Friday, August 26, 2016
Thursday, August 25, 2016
புத்தகம் எடுத்து வராததை கண்டித்த ஆசிரியைக்கு மாணவன் ‘பளார்’ : திருப்பூரில் ஆசிரியர்கள் அதிர்ச்சி
புத்தகம் எடுத்து வராததை கண்டித்த ஆசிரியைக்கு மாணவன் ‘பளார்’ விட்ட சம்பவம் ஆசிரியர்கள் மத்தியில் கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. திருப்பூரில், பள்ளி மாணவர்கள் 2 கோஷ்டிகளாக பிரிந்து ஒருவரை ஒருவர் தாக்கிக் கொள்வதும், ரோடுகளில் விரட்டி விரட்டி அடித்துக் கொள்வதும் அடிக்கடி நடந்து வருகிறது. இதில் சில மாணவர்கள் பலத்த காயமடைந்த சம்பவங்களும் நடந்துள்ளன.
இதுபோன்ற சம்பவங்களில் பெரும்பாலும் அரசு மற்றும் மாநகராட்சிப் பள்ளி மாணவர்களே ஈடுபட்டு வருகின்றனர். இதற்கு, கல்வித்துறை அதிகாரிகள் உரிய நடவடிக்கை எடுக்காமல் இருந்து வருகின்றனர். கடந்த 23ம் தேதி, திருப்பூரில் உள்ள ஒரு அரசு பள்ளியில் பிளஸ்-2 மாணவர்களுக்கு, ஆசிரியை ஒருவர் பாடம் நடத்திக் கொண்டிருந்துள்ளார். அப்போது, மாணவன் ஒருவன் புத்தகம் எடுத்து வரவில்லை. இதை அறிந்த ஆசிரியை அந்த மாணவனை கண்டித்ததோடு, அவன் கன்னத்தில் அறைந்ததாக கூறப்படுகிறது. இதனால், ஆத்திரமடைந்த அந்த மாணவன், ஆசிரியையின் கன்னத்தில் திருப்பி ‘பளார்’, ‘பளார்’ என அறைந்துள்ளான்.
இதில் ஆசிரியைக்கு லேசான காயம் ஏற்பட்டுள்ளது. இதுகுறித்து தலைமை ஆசிரியர் கல்வித்துறை அதிகாரிகளுக்கு தகவல் தெரிவித்துள்ளார். இதையடுத்து அந்த மாணவனுக்கு மாற்றுச்சான்றிதழ் கொடுத்து பள்ளியை விட்டு வெளியேற்றியதாக கூறப்படுகிறது. இச்சம்பவம் ஆசிரியர்கள் மற்றும் கல்வித்துறை அதிகாரிகள் மத்தியில் கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.
சுயநிதி கல்லூரிகளில் ஒருங்கிணைந்த 4 வருட பி.எட் படிப்பு
தமிழ்நாட்டில் 7 அரசு பி.எட். கல்லூரிகளும், 14 அரசு உதவிபெறும் பி.எட். கல்லூரிகளும், 703 சுயநிதி பி.எட். கல்லூரிகளும் என மொத்தம் 724 பி.எட். கல்லூரிகள் உள்ளன.
சுயநிதி பி.எட். கல்லூரிகளில் 2 வருட பி.எட். படிப்பில் சேர மாணவர் சேர்க்கை நடந்து வருகிறது. அந்தந்த கல்லூரி நிர்வாகமே மாணவர் சேர்க்கையை நடத்தி வருகிறது. அரசு மற்றும் அரசு உதவி பெறும் கல்வியல் கல்லூரிகளில் மட்டும் மாணவர் சேர்க்கை கலந்தாய்வு மூலம் நடந்து வருகிறது.
மாணவர்கள் கலை, அறிவியல் படிப்பில் பட்டம் பெற 3 ஆண்டுகள் ஆகும். அதன்பிறகு அவர்கள் பி.எட். படிக்க 2 ஆண்டுகள் ஆகும். மொத்தம் 5 ஆண்டுகள் ஆவதை ஒருவருடம் குறைத்து ஒருங்கிணைந்த 4 வருட கால பி.எட். படிப்பு அறிவிக்கப்பட்டுள்ளது.
அதாவது பிளஸ்-2 முடித்த மாணவர்கள் பி.ஏ., அல்லது பி.எஸ்சி. பட்டப்படிப்புடன் கூடிய பி.எட். படிப்பை 4 வருட ஒருங்கிணைந்த பி.எட். படிப்பாக படிக்கலாம் என்று கடந்த 23-ந் தேதி தமிழக சட்டசபையில் முதல்-அமைச்சர் ஜெயலலிதா அறிவித்தார். தமிழ்நாடு ஆசிரியர் கல்வியியல் பல்கலைக்கழகத்தால் 4 வருட ஒருங்கிணைந்த பி.ஏ., பி.எட்., பி.எஸ்சி., பி.எட். படிப்புகள் இந்த ஆண்டு முதல் கல்வியல் கல்லூரிகளில் அறிமுகப்படுத்தப்படும் என்றும் அப்போது அவர் அறிவித்தார். அதன்படி இந்த வருடம் 4 வருட ஒருங்கிணைந்த பி.எட். படிப்பு அறிமுகப்படுத்தப்படுகிறது.
இது குறித்து சம்பந்தபட்ட அதிகாரி ஒருவர் கூறியதாவது:
4 வருட பி.எட். படிப்பு தொடங்க தேசிய ஆசிரியர் கல்வி குழுவில் அனுமதி பெறவேண்டும். பின்னர் தமிழ்நாடு ஆசிரியர் பல்கலைக்கழகம் அனுமதி கொடுக்கவேண்டும்.
இந்த ஒருங்கிணைந்த 4 வருட பி.எட். படிப்பு கொண்டு வர 13 சுயநிதி பி.எட். கல்லூரிகள் தேசிய ஆசிரியர் கல்விக்குழுவில் அனுமதி பெற்றுவிட்டன. அந்த கல்லூரிகள் தமிழ்நாடு ஆசிரியர் கல்வி பல்கலைக்கழகத்திடம் அனுமதிக்காக விண்ணப்பித்துள்ளன. உடனடியாக அந்த அனுமதி கொடுக்கப்படுகிறது.
ஆனால் ஒருங்கிணைந்த 4 வருட பி.எட். படிப்பு கொண்டு வர அரசு பி.எட். கல்லூரிகள் மற்றும் அரசு உதவி பெறும் பி.எட். கல்லூரிகள் தேசிய ஆசிரியர் கல்விக்குழுவில் விண்ணப்பிக்கவில்லை.
தேசிய ஆசிரியர் கல்விக்குழு வருகிற கல்வி ஆண்டில் அரசு கல்லூரிகளில் ஒருங்கிணைந்த 4 வருட பி.எட். படிக்க அனுமதி வழங்கும். அவ்வாறு வரும்போது கண்டிப்பாக கலந்தாய்வு நடத்தப்படும். அதனால் அரசு பி.எட். கல்லூரிகள் இந்த வருடம் ஒருங்கிணைந்த பி.எட். படிப்புகளை தொடங்குவது சிரமம்.
எனவே அனுமதி பெற்றுள்ள 13 சுயநிதி பி.எட். கல்லூரிகளில் ஒருங்கிணைந்த 4 வருட பி.எட். படிப்பில் மாணவர் சேர்க்கை விரைவில் நடைபெற உள்ளது. சுயநிதி பி.எட். கல்லூரிகள் அந்த கல்லூரிகளில் மாணவர் சேர்க்கை குறித்து விளம்பரம் செய்வார்கள். அதன்பிறகு அந்த கல்லூரிகளில் மாணவர்கள் சேரலாம். ஒரு கல்லூரிக்கு தலா 100 இடங்கள் வீதம் 13 கல்லூரிகளிலும் 1,300 இடங்கள் உள்ளன. 4 வருடங்கள் கழித்து ஒவ்வொரு கல்லூரியிலும் 400 பேர் இருப்பார்கள். முதல் ஆண்டில் இருந்து 4 ஆண்டுகளும் ஆசிரியர் பயிற்சி குறித்து பாடம் நடத்தப்படும். ஆனால் கடைசி வருடம்தான் அதிக முக்கியத்துவம் அளிக்கப்படும்.
இந்த படிப்புக்கு பாடத்திட்டம் பல்கலைக்கழக நிபுணர்குழுவால் தயாரிக்கப்பட்டு தயாராக உள்ளது.
6-வது வகுப்பு முதல் 10வது வகுப்பு வரை ஆசிரியராக வேண்டும் என்ற விருப்பம் உள்ள மாணவர்களை ஊக்கப்படுத்தவேண்டும். ஆசிரியராக வேண்டும் என்று உயரிய நோக்கம் உள்ளவர்கள் ஒருங்கிணைந்த 4 வருட பி.எட். படிப்பில் சேர்ந்து படிப்பது நல்லது.
இவ்வாறு அதிகாரி தெரிவித்தார்.
ரெயிலில் 92 பைசா இன்சூரன்ஸ் பிரிமீயர் திட்டம் வரும் 31-ந்தேதியில் இருந்து அறிமுகமாகிறது.
ரெயிலில் பயணம் செய்து கொண்டிருக்கும்போது திடீரென விபத்து ஏற்பட்டால், அவர்களுக்கு ரெயில்வே நிர்வாகம் இழப்பீடு வழங்கும். இது ஒவ்வொரு விபத்தை பொறுத்து இழப்பீடு மாறுபடும்.
இதனால் ரெயில்வே துறைக்கு இழப்பு ஏற்படுகிறது. இதை சரிகட்டுவதற்காக பயணிகளுக்கான இன்சூரன்ஸ் திட்டம் அறிமுகப்படுத்தப்படும் என்று ரெயில்வே பட்ஜெட்டின்போது மத்திய மந்திரி சுரேஷ் பிரபு அறித்திருந்தார்.
இந்த திட்டம் வரும் 31-ந்தேதியில் இருந்து அறிமுகப்படுத்தப்பட இருக்கிறது.
இதன்படி, ரெயில்வே துறையின் அதிகாரப்பூர்வ ஆன்லைன் இணையத்தளமான IRCTC-ல் டிக்கெட் பதிவு செய்யும்போது ஒவ்வொரு நபர்களுக்கு 92 காசுகள் இன்சூரன்ஸ் பிரிமீயமாக பிடித்தம் செய்யப்படும். இந்த பிரிமீயர் புறநகர் ரெயில் பயணம் செய்யும் பயணிகளுக்கும் அடங்கும்.
ஆனால், ஐந்து வயதிற்குட்பட்டோருக்கும், வெளிநாட்டு பயணிகளுக்கும் அடங்காது. உறுதி செய்யப்பட்ட டிக்கெட், ஆர்.ஏ.சி. மற்றும் காத்திருப்போர் பட்டியலில் இருப்போரும் இந்த வசதியை பெறலாம்.
இந்த பிரிமீயம்படி தற்செயலான ரெயில் விபத்திற்குள்ளாகி, உயிரிழக்க நேரிட்டால் 10 லட்சம் ரூபாய் இழப்பிடாக வழங்கப்படும். உடலின் பாகங்கள் செயலிழ்ந்தால் 7.5 லட்சம் ரூபாயும், சிறிய காயம் ஏற்பட்டு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டால் 2 லட்சம் ரூபாய் வழங்கப்படும்.
அதேபோல் துப்பாக்கி சூடு, தீவிரவாத தாக்குதல் போன்ற சம்பவத்தால் உயிரிழந்தவர்களின் உடல்களை சொந்த ஊருக்கு எடுத்துச் செல்ல 10 ஆயிரம் ரூபாய் வழங்கப்படும்.
ஐசிசிஐ லம்பா்டு ஜெனரல் இன்சூரன்ஸ், ராயல் சுந்தரம் ஜெனரல் இன்சூரன்ஸ் மற்றும் ஸ்ரீராம் ஜெனரல் இன்சூரன்ஸ் ஆகிவற்றிளுடன் இணைந்து IRCTC இந்த திட்டத்தை செய்ய இருக்கிறது.
Wednesday, August 24, 2016
கட்டாய இடமாற்றம்:ஆசிரியர்கள் பதற்றம்
ஆசிரியர்கள் இடமாறுதல் கவுன்சிலிங், முடிவு கட்டத்தை எட்டியுள்ளது. வரும், 27ம் தேதி கட்டாய இடமாற்றம் நடக்கிறது; இதில், ஆசிரியர்கள், பல்வேறு மாவட்டங்களுக்கு அதிரடியாக மாற்றப்பட உள்ளனர். அரசு பள்ளி ஆசிரியர்களுக்கு, ஆண்டுக்கு ஒருமுறை விருப்ப இடமாறுதல் கவுன்சிலிங் நடக்கிறது. கடந்த, 20 ஆண்டுகளில் இல்லாத அளவுக்கு, இந்த ஆண்டு கவுன்சிலிங்கில், முக்கிய காலியிடங்கள் மறைக்கப்படாமல், ஆசிரியர்கள் இடமாற்றம் செய்யப்பட்டனர். வரும், 27 முதல், 29ம் தேதி வரை, அரசு உயர்நிலை மற்றும் மேல்நிலைப் பள்ளிகளில், பணி நிரவல் எனப்படும், கட்டாய இடமாற்றம் செய்யப்படுகிறது.
அதிக அளவில்... : ஒவ்வொரு பள்ளியிலும், மாணவர்கள் எண்ணிக்கைக்கு ஏற்ப, இத்தனை ஆசிரியர்கள் இருக்க வேண்டும் என்ற விகிதாச்சாரம் உள்ளது. அதையும் மீறி, சில மாவட்டங்களில், அதிகளவில் ஆசிரியர்கள் பணியில் உள்ளனர். அவர்களை கணக்கெடுத்து, ஆசிரியர் பற்றாக்குறை உள்ள மாவட்ட பள்ளிகளுக்கு மாற்றுவதே, பணி நிரவல் கலந்தாய்வு என, கூறப்படுகிறது.
அதன்படி, பள்ளிக் கல்வித்துறை எடுத்துள்ள பட்டியலில், 3,000 ஆசிரியர்கள் வரை, சில மாவட்டங்களில், கூடுதலாக பணியாற்றுவது தெரியவந்துள்ளது. எனவே, கூடுதல் ஆசிரியர் இடங்களை, ஆசிரியர் தேவைப்படும் பல்வேறு மாவட்ட பள்ளிகளுக்கு மாற்ற முடிவு செய்துள்ளனர். விழுப்புரம், திருவண்ணாமலை, கிருஷ்ணகிரி, திருவள்ளூர், தர்மபுரி போன்ற மாவட்டங்களில், காலியிடங்கள் அதிகமாக உள்ளன. எனவே, தென் மாவட்டங்கள் மற்றும் மத்திய மாவட்டங்களைச் சேர்ந்த ஆசிரியர்கள், வரும், 27ம் தேதி முதல், எந்த மாவட்டத்திற்கும் அதிரடியாக மாற்றப்படலாம்.
எப்படியாவது... : அதேநேரம், பள்ளிக் கல்வித் துறையில் அதிகமாக பணியாற்றும் தென் மாவட்ட ஆசிரியர்கள், எப்படியாவது, சொந்த மாவட்டம் அல்லது அதையொட்டிய பகுதிகளுக்கு செல்ல, அதிகாரிகளை அணுகியுள்ளனர். ஆனால், சிபாரிசு கூடாது என, அரசிடமிருந்து கண்டிப்பான உத்தரவு உள்ளதால், அதிகாரிகளுக்கு நெருக்கடியான நிலையும், ஆசிரியர்கள் மத்தியில் பதற்றமான சூழலும் ஏற்பட்டுள்ளது.
Querterly exam
'பத்தாம் வகுப்பு மற்றும் பிளஸ் 2 மாணவர்களுக்கு, செப்., 8 முதல், 23ம் தேதி வரை, காலாண்டு தேர்வுகள் நடக்கும்' என, அறிவிக்கப்பட்டுள்ளது. பத்தாம் வகுப்பு மற்றும் பிளஸ் 2 மாணவர்களுக்கு, ஆண்டு இறுதி பொதுத் தேர்வை போல, காலாண்டு, அரையாண்டு தேர்வுகளை, அனைவருக்கும் பொதுவான வினாத்தாளுடன் நடத்த, பள்ளிகளுக்கு கல்வித்துறை உத்தரவிட்டுள்ளது. செப்., 8ல், 10ம் வகுப்பு மற்றும் பிளஸ் 2 மாணவர்களுக்கு, காலாண்டு தேர்வு துவங்குகிறது. பிளஸ் 2வுக்கு, செப்., 8 முதல், 12 வரை, மொழி பாடங்களுக்கும்; மற்ற தேர்வுகள், செப்., 14 முதல், 23 வரையிலும் நடத்தப்பட உள்ளன. பத்தாம் வகுப்புக்கு, செப்., 8 முதல், 14 வரை மொழி பாட தேர்வுகளும்; மற்ற தேர்வுகள், செப்., 15 முதல், 23 வரையிலும் நடத்தப்படும் என, அறிவிக்கப்பட்டுள்ளது.
Tuesday, August 23, 2016
எஸ்.எஸ்.எல்.சி, பிளஸ் 2 மாணவ- மாணவிகளுக்கு செல்போன் அப்ளிகேஷன் மூலம் பாடம் படிக்கும் திட்டம்;
எஸ்.எஸ்.எல்.சி., பிளஸ்-2 மாணவ-மாணவிகள் செல்போன் ‘அப்ளிகேஷன்’ மூலம் பாடம் படிக்கும் புதிய திட்டம் ஏற்படுத்தப்பட்டுள்ளது. அதன் உபயோகம் குறித்து ஆசிரியர்களுக்கு செயல்விளக்கம் அளிக்கப்பட்டது.
ஆசிரியர்களுக்கு செயல்விளக்கம்
எஸ்.எஸ்.எல்.சி., பிளஸ்-2 பாட திட்டத்தில் சிலவற்றை தேர்ந்தெடுத்து நவீன தொழில்நுட்பம் மூலம் மாணவ-மாணவிகள் படிக்க செல்போன் ‘அப்ளிகேஷன்’ ஒன்றை தமிழக அரசின் பள்ளிக்கல்வி துறை தயார் செய்துள்ளது. இதன் உபயோகம் குறித்து ஆசிரியர்கள் தெரிந்து கொள்ள காணொலி காட்சி மூலம் செயல்விளக்கம் அளிக்கப்பட்டது. சென்னை நுங்கம்பாக்கத்தில் உள்ள டி.பி.ஐ. வளாகத்தில் இருந்தபடி, 32 மாவட்டங்களில் உள்ள 32 மாவட்ட ஆசிரியர் கல்வி மற்றும் பயிற்சி நிறுவன மையங் கள், 16 அரசு மேல்நிலைப்பள்ளிகளில் செயல்விளக்கம் வழங்கப்பட்டது.
பதிவிறக்கம் செய்யலாம்
இது குறித்து மாநில கல்வியியல் ஆராய்ச்சி மற்றும் பயிற்சி நிறுவன இயக்குனர் ராமேஸ்வர முருகன் கூறியதாவது:-
தமிழக அரசின் பள்ளிக்கல்வி துறை மூலம் ‘ TN SC-H-O-O-LS LI-VE ’ என்ற அப்ளிகேஷனை செல்போனின் ‘பிளே ஸ்டோரில்’ சென்று பதிவிறக்கம் செய்து கொள்ளலாம். மேலும், இது தொடர்பாக சி.டி.யிலும் நாங்கள் பதிவு செய்து ஒவ்வொரு பள்ளிகளுக்கும் வழங்கி இருக்கிறோம். மாணவ-மாணவிகள் தேவைப்பட்டால் அதை கேட்டு பெற்றுக்கொண்டு தங்களுடைய செல்போனில் பதிவேற்றம் செய்து கொள்ளலாம். இந்த அப்ளிகேஷனை கொண்டு பாடத்திட்டத்தில் குறிப்பிடப்பட்டுள்ள பகுதியின் படத்தின் மீது வைத்தால் அந்த படம் முப்பரிமாண தோற்றத்தில் (3-டி) காட்சி அளிக்கும்.
141 பாடங்கள்
பின்பு அந்த படத்தின் மூலம் மாணவ-மாணவிகள் தெரிந்து கொள்ள வேண்டிய அனைத்து விளக்கங்களையும் அதில் பெற்று படித்து கொள்ளலாம். இதுவரை 5 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் இந்த அப்ளிகேஷனை பதிவிறக்கம் செய்து இருக்கிறார்கள். எஸ்.எஸ்.எல்.சி. அறிவியல் புத்தகத்தில் 57 பாடங்களையும், கணித புத்தகத்தில் 6 பாடங்களையும், பிளஸ்-2 இயற்பியல் புத்தகத்தில் 5 பாடங்களையும், வேதியியல் புத்தகத்தில் 16 பாடங்களையும், உயிரியியல் புத்தகத்தில் 20 பாடங்களையும், கணித புத்தகத்தில் 7 பாடங்களையும், கணினி அறிவியல் புத்தகத்தில் 10 பாடங்களையும், விலங்கியல் புத்தகத்தில் 20 பாடங்களையும் என மொத்தம் 141 பாடங்களை படித்து தெரிந்து கொள்ளலாம்.
இவ்வாறு அவர் கூறினார்.
இடமாறுதல் பெற்ற ஆசிரியர்களுக்கு திடீர் தடை
தமிழக அரசின் தொடக்கக் கல்வித் துறையில் உள்ள, அரசு பள்ளி ஆசிரியர்களுக்கு, ஆக., 3ம் தேதி கவுன்சிலிங் துவங்கி, நேற்று முன்தினம் முடிந்தது. இதில் பங்கேற்று இடமாறுதல் பெற்ற ஆசிரியர்கள், புதிய இடங்களில் சேர, தொடக்கக் கல்வி இயக்குனரகம் திடீர் தடை விதித்துள்ளது.
இதுகுறித்து, தொடக்கக் கல்வி இயக்குனர் இளங்கோவன் அனுப்பியுள்ள சுற்றறிக்கை:
ஐந்தாம் வகுப்பு வரையிலான தொடக்கப் பள்ளிகளில், இரு ஆசிரியர்கள் உள்ள பள்ளிகளில் பணியாற்றும் ஆசிரியர்கள், இடமாறுதல் பெற்றிருந்தாலும், உடனடியாக அங்கிருந்து மாறி செல்லக்கூடாது. அந்த இடத்திற்கு மாற்றப்பட்ட ஆசிரியர் பணியில் சேர்ந்தால் மட்டுமே, ஆசிரியர்கள் விடுவிக்கப்பட வேண்டும்கிருஷ்ணகிரி, விழுப்புரம், திருவண்ணாமலை மற்றும் தர்மபுரி மாவட்டங்களில், ஆசிரியர் பணியிடம், அதிகளவில் காலியாக உள்ளதால், இந்த மாவட்டங்களில் இருந்து மாறுதல் பெற்ற ஆசிரியர்களும், தங்கள் இடத்திற்கு, வேறு ஆசிரியர் வரும் வரை காத்திருக்க வேண்டும்.இவ்வாறு அவர் குறிப்பிட்டு உள்ளார்.
வாக்குச்சாவடிகள் எப்படி இருக்க வேண்டும்; மாநில தேர்தல் கமிஷன் புது உத்தரவு
உள்ளாட்சி தேர்தலுக்கு வாக்குச்சாவடிகள் அமைப்பது குறித்து, அதிகாரிகளுக்கு, மாநில தேர்தல் கமிஷன் உத்தரவிட்டு உள்ளது.
தமிழகத்தில், வரும் அக்டோபரில் உள்ளாட்சி தேர்தல் நடக்க உள்ளது. இத்தேர்தலில், வாக்கா ளர்கள் வசதிக்காக அமைக்க வேண்டிய, வாக்கு சாவடிகள் குறித்து, மாவட்ட தேர்தல் அலுவலர்களுக்கு, மாநில தேர்தல் கமிஷன் பல உத்தரவுகளை பிறப்பித்துள்ளது.
* மாநகராட்சி, நகராட்சி, ஊராட்சி ஒன்றிய பள்ளி கட்டடங்கள், அரசு பள்ளி கட்டடங்கள், அரசு உதவிபெறும் மற்றும் பிற பள்ளி கட்ட டங்கள், அரசு கட்டடங்களில், வாக்குச் சாவடி களை அமைக்க வேண்டும். சட்டசபை தேர்த லில், வாக்குச்சாவடியாக பயன்படுத்திய கட்டடங் களுக்கு முன்னுரிமை தர வேண்டும்
* மிக பழமையான கட்டடங்களாக அல்லாமல், இயற்கை சேதங்களை தாங்க கூடியதாகவும், பாதுகாப்பாக தேர்தலை நடத்த ஏதுவானதாக வும் இருக்க வேண்டும்
* காவல் நிலையம், ஊராட்சி அலுவலகம், விருந்தி னர் விடுதி, வழிபாட்டு தலங்கள், சத்துணவுக்கூடம், மருந்தகம் மற்றும் சத்திரங்கள் போன்ற இடங் களில் வாக்குச்சாவடிகள் அமைக்கக்கூடாது
* கிராமப்புறங்களில், 1,000 வாக்காளர்களுக்கு ஒரு வாக்குச்சாவடி; நகர்ப்புறங்களில், 1,200 வாக்காளர் களுக்கு ஒரு வாக்குச்சாவடி; மாநகராட்சிகளில், 1,400 வாக்காளர்களுக்கு ஒரு வாக்குச்சாவடியும் அமைக்க வேண்டும்
* அக்., மாதம் மழைக்காலம் என்பதால், வாக்குப் பதிவு மையத்தின் கூரைகள், ஒழுகாமல் பழுது நீக்க வேண்டும். மின்கசிவு ஏற்படாத வகையிலும், மழைநீர் தேங்கி அடைப்பு ஏற்படாத வகையிலும் பராமரிக்க வேண்டும்
* மாற்றுத்திறனாளிகள் மற்றும் முதியோர் வாக்களிக்க ஏதுவாக, வாக்குப்பதிவு மையங்களில் சரிவுப்பாதைகள் அமைத்து, வசதிகள் ஏற்படுத்த வேண்டும். இவ்வாறு பல உத்தரவுகள் பிறப்பிக்கப் பட்டு உள்ளன.
பெண்களுக்கான வார்டு ஒரு வாரம் 'கெடு':
-தமிழகத்தில், 12 மாநகராட்சிகள், 124 நகராட்சிகள், 528 பேரூராட்சிகள், 12,524 ஊராட்சிகள் உள்ளன. இவற்றில், மேயர்,
துணை மேயர், தலைவர், துணைத் தலைவர், கவுன்சிலர், வார்டு உறுப்பினர் உள்ளிட்ட, 1.50 லட்சம் பதவிகள் உள்ளன. இந்த உள்ளாட்சி பதவிகளில், பெண்களுக்கு, 50 சதவீதம் ஒதுக்கீடு வழங்கி, அரசு அறிவித்துள்ளது. இதையடுத்து, பெண்களுக்கான வார்டுகள் பிரிக்கும் பணி நடந்து வருகிறது. ஒரு மாதமாக நடக்கும் இப்பணிகள், இன்னும் நிறைவு பெறவில்லை.
தேர்தல் அறிவிப்புக்கு கால அவகாசம் குறை வாக உள்ள நிலையில், இதனால், மாநில தேர்தல் கமிஷனுக்கு நெருக்கடிஏற்பட்டுள்ளது.
எனவே, பெண்களுக்கான வார்டுகள் பிரிக்கும் பணியை, ஒரு வாரத்திற்குள் முடிக்க வேண்டும் என, தேர்தல் அதிகாரிகளுக்கு, மாநில தேர்தல் கமிஷன் உத்தரவு பிறப்பித் துள்ளது.
பள்ளிக்கல்வித் துறைக்கு 230 கோடி
பள்ளிக் கல்வித் துறைக்கென ரூ.230 கோடி மதிப்பிலான புதிய திட்டங்களை முதல்வர் ஜெயலலிதா அறிவித்தார்.
இதன்படி, மாணவர்களுக்கு வரைபட பயிற்சித் தாள், கணித-அறிவியல் உபகரணப் பெட்டிகள், பொது அறிவுப் புத்தகங்கள் ஆகியன அளிக்கப்படும் எனவும் அவர் தெரிவித்தார்.
சட்டப் பேரவையில் பள்ளிக் கல்வித் துறை தொடர்பாக, பேரவை விதி 110-ன் கீழ் முதல்வர் ஜெயலலிதா செவ்வாய்க்கிழமை படித்தளித்த அறிக்கை:-
சென்னை, காஞ்சிபுரம், திருவள்ளூர், விழுப்புரம், வேலூர், கடலூர், நாகப்பட்டினம், தஞ்சாவூர், தூத்துக்குடி, கிருஷ்ணகிரி ஆகிய 10 மாவட்டங்களிலுள்ள பள்ளிகளில் எளிமையாகப் பாடங்கள் பயிற்றுவிக்க வசதியாக செயல்வழிக் கற்றல் அட்டைகள் அளிக்கப்படும்.
அரசு-அரசு உதவி பெறும் பள்ளிகளில் 3 முதல் 5-ஆம் வகுப்பு வரையான மாணவர்களுக்கு சமூக அறிவியல் பாடத்துக்கான வரைபட பயிற்சித் தாள் அளிக்கப்படும். இதன்மூலம், வாழும் இடம், திசைகள், சுற்றுப்புறம், ஆறுகள், மலைகள் அட்ச ரேகை, தீர்க்க ரேகை ஆகியவற்றை அறிய முடியும்.
கணித-அறிவியல் பெட்டிகள்: அரசு-அரசு உதவி பெறும் பள்ளிகளில் 1, 2, 6, 7, 8-ஆம் வகுப்பு மாணவர்களுக்கும் கணித உபகரணப் பெட்டிகளும், 6, 7, 8-ஆம் வகுப்பு மாணவர்களுக்கு அறிவியல் உபகரணப் பெட்டிகளும், 3, 4, 5-ஆம் வகுப்பு மாணவர்களுக்கு வாசிப்புத் திறனை மேம்படுத்த புத்தகங்களும் அளிக்கப்படும்.
அரசுப் பள்ளிகளில் படிக்கும் 6 முதல் 8 ஆம் வகுப்பு வரையிலான மாணவர்களுக்கு 3 கணினிகள் கொண்ட கற்றல் மையங்கள் உருவாக்கப்படும். அறிவியல்-கணித பாடங்களில் உள்ள கடின பகுதிகளை எளிமையாகப் புரிந்து கொள்ளும் வகையில், புதிய தொழில்நுட்பங்களான தொடு திரை, காணொலிக் காட்சி, பல்லூடகம் (மல்டி மீடியா) போன்றவைகளால் கற்றல்-கற்பித்தல் முறைகள் மேம்படுத்தப்படும். பின்னணி குரலுடன் கூடிய அசைவூட்டும் காணொலி தொகுப்புகளும் அளிக்கப்படும். அவை 6 முதல் 8 ஆம் வகுப்பு வரையிலான மாணவர்களுக்கு கொடுக்கப்படும்.
வருகைப் பதிவு: மாணவர்-ஆசிரியர்கள் வருகைப் பதிவேடு முறை இனி பயோ-மெட்ரிக் அடிப்படையில் செயல்படுத்தப்படும். மாணவர்கள் புதிய முறையில் கல்வி கற்பதற்கு வசதியாக, வகுப்பறைகளில் உள்ள சுவர்களில் பாடம் தொடர்புடைய வண்ணச் சுவர் சித்திரங்கள் வரையப்படும்.
தமிழக மாணவர்களுக்கு ஒரே வகையான தரமான கற்றல்-கற்பித்தலைக் கொண்டு சேர்க்க மெய்நிகர் வகுப்பறைகள் (VIRTUAL CLASS ROOMS) ஏற்படுத்தப்படும். முதல்கட்டமாக 770 அரசுப் பள்ளிகளிலும், 11 மாவட்ட ஆசிரியர் கல்வி பயிற்சி நிறுவனங்களிலும் உருவாக்கப்படும்.
மேலும் 11 மைய ஆசிரியர் கல்வி பயிற்சி நிறுவனங்களில் இருந்து நடத்தப்படும் வகுப்பறை செயல்பாடுகள், கிராமப்புறப் பகுதிகளிலுள்ள அனைத்து மாணவர்களும் காண வழி செய்யப்படும். இந்த திட்டத்தைச் செயல்படுத்த கோவை, பெரம்பலூர், தருமபுரி மாவட்ட பயிற்சி நிறுவனங்களில் உள்கட்டமைப்பு வசதிகள் ஏற்படுத்தப்படும். பள்ளிக் கல்வித் துறைக்கு மட்டும் 11 அறிவிப்புகளின் மூலம் ரூ.230.74 கோடி மதிப்பிலான திட்டங்கள் செயல்படுத்தப்படும் என்றார்.
நல்லாசிரியர் விருதுக்கு ரூ.10 ஆயிரம் நல்லாசிரியர் விருதுக்கான ரொக்கப் பரிசு ரூ.10 ஆயிரமாக உயர்த்தப்படும் என்று முதல்வர் ஜெயலலிதா அறிவித்தார்.
இதுதொடர்பாக அவர் மேலும் கூறியதாவது:-
சிறப்பாகப் பணியாற்றும் ஆசிரியர்களை பாராட்டும் வகையில், நல்லாசிரியர் விருது வழங்கப்படுகிறது. இவர்களுக்கு ரூ.5 ஆயிரம் ரொக்கப் பரிசுடன், பதக்கம், சான்றிதழ் அளிக்கப்படுகிறது. ஆசிரியர்களை மேலும் ஊக்கப்படுத்தும் வகையில், இனி ரொக்கப் பரிசு ரூ.10 ஆயிரமாக உயர்த்தப்படும்.
மாணவர்களுக்கு மழைக்கோட்டு, பூட்ஸ்...: மலைப் பிரதேசங்களில் வாழும் மாணவர்கள் மழைக் காலங்களில் பாதிப்பின்றி பள்ளிக்குச் சென்று வர வசதியாக மழைக்கோட்டு, பூட்ஸ், காலுறைகள் வழங்கப்படும். ஒன்று முதல் 8 ஆம் வகுப்பு வரையிலான அரசு-அரசு உதவி பெறும் மாணவ-மாணவியருக்கு அவை அளிக்கப்படும் என்றார்.