தமிழ்நாடு இன்ஜினியரிங் மாணவர் சேர்க்கை கமிட்டியின்,https://tnea.ac.inஎன்ற, இணையதளத்தில் வெளியிடப்பட்டுள்ளது. அதாவது, சென்ற ஆண்டு இன்ஜினியரிங் சேர்க்கையில், மாணவர்கள் ஒவ்வொரு கல்லுாரியிலும் சேர்ந்த, கட் - ஆப் மதிப்பெண், பாடவாரியாக வெளியிடப்பட்டு உள்ளது.இதில், முன்பைவிட மிகவும் தெளிவாக, கல்லுாரி, கல்லுாரியின் கவுன்சிலிங் குறியீட்டு எண், பாடப்பிரிவு மற்றும் மாவட்ட வாரியான கல்லுாரிகள் என, தனித்தனியாக பட்டியல் வெளியிடப் பட்டுள்ளது. இதை மாணவர்களும், பெற்றோரும் பார்த்து, தாங்கள் விரும்பும் கல்லுாரி, பாடப்பிரிவு மற்றும் கட் - ஆப் மதிப்பெண்ணை தெரிந்து கொள்ளலாம்

ஆன்லைனில் புதிய பாட புத்தகங்கள் வரும், 31ம் தேதி முதல் பார்க்கலாம்


தமிழக அரசின், புதிய பாடத்திட்ட புத்தகங்கள், வரும், 31ம் தேதி, ஆன்லைனில் வெளியிடப்படும்' என, அறிவிக்கப் பட்டுள்ளது.தமிழக பள்ளி கல்வித்துறை சார்பில், ஒன்று முதல், பிளஸ் 2 வகுப்பு வரை, புதிய பாடத்திட்டங்கள் உருவாக்கப் பட்டுள்ளன. அதனால், ஒன்று, ஆறு, ஒன்பது மற்றும் பிளஸ் 1 வகுப்புகளுக்கு, வரும் கல்வி ஆண்டில், புதிய பாடப்புத்தகங்கள் அறிமுகமாகின்றன.

இந்த பாடப்புத்தகங்களின் விற்பனை, துவங்கியுள்ளது. இதில், பிளஸ் 1 தவிர, மற்ற வகுப்புகளுக்கான புத்தகங்கள் விற்கப்படுகின்றன.மொத்தமாக ஆர்டர் செய்த, தனியார் பள்ளிகளுக்கும் புத்தகங்கள் அனுப்பப்பட்டு உள்ளதாக, பாடநுால் கழக அதிகாரிகள் தெரிவித்தனர்.சென்னை நுங்கம்பாக்கம், டி.பி.ஐ., வளாகத்தில் உள்ள, தமிழ்நாடு பாடநுால் கழக விற்பனை மையத்திலும், அண்ணா நுாலக விற்பனை மையத்திலும், புத்தக விற்பனை துவங்கியுள்ளது. இந்த மையங்களில், பெற்றோர் கூட்டம் குறைவாகவே காணப்படுகிறது. வரும் நாட்களில் அதிகரிக்கும் என, தெரிகிறது.

இதற்கிடையில், புதிய பாடத்திட்ட புத்தகங்கள் அனைத்தும், வரும், 31ம் தேதி, தமிழ்நாடு பாடநுால் கழகத்தின், http://www.textbooksonline.tn.nic.in/ என்ற, இணையதளத்தில் பதிவேற்றம் செய்யப்படும். பொதுமக்கள் பார்த்து கொள்ளலாம் என, அறிவிக்கப்பட்டுள்ளது

Friday, May 25, 2018

தொலைநிலைக் கல்வித் திட்டத்தில் மாணவர்களை சேர்த்தால் நடவடிக்கை: பாரதியார் பல்கலை. எச்சரிக்கை


அங்கீகாரம் ரத்து செய்யப்பட்டுள்ள நிலையில், விதிகளுக்குப் புறம்பாக மாணவர் சேர்க்கையில் ஈடுபடும் தனியார் தொலைநிலைக் கல்வி மையங்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என்று பாரதியார் பல்கலைக்கழகத் தொலைநிலைக் கல்வித் திட்ட இயக்ககம் எச்சரித்துள்ளது.

அரசுப் பல்கலைக்கழகங்கள் தங்களின் எல்லைக்கு உள்பட்ட பகுதிகளில் மட்டுமே தொலைநிலைக் கல்வித் திட்டங்களை செயல்படுத்த முடியும் என்றும், அனுமதி பெறாத பாடங்களை நடத்தக் கூடாது என்றும் பல்கலைக்கழக மானியக் குழு கடந்த 2 ஆண்டுகளுக்கு முன்பே எச்சரித்துள்ள நிலையிலும், பாரதியார் பல்கலைக்கழகத்துக்கு வெளி மாநிலங்களில் மட்டுமின்றி வெளிநாடுகளிலும் ஏராளமான தொலைநிலைக் கல்வி மையங்கள் செயல்பட்டு வருகின்றன. இவற்றில் அனுமதி இல்லாத பல்வேறு படிப்புகள் நடத்தப்பட்டு பட்டச் சான்றிதழ்களும் வழங்கப்பட்டு வந்த நிலையில், இந்த மையங்களால் தங்களுக்குப் பாதிப்பு ஏற்படுவதாக சுயநிதி கலை, அறிவியல் கல்லூரிகள் தொடர்ந்து எதிர்ப்புத் தெரிவித்து வந்தன.

பல பெயர்களில் கோவை பாரதியார் பல்கலைக்கழகம் நடத்தி வரும் தொலைநிலைக் கல்வித் திட்டங்களை ரத்து செய்வது என முடிவு செய்யப்பட்டது. அதன்படி மேற்கண்ட மையங்கள் 2018-19 ஆம் ஆண்டுக்கு மாணவர் சேர்க்கையை நடத்தக் கூடாது என்றும், அதேநேரம், தற்போது 2 ஆம் ஆண்டு, 3 ஆம் ஆண்டுகளில் படித்து வருபவர்கள் தங்களது படிப்பைத் தொடரலாம் என்றும் முடிவு செய்யப்பட்டது. இந்த நிலையில், சில கல்வி மையங்கள் இந்த உத்தரவை மீறி மாணவர் சேர்க்கையைத் தொடர்ந்து நடத்தி வருவதாகப் புகார்கள் எழுந்த நிலையில், பல்கலைக்கழக தொலைநிலைக் கல்வித் திட்ட இயக்ககம் அனைத்து தனியார் கல்வி மைய ஒருங்கிணைப்பாளர்களுக்கும் வெள்ளிக்கிழமை ஒரு சுற்றறிக்கை அனுப்பியுள்ளது.

அதில், தமிழ்நாட்டில் தனியார் மூலம் நடத்தப்பட்டு வரும் பாரதியார் பல்கலைக்கழகத்தின் கல்வி மையங்களுக்கான அங்கீகாரம் கடந்த 18-ஆம் தேதி நடைபெற்ற 304-ஆவது ஆட்சி மன்றக் குழுக் கூட்டத்தில் எடுக்கப்பட்ட முடிவின்படி ரத்து செய்யப்பட்டுள்ளது. எனவே, மாணவர் சேர்க்கை தொடர்பான எந்த ஒரு நடைமுறையையும் மேற்கண்ட கல்வி மையங்கள் செய்யக்கூடாது. இந்த உத்தரவை மீறும் தனியார் கல்வி மையங்கள் மீது கடுமையான சட்ட நடவடிக்கை மேற்கொள்ளப்படும் .

பிளஸ் 1, 2 வகுப்புக்கு 2 புதிய பாடங்கள்


பிளஸ் 1, பிளஸ் 2 வகுப்புகளுக்கு, இந்த ஆண்டு முதல், கணினி தொடர்பான, இரண்டு புதிய பாடங்கள் அறிமுகம் செய்யப்படுகின்றன.தமிழக பள்ளி கல்வியில், முதற்கட்டமாக, ஒன்று, ஆறு, ஒன்பது மற்றும் பிளஸ் 1 வகுப்புகளுக்கு, இந்த ஆண்டு முதல், புதிய பாடத்திட்டம் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. அதைத் தொடர்ந்து, பிளஸ் 1, பிளஸ் 2 படிக்கும், தொழிற்கல்வி குரூப் மாணவர்களுக்கும், 'ஆர்ட்ஸ் குரூப்' மாணவர்களுக்கும், புதிதாக இரண்டு பாடங்கள் சேர்க்கப்பட உள்ளன.

இந்த ஆண்டே, இந்த புதிய கணினி பாடங்கள், அமலுக்கு வர உள்ளன. அதாவது, 'கம்யூட்டர் சயின்ஸ்' பிரிவுக்கு, 'கணினி அறிவியல்' என்ற பாடம், தொடர்ந்து நடத்தப்படும். ஆனால், வரலாறு, பொருளியல், வணிக கணிதம் போன்ற, ஆர்ட்ஸ் பாடப்பிரிவினருக்கு, கணினி பயன்பாடுகள் பற்றிய, 'கம்ப்யூட்டர் அப்ளிகேஷன்ஸ்' என்ற பாடம், புதிதாக சேர்க்கப்படுகிறது.அதேபோல், அனைத்து வகை தொழிற்கல்வி குரூப்களுக்கும், 'கணினி தொழில்நுட்பம்' என்ற, பாடம் சேர்க்கப்பட்டுள்ளது. இந்த புதிய பாடங்கள், இந்த ஆண்டு, பிளஸ் 1 வகுப்புக்கும், அடுத்த ஆண்டு முதல், பிளஸ் 2 வகுப்புக்கும் அறிமுகம் செய்யப்படுகின்றன. இதற்கான உத்தரவை, பள்ளிக் கல்வி இயக்குனர், இளங்கோவன் பிறப்பித்துள்ளார்

பட்டய தேர்வு ஹால் டிக்கெட்


தொடக்கக் கல்வி பட்டய தேர்வுக்கு விண்ணப்பித்தவர்கள் இணையதளம் மூலம் ஹால் டிக்கெட்டை பதிவிறக்கம் செய்து கொள்ளலாம்' என மாவட்ட ஆசிரியர் கல்வி மற்றும் பயிற்சி நிறுவன முதல்வர் செல்வி தெரிவித்துள்ளார்.இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கை: தொடக்கக் கல்வி பட்டய இரண்டாம் ஆண்டு தேர்வு ஜூன் 4 துவங்கி, ஜூலை 20 ம் தேதி வரையும், முதலாமாண்டு தேர்வு ஜூலை 5ம் தேதி துவங்கி, 21 ம் தேதி வரையும் நடக்கிறது. இந்த தேர்வுக்கு விண்ணப்பித்திருக்கும் தனித்தேர்வர்கள் www.dge.tn.gov.in என்ற இணையதளத்தில், தங்களது விண்ணப்ப எண் மற்றும் பிறந்த தேதி ஆகியவற்றை பதிவு செய்து, ஹால்டிக்கெட்டுகளை 28-.5.-2018 முதல் பெற்று கொள்ளலாம்.இவ்வாறு தெரிவித்துள்ளார்

பள்ளிகளை பிரிப்பதில் குழப்பம் பி.இ.ஓ.,க்கு அதிகாரம் உண்டா


மாவட்ட அளவில் மேல்நிலைப் பள்ளிகளை முதன்மைக் கல்வி அலுவலரும், உயர்நிலைப் பள்ளிகளை மாவட்டக் கல்வி அலுவலரும், தொடக்க, நடுநிலைப் பள்ளிகளை மாவட்டத் தொடக்கக் கல்வி அலுவலரும், மெட்ரிக் பள்ளிகளை ஆய்வாளரும் கவனித்து வந்தனர்.சமீபத்தில் அவை ஒன்றாக இணைக்கப்பட்டு ஒரே அலகாக மாற்றப்பட்டது.

அனைத்து வகை பள்ளிகளையும் வட்டார அளவில் வட்டார கல்வி அலுவலர்(பி.இ.ஓ.,) குறிப்பிட்ட வட்டாரங்களைச் சேர்த்து மாவட்ட கல்வி அலுவலர், மாவட்ட அளவில் முதன்மைக் கல்வி அலுவலர் கண்காணிக்க உள்ளனர்.உதவித்தொடக்கக் கல்வி அலுவலர்களே வட்டார கல்வி அலுவலராக நியமிக்கப்படுகின்றனர். பட்டதாரி ஆசிரியர் நிலையிலான அவர்கள் தற்போது தொடக்க, நடுநிலைப் பள்ளிகளை கண்காணிக்கின்றனர்.

புதிய உத்தரவுப்படி, உயர்நிலை, மேல்நிலைப் பள்ளி, சி.பி.எஸ்.இ.,-ஐ.சி.எஸ்.இ., பள்ளிகளையும் கண்காணிக்க வேண்டும். அதன் தலைமை ஆசிரியர்கள் வட்டார கல்வி அலுவலரை விட பதவியில் உயர்ந்தவர் என்பதால்,அப்பள்ளிகளை ஆய்வு செய்ய முடியுமா என்ற குழப்பம் ஏற்பட்டது.மேலும் மாவட்டக் கல்வி அலுவலர் கட்டுப்பாட்டில் பள்ளிகள் எண்ணிக்கை 500 யை யொட்டி இருக்க வேண்டும். வட்டாரத்தையும் உடைக்க கூடாது என, தெரிவிக்கப்பட்டது. இதனால் 3 முதல் 5 வட்டாரங்களை இணைத்து மாவட்ட கல்வி அலுவலர் பணியிடம் ஒதுக்கப்படுகிறது.

சில வட்டாரங்களில் பள்ளிகள் குறைவாகவும், சில இடங்களில் அதிகமாக உள்ளதால், 500 என்ற எண்ணிக்கை அடிப்படையில் பிரிப்பதில் சிக்கல் நீடிக்கிறது. உதவித்தொடக்கக் கல்வி அலுவலர்களே வட்டார கல்வி அலுவலராக நியமிக்கப்படுகின்றனர். பட்டதாரி ஆசிரியர் நிலையிலான அவர்கள் தற்போது தொடக்க, நடுநிலைப் பள்ளிகளை கண்காணிக்கின்றனர்.

நீட்' விடைக்குறிப்பு வெளியீடு மாணவர்களே மார்க்கை கணக்கிடலாம்


நீட்' தேர்வுக்கான விடைக்குறிப்பு மற்றும் மாணவர்களின் விடைத்தாள்கள் இணையதளத்தில் வெளியிடப்பட்டுள்ளன.பிளஸ் 2 முடித்த மாணவர்கள் அலோபதி, இயற்கை மருத்துவம் மற்றும் பல் மருத்துவ படிப்புகளில் சேர நீட் நுழைவு தேர்வில் தேர்ச்சி பெற வேண்டும். நீட் தேர்வு தரவரிசையின் அடிப்படையில் மட்டுமே மாணவர்கள் சேர்க்கப்பட உள்ளனர்.

வரும் கல்வி ஆண்டில் மருத்துவ படிப்புக்கான நீட் தேர்வு மே 6ல் நடந்தது. இதில் 13 லட்சம் பேர் பங்கேற்றனர். இந்த தேர்வுக்கான விடைக்குறிப்புகள் நேற்று சி.பி.எஸ்.இ.,யின் நீட் இணையதளத்தில் வெளியிடப்பட்டன. மாணவர்கள் தங்கள் வினாத்தாள் வகைக்கான விடைக்குறிப்பு மற்றும் விடைத்தாள்களில் அளித்த பதில்களின் நகலை https://cbseneet.nic.in என்ற இணையதளத்தில் தெரிந்து கொள்ளலாம்.இந்த விடைக்குறிப்பை பயன்படுத்தி மாணவர்கள் தங்கள் மதிப்பெண்ணை தாங்களே கணக்கிட்டு கொள்ளலாம்.

விடைகள் தவறாக இருந்தால் சரியான பதிலுக்கான ஆதாரங்களுடன் சி.பி.எஸ்.இ.,க்கு விண்ணப்பிக்கலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது.விடைக்குறிப்புகளையும், விடைத்தாள்களையும் நாளை மாலை 5:00 மணி வரை மட்டுமே ஆன்லைனில் பார்க்க முடியும்; அதன்பின் தேர்வர்களால் பார்க்க முடியாது என சி.பி.எஸ்.இ., அறிவித்துள்ளது.

*தொடக்கக் கல்வி - குழந்தைகளுக்கான இலவசக் கட்டாயக் கல்விச் திட்டம் - 2009 ஆசிரியர்கள் காலிப்பணியிடங்கள் 31-05-2018 நிலவரப்படி விபரங்கள் கோருதல் தொடர்பாக தொடக்கக் கல்வி இயக்குநர் அவர்களின் செயல்முறைகள்*

26, 27.5.18 ( சனி ஞாயிறு) கல்வித்துறை அலுவலகங்கள் முழுமையாக செயல்பட உத்தரவு.

Thursday, May 24, 2018

இனி 'ஸ்மார்ட் போன்' இல்லாமல் ஆசிரியர் பாடம் நடத்த முடியாது


புதிய பாடத்திட்டத்தில் 'குயிக் ரெஸ்பான்ஸ் கோடு' (க்யூ.ஆர்., கோடு) என்ற தொழில்நுட்பம் அறிமுகப்படுத்தப்பட்டதால், இனி ஆசிரியர்கள் 'ஸ்மார்ட் போன்' இல்லாமல் பாடம் நடத்த முடியாது.

சமீபத்தில் 1, 6, 9 மற்றும் பிளஸ் 1 வகுப்புகளுக்கான புதிய பாடத்திட்டம் வெளியிடப்பட்டது. மேலும் அந்த புத்தகங்களில் 'க்யூ.ஆர்., கோடு' என்ற தொழில்நுட்பம் அறிமுகப்படுத்தப்பட்டு உள்ளது. அதனை 'ஸ்மார்ட்போன்' மூலம் 'ஸ்கேன்' செய்தால் அந்த புத்தகத்தை மின் நுாலாக படிக்கலாம்.

அனைத்து பாடங்களுக்கும் உரிய மதிப்பீடு, கேள்விகள், பாடம் சார்ந்த கூடுதல் தகவல், அதற்குரிய இணையதளங்கள் இடம் பெற்றிருக்கும். பாடல்கள் ஆடியோ, வீடியோ வடிவிலும், கணிதத்திற்கு செயல்விளக்கமும் கொடுக்கப்பட்டிருக்கும்.

'க்யூ.ஆர்.,கோடு' பயன்படுத்துவது குறித்து மாணவர்களுக்கு விளக்க ஆசிரியர்கள் அறிவுறுத்தப்பட்டனர். இதனால் அவர்கள் பாடம் நடத்தும் போது கண்டிப்பாக 'ஸ்மார்ட்போன்' வைத்திருக்க வேண்டும். கல்வித்துறை அதிகாரி ஒருவர் கூறுகையில், 'பள்ளி திறந்ததும் 'க்யூ.ஆர்., கோடு' பயன்படுத்துவது குறித்து ஆசிரியர்களுக்கு பயிற்சி அளிக்கப்படும். அனைவருக்கும் 'ஸ்மார்ட்போன்' பயன்படுத்த தெரிந்திருக்க வேண்டும்,' என்றார்.

பாடநூல் விற்பனை துவக்கம்


தமிழகத்தில், புதிய பாடத்திட்டப்படி தயார் செய்யப்பட்ட, மூன்று வகுப்புகளுக்கான, பாடநுால்களின் விற்பனை நேற்று துவங்கியது. நடப்பு கல்வியாண்டில், ஒன்று, ஆறு, ஒன்பது மற்றும் பிளஸ் 1 வகுப்புகளுக்கு, பாடத்திட்டம் மாற்றப்படுகிறது. அதற்கேற்ற வகையில், புதிய பாடநுால்கள் வடிவமைக்கப்பட்டு, அச்சிடப்பட்டுள்ளன.

இந்த பாடநுால்கள், பள்ளிகள் திறக்கும் அன்றே, மாணவர்களுக்கு வழங்கப்பட உள்ளன. அதற்கு வசதியாக, அனைத்து மாவட்டங்களுக்கும், பாடநுால்கள் அனுப்பி வைக்கப்பட்டுள்ளன. அதன்படி, ஒன்று, ஆறு, ஒன்பதாம் வகுப்புகளுக்கான, பாடநுால்கள் விற்பனை, நேற்று துவக்கப்பட்டது. 'பிளஸ் 1 பாடநுால்கள் விற்பனை மட்டும், ஜூன் இரண்டாவது வாரத்தில் துவங்கும்' என, பள்ளி கல்வித்துறை முதன்மை செயலர் பிரதீப் யாதவ் தெரிவித்துள்ளார்.

Wednesday, May 23, 2018

890 அரசுப் பள்ளிகளில் 10க்கும் குறைவான மாணவர்கள்: பொதுமக்களிடம் கருத்துக் கேட்க முடிவு


அரசு பள்ளிகளைப் பொருத்தவரையில் 29 பள்ளிகளில் ஒரு மாணவர் கூட இல்லாத தொடக்க பள்ளிகள் உள்ளன. மேலும், பள்ளிக் கல்வித் துறை மேற்கொண்ட கணக்கெடுப்பில் தமிழ்நாடு முழுவதும் 890 பள்ளிகளில் 10 மாணவர்களுக்கு குறைவாகவே உள்ளனர்.
இதனைக் கருத்தில் கொண்டு அரசு பள்ளிகளை மூடுகின்ற நிலை அரசுக்கு இல்லை. அந்தப் பள்ளிகள் அமைந்துள்ள பகுதியில் உள்ள பெற்றோர், பொது மக்களின் கருத்தை கேட்ட பின்னர் எந்த மாதிரியான நடவடிக்கை மேற்கொள்ளலாம் என அரசு பரிசீலிக்கும்.

துப்பாக்கி சூட்டை கண்டித்து 'ஜாக்டோ - ஜியோ' ஆர்ப்பாட்டம்


துாத்துக்குடி துப்பாக்கிச்சூட்டை கண்டித்து இன்று மாவட்ட தலைநகரங்களில் ஜாக்டோ -ஜியோ ஆர்ப்பாட்டம் நடத்த முடிவு செய்துள்ளது.ஜாக்டோ-ஜியோ ஒருங்கிணைப்பாளர்கள் சுப்பிரமணியம், மாயவன் கூறியதாவது:

துாத்துக்குடி ஸ்டெர்லைட் ஆலையை மூடக்கோரி பொதுமக்கள் அறவழி போராட்டம் நடத்தி வந்தனர். நுாறு நாட்கள் ஆகியும் அரசு கண்டு கொள்ளாததால் கலெக்டர் அலுவலகம் நோக்கி ஊர்வலமாக சென்றவர்கள் மீது துப்பாக்கி சூடு நடத்திய போலீசார், தமிழக அரசை கண்டிக்கிறோம்.போராடியவர்களை அழைத்து பேசி சுமூக தீர்வு காணாமல், அதிகாரத்தால் போராட்டத்தை தடுத்து நிறுத்த அரசு இதுபோன்று செயல்படுகிறது.

இதே போன்ற நடவடிக்கையை ஜல்லிக்கட்டு, ஜாக்டோ - ஜியோ போராட்டங்களின் போதும் எடுத்தது.ஸ்டெர்லைட் ஆலைக்கு எதிராக போராட்டத்தில் இறந்தவர்கள், காயம் அடைந்தவர்கள், உடைமைகளை இழந்தவர்களுக்கு உரிய நிவாரணம் வழங்க வேண்டும். துப்பாக்கிச்சூடு நடத்திய போலீசாரை பணி நீக்கம் செய்ய வேண்டும். ஸ்டெர்லைட் ஆலையை உடனே மூடவேண்டும்.

இறந்தவர் குடும்பத்திற்கு அரசு வேலை வழங்க வேண்டும் என்பதை வலியுறுத்தி ஜாக்டோ -ஜியோ சார்பில் முதற்கட்டமாக இன்று (மே 24) மாலை 5:00 மணிக்கு அனைத்து மாவட்ட தலைநகரங்களிலும் ஆர்ப்பாட்டம் நடத்த உள்ளோம்.இவ்வாறு அவர்கள் கூறினர்.

ஜாக்டோ ஜியோ அறிவிப்பு நாளை மாநிலந் தழுவிய ஆர்ப்பாட்டம்