இலவச SMS களை உடனுக்குடன் பெற ON tnptfmani என்று type செய்து 9870807070 என்ற எண்ணிற்கு அனுப்பி இலவச குறுந்தகவல்களை(SMS) பெறுங்கள். DND (Do NOT Disturb) சர்வீஸ்ல் உள்ள எண்கள் அதனை(DND) நீக்கிய பிறகே இச்சேவையை பெறமுடியும். plz call 1909

Thursday, December 27, 2012

பள்ளி நேரத்தை மாற்றியமைப்பது குறித்து போக்குவரத்துத்துறை அதிகாரிகள் ஆலோசனை

  சென்னை உட்பட மாநிலத்தின் மற்ற நகரங்களில், பள்ளி, கல்லூரி நேரங்களை மாற்றி அமைப்பது குறித்து, கல்வித்துறை மற்றும் கல்லூரி கல்வித்துறையிடம், நேற்று முதற்கட்ட ஆலோசனையை, போக்குவரத்துதுறை நடத்தியது. சென்னை மற்றும் புறநகர் பகுதிகள் உள்ளிட்ட, மாநிலத்தின் மற்ற நகரங்களிலும், நாள்தோறும் வாகன விபத்துகளில், பள்ளி, கல்லூரி மாணவ, மாணவியர் பலியாகி வருகின்றனர். விபத்துகளை தவிர்க்கும் வகையில், அப்பகுதிகளில், பள்ளி, கல்லூரி நேரங்களை மாற்றி அமைப்பது குறித்து ஆலோசித்து, விரைவில் ஒரு முடிவை எடுக்க வேண்டும் என, கல்வித்துறை மற்றும் கல்லூரி கல்வித்துறையிடம், கடந்தாண்டு போக்குவரத்து துறை வலியுறுத்தியது.

சமீபத்தில், சென்னை பெருங்குடியில் நடந்த விபத்தில், பள்ளி, கல்லூரியை சேர்ந்த, நான்கு மாணவர்கள் பலியாயினர். இந்த சம்பவம் தொடர்பாக, சென்னை ஐகோர்ட், தானாக முன்வந்து விசாரணை மேற்கொண்டது. "பள்ளி, கல்லூரி துவங்கும் நேரம் மற்றும் முடியும் நேரத்தில், போதிய அளவிற்கு, பஸ்கள் இயக்கப்படாததால், மாணவர்கள், படிக்கட்டுகளில் தொங்கி, பயணம் செய்கின்றனர்' என்ற குற்றச்சாட்டு எழுந்தது. இந்நிலையில், பள்ளி மற்றும் கல்லூரி கல்வித்துறை உயர் அதிகாரிகளுடன், நேற்று முதல் கட்ட ஆலோசனையை, போக்குவரத்து துறை நடத்தி உள்ளது. இதில்,"விபத்தில் பள்ளி, கல்லூரி மாணவர்கள் உயிரிழப்பதை தடுக்க, பள்ளி, கல்லூரி துவங்கும் நேரம் மற்றும் முடியும் நேரத்தை மாற்றியாக வேண்டும்' என, போக்குவரத்து துறை அதிகாரிகள் வலியுறுத்தியுள்ளனர்.

டில்லி உள்ளிட்ட, பல்வேறு நகரங்களில், காலை, 7:00 மணிக்கே, கல்வி நிறுவனங்கள் இயங்க ஆரம்பித்து விடுகின்றன. இதனால், பஸ்களில் நெருக்கடி இல்லாமல், மாணவர்கள் பயணிக்க முடிகிறது. இந்த முறையால், விபத்துகளும் நடப்பதில்லை. இதேபோன்று, சென்னை உள்ளிட்ட மாநகராட்சி, நகரங்கள் மற்றும் புறநகர் பகுதிகளில், பள்ளி, கல்லூரி துவங்கும் மற்றும் முடியும் நேரத்தை, விரைவில் மாற்றுவது குறித்த அறிவிப்பு வெளியாகும் எனத் தெரிகிறது. இது குறித்து, பள்ளி கல்வித்துறை மற்றும் கல்லூரி கல்வித்துறை உயர் அதிகாரிகளுடன், போக்குவரத்து துறை உயர் அதிகாரிகள், ஜனவரி முதல் வாரத்தில், மீண்டும், விரிவாக ஆலோசனை மேற்கொள்ள உள்ளனர்.

புதிய முதுகலை ஆசிரியர் பணி நியமனம் எப்போது?

  "புதிய முதுகலை ஆசிரியர்கள், ஜன., 10க்குள், பணி நியமனம் செய்யப்படுவர்' என, கல்வித்துறை வட்டாரங்கள் தெரிவித்தன. சமீபத்தில் தேர்வு செய்யப்பட்ட, 2,308 முதுகலை ஆசிரியர்களின் சான்றிதழ்கள், மீண்டும் ஒருமுறை சரிபார்க்கும் பணி நடந்து வருகிறது. 24ம் தேதி நிலவரப்படி, தகுதியற்ற, 18 பேர், தேர்வுப் பட்டியலில் இடம்பெற்றிருப்பதை, டி.ஆர்.பி., வட்டாரங்கள் உறுதிப்படுத்தின.

இவர்கள் அனைவரும், தேர்வுப் பட்டியலில் இருந்து, நீக்கப்பட்டுள்ளனர். 2,308 பேரின் சான்றிதழ்களும் சரிபார்த்த பின், மொத்தம் எத்தனை பேர், தகுதியற்றவர்கள் என்ற விவரம் தெரியவரும். இதற்கிடையே, தகுதியான தேர்வர்களைப் பற்றிய விவரங்களை, கல்வித்துறைக்கு அனுப்பும் பணியை, டி.ஆர்.பி., ஆரம்பித்துள்ளது. அனைவரது விவரங்களும், கல்வித்துறைக்கு வந்துசேர, மேலும் ஓரிரு நாட்கள் பிடிக்கும் எனவும், அதன்பின், ஜன.,10க்குள், "ஆன்-லைன்' கலந்தாய்வு வழியில், பணி நியமனம் செய்ய, நடவடிக்கை எடுக்கப்படும் எனவும், கல்வித்துறை வட்டாரங்கள் தெரிவித்தன.

1,870 வி.ஏ.ஓ.,க்கள் கலந்தாய்வு ஜனவரி 3,4 தேதிகளில் நடக்கிறது

  சென்னை, கன்னியாகுமரி மாவட்டங்களை தவிர்த்து, இதர, 30 மாவட்டங்களில், 1,870 வி.ஏ.ஓ.,க்களை பணி நியமனம் செய்வதற்கான கலந்தாய்வு, ஜனவரி, 3,4 தேதிகளில், டி.என்.பி.எஸ்.சி., அலுவலகத்தில் நடக்கிறது. வி.ஏ.ஓ., காலி பணியிடங்களை நிரப்புவதற்கான போட்டித்தேர்வு, கடந்த செப்டம்பர், 30ல் நடந்தது; 10 லட்சம் பேர், தேர்வை எழுதினர்.

இதன் முடிவுகள், நவம்பர், 30ல் வெளியிடப்பட்டது. இதைத் தொடர்ந்து, 1,870 வி.ஏ.ஓ.,க்களை, பணி நியமனம் செய்வதற்கான கலந்தாய்வு, ஜனவரி, 3,4 தேதிகளில் நடக்கும் என, டி.என்.பி.எஸ்.சி., அறிவித்துள்ளது. கலந்தாய்வுக்கு வருபவர்கள், உரிய அசல் சான்றிதழ்களுடன் வர வேண்டும் என, தேர்வாணையம் கேட்டுக் கொண்டுள்ளது. தேர்வு பெற்றவர்களுக்கு, விரைவு தபால் வழியாக, தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளன என்றும், தேர்வாணையம் தெரிவித்துள்ளது. மாவட்ட வாரியாக, காலி பணியிடங்கள் எண்ணிக்கை குறித்த விவரங்கள், தேர்வாணைய இணையதளத்தில் (www.tnpsc.gov.in) வெளியிடப்பட்டுள்ளன.

அதன்படி, சென்னை, கன்னியாகுமரி மாவட்டங்களில், காலி பணியிடங்கள் இல்லை. இதர, 30 மாவட்டங்களில், 1,870 வி.ஏ.ஓ.,க்களும், பணி நியமனம் செய்யப்படுகின்றனர். ஆசிரியர் காலி இடங்களைப்போல், வி.ஏ.ஓ.,க்கள் இடங்களும், வட மாவட்டங்களில் தான், அதிகளவில் காலியாக உள்ளன. காஞ்சிபுரம் மாவட்டத்தில், 123, கடலூர்-88, கிருஷ்ணகிரி-73, திருவள்ளூர்-100, திருவண்ணாமலை-115, வேலூர்-112, விழுப்புரம்-167 பணியிடங்கள் காலியாக உள்ளன.

Wednesday, December 26, 2012

January Month CRC for Primary&Up pri trs on 5.1.13&19.1.13

"ஆன்-லைன்' வழியாக சான்றிதழ் சரிபார்ப்பு திட்டம் : அடுத்த கல்வி ஆண்டில் அமலுக்கு வருகிறது

"ஆன்-லைன்' வழியாக, 10ம் வகுப்பு மற்றும் பிளஸ் 2 மதிப்பெண் சான்றிதழ்களை சரிபார்க்கும் திட்டம், அடுத்த ஆண்டில் அமலுக்கு வருகிறது. இந்த புதிய திட்டத்தால், உயர்கல்வி நிறுவனங்கள், தங்களிடம் சேரும் மாணவர்களின் சான்றிதழ்களை, உடனுக்குடன் சரிபார்க்க முடியும். மேலும், போலி சான்றிதழ்கள் ஊடுருவலையும், எளிதில் தடுத்து நிறுத்த முடியும். உயர்

கல்வி : பிளஸ் 2 தேர்வுக்குப் பின், ஐந்து லட்சத்திற்கும் மேற்பட்ட மாணவர்கள், பல்வேறு உயர்கல்வி படிப்புகளில் சேர்கின்றனர். இவர்களின் சான்றிதழ்கள் மற்றும் ஆண்டுதோறும் அரசு வேலைகளில் சேர்பவர்களின் சான்றிதழ்கள் என, ஆண்டுக்கு பல லட்சம் சான்றிதழ்களை, சரிபார்க்க வேண்டிய பெரும் பணியால், தேர்வுத்துறை திணறி வருகிறது. தேர்வுத்துறை இயக்குனரகத்தில், சான்றிதழ் சரிபார்ப்பு பிரிவுகளில், போதுமான பணியாளர்கள் இல்லை. இதனால், லட்சக்கணக்கான சான்றிதழ்கள், சரிபார்ப்புக்காக, ஆண்டுக்கணக்கில் கிடப்பில் இருக்கின்றன. இந்தப் பிரச்னையை தீர்ப்பதற்கு, முந்தைய ஆட்சியில், ஆன்-லைன் வழியாக, சான்றிதழ்களை சரிபார்க்கும் திட்டம் அறிவிக்கப்பட்டது. தேசிய தகவல் மையத்தின் (நிக்), தொழில்நுட்ப உதவியுடன், ஆன்-லைன் வழியாக, சான்றிதழ் சரிபார்க்கும் திட்டத்தை செயல்படுத்த அரசு உத்தரவிட்டது. இதற்கு தேவையான மின்னணு சாதனங்கள் வாங்க, 8.5 லட்சம் ரூபாய் நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டது. மேலும், ஒரு வடிவமைப்பு உதவியாளர் பணியிடமும் அனுமதிக்கப்பட்டது.

குறியீட்டு எண் : திட்டத்தை செயல்படுத்துவது தொடர்பாக, "நிக்' தேர்வுத்துறை அதிகாரிகள், "டேட்டா சென்டர்' அதிகாரிகள் ஆகியோர் அடங்கிய குழுவினர், பல்வேறு கட்டங்களில் கூடி, விவாதித்தனர். இதைத் தொடர்ந்து, தேவையான மின்னணு சாதனங்கள் வாங்கப்பட்டன. வடிவமைப்பு உதவியாளர் பணியிடமும் நிரப்பப்பட்டது. ஒட்டுமொத்த பணிகளையும், தேர்வுத்துறை இயக்குனரகம் மேற்பார்வை செய்து வருகிறது. திட்டத்தின்படி, கணிசமான எண்ணிக்கையில், மாணவர்களை உயர்கல்வியில் சேர்க்கும் கல்வி நிறுவனங்கள் ஒவ்வொன்றிற்கும், தேர்வுத்துறையால், குறியீட்டு எண் ஒன்று வழங்கப்படும். மதிப்பெண் சான்றிதழ்களின் உண்மைத்தன்மையை அறிய விரும்பும் கல்வி நிறுவனங்கள், சரிபார்ப்புக்கான கட்டணத்தை செலுத்தி, அதற்குரிய கருவூலச்சீட்டு ரசீது, சரிபார்க்க வேண்டிய மதிப்பெண் சான்றிதழ்கள் குறித்த பட்டியலை, தேர்வுத்துறைக்கு அனுப்ப வேண்டும்.

தேர்வு துறை ஆய்வு : அப்படி அனுப்பினால், தேர்வுத்துறை இயக்குனரகத்தில் நிறுவப்படும் சாதனம் மூலம், சம்பந்தபட்ட கல்வி நிறுவனம், குறிப்பிட்ட சான்றிதழ்களை, தேர்வுத்துறை இணையதளம் வழியாக சரிபார்த்துக் கொள்ள, அனுமதி வழங்கப்படும். இதன்பின், சம்பந்தபட்ட உயர்கல்வி நிறுவனங்கள், சான்றிதழ்களை சரிபார்த்து, வேறுபாடுகள் நிறைந்த சான்றிதழ்கள் இருந்தால், அதை நகல் எடுத்துக் கொள்ளவும் வழிவகை செய்யப்படும். மாறுபட்ட விவரங்கள் கொண்ட சான்றிதழ்களை, சம்பந்தபட்ட கல்வி நிறுவனங்களிடம் இருந்து பெற்று, தேர்வுத்துறை ஆய்வு செய்து, அடுத்தகட்ட நடவடிக்கைகளை எடுக்கும். குழப்பம் : இந்த முறையால், உயர்கல்வி நிறுவனங்கள் மட்டும் இல்லாமல், அரசுத் துறைகள், தங்களிடம் சேரும் பணியாளர்களின் சான்றிதழ்களையும், ஆன்-லைன் வழியாக, உடனுக்குடன், சரிபார்த்துக் கொள்ள முடியும். இதற்காக, ஆண்டுக்கணக்கில், காத்திருக்க தேவையில்லை. முக்கியமாக, போலி சான்றிதழ்கள் ஊடுருவலை, முற்றிலுமாக தடுத்து நிறுத்த முடியும் என்றும் தேர்வுத்துறை நம்புகிறது. திட்டம் அமலுக்கு வந்தபின், அதை தொடர்ந்து கண்காணித்தல் மற்றும் நடவடிக்கை எடுத்தல் பணியை மேற்கொள்ளும் பொறுப்பை, யார் ஏற்பது என்பதில், மூன்று துறையினரிடையே, பிரச்னை நிலவி வருவதாக, துறை வட்டாரங்கள் தெரிவித்தன.

Tuesday, December 25, 2012

Cut-off Seniority dates adopted for nomination in Employment Offices in Tamil Nadu

பேரலை என்ற பேயலை: இன்று சுனாமி நினைவு தினம-dinamalar

இந்திய மக்கள் கேள்விப்படாத வார்த்தை சுனாமி. 2004 டிச., 26ம் தேதி, "கடல் அலை' கோபம் கொண்டு ஊருக்குள் வந்த போது தான் தெரிந்தது, அது தான் சுனாமி என்று. இதன் கோபமோ வெறும் பத்து நிமிடம் தான். அது ஏற்படுத்திய சோகம், மக்கள் மனதில் இருந்து என்றுமே அழியப் போவதில்லை. சமீபத்தில் கூட, அதே சுமத்ரா தீவில் பூகம்பம் ஏற்பட்டு, தமிழகத்தின் பல நகரங்களில் அதிர்வு உணரப்பட்டது. இந்தியா உள்ளிட்ட 42 நாடுகளுக்கு சுனாமி எச்சரிக்கை விடப்பட்டு, வாபஸ் பெறப்பட்டது. தற்போது சுனாமி என்றாலே குலைநடுங்கும் நிலை வந்துவிட்டது.

சுனாமி என்பது ஜப்பானிய மொழிச் சொல். "துறைமுக அலை' எனப் பொருள். "ஆழிப்பேரலை' எனவும் அழைக்கப்படுகிறது. இந்தோனேசியாவின் சுமத்ரா தீவில், 30 கி.மீ., ஆழத்தில், ரிக்டர் அளவில் 9.1 என்ற அளவுக்கு பூகம்பம் ஏற்பட்டது. இதையடுத்து எழும்பிய பேரலைகள், இந்தோனேசியா, இந்தியா, மியான்மர், சிங்கப்பூர், இலங்கை, தாய்லாந்து உட்பட 14 நாடுகளில் கடும் சேதத்தை ஏற்படுத்தியது. இந்திய துணைக்கண்டத்தில் மட்டும், 2 லட்சம் முதல் 3 லட்சம் பேர் இறந்தனர். இது, உலகின் மோசமான இயற்கை சீரழிவுகளில் 6வது இடம் என்ற சோகமான சாதனையைப் பெற்றது.

தமிழகம் அதிகம் : இந்தியாவில் தமிழகம், ஆந்திரா, கேரளா, புதுச்சேரி ஆகிய மாநிலங்களை சுனாமி தாக்கியது. இந்தியாவில் 12 ஆயிரம் பேர் பலியாக, தமிழகத்தில் மட்டும் 7 ஆயிரம் பேர் இறந்தனர். பூகம்பம் மூன்று விதங்களில் ஏற்படுகிறது. தரைப் பகுதியில் ஏற்படும் போது, நிலம் பிளவுபட்டு கட்டடங்கள் தரைமட்டமாகின்றன. மலைப்பகுதியில் ஏற்படும்போது எரிமலை உருவாகிறது. இதுவே கடலில் ஏற்படும் போது, சுனாமி உருவாகிறது. இன்னும் வேகம்: ஆழிப் பேரலையின் வேகம் ஆரம்பித்த இடத்திலிருந்து கரையை நெருங்க, நெருங்க அதிகரிக்கும். சாதாரணமாக கடல் அலையின் உயரம் 7 அடி எழும்பும்; கொந்தளிப்பாக இருந்தால் 10 அடி இருக்கும். ஆனால் சுனாமியின் போது, 100 அடி உயரத்துக்கு அலை எழும்பியது. சுனாமி, சில நொடிகளில் அதிக கொள்ளவு தண்ணீரை கரைக்கு தள்ளுகிறது.

எச்சரிக்கலாம்: சுனாமியை தடுக்க முடியாவிட்டாலும், அது வருவதற்கு முன் கண்டறிந்து, மக்களை பாதுகாப்பான இடங்களுக்கு மாற்றலாம். கடலில் பூகம்பம் ஏற்பட்டவுடன், பேரலைகள் உருவாகின்றனவா என கண்டறிய எச்சரிக்கை கருவிகள், கடல்களில் அமைக்கப்பட்டுள்ளன. இது, கடல் நீரோட்டத்தில் ஏற்படும் மாற்றத்தை தொடர்ந்து கண்காணிக்கும். இதன் அடிப்படையில், அலைகளின் மாற்றத்தை விஞ்ஞானிகள் அறிந்து, பாதிப்பை ஏற்படுத்தும் என உணர்ந்தால், மக்களை எச்சரிக்கின்றனர். இதனால், அழிவின் அளவை வெகுவாக குறைக்கலாம்.

வாக்காளர் பட்டியல் திருத்தம் ஆன்-லைனில் பார்க்கலாம்

வாக்காளர் பட்டியலில் பெயர் நீக்கம், திருத்தம் குறித்த விண்ணப்பங்கள் நிலை குறித்த விபரங்களை, இணையத்தில், ஆன்-லைனில் தெரிந்து கொள்ள, ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. வரைவு வாக்காளர் பட்டியல் அக்.,1 ல் வெளியிடப்பட்டது. இதில், பெயர் நீக்கம், திருத்தம், செய்வதற்கு நவ., 20 வரை அவகாசம் வழங்கப்பட்டது.
அனைத்து விபரங்களும் இணையத்தில் பதிவு செய்யப்பட்டு, இரட்டை பதிவு செய்தவர்கள், வாக்காளர் பட்டியலில் உள்ள முகவரியில் வசிக்காமல், வேறு பகுதியில் வசிப்பவர்கள் ஆகியோரின் பட்டியல் தயாரித்து சரி செய்தனர். வரும் ஜன., 10 ல் இறுதி வாக்காளர் பட்டியில் வெளியிடப்படுகிறது. பெயர் திருத்தம், நீக்கம், சேர்த்தல் போன்றவைகளுக்கு விண்ணப்பித்தவர்களின் மனுக்கள் ஏற்கப்பட்டதா அல்லது நிராகரிக்கப்பட்டாதா, உள்ளிட்ட விபரங்கள் ஆன்-லைனில் தெரிந்து கொள்ளலாம். வாக்காளரின் விண்ணப்பத்தில் உள்ள அப்ளிகேஷன் ஐ.டி., நம்பரை கடவு சொல்லாக பயன்படுத்தி, அறிந்துகொள்ளலாம்.

இதற்கான ஆயத்த பணிகள், முழு வீச்சில் நடந்து வருகிறது. ஜன., 25 ல், தேசிய வாக்காளர் தினம் கடைபிடிக்கப்படுகிறது. அன்று அனைத்து ஓட்டுச் சாவடிகளிலும், 18 வயது பூர்த்தியடைந்து, புதிதாக பதிவு செய்த வாக்காளர்களுக்கு அடையாள அட்டை வழங்கப்படும்.

பள்ளி பாட புத்தகங்கள் "சிடி' முறையில் மாற்ற திட்டம்

தமிழகத்தில், அடுத்த கல்வியாண்டில், பாட புத்தகங்களை "சிடி' வடிவில் கொண்டு வருவதற்கான, முயற்சியில், கல்வி துறையினர் இறங்கியுள்ளனர். இதற்காக, பள்ளிகள்தோறும், 6 முதல், 8 வகுப்பு வரையிலான, பாடத்தினை "இ-கன்டன்ட்' என்ற மின்னனு பாடப்பொருள் தயாரிக்க போட்டிகள் நடத்த திட்டமிட்டுள்ளனர்.

அனைவருக்கும் கல்வி திட்டத்தின் மூலம், ஆசிரியர்களுக்கு, கம்ப்யூட்டர் பயிற்சி வழங்கப்பட்டு, பள்ளிகளுக்கு "லேப் டாப்' வழங்கப்பட்டுள்ளது. தகவல் தொழில்நுட்ப முறையின் கீழ், "வெர்ஷன் 2020' இலக்கை அடைய, அடுத்த கல்வியாண்டில், கம்ப்யூட்டர் வழியாக, பாடம் நடத்த முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டுள்ளது. இதற்காக, பாடங்களை சிடி வடிவில் தொகுத்து, முதல் கட்டமாக, பள்ளிகளுக்கு வழங்கப்படும். சிடிக்கள் மூலம்,ஆசிரியர்கள் பாடம் நடத்துவர். இதை தொடர்ந்து, புத்தகங்களுக்கு பதில், மாணவர்களுக்கு சிடியாக வழங்கப்படும். தற்போது, மாவட்டம் வாரியாக,6 முதல், 8 வகுப்பு பாடம் தொடர்பாக, மின்னணு பாடப்பொருள் தயாரிக்கும் முயற்சியில் இறங்கியுள்ளனர்.

இதில் பள்ளி, கல்லூரி மாணவர்கள், பெற்றோர், ஆசிரியர்கள், ஆசிரியர் பயிற்றுனர்கள் மற்றும் கம்ப்யூட்டர் ஆர்வம் உள்ளவர்கள், 6 முதல், 8ம் வகுப்பு பாடங்களில், ஏதேனும், ஒரு பாடப்பகுதியை தேர்ந்தெடுத்து, 3டி வீடியோ முறையில், எளிமையாக புரியும் வகையில், தமிழில் விளக்க பயிற்சியுடன் வழங்கவேண்டும். இப்போட்டியில், பங்கேற்போர், வரும், ஜனவரி 18ம் தேதிக்குள், அனைவருக்கும் கல்வி திட்ட அலுவலகத்திற்கு, முழுவிபரத்தை அனுப்ப வேண்டும் என, தெரிவித்துள்ளனர். ராமநாதபுரம் மாவட்ட அனைவருக்கும் கல்வி திட்ட அதிகாரி, ஒருவர் கூறியதாவது: முதல் கட்டமாக, 6 முதல், 8ம் வகுப்பு வரையிலான பாடங்களை தேர்வு செய்து, அதில், கடினமான பாடங்களை, எளிதில் மாணவர்கள் புரிந்து கொள்ளும் வகையில், கம்ப்யூட்டர் மூலம் நடத்துவதற்காக, சிடி தயாரிக்கும் முயற்சியில் இறங்கியுள்ளோம். இதற்காக, பாடங்கள் குறித்து, "கிராபிக்ஸ், அனிமேஷன்' போன்று பாடங்களை உருவாக்கி, மாணவர்களுக்கு, எளிதில் புரியும் வகையில், சிடி தயாரிக்கும் போட்டி நடத்த உள்ளோம். தொடர்ந்து மாநில அளவில், புத்தகங்கள் சிடி வடிவில் வெளியிடப்படவுள்ளது. இவ்வாறு அவர் கூறினார்.

Monday, December 24, 2012

One Year Degree Not Eligible to write TET exam.RTI letter by TRB

10ம் வகுப்பு தனி தேர்வு 28.34 சதவீதம் பேர் தேர்ச்சி

பத்தாம் வகுப்பு தனி தேர்வில், 28.34 சதவீதம் பேர், தேர்ச்சி பெற்றனர். அக்டோபரில், 10ம் வகுப்பு தனி தேர்வு நடந்தது. எஸ்.எஸ்.எல்.சி., - மெட்ரிகுலேஷன், ஆங்கிலோ இந்தியன் ஆகிய மூன்று பிரிவுகளையும் சேர்த்து, 59,685 பேர் தேர்வெழுதியதில், 16,916 பேர், தேர்ச்சி பெற்றனர்;

தேர்ச்சி சதவீதம், 28.34. தேர்ச்சி பெற்றவர்களுக்கு, ஜனவரி முதல் வாரத்தில், மதிப்பெண் சான்றிதழ்கள் வழங்கப்பட உள்ளன.

Class Xth - Supplementary Examinations Results - October 2012

Sunday, December 23, 2012

பள்ளி வகுப்பறையிலேயே மாணவர்களுக்கு பல் சிகிச்சை

வகுப்பறைகளுக்கே சென்று அரசு பள்ளி மாணவர்களுக்கு பல் நோய் சிகிச்சை அளிக்க, சுகாதாரத்துறைக்கு அரசு உத்தரவிட்டுள்ளது.அரசு பள்ளிகளில் 3 முதல் 8ம் வகுப்பு படிக்கும் மாணவ, மாணவிகளுக்கு பல் தொடர்பான நோய்களை கண்டறிந்து சிகிச்சை அளிக்க, அரசு உத்தரவிட்டுள்ளது.

ஒவ்வொரு மாவட்டத்திலும் ஆரம்ப சுகாதாரத்துறை இணை இயக்குனர்கள் தலைமையில் டாக்டர், நர்சுகள் அடங்கிய குழுவினர், ஒவ்வொரு அரசு பள்ளியின் வகுப்பறைகளுக்கு செல்ல வேண்டும். குறிப்பிட்ட நேரம் ஒதுக்கி,பரிசோதிக்க வேண்டும். பல் ஓட்டை, சொத்தை பல் உட்பட பிரச்னைகளை கண்டறிந்து, அதே இடத்தில் சிகிச்சை அளிக்கின்றனர். முடியாத பட்சத்தில், அரசு மருத்துவமனைக்கு பரிந்துரைப்பர். சிவகங்கை சுகாதார பணிகள் துணை இயக்குனர் அகல்யா கூறுகையில்,

""அரசின் இந்த புதிய சிகிச்சை முறையால் மாணவர்களின் பல் நோய் சரி செய்யப்படும். பற்களை சுத்தமாக வைத்துக்கொள்வது பற்றிய விழிப்புணர்வையும் ஏற்படுத்துகிறோம். பெற்றோர்களும் தங்களது குழந்தைகளின் பற்களை சுத்தமாக வைப்பதற்கு அறிவுரை கூற வேண்டும்,'' என்றார்.

பிற்படுத்தப்பட்ட, மிகவும் பிற்படுத்தப்பட்ட மாணவர்களின் முழு கல்வி கட்டணத்தை அரசே செலுத்தும்: ஜெயலலிதா உத்தரவ

பள்ளி மேற்படிப்பு உதவி திட்டத்தின் கீழ், பெற்றோரின் ஆண்டு வருமானம் 1 லட்சத்துக்கு மிகாமல் இருக்கின்ற பிற்படுத்தப்பட்டோர், மிகவும் பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சீர்மரபினர் மாணவ, மாணவியர்கள் உயர்கல்வி பயிலுவதற்காக சிறப்புக் கட்டணம், கற்பிப்புக் கட்டணம், புத்தகக் கட்டணம் ஆகியவற்றை கல்வி உதவித் தொகை அறிவிக்கையில் நிர்ணயிக்கப்பட்ட அளவிலும், தேர்வுக் கட்டணம் முழுமையாகவும் வழங்கப்பட்டு வருகிறது.

ஆனால் கல்வி உதவித் தொகை அறிவிக்கையில் நிர்ணயிக்கப்பட்டுள்ள கட்டணம் 1980ஆம் ஆண்டு நிர்ணயம் செய்யப்பட்ட கட்டணமாகும். அதன் பிறகு கல்வி நிறுவனங்கள், கற்பிப்புக் கட்டணம், சிறப்புக் கட்டணம் ஆகியவைகளை உயர்த்தியுள்ள போதிலும், கல்வி உதவித் தொகை அறிவிக்கையில் எந்தவித மான மாற்றமும் செய்யப்படாமல், 1980ஆம் ஆண்டு நிர்ணயிக்கப்பட்ட தொகையே இன்றும் வழங்கப்பட்டு வருகிறது. எனவே, தற்போது கல்லூரிகளில் அதிகரித்துள்ள கற்பிப்புக் கட்டணம் மற்றும் சிறப்புக் கட்டணம் ஆகியவற்றினால் பிற்படுத்தப்பட்டோர், மிகவும் பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சீர்மரபினர் மாணவ, மாணவியர்களின் கல்வி மற்றும் மாணவ, மாணவியர் சேர்க்கையில் எந்தவிதமான பாதிப்பும் ஏற்படாதிருக்க முதல்-அமைச்சர் ஜெயலலிதா, அரசு மற்றும் அரசு உதவிப் பெறும் கல்லூரிகளில் பயிலும் பிற்படுத்தப்பட்டோர், மிகவும் பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சீர்மரபினர் மாணவ, மாணவியருக்கு, தேர்வுக் கட்டணம் முழுமையாக வழங்குவது போல், அவர்கள் செலுத்தும் கற்பிப்புக் கட்டணம் மற்றும் சிறப்புக் கட்டணம் ஆகியவற்றை, பள்ளி மேற்படிப்பு உதவி திட்டத்தின் கீழ் முழுமையாக வழங்க உத்தரவிட்டுள்ளார்.

மேலும், தொழிற்முறை கல்விகளான பொறியியல், மருத்துவம் போன்ற படிப்புகளுக்கு ஒற்றைசாளர முறையில் அரசு ஒதுக்கீட்டின் கீழ் தேர்வு செய்யப்பட்ட பிற்படுத்தப்பட்டோர், மிகவும் பிற்படுத்தப்பட்டோர், சீர்மரபினர் மாணவ, மாணவியர்களுக்கு, அரசு கல்லூரிகளுக்கு நிர்ணயம் செய்யப்படும் கட்டணத்தை முழுமையாக பள்ளி மேற்படிப்பு உதவித் திட்டத்தின் கீழ் வழங்க முதல்-அமைச்சர் ஜெயலலிதா உத்தரவிட்டுள்ளார். இனி வருங்காலங்களில், அரசில் உள்ள பல்வேறு துறைகள், தங்கள் துறைகளைச் சார்ந்த படிப்புகளுக்கான கல்விக் கட்டணங்களை உயர்த்தும் சமயங்களில் எல்லாம், தனியாக எந்தவிதமான அரசு உத்தரவினையும் எதிர்நோக்காமல், கல்வித் தொகை அறிவிக்கையில் மாற்றம் செய்து, அரசுத் துறைகளால் உயர்த்தப்பட்ட கல்விக் கட்டணங்களை உடனடியாக பிற்படுத்தப்பட்டோர், மிகவும் பிற்படுத்தப்பட்டோர், சீர்மரபினர் மாணவ, மாணவியர்களுக்கு பள்ளி மேற்படிப்பு உதவி திட்டத்தின் கீழ் உயர்த்தி வழங்கவும் முதலமைச்சர் ஜெயலலிதா உத்தரவிட்டுள்ளார். இதற்காக அரசுக்கு 16.54 கோடி ரூபாய் கூடுதல் செலவினம் ஏற்படும். இதனால் 74,181 மாணவ, மாணவியர்கள் பயன் அடைவர். பிற்படுத்தப்பட்டோர், மிகவும் பிற்படுத்தப்பட்டோர், சீர்மரபினர் நலத்துறைகளின் கட்டுப்பாட்டின் கீழ் இயங்கும் விடுதிகளிலும், மதுரை, திண்டுக்கல் மற்றும் தேனி மாவட்டங்களில் இயங்கி வரும் கள்ளர் சீரமைப்பு பள்ளிகளில் 10 மற்றும் 12ஆம் வகுப்புகளில் பயிலும் மாணவ, மாணவியர்களுக்கு சிறப்பு வழிகாட்டி நூல்கள் வழங்கும் திட்டம் செயல்படுத்தப்பட்டு வருகிறது. இதே போன்று, பெரம்பலூர், சிவகங்கை, திருவண்ணாமலை, விழுப்புரம், தருமபுரி, திண்டுக்கல், கிருஷ்ணகிரி மற்றும் கடலூர் ஆகிய 8 மிகவும் பின்தங்கிய மாவட்டங்களில் உள்ள அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளில் 10 மற்றும் 12ஆம் வகுப்பு பொது தேர்வுகள் எழுதும் மாணவ, மாணவியர்கள் தேர்வுகளில் அதிக அளவு தேர்ச்சி பெறுவதற்கு வசதியாக அவர்களுக்கும் விலையில்லா சிறப்பு வழிகாட்டிகள் வழங்க முதலமைச்சர் ஜெயலலிதா உத்தரவிட்டுள்ளார்.

இதற்காக 2.47 கோடி ரூபாய் நிதி ஒதுக்கீடு செய்து முதல்-அமைச்சர் ஜெயலலிதா உத்தரவிட்டுள்ளார். இதனால், இந்த மாவட்டங்களில் 10 மற்றும் 12 ஆம் வகுப்புகளில் பயிலும் 2,21,400 மாணவ, மாணவியர்கள் பயன் பெறுவர். அரசின் இந்த நடவடிக்கைகள் மூலம், பிற்படுத்தப்பட்டோர், மிகவும் பிற்படுத்தப்பட்டோர், சீர்மரபினர் மாணவ, மாணவியர்கள் பெரிதும் பயன் அடைவர்.