இலவச SMS களை உடனுக்குடன் பெற ON tnptfmani என்று type செய்து 9870807070 என்ற எண்ணிற்கு அனுப்பி இலவச குறுந்தகவல்களை(SMS) பெறுங்கள். DND (Do NOT Disturb) சர்வீஸ்ல் உள்ள எண்கள் அதனை(DND) நீக்கிய பிறகே இச்சேவையை பெறமுடியும். plz call 1909

Saturday, September 26, 2015

'படிப்பு அவசியமில்லை' என நினைப்போர் அதிகரிப்பு: என்.எஸ்.எஸ்.ஓ., ஆய்வில் அதிர்ச்சி தகவல்


    இந்தியாவில், 100க்கு 13 பேர், பள்ளிக்கு சென்றதில்லை என்ற அதிர்ச்சி தகவல் வெளியாகி உள்ளது; 'படிப்பு அவசியம் இல்லை' என, இவர்கள் கூறுவதாக, ஓர் ஆய்வு நிறுவனம் தெரிவித்துள்ளது. பள்ளியில் சேர்க்க பணம் இல்லாமை, வீட்டு வேலைகள் போன்ற பல்வேறு காரணங்களால், சிறுவயதில் பள்ளியில் சேர முடியாமல் போவது சகஜம். மாறாக, படிப்பு அவசியம் இல்லை என நினைப்பதால், பெரும்பாலானோர் பள்ளியில் சேர்ந்து படிக்காமல் ஊர் சுற்றிக் கொண்டிருப்பதாக, என்.எஸ்.எஸ்.ஓ., எனப்படும், தேசிய மாதிரி கணக்கீட்டு அலுவலக ஆய்வில் தெரியவந்துள்ளது.

இதுகுறித்து, என்.எஸ்.எஸ்.ஓ., ஆய்வறிக்கையில் கூறியிருப்பதாவது:5 வயது முதல், 29 வயது வரையுள்ள நபர்களிடம், பள்ளிப்படிப்பு குறித்து ஆய்வு நடத்தப்பட்டது. 100 பேரில், 13 பேர், படிப்பு அவசியம் இல்லை எனக் கருதுவதால், பள்ளியில் சேரவில்லை என்றோ, படிப்பை பாதியில் விட்டு விட்டதாகவோ தெரிவித்தனர். 10 வயது முதல் 14 வயதுள்ள குழந்தைகளிடையே, இந்த விகிதாச்சாரம் மிக அதிகமாக காணப்பட்டது. இந்த பிரிவில், மூன்று பேரில், ஒருவர், படிப்பு அவசியம் இல்லை எனக் கூறியது அதிர்ச்சியை ஏற்படுத்தியது.

10 ஆண்டுக்கு முன், இதே போன்று நடந்த ஆய்வில், நான்கில் ஒருவர் மட்டுமே, இதுபோன்ற பதிலை அளித்திருந்தனர். கிராமப்புறங்களில் அதிகமாக, 34.8 சதவீதம் பேர், பள்ளிப் படிப்பில் ஆர்வம் காட்டவில்லை. நகர்ப்புற குழந்தைகளை பொறுத்தவரை, 22.8 சதவீதம் பேர், பள்ளிப் படிப்பு அவசியமில்லை எனக் கூறி உள்ளனர். அதேசமயம், வயது அதிகமானோரில், குறைந்த விகிதத்தினரே, படிப்பு அவசியமில்லை எனத் தெரிவித்தனர். 15 முதல் 19 வயதுக்கு உட்பட்ட, பள்ளிக்கு செல்லாத ஒவ்வொரு 100 பேரில், 17 பேர் மட்டுமே, 'பள்ளி படிப்பு அவசியமில்லை' எனத் தெரிவித்தனர். 20 முதல் 24 வயதுக்கு உட்பட்ட பிரிவில், 12 சதவீதத்தினரே, இந்த பதிலை கூறியிருந்தனர்.

மொத்தத்தில், 5 வயது முதல், 29 வயதுக்கு உட்பட்டோரில் பெரும்பாலானோர், வீட்டில் போதிய வருவாய் இல்லாமையால், படிப்பை பாதியில் நிறுத்தி உள்ளனர். இந்த காரணத்தை, 36 சதவீதம் பேர் கூறியுள்ளனர். 26 சதவீதம் பேர், வீட்டு வேலைகளை கவனிக்க, படிப்பை விட்டதாக தெரிவித்துள்ளனர். பெண்களில் 50 சதவீதம் பேர், வீட்டு வேலைகளை கவனிக்க, படிப்பை பாதியில் நிறுத்தி உள்ளனர். பெரும்பாலான பெண்கள், திருமணம் காரணமாக, படிக்க தொடர முடியவில்லை. உலக நாடுகளை ஒப்பிடுகையில், இந்தியாவில், பெண்களுக்கு திருமணம் செய்யும் வயது, குறைவாக உள்ளது. அதனால், சிறுவயதிலேயே, பெண்களின் படிப்பை நிறுத்தி விட்டு, அவர்களுக்கு திருமணம் செய்து வைக்கின்றனர். கிராமப்புறங்களில், இவ்வழக்கம் அதிகமாக உள்ளது.

ஆண்களை பொறுத்தவரை, 15 வயது ஆனபின், வீட்டுத் தேவைக்கு சம்பாதிக்க வேண்டிய கட்டாயத்தால், படிப்பை பாதியில் கைவிடுவது அதிகமாக உள்ளது. சொந்த மாநிலங்களை விட்டு வேறு பகுதிகளுக்கு இடம்பெயர்ந்து வசிப்பவர்களின் குழந்தைகளுக்கு, கல்வி வசதி எளிதாக கிடைப்பதில்லை. இருப்பிடச் சான்று, இடமாற்று சான்று போன்ற நடைமுறை சம்பிரதாயங்கள், இவர்களின் கல்விக்கு தடைக்கல்லாக உள்ளன. இவ்வாறு, என்.எஸ்.எஸ்.ஓ., ஆய்வறிக்கையில் கூறப்பட்டுள்ளது. இதுதொடர்பாக, டில்லி ஐ.ஐ.டி.,யைச் சேர்ந்த, துணை பேராசிரியர் ஜெயன் ஜோஸ்தாமஸ் கூறுகையில், 'நாட்டில் கல்விக்கான தேவை, அதிகமாகி உள்ளது. அதிகம் பேர், பள்ளிகளுக்கு செல்லத் துவங்கி உள்ளனர். ஆனால், கல்வி கட்டமைப்பு, தரம், ஆசிரியர்களின் திறன், போன்றவை, குறிப்பிடும்படி இல்லை; எனவே, பலர், பாதியில் படிப்பை விட்டு விடுகின்றனர்' என்றார். டில்லி, ஜவகர்லால் நேரு பல்கலைக்கழக துணை பேராசிரியர் ஹிமான்ஷு கூறுகையில், 'நாட்டின் கல்வி முறை, படிப்பதை ஊக்குவிக்கும் வகையில் இல்லை. பள்ளி, கல்லுாரிகளை மாற்றுவதை விட, செய்யும் வேலையை எளிதாக மாற்றிக் கொள்ள முடியும். பள்ளிக்கு நீண்ட காலம் செல்லாத குழந்தை, மீண்டும் பள்ளியில் சேர்வது மிகக் கடினம்' என்றார்.

Friday, September 25, 2015

1,144 உதவிப் பேராசிரியர், விரிவுரையாளர் பணியிடங்கள் நிரப்பப்படும்: முதல்வர்


தமிழகத்தில் உள்ள கலை, அறிவியல், கல்வியியல் கல்லூரிகளில் 611 உதவிப் பேராசிரியர்கள், அரசு பாலிடெக்னிக்குகளில் 533 விரிவுரையாளர் பணியிடங்கள் என மொத்தம் 1,144 பணியிடங்கள் நேரடி நியமனம் மூலம் நிரப்பப்படும் என முதல்வர் ஜெயலலிதா அறிவித்தார். சட்டப் பேரவையில் 110 விதியின் கீழ் இது தொடர்பாக வெள்ளிக்கிழமை அவர் வெளியிட்ட அறிவிப்பு: கடந்த 4 ஆண்டுகளில் 4 அரசு பொறியியல் கல்லூரிகள், 11 பாலிடெக்னிக்குகள், 24 பல்கலைக்கழக உறுப்புக் கல்லூரிகள், 14 அரசு கலை, அறிவியல் கல்லூரிகள் தொடங்கப்பட்டுள்ளன. அதோடு, 959 புதிய பாடப் பிரிவுகளும் தொடங்கப்பட்டுள்ளன. மாணவ, மாணவியருக்குத் தரமான கல்வியை வழங்கும்பொருட்டு, அரசு கலை, அறிவியல் கல்லூரிகள், கல்வியியல் கல்லூரிகளில் 611 உதவிப் பேராசிரியர் பணியிடங்கள், அரசு பாலிடெக்னிக்குகளில் 533 விரிவுரையாளர் பணியிடங்கள் என மொத்தம் 1,144 உதவிப் பேராசிரியர், விரிவுரையாளர் பணியிடங்கள் நேரடி நியமனம் மூலம் நிரப்பப்படும்.

அண்ணா பல்கலைக்கழக உள்கட்டமைப்பு வசதிக்கு ரூ.252 கோடி: பல்கலைக்கழகத் துறைகளை உள்ளடக்கிய 4 வளாகங்களையும், 13 உறுப்புக் கல்லூரிகளையும், 4 மண்டல அலுவலகங்களையும் அண்ணா பல்கலைக்கழகம் கொண்டுள்ளது. இந்தப் பல்கலைக்கழகத்தில் உள்ள அறிவியல், பொறியியல் சார்ந்த துறைகள் மிகச் சிறப்பு வாய்ந்த வளர்ச்சி நிலைக்கு உயர்த்தப்படும். விடுதிகள், போக்குவரத்து வசதிகள், மைய நூலகங்கள், கணினி மையங்கள், சூரிய ஒளியில் இருந்து ஆற்றல் உருவாக்கும் அமைப்புகள் ஆகிய உள்கட்டமைப்பு வசதிகள் ரூ.252 கோடியே 60 லட்சத்தில் மேற்கொள்ளப்படும்.

அன்னை தெரசா மகளிர் பல்லைக்கழகம், அழகப்பா பல்கலைக்கழகம், பாரதிதாசன் பல்கலைக்கழகம், பாரதியார் பல்கலைக்கழகம், மனோன்மணீயம் சுந்தரனார் பல்கலைக்கழகம், பெரியார் பல்கலைக்கழகம் ஆகிய பல்கலைக்கழகங்களில் உள்கட்டமைப்பு வசதிகள் ரூ.60 கோடியில் மேம்படுத்தப்படும். அரசு கலை, அறிவியல் கல்லூரிகளின் உள்கட்டமைப்பை மேம்படுத்த ரூ.62 கோடியில் பணிகள் மேற்கொள்ளப்படும். இந்த நிதியின் மூலம் கல்வி, நிர்வாகக் கட்டடங்கள், வகுப்பறைகள், விடுதிகள், ஆய்வுக் கூடங்கள், கழிப்பறைகள் ஆகியவை கட்டப்படும் என்று முதல்வர் ஜெயலலிதா அறிவித்தார்.

புதிதாக 5 கல்வியியல் கல்லூரிகள், 5 பாலிடெக்னிக்குகள் புதிதாக 5 கல்வியியல் கல்லூரிகள், 5 பாலிடெக்னிக்குகள் தொடங்கப்படும் என முதல்வர் ஜெயலலிதா அறிவித்தார். சட்டப் பேரவையில் 110 விதியின் கீழ் அவர் வெள்ளிக்கிழமை வெளியிட்ட அறிவிப்பு: தமிழ்நாட்டில் 7 அரசு கல்வியியல் கல்லூரிகள் செயல்பட்டு வருகின்றன. 1957-ஆம் ஆண்டுக்குப் பிறகு, தமிழ்நாட்டில் அரசு கல்வியியல் கல்லூரி ஏதும் தொடங்கப்படவில்லை. தமிழ்நாடு ஆசிரியர் கல்வியியல் பல்கலைக்கழகம் மூலம் 5 உறுப்புக் கல்வியியல் கல்லூரிகள் ரூ.15 கோடி மதிப்பீட்டில் தொடங்கப்படும். பின்தங்கிய பகுதிகளைச் சேர்ந்த மாணவர்கள், மாணவிகள் தொழில்நுட்பக் கல்வியையும், வேலைவாய்ப்பையும் பெற 5 புதிய அரசு பாலிடெக்னிக்குகள் ரூ.150 கோடியில் தொடங்கப்படும் என்றார்.

புதிதாக 32 நீதிமன்றங்கள்: முதல்வர்


தமிழகத்தில் 13 மாவட்ட உரிமையியல் நீதிமன்றங்கள், 9 குற்றவியல் நடுவர் நீதிமன்றங்கள், 10 விரைவு நீதிமன்றங்கள் என மொத்தம் 32 நீதிமன்றங்கள் புதிதாக அமைக்கப்பட உள்ளதாக முதல்வர் ஜெயலலிதா அறிவித்தார். சட்டப்பேரவையில் 110 விதியின் கீழ் அவர் வெள்ளிக்கிழமை வெளியிட்ட அறிவிப்பு: நீதிமன்றங்களில் நிலுவையில் உள்ள வழக்குகளுக்கு விரைவில் தீர்வு காண லால்குடி, கீரனூர், ஓமலூர், பரமத்தி, ஆண்டிப்பட்டி ஆகிய இடங்களில் தலா ஒரு மாவட்ட உரிமையியல் நீதிமன்றம் அமைக்கப்படும்.

கோவையில் 2 கூடுதல் மாவட்ட உரிமையியல் நீதிமன்றங்கள், மதுரையில் 3 கூடுதல் மாவட்ட உரிமையியல் நீதிமன்றங்கள், மணப்பாறை, அருப்புக்கோட்டை, திருமங்கலத்தில் ஒரு கூடுதல் மாவட்ட உரிமையியல் நீதிமன்றம் என 13 மாவட்ட உரிமையியல் நீதிமன்றங்கள் அமைக்கப்பட உள்ளன. வாடிப்பட்டி, ஆண்டிப்பட்டி, ஓமலூர், கீரனூர், கும்பகோணம், பெரம்பலூர், தாம்பரம், ஆலந்தூர், பத்மநாபபுரம் ஆகிய இடங்களில் தலா ஒரு குற்றவியல் நடுவர் நீதிமன்றம் வீதம் 9 குற்றவியல் நடுவர் நீதிமன்றங்கள் அமைக்கப்படும். மொத்தம் 22 நீதிமன்றங்கள் ரூ.9 கோடியில் அமைக்கப்படும்.

விரைவு நீதிமன்றங்கள்: தேனி, பரமக்குடி, ஆரணி, நாகர்கோவில், விழுப்புரம், பழனி, மேட்டூர், கும்பகோணம், வேலூர், காஞ்சிபுரம் ஆகிய இடங்களில் மாவட்ட நீதிபதி அளவிலான 10 விரைவு நீதிமன்றங்கள் ரூ.5 கோடியே 32 லட்சத்தில் அமைக்கப்படும்.

செப்.28 முதல் அக்.6 வரை பத்தாம் வகுப்பு தனித் தேர்வு


பத்தாம் வகுப்பு தனித் தேர்வு செப்டம்பர் 28 முதல் அக்டோபர் 6-ஆம் தேதி வரை நடைபெறுகிறது. இந்தத் தேர்வுக்கான தேர்வுக்கூட நுழைவுச்சீட்டு அரசுத் தேர்வுகள் இயக்ககத்தின் www.tndge.in என்ற இணையதளத்தில் வெளியிடப்பட்டுள்ளன. தேர்வுக்கூட நுழைவுச் சீட்டுகளை இதுவரை பதிவிறக்கம் செய்யாதவர்கள் அவற்றைப் பதிவிறக்கம் செய்யலாம் என அரசுத் தேர்வுகள் இயக்ககம் அறிவித்துள்ளது.

ஏ.டி.எம்.,மில்கிடைக்கும்ரூ.5௦ நோட்டு


வங்கி, ஏ.டி.எம்.,களில், 1,000, 500, 100 ரூபாய் நோட்டுகளுடன், இனி மேல், 50 ரூபாய் நோட்டும் கிடைக்கும்' என, ரிசர்வ் வங்கி அறிவித்துள்ளது.இப்போது, ஏ.டி.எம்., மையங்களில் பணம் எடுக்கும் வாடிக்கையாளர்களுக்கு, இரண்டு வித ரூபாய் நோட்டுகள் வழங்கப்படுகின்றன. அதன்படி, 1,000 ரூபாய் நோட்டுகளுடன், 500 ரூபாயும்; 500 ரூபாயுடன், 100 ரூபாய் நோட்டுகளும் வழங்கப்படுகின்றன. இந்நிலையில், வாடிக்கையாளர்களின் வசதிக்காக, 100 ரூபாயுடன், 50 ரூபாய் நோட்டும் வழங்க, ரிசர்வ் வங்கி உத்தரவிட்டு உள்ளது.

இந்த உத்தரவையடுத்து, சத்தீஸ்கர் மாநிலம், ராய்ப்பூரில் உள்ள, எஸ்.பி.ஐ., கிளையின், ஏ.டி.எம்., மையத்தில் இந்த வசதி புதிதாக அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. மற்ற வங்கிகள், தங்கள் ஏ.டி.எம்., மையங்களில், 50 ரூபாய் நோட்டுகளை நிரப்பும் பணியை துவங்கியுள்ளன. விரைவில் நாடு முழுவதும், அனைத்து வங்கிகளின், ஏ.டி.எம்., மையங்களிலும் இந்த வசதியை பெறலாம்.

EMIS DATA login page

Click below

https://emis.tnschools.gov.in/accounts/login/?_e_pi_=7%2CPAGE_ID10%2C6017525494

5 புதிய கல்வியல் கல்லூரிகள் துவக்கப்படும்


தமிழ்நாடு சட்டமன்ற பேரவை விதி 110-ன் கீழ் தமிழக முதல்வர் ஜெயலலிதா வாசித்த உரையில்,
1. கடந்த நான்கு ஆண்டுகளில் 4 அரசு பொறியியல் கல்லூரிகள், 11 அரசு பலவகை தொழில்நுட்பக் கல்லூரிகள், 24 பல்கலைக்கழக உறுப்பு கல்லூரிகள் மற்றும் 14  அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரிகள் துவங்கப்பட்டுள்ளன. மேலும், கடந்த நான்காண்டுகளில், அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரிகளில் 959 புதிய பாடப் பிரிவுகள் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளன.  மாணவர்களுக்கும், மாணவிகளுக்கும், தரமான கல்வியை வழங்கும் நோக்கிலும், மேற்குறிப்பிட்ட தேவைகளுக்கு ஒப்பளிக்கப்பட்ட ஆசிரியர் பணியிடங்களை நிரப்பும் பொருட்டும், அரசு கலை, அறிவியல் மற்றும் கல்வியியல் கல்லூரிகளில் 611 உதவிப் பேராசிரியர் பணியிடங்கள் மற்றும் அரசு பலவகைத் தொழில்நுட்பக் கல்லூரிகளில் 533 விரிவுரையாளர் பணியிடங்கள், என மொத்தம்  1,144 உதவிப் பேராசிரியர் / விரிவுரையாளர் பணியிடங்கள் நேரடி நியமனம் மூலம் நிரப்பப்படும் என்பதை மகிழ்ச்சியுடன் தெரிவித்துக் கொள்கிறேன்.
2. அண்ணா பல்கலைக்கழகம் தற்போது பல்கலைக்கழக துறைகளை உள்ளடக்கிய  4 வளாகங்களையும், 13 உறுப்புக் கல்லூரிகளையும் மற்றும் 4 மண்டல அலுவலகங்களையும் தன்னகத்தே கொண்டுள்ளது. அறிவியல் மற்றும் பொறியியல் சார்ந்த துறைகள் மிகச் சிறப்பு வாய்ந்த  வளர்ச்சி நிலைக்கு உயர்த்தப்படும்.  மேலும்,  விடுதிகள், போக்குவரத்து வசதிகள், மைய நூலகங்கள், கணினி மையங்கள், சூரிய ஒளியில் இருந்து ஆற்றல் உருவாக்கும் அமைப்புகள், ஆகிய உட்கட்டமைப்பு வசதிகள் ஏற்படுத்தப்படும்.
3. இயற்கை பேரிடர் காலங்களில்  மீட்புப் பணிகள் மற்றும் பாதுகாப்பு பணிகள் சிறப்புற மேற்கொள்ள ஆளில்லா வான்வெளி வாகனம் மிகவும் பயனுள்ளதாக இருக்கும்.  இவ்வாகனம் பாதிக்கப்பட்ட பகுதியை ஆய்வு செய்து மதிப்பு மிகுந்த தகவல்களை தர வல்லது.  இவ்வாகனத்தின் திறன்களை பயன்படுத்தி  அனுபவம் வாய்ந்த நிவாரண பணியாளர்கள் நிவாரணப் பணிகளை விரைந்து மேற்கொள்ள இயலும். அதே போல் பாதுகாப்பு அச்சுறுத்தல்கள் மற்றும் அபாயங்கள்,ஆகியவற்றை கண்காணிப்பதற்கும் இது பயனுள்ளதாக அமையும். எனவே, ஆளில்லா வான்வெளி வாகனம் மூலம் தமிழக அரசின் பல்வேறு துறைகளுக்கு சிறப்பான சேவையை அளிக்கும் வகையில் அண்ணா பல்கலைக் கழகம் மூலம் ஆளில்லா வான்வெளி வாகனம் திட்டமிடப்பட்டு வடிவமைக்கப்படும்.  இத்திட்டத்திற்கென அண்ணா பல்கலைக்கழகத்திற்கு  20 கோடி ரூபாய் வழங்கப்படும் என்பதை மகிழ்ச்சியுடன் தெரிவித்துக் கொள்கிறேன்.
4. பல்கலைக்கழகங்கள் சிறப்பாக செயல்பட தரமான உட்கட்டமைப்பு வசதிகள்  இருத்தல் வேண்டும். எனவே, அன்னை தெரசா மகளிர் பல்கலைக்கழகம், அழகப்பா பல்கலைக்கழகம், பாரதிதாசன் பல்கலைக்கழகம், பாரதியார் பல்கலைக்கழகம், மனோன்மணியம் சுந்தரனார் பல்கலைக்கழகம் மற்றும்  பெரியார் பல்கலைக்கழகம் ஆகிய பல்கலைக்கழகங்களில் உட்கட்டமைப்பு வசதிகள்  60 கோடி ரூபாய் மதிப்பீட்டில் மேம்படுத்தப்படும் என்பதை மகிழ்ச்சியுடன் தெரிவித்துக் கொள்கிறேன்.
5. அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரிகள், அரசு கல்வியியல் கல்லூரிகள் மற்றும் பல்கலைக் கழக உறுப்பு கலை மற்றும் அறிவியல் கல்லூரிகள் ஆகியவற்றின் உட்கட்டமைப்பு வசதிகளை மேம்படுத்த 100 கோடி ரூபாய் ஒதுக்கீடு செய்யப்பட்டு பணிகள் செயல்படுத்தப்பட்டு வருகின்றன. அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரிகளின் உட்கட்டமைப்பு வசதிகள் மேலும் மேம்படுத்தப்படும் வகையில், 62 கோடி ரூபாய் செலவில் பணிகள் மேற்கொள்ளப்படும் என்பதை மகிழ்ச்சியுடன் தெரிவித்துக் கொள்கிறேன்.
6. கடந்த 4 ஆண்டுகளில் 11 அரசு பலவகைத் தொழில்நுட்பக் கல்லூரிகள் துவங்கப்பட்டு, தமிழ்நாட்டில் உள்ள பின்தங்கிய மாவட்டங்களில் உள்ள கிராமப்புற மாணவர்கள் மற்றும் மாணவிகள் தொழில்நுட்பக் கல்வி பெற வழிவகை செய்யப்பட்டுள்ளது. இக்கல்லூரிகளுக்குத் தேவையான ஆசிரியர் மற்றும் ஆசிரியரல்லா பணியிடங்கள், நிரப்பப்பட்டு வருகின்றன. மேலும், கணினிகள், அறை கலன்கள், நூல்கள் ஆகியவை  வழங்கப்பட்டுள்ளன.
அரசு பலவகைத் தொழில்நுட்பக் கல்லூரிகள்   இல்லாத இடங்களில், இத்தகைய கல்லூரிகளைத் துவங்குவதன் மூலம் மாணவர்கள் மற்றும் மாணவிகள் நீண்ட தூரம் பயணம் செய்து கல்வி பயிலும் நிலை தவிர்க்கப்பட்டு, அவர்கள் தொழில்நுட்பக் கல்வி பெற இயலும்.  பின்தங்கிய பகுதிகளைச் சேர்ந்த மாணவர்கள் மற்றும் மாணவிகள் தொழில்நுட்பக் கல்வி பெற்று வேலைவாய்ப்பு பெற இது வழி வகுக்கும். எனவே,  5 புதிய அரசு பலவகைத் தொழில்நுட்பக் கல்லூரிகள் 150  கோடி ரூபாய் மதிப்பீட்டில் துவங்கப்படும் என்பதை மகிழ்ச்சியுடன் தெரிவித்துக் கொள்கிறேன்.
7. தமிழ்நாட்டில் 7 அரசு கல்வியியல் கல்லூரிகள் செயல்பட்டு வருகின்றன.  இக்கல்லூரிகளில் மாணவர்களுக்கும் மாணவிகளுக்கும் குறைந்த கட்டணத்தில் கல்வி வழங்கப்படுகிறது. 1957ஆம் ஆண்டிற்குப் பிறகு தமிழ்நாட்டில் அரசு கல்வியியல் கல்லூரி துவங்கப்படவில்லை

Thursday, September 24, 2015

பள்ளி மாணவர்களுக்கு ஜாதி, வருமானம், இருப்பிடச் சான்றிதழ்களை டிச.31க்கு முன் வழங்க உத்தரவு


       பள்ளி மாணவர்களுக்கு ஜாதி, வருமானம், இருப்பிடச் சான்றிதழ்களை இலவசமாக மின்னணு முறையில் டிச.,31 முன் வழங்க வருவாய் நிர்வாக ஆணையர் கிரிஜா வைத்தியநாதன், கலெக்டர்களுக்கு உத்தரவிட்டுள்ளார்.

          தாலுகா வாரியாக இதற்கான ஒருங்கிணைப்பு மையங்கள் செப்.,30க்குள் தேர்வு செய்யப்பட உள்ளன. கல்வி உதவித்தொகை, உயர்கல்விக்காக பள்ளி மாணவர்களுக்கு ஜாதி, இருப்பிடம், பெற்றோரின் வருமானச்சான்றிதழ் ஆகிய மூவகைச்சான்றுகள் தேவைப்படுகின்றன. சில நேரங்களில் இவை தாமதமாக கிடைப்பதால் உரிய காலத்தில் சமர்ப்பிக்க முடியாமல் மாணவர்கள் அவதிப்படுகின்றனர்.

இந்நிலையில் தாலுகா வாரியாக ஒருங்கிணைப்பு மையங்களை அமைத்து டிச.,31க்கு முன் ஆறாம் வகுப்பு, 10ம் வகுப்பு, பிளஸ் 2 மாணவர்களுக்கு இலவசமாக இந்த மூவகை மின்னணு சான்றிதழை வழங்க தேவையான நடவடிக்கை மேற்கொள்ள கலெக்டர்களுக்கு, வருவாய் நிர்வாக ஆணையர் (பொறுப்பு) கிரிஜா வைத்தியநாதன் உத்தரவிட்டுள்ளார்.

மாவட்ட கல்வித்துறை உயரதிகாரி ஒருவர் கூறியதாவது:இச்சான்றிதழ்கள் தேவைப்படும் மாணவர்களிடம் தலைமை ஆசிரியர்கள் மூலம் ஒரே விண்ணப்பம் தரப்பட்டு நிரப்பி பெறப்படும். 3,000 முதல் 4,000 வரை மாணவர்களின் எண்ணிக்கை அடிப்படையில் கம்ப்யூட்டர், ஸ்கேனர், பிரின்டர், இணையதள வசதியுள்ள பள்ளிகள் ஒருங்கிணைப்பு மையங்களாக செப்.,30க்குள்

தேர்வு செய்யப்படும். அங்கு தலைமையாசிரியர்கள் விண்ணப்பங்களை சமர்ப்பிக்க வேண்டும்.தினமும் 100 விண்ணப்பங்கள் பதிவேற்றம் செய்யப்படும். விபரங்கள் சரிபார்க்கப்பட்டு டிச.,31க்கு முன் மாணவர்களுக்கு சான்றிதழ்கள் வழங்கப்படும். இதற்கு கட்டணம் கிடையாது. இதன்மூலம் தாலுகா அலுவலகத்திற்கு செல்வது தவிர்க்கப்படும். இப்பணிகள் கலெக்டர், முதன்மைக்கல்வி அதிகாரிகள் மேற்பார்வையில் நடக்கும், என்றார்.

பி.எட்., எம்.எட். துணைத் தேர்வு: பல்கலைக்கழகம் அறிவிப்பு


ஆசிரியர் கல்வியியல் பட்டப் படிப்புகளான பி.எட்., எம்.எட். ஆகியவற்றுக்கான டிசம்பர் மாத துணைத் தேர்வு அறிவிப்பை தமிழ்நாடு ஆசிரியர் கல்வியியல் பல்கலைக்கழகம் வெளியிட்டுள்ளது. இதுகுறித்து பல்கலைக்கழகம் வெளியிட்டுள்ள அறிவிப்பு: வருகிற டிசம்பர் மாதம் நடத்தப்பட உள்ள பி.எட்., எம்.எட். படிப்புகளுக்கான துணைத் தேர்வுக்கான விண்ணப்பத்தை www.tnteu.in என்ற பல்கலைக்கழக இணையதளத்திலிருந்து பதிவிறக்கம் செய்து, பூர்த்தி செய்து விண்ணப்பிக்கலாம். தேர்வுக் கட்டணம் தாள் ஒன்றுக்கு ரூ. 200 வீதமும், செய்முறைத் தேர்வுக்கு ரூ. 600 என்ற அளவிலும் கட்டணம் செலுத்த வேண்டும்.

தேர்வுக் கட்டணத்தை "பதிவாளர், தமிழ்நாடு ஆசிரியர் கல்வியியல் பல்கலைக்கழகம், சென்னை' என்ற பெயரில் எடுக்கப்பட்ட வரைவோலையாக செலுத்த வேண்டும். விண்ணப்பத்தைச் சமர்ப்பிக்க அக்டோபர் 26 கடைசித் தேதியாகும். கடைசித் தேதிக்குள் விண்ணப்பிக்கத் தவறியவர்கள் அபராதத் தொகை ரூ. 150 சேர்த்து நவம்பர் 5-ஆம் தேதி வரை விண்ணப்பிக்கலாம் என பல்கலைக்கழகம் தெரிவித்துள்ளது.

சும்மா சம்பளம் வாங்கும் ஆசிரியர் கணக்கெடுக்க அரசு உத்தரவு


அரசு உதவிபெறும் பள்ளிகளில், வேலையே பார்க்காமல், சம்பளம் வாங்கும் ஆசிரியர்களின் பட்டியலை எடுக்க, தொடக்க கல்வி இயக்குனர் உத்தரவிட்டுள்ளார். தமிழகத்தில், 10 ஆயிரம் அரசு உதவி பெறும் பள்ளிகள் உள்ளன. இவற்றில், அரசு சம்பளத்தில் ஆயிரக்கணக்கான ஆசிரியர்கள் பணியாற்றுகின்றனர். பல பள்ளிகளில், மாணவர் எண்ணிக்கை குறைவாக இருந்தாலும், தேவைக்கு அதிகமான ஆசிரியர்கள் பணிபுரிகின்றனர்; அவர்களுக்கு, அரசு செலவில் வழங்கப்படும் ஊதியம் வீணாகிறது என, புகார்கள் எழுந்துள்ளன.

இதையடுத்து, அரசு உதவி பெறும் பள்ளிகளில், ஆக., 31ம் தேதி கணக்கின்படி, மாணவர்களின் சரியான எண்ணிக்கை மற்றும் ஆசிரியர்கள் பட்டியலை அனுப்ப, தொடக்க கல்வி இயக்குனரகம் உத்தரவிட்டுள்ளது. இதையடுத்து, மாவட்ட உதவி தொடக்க கல்வி அதிகாரிகள், பல மாவட்டங்களில் உள்ள அரசு உதவி பெறும் பள்ளிகளில், திடீர் ஆய்வு நடத்த துவங்கியுள்ளனர். ஆய்வின் போது, பள்ளி பதிவேடு விவரத்துடன், வகுப்பறையில் இருக்கும் மாணவர் எண்ணிக்கையை ஒப்பிட்டு அறிக்கை தயார் செய்கின்றனர். போதுமான மாணவர் எண்ணிக்கையில்லாமல், ஆசிரியர்கள் பள்ளிக்கு வந்து விட்டு, பாடம் நடத்தாமல் செல்வது குறித்தும் அறிக்கையில் குறிப்பிடுகின்றனர்.

இந்த ஆசிரியர்கள் யார்; அவர்களுக்கு மாறுதல் வழங்கப்படுமா என்பது குறித்து விரைவில் முடிவு எடுக்கப்படும் என, தொடக்க கல்வித்துறை வட்டாரங்கள் தெரிவித்துள்ளன

சமச்சீர் கல்வி பாட புத்தகம் வாங்க ஆர்வமில்லாத தனியார் பள்ளிகள்


சமச்சீர் கல்வியை பின்பற்றும், 35 சதவீத தனியார் மற்றும் மெட்ரிக் பள்ளிகள், தமிழக அரசின், இரண்டாம் பருவ பாடப் புத்தகங்களை வாங்காததால், அந்த பள்ளிகள் மீது நடவடிக்கை எடுக்க கல்வித்துறை முடிவு செய்துள்ளது.தமிழகத்தில், மத்திய இடைநிலை கல்வி வாரியமான, சி.பி.எஸ்.இ.,யின் பாடத்திட்டம் மற்றும் இந்திய இடைநிலை சான்றிதழ் பாடத்திட்டமான, ஐ.சி.எஸ்.இ.,யை பின்பற்றும் பள்ளிகளைத் தவிர, மற்ற பள்ளிகள், தமிழக அரசின் சமச்சீர் கல்வியை பின்பற்றுகின்றன.

இதில், ஒன்று முதல், 9ம் வகுப்பு வரையில், மூன்று பருவங்களாக பாடம் நடத்தப்படுகிறது. முதல் பருவத்துக்கு வரும், 26ம் தேதி தேர்வு முடிகிறது. அக்., 5ல், பள்ளிகள் திறக்கப்பட்டு, இரண்டாம் பருவ பாடங்கள் நடத்தப்படும்.இதற்காக அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளுக்கு, இரண்டாம் பருவ பாடப் புத்தகங்கள் வினியோகம் நடந்து வருகிறது. தனியார் மற்றும் மெட்ரிக் பள்ளிகளுக்கு, தமிழ்நாடு பாடநுால் மற்றும் சேவைகள் கழகம், 'ஆன் - லைன்' முறையில் பதிவு செய்து பாடப் புத்தகங்களை அனுப்புகிறது.

ஆனால், 35 சதவீத பள்ளிகள் புத்தகங்களை வாங்க ஆர்வம் காட்டவில்லை. இந்த பள்ளிகளுக்கு கல்வி அதிகாரிகள் எச்சரிக்கை கடிதம் அனுப்பியுள்ளனர்.'புத்தகங்களை வாங்க வேண்டும். தாமதமானால், நடவடிக்கை எடுக்கப்படும்' என, பள்ளி நிர்வாகங்கள் எச்சரிக்கப்பட்டு உள்ளன

Wednesday, September 23, 2015

தேசிய திறனறித் தேர்வு: விண்ணப்பிக்க காலக்கெடு


தேசிய திறனறித் தேர்வுக்கு விண்ணப்பிப்பதற்கான காலக்கெடு செப்டம்பர் 30-ஆம் தேதி வரை நீட்டிக்கப்பட்டுள்ளது. இந்த தேர்வு நவம்பர் 8-ஆம் தேதி நடைபெற உள்ளது. இந்தத் தேர்வுக்கான விண்ணப்பத்தை பள்ளித் தலைமை ஆசிரியர்கள் ஆன்-லைன் மூலம் பதிவேற்றம் செய்ய வேண்டும். அரசுத் தேர்வுகள் இயக்ககத்தின் www.tndge.in என்ற இணையதளத்தில் இந்த விண்ணப்பங்களைப் பதிவேற்றம் செய்வதற்கான கால அவகாசம் இப்போது நீட்டிக்கப்பட்டுள்ளது.