இலவச SMS களை உடனுக்குடன் பெற ON tnptfmani என்று type செய்து 9870807070 என்ற எண்ணிற்கு அனுப்பி இலவச குறுந்தகவல்களை(SMS) பெறுங்கள். DND (Do NOT Disturb) சர்வீஸ்ல் உள்ள எண்கள் அதனை(DND) நீக்கிய பிறகே இச்சேவையை பெறமுடியும். plz call 1909

Monday, September 03, 2018

Morning prayer 4-9-18

பள்ளி காலை வழிபாடு செயல்பாடுகள்:
4-9-18

*திருக்குறள்:43*

தென்புலத்தார் தெய்வம் விருந்தொக்கல் தானென்றாங்கு
ஐம்புலத்தாறு ஓம்பல் தலை.

உரை:
தென்புலத்தார், தெய்வம் விருந்தினர், சுற்றத்தார், தான் என்ற ஐவகையிடத்தும் அறநெறி தவறாமல் போற்றுதல் சிறந்த கடமையாகும்.

பழமொழி :*

Be friendly but not familiar

அனைவருக்கும் நண்பனாக இரு. ஆனால் நெருங்கி பழகாதே

பொன்மொழி:*

மின்மினிப் பூச்சி எவ்வளவு ஒளியுடன் திகழ்ந்தாலும் அது தீ ஆகாது.
- சாணக்கியர்.

இரண்டொழுக்க பண்பாடு :*

1. நெகிழிப்பைகள் பயன்பாட்டினை என்னால் இயன்றவரை தவிர்த்திடுவேன்.

2.இயற்கை என்பது இறைவன் கொடுத்த வரம். அதை காப்பதே நம் கடமை.

*பொது அறிவு :*

1.கலைவாணர் என்.எஸ்.கிருஷ்ணன் எந்த மாவட்டத்தைச் சேர்ந்தவர்?

கன்னியாகுமரி

2.காந்திகிராமிய பல்கலைக் கழகத்தின் முதல் துணைவேந்தர் யார்?

டாக்டர்.ராமச்சந்திரன்

*நீதிக்கதை :*

எறும்பும் வெட்டுக்கிளியும்

(Ant and Grasshopper - Aesop Moral Story)

மதிய வெயில் நேரத்தில் வெட்டுக்கிளி ஒன்று இங்கும் அங்கும் குதித்து பாட்டுப்பாடி ஆடிக்கொண்டிருந்தது.

அப்போது எறும்பு ஒன்று அரிசி ஒன்றை எடுத்துக்கொண்டு அதே பாதையில் தன் வீட்டிற்க்கு சென்று கொண்டிருந்தது. அதைப் பார்த்த அந்த வெட்டுக்கிளி எறும்பிடம் “இப்போது என்ன அவசரம். சிறிது நேரம் என்னைப்போல நீயும் என்னுடன் விளையாடலாமே” என்றது.

அதற்கு எறும்பு “இன்னும் சில நாட்களில் வெயில் காலம் முடிந்து, மழைகாலம் தொடங்கபோகிறது. மழைக்காலத்தில் எவரும் வெளியே செல்லமுடியாது. அதனால் அந்த நேரத்திற்குத் தேவையான உணவை இப்போது இருந்தே நான் என் வீட்டில் சேகரித்து வைத்துக்கொள்கிறேன்” என்றது.

வெட்டுக்கிளி எறும்பிடம் “மழைக்காலம் வர இன்னும் நாட்கள் இருக்கிறது, நான் விளையாட செல்கிறேன்” என்று சிரித்துகொண்டே நடனமாடி சென்றது.

நாட்கள் கடந்தன. மழைக்காலமும் வந்தது.

தான் சேகரித்த உணவை உண்டு தன் வீட்டிலே எறும்பு இருந்தது. ஆனால் அந்த வெட்டுக்கிளிக்கோ உணவு ஏதும் கிடைக்காமல் உணவு தேடி மழையில் சுற்றித்திரிந்தது.

அப்போது வெட்டுக்கிளிக்கு “எறும்பு உணவு சேகரித்து வைத்து இருக்கும் அதனிடம் கேட்டுபார்க்கலாம்” என்ற எண்ணம் வந்தது.

வெட்டுக்கிளி எறும்பின் வீட்டிற்க்கு வந்து எறும்பிடம் “எனக்கு மிகவும் பசிக்கிறது. ஏதாவது உணவு கிடைக்குமா?” என்று கேட்டது.

தன்னிடமிருந்த சேகரித்த உணவில் இருந்து சிறிதளவை வெட்டுக்கிளையிடம் கொடுத்த எறும்பு. “அன்று என்னைப் பார்த்து சிரித்தாயே. இப்போது நான் சேகரித்த உணவு தான் இன்று நாம் இருவருக்கும் உதவியது. இனி நீ எப்போதும் சோம்பலில்லாமல். வெயில் காலத்தில் மழைக்காலத்திற்கு வேண்டியதை சேமித்துக்கொள்” என்றது.

கால நேரம் பாராது உழைத்தால் வாழ்வு பிரகாசிக்கும் என்று வெட்டுக்கிளி உணர்ந்தது.

நீதி: கடின உழைப்பு உடனடியாகப் பலன் தராவிட்டாலும் என்றாவது ஒருநாள் கண்டிப்பாக பலன் தரும்.

# செய்தி

1.தமிழக விவசாயிகளின் வருமானத்தை இரட்டிப்பாகும் வகையில் ஒருங்கிணைத்த பண்ணையத்தை மேம்படுத்த தமிழக அரசு திட்டம்

2.தமிழகத்தில் 77% முதுநிலை பொறியியல் படிப்பு இடங்கள் காலி: அண்ணா பல்கலைக்கழகம் அறிவிப்பு

3.கல்வி கடன் மானியம் பெற விண்ணப்பிற்க கடைசி நாள் - 28.09.2018 : மத்திய மனிதவள மேம்பாட்டுத் துறை

4.கேரளாவில் கடும் மழைப் பொழிவு குறித்து ஆகஸ்ட் மாதமே எச்சரிக்கை விடப்பட்டது: மத்திய புவி அறிவியல் துறை அதிகாரி

5.உலக சாம்பியன்ஷிப் கராத்தே போட்டி : மானாமதுரையை சேர்ந்த மாணவர்கள் தேர்வு

Sunday, September 02, 2018

வாசிக்க திணறும் மாணவர்களுக்கு இந்த மாதம் முதல் சிறப்பு பயிற்சி


தமிழ் மற்றும் ஆங்கிலத்தில் வாசிக்க திணறும், எட்டாம் வகுப்பு வரையிலான மாணவர்களுக்கு, இந்த மாதம் முதல் சிறப்பு பயிற்சி அளிக்கப்பட உள்ளது. மத்திய அரசின், மனித வள மேம்பாட்டு அமைச்சகம் சார்பில், தேசிய கற்றல் அடைவு தேர்வு, தொடக்க மற்றும் நடுநிலை பள்ளி மாணவர்களுக்கு, ஆண்டு தோறும் நடத்தப்படுகிறது.

இதில், அரசு பள்ளிகளில் படிக்கும், மூன்று, ஐந்து மற்றும் எட்டாம் வகுப்பு மாணவர்கள் தேர்வு செய்யப்படுகின்றனர். இந்த மாணவர்களுக்கு, கொள்குறி வகை என்ற, 'அப்ஜெக்டிவ்' முறையில், வினாத்தாள் வழங்கப்படுகிறது. இதில், மாணவர்களின் எழுத்து திறன், வாசித்தல், கவனித்தல் உள்ளிட்ட திறன்கள் சோதிக்கப்படு கின்றன. 2017 - 18ம் கல்வி ஆண்டில், கற்றல் அடைவு திறன் தேர்வில், பெரும்பாலான மாணவர்களுக்கு, வாசித்தல் பழக்கம் குறைவாக இருப்பது தெரியவந்தது.

எனவே, இந்த மாதம் முதல், தொடக்க மற்றும் நடுநிலை பள்ளி மாணவர்களுக்கு, சிறப்பு வாசிப்பு பயிற்சி அளிக்க, பள்ளி கல்வி இயக்குனர், ராமேஸ்வர முருகன் உத்தரவிட்டுள்ளார். அதேபோல, மாணவர்கள் மத்தியில் வாசிப்பு பழக்கத்தை ஊக்குவிக்கும் வகையில், போட்டிகள் நடத்தி, மாணவர்களை உற்சாகப்படுத்த வேண்டும் என, தொடக்க கல்வி இயக்குனர், கருப்பசாமி அறிவுறுத்தியுள்ளார். இந்த அறிவுறுத்தல்களின்படி, ஆறு முதல் எட்டாம் வகுப்பு வரை படிப்போரை, நன்றாக வாசிப்பவர்கள், நிறுத்தி வாசிப்பவர்கள், வாசிக்க திணறுபவர்கள் என, தரம் பிரித்து, இந்த மாதம் முதல் பயிற்சி அளிக்கப்பட உள்ளதாக, அதிகாரிகள் தெரிவித்தனர்.

MORNING PRAYER 3-9-18

பள்ளி காலை வழிபாடு செயல்பாடுகள்:

திருக்குறள்:42

துறந்தார்க்கும் துவ்வா தவர்க்கும் இறந்தார்க்கும்
இல்வாழ்வான் என்பான் துணை.

உரை:
துறந்தவர்கும் வறியவர்க்கும் தன்னிடத்தே இறந்தவர்க்கும் இல்லறம் மேற்கொண்டு வாழ்கிறவன் துணையாவான்.

பழமொழி :

Be first at a feast and the last to slander

பந்திக்கு முந்து, படைக்கு பிந்து

பொன்மொழி:

இல்லறத்தாருக்கும் துறவறத்தாருக்கும் பிரம்மச்சாரியம் அவசியம்.
ஏனெனில் உடல் மீதான ஆசை ஒழிந்தாலன்றி ஆத்மானந்தம் கிடையாது.

- ஸ்ரீசாரதாதேவி.

இரண்டொழுக்க பண்பாடு :

1. நெகிழிப்பைகள் பயன்பாட்டினை என்னால் இயன்றவரை தவிர்த்திடுவேன்.

2.இயற்கை என்பது இறைவன் கொடுத்த வரம். அதை காப்பதே நம் கடமை.

பொது அறிவு :

1.அக்டோபர் முதல் வாரத்தை அரசு ______________ வாரமாக கொண்டாடி வருகிறது?
வனவிலங்கு

2.சுதந்திர இந்தியாவின் முதல் நிதியமைச்சர் யார்?
ஆர்.கே. சண்முகம் செட்டியார்

நீதிக்கதை :

கருநாக பாம்பும், காகமும்
(The Crow and the Snake - Short Story)

#செய்திகள்

1)10,11 மற்றும் 12ம் வகுப்புகளுக்கு காலாண்டுத் தேர்வு அட்டவணை வெளியீடு

2)வெப்பச்சலனம்: தமிழகம், புதுவையில் ஒரு சில இடங்களில் மழைக்கு வாய்ப்பு

3)மேட்டூர் அணையில் நீர் திறப்பு 20 ஆயிரம் கனஅடியாக அதிகரிப்பு

4)தமிழகம் முழுவதும் சனிக்கிழமை வெளியிடப்பட்ட வரைவு வாக்காளர் பட்டியலில் சுமார் 5 லட்சம் பேர் நீக்கப்பட்டுள்ளனர்.

5)2018ம் ஆண்டு ஆசிய விளையாட்டுப்போட்டியில் இந்தியா 69 பதக்கங்களை குவித்துள்ளது

Friday, August 31, 2018

வரைவு வாக்காளர் பட்டியல் இன்று வெளியீடு: தலைமைத் தேர்தல் அதிகாரி சாகு தகவல்


தமிழகம் முழுவதும் வரைவு வாக்காளர் பட்டியல் சனிக்கிழமை வெளியிடப்படுகிறது. வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்க்கவும், நீக்கவும் இரண்டு மாதங்களுக்கு வாய்ப்புகள் அளிக்கப்படும்.

மேலும், இந்தக் காலகட்டத்தில் நான்கு ஞாயிற்றுக்கிழமைகளில் சிறப்பு முகாம்களுக்கு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளதாக மாநில தலைமைத் தேர்தல் அதிகாரி சத்யபிரத சாகு தெரிவித்தார்.
வரைவு வாக்காளர் பட்டியல் வெளியிடப்படுவதை முன்னிட்டு, தேர்தல் ஆணையத்தால் அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சிகளின் பிரதிநிதிகளுடன் தலைமைத் தேர்தல் அதிகாரி சாகு, தலைமைச் செயலகத்தில் வெள்ளிக்கிழமை ஆலோசனை நடத்தினார்.

இந்த ஆலோசனையைத் தொடர்ந்து, நிருபர்களுக்கு அவர் அளித்த பேட்டி:-

தமிழகம் முழுவதும் அனைத்து வாக்குச் சாவடிகளிலும் வரைவு வாக்காளர் பட்டியல் சனிக்கிழமை வெளியிடப்படும். மாவட்ட தேர்தல் அதிகாரிகளால் வாக்காளர் பட்டியலின் நகல் அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சியினருக்கு அளிக்கப்படும்.

சிறப்பு முகாம்கள்: தமிழகத்தில் ஆகஸ்ட் மாத நிலவரப்படி மொத்த வாக்காளர்களின் எண்ணிக்கை 5.82 கோடியாகும். அதில், ஆண் வாக்காளர்கள் 2.88 கோடி. பெண் வாக்காளர்கள் 2.94 கோடி. மூன்றாம் பாலித்தனவர் 5,184.

இரண்டு மாதம் கால அவகாசம்: வரைவு வாக்காளர் பட்டியலில் திருத்தங்களை மேற்கொள்ள செப்டம்பர், அக்டோபர் ஆகிய இரண்டு மாதங்கள் அவகாசம் அளிக்கப்பட்டுள்ளது. மேலும், இந்தக் காலகட்டத்தில் செப்டம்பர் 9, 23, அக்டோபர் 7 மற்றும் 14 ஆகிய நாள்களில் சிறப்பு முகாம்கள் நடத்தப்படும். இந்த முகாம்கள் வாக்குச் சாவடி மையங்கள் அமைந்துள்ள இடங்களிலேயே நடைபெறும். வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்த்தல், நீக்கல், திருத்தம் உள்ளிட்ட பணிகளுக்கான படிவங்களை அங்கேயே பூர்த்தி செய்து அளிக்கலாம். பூர்த்தி செய்த படிவங்களையும் அங்கேயே அளிக்க ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.

சிறப்பு முகாம்கள் நடைபெறாத நாள்களில், அலுவலக வேலை நேரத்தில் வாக்குச் சாவடி நிலை அலுவலர், வாக்காளர் பதிவு அலுவலர், உதவி வாக்காளர் பதிவு அதிகாரி அலுவலகங்களில் படிவத்தை அளித்திடலாம்.

சான்றுகளாக அளிக்க வேண்டியவை: பெயர் சேர்த்தலுக்கான விண்ணப்பத்துடன், வசிப்பிட முகவரி, வயது ஆகியவற்றுக்கான சான்றுகள் சமர்ப்பிக்கப்பட வேண்டும்.
ரேஷன் அட்டை, வங்கி அல்லது அஞ்சலக சேமிப்புக் கணக்குப் புத்தகம், ஓட்டுநர் உரிமம், கடவுச்சீட்டு, தொலைபேசி, சமையல் எரிவாயு இணைப்பு ஆகியவற்றில் ஏதேனும் ஒன்றின் அண்மைக்கால ரசீது, ஆதார் கடிதம் ஆகியவற்றை முகவரிச் சான்றாக அளிக்கலாம்.
வயது சான்றாக பிறப்புச் சான்றிதழின் நகல் அல்லது பள்ளிச் சான்றிதழின் நகலை வழங்கலாம். 25 வயதுக்கு கீழுள்ள வாக்காளர்கள் வயதுச் சான்றிதழை அளிக்க வேண்டியது கட்டாயமாகும்.

இணையதளத்திலும் வசதி: வரைவு வாக்காளர் பட்டியல் தேர்தல் துறையின் இணையதளத்திலும் (elections.tn.gov.in)  சனிக்கிழமை வெளியிடப்படும்.
வாக்காளர் பெயர் சேர்ப்புப் பணிகளை இணையதளத்திலும் மேற்கொள்ளலாம்.
மேலும், www.nvsp.in என்ற இணையதள முகவரியிலும் ஆன்-லைன் வழியாக விண்ணப்பிக்க வசதி செய்யப்பட்டுள்ளது என்று தலைமைத் தேர்தல் அதிகாரி சத்யபிரத சாகு தெரிவித்துள்ளார்.

சோழிங்கநல்லூரும் துறைமுகமும்...
காஞ்சிபுரம் மாவட்டம் சோழிங்கநல்லூர் தொகுதியில் அதிக வாக்காளர்களும், சென்னை மாவட்டத்துக்கு உட்பட்ட துறைமுகம் தொகுதியில் குறைவான எண்ணிக்கையிலும் வாக்காளர்கள் இருப்பதாக தலைமைத் தேர்தல் அதிகாரி சத்யபிரத சாகு தெரிவித்தார்.

இது குறித்து அவர் வெளியிட்ட அறிக்கை:-வரைவு வாக்காளர் பட்டியலில் உள்ள விவரங்கள் செப்டம்பர் 8, 22 மற்றும் அக்டோபர் 6, 13 ஆகிய தேதிகளில் நடைபெறும் கிராம சபை மற்றும் உள்ளாட்சி மன்றம், குடியிருப்போர் நலச் சங்கக் கூட்டங்களில் படிக்கப்படும். பாகம் மற்றும் பிரிவு வாரியாக பெயர்கள் படிக்கப்படும் போது அவற்றைச் சரிபார்த்துக் கொள்ளலாம்.
தமிழகத்தில், 6.07 லட்சம் வாக்காளர்களுடன் மாநிலத்திலேயே அதிகளவு வாக்காளர்களைக் கொண்ட தொகுதியாக சோழிங்கநல்லூர் தொகுதி உள்ளது. அங்கு ஆண்கள் 3.05 லட்சம், பெண்கள் 3.02 லட்சம், மூன்றாம் பாலினத்தவர் 73 ஆகியோர் உள்ளனர். இதே போன்று, சென்னை துறைமுகம் தொகுதியில் 1.64 லட்சம் வாக்காளர்கள் உள்ளனர். அங்கு ஆண்கள் 86 ஆயிரமும், பெண்கள் 78 ஆயிரமும் உள்ளனர். மூன்றாம் பாலினத்தவர் 48 ஆக உள்ளனர் என்று சத்யபிரத சாகு தெரிவித்துள்ளார்.

'நெட்' தகுதி தேர்வுக்கான ஆன்லைன் பதிவு துவக்கம்


கல்லுாரி ஆசிரியர் மற்றும் ஆராய்ச்சி மாணவர் உதவி தொகைக்கான, 'நெட்' தகுதி தேர்வுக்கு, இன்று விண்ணப்ப பதிவு துவங்குகிறது.

முதுநிலை பட்டம் முடித்தோர், கல்லுாரிகளில் உதவி பேராசிரியர் பணியில் சேர, மத்திய அரசின் பல்கலை மானிய குழுவின் அங்கீகாரம் பெற்ற, 'நெட்' அல்லது மாநில அரசின், 'செட்' தேர்வில் தேர்ச்சி பெற வேண்டும். மத்திய அரசின், நெட் தேர்வில் தேர்ச்சி பெற்றால், அனைத்து மாநிலங்களிலும் பணியாற்றலாம். மாநில தேர்வில் தேர்ச்சி பெற்றால், அந்த மாநிலத்திற்குள் உள்ள கல்வி நிறுவனங்களில் மட்டும் பணியாற்றலாம்.

நடப்பு கல்வி ஆண்டுக்கான, நெட் தேர்வு, நேற்று அறிவிக்கப்பட்டது. தேர்வு, டிச., 9 முதல், 23 வரை நடக்கிறது. தேர்வில் பங்கேற்க, இன்று முதல், 30ம் தேதி வரை, ஆன்லைனில் பதிவு செய்யலாம். தேர்வு முடிவு, 2019 ஜன., 10ல் வெளியிடப்படுகிறது. இளநிலை ஆராய்ச்சி மாணவருக்கான கல்வி உதவி தொகை பெறுவதற்கும், இந்த தேர்வில் பங்கேற்கலாம். கணினி வழியில் நடக்கும் இந்த தேர்வுக்கு, இரண்டு தாள்களில் வினாத்தாள் வழங்கப்படும். முதல் தாளில், 100 மதிப்பெண்களுக்கு, 50 வினாக்கள் இருக்கும். அவற்றுக்கு, ஒரு மணி நேரம் அவகாசம் தரப்படும். இரண்டாம் தாளில், 200 மதிப்பெண்களுக்கு, 100 வினாக்கள் இருக்கும். அவற்றுக்கு, இரண்டு மணி நேரம் அவகாசம் தரப்படும். தேர்வு விபரங்களை,www.ntanet.nic.inமுகவரியில் தெரிந்து கொள்ளலாம்.

எமிஸ்' பதிவு பணிகள் 3 நாட்கள் நிறுத்தி வைப்பு ஆசிரியர்கள் நிம்மதி


பள்ளி மாணவர்களின் முழு விவரங்களை ஆன்லைனில் பதிவேற்றம் செய்யும் 'எமிஸ்' (கல்வி மேலாண்மை மற்றும் தகவல் அமைப்பு) பணிகள் சர்வர் பிரச்னையால் 3 நாட்கள் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளன.கல்வித்துறையில் மாணவர்களின் படிப்பு, பெற்றோர் விவரங்கள், ஆதார் எண் போன்றவற்றை 'எமிஸ் தமிழ்நாடு ஸ்கூல்' என்ற இணையதளம் மூலம் பதிவேற்றம் செய்யும் பணிகளில் ஆசிரியர்கள் ஈடுபட்டுள்ளனர்.

ஒவ்வொரு பள்ளிக்கும் ஒரு யூசர் நேம், பாஸ்வேர்டு ஒதுக்கப்பட்டு அதன் மூலம் மாணவர்களின் விவரங்களை ஆக., 31க்குள் பதிவேற்றம் செய்ய உத்தரவிடப்பட்டது.அனைத்து மாவட்டங்களிலும் ஒட்டுமொத்தமாக இப்பணி ஒரே நேரத்தில் மேற்கொள்ளப்பட்டதால் பகல் முழுவதும் 'எமிஸ்' இணையதள சேவையில் பாதிப்பு ஏற்பட்டது. ஒரு மாணவன் விபரத்தை பதிவேற்ற அரை மணி நேரம் ஆனது.

இரவிலும், அதிகாலையிலும் மட்டுமே இணையதளம் தடங்கலின்றி இயங்கியதால் ஆசிரியர்கள் இரவு முழுவதும் விழித்திருந்து பதிவேற்றம் செய்யும் நிலை ஏற்பட்டது. இதனால், 'திருடர்களே ஆசிரியர்கள் வீட்டு பக்கம் இரவு போகாதீங்க... எமிஸ் பணிக்காக இரவு முழுவதும் விழித்திருக்கின்றனர். மாட்டிக்கொள்வீர்,' என சமூக வலைத்தளங்களில் கிண்டல் மீம்ஸ்கள் கூட வெளியாகின. இணையதளத்தில் பதிவேற்றுவதில் பெரும் பிரச்னை எழுந்ததால் 'எமிஸ் பதிவேற்றத்தை ஆக.,31 முதல் செப்., 2 வரை மேற்கொள்ள வேண்டாம் எனவும், மறு அறிவிப்பு வந்த பின் பணியை தொடரலாம்,' எனவும் கல்வித்துறை தெரிவித்துள்ளது. இதுகுறித்து கல்வி அதிகாரி ஒருவர் கூறுகையில், ''மாநிலம் முழுவதும் ஒரே நேரத்தில் பதிவேற்ற பணி நடந்ததால் மாஸ்டர் சர்வர் பிரச்னை ஏற்பட்டது. இதுதொடர்பான பராமரிப்பு பணிக்காக பதிவேற்றம் நிறுத்தி வைக்கப் பட்டுள்ளது,''என்றார்.

Thursday, August 30, 2018

மாணவ, மாணவிகளுக்கு விலை இல்லா புத்தகப்பை, காலணிகள் டிசம்பர் மாதத்திற்குள் வழங்க ஏற்பாடு


அரசு மற்றும் அரசு உதவிபெறும் பள்ளிகளில் பயிலும் மாணவ-மாணவிகளுக்கு தமிழக அரசு சார்பில் விலை இல்லா பாடப்புத்தகங்கள், நோட்டுப்புத்தகங்கள், வண்ண பென்சில்கள், புத்தகப்பை, காலணி, சைக்கிள், மடிக்கணினி உள்ளிட்ட 14 பொருட்கள் வழங்கப்படுகின்றன.

இதன்படி 1-ம் வகுப்பு முதல் பிளஸ்-2 வரை படிக்கும் 70 லட்சம் மாணவ-மாணவிகளுக்கு புத்தகப்பைகள் வழங்கப்படுகிறது. 1 முதல் 10-ம் வகுப்பு வரை பயிலும் 56 லட்சம் மாணவ-மாணவிகளுக்கு காலணிகளும் வழங்கப்படுகிறது.

ஏற்பாடு மும்முரம்

நடப்பு கல்வியாண்டில் புத்தகப்பைகள் மற்றும் காலணிகள் இதுவரை மாணவர்களுக்கு வழங்கப்படவில்லை. எனவே அவற்றை வழங்க பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் கே.ஏ.செங்கோட்டையன் நடவடிக்கை எடுத்து வருகிறார்.

இதையொட்டி சென்னை டி.பி.ஐ. வளாகத்தில் உள்ள தமிழ்நாடு பாடநூல் கழக கல்வியியல் பணிகள் கழக நிர்வாக இயக்குனர் டி.ஜெகன்நாதன், செயலாளர் பழனிசாமி மற்றும் அதிகாரிகள் காலணி, புத்தகப்பைகளை வருகிற டிசம்பர் மாதத்திற்குள் மாணவர்களுக்கு வழங்க நடவடிக்கை எடுத்து வருகிறார்கள்.

முன்னதாக வருகிற அக்டோபர் மாதம் வண்ண பென்சில்கள் 1 மற்றும் 2-ம் வகுப்பு பயிலும் 9 லட்சம் மாணவர்களுக்கு வழங்கப்பட உள்ளது. மேலும் ‘ஜாமெண்ட்ரி பாக்ஸ்’ 6, 9 மற்றும் 10-ம் வகுப்புகளில் பயிலும் 15 லட்சம் மாணவர்களுக்கு வழங்கப்பட உள்ளது. இதேபோல் வண்ண பென்சில்கள் 3 முதல் 5-ம் வகுப்பு வரை பயிலும் 15 லட்சம் மாணவர்களுக்கு வழங்கப்பட உள்ளது.

பிளஸ் 2வில் முதலிடம் பெறும் மாணவருக்கு ரூ.20 ஆயிரம் பரிசு தனித்திறனுக்கு 40 மதிப்பெண்


தமிழக அரசால் பத்தாம் வகுப்பு, பிளஸ் 2 வில் மாநில அளவில் முதல் மூன்று மதிப்பெண் பெற்றவர்களுக்கு பரிசு தொகை வழங்கும் திட்டம் ஏற்கனவே நடைமுறைப்படுத்தப்பட்டு வந்தது. கற்றல் என்பது தெரிந்து கொள்ளுதல், அறிந்து கொள்ளுதல், வினவுதல், புதியன படைத்தல் என பல நிலைகளில் நடைபெறும் ஒரு செயல்.

எழுத்து தேர்வில் எடுக்கப்படும் மதிப்பெண்களுக்கு மட்டும் முக்கியத்துவம் அளிப்பது தவிர்க்கப்பட வேண்டும் என்ற நோக்கில் முதல் மூன்று இடங்களை அறிவிக்கும் நடைமுறை கைவிடப்பட்டது. மாணவர்களை ஊக்குவிக்கும் வகையில் நடப்பாண்டில் 'காமராஜர் விருது' வழங்கும் திட்டத்தை பள்ளி கல்வித்துறை அறிமுகப்படுத்தியுள்ளது.பள்ளிகளுக்கு அனுப்பப்பட்டுள்ள சுற்றறிக்கை: அரசு மற்றும் உதவி பெறும் பள்ளியில் தமிழ் வழியில் பயின்று பத்தாம் மற்றும் பிளஸ் 2 பொது தேர்வில் குறைந்த பட்சம் 60 சதவீத மதிப்பெண் பெற்ற மாணவர்களை 'காமராஜர் விருதுக்கு' பரிசீலனைக்கு எடுத்து கொள்ள வேண்டும்.

கலை இலக்கிய திறன், விளையாட்டு போட்டி, அறிவியல் விருது, பள்ளி இணை செயல்பாடுகளில் பங்கேற்றவர்களை தேர்வு செய்து, நான்கு செயல்பாடுகளிலும் தலா 10 மதிப்பெண் வீதம் 40க்கு கணக்கிட்டு இதில் முன்னுரிமை பெற்றவர்களை விருதுக்கு பரிந்துரைக்க வேண்டும்.ஒரு பள்ளி சார்பில் அதிக பட்சம் 3 பேரை பரிந்துரைக்கலாம். மாவட்ட அளவில் பத்தாம் வகுப்பில் 20 பேர், பிளஸ் 2வில் 20 பேரை தேர்வு செய்து அதன் பட்டியலை முதன்மை கல்வி அலுவலர்கள் பள்ளி கல்வி இயக்குனருக்கு அனுப்ப வேண்டும். பத்தாம் வகுப்பு மாணவர்களுக்கு 10 ஆயிரம், பிளஸ் 2 மாணவருக்கு 20 ஆயிரம் ரூபாய் மற்றும் காமராஜர் விருது அளிக்கப்பட உள்ளது. ஒரு மாவட்டத்துக்கு தலா 15 மாணவர்கள் தேர்வு செய்யப்பட உள்ளனர், என கூறப்பட்டுள்ளது.

வரைவு வாக்காளர் பட்டியல் தமிழகத்தில் நாளை வெளியீடு


சட்டசபை தேர்தல் நடக்க உள்ள, நான்கு மாநிலங்களை தவிர, மற்ற அனைத்து மாநிலங்களிலும், திருத்தப் பணிக்காக, வரைவு வாக்காளர் பட்டியல், நாளை வெளியிடப்பட உள்ளது.ஒவ்வொரு ஆண்டும் வழக்கமாக நடைபெறும், வாக்காளர் பட்டியல் திருத்தப் பணி, நாளை துவங்க உள்ளது.

இதற்காக, அனைத்து மாநிலங்களிலும், சட்டசபை தொகுதி வாரியாக, நாளை காலை, 10:00 மணிக்கு வரைவு வாக்காளர் பட்டியல் வெளியிடப்பட உள்ளது.வரைவு பட்டியலில், பெயர் விடுபட்டவர்களும், 2019 ஜன., 1ல், 18 வயதை பூர்த்தி செய்பவர்களும், பெயர் சேர்க்க, அக்., 31 வரை விண்ணப்பிக்கலாம். பெயர், முகவரி திருத்தம் மேற்கொள்ளவும், இடமாற்றம் மற்றும் பெயர் நீக்கவும், நாளை முதல் விண்ணப்பிக்கலாம்.சட்டசபை தேர்தல் நடக்க உள்ள, மத்திய பிரதேசம், ராஜஸ்தான், சத்தீஸ்கர், மிசோரம் மாநிலங்கள் தவிர, மற்ற மாநிலங்கள் அனைத்திலும், வாக்காளர் பட்டியல் திருத்தப் பணி நடைபெற உள்ளது. கிராம சபை கூட்டங்கள் மற்றும் குடியிருப்போர் நல சங்க கூட்டங்களில், வரைவு வாக்காளர் பட்டியல் சரிபார்த்தல் முகாம், செப்., 8, 22 மற்றும் அக்., 6, 13ம் தேதிகளில் நடைபெறும்.ஓட்டுச்சாவடிகளில், செப்., 9, 23 மற்றும் அக்., 7, 14ம் தேதிகளில், சிறப்பு முகாம் நடத்தப்படும்.

விண்ணப்பங்களை, கம்ப்யூட்டரில் பதிவு செய்யும் பணி, நவ., 16ல் நிறைவடையும். விண்ணப்ப படிவங்கள் அனைத்தையும், கள ஆய்வு செய்யும் பணி, டிச., 1ல் நிறைவடையும்.'அனைத்து சட்டசபை தொகுதிகளிலும், 2019 ஜன., 4ல், இறுதி வாக்காளர் பட்டியல் வெளியிடப்படும்' என, தேர்தல் கமிஷன் அறிவித்துள்ளது.தமிழகத்தில், வாக்காளர் பட்டியல் திருத்தப் பணி தொடர்பாக, தமிழக தலைமை தேர்தல் அதிகாரி, சத்யபிரதா சாகு, நேற்று, 'வீடியோ கான்பரன்ஸ்' வழியாக, மாவட்ட கலெக்டர்களுடன், ஆலோசனை நடத்தினார். இன்று, சென்னை, தலைமை செயலகத்தில், காலை, 11:00 மணிக்கு, அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சிப் பிரதிநிதிகள் கூட்டம் நடக்கிறது.

இது குறித்து, தமிழக தலைமை தேர்தல் அதிகாரி, சத்யபிரதா சாகு கூறியதாவது: வரைவு வாக்காளர் பட்டியல் தயாரிப்பு பணிக்காக, 10 நாட்களாக, எந்த விண்ணப்பமும் பெறப்படவில்லை. செப்., 1ல், வரைவு வாக்காளர் பட்டியல் வெளியிடப்பட உள்ளது. அதையொட்டி, இன்று அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சி பிரதிநிதிகள் பங்கேற்கும், ஆலோசனை கூட்டம் நடக்க உள்ளது. அவர்களுக்கு, வாக்காளர் பட்டியல் திருத்தப் பணி குறித்த விபரங்கள் தெரிவிக்கப்படும்.பட்டியலில், தவறு இருந்தால் சுட்டிக்காட்டும்படி தெரிவிக்க உள்ளோம்.வரைவு வாக்காளர் பட்டியல், கிராம சபை கூட்டத்தில் வைத்து, ஒப்புதல் பெறப்படும். வாக்காளர் சிறப்பு முகாம்களும் நடத்தப்படும். வரைவு பட்டியல், அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சிகளுக்கு வழங்கப்படும்.இவ்வாறு அவர் கூறினார்.