இலவச SMS களை உடனுக்குடன் பெற ON tnptfmani என்று type செய்து 9870807070 என்ற எண்ணிற்கு அனுப்பி இலவச குறுந்தகவல்களை(SMS) பெறுங்கள். DND (Do NOT Disturb) சர்வீஸ்ல் உள்ள எண்கள் அதனை(DND) நீக்கிய பிறகே இச்சேவையை பெறமுடியும். plz call 1909

Thursday, January 03, 2019

பிளஸ் 1, பிளஸ் 2 பொது தேர்வு புதிய வினாத்தாள் முறை அறிவிப்பு


பிளஸ் 1, பிளஸ் 2 பொது தேர்வுக்கான, புதிய வினாத்தாள் முறையை, அரசு தேர்வு துறை அறிவித்துள்ளது.பிளஸ் 1 பொது தேர்வு, இந்த ஆண்டு முதல் முறையாக, புதிய பாடத்திட்டத்தில் நடத்தப்படுகிறது. அதேபோல், பிளஸ் 2வுக்கும் புதிய வினாத்தாள் முறையில் தேர்வு நடத்தப்படுகிறது.

சுற்றறிக்கை


இது குறித்து, தேர்வுத் துறை இயக்குனர் வசுந்தராதேவி, பள்ளிகளுக்கு அனுப்பியுள்ள சுற்றறிக்கை:தமிழ், ஆங்கிலம் மற்றும் சிறுபான்மை மொழி பாடங்களுக்கு, முன்பிருந்த இரண்டு தாள்களுக்கு பதிலாக, ஒரு தாளுக்கு மட்டுமே தேர்வு நடக்கும். வினாத்தாள், 90 மதிப்பெண்ணுக்கு அமைக்கப்படும். செய்முறை தேர்வு அல்லாத, 'தியரி' பாடங்கள் மற்றும் தொழிற்கல்வி, 'தியரி' பாடங்களுக்கும், 90 மதிப்பெண்ணுக்கு வினாத்தாள் அமைக்கப்படும்.

செய்முறை தேர்வுள்ள பாடங்களுக்கு, 70 மதிப்பெண்ணுக்கும், உயிரியல் தேர்வில், தாவரவியல் மற்றும் விலங்கியலுக்கு, தலா, 35 மதிப்பெண் வீதம், 70 மதிப்பெண்ணுக்கும் தேர்வு நடக்கும். மொழி பாடம்: ஒரு மதிப்பெண் வினாக்கள், 14; இரண்டு மதிப்பெண், 12; நான்கு மதிப்பெண், ஏழு; ஆறு மதிப்பெண், மூன்று வினாக்களுக்கு, மாணவர்கள் பதில் அளிக்க வேண்டும்.

ஆங்கிலம்: ஒரு மதிப்பெண், 20; இரண்டு, மூன்று மற்றும் ஐந்து மதிப்பெண்ணில் தலா, ஏழு என, 41 கேள்விகளுக்கு, 90 மதிப்பெண்ணுக்கு பதில் அளிக்க வேண்டும்.சிறுபான்மை மொழி: ஒரு மதிப்பெண், 14 கேள்விகள்; இரண்டு மதிப்பெண், 12; நான்கு மதிப்பெண், ஏழு; ஆறு மதிப்பெண், நான்கு கேள்விகள் என, மொத்தம், 37 கேள்விகளுக்கு, மாணவர்கள் பதில் அளிக்க வேண்டும்.

செய்முறை பாடங்கள்: ஒரு மதிப்பெண்ணில், 15; இரண்டு, மூன்று மதிப்பெண்ணில், தலா ஆறு; ஐந்து மதிப்பெண்ணில், ஐந்து என, 32 கேள்விகளுக்கு, மொத்தம், 70 மதிப்பெண்ணுக்கு பதில் அளிக்க வேண்டும்.உயிரியல் பாடத்தில், தாவரவியல் மற்றும் விலங்கியலுக்கு தனித்தனியாக, 35 மதிப்பெண்ணுக்கு வினாத்தாள் இருக்கும்.

ஒவ்வொரு பாடத்திலும், ஒரு மதிப்பெண், எட்டு; இரண்டு மதிப்பெண், நான்கு; மூன்று மதிப்பெண், மூன்று; ஐந்து மதிப்பெண், இரண்டு என, 35 மதிப்பெண்ணுக்கு, 17 கேள்வி களுக்கு பதில் அளிக்க வேண்டும்.செய்முறை தேர்வில்லாத பாடங்கள்: ஒரு மதிப்பெண்ணில், 20; இரண்டு, மூன்று மற்றும் ஐந்து மதிப்பெண்ணில், தலா ஏழு கேள்விகள் என, மொத்தம், 41 கேள்விகளுக்கு பதில் அளிக்க வேண்டும்.

தொழிற்கல்வி, 'தியரி' தேர்வில், ஒரு மதிப்பெண், 15; மூன்று மதிப்பெண், 10; ஐந்து மதிப்பெண், ஐந்து; 10 மதிப்பெண், இரண்டு என, 32 கேள்விகளுக்கு விடை அளிக்க வேண்டும். இந்த வினாத் தாள் அமைப்பு முறையை, மாணவர்களுக்கு பள்ளிகள் தெளிவாக அறிவிக்க வேண்டும். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

4-1-19 morning prayer

பள்ளி காலை வழிபாடு செயல்பாடுகள்:

திருக்குறள் : 112

செப்பம் உடையவன் ஆக்கஞ் சிதைவின்றி
எச்சத்திற் கேமாப்பு உடைத்து.

உரை:
நடுவுநிலைமை உடையவனின் செல்வவளம் அழிவில்லாமல் அவனுடைய வழியில் உள்ளார்க்கும் உறுதியான நன்மை தருவதாகும்.

பழமொழி:

Familiarity breeds contempt

பழக பழக பாலும் புளிக்கும்

பொன்மொழி:

நம்முடன் வாழ்வோரைப் புரிந்து கொள்வதற்கு நம்மை நாமே முதற்கண் புரிந்து
கொள்வது அவசியம்.
             -அன்னை தெரசா.

இரண்டொழுக்க பண்பாடு :

1.நான் என்னுடைய வாழ்நாளில் யாருடைய உடலுக்கும் மனதிற்கும் துன்பம் தரமாட்டேன் .

2.துன்பப்படுவோர்க்கு என்னால் முடிந்த உதவிகளை செய்வேன் .

பொது அறிவு :

1) கணிப்பொறிக்கான மென்பொருளை எழுதியவர்?

அடா லவ்லேஸ்

2)தாவரங்களுக்கும் உயிர் உண்டு என்ற உண்மையை உலகுக்கு உணர்த்தியவர்?

ஜெகதீஷ் சந்திரபோஸ்

நீதிக்கதை :

பறக்கும் போட்டி

அழகர் மலை காட்டுப் பகுதியில் புறாக்கள் கூட்டமாக வசித்துவந்தன. அதில் ஜிக், ஜங் என்ற இரண்டு புறாக்கள் நண்பர்களாக இருந்தன. எப்போதும் சந்தோஷமாகச் சுற்றித் திரிந்தன. இரண்டும் அங்குள்ள ‘கூக்கு’ பள்ளியில் படித்துவந்தன.

அந்தப் பள்ளியில் வேடன் வந்தால் எப்படித் தப்பிப்பது, காட்டு விலங்குகளுடன் எப்படிப் பழகுவது, காட்டை எப்படிப் பரமாரிப்பது, எந்தப் பருவத்தில் எந்தப் பக்கம் உணவு கிடைக்கும் போன்ற பாடங்கள் நடத்தப்பட்டன.

வேடனிடம் தப்பிய புறாக்கள்’, ‘எறும்பும் புறாவும்’ போன்ற கதைகள் அவற்றுக்குப் பாடங்களாக இருந்தன. புறாக்கள் பள்ளியில் ஆண்டுக்கு ஒரு முறை பறக்கும் போட்டி நடத்தப்படும். அந்தப் போட்டியில் வெற்றி பெறும் புறாவே, அடுத்த வருடம் பள்ளியின் தலைவராக இருக்க முடியும்.

போட்டியில் கலந்துகொள்ள முடிவெடுத்தது ஜிக்.

“இது என்ன சாதாரணப் போட்டின்னு நினைச்சிட்டியா ஜிக்? பறக்கும் போட்டி. நாங்க ஆறு மாசமா பறந்து பயிற்சி செஞ்சிட்டிருக்கோம். நீ திடீர்னு கலந்துகிட்டு ஜெயிச்சிட முடியுமா?” என்று சிரித்தது மினு.

உடனே மற்ற புறாக்களும் சிரிக்க ஆரம்பித்தன. இதைப் பார்த்து ஜிக்கின் முகம் சுருங்கியது.

“ஏய் ஜிக், எதுக்கு இப்படி வருத்தப்படறே? பறப்பது ஒண்ணும் நமக்குப் புதுசு இல்லை. நீ கலந்துக்கறே. போட்டியில் வென்று தலைவராகா விட்டாலும்கூடப் பரவாயில்லை. கலந்துகொள்ள வேண்டும் என்ற உன் எண்ணம்தான் முக்கியமானது. நானும் உன்னுடன் சேர்ந்து பயிற்சிக்கு வரேன். நீ கலந்துக்கறே” என்றது ஜங்.

“பறக்கும் பயிற்சி மட்டுமில்லை, உணவுக் கட்டுப்பாடும் ரொம்ப முக்கியம். நாங்க ஆசிரியர் சொல்வதைச் சாப்பிட்டோம். நீங்க ரெண்டு பேரும் கண்டதையும் தின்று, உடல் பெருத்துப் போயிருக்கீங்க. இதில் போட்டிக்குப் பறப்பதெல்லாம் முடியாத காரியம்” என்று மீண்டும் சிரித்தது மினு.

“நீ எதையும் கண்டுகொள்ளாதே. இன்றே பயிற்சியை ஆரம்பிப்போம்” என்று ஜிக்கை அழைத்துச் சென்றது ஜங்.

பயிற்சியின்போது திடீரென்று கீழே விழுந்தது ஜிக். வேடனின் அம்பு ஒன்று ஜிக்கின் காலைப் பதம் பார்த்துவிட்டது. உடனே அதை மறைவான இடத்தில் படுக்க வைத்து, பச்சிலையைப் பறித்து காயத்துக்கு மருந்திட்டது ஜங்.

இரண்டு நாட்கள் ஓய்வில் இருந்தது ஜிக். அதனால் பயிற்சி செய்ய முடியவில்லை. மூன்றாவது நாள் பயிற்சிக்கு வந்துவிட்டது. சற்றுத் தூரம்கூடப் பறக்க முடியவில்லை.

“நல்லா இருக்கும்போதே உன்னால் முடியாதுன்னு சொன்னேன். இப்ப காயம் வேற. பேசாமல் ஓய்வெடு. அடுத்த வருஷம் போட்டியில் கலந்துக்க” என்றது மினு.

ஜிக் அதைக் கண்டுகொள்ளவில்லை.

அனைவரும் தீவிரமாகப் பயிற்சியில் ஈடுபட்டனர். போட்டி நடைபெற இன்னும் நான்கே நாட்கள் இருந்தன. அன்று மாலை பள்ளி முடிந்து வீடு திரும்பிக் கொண்டிருந்தன. காற்று பலமாக வீசியது. திடீரென்று இடி மின்னலுடன் மழை பெய்யத் தொடங்கியது. புறாக்கள் மரங்களில் பதுங்கிக்கொண்டன. ஜிக்கும் ஜங்கும் மழையைப் பார்த்ததும் குஷியாகிவிட்டன. இரண்டும் மழையில் நனைந்தப்படி பறந்தன.

சிறிது தூரம் சென்றதும் போட்டி நினைவுக்கு வரவே, “ஜிக், மழையில் பறக்க வேண்டாம். ஏதாவது ஆகிவிடப் போகிறது” என்று குகையில் ஒதுங்கியது ஜங். ஆனால், ஜிக் வெகுநேரம் மழையில் நனைந்துவிட்டு வீடு சென்றது. மறுநாள் பள்ளிக்கு வரவில்லை. பள்ளி முடிந்ததும் , மாலை ஜிக்கைச் சந்தித்தது ஜங். மழையில் நனைந்ததால் காய்சலில் படுத்திருந்தது ஜிக். இரண்டு நாட்களுக்குப் பிறகு காய்ச்சல் சரியானது.

அன்று மாலை ஜிக்கைச் சந்தித்த ஜங், “நாளை மறுநாள் போட்டி. உனக்குக் களைப்பாக இருந்தால் போட்டியிலிருந்து விலகிவிடு. கலந்துகொள்ள நினைத்தால் நான் உனக்குப் பக்கபலமாக இருப்பேன். முடிவு உன் கையில்” என்றது.

“என்னால் முடியும்னு தோணுது. நான் போட்டியில் பங்கேற்பேன்” என்றது ஜிக்.

“சரி, வா. கொஞ்ச தூரம் பறக்கலாம்” என்று வெளியில் அழைத்துச் சென்றது ஜங்.

கொஞ்சம் தூரம்கூடப் பறக்க முடியவில்லை. ஜிக்கின் உடல் வலித்தது. அப்படியே ஒரு மரக்கிளையில் அமர்ந்துவிட்டது.

“நண்பா, உன்னால் முடியவில்லை என்றால் வேறு எவராலும் முடியாது. இந்த முறை நீதான் வெற்றி பெறப் போகிறாய். இன்னும் கொஞ்சம் பறப்போம்” என்று ஊக்கப்படுத்தியது ஜங்.

நம்பிக்கையோடு பறந்தது ஜிக். மறுநாள் பள்ளிக்குச் சென்றது. சோர்வான உடலைப் பார்த்து தோற்றுவிடும் என்று நினைத்தன சக புறாக்கள். பயிற்சிப் போட்டியில் மூன்றாம் இடம் வந்தது ஜிக்.

“காய்சலில் விழுந்த உன்னால் மூன்றாம் இடம் வர முடிகிறது என்றால், நாளை நடக்கும் போட்டியில் முழு மனதுடன் முயன்றால் நிச்சயம் வெற்றி பெறுவாய். இப்போதே உன்னை வாழ்த்துகிறேன்” என்றது ஜங்.

ஜிக் மனதில் உற்சாகம் பொங்கியது. மறுநாள் போட்டி தொடங்கியது. வெற்றி பெறும் நம்பிக்கையில் பறக்கத் தொடங்கியது. சில நிமிடங்களில் ஜிக்கின் வேகம் குறைந்தது. மற்ற புறாக்கள் வேகமாக அதை முந்திச் சென்றன. அருகே பறந்துவந்த ஜங், உற்சாகம் ஊட்டி வேகத்தை அதிகப்படுத்தியது.

அரை மணி நேரத்துக்குப் பிறகு விழா மேடைக்கு முதல் புறாவாக வந்துசேர்ந்தது ஜிக். அனைத்துப் புறாக்களும் ஆச்சரியத்தில் திகைத்தன. ஜிக்தான் அடுத்த பள்ளி தலைவர் என்று அறிவிக்கப்பட்டது.

மினுவும் சக நண்பர்களும் ஜிக்கிடம் மன்னிப்புக் கேட்டன.

இன்றைய செய்தி துளிகள் :

1) பொங்கல் பரிசு வழங்க ரூ.258 கோடி ஒதுக்கி தமிழக அரசு அரசாணை வெளியிட்டுள்ளது.

2) விரைவில் தமிழக அரசின் புதிய கல்வி தொலைக்காட்சி சேனல்... இனி வீட்டிலேயே நீட் பயிற்சி!

3) நாடு முழுவதும் ஒரே பாட திட்டம்: அரசு பரிசீலிக்க ஐகோர்ட் கிளை உத்தரவு

4) திருவாரூர் இடைத்தேர்தல்: இரவு 10 மணிக்கு பிறகு கூட்டம், ஊர்வலம் நடத்த தடை : வாக்காளர்களுக்கு பணம், அன்பளிப்பு தரக்கூடாது

5) ஆஸ்திரேலியாவுக்கு எதிரான 4-வது டெஸ்ட் போட்டி - முதல் நாளில் இந்தியா 303/4; மீண்டும் சதமடித்தார் புஜாரா!

Wednesday, January 02, 2019

3-1-19 Morning prayer


பள்ளி காலை வழிபாடு செயல்பாடுகள்:

திருக்குறள் : 111

தகுதி எனவொன்று நன்றே பகுதியால்
பாற்பட்டு ஒழுகப் பெறின்.

உரை:
அந்தந்தப் பகுதிதோறும் முறையோடு பொருந்தி ஒழுகப்பெற்றால், நடுவுநிலைமை என்று கூறப்படும் அறம் நன்மையாகும்.

பழமொழி:

Faith is the force of life

நம்பிக்கையே வாழ்க்கையின் உந்து சக்தி

பொன்மொழி:

உண்மையான செல்வாக்கை நாம் தேடிக் கொள்ளக் கூடாது. அது நம்மைத் தொடர்ந்து
வரவேண்டும்.

-மான்ஸ்பீல்டு.

இரண்டொழுக்க பண்பாடு :

1.நான் என்னுடைய வாழ்நாளில் யாருடைய உடலுக்கும் மனதிற்கும் துன்பம் தரமாட்டேன் .

2.துன்பப்படுவோர்க்கு என்னால் முடிந்த உதவிகளை செய்வேன் .

பொது அறிவு :

1) அணுகுண்டை விட ஆபத்தானது எது?

பிளாஸ்டிக்

2) இந்திய வர்த்தக கூட்டமைப்பின் உலகளாவிய மாநாட்டின் பெயர்?

அசோசெம்

நீதிக்கதை :

நட்புக்கு ஏங்கிய புலி!

மேற்குத் தொடர்ச்சி மலையின் தென் பகுதியில் உள்ள ஓர் அடர்த்தியான காடு. அங்கே பெரிய மரங்களும் குகைகளும் பசுமையான புல்வெளிகளும் நிறைந்து இருந்தன.

பறவைகள் அங்கும் இங்கும் பறந்துகொண்டு கத்தும் சத்தம், விலங்குகள் குதித்தும் ஓடும் ஓசை, அருவியில் தண்ணீர் விழும் சத்தம் எல்லாம் சேர்ந்து ரம்மியமானா சூழலை உருவாக்கியிருந்தது.

மலை உச்சியில் ஒரு குகை. அந்தக் குகையில் புலி ஒன்று தனியே வசித்துவந்தது. அதுக்கு நண்பர்கள் என்று யாரும் கிடையாது. அதைப் பார்த்தாலே காட்டில் உள்ள விலங்குகள் எல்லாம் சிதறி ஓடிவிடும். அதனால் யாரிடமும் சிரித்துப் பேசச்கூட முடியவில்லை. இதை நினைத்து புலி மிகவும் வருந்தியது. தனக்கு யாரும் நண்பராக வர மாட்டார்களா என்று ஏங்கியது.

அன்று வேட்டையாடச் செல்லும் வழியில், வேடன்  வைத்த பொறியில் மான் ஒன்று சிக்கியிருப்பதைப் பார்த்தது புலி.  உடனே அதைக் காப்பாற்ற முடிவெடுத்தது. புலி அருகில் வருவதைக் கண்ட மான், பயத்தில் நடுங்கியது. அருகில் சென்ற புலி, பொறியை ஒரே அடியில் அடித்து உடைத்தது. மான் வெளியே வந்தது. நிம்மதியாகச் சென்றுவிட்டது புலி.

மான் தன் தவறான எண்ணத்தை நினைத்து வருந்தியது. புலியிடம் மன்னிப்புக் கேட்க வேண்டும் என்று முடிவு செய்தது. மறுநாள் புலியின் குகைக்குச் சென்றது.

மானைக் கண்டதும் புலிக்கு மகிழ்ச்சியாக இருந்தது. அருகில் சென்றால் பயப்படும் என்பதால், உள்ளே அமர்ந்தபடியே வந்த காரணத்தைக் கேட்டது.

“நேற்று உன்னைத் தவறாக நினைத்துவிட்டேன். அதற்கு மன்னிப்பும் என்னைக் காப்பாற்றியதற்கு நன்றியும் சொல்ல வந்தேன்” என்றது மான்.

“நன்றி எல்லாம் எனக்கு வேண்டாம். என்னை நண்பனாக ஏற்றுக்கொண்டால் போதும்” என்றது புலி.

மானுக்குத் திக்கென்றது.

“உனக்கு நம்பிக்கை வரும்போது என்னை நண்பனாக ஏற்றுக்கொண்டால் போதும். நீ கிளம்பு” என்றது புலி.

“இல்லை, இப்போதே உன்னை நண்பனாக ஏற்றுக்கொள்கிறேன். நான் சாப்பிடப் போகிறேன். நீயும் வருகிறாயா?” என்று கேட்டது மான்.

புலியின் மகிழ்ச்சிக்கு அளவே இல்லை. உடனே மானுடன் கிளம்பியது. இதைப் பார்த்த சில விலங்குகள் ஆச்சரியமடைந்தன. சில விலங்குகள் மானை எச்சரித்தன. இன்னும் சில விலங்குகள் மானுக்கு மரியாதை அளித்தன.

நாட்கள் சென்றன. அன்று மான் காட்டில் தனியாக மேய்ந்துகொண்டிருந்தது. அந்தப் பக்கம் வந்த சிங்கம், நல்ல வேட்டை என்று நினைத்தது. மெதுவாக மானை நோக்கிச் சென்றது. அப்போது மானைத் தேடிக்கொண்டு வந்த புலி, சிங்கத்தைப் பார்த்துவிட்டது. மானைக் காப்பாற்றும் அவசரத்தில் பாய்ந்துவந்தது.

சத்தம் கேட்டுத் திரும்பிப் பார்த்த மான், புலிதான் தன்னைத் தாக்க வருகிறது என்று எண்ணியது. சட்டென்று தாவிக் குதித்து ஓடியது.

மானைத் தப்பிக்க விட்ட புலி மீது சிங்கத்துக்குக் கோபம் வந்தது. உடனே சண்டைக்கு வந்தது. புலியும் சிங்கமும் சண்டையிடுவதைப் பார்த்து மற்ற விலங்குகள் ஆச்சரியமடைந்தன.

“நண்பனுக்காகப் புலி எப்படிச் சண்டை போடுகிறது!” என்றது குரங்கு.

“நண்பன் என்றால் இப்படித்தான் இருக்க வேண்டும். இதை உணராத மான் பயந்து ஓடிவிட்டது” என்றது யானை.

நீண்ட நேரச் சண்டையில் சிங்கம் காயமடைந்து, களைப்புற்றது.

“என் நண்பன் என்று தெரிந்தும் இப்படி ஒரு காரியத்தைச் செய்ய நினைத்த உனக்கு, இனி இந்தக் காட்டில் இடமில்லை. இப்பொழுதே ஓடிவிடு” என்று கோபத்துடன் கூறியது புலி.

விட்டால் போதும் என்று சிங்கமும் ஓடிவிட்டது.

நடந்ததை அறியாத மான் தன் கூட்டத்தினரிடம் சென்று,  புலியைத் திட்டித் தீர்த்தது.

“நடந்தது என்ன என்பதை அங்கே இருந்து பார்த்திருந்தால் உனக்குத் தெரிந்திருக்கும். நட்புக்காகச் சிங்கத்திடம் சண்டையிட்டது. புலிக்கும் காயம் அதிகம். பாவம் குகையில் தனியாக வலியோடு போராடிக்கொண்டிருக்கும்” என்றது ஒரு புள்ளிமான்.

“ஐயோ… தவறாக நினைத்துவிட்டேனே. இதோ மூலிகையை எடுத்துக்கொண்டு, புலியைச் சந்திக்கிறேன்” என்று கிளம்பியது மான்.

புலி வலியில் துடித்துக் கொண்டிருந்தது. மருந்திட்ட மான், “என்னை மன்னித்துவிடு. வேகமாக நீ வருவதைப் பார்த்தவுடன், நீ என் நண்பன் என்பதை மறந்து ஓடிவிட்டேன். இனி இப்படி நடக்க மாட்டேன்” என்றது மான்.

“நான் உயிரினங்களைக் கொன்று திங்கும் இனத்தைச் சேர்ந்தவன்தான். அதற்காக நண்பனைக் கொல்வேனா? உன்னோடு நட்பு உருவான நாளில் இருந்து இன்றுவரை உன்னை மட்டுமில்லை, மான்கள் இனத்தையே நான் கொல்வதில்லை. நட்பு என்ற பெயரில் கேடு நினைக்க என்னால் முடியாது. என்னுடன் சண்டையிட்டு நீ சென்றாலும் கூட உன்னையோ, உன் இனத்தையோ நான் வேட்டையாட மாட்டேன். அதனால் என் மீது எப்போதும் உனக்குச் சந்தேகம் வேண்டாம்” என்றது புலி.

மானும் புலியும் மீண்டும் ஒன்றாகச் சுற்ற ஆரம்பித்தன.

இன்றைய செய்தி துளிகள் : 

1) பள்ளி மாணவர்கள் மனநிலையை உறுதி செய்ய குழுக்கள் அமைக்க நீதிமன்றம் பரிந்துரை

2) 2019-ம் புத்தாண்டு அன்று அதிகமான குழந்தைகள் பிறந்த நாடுகளின் பட்டியலில் இந்தியா முதலிடம்: UNICEF அறிக்கை

3) தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை நிறைவு பெற்றதாக சென்னை வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது

4) 8ம் தேதி வரை தமிழக சட்டப்பேரவைக் கூட்டத் தொடர்: அலுவல் ஆய்வுக் குழு முடிவு

5) ஆசிய கோப்பை கால்பந்து 2019: 5-ஆம் தேதி தொடக்கம்

Tuesday, January 01, 2019

Morning prayer 2-1-19

2-1-19

பள்ளி காலை வழிபாடு செயல்பாடுகள்:

திருக்குறள் : 110

எந்நன்றி கொன்றார்க்கும் உய்வுண்டாம் உய்வில்லை
செய்ந்நன்றி கொன்ற மகற்கு.

உரை:
எந்த அறத்தை அழித்தவர்க்கும் தப்பிப் பிழைக்க வழி உண்டாகும்; ஒருவர் செய்த உதவியை மறந்து அழித்தவனுக்கு உய்வு இல்லை.

பழமொழி:

Failures are stepping stones to success

தோல்வியே வெற்றிக்கு முதற்படி

பொன்மொழி:

தன்னை அதிக புத்திசாலியாக எண்ணுவதே மனிதனிடம் உள்ள மிகப் பெரிய
பலவீனம்.

-சிம்மன்ஸ்

இரண்டொழுக்க பண்பாடு :

1.நான் என்னுடைய வாழ்நாளில் யாருடைய உடலுக்கும் மனதிற்கும் துன்பம் தரமாட்டேன் .

2.துன்பப்படுவோர்க்கு என்னால் முடிந்த உதவிகளை செய்வேன் .

பொது அறிவு :

1) தஞ்சாவூர் பெரிய கோயிலைக் கட்டியவர்?
ராஜராஜ சோழன்

2) நேப்பியர் பூங்கா தமிழகத்தில் எங்குள்ளது?
சென்னை

நீதிக்கதை :

தங்க இடம் கிடைக்குமா?

மரகதபுரி எல்லையில் அடர்ந்த காடு. மரங்கொத்தி ஒன்று உயரமான மரத்தில் அமர்ந்து எச்சமிட்டுக்கொண்டிருந்தது. அந்த வழியே வந்த நரியின் தலையில் எச்சம் விழுந்துவிட்டது.

உடனே நரிக்குக் கோபம் தலைக் கேறியது. ”யார்டா அவன்? என் மேல எச்சம் கழித்தது?” என்று சத்தமாக ஊளையிட்டுக் காட்டையே அதிரவைத்தது.

மரங்கொத்திக்குப் பயம் வந்துவிட்டது. ”நரியே, தவறுதலாகப் பட்டுவிட்டது. மன்னித்துக்கொள்” என்று வருத்தத்துடன் கூறியது.

”மன்னிப்பெல்லாம் கிடக்கட்டும். நீ மரக்கிளையில் இருப்பதால்தானே எச்சத்தைக் கீழே கழிக்க வேண்டியிருக்கிறது? அது அந்த வழியே வருகிறவர்களின் தலை மீதும் விழுகிறது. அதனால் உனக்குப் பாதுகாப்பான, விசாலமான ஒரு இருப்பிடத்தைக் காட்டுகிறேன். அங்கே போய் சந்தோஷமாக நீ வசிக்கலாம்” என்று ஆசை காட்டியது நரி.

”அப்படியா? எத்தனை நாளைக்குத்தான் நானும் மழையிலும் குளிரிலும் நடுங்குவது? நீ சொல்லும் இடத்துக்கு நான் வரத் தயாராக இருக்கிறேன்” என்றது மரங்கொத்தி.

“சற்று நேரத்தில் திரும்பி வந்து உன்னை அழைத்துச் செல்கிறேன். இங்கேயே இரு” என்று சொல்லிவிட்டு, நரி ஓடிவிட்டது.

மரங்கொத்தியின் மகிழ்ச்சிக்கு அளவே இல்லை. புது இடத்துக்குச் செல்லத் தயாரானது. அப்போது காகம் அங்கே வந்தது. நடந்த சம்பவத்தைக் காகத்திடம் விளக்கியது மரங்கொத்தி.

“மரங்கொத்தியே, நரியிடம் எச்சரிக்கையாக இருக்க வேண்டும் இப்படித்தான் ஒரு நாள் நான் வடையை வாயில் வைத்திருக்கும்போது நீ அழகாக இருக்கிறாய், உன் குரலும்  இனிமையாக இருக்கிறது. ஒரு பாட்டுப் பாடு என்றது. நானும்  பாட்டுப் பாட, வடை கீழே விழ, அதைத் தூக்கிக்கொண்டு சென்றுவிட்டது. அதனால் நரியிடம் உஷாராக இரு” என்று சொல்லிவிட்டுச் சென்றது காகம்.

“இந்தப் பொல்லாத காகத்துக்கு எனக்கு ஒரு நல்ல இடம் கிடைப்பதில் விருப்பம் இல்லை போலிருக்கு.  இதை எல்லாம் கண்டுகொள்ளக் கூடாது” என்று தனக்குத் தானே சொல்லிக்கொண்டது மரங்கொத்தி.

அப்போது ஜோடி புறாக்கள் மரத்தில் வந்து அமர்ந்தன. ”மரங்கொத்தியே, எங்கேயோ கிளம்பற மாதிரி இருக்கே?” என்று கேட்டன.

“நரி, எனக்கு ஒரு புது இடம் காட்டுவதாகச் சொல்லியிருக்கு. அதான் காத்துக்கிட்டிருக்கேன்.”

”மரங்கொத்தியே, இந்தக் காட்டில் உள்ள எல்லா விலங்குகளும் நேரடியாகச் செயலில் இறங்கும். ஆனால் நரி மட்டும் தந்திரமாத்தான் ஒரு செயலைச் செய்யும். எங்கள் அனுபவத்தில் நரி மீது நல்ல அபிப்பிராயம் இல்லை. அதனால் யோசித்து முடிவெடு. நாங்கள் வருகிறோம்” என்று சொல்லிவிட்டுப் பறந்து சென்றன.

இந்தக் காட்டில் எல்லோருக்கும் ஏன் இவ்வளவு பொறாமை? இவங்களும் நல்லது செய்ய மாட்டாங்க. செய்கிறவர்களையும் தப்பு சொல்வாங்க. என்ன உலகமப்பா” என்று அலுத்துக்கொண்டது மரங்கொத்தி.

அப்போது அங்கு வந்த நரி, ”தயாரா, போகலாமா?” என்று கேட்டது.

மகிழ்ச்சியோடு கிளம்பியது மரங்கொத்தி. அரை மணி நேரப் பயணத்தில் ஓர் குகை அருகே வந்த நரி, ”இதுதான் அந்த வசதியான இருப்பிடம். உனக்கு எந்தத் தொந்தரவும் இருக்காது. உன்னுடைய எச்சத்தை மேலிருந்து கழித்தாலும் யாரும் கேட்க மாட்டார்கள்” என்று சொல்லி விட்டுச் சென்றுவிட்டது.

குகைக்குள் நுழைந்த மரங் கொத்திக்கு அதிர்ச்சி. எங்கும் இருள். ஓர் ஓரமாக ஒதுங்கிக்கொண்டது. குகை சற்று வெதுவெதுப்பாக இருந்தது. ’அட, நரி நமக்கு நல்ல இடத்தைத்தான் காண்பித்திருக்கிறது, நன்றி சொல்லணும்’ என்று  நினைத்துக்கொண்டது.

திடீரென்று ஏதோ சத்தம். மரங்கொத்திக்கு வயிறு கலங்கியது. சட்டென்று எச்சம் இட்டுவிட்டது. அவ்வளவுதான், “யாரது? எவ்வளவு தைரியம்?” என்ற குரல் கேட்டது.

’ஐயோ… எங்கு எச்சம் கழித்தா லும் பிரச்சினையாக இருக்கிறேதே’ என்று வருத்தத்துடன் கண்களை மூடிக்கொண்டது மரங்கொத்தி.

அதிகாலை பறவைகளின் சத்தம் கேட்டுக் கண் விழித்தது மரங்கொத்தி. அங்கே கண்ட காட்சியால் மரங்கொத்தியின் உடல் நடுங்கியது. சிங்கராஜா கர்ஜனையோடு நடை போட, அருகே அதன் குட்டிகளும் மனைவியும் அமர்ந்திருந்தன.

’ஐயோ, நரி என்னை ஏமாற்றிவிட்டது. காகமும் புறாக்களும் சொன்னதை நான் கண்டுகொள்ளவில்லை.  இப்போது வசமாக மாட்டிக்கொண்டேனே’ என்று வருத்தப்பட்டது மரங்கொத்தி.

சற்று நேரத்தில் சிங்கராஜாவின் குடும்பம் வெளியே சென்றது. ’எனக்கு எதுக்கு இவ்வளவு பெரிய குகை? மரத்தில் ஒரு கூடு போதும்’ என்று நினைத்துக்கொண்டு, வேகமாக வெளியே பறந்து சென்றது மரங்கொத்தி.

இன்றைய செய்தி துளிகள் : 

1) தேர்வு விடுமுறை முடிந்து அனைத்து பள்ளிகளும் இன்று திறப்பு.

2) 2019-ம் ஆண்டு புத்தாண்டு... நாடு முழுவதும் வெகு விமரிசையாக மக்கள் கொண்டாடியனர் 

3)தமிழகத்தில் பிளாஸ்டிக் தடை நேற்று முதல் அமல்: தடையை மீறினால் அபராதம் விதிக்கப்படும்: தமிழக அரசு எச்சரிக்கை

4)சிப் பொருத்தப்படாத டெபிட், கிரெடிட் கார்டுகள் நேற்று முதல் செல்லாது : அமலுக்கு வந்தது ரிசர்வ் வங்கி உத்தரவு

5) 2019-ஆம் ஆண்டுக்கான ஐசிசி டி20, ஒரு நாள் மகளிர் அணிகள் அறிவிக்கப்பட்டுள்ளன. டி20 அணிக்கு இந்தியாவின் ஹர்மன்ப்ரீத் கெளரும், ஒரு நாள் அணிக்கு நியூஸி.யின் சூஸி பேட்ஸ்சும் கேப்டனாக தேர்வு செய்யப்பட்டுள்ளனர்