அரசு நடுநிலைப்பள்ளிகளில் பணியாற்றும் ஆசிரியர்கள் மற்றும் பணியாளர்களுக்கு நேற்று முதல் பயோமெட்ரிக் வருகைப்பதிவு அமல்படுத்தப்பட்ட நிலையில் மாதத்தில் 5 நாட்கள் தாமதமாக வரும் ஆசிரியர்களுக்கு மெமோ வழங்கப்படும் என்று கல்வித்துறை அதிகாரிகள் தெரிவித்தனர். தமிழக பள்ளிக்கல்வித்துறையில் அரசு, அரசு உதவி பெறும் உயர்நிலை, மேல்நிலைப்பள்ளிகளில் பணிபுரியும் ஆசிரியர்கள் மற்றும் பணியாளர்களுக்கு பயோமெட்ரிக் வருகைப்பதிவு கடந்த ஜூன் மாதம் அமல்படுத்தப்பட்டது. அதைத்தொடர்ந்து அரசு, அரசு உதவி பெறும் தொடக்க மற்றும் நடுநிலைப்பள்ளிகளில் பயோமெட்ரிக் வருகைப்பதிவு முறையை அமல்படுத்த முடிவு செய்யப்பட்டது. அதன்படி அரசு, அரசு உதவி பெறும் நடுநிலைப்பள்ளிகளில் பயோமெட்ரிக் கருவிகள் பொருத்தும் பணிகள் முடிந்து நேற்று காலாண்டு தேர்வு முடிந்து பள்ளி திறக்கப்பட்ட நிலையில் பயோ மெட்ரிக் வருகை பதிவு அமலுக்கு வந்தது. இதையடுத்து தமிழகத்தில் உள்ள அரசு மற்றும் நிதியுதவி பெறும் நடுநிலைப்பள்ளிகள் பணியாற்றும் ஆசிரியர்கள் மற்றும் பணியாளர்கள் நேற்று முதல் தங்களின் வருகைப்பதிவை பயோமெட்ரிக் முறையில் பதிவு செய்தனர்.
இதுகுறித்து கல்வித்துறை அதிகாரிகள் கூறுகையில், ‘தமிழகத்தில் உள்ள சுமார் 6 ஆயிரத்திற்கும் மேலாக அரசு, நிதியுதவி பெறும் நடுநிலைப்பள்ளிகளில் பயோமெட்ரிக் வருகைப்பதிவு நடைமுறை நேற்று முதல் அமல்படுத்தப்பட்டது. பயோமெட்ரிக் வருகைப்பதிவில் ஆசிரியர்கள் மற்றும் பணியாளர்கள் காலை 9 மணிக்கு முன்னதாகவும், மாலை 4.10 மணிக்கு பிறகு பயோமெட்ரிக் கருவியில் தங்களின் வருகைப்பதிவை செய்ய வேண்டும். காலை 9.05 மணிக்கு வருகைப்பதிவு செய்தால் மஞ்சள் சோனும், 9.15 மணிக்கு வந்தால் சிவப்பு சோனும் கணக்கில் எடுத்துக்கொள்ளப்படும். ஒரு மாதத்தில் 3 நாட்கள் மஞ்சள் சோன் வந்தால், ஒரு சிவப்பு சோனாக எடுத்துக்கொள்ளப்படும். 3 சிவப்பு சோன் வந்தால் ஒருநாள் சாதாரண விடுப்பு(சிஎல்) அளிக்கப்படும். ஒரு மாதத்தில் 5 நாட்கள் சிவப்பு சோன் வந்தால் சம்பந்தப்பட்ட ஆசிரியர் மற்றும் பணியாளர்களுக்கு மெமோ வழங்கப்படும்’ என்றனர்.