ஒன்பதாம் வகுப்புத் தேர்வில் தேர்ச்சி பெறாத மாணவர்களுக்கு கடந்த ஆண்டுகளைப் போன்றே நிகழாண்டிலும் உடனடித் தேர்வு நடைபெறவுள்ளது. இந்தத் தேர்வு ஜூன் 3-ஆம் தேதி முதல் 10-ஆம் தேதி வரை நடத்தப்படவுள்ளது. இதுகுறித்து பள்ளிக்கல்வித் துறை அனுப்பியுள்ள சுற்றறிக்கையில் கூறப்பட்டுள்ளதாவது: அரசு, அரசு உதவி பெறும் பள்ளிகள், ஆதிதிராவிடர், சமூக நலத்துறை, மெட்ரிகுலேஷன், ஆங்கிலோ இந்தியன் பள்ளிகளில் படிக்கும் 6 முதல் 9-ஆம் வகுப்பு வரையிலான மாணவர்களுக்குத் தொடர் மற்றும் முழுமையான மதிப்பீட்டு முறையின்படி ஒருங்கிணைந்த பதிவேட்டில் மூன்று பருவத்தேர்வுக்குரிய மதிப்பெண்களையும், கிரேடுகளையும் பதிவு செய்ய வேண்டும்.
மாணவர்களின் இடைநிற்றலைத் தவிர்ப்பதற்காகவும், 2018-ஆம் ஆண்டு தேர்ச்சி விழுக்காடு குறையாமல் இருக்கும் வகையிலும் 9-ஆம் வகுப்புக்கான தேர்ச்சி விதிகள் ஆசிரியர் குழுவின் ஒப்புதலுடன் முடிவு செய்யப்பட்டு அளிக்கப்பட வேண்டும். விதிகளைத் தளர்வு செய்து தேர்ச்சி அளிக்கப்பட்டால் அதற்கு முதன்மைக் கல்வி அலுவலரின் அனுமதி பெற வேண்டும். தேர்வு முடிவுகளை மாவட்டக் கல்வி அலுவலரின் ஒப்புதல் பெற்ற பின்னரே வெளியிட வேண்டும். பள்ளியின் தேர்வு முடிவின் நகலை மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலருக்கு அளிக்க வேண்டும்.
இவர்களுக்கான தேர்வு முடிவுகளை மே 2-ஆம் தேதி வெளியிட வேண்டும். தேர்வு முடிவுகள் வெளியிட்ட பின், 9-ஆம் வகுப்பு தேர்வில் தேர்ச்சி பெறாத மாணவர்களின் பட்டியலை உடனடியாக மாவட்டக் கல்வி அலுவலருக்கு அனுப்ப வேண்டும். மேலும், வினாத்தாள் அமைப்பாளருக்கும் பட்டியலை அனுப்பி வைக்க வேண்டும் என பள்ளிக்கல்வித் துறை தெரிவித்துள்ளது.