இலவச SMS களை உடனுக்குடன் பெற ON tnptfmani என்று type செய்து 9870807070 என்ற எண்ணிற்கு அனுப்பி இலவச குறுந்தகவல்களை(SMS) பெறுங்கள். DND (Do NOT Disturb) சர்வீஸ்ல் உள்ள எண்கள் அதனை(DND) நீக்கிய பிறகே இச்சேவையை பெறமுடியும். plz call 1909

Wednesday, January 10, 2018

2018ம் ஆண்டுக்கான இறுதி வாக்காளர் பட்டியல் வெளியீடு: 15 லட்சம் போலி வாக்காளர்கள் நீக்கம்


தமிழகம் முழுவதும் 2018ம் ஆண்டுக்கான இறுதி வாக்காளர் பட்டியல் நேற்று வெளியிடப்பட்டது. இதில், ஆண் வாக்காளர்களை விட பெண் வாக்காளர்கள் அதிகம் உள்ளனர். மேலும், 15 லட்சம் போலி வாக்காளர்களின் பெயர்கள் நீக்கப்பட்டுள்ளது. தமிழகத்தில் தற்போது மொத்தம் 5 கோடியே 86 லட்சத்து 84 ஆயிரத்து 541 வாக்காளர்கள் உள்ளனர்.

தமிழகம் முழுவதும் 1.1.2018 தேதியை தகுதி நாளாக கொண்டு, வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்ப்பு, நீக்கம், திருத்தம், முகவரி மாற்றம் ஆகியவற்றுக்கு மனுக்கள் கடந்த ஆண்டு அக்டோபர் மாதம் பெறப்பட்டது. அதே நேரம் ஒரு வாக்காளரின் பெயர் ஒன்றுக்கு மேற்பட்ட இடங்களில் இருந்தால் கண்டுபிடித்து நீக்குவது, இறந்தவர்களின் பெயர்களை நீக்கும் பணிகளிலும் தேர்தல் ஆணைய அலுவலர்கள் வீடு வீடாக சென்று வாக்காளர் பட்டியலை சரி பார்த்தனர். வாக்காளர் பட்டியலை முறைப்படி வெளியிட வேண்டும் என்று நீதிமன்றம் உத்தரவிட்டிருந்தது. அதனடிப்படையில், வீடு வீடாக சென்று கள ஆய்வு மேற்கொண்டு இறுதி வாக்காளர் பட்டியல் 2018ம் ஆண்டுக்கான இறுதி வாக்காளர் பட்டியல் நேற்று வெளியிடப்பட்டது. இறுதி வாக்காளர் பட்டியலை, அந்தந்த மாவட்ட கலெக்டர்கள் வெளியிட, தொகுதி தேர்தல் அலுவலர்கள் மற்றும் தாசில்தார்கள் பெற்று கொண்டனர்.

அதன்படி, தமிழகம் முழுவதும் தற்போது மொத்த வாக்காளர்கள் எண்ணிக்கை 5 கோடியே 86 லட்சத்து 84 ஆயிரத்து 541 பேர் உள்ளனர். இதில் ஆண்கள் 2,90,48,400, பெண்கள் 2,96,30,944, இதர பிரிவினர் 5,197 என மொத்தம் 5,86,84,541 பேர் ஆகும். இறுதியாக கடந்த 2017ம் ஆண்டு ஜனவரி மாதம் 5ம் தேதி வெளியிடப்பட்ட வாக்காளர் பட்டியலில் 5,92,71,593 வாக்காளர்கள் இருந்தனர். அதேபோன்று, வீடு வீடாக போலி வாக்காளர்கள் நீக்கும் பணியின்போது 14 லட்சத்து 91 ஆயிரத்து 857 பேர் நீக்கப்பட்டுள்ளதாக தேர்தல் ஆணையம் அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது. வாக்காளர் அதிகம் உள்ள மாவட்டமாக ெசன்னை இருக்கிறது. இங்கு ஆண்கள் 18,76,652, பெண்கள் 19,24,366, இதர பிரிவினர் 901 என ெமாத்தம் 38,01,919 வாக்காளர்கள் உள்ளனர். அதற்கு அடுத்தபடியாக காஞ்சிபுரம் மாவட்டம் உள்ளது. இங்கு, ஆண்கள் 18,42,815, பெண்கள் 18,82,309, இதர பிரிவினர் 347 என ெமாத்தம் 37,25,471 பேர். குறைந்தபட்ச வாக்காளர்களை அரியலூர் மாவட்டம் கொண்டுள்ளது. இங்கு, ஆண்கள் 2,50,042, ெபண்கள் 2,51,031, இதர பிரிவினர் 9 என மொத்தம் 5,01,082 பேர்.

மாநிலத்தில் ஆண் வாக்காளர்களை விட பெண் வாக்காளர்களே அதிகம் உள்ளனர். வாக்காளர் பட்டியல்கள், நகராட்சி அலுவலகம், ஆர்டிஓ அலுவலகம், தாலுகா அலுவலகங்கள் மற்றும் அந்தந்த ஓட்டுச்சாவடிகளில் பொதுமக்கள் பார்வைக்கு வைக்கப்படும். புதிதாக பெயர் சேர்த்த வாக்காளர்களுக்கு போட்டோவுடன் கூடிய அடையாள அட்டை விரைவில் வழங்கப்படும். பொதுமக்கள் பட்டியலை பார்வையிட்டு தங்கள் பெயர் உள்ளதா என்பதை சரி பார்த்து கொள்ளலாம். மேலும் https://elections.tn.gov.in என்ற இணையதளத்திலும் பார்க்கலாம். தகுதியுள்ளவர்கள் பெயர்களை சேர்த்துக் கொள்ளலாம். இவ்வாறு தேர்தல் ஆணையம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறப்பட்டுள்ளது.

பொங்கல் விடுமுறை வருகிற 12/01/18 முதல் 16/01/18 வரை .

Tuesday, January 09, 2018

அடுத்த ஆண்டு முதல் ஆன் லைன் சேவை மையங்கள் இனி கிடையாது


அரசுத் தேர்வுகள் துறையை முழுவதும் கணினிமயமாக்க அரசு நிதி ₹2.71 கோடி ஒதுக்கியுள்ளதால் சேவை மையங்கள் மூடப்படுகின்றன. அடுத்த ஆண்டு முதல் மாணவர்கள் நேரடியாக ஆன்லைன் மூலம்தான் விண்ணப்பிக்க வேண்டும். அரசுத் தேர்வுகள் இயக்ககம் மூலம் ஒவ்வொரு ஆண்டும் சுமார் 40 தேர்வுகள் நடத்தப்படுகின்றன. தேர்வு எழுத விரும்பும் மாணவ, மாணவியர் பிரச்னை இல்லாமல் விண்ணப்பிக்க ஒவ்வொரு மாவட்டத்திலும் தலா 2 சேவை மையங்கள் திறக்கப்பட்டுள்ளன. அங்கு நேரடியாக சென்று விண்ணப்பிக்க வேண்டும் என்று அரசு அறிவித்தது.

தற்போது வரை அந்த சேவை மையங்கள் மூலம்தான் மாணவர்கள் தேர்வுக்கு விண்ணப்பித்துள்ளனர். பள்ளி மாணவர்கள் தோல்வி அடைந்த பிறகு தனித் தேர்வர்களாக விண்ணப்பிக்கவும் இந்த சேவை மையங்கள் பயன்பட்டு வந்தன. சேவை மையங்கள் மூலம் விண்ணப்பிக்கும் போது ஆன்லைன் கட்டணம் ₹50 வசூலிக்கப்படுகிறது. அதில் ₹20 அரசுத் தேர்வுத்துறையின் கணக்கில் வரும். மீதம் உள்ள தொகை சேவை மைய செலவினங்களுக்கு ஒதுக்கப்பட்டு வந்தது.

இந்நிலையில், கடந்த மானியக் கோரிக்கையில் வெளியிட்ட அறிவிப்புகளின்படி தேர்வுத்துறையை கணினி மயமாக்க ₹2 கோடியே 71 லட்சத்து 90 ஆயிரம் அரசு நிதி ஒதுக்கியுள்ளது. இந்த நிதியைப் பயன்படுத்தி தேர்வுத்துறை முற்றிலும் கணினி மயமாக்கப்பட உள்ளது. அதற்கு பிறகு தேர்வுத்துறையின் அனைத்து நடவடிக்கைகளும் ஆன்லைன் மூலமே நடக்கும். அதனால் மாவட்டங்களில் உள்ள தேர்வுத்துறையின் சேவை மையங்களை மூடுவதற்கு அரசு முடிவு செய்துள்ளது.

தேர்வு எழுதுவோர் பள்ளி மாணவர்களாக இருந்தாலும், தனித் தேர்வர்களாக இருந்தாலும் ஆன்லைன் மூலம் தங்கள் இருப்பிடத்தில் இருந்தே தேர்வுக்கு விண்ணப்பிக்கலாம். சேவை மையங்களுக்கு நேரடியாக செல்ல வேண்டியதில்லை. அடுத்த ஆண்டு முதல் இது அமலுக்கு வருகிறது. இது தொடர்பான அரசாணைகள் அரசுத் தேர்வுகள் இயக்கக இணைய தளத்தில் வெளியிடப்பட்டுள்ளன.

ஆசிரியர் பணிக்கு தகுதித் தேர்வு போதுமானது: அரசு உயர்நிலை குழுவில் தீர்மானம்


ஆசிரியர் பணிக்கு தகுதித் தேர்வு போதுமானது எனவும், மீண்டும் போட்டித் தேர்வு நடத்துவது அவசியமில்லை எனவும் தமிழக அரசின் உயர்நிலைக் குழு கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது. வெயிட்டேஜ் முறையில் தரவரிசை பட்டியல் தயாரிப்பது குறித்து பள்ளிக் கல்வி உயர் நிலை குழுக் கூட்டத்தில் விவாதிக்கப்பட்டது.
இதற்காக அந்தக் குழுவானது, அண்மையில் கூடியது. பள்ளிக் கல்வித் துறை அமைச்சர் கே.ஏ.செங்கோட்டையன் தலைமையில் நடந்த இந்தக் கூட்டத்தில் முக்கிய தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

அதன் விவரம்:- ஆசிரியர் தகுதித் தேர்வு தேர்ச்சியில் இடஒதுக்கீடு பிரிவினருக்கு (பி.சி., பிசிஎம்., எம்பிசி., எஸ்.சி., எஸ்.டி.,) வழங்கப்பட்டு வரும் 5 சதவீத மதிப்பெண் சலுகைகளை தொடர்ந்து கடைபிடிக்கலாம். ஆசிரியர் தகுதித் தேர்வானது ஆண்டுதோறும் குறிப்பிட்ட கால வரையறைக்குள் நடத்தப்பட வேண்டும். ஆசிரியர் தகுதித் தேர்வில் தேர்ச்சி பெற்றவர்களுக்கு வழங்கப்படுகின்ற சான்றிதழ் ஏழு ஆண்டுகளுக்கு செல்லுபடியாகும். அதன் அடிப்படையிலான தர வரிசைப் பட்டியலில் உள்ள தேர்வர்களின் பெயர்கள் ஏழு ஆண்டுகளுக்குப் பின்னர் நீக்கம் செய்யப்படும்.

தேர்வர்கள் தங்களது கல்வித் தகுதியை பொறுத்தவரை மதிப்பெண்கள் உயர்த்திக் கொள்வதற்கு வழிவகை இருப்பதால் அதன்படி தரவரிசைப் பட்டியல் மாறுதலுக்கு உட்பட்டதாகும். ஆசிரியர் தகுதித் தேர்வில் தேர்ச்சி பெறாதவர்கள் அடுத்தடுத்த தேர்வுகளில் மீண்டும் தேர்ச்சி பெறுவதற்கு வழிவகை செய்யப்பட்டுள்ளது. எனவே, தேர்வர்கள் தங்களது ஆசிரியர் தகுதித் தேர்வில் பெற்றுள்ள மதிப்பெண்களை அடுத்த தேர்வுகளில் உயர்த்திக் கொள்ளலாம். ஒவ்வொரு ஆண்டும் வெளியிடப்படுகின்ற ஆசிரியர் தகுதித் தேர்வு முடிவின் அடிப்படையில் வெளியிடப்படுகின்ற தரவரிசைப் பட்டியல் மாறுதலுக்கு உட்பட்டதாகும். தேர்வர்கள் விண்ணப்பிக்கப்படுகின்ற படிவத்தில் குறிப்பிடப்படும் மதிப்பெண்களின் அடிப்படையில் தரவரிசைப் பட்டியல் தயாரிக்கலாம்.

இதன்படி, அனைவரின் கல்விச் சான்றிதழ்களை தரவரிசைப் பட்டியலுக்காக சரிபார்க்கும் அவசியம் ஏற்படாது. ஆசிரியர் தகுதித் தேர்வுக்குப் பிறகு மீண்டும் ஒரு போட்டித் தேர்வு நடத்துவது அவசியம் அற்றதாக கருதப்படுகிறது. தகுதித் தேர்வில் தேர்ச்சி பெற்றுள்ளதன் அடிப்படையிலோ அல்லது தரவரிசைப் பட்டியலில் தங்களது பெயர் இடம் பெற்றுள்ளது என்ற அடிப்படையிலோ அரசு வேலைக்கு உரிமை கோர முடியாது என்ற தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. இந்தத் தீர்மானங்களின் மீது நடவடிக்கைகள் ஏற்படுவதற்காக, ஆசிரியர் தேர்வு வாரியத்துக்கு தீர்மான நகலை ஆசிரியர் தேர்வு வாரியத்துக்கு பள்ளிக் கல்வித் துறை முதன்மைச் செயலாளர் பிரதீப் யாதவ் அனுப்பியுள்ளார்.

இந்தத் தீர்மானங்கள் மீது நடவடிக்கை எடுக்கப்பட்டு அதுதொடர்பாக அரசு உத்தரவுகள் பிறப்பிக்கப்படும்.

ஜே.ஆர்.சி கூட்டம்-திருப்பூர் மாவட்ட தொடக்க கல்வி அலுவலரின் செயல்முறைகள்

Monday, January 08, 2018

வெயிட்டேஜ் முறையில் மாற்றம் இல்லை

பரவுகிறது ஆன்ட்ராய்டு வைரஸ்: வங்கிகள் எச்சரிக்கை


புதிதாக பரவும் ஆண்ட்ராய்டு வைரஸிடம் இருந்து, கணக்கு விவரங்களை பாதுகாத்துக் கொள்ளுமாறு, வாடிக்கையாளர்களுக்கு வங்கிகள் அறிவுறுத்தியுள்ளன.தற்போது வங்கி பரிவர்த்தனைகள், 'ஆன்-லைன்' மூலம் எளிதாகிவிட்டன. வங்கி 'ஆப்' பயன்படுத்தி, மொபைல்போன் வாயிலாக பரிவர்த்தனை செய்ய முடிகிறது.

இந்நிலையில், 'ஹேக்கர்கள்' தற்போது, வங்கி மொபைல் 'ஆப்'ஐ செயலிழக்க செய்யும் வகையில், 'மால்வேர் தீம்' வைரஸ் உருவாக்கியுள்ளனர். 'ஆண்ட்ராய்டு.பேங்கர்.ஏ-9480' என, இந்த வைரஸூக்கு பெயர் வைக்கப்பட்டுள்ளது. மொபைல் போனில் இந்த வைரஸ் நுழைந்து விட்டால், வங்கி அப்ளிகேஷன் விவரங்கள், தொடர்பு எண்கள், ஹேக்கர்கள் வசம் சென்றுவிடும். இதை பயன்படுத்தி, வங்கி கணக்கில் இருந்து தொகையை, எளிதாக டிரான்ஸ்பர் செய்து விடலாம். வாடிக்கையாளர் பாதுகாப்புக்காக, பதிவு செய்யப்பட்ட மொபைல் எண்ணுக்கு வங்கிகள் அனுப்பும், 'ஒருமுறை கடவுச்சொல்' (ஓ.டி.பி.,) தகவலை, ஹேக்கர்களுக்கும் பிரதியெடுத்து அனுப்பிவிடும்.

தற்போது வேகமாக பரவிவரும் இந்த வைரஸிடம் இருந்து, ஸ்மார்ட் போனை பாதுகாப்பாக வைத்து கொள்ளுமாறு, வங்கிகள், வாடிக்கையாளர்களுக்கு விழிப்புணர்வு செய்தி அனுப்பி வருகின்றன.அதில், 'வங்கி செயலிகளை குறிவைத்து தாக்கும், 'தீம்' பொருள் பரவி வருகிறது; வாடிக்கையாளர்கள், பாதுகாப்பாக இருக்கவேண்டும்' என்றும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.

வைரஸ் குறித்த விவரங்களை உள்ளடக்கிய லிங்க், வங்கிகள் தரப்பில் அனுப்பப்பட்டு வருகிறது.எனவே, ஸ்மார்ட் போன் பயன்படுத்துவோர், தேவையற்ற அப்ளிகேஷன்களை உடனடியாக நீக்கிவிட வேண்டும். வேறு இணையதளங்களில் இருந்து பதிவிறக்கம் செய்து, அப்ளிகேஷன்களை நிறுவக்கூடாது. 'கூகுள் பிளே ஸ்டோர்' அல்லது 'ஆப்ஸ் ஸ்டோரில்' இருந்து மட்டுமே செயலிகளை நிறுவ வேண்டும். நிறுவப்பட்டிருக்கும் வைரஸ் எதிர்ப்பு செயலிகளை, முறையாக, 'அப்டேட்' செய்து, இப்பிரச்னையில் இருந்து தப்பலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

மக்கர்' ஆகும் இணையதளத்தால் பாதிப்பு : மவுசுடன் மல்லுக்கட்டும் ஆசிரியர்கள்


மாணவர்களின் விபரங்களை சேகரிக்கும், 'எமிஸ்' கல்வி மேலாண்மை இணையதளம் அடிக்கடி, 'மக்கர்' ஆவதால், கணினி மற்றும் மவுசுடன் ஆசிரியர்கள் மல்லுக்கட்டும் நிலைக்கு தள்ளப்பட்டு உள்ளனர். பள்ளிக்கல்வி மற்றும் தொடக்க கல்வியின் கட்டுப்பாட்டில் உள்ள பள்ளிகளில், இரண்டு கோடிக்கும் அதிகமான மாணவர்கள் படிக்கின்றனர்.

ஆனால், பல பள்ளிகளின் வருகை பதிவேடுகளில், மாணவர் எண்ணிக்கையில் குளறுபடி ஏற்பட்டுள்ளது. அரசின் இலவச திட்டங்களை பெறவும், ஆசிரியர்களின் பணியிடங்கள் ரத்தாகாமல் தக்க வைக்கவும், பள்ளிகள் தரப்பில், குறைவான மாணவர் எண்ணிக்கையை கூட, அதிகரித்து காட்டுவதாக புகார் எழுந்துள்ளது. இதையடுத்து, தினசரி பள்ளிக்கு வரும் சரியான மாணவர்களின் விபரங்களை திரட்ட, பள்ளிக்கல்வித் துறைக்கு மத்திய அரசு, உத்தரவிட்டுள்ளது.

இதற்காக, 2011ல் கல்வி மேலாண்மை திட்டம் உருவாக்கப்பட்டு, 'எமிஸ்' என்ற இணையதளம் துவங்கப்பட்டது. இதில், மாணவர்களின் பெயர், முகவரி, பெற்றோர் பெயர், ஆதார் எண், ரத்தப்பிரிவு உள்ளிட்ட தகவல்கள், ஆறு ஆண்டுகளாக பதிவு செய்யப்பட்டு வருகின்றன. ஆனால், இவை, பள்ளிக்கல்வித் துறையின், தகவல் தொகுப்பு இணையதளத்தில், ஒருங்கிணைக்கப்படவில்லை. அவ்வப்போது, மாணவர்களின் விபரங்கள் மாயமாகி வருகிறது. இந்நிலையில், எமிஸ் இணையதளத்தில் பதிவுகளை புதுப்பிக்க, பள்ளி தலைமை ஆசிரியர்களுக்கு, இரண்டு மாதங்களுக்கு முன், உத்தரவிடப்பட்டது.

பள்ளிகளின் ஆசிரியர்களுக்கு, எமிஸ் இணையதள பதிவு பணியும் இணைத்து வழங்கப்பட்டது. ஆசிரியர்கள் வகுப்புகளை ரத்து செய்துவிட்டு, மாணவர் விபரங்களை பதிவு செய்யும் பணியில் ஈடுபட்டுள்ளனர். ஆனால், எமிஸ் இணையதளம் தொடர்ந்து மக்கர் ஆவதால், 'ஆன்லைனில்' விபரங்களை பதிவு செய்ய முடியாமல், தவிப்புக்கு ஆளாகி உள்ளனர். அவர்கள், மணிக்கணக்கில், கணினி மற்றும் மவுசுடன் மல்லுக்கட்டும் நிலை ஏற்பட்டுள்ளது. இது குறித்து, பள்ளி தலைமை ஆசிரியர்கள் கூறியதாவது: எமிஸ் இணையதளத்தை பராமரிக்க, சரியான தொழில்நுட்பத்தை, பள்ளிக் கல்வித் துறை கையாள வேண்டும். இல்லையென்றால், ஆன்லைன் பதிவை ரத்து செய்ய வேண்டும். இதே நிலை நீடித்தால், ஆசிரியர்களின் வகுப்பு நடத்தும் நேரம் மிகவும் குறைந்து, பள்ளிகளின் கற்பித்தல் பணிகளில் பெரும் பாதிப்பு ஏற்படும் அபாயம் உள்ளது.இவ்வாறு அவர்கள் கூறினர்.

மாணவர்கள், ஆசிரியர்கள் ஒருங்கிணைந்து...பசுமையாகும் பள்ளிகள்!  பள்ளியில் மரம் வளர்ப்பு திட்டம் துவக்கம்


மரம் வளர்க்கும் எண்ணத்தை மாணவர்கள் மனதில் விதைக்கவும், பள்ளிகளில் பசுமையை மேம்படுத்த மரக்கன்று வளர்க்கும் திட்டத்தை அரசு செயல்படுத்துகிறது. இதற்காக, ஒவ்வொரு கல்வி மாவட்டத்திலும், தேசிய பசுமைப்படை மற்றும் சுற்றுச்சூழல் மன்றம் செயல்படும், 15 பள்ளிகள் தேர்வு செய்யப்பட்டுள்ளன. 'மரம் வளர்ப்போம், மழை பெறுவோம்,' என பல்வேறு அமைப்புகள் சார்பில் சமூக விழிப்புணர்வு ஏற்படுத்தப்படுகின்றன.

அரசு அலுவலகங்கள், பள்ளிகளில் விழாக்களின் போது மரக்கன்றுகள் நடப்படுகின்றன. ஆனால், அந்த மரக்கன்றுகள் முறையாக பராமரிக்கப்பட்டு வளர்க்கப்படுகிறதா என்பதை ஆராய்ந்தால் ஏமாற்றமே மிஞ்சுகிறது. நடப்படுவதில், குறைந்த பட்ச மரங்கள் மட்டுமே காப்பாற்றப்படுகின்றன என்பதே நிதர்சனமான உண்மை. இந்நிலையில், தமிழக அரசு மரக்கன்றுகளை வளர்க்கும் திட்டத்தை ஆக்கப்பூர்வமாக செயல்படுத்த அறிவுறுத்தியுள்ளது. இதற்காக அரசு நிதி ஒதுக்கீடும் செய்துள்ளது.தேசிய பசுமைப்படை மற்றும் சுற்றுச்சூழல் மன்றம் செயல்படும் பள்ளிகளை இத்திட்டத்துக்கு தேர்வு செய்ய அறிவுறுத்தியுள்ளது.

அதன்படி, தமிழகத்தில் உள்ள அனைத்து மாவட்டங்களிலும், ஒரு கல்வி மாவட்டத்துக்கு, 15 பள்ளிகள் வீதம் மொத்தம், 960 பள்ளிகள் தேர்வு செய்யப்பட்டுள்ளன. மாணவர்களிடம் மரம் வளர்ப்பின் அவசியத்தை உணர்த்த மாணவர்களை, பள்ளியில் மரக்கன்று வளர்க்கும் திட்டத்தில் ஈடுபடுத்த அறிவுறுத்தப்பட்டுள்ளது. இதற்காக, தேர்வு செய்யப்படும் ஒவ்வொரு பள்ளிகளிலும், 50 மரக்கன்றுகள் கட்டாயமாக நட வேண்டும். நடவு செய்த மரக்கன்றுகளை பராமரிக்க ஒவ்வொரு மரத்துக்கும் ஒரு மாணவர் நியமிக்க வேண்டும் என, அறிவுறுத்தப்பட்டுள்ளது. தேர்வு செய்யப்படும் பள்ளிகளுக்கு, 15 ஆயிரம் ரூபாய் நிதி வழங்க அரசு உத்தரவிட்டுள்ளது. முதற்கட்டமாக, ஐந்தாயிரம் ரூபாய் வழங்கப்படுகிறது. இந்த நிதியை பள்ளிக்கு தேவையான மரக்கன்று மற்றும் உரங்கள் வாங்க பயன்படுத்திக்கொள்ள வேண்டும்.

பள்ளி ஆசிரியர்கள், அந்தந்த பகுதிக்கு ஏற்றவாறு மரக்கன்றுகளை தேர்வு செய்து நட வேண்டும்.மரம் நடுவதற்குரிய குழியை தேவையான அளவு தோண்டி அதனை ஆறவிடுதல் அவசியமாகும். செடியை நடவு செய்த பின், அதற்கு தண்ணீர் மற்றும் உரமிட்டு பராமரிக்க வேண்டுமென கல்வி மாவட்ட தேசிய பசுமைப்படை ஒருங்கிணைப்பாளர்களுக்கு, தமிழ்நாடு சுற்றுச்சூழல் துறை இயக்குனர் அறிவுரையும் வழங்கியுள்ளார். தேசிய பசுமைப்படை ஒருங்கிணைப்பாளர்கள் கூறியதாவது: பள்ளிகளில் நடப்படும் மரங்களை பாதுகாத்து நல்ல முறையில் வளர்க்க வேண்டும் என்றும், அதற்கான திட்டம் மற்றும் நிதி ஒதுக்கீடு குறித்து சட்டசபையில் அமைச்சர் அறிவித்தார். அதன்படி, இத்திட்டம் தற்போது செயல்பாட்டுக்கு வந்துள்ளது. சென்னையில் நடந்த ஆலோசனை கூட்டத்தில், தேசிய பசுமைப்படை ஒருங்கிணைப்பாளர்களுக்கு, தமிழ்நாடு சுற்றுச்சூழல் துறை இயக்குனர் மற்றும் தமிழ்நாடு சுற்றுச்சூழல் மேலாண்மை முகமை உறுப்பினர், செயலர் வெங்கடாச்சலம் ஆகியோர் திட்டத்தை செயல்படுத்துவது குறித்து அறிவுறுத்தியுள்ளார்.

முதல் கட்டமாக வழங்கப்பட்ட நிதியை கொண்டு பள்ளிக்கு தேவையான மரக்கன்று மற்றும் உரங்களை வாங்க வேண்டும். நடப்பட்ட மரக்கன்றுகள் வளர்ந்த பின், அதை புகைப்படம் எடுத்து அனுப்புவதோடு, மாணவர் பெயர் குறித்த அறிக்கை அனுப்ப வேண்டும். அதன் பின், பள்ளி ஒன்றுக்கு, மீதமுள்ள, பத்தாயிரம் ரூபாய் வழங்கப்படும். பள்ளிகளில் பசுமையை மேம்படுத்தும் வகையில் திட்டம் செயல்படுத்தப்படுகிறது. இவ்வாறு, ஒருங்கிணைப்பாளர்கள் தெரிவித்தனர். படிக்கும் போது மாணவர்களிடம் மரம் வளர்ப்பு என்ற எண்ணத்தை விதைக்கும் வகையில், இத்திட்டம் கொண்டு வரப்பட்டுள்ளது வரவேற்கதக்கது. ஆசிரியர்கள், மாணவர்கள் ஒருங்கிணைந்து மரம் வளர்த்து, அரசுப்பள்ளிகளை பசுமைப்பள்ளிகளாக மாறினால் சுற்றுச்சூழல் பாதுகாக்கப்படும். முழு மனதுடன் திட்டத்தை செயல்படுத்தினால், நிச்சயம் மாற்றம் ஏற்படும் என்கின்றனர் இயற்கை ஆர்வலர்கள்.

TNPTF முற்றுகைப் போராட்ட அறிவிப்பு



TNPTF காத்திருக்கும் போராட்டம்






முதல் சந்திப்பே போராட்ட அறிவிப்பு........... . இன்றுTNPTF மாநில அமைப்பின் சார்பில் நமது தொடக்கக் கல்வி இயக்குநர் அவர்களை சந்திப்பு...... பிப்ரவரி 9 2018ல் 15 அம்ச கோரிக்கைகளை நிறைவேற்றிடக் கோரி காத்திருப்பு போராட்டம் நடத்துதல் முன் அறிவிப்பு சார்பாக இயக்குநர் அவர்களை மாநில பொறுப்பாளர்கள் சந்தித்த பொழுது....

Sunday, January 07, 2018

வெயிட்டேஜ் முறையால் பாதிக்கப்பட்ட 94,000 பேருக்கு ஆசிரியர் பணி: அமைச்சர் செங்கோட்டையன் பேட்டி


கடந்த 2012 முதல் 2014ம் ஆண்டு வரை நடந்த ஆசிரியர் தகுதி தேர்வில் தேர்ச்சி பெற்றும் வெயிட்டேஜ் மதிப்பெண் முறையால் இதுவரை பணி நியமனம் பெறாமல் உள்ள 94 ஆயிரம் ஆசிரியர்களை பணி நியமனம் செய்வது குறித்து குழு அமைத்து ஆய்வு செய்யப்பட்டது.

அந்த ஆய்வின் அடிப்படையில் ஆசிரியர் தகுதி தேர்வில் தேர்ச்சி பெற்று 7 ஆண்டு வரை அவர்களுக்கு பணி நியமனம் வழங்க முடியும் என்ற அடிப்படையில், ஆண்டுதோறும் ஏற்படும் ஆசிரியர் காலி பணியிடங்களுக்கு ஏற்ப பணி நியமனம் வழங்கப்படும். அதே போன்று தற்போது 745 பள்ளிகள் கணினி மயமாக்கப்படுவதற்கான ஒப்பந்தம் விடப்பட்டுள்ளது. அந்த பணிகள் முடிவுற்ற பின்னர் கணினி ஆசிரியர் பணியிடங்கள் நிரப்பப்படும். அதேபோன்று 6 மற்றும் 9 முதல் 12ம் வகுப்பு வரை அனைத்து வகுப்புகளும் கணினி மயமாக மாற்றுவதற்கான பணிகளும் நடைபெற்று வருகிறது.

இறுதிக் கட்டத்தில் புதிய பாடத்திட்டப் பணிகள்


புதிய பாடத்திட்டப் பணிகள் இறுதிக் கட்டத்தை எட்டியுள்ளன. வரும் கல்வி ஆண்டுக்கான 1, 6, 9, 11-ஆம் வகுப்புகளுக்கு பாடநூல்கள் எழுதும் பணி தீவிரமாக நடைபெற்று வருகிறது. தற்போதைய கல்விச்சூழலுக்கு ஏற்ப தமிழகத்தில் பாடத் திட்டத்தை மாற்றியமைக்க மாநில அரசு முடிவு செய்தது.

இதைத்தொடர்ந்து, அண்ணா பல்கலைக்கழக முன்னாள் துணைவேந்தர் எம்.ஆனந்தகிருஷ்ணன் தலைமையில் புதிய பாடத்திட்டக் குழு அமைக்கப்பட்டது. அந்தக் குழுவில் முன்னாள் துணைவேந்தர்கள், பேராசிரியர்கள், இலக்கியவாதிகள், சுற்றுச்சூழல் ஆர்வலர்கள் என பல்வேறு தரப்பினரும் இடம்பெற்றனர். இந்தக் குழு, சிபிஎஸ்இ, ஐசிஎஸ்இ பாடத்திட்டங்களை மட்டுமல்லாமல் அமெரிக்கா, மலேசியா உள்ளிட்ட வெளிநாடுகளின் பள்ளி பாடத் திட்டங்களையும் ஆய்வு செய்தது. மேலும், கூட்டங்கள் நடத்தி பல்வேறு தரப்பினரின் ஆலோசனைகளையும் கேட்டறிந்தது. அதனைத் தொடர்ந்து, ஒன்று முதல் பிளஸ் 2 வரையுள்ள வகுப்புகளுக்கான வரைவு பாடத்திட்டத்தை பாடத் திட்டக் குழு கடந்த நவம்பர் மாதம் தமிழக அரசிடம் சமர்ப்பித்தது.

அவ்வாறு சமர்ப்பிக்கப்பட்ட வரைவு பாடத் திட்டம் பொதுமக்களின் கருத்துகளையும், ஆலோசனைகளையும் அறியும் வகையில் இணையதளத்தில் வெளியிடப்பட்டது. கல்வியாளர்கள், பேராசிரியர்கள், சமூக ஆர்வலர்கள், மாணவர்கள், பெற்றோர் என பல்வேறு தரப்பினரும் ஆன்லைன் மூலமாகவும், தபால் வழியாகவும் தங்கள் கருத்துகளை அனுப்பினர். அனைத்து கருத்துகளும் முறையாக தொகுக்கப்பட்டு ஆய்வு செய்யப்பட்டு வருகின்றன. மேலும், பாடத்திட்டத்தை இறுதி செய்யும் பணி நடைபெற்று வருவதாகவும் பிப்ரவரியில் இந்தப் பணி முடிவடையும் எனவும் பாடத்திட்டக் குழுவினர் தெரிவித்துள்ளனர். இது குறித்து பாடத்திட்ட வடிவமைப்புக் குழுவின் தலைவர் எம்.ஆனந்தகிருஷ்ணன் கூறியது:

பாடத்திட்டம் குறித்து 17 நாடுகளைச் சேர்ந்த வல்லுநர்கள் உள்பட 2,000-க்கும் மேற்பட்டோர் இணையதளத்தில் கருத்துகளைத் தெரிவித்தனர். அதில் ஏற்புடைய கருத்துகள் பரிசீலிக்கப்பட்டு தேவையான மாற்றங்கள் மேற்கொள்ளப்பட்டன. இதைத் தொடர்ந்து, புதிய பாடத் திட்டத்தின்படி புத்தகங்கள் எழுதும் பணி சில நாள்களுக்கு முன்பு தொடங்கி நடைபெற்று வருகிறது. பிற மொழி மாணவர்களுக்காக தெலுங்கு, மலையாளம், கன்னடம், உருது உள்ளிட்ட மொழிகளில் பாடங்கள் மொழி பெயர்க்கப்படும். இறுதியாக தமிழ்நாடு பாடநூல் மற்றும் கல்வியியல் பணிகள் கழகத்தின் சார்பில் 2018-2019 ஆம் கல்வியாண்டுக்கான 1,6, 9, 11 ஆகிய வகுப்புகளுக்குப் பாட நூல்கள் அச்சடிக்கும் பணிகள் தொடங்கும் என்றார்.

EMIS க்கு நிதி ஒதுக்கீடு