இலவச SMS களை உடனுக்குடன் பெற ON tnptfmani என்று type செய்து 9870807070 என்ற எண்ணிற்கு அனுப்பி இலவச குறுந்தகவல்களை(SMS) பெறுங்கள். DND (Do NOT Disturb) சர்வீஸ்ல் உள்ள எண்கள் அதனை(DND) நீக்கிய பிறகே இச்சேவையை பெறமுடியும். plz call 1909

Friday, October 06, 2017

ஹால் டிக்கெட் இணையதளத்தில் வெளியீடு: ஐஏஎஸ், ஐபிஎஸ் மெயின் தேர்வு 28ல் தொடக்கம்


முதல் நிலை தேர்வில் இந்தியா முழுவதும் 13,350 பேர் தேர்ச்சி பெற்றனர். தமிழகத்தை பொறுத்தவரை சுமார் 700 பேர் வரை தேர்ச்சி பெற்றனர். இவர்களுக்கான மெயின் தேர்வு வருகிற 28ம் தேதி தொடங்குகிறது. சிவில் சர்வீஸ் மெயின் தேர்வுக்கான ஹால் டிக்கெட் மத்திய அரசு பணியாளர் தேர்வாணையத்தின் இணையதளமான www.upsc.gov.in வெளியிடப்பட்டுள்ளது.

மெயின் தேர்வு 28ம் தேதி தொடங்கி 5 நாட்கள் நடக்கிறது. 28ம் தேதி காலை 9 மணி முதல் பகல் 12 மணி வரை முதல் தாள் தேர்வு (கட்டுரை வடிவிலானது), 30ம் தேதி காலை இரண்டாம் தாள் (பொது அறிவு 1), மதியம் 2 மணி முதல் மாலை 5 மணி வரை மூன்றாம் தாள் (பொது அறிவு 2) தேர்வும் நடக்கிறது. 31ம் தேதி காலையில் 4ம் தாள் (பொது அறிவு 3), பிற்பகலில் 5ம் தாள் தேர்வு (பொது அறிவு4), நவம்பர் 1ம் தேதி இந்திய ெமாழிகளில் ஒருதாள் தேர்வு, பிற்பகலில் ஆங்கிலம் தேர்வும், 3ம் தேதி காலையில் விருப்பப்பாடம் முதல் தாள், மாலை விருப்பப்பாடம் இரண்டாம் தாள் தேர்வும் நடக்கிறது.

மெயின் தேர்வுக்கான ரிசல்ட் அநேகமாக வருகிற பிப்ரவரி இறுதியிலோ அல்லது மார்ச் தொடக்கத்திலோ வெளி வர வாய்ப்புள்ளது. மெயின் தேர்வில் தேர்ச்சி பெறுவோருக்கு அடுத்தகட்டமாக நேர்முக ேதர்வு நடத்தப்படும் என சங்கர் ஐ.ஏ.எஸ். அகாடமி நிறுவன தலைவர் சங்கர் தெரிவித்தார்.

அகவிலைப்படி உயர்வு எப்போது : காத்திருக்கும் அரசு ஊழியர்கள்


உயர்நீதிமன்ற உத்தரவால் அரசு ஊழியர்கள், ஆசிரியர் களுக்கான சம்பள உயர்வு பரிந்துரைக் குழு தன் அறிக்கையை சமர்பித்துள்ள நிலையில் 1.7.2017 முதல் அகவிலைப்படி உயர்வை அரசு உடனே வழங்க வேண்டும்' என அரசு ஊழியர், ஆசிரியர்கள் எதிர்பார்க்கின்றனர். 'புதிய ஓய்வூதியத் திட்டத்தை ரத்து செய்ய வேண்டும், சம்பள குழு பரிந்துரைகளை அரசு அமல்படுத்த வேண்டும், அதுவரை இடைக்கால நிவாரணமாக 20 சதவீதம் வழங்க வேண்டும்' என அரசு ஊழியர், ஆசிரியர்கள் காலவரையற்ற வேலைநிறுத்தத்தில் ஈடுபட்டனர்.

வேலை நிறுத்தத்தை திரும்ப பெற உத்தரவிட கோரி உயர்நீதிமன்ற மதுரை கிளையில் பொது நல வழக்கு தொடரப்பட்டது. போராட்டத்தை கைவிட்டு பணிக்கு திரும்ப உத்தரவிட்ட உயர்நீதிமன்ற மதுரை கிளை, அவர்கள் கோரிக்கையை நிறைவேற்றுவது குறித்து அரசுக்கு சில உத்தரவுகளை பிறப்பித்தது. இதற்கிடையில் அரசு ஊழியர்கள், ஆசிரியர்களுக்கு சம்பள உயர்வு குறித்து பரிந்துரைப்பதற்காக ஐந்து பேர் குழு, முதல்வர் பழனிசாமியிடம் செப்., 27ல் அறிக்கையை தாக்கல் செய்தது. இதில், அரசு ஊழியர், ஆசிரியர்களுக்கான சம்பள முரண்பாடுகளை களையவும், 30 ஆண்டுகளுக்கு மேலாக வலியுறுத்தப்படும் சத்துணவு, அங்கன்வாடி ஊழியர்களுக்கு காலமுறை சம்பளம் வழங்கவும் பரிந்துரைகள் இருக்கும் எனவும் எதிர்பார்க்கின்றனர்.

'சம்பள மாற்ற பரிந்துரைகள் தாமதமாக சமர்ப்பிக்கப்பட்டாலும் கூட, இடைவிடாத போராட்டங்களுக்கு கிடைத்த முதல் வெற்றி' என அரசு ஊழியர்கள் தெரிவித்து உள்ளனர். இதுகுறித்து அரசு ஊழியர்கள் சங்க மாநில தலைவர் சுப்பிரமணியன், பொதுச் செயலர் அன்பரசு கூறியதாவது: மத்திய அரசு அதன் ஊழியர்களுக்கு 7வது சம்பள குழு பரிந்துரைகளை 1.1.2016 முதல் அமல்படுத்தியது.

மத்திய அரசு ஊழியர்கள் சம்பள மாற்றத்தையும், அதற்கான நிலுவை தொகையையும் பெற்று விட்டனர். அவர்களுக்கு 1.7.2017 முதல் சம்பள மாற்றத்திற்கான அகவிலைப்படி உயர்வு ஒரு சதவீதத்தையும் அரசு வழங்கி விட்டது. மத்திய அரசின் 8 வது சம்பள மாற்றத்திற்கான சம்பள விகிதங்களை பெறாத தன்னாட்சி நிறுவன ஊழியர்களுக்கு, பழைய சம்பள விகிதத்தில் 3 சதவீத அகவிலைப்படியை 1.7.2017 முதல் உயர்த்தி செப்., 26ல் மத்திய அரசு உத்தரவிட்டது. ஆனால் 1.1.2016 முதல் தமிழக அரசு ஊழியர், ஆசிரியர்கள் சம்பள மாற்றத்தையோ, நிலுவைத் தொகையையோ 21 மாதங்களாக பெறாமல் நிதி சுமைக்கு ஆளாகி உள்ளனர்.

மத்திய அரசு பழைய சம்பள விகிதத்தில் சம்பளம் பெறும் ஊழியர்களுக்கு 1.7.2017 முதல் அகவிலைப்படி உயர்வு அளித்துள்ளது போல், அரசு ஊழியர்களுக்கு 1.7.2017 முதல் பழைய சம்பள விகிதத்தின்படி அகவிலைப்படியை உயர்த்தி அறிவிக்க வேண்டும். ஜூலை முதல் செப்டம்பர் வரையிலான அகவிலைப்படி உயர்வு நிலுவைத் தொகையை, அரசு ஊழியர்கள் ரொக்கமாக பெற்று கொள்ளவும் உத்தரவிட வேண்டும்.

தூய்மை பள்ளி' விருது : அக்., 31 வரை அவகாசம்


மத்திய அரசின், 'துாய்மை பள்ளி' திட்டத்துக்கு, அரசு மற்றும் தனியார் பள்ளிகள் விண்ணப்பிக்க, பள்ளிக்கல்வித் துறை உத்தரவிட்டு உள்ளது. இத்திட்டத்தில், துாய்மையை பராமரிக்கும் பள்ளிகளுக்கு விருதுகள் வழங்கப்படும். நடப்பு கல்வியாண்டில், துாய்மை பள்ளி விருது பெற, செப்., 1ல், 'ஆன் - லைன்' பதிவு துவங்கியது. அக்., 31 வரை, பதிவு செய்யலாம் என,அறிவிக்கப்பட்டு உள்ளது. எனவே, 'அனைத்து அரசு மற்றும் தனியார் பள்ளிகள், துாய்மை பள்ளி விருதுக்கு, புகைப்பட ஆவணங்களுடன் விண்ணப்பிக்க வேண்டும்' என, அனைவருக்கும் கல்வி இயக்கக திட்ட இயக்குனர், நந்தகுமார் அறிவுறுத்தி உள்ளார்.

ஆதார் கட்டாயம்

அஞ்சலக சேமிப்பு உட்பட மேலும் 4 வகை சேவைகளுக்கு ஆதார் எண் கட்டாயம்: மத்திய அரசு தடாலடி

மேலும் 4 வகையான திட்டங்களுக்கு ஆதார் அடையாள எண் கட்டாயம் என்று மத்திய அரசு உத்தரவிட்டுள்ளது. இது மக்களை அதிர்ச்சிக்குள்ளாக்கியுள்ளது.

ஆதார் அடையாள அட்டை இன்னும் அனைவருக்கும் கிடைக்காத சூழ்நிலையில், பல்வேறு திட்டங்களுக்கும் ஆதார் எண்ணை மத்திய அரசு கட்டாயப்படுத்தி வருகிறது. ஆதார், அந்தரங்க உரிமையா என்ற வழக்கில், உச்சநீதிமன்றமே ஆதார் என்பது அந்தரங்க உரிமையை பாதிக்காத வண்ணம் இருக்க வேண்டும் என தீர்ப்பளித்துள்ளது.
இந்த நிலையில், மேலும் 4 நடைமுறைகளுக்கு ஆதார் அடையாள எண்ணை கட்டாயமாக்கி மத்திய அரசு இன்று உத்தரவு பிறப்பித்துள்ளது.

இந்த சேவைகளுக்கு கட்டாயம்
தபால்நிலையத்தில் வைத்திருக்கும் கணக்குகளில் பணத்தை முதலீடு செய்யவும், வருங்கால வைப்பு நிதி, தேசிய சேமிப்பு பத்திரம், கிசான் விகாஸ் பத்திரம் போன்றவற்றுக்கும் ஆதார் கட்டாயமாக்கப்பட்டுள்ளது.
  

டிசம்பர் வரை கெடு

புதிதாக இந்த கணக்குகளை துவங்குவோர் ஆதார் எண்ணுடன் கணக்கு துவங்க வேண்டும் என்றும், ஏற்கனவே இவற்றில் கணக்கு வைத்திருக்கும் வாடிக்கையாளர்கள், தங்களது கணக்குகளுடன் ஆதார் எண்ணை இணைக்க 2017ம் ஆண்டு டிசம்பர் 31ம் தேதி வரை காலக்கெடு விதிக்கப்பட்டுள்ளது.

  

4 அரசாணைகள் பிறப்பிப்பு
இது குறித்து மத்திய நிதித்துறை அமைச்சகம், தபால்துறை, வருங்கால வைப்பு நிதி, தேசிய சேமிப்புப் பத்திரம், கிசான் விகாஸ் பத்திரம் ஆகியவற்றுக்கு என தனித்தனியாக 4 அரசாணைகளை, அரசு பிறப்பித்துள்ளது.
  

விண்ணப்பித்த எண் தேவை
ஒருவேளை ஆதார் எண் இல்லாத வாடிக்கையாளர்கள், தங்களது ஆதார் எண் கோரி விண்ணப்பித்த விண்ணப்ப எண்ணை பதிவு செய்யலாம் என்றும் அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது. பெண் குழந்தைகளுக்கான சிறுசேமிப்பு திட்டமான செல்வமகள் சேமிப்பு திட்டம் உள்ளிட்ட பல சேமிப்பு திட்டங்களுக்காக அஞ்சலகங்களை பயன்படுத்துவோர் ஆதாரை சமர்ப்பிக்க வேண்டியது கட்டாயமாகிவிட்டது. ஏற்கனவே அனைத்து வங்கிகளும் ஆதார் எண்ணை கட்டாயப்படுத்தியுள்ளது குறிப்பிடத்தககது.

ஓவியப்போட்டி


Thursday, October 05, 2017

நவோதயா பள்ளி விவகாரத்தில் தமிழக அரசின் நிலைப்பாடு என்ன?


நவோதயா பள்ளிகள் விவகாரத்தில் தமிழக அரசின் நிலைப்பாடு என்ன என்பது குறித்து, அமைச்சர் செங்கோட்டையன் விளக்கம் அளித்துள்ளார். இதுதொடர்பாக, அவர் சென்னையில் நேற்று அளித்த பேட்டி: கரூர் மாநாட்டில் எம்பி தம்பிதுரை பேசும்போது, தமிழகத்துக்கு நவோதயா பள்ளிகள் வேண்டாம் என்று பேசியுள்ளார்.

தமிழக அரசின் நிலைப்பாடு என்ன? வருமா வராதா? மதுரை உயர் நீதிமன்ற கிளையில் இதுதொடர்பாக ஒரு வழக்கு உள்ளது. இது கொள்கை முடிவாக இருப்பதால் முதல்வர் மற்றும் அமைச்சர்களை கலந்து பேசி அதன் முடிவின் அடிப்படையில் அதுபற்றி நீதிமன்றத்துக்கு கடிதங்கள் எழுதுவோம். தமிழ் மொழியை இணைத்துக் கொண்டால் நவோதயா பள்ளிகளை ஏற்றுக் கொள்வீர்களா? அது கொள்கை முடிவென்று ஒரே வரியில் கூறிவிட்டேன். தனித்தனியாக கேள்விகள் கேட்டால் எப்படி? முதல்வருடன் கலந்து பேசி பிறகு அறிவிப்போம். முதல்வர் முன்னிலையில்தான் தம்பிதுரை பேசியுள்ளாரே? தனிப்பட்ட முறையில் ஒவ்வொருவர் ஒரு கருத்து கூறினால் நான் பதில் கூறமுடியாது.

அரசு நிதியுதவி பெறும் பள்ளிகளில் கடந்த 7 ஆண்டுகளாக ஆசிரியர் பணி நிரப்பப்படாமல் உள்ளதே? வட மாவட்டங்களில் ஏறத்தாழ 900க்கு மேற்பட்ட ஆசிரியர்கள் தேவை உள்ளது. அந்தந்த பகுதியில் உள்ளவர்களை தற்காலிகமாக நியமித்துக் கொள்ளலாம். அவர்களுக்கு 7500 மாத சம்பளம் வழங்கலாம். அதற்கான நிதியை ஒதுக்க முடிவு செய்துள்ளோம். முதுநிலை ஆசிரியர்கள் போட்டித் தேர்வில் நிறைய பேர் தேர்ச்சி பெற்றிருந்தும், பலருக்கு ஆசிரியர் பணியாற்றிய அனுபவம் இருந்தும் அதற்கான மதிப்பெண் வழங்காத நிலை உள்ளதே? இரண்டு ஆசிரியர் தகுதித் தேர்வு இருக்கின்றன. ஒன்று வெயிட்டேஜ். மற்றொன்று அவரின் கல்வித் தகுதி.

மூன்றாவதாக தற்காலிக ஆசிரியர்களை நியமிப்பது என்பது அனைவருக்கும் கல்வி இயக்கம் மூலம் நியமித்துள்ளோம். அவர்கள் வாரத்துக்கு 2 அல்லது 3 நாட்கள்தான் பணியாற்ற வேண்டும். அதனால் மதிப்பெண் வழங்கும் போது ஏற்காமல் இருக்கலாம். ஐசிடி பற்றி கூறினீர்கள். அதற்கான பணி எப்போது தொடங்கும்? அடுத்த வாரம் அதற்கான டெண்டர் குளோபல் முறையில் நடக்கும். இனி பள்ளிக் கல்வித்துறையில் எதுவாக இருந்தாலும் குளோபல் டெண்டர் மூலம்தான் நடக்கும். 3 ஐஏஎஸ் அதிகாரிகள் டெண்டர்களை முடிவு செய்வார்கள். அதன்பிறகு அந்த பட்டியல் அமைச்சரின் கவனத்துக்கு வரும். நவம்பர் மாத இறுதிக்குள் இதற்கான பணிகள் முடியும்.

புத்தகம் வாங்குவதில் 10 சதவீதம் கமிஷன் கேட்பதாக பதிப்பாளர்கள் தரப்பில் கூறப்படுகிறதே? என்னைப் பொறுத்தவரையில் பதிப்பாளர்கள் தங்கள் விருப்பத்துக்கு ஏற்ப புத்தகங்களை தள்ளிவிடப் பார்க்கிறார்கள். கல்வி தொடர்பான புத்தகங்கள் மட்டுமே இருக்க வேண்டும் என்பது என் நோக்கம். அதனால் நிதியை நிறுத்தி வைத்துள்ளோம். மாணவர்களுக்கு பயிற்சி எப்போது தொடங்கும்? இந்த மாத இறுதிக்குள் வீடியோ கான்பரன்சிங் மூலம் கேள்வி பதில் வெளியிடப்படும். அதை மாணவர்கள் பதிவு செய்து கொள்ளலாம். செல்போன் மூலமும் வெளியிட உள்ளோம் என்றார்

டிசம்பருக்குள் அரசு ஊழியர் பணிப்பதிவேடு கணினிமயமாக்கம் : முதன்மை செயலர் தகவல்


டிசம்பருக்குள் தமிழகத்திலுள்ள ஒன்பது லட்சம் அரசு ஊழியர்களின் பணிப்பதிவேடுகள் (சர்வீஸ் ரிக்கார்டு) கணினிமயமாக்கப்படும்,'' என, கருவூலம் மற்றும் கணக்குத்துறை முதன்மை செயலர் ஜவஹர் தெரிவித்தார். அவர் மேலும் கூறியதாவது:

திறந்த வெளிப்படையான விரைவான நிர்வாகத்தை உறுதி செய்யும் வகையில், அரசு ஊழியர்களின் பணிப்பதிவேடுகளை கணினிமயமாக்கும் பணி நடக்கிறது. இதுவரை, 60 சதவீதம் பணிகள் முடிந்துள்ளன. தற்போதைய நடைமுறையின்படி பணிப்பதிவேடுகளை பராமரிப்பதில், பல நடைமுறை சிக்கல்கள் உள்ளன.

ஒரு அரசு ஊழியர் அவரது பணிப்பதிவேட்டை முறையாக கவனித்திருக்க இயலாது. அவர் ஓய்வு பெறும் நிலையில் ஏற்கனவே பணிபுரிந்த அலுவலகத்தில் சம்பள விவரங்களை பதிவு செய்ய விடுபட்டிருந்தால், அவர் அந்த அலுவலகத்திற்கு சென்று அதை சரி செய்ய வேண்டும். இதனால் அவர் பணியிலிருந்து ஓய்வு பெற்றவுடன் ஓய்வூதிய பலன்களை உடனடியாக வழங்க முடியாத நிலை ஏற்படும். கணினிமயமாக்குவதன் மூலம், உடனுக்குடன் இதுபோன்ற குறைகளை சரி செய்ய முடியும். வங்கி கணக்குகளை அலைபேசியில் வாடிக்கையாளர்கள் பார்த்து கொள்வதை போல, அரசு ஊழியர்கள் தங்கள் அலைபேசியில் பணிப்பதிவேடு பதிவுகளை பார்த்து கொள்ளலாம்.

ஊழியர்கள் குறித்து வயது, பணி அனுபவம் என ஏதாவது ஒரு அடிப்படையில் கணக் கெடுக்க அரசு உத்தரவிடும் போது, தற்போது மூன்று நாட்களுக்கு மேலாகி விடுகிறது. கணினிமயமாக்குவதால், உடனுக்குடன் கணக்கெடுத்து விட முடியும். இதுகுறித்து அடுத்த வாரம் திருநெல்வேலி, திண்டுக்கல்லில் ஆய்வு கூட்டங்கள் நடத்தப்படவுள்ளது, என்றார்

அக்டோபர் மாதத்துக்குள் அரசுப் பள்ளிகள் அனைத்திலும் இணையதள சேவை..! அமைச்சர் செங்கோட்டையன் உறுதி


அக்டோபர் மாத இறுதிக்குள் அனைத்து அரசுப் பள்ளிகளுக்கும் இணையதள சேவை வழங்கப்படும் என்று பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையன் தெரிவித்துள்ளார். பள்ளிக் கல்வித்துறையில் சமீபகாலமாகப் பல்வேறு மாற்றங்கள் செய்யப்பட்டுவருகின்றன.

ஐந்து ஆண்டுகளுக்கு மேலாகப் பாடத்திட்டங்கள் மாற்றப்படாமல் உள்ளது என்று தொடச்சியாகப் புகார்கள் வந்துகொண்டிருந்தன. அதையடுத்து, பாடத்திட்டங்கள் மாற்றும் பணி தீவிரமாக நடந்துவருகிறது. இந்தநிலையில் செய்தியாளர்களிடம் பேசிய அமைச்சர் செங்கோட்டையன், 'பாடத்திட்டம் மாற்றம் தீவிரமாக நடைபெற்றுவருகிறது.

நவம்பர் மாத இறுதிக்குள் வரைவுப் பாடத்திட்டம் வெளியிடப்படும். வரைவுப் பாடத்திட்டம் தொடர்பாக 15 நாள்கள் வரை மக்கள் கருத்து கூறலாம். அரசுப் பள்ளி மற்றும் தனியார் பள்ளிகளுக்கிடையே உள்ள வேறுபாடுகளைக் களைய நடவடிக்கை எடுக்கப்படும். மாணவர்கள் 5 மரக் கன்றுகள் நட்டால், 5 மதிப்பெண்கள் வழங்கப்படும். அரசின் அனைத்துப் பள்ளிகளிலும் இம்மாத இறுதிக்குள் இணையதள சேவை வழங்கப்படும்' என்று தெரிவித்தார்.

ஆனந்தவிகடனில் வந்த என் கட்டுரை 5-10-17



Wednesday, October 04, 2017

தமிழகத்தில் கடும் எதிர்ப்பை மீறி 32 மாவட்டத்தில் நவோதயா பள்ளிகள்


தமிழகத்தில் நிலவும் கடும் எதிர்ப்புகளுக்கு இடையே 32 மாவட்டங்களில் விரைவில் நவோதயா பள்ளிகள் திறக்கப்பட உள்ளன. தமிழகத்தில் நவோதயா பள்ளிகள் தொடங்க பல்வேறு தரப்பினர் கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர். இருப்பினும், தமிழக அரசின் இசைவு கிடைத்துள்ளதால் விரைவில் 32 மாவட்டங்களில் ஜவகர் நவோதயா பள்ளிகள் வரப்போகின்றன.

நவோதயா பள்ளிகள் தமிழகத்தில் அமைப்பதற்கான நிலம் தேடுவது, தமிழை ஒரு பாடமாக வைப்பது உள்ளிட்ட விஷயங்கள் குறித்து ஆய்வு செய்யப்பட்டு வருகிறது. தமிழக கொள்கைளுக்கு ஏற்ப திட்டங்கள் தெளிவாக இருந்தால் 32 மாவட்டங்களில் தலா ஒரு பள்ளி வீதம் திறக்க தமிழக அரசும் இசைவு தெரிவித்துள்ளது. மத்திய இடைநிலைக் கல்வி வாரியமும் தமிழக அரசுடன் பேச்சுவார்த்தை நடத்த திட்டமிட்டுள்ளது.

கடந்த ஆண்டு மேற்கண்ட 32 பள்ளிகளை திறக்க மத்திய அரசு வாய்ப்பு கொடுத்தும் அதை தமிழகம் நிராகரித்தது. தமிழக அரசின் முடிவை எதிர்த்து இந்த ஆண்டு பொது நல வழக்கு தொடரப்பட்டுள்ளது. இதையடுத்து, தமிழகத்தில் நவோதயா பள்ளிகளை தொடங்க அனுமதிக்க வேண்டும் என்று உயர் நீதிமன்றம் தெரிவித்துள்ளது குறிப்பிடத்தக்கது.

9ம் வகுப்பு மாணவர்களுக்கு இன்று கற்றல் முன்னறிவு தேர்வு : மெல்ல கற்போருக்கு சிறப்பு பயிற்சி


அரசு பள்ளிகளில், தமிழ் வழியில் படிக்கும், ஒன்பதாம் வகுப்பு மாணவர்களுக்கு, கற்றல் முன்னறிவு தேர்வு, இன்று நடக்கிறது. அரசுப் பள்ளிகளில் படிக்கும் மாணவர்களை, திறன் மிக்கவர்களாக உருவாக்க, கல்வித் துறை நடவடிக்கைகள் மேற்கொண்டு வருகிறது. மத்திய அரசின், 'நீட்' தேர்வை எதிர்கொள்ளும் வகையில், அரசுப் பள்ளி மாணவர்களை தயார்படுத்த வேண்டும். இதற்காக, 'ஸ்மார்ட்' வகுப்பறைகள், சிறப்பு பாட திட்டங்கள் செயல்படுத்தப்பட உள்ளன.

அரசுப் பள்ளிகளில், தமிழ் வழியில், ஒன்பதாம் வகுப்பு படிக்கும் மாணவர்கள் அனைவருக்கும், இன்று, கற்றல் முன் அறிவு தேர்வு நடத்தப்படுகிறது. அனைவருக்கும் இடைநிலை கல்வி திட்டம் சார்பில் இது செயல்படுத்தப்படுகிறது. கணிதம், அறிவியல், ஆங்கிலம் பாடங்களில் இத்தேர்வு நடைபெறும். இதற்கென சிறப்பு வினாத்தாள் தயாரிக்கப்பட்டுள்ளது. இத்தேர்வில், ஒவ்வொரு பாடத்திலும், 15 மதிப்பெண்ணுக்கும் குறைவாக பெற்ற மாணவர்கள் அடையாளம் காணப்பட்டு, அவர்களுக்கு சிறப்பு பயிற்சி அளிக்கப்படும். இப்பயிற்சிக்குப் பின், மீண்டும் அடைவு தேர்வு நடத்தப்படும்.

இதன் மூலம், மெல்ல கற்கும் மாணவர்களை, பயிற்சிக்குப் பின், சக மாணவர்களுடன் இணைக்கும் வகையில், நடவடிக்கை எடுக்கப்படும். இத்தேர்விற்கான வினாத்தாள் கட்டுகள், நேற்று, தலைமை ஆசிரியர்களிடம் ஒப்படைக்கப்பட்டன. கல்வி துறையின் இந்த நடவடிக்கையால், 10ம் வகுப்பு பொதுத்தேர்வில் தேர்ச்சி சதவீதம் அதிகரிக்கும் என, ஆசிரியர்கள் தெரிவித்தனர்.

வியாழன் தோறும் பள்ளிகளில் 'டெங்கு' விழிப்புணர்வுக்கு உத்தரவு


வியாழன் தோறும், பள்ளிகளை சுத்தம் செய்து, 'டெங்கு' விழிப்புணர்வு ஏற்படுத்த, பள்ளிக்கல்வித் துறை உத்தரவிட்டுள்ளது. தமிழகத்தில், டெங்கு காய்ச்சல் பரவும் நிலையில், பள்ளிகளில், டெங்கு தடுப்பு நடவடிக்கைக்கு உத்தரவிடப்பட்டுஉள்ளது.

பள்ளிக் கல்வி இயக்குனர் இளங்கோவன், நேற்று முன்தினம் அனுப்பியுள்ள சுற்றறிக்கை:

 பள்ளிகளின் காலை பிரார்த்தனை கூட்டத்தில், டெங்கு காய்ச்சல் தடுப்பு, விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும்

 டெங்கு கொசுக்கள், நன்னீரில் உற்பத்தியாவதால், பள்ளி வளாகங்களில் நீர் தேங்காமல், சுத்தமாக வைத்து இருக்க வேண்டும்

 டெங்கு பரவும் முறை; அதை தடுக்கும் வகையில், பள்ளிகளையும், வீட்டையும் சுத்தமாக வைத்திருக்கும் முறைகளை மாணவர்களுக்கு, ஆசிரியர்கள் தெரிவிக்க வேண்டும்

 உள்ளாட்சி துப்புரவு பணியாளர்கள் மூலம், பள்ளி வளாகத்தை சுத்தம் செய்ய வேண்டும். வியாழன் தோறும், பள்ளி மற்றும் வீடுகள் உள்ள பகுதிகளை சுத்தப்படுத்த வேண்டும்; அத்துடன், உறுதிமொழியும் ஏற்க வேண்டும்

 நாட்டு நலப்பணி திட்டமான, என்.எஸ்.எஸ்., - தேசிய மாணவர் படையான, என்.சி.சி., - இளம் செஞ்சிலுவை சங்கம், பசுமைப்படை, சாரண, சாரணியர் இயக்கம் ஆகியவற்றின் மூலம், பெற்றோருக்கும், மாணவர்களுக்கும், டெங்கு விழிப்புணர்வு பிரசாரம் மேற்கொள்வது அவசியம்

 மாணவர்கள் காய்ச்சலுடன் பள்ளிக்கு வந்தால், பெற்றோர் அல்லது பாதுகாவலருக்கு தெரிவித்து, அருகிலுள்ள, அரசு சுகாதார மையத்திற்கு அழைத்துச் செல்ல வேண்டும். இந்த உத்தரவுகளை, தலைமை மற்றும் ஆசிரியர்கள் பின்பற்ற வேண்டும். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

2003 போராட்டம்


பொய்; உண்மையாகுமா?

"ஒரு பொய்யை பத்து முறை கூறு
உண்மை போன்று தோன்றும்"

"எப்போதுமே மக்களிடம் சின்ன பொய்யைச் சொல்லி அவர்களை ஆள்வது கடினம்.அதனால்,பெரிய பொய்களைச் சொல்லக் கற்றுக்கொள்ளுங்கள்"
-கோயபல்ஸ்

*உங்க மாநில செயலாளர் 2003 போராட்டத்தில் ஓடிவிட்டார் என ஆதாரமில்லாமல் பதிவிடும் நண்பர்களுக்கான விளக்கப்பதிவு.

2003 வரலாற்று சிறப்பு மிக்க  போராட்டத்தில் ஒரு இயக்கம் மூன்றாம் நாள் பின்வாங்கியது.குற்றச்சாட்டு வைக்கும் தமிழ்நாடு ஆரம்பப்பள்ளி ஆசிரியர் கூட்டணி இப்போது போல் தொடர்ந்து களத்தில் இருந்தது.

4-7-2003 பணிக்கு திரும்பாவிட்டால் எஸ்மா பாயும் என்றது அம்மா அரசு.அதன் விளைவாய் 1,75,000 பேர் பணி நீக்கம்.6-3-03 இரவில் நீதியரசர் தினகரன் பணி நீக்க உத்தரவு ரத்து செய்தார்.தமிழக அரசு தீர்ப்புக்கு தடையாணை பெற்றது.சிஐடியு
டி.கே.ரங்கராஜன்,எஸ்.எஸ்.தியாகராஜன்,செ.குப்புசாமி,நளினி சிதம்பரம் ஆகிய 4பேர் பொதுநல வழக்கு  தொடுத்தனர்.

16நாள் விசாரணைக்கு பின் 22 நாள் ஊதிய இழப்புடன் 6072 பேர் தவிர 1,64,169 பேர் பணியில் சேர்ந்தனர். இந்த 6072 பேரில் 999 பேர் நிரந்தர பணி நீக்கம் செய்யப்பட்டனர். பொதுச்செயலாளர் பர்வதராஜன் உட்பட
(இதில் திருப்பூர் வடக்கில் TNPTF ல் மட்டுமே இருவர் டிஸ்மிஸ்
*திரு லாரன்ஸ் நிர்மல்ராஜ்,நாராயணன்*
இருவர் மட்டுமே

உங்க பாணியில் சொல்லனும்னா.முன்னாள் பொறுப்பாளர்களை கேட்கவும்)

19-5-2004 ல் டிஸ்மிஸ் உத்தரவு ரத்து செய்யப்பட்டு பணிக்கு திரும்பினர். அப்போது TNPTF செ.நடேசன் "நல்ல சமயமிது நழுவவிட மாட்டோம்" எனும் துண்டு பிரசுரம் ஆசிரியர்கள் மனசாட்சியாக வலம்வந்தது.ஜூ.வி இதழிலும் இவரின் பேச்சு பெட்டிச் செய்தியாக வந்தது.

#இப்படிப்பட்ட போராளிகளை கொச்சைப்படுத்தும் விதமாக
உங்க பொறுப்பாளகள் 2003 ல் வரவில்லை.ஓடிவிட்டனர்.என அவதூறு பரப்புவோர்க்கு மனசாட்சி உண்டா?

#யாரோ எப்போதோ கைதட்டலுக்கு ஒரு கட்டுக்கதையை உங்களிடம் அவிழ்த்து விட்டிருப்பார்கள்.அதை இன்னுமா பிடித்து தொங்குவது

*இனியாவது கவுண்டமணியிடம் சின்னப்பையன் சொல்வானே
வெத்தல தோப்பு தெரியுமா
தோப்பு வீடாவது தெரியுமா னு
அது போல் மொட்டையாக பதிவிடாமல் ஆதாரத்துடன் பதிவிடுங்கள்

#நடுநிலை ஆசிரியர்களும், புதிய ஆசிரியர்களுக்கும் உண்மையை உரக்கச் சொல்லும் பதிவு இது

#2017 போராட்டத்தை யாரும் திரிக்க முடியாது.ஏனெனில் இப்போது இணையம் வந்துவிட்டது.

#ஆதாரத்துடன் வெளியிடுகிறேன். எதிர்ப்பவர்கள் ஆதாரத்துடன் பதிவிட வேண்டுகிறேன்

#Forward மெசேஜும் பொய்
Copy past ம் பொய்
தீர விசாரித்து டைப் பண்ணுவதே மெய்

தோழமையுடன் மணி