இலவச SMS களை உடனுக்குடன் பெற ON tnptfmani என்று type செய்து 9870807070 என்ற எண்ணிற்கு அனுப்பி இலவச குறுந்தகவல்களை(SMS) பெறுங்கள். DND (Do NOT Disturb) சர்வீஸ்ல் உள்ள எண்கள் அதனை(DND) நீக்கிய பிறகே இச்சேவையை பெறமுடியும். plz call 1909

Sunday, November 15, 2015

25 மாவட்டங்களுக்கு இன்று விடுமுறை


தென்மேற்கு வங்ககடலில் நிலைகொண்டுள்ள காற்றழுத்த தாழ்வு மண்டலத்தின் காரணமாக, தமிழகம் மற்றும் புதுச்சேரியில் கனமழை பெய்து வருகிறது. இதனையடுத்து பல மாவட்டங்களில் பள்ளி, கல்லுாரிகளுக்கு விடுமுறை வழங்கப்பட்டுள்ளது.

திருச்சி, நாமக்கல், விழுப்புரம், திருவண்ணாமலை, கடலூர், நாகப்பட்டினம், காஞ்சிபுரம், கன்னியாகுமரி, வேலூர், சென்னை, திருவள்ளூர், திருவாரூர், புதுக்கோட்டை ஆகிய மாவட்டங்களுக்கு இன்று(16-11-15) பள்ளி மற்றும் கல்லுாரிகளுக்கு விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது.
ராமநாதபுரம் மாவட்ட பள்ளி, கல்லுாரிகளுக்கு 2 நாள் விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது.

தர்மபுரி, பெரம்பலூர், கரூர், அரியலூர், தஞ்சாவூர், நீலகிரி, கிருஷ்ணகிரி, சேலம், ஈரோடு, திருப்பூர் துாத்துக்குடி ஆகிய மாவட்டங்களுக்கு பள்ளிகளுக்கு மட்டும் இன்று விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது.

மழைக்காலத்தில் மாணவர்களுக்காக 15 பாதுகாப்பு நடவடிக்கைகள்


மழைக்காலங்களில் மாணவர்களைப் பாதுகாக்க வேண்டிய முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் குறித்து பள்ளிக்கல்வித் துறை சுற்றறிக்கை வெளியிட்டுள்ளது. இது தொடர்பாக மாவட்ட முதன்மைக் கல்வி அதிகாரிகள், மாவட்ட கல்வி அதிகாரிகள், மாவட்ட தொடக்கக் கல்வி அதிகாரிகள் மற்றும் மெட்ரிக் பள்ளிகளின் ஆய்வாளர்களுக்கு பள்ளிக்கல்வி இயக்குநர் எஸ்.கண்ணப்பன் அனுப்பியுள்ள சுற்றறிக்கையில் கூறியிருப்பதாவது:

* நீர்நிலைகளில் உடைப்பு ஏற்படும் அபாயம் இருப்பதால் மாணவர்கள் ஆறு, ஏரி, குளங்களுக்கு வேடிக்கை பார்க்கச் செல்ல வேண்டாம்.

* தொடர் மழையின் காரணமாக பள்ளியில் சுற்றுச்சுவர் மிகுந்த ஈரப்பதத்துடன் காணப்படலாம். எனவே, சுற்றுச்சுவரிலிருந்து 20 அடி தூரத்துக்கு மாணவர்கள் செல்லாதவாறு தடுப்புகள் ஏற்படுத்த வேண்டும்.

* மழை காரணமாக சில வகுப்பறைகள் பாதிக்கப்பட்டிருக்கலாம். அத்தகைய அறைகளை பயன்படுத்தக் கூடாது. அவற்றை பூட்டிவைக்க வேண்டும்.

* மின் இணைப்புகள் சரியாக உள்ளனவா, மின்கசிவு, மின்கோளாறு ஏதேனும் உள்ளனவா என்பதை ஆய்வுசெய்ய வேண்டும். தேவைப்பட்டால் மின் இணைப்பை தற்காலிகமாக துண்டித்துக்கொள்ளலாம். அத்துடன் மின்சார வாரியத்தை தொடர்பு கொண்டு மின் கோளாறுகளை உடனடியாக சரிசெய்ய வேண்டும்.

* பள்ளி வளாகத்தில் பள்ளங்கள், திறந்தவெளி கிணறுகள், கழிவுநீர் தொட்டி, நீர்த்தேக்க தொட்டிகள் இருந்தால், அவை மூடப்பட்ட நிலையில் இருக்கின்றனவா என்பதை உறுதி செய்ய வேண்டும்.

* மாணவர்கள் விடுமுறை நாட்களில் ஏரி, குளம் மற்றும் ஆறுகளில் குளிப்பதை தவிர்க்க வேண்டும். விடுமுறை காலங்களில் நீர்நிலைகளுக்கு அருகே வேடிக்கை பார்க்க செல்லக் கூடாது. இதுகுறித்து தலைமை ஆசிரியர்கள் பெற்றோருக்கு விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும்.

* மாணவர்கள் பள்ளிக்குச் செல்லும்போதும், திரும்பும்போதும் வெள்ளப்பெருக்கெடுத்து ஓடும் வழியை தவிர்க்க வேண்டும்.

* சாலையில் செல்லும்போது பழுதடைந்த அல்லது அறுந்து கிடக்கும் மின் கம்பிகளை தொடுவதோ அல்லது அருகே செல்வதோ கூடாது. மாணவர்கள் சாலையில் மழைநீர் கால்வாய்கள் இருக்கும் இடங்கள் வழியே செல்வதை தவிர்க்க வேண்டும்.

* பள்ளி வளாகத்தில் விழும் நிலையில் மரங்கள் ஏதேனும் இருந்தால் உடனடியாக அவற்றை அகற்ற வேண்டும்.

* சுவிட்சுகள் சரியாக உள்ளனவா, மழைநீர் படாத வண்ணம் இருக்கின்றனவா என்பதை தலைமை ஆசிரியர்கள் ஆய்வு செய்ய வேண்டும்.

* மாணவர்களைக் கொண்டு மின்சாதனங்களை இயக்கக் கூடாது.

* பள்ளியில் உள்ள கட்டிடங்களின் மேற்கூரைகள் உறுதியாக உள்ளனவா என்பதை அவ்வப்போது ஆய்வு செய்ய வேண்டும். மேற்கூரையில் மழைநீர் தேங்கா வண்ணம் பார்த்துக்கொள்ள வேண்டும்.

* பள்ளி வளாகத்தில் கட்டிட பராமரிப்பு பணிகள் மற்றும் புதிய கட்டிடங்கள் கட்டும் பணிகள் நடைபெறும் இடங்களுக்கு மாணவர்கள் செல்ல தடை விதிக்க வேண்டும். பள்ளங்களைச் சுற்றி பாதுகாப்பான தடுப்பு அமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.

* மழையில் இருந்து காத்துக்கொள்ள மரங்களின் கீழ் ஒதுங்கக் கூடாது என்றும் அவ்வாறு ஒதுங்கினால் இடி, மின்னலால் ஆபத்து நேரிடக்கூடும் என்றும் ஆசிரியர்கள் மாணவர்களுக்கு அறிவுறுத்த வேண்டும்.

* பருவகால மாற்றங்களால் ஏற்படக்கூடிய டெங்கு, சிக்குன் குனியா போன்ற காய்ச்சல்களில் இருந்து பாதுகாத்துக்கொள்ள மாணவர்களுக்குத் தேவையான அறிவுரைகள் வழங்க வேண்டும். காய்ச்சல் இருந்தால் காலதாமதம் செய்யாமல் உடனடியாக மருத்துவமனைக்குச் சென்று சிகிச்சை மேற்கொள்ள அறிவுறுத்த வேண்டும். இவ்வாறு அந்த சுற்றறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

Saturday, November 14, 2015

பிளஸ் 2, பத்தாம் வகுப்பு அரையாண்டுத் தேர்வு கால அட்டவணை வெளியீடு


பிளஸ் 2 வகுப்புக்கான அரையாண்டுத் தேர்வு டிசம்பர் 7-ஆம் தேதியும், பத்தாம் வகுப்புக்கான அரையாண்டுத் தேர்வு டிசம்பர் 9-ஆம் தேதியும் தொடங்குகின்றன. மாநிலம் முழுவதும் பொதுவாக நடைபெறும் இந்தத் தேர்வுகளுக்கான கால அட்டவணையை பள்ளிக் கல்வி இயக்ககம் சனிக்கிழமை வெளியிட்டுள்ளது.

பிளஸ் 2 வகுப்புக்கான கால அட்டவணை விவரம்:- டிசம்பர் 7 - திங்கள்கிழமை - மொழிப்பாடம் முதல் தாள் டிசம்பர் 8 - செவ்வாய்க்கிழமை - மொழிப்பாடம் இரண்டாம் தாள் டிசம்பர் 9 - புதன்கிழமை - ஆங்கிலம் முதல் தாள் டிசம்பர் 10 - வியாழக்கிழமை - ஆங்கிலம் இரண்டாம் தாள் டிசம்பர் 12 - சனிக்கிழமை - வணிகவியல், மனையியல், புவியியல் டிசம்பர் 14 - திங்கள்கிழமை - கணிதம், விலங்கியல், மைக்ரோ பயாலஜி, நியூட்ரிஷன் அண்ட் டயட்டிக்ஸ், டெக்ஸ்டைல்ஸ் டிசைனிங், விவசாயம், அரசியல் அறிவியல், நர்சிங் (தொழில் கல்வி), நர்சிங் (பொது), கணக்குப் பதிவியல், கணக்குத் தணிக்கை

டிசம்பர் 16 - புதன்கிழமை - இயற்பியல், பொருளாதாரம், பொது இயந்திரவியல், எலெக்ட்ரானிக்ஸ் எக்யூப்மென்ட், டிராப்ட்ஸ்மென் சிவில், எலெக்ட்ரிக்கல் மெஷின்ஸ் அண்ட் அப்ளையன்சஸ், ஆட்டோ மெக்கானிக், டெக்ஸ்டைல் டெக்னாலஜி, அலுவலக மேலாண்மை டிசம்பர் 18 - வெள்ளிக்கிழமை - வேதியியல், கணக்குப் பதிவியல், பொது இயந்திரவியல் தாள்-2, எலெக்ட்ரிக்கல் மெஷின்ஸ் அண்ட் அப்ளையன்சஸ் தாள் 2, தொழில்கல்வி மற்றும் தணிக்கை டிசம்பர் 21 - திங்கள்கிழமை - உயிரியல், தாவரவயில், வரலாறு, வணிகக் கணிதம் டிசம்பர் 22 - செவ்வாய்க்கிழமை - கம்யூனிக்கேட்டிவ் இங்கிலீஷ், இந்திய கலாசாரம், கம்ப்யூட்டர் சயின்ஸ், பயோ-கெமிஸ்ட்ரி, சிறப்பு மொழிப்பாடம் (தமிழ்), புள்ளியியல், கணக்குப் பதிவியல் மற்றும் கணக்குத் தணிக்கை, செய்முறைத் தேர்வு, தட்டச்சு (தமிழ், ஆங்கிலம்) தேர்வுகள் காலை 10 முதல் 1.15 வரை நடைபெறும்.

இதில் முதல் 10 நிமிஷங்கள் வினாத்தாளைப் படித்துப் பார்க்கவும், அடுத்த 5 நிமிஷங்கள் விடைத்தாளில் உள்ள விவரங்களைப் பூர்த்தி செய்யவும் வழங்கப்படும். பத்தாம் வகுப்புத் தேர்வு அட்டவணை: டிசம்பர் 9 - புதன்கிழமை - மொழிப்பாடம் முதல் தாள் டிசம்பர் 10 - வியாழக்கிழமை - மொழிப்பாடம் இரண்டாம் தாள் டிசம்பர் 12 - சனிக்கிழமை - ஆங்கிலம் முதல் தாள் டிசம்பர் 14 - திங்கள்கிழமை - ஆங்கிலம் இரண்டாம் தாள் டிசம்பர் 16 - புதன்கிழமை - அறிவியல் டிசம்பர் 18 - வெள்ளிக்கிழமை - சமூக அறிவியல் டிசம்பர் 21 - திங்கள்கிழமை - கணிதம் தேர்வுகள் காலை 10 மணி முதல் 12.45 மணி வரை நடைபெறும். முதல் 10 நிமிஷங்கள் வினாத்தாளைப் படித்துப் பார்க்கவும், அடுத்த 5 நிமிஷங்கள் விடைத்தாள் விவரங்களைப் பூர்த்தி செய்யவும் வழங்கப்படும்.

புதிய ஓய்வூதிய திட்டத்தில் கட்டணம் வசூலிக்க உத்தரவு: அரசு ஊழியர்கள் அதிர்ச்சி


மத்திய அரசின் புதிய பங்களிப்பு ஓய்வு ஊதிய திட்டத்தில், பல்வேறு தலைப்புகளின் கீழ், கட்டணம் வசூல் செய்ய மத்திய அரசு உத்தரவிட்டு உள்ளது. மத்திய, மாநில அரசுகளின் கீழ் பணிபுரியும் அரசு ஊழியர்களுக்கு, 2004 முதல் புதிய பங்களிப்பு ஓய்வு ஊதிய திட்டம் நடைமுறைப்படுத்தப்பட்டு வருகிறது. பிரச்னை நீடிப்பு:இத்திட்டம் நடைமுறைக்கு வந்து ௧௦ ஆண்டுகள் கடந்துள்ள நிலையில், மற்ற மாநிலங்கள் எல்லாம் நிதி பிடித்தம் செய்து, ஓய்வு ஊதிய நிதி ஒழுங்காற்று ஆணையத்தில் செலுத்தி உள்ளனர். ஆனால், தமிழகத்தில் இதுநாள் வரை ஒரு பைசா கூட, ஓய்வு ஊதிய திட்டத்தில் பணம் செலுத்தவில்லை என்பது தெரியவந்துள்ளது.

இந்த பிரச்னை ஒரு புறம் நீடித்து வருகிறது. இந்நிலையில், புதிய பங்களிப்பு ஓய்வு ஊதிய திட்ட சந்தாதாரர்களுக்கு கணக்குகளை பராமரிக்க, கட்டணம் வசூல் செய்ய மத்திய அரசின் ஓய்வு ஊதிய துறை உத்தரவிட்டு உள்ளது.

இந்த அறிவிப்பின் படி மத்திய கணக்கு பதிவு முகமைக்கு (சி.ஆர்.ஏ) வந்துள்ள உத்தரவில், கணக்கு துவங்குவதற்கு 50 ரூபாயும், ஆண்டு பராமரிப்பு கட்டணமாக 190 ரூபாயும், ஒவ்வொரு பண பரிவர்த்தனையின் போதும் 4 ரூபாயும், ஓய்வு ஊதிய நிதி மேலாளர் களுக்கும் கணக்கு பராமரிப்பு கட்டணம் செலுத்த வேண்டுமென அறிவிப்பு வெளியிடப்பட்டது. இந்நிலையில், 2004ம் ஆண்டுக்கு முன் பணியில் சேர்ந்த அனைத்து அரசு ஊழியர்களுக்கும், வருங்கால வைப்பு நிதி உள்ளிட்ட கணக்குளை பராமரிக்க, பராமரிப்பு கட்டணம் வசூல் செய்வதில்லை.

வாக்குறுதி:மத்திய அரசின் தற்போதைய அறிவிப்பானது, அரசு ஊழியர்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளதாக குமுறுகின்றனர்.

ஆரம்ப பள்ளி ஆசிரியர் கூட்டணியின் மாவட்ட துணை நிர்வாகி பிரடெரிக் ஏங்கல்ஸ் கூறியதாவது: புதிய ஓய்வு ஊதிய திட்டம் நடைமுறைப்படுத்தப்பட்டு 12 ஆண்டு கள் ஆகியும், ஒருவருக்கு கூட ஓய்வூதியம் வழங்க வில்லை. கடந்த சட்டசபை தேர்தலின் போது, புதிய ஓய்வு ஊதிய திட்டத்தை ரத்து செய்துவிட்டு, பழைய திட்டத்தையே நடைமுறை படுத்த உள்ளதாக, முதல்வர் ஜெயலலிதா வாக்குறுதி அளித்தார். அதை இதுவரை நிறைவேற்றாததால், ஆசிரியர்கள் மற்றும் அரசு ஊழியர்களிடையே அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது. மத்திய அரசின் இந்த புதிய கட்டண அறிவிப்பானது, மேலும் அதிருப்தியை அதிகரிப்பதாக உள்ளது.

இது குறித்து தமிழக அரசியல் கட்சிகள் அனைத்தும் மவுனம் சாதிப்பது வியப்பை ஏற்படுத்துகிறது. குடும்ப ஓய்வு ஊதியம், மற்றும் ஓய்வு ஊதியம் உள்ளிட்ட பலன்களை முறையாக வழங்க முன்வர வேண்டும்.இவ்வாறு அவர் கூறினார்.

சஞ்சாயிகா' சேமிப்பு திட்டத்துக்கு புத்துயிர் தருமா கல்வித்துறை?


அரசு பள்ளிகளில் முடங்கியுள்ள, 'சஞ்சாயிகா' சிறுசேமிப்பு திட்டத்துக்கு புத்துயிர் அளிக்க கல்வித்துறை முன்வர வேண்டும்' என்ற கோரிக்கை எழுந்துள்ளது.பள்ளி குழந்தைகள் மத்தியில் சிக்கனம், சேமிப்பு குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்தும் வகையில், பல ஆண்டுகளுக்கு முன், பள்ளி கல்வித்துறை மூலம், 'சஞ்சாயிகா' என்ற சிறுசேமிப்பு திட்டம் செயல்படுத்தப்பட்டது.

மாணவர் மத்தியில் சேமிப்பு பழக்கம் வளர்ந்தது. துவக்கத்தில் நல்ல வரவேற்பை பெற்ற இத்திட்டம், நாளடைவில் முடங்கியது. இன்றைய காலகட்டத்தில் மாணவ, மாணவியர் மத்தியில், பணப்புழக்கம் அதிகமாக உள்ளது. மொபைல் போன், சினிமா, சுற்றுலா என, வீணாக இப்பணத்தை செலவிடுகின்றனர். சிறு வயதில் மாணவ, மாணவியர் மத்தியில் சிக்கனம், சேமிப்பு குறித்த விழிப்புணர்வு ஏற்படுத்துவது அவசியம்.

பள்ளிகளில், 'சஞ்சாயிகா' சிறுசேமிப்பு திட்டத்துக்கு புத்துயிர் தந்து, தமிழகம் முழுவதும் அரசு பள்ளிகளில் இத்திட்டத்தை மீண்டும் செயல்படுத்த, கல்வித்துறை முன்வர வேண்டும் என, ஆசிரியர்கள் எதிர்பார்க்கின்றனர்.

Friday, November 13, 2015

பிளஸ் 2 தனித் தேர்வு: நவம்பர் 16 முதல் விண்ணப்பிக்கலாம்


பிளஸ் 2 தனித்தேர்வுக்கு நவம்பர் 16 (திங்கள்கிழமை) முதல் 27 வரை விண்ணப்பிக்கலாம் என அரசுத் தேர்வுகள் இயக்ககம் அறிவித்துள்ளது. இதுதொடர்பாக அரசுத் தேர்வுகள் இயக்ககம் வெள்ளிக்கிழமை வெளியிட்ட அறிவிப்பில் மேலும் கூறியிருப்பதாவது: கல்வி மாவட்டம் வாரியாக அமைக்கப்பட்டுள்ள சேவை மையங்களில், தனித்தேர்வர்கள் நேரில் தங்களது விண்ணப்பத்தைப் பதிவு செய்ய வேண்டும். நேரடித் தனித்தேர்வர்கள் கட்டணமாக ரூ.187, மறுமுறை தேர்வு எழுதுவோர் ஒவ்வொரு பாடத்துக்கும் ரூ.50, இதரக் கட்டணமாக ரூ.35 செலுத்த வேண்டும். அதோடு இணையதளப் பதிவுக் கட்டணமாக ரூ.50 செலுத்த வேண்டும். மாற்றுத்திறனாளிகளுக்கு கட்டணம் செலுத்துவதிலிருந்து விலக்கு அளிக்கப்பட்டுள்ளது.

விண்ணப்பத்தைப் பதிவு செய்த பிறகு, தனித்தேர்வர்களுக்கு ஒப்புகைச் சீட்டு வழங்கப்படும். அதில் குறிப்பிட்டுள்ள விண்ணப்ப எண்ணைப் பயன்படுத்தியே தேர்வுக்கூட நுழைவுச் சீட்டுகளைப் பதிவிறக்கம் செய்ய இயலும். எனவே, இதைப் பாதுகாப்பாக வைத்திருக்க வேண்டும். சேவை மையங்களின் விவரங்கள், தேர்வர்களுக்கான அறிவுரைகள் ஆகியவற்றை www.tndge.in என்ற இணையதளத்தில் அறிந்துகொள்ளலாம். மதிப்பெண், பள்ளி மாற்றுச் சான்றிதழ்களின் நகல்கள், பத்தாம் வகுப்பு அல்லது அதற்குச் சமமான தேர்வில் தேர்ச்சி பெற்றதற்கான அசல் மதிப்பெண் சான்றிதழ் உள்ளிட்டவற்றை தேர்வர்கள் சேவை மையத்துக்கு எடுத்து வர வேண்டும் என செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

10 ம் வகுப்பு பொதுத்தேர்வில் தமிழ்பாடம் கட்டாயம்கூட்டுத்தொகையிலும் மாற்றம்


இக்கல்வி ஆண்டு முதல், பத்தாம் வகுப்பு பொதுத்தேர்வு பகுதி- 1ல் தமிழ் கட்டாயம் ஆக்கப்பட்டுள்ளதால், பிறமொழிப்பாடங்களின் மதிப்பெண், கூட்டுத்தொகையில் சேர்க்கப்படாது.தமிழகத்தில் தமிழ் கற்பிக்கும் சட்டம் 2006ல் அமலுக்கு வந்தது. 2006-- 07 கல்வி ஆண்டில் ௧ம் வகுப்பு மாணவர்களுக்கு, தமிழ் முதல் மொழிப்பாடமாக கற்பிக்கப்பட்டது. பின் அடுத்தடுத்த வகுப்புகளுக்கு விரிவாக்கம் செய்யப்பட்டது.

தமிழ் கட்டாயம்அதன்படி, இக்கல்வி ஆண்டில் (2015-16) பத்தாம் வகுப்புக்கு கட்டாயம் ஆக்கப்பட்டது. மார்ச்சில் நடக்க உள்ள பொதுத்தேர்வில் பகுதி-1ல் முதல் மொழிப்பாடமாக தமிழை எழுத வேண்டும்.கல்வித்துறை அதிகாரி ஒருவர் கூறியதாவது:கடந்த கல்வி ஆண்டு வரை பத்தாம் வகுப்பில் கன்னியாகுமரி, கோவை, நீலகிரி, திருவள்ளூர், தர்மபுரி, கிருஷ்ணகிரி உள்ளிட்ட எல்லையோர மாவட்டங்களில் இந்தி, உருது, மலையாளம், தெலுங்கு, கன்னடம், சமஸ்கிருதம், பிரஞ்சு ஆகிய மொழிப்பாடங்களை பகுதி-1ல் மாணவர்கள் எழுதிவந்தனர். ஆனால் இக்கல்வி ஆண்டில் பகுதி-1ல் தமிழ் கட்டாயம் ஆக்கப்பட்டுள்ளது. கூட்டுத்தொகைபகுதி- 2ல் ஆங்கிலம், பகுதி- 3ல் கணிதம், அறிவியல், சமூக அறிவியல் பாடங்களுக்குப்பின், பகுதி- 4ல் இதர மொழிப்பாடங்களுக்கான தேர்வு எழுத உள்ளனர்.

அவர்களின் மதிப்பெண் பட்டியலில் மொழிப்பாடங்களுக்கான மதிப்பெண் இருக்கும். ஆனால் கூட்டுத்தொகையில் சேர்க்கப்படாது. இக்கல்வி ஆண்டு முதல் சி.பி.எஸ்.இ.,- ஐ.சி.எஸ்.இ., பாடத்திட்டத்திலும் ௧ம் வகுப்பில் தமிழ் கட்டாயம் ஆக்கப்பட்டுள்ளது, என்றார்

NMMS exam 2015-16

Click below

https://app.box.com/s/btwneu0m0owvjiyzzus3qe1h44jwvbky

Thursday, November 12, 2015

பள்ளிகளில் 4 முறை வருகைப்பதிவு


தொடக்கக் கல்வி இயக்குனர் இளங்கோவன், பள்ளிகளுக்கு அனுப்பிஉள்ள சுற்றறிக்கை: மாணவர் பாதுகாப்பை உறுதி செய்யும் வகையில், தினமும், நான்கு வேளையும், மாணவர்களின் வருகையை உறுதிபடுத்த வேண்டும். காலையில் வகுப்பு துவங்கியதும், இடைவேளை முடிந்து, மாணவர்கள் மீண்டும் வகுப்புக்கு வந்ததும், வருகை பதிவேடு சரிபார்க்கப்பட வேண்டும்; தொடர்ந்து, மதிய உணவு முடிந்து, வகுப்பு துவங்கும் போதும்; மாலை இடைவேளைக்கு பிறகும் சரிபார்க்கப்பட வேண்டும்.

பங்களிப்பு ஓய்வூதியம் கிடைக்குமா? குளறுபடி தகவலால் புது குழப்பம்


பி.எப்., எனப்படும், பங்களிப்பு ஓய்வூதியத் திட்டத்தில், பிடித்தம் செய்த தொகையை திருப்பித் தர, அரசாணை எதுவும் பிறப்பிக்கப்படவில்லை' என்ற தகவலால், ஆசிரியர்கள் மற்றும் அரசு ஊழியர்கள் அதிர்ச்சி அடைந்துள்ளனர்.அரசு ஊழியர்கள் மற்றும் ஆசிரியர்களுக்கான பங்களிப்பு ஓய்வூதியத் திட்ட பணி, தமிழக அரசின் மாநில கணக்காயர் அலுவலகத்தில் இருந்து, மாநில தகவல் தொகுப்பு மையத்துக்கு மாற்றப்பட்டுள்ளது.

இத்திட்டத்தில், மாநிலம் முழுவதும் ஆசிரியர்கள் மற்றும் அரசு ஊழியர்களிடம் பிடித்தம் செய்த, 2,300 கோடி ரூபாய், இன்னும் மத்திய அரசின் பங்களிப்பு நிதி ஆணையத்துக்கு செலுத்தவில்லை என தகவல் வெளியாகி, குழப்பத்தை ஏற்படுத்தியது. இந்நிலையில், பங்களிப்பு நிதி குறித்து, தமிழக அரசின் தகவல் தொகுப்பு மையம் அளித்துள்ள தகவல், ஆசிரியர்கள் மற்றும் ஊழியர்களை அதிர்ச்சி அடையச் செய்துள்ளது. திருநெல்வேலி மாவட்டம், தென்காசி அருகேயுள்ள, குலசேகரன்பட்டியை சேர்ந்த மாரியம்மாள் என்பவர், தகவல் அறியும் உரிமைச் சட்டத்தில், பங்களிப்பு நிதி குறித்த விவரம் கேட்டிருந்தார்.

அதற்கு, 'அரசு பங்களிப்பு நிதி திட்டத்தில் பிடித்தம் செய்த நிதியை, இறந்த ஊழியர் குடும்பத்திற்கு, திருப்பித் தருவது குறித்து, அரசாணை பிறப்பிக்கப்படவில்லை' என, தகவல் தொகுப்பு மைய ஆணையர் பதில் அளித்துள்ளார். ஆனால், 2009ம் ஆண்டில், அப்போதைய நிதித்துறை முதன்மை செயலரும், தற்போதைய தலைமைச் செயலருமான ஞானதேசிகன் பிறப்பித்த அரசாணையில், 'பங்களிப்பு ஓய்வூதிய நிதியில், அரசின் பங்களிப்புடன், ஆண்டுக்கு, 8 சதவீதம் வட்டி சேர்த்து, ஊழியர்களுக்கு திருப்பி தரப்படும்' என, குறிப்பிட்டுள்ளார். தற்போது, 'அரசாணையே இல்லை' என, அரசு தகவல் தொகுப்பு மையம் முரண்பட்ட பதிலை தெரிவித்துள்ளது.

இது குறித்து, பட்டதாரி ஆசிரியர்கள் கூட்டமைப்பு பொதுச் செயலர், பேட்ரிக் ரைமண்ட் கூறியதாவது:ஏற்கனவே பல குழப்பங்கள் இருக்கும் நிலையில், நிதியை திருப்பித் தரவே ஆணை இல்லை என, அரசு தெரிவித்திருப்பது, அதிர்ச்சியாக உள்ளது. எனவே, பங்களிப்பு ஓய்வூதியத் திட்ட நிதி எப்போது கிடைக்கும்; அந்த தொகை, எங்கே முதலீடு செய்யப்பட்டுள்ளது என, அரசு உடனடியாக விளக்கம் அளிக்க வேண்டும்

வி.ஏ.ஓ.: 813 காலியிடங்களை நிரப்ப பிப்ரவரி 14-ல் தேர்வு


கிராம நிர்வாக அதிகாரி (வி.ஏ.ஓ.) பதவியில் 813 காலியிடங்களை நிரப்புவதற்கு அடுத்த ஆண்டு பிப்ரவரி 14-ஆம் தேதி போட்டித் தேர்வு நடத்தப்படும் என்று தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் (டிஎன்பிஎஸ்சி) அறிவித்துள்ளது. இந்தத் தேர்வை எழுத ஆன்லைனில் விண்ணப்பிக்க வேண்டும். விண்ணப்பிக்க டிசம்பர் 14-ஆம் தேதி கடைசி நாளாகும். விஏஓ பணிக்கு எஸ்.எஸ்.எல்.சி. தேர்ச்சி பெற்றவர்கள் ஆன்லைனில் (ஜ்ஜ்ஜ்.ற்ய்ல்ள்ஸ்ரீ.ஞ்ர்ஸ்.ண்ய்) விண்ணப்பிக்கலாம்.

வயது 21 முதல் 30-க்குள் இருக்க வேண்டும். பொதுப்பிரிவினர் நீங்கலாக இதர இட ஒதுக்கீட்டுப் பிரிவினருக்கும், ஆதரவற்ற விதவைகளுக்கும் வயது வரம்பு 40-ஆக நிர்ணயிக்கப்பட்டுள்ளது. தமிழ் வழியில் படித்தவர்களுக்கு...தமிழ்வழியில் படித்தவர்களுக்கு அரசுப் பணியில் 20 சதவீத இட ஒதுக்கீடு வழங்கப்படுகிறது. இந்த உத்தரவு விஏஓ பணிக்கும் பொருந்தும் என்பதால் மொத்த காலியிடங்களில் 20 சதவீத இடங்கள் தமிழ்வழியில் எஸ்எஸ்எல்சி முடித்தவர்களுக்கு ஒதுக்கீடு செய்யப்படும். ஆன்லைனில் விண்ணப்பிக்கும்போதே இது குறித்து குறிப்பிட வேண்டும். எவ்வாறு பணி நியமனம்? எழுத்துத் தேர்வு அடிப்படையில் பணிநியமனம் நடைபெறும்.

நேர்முகத் தேர்வு எதுவும் கிடையாது என்பது குறிப்பிடத்தக்கது. எழுத்துத் தேர்வில் பொது அறிவு, திறனறிவு, கிராம நிர்வாக நடைமுறைகள், பொது தமிழ் அல்லது பொது ஆங்கிலம் ஆகிய பகுதிகளில் இருந்து 200 கேள்விகள் கேட்கப்படும். மொத்த மதிப்பெண் 300. எழுத்துத் தேர்வுக்கான பாடத்திட்ட விவரங்கள் தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையத்தின் இணையதளத்தில் வெளியிடப்பட்டுள்ளன. எழுத்துத் தேர்வில் வெற்றிபெற்றாலே பணி உறுதி. விண்ணப்பதாரர்கள் டிசம்பர் 14-ஆம் தேதிக்குள் ஆன்லைனில் விண்ணப்பிக்கலாம் என்று டிஎன்பிஎஸ்சி அறிவித்துள்ளது.

ரூ.17 ஆயிரம் ஊதியம்: கிராம நிர்வாக அதிகாரி (வி.ஏ.ஓ.) பணியில் சேருவோருக்கு சம்பளம் ஏறத்தாழ ரூ.17 ஆயிரம் அளவுக்கு கிடைக்கும். 7-ஆவது ஊதியக்குழு பரிந்துரை அமல்படுத்தப்படும் நிலையில், சம்பளம் கணிசமாக உயரும் வாய்ப்புள்ளது. 6 ஆண்டு பணியை முடித்தவர்கள் துறைத் தேர்வுகளில் தேர்ச்சி பெற்றால் வருவாய்த் துறையில் உதவியாளர் ஆகலாம். அதன் பிறகு வருவாய் ஆய்வாளர், துணை வட்டாட்சியர், வட்டாட்சியர் என படிப்படியாக பதவி உயர்வு பெறலாம் என்பது குறிப்பிடத்தக்கது. நேர்முகத் தேர்வு இல்லாத பணிகளில் 1,934 காலியிடங்களுக்காக குரூப்-2ஏ தேர்வுக்கு ஆன்லைனில் விண்ணப்பங்கள் பெறப்பட்டு வருகின்றன. இதற்கு விண்ணப்பிக்க கடைசி தேதி நவம்பர் 18-ம் தேதி வரை நீட்டிக்கப்பட்டு இருக்கிறது.

Wednesday, November 11, 2015

முன்பதிவு செய்த ரெயில் டிக்கெட் ரத்துக்கான கட்டணம் இன்று முதல் இரு மடங்காக உயர்வு அட்டவணை தயாரித்த பின்னும் முன்பதிவு செய்யும் முறை அமல்


ரெயில் பயணிகளுக்கு டிக்கெட் கட்டணம் திருப்பியளிக்கும் சட்டத்தை மத்திய அரசு சமீபத்தில் திருத்தியது. இந்த புதிய சட்டப்படி அனைத்து வகுப்புகளுக்குமான முன்பதிவு செய்த டிக்கெட்டுகளை ரத்து செய்யும் போது பிடித்தம் செய்யப்படும் கட்டணம் இரு மடங்காகிறது. இந்த புதிய விதிப்படி முதல் அடுக்கு ஏ.சி. அல்லது எக்சிகியூட்டிவ் வகுப்பு டிக்கெட்டை ரத்து செய்தால், பிடித்தம் செய்யப்படும் கட்டணம் ரூ.120–லிருந்து ரூ.240 ஆக உயர்கிறது. இரண்டு அடுக்கு ஏ.சி. அல்லது முதல் வகுப்புக்கு ரூ.100–லிருந்து ரூ.200 ஆக உயர்த்தப்படுகிறது.

பயணக்கட்டணம் பிடித்தம் இதைப்போல 3 அடுக்கு ஏ.சி., ஏ.சி.சி., 3ஏ வகுப்புகளுக்கு ரூ.90–லிருந்து ரூ.180 ஆக உயர்கிறது. மேலும் 2–ம் வகுப்பு படுக்கை வசதிக்கு ரூ.60–லிருந்து ரூ.120 ஆகவும், 2–ம் வகுப்பு பயணிகளுக்கு ரூ.30–லிருந்து ரூ.60 ஆகவும் உயர்த்தப்படுகிறது. ரெயில் புறப்படுவதற்கு 48 மணி நேரத்தில் இருந்து 12 மணி நேரத்துக்குள் டிக்கெட் ரத்து செய்யப்படும் பயணிகளுக்கு 25 சதவீத பயணக்கட்டணம் பிடித்தம் செய்யப்படும். இதைப்போல 12 மணி நேரத்தில் இருந்து 4 மணி நேரத்துக்குள் ரத்து செய்யும் பயணிகளுக்கு, 50 சதவீத கட்டணம் பிடித்தம் செய்யப்படும். ரெயில் புறப்படுவதற்கு 4 மணி நேரத்துக்கு முன், ரத்து செய்யப்படும் டிக்கெட்டுகளுக்கே கட்டணம் திருப்பியளிக்கப்படும்.

முன்பதிவு செய்யப்படாத 2–ம் வகுப்பை பொறுத்தவரை, ரெயில் புறப்படுவதற்கு 48 மணி நேரத்துக்கு முன்பாக ரத்து செய்யும் போது ரூ.15 பிடித்தம் செய்யப்படுவதே வழக்கத்தில் இருந்தது. இது இன்று முதல் ரூ.30 ஆக உயர்த்தப்படுகிறது. ஆர்.ஏ.சி. டிக்கெட் இதைப்போல காத்திருப்போர் பட்டியல் மற்றும் ஆர்.ஏ.சி. டிக்கெட் வைத்திருப்போர், ரெயில் புறப்படுவதற்கு 30 நிமிடங்கள் முன்பாக ரத்து செய்தால் கூட (பிடித்தம் போக) பணத்தை திரும்ப பெறலாம். அதற்கு பின் ரத்து செய்யும் டிக்கெட்டுகளுக்கு கட்டணம் திரும்ப தரப்படமாட்டாது. இந்த புதிய விதிகள் இன்று (வியாழக்கிழமை) முதல் அமலுக்கு வருகிறது. இந்த புதிய திட்டத்தால் ரெயில்வே பயணிகளின் மோசடிகள் குறைந்து உண்மைத்தன்மை ஊக்குவிக்கப்படும் என ரெயில்வே அதிகாரிகள் தெரிவித்தனர்.

புதிய நடைமுறை ரெயில்களில் இருக்கை ஒதுக்கீடு அட்டவணை (சார்ட்) தயாரித்த பின்னும், முன்பதிவு செய்யும் முறையும் இன்று முதல் அமலுக்கு வருகிறது. இந்த முறைப்படி ரெயில் புறப்படுவதற்கு 4 மணி நேரத்துக்கு முன்பிருந்தும் டிக்கெட் முன்பதிவு செய்து கொள்ளலாம். அதன்படி ஒவ்வொரு ரெயிலும் புறப்படுவதற்கு 4 மணி நேரத்துக்கு முன்பே வழக்கமான அட்டவணை தயாரிக்கப்படும். இதில் உறுதி செய்யப்பட்ட டிக்கெட்டுகள், ஆர்.ஏ.சி. மற்றும் காத்திருப்போர் பட்டியலில் உள்ள டிக்கெட் குறித்த விவரங்களை தெரிந்து கொள்ளலாம். இது முதல் இட ஒதுக்கீடு அட்டவணை என அழைக்கப்படும். மீண்டும் முன்பதிவு இந்த அட்டவணை தயாரிக்கப்பட்ட பின்னரும், அந்த ரெயிலில் இடம் இருந்தால் மீண்டும் டிக்கெட் முன்பதிவு செய்யப்படும்.

ரெயில் நிலையங்களில் உள்ள முன்பதிவு மையங்கள் மற்றும் இணையம் மூலம் இந்த வசதியை பயன்படுத்தலாம். இந்த வசதி ரெயில் புறப்படுவதற்கு ½ மணி நேரத்துக்குமுன் நிறுத்தப்பட்டு, 2–வது இட ஒதுக்கீடு அட்டவணை வெளியிடப்படும். இந்த அட்டவணை ரெயிலில் பயணம் செய்யும் டிக்கெட் பரிசோதகர் மூலம் வழங்கப்படும். இந்த புதிய வசதியால் ரெயில்கள் காலியாக செல்வது தவிர்க்கப்படுவதோடு, ரெயில்வேக்கு கூடுதல் வருமானமும் கிடைக்கும் என அதிகாரிகள் தெரிவித்தனர்.