இலவச SMS களை உடனுக்குடன் பெற ON tnptfmani என்று type செய்து 9870807070 என்ற எண்ணிற்கு அனுப்பி இலவச குறுந்தகவல்களை(SMS) பெறுங்கள். DND (Do NOT Disturb) சர்வீஸ்ல் உள்ள எண்கள் அதனை(DND) நீக்கிய பிறகே இச்சேவையை பெறமுடியும். plz call 1909

Friday, August 25, 2017

பூமியின் அதிசயம்

*பூமியின் மறுபக்கம் வரை துளையிட்டு, அதற்குள் குதித்தால் என்னவாகும்.?*
Written By: Muthuraj

கோட்பாட்டு இயற்பியலின் வேடிக்கையான பகுதியாக இருப்பினும் சரி, தத்துவார்த்த இயற்பியலின் சிறப்பான பகுதியாக இருப்பினும் சரி - அபத்தமான கேள்விகளைக் கேட்டு அதற்கான சரியான பதில்களைக் கணக்கிடுவது என்பது, எப்போதுமே நிகழும் சிறப்பானதொரு விடயமாகும்.

உதாரணத்திற்கு - நம்மில் பெரும்பாலானோர்கள் சிறுவயதில் கேட்க விரும்பிய அல்லது யாரிடமாவது கேட்ட ஒரு கேள்வியை எடுத்துக்கொள்வோம் - "பூமிக்கு நடுவில் ஒரு ஆழமான ஓட்டையொன்றை போட்டால், பூமியின் மறுப்பக்கத்திற்கு ஈஸியாக போகலாம். அப்படித்தானே.?

இத்தகைய ஒரு காரியத்தை யார் செய்ய விரும்புவார்கள்.? வெளிப்படையாக சொல்லப்போனால் - அநேகமாக யாரும் இதை செய்யப்போவதில்லை. அதற்காக - தற்கால மற்றும் வருங்கால - பிள்ளைகள் இந்த கேள்வியை நம்மிடம் கேட்காமல் இருக்கப்போவதுமில்லை. ஆக, இதற்கான விடையை அறிந்துவைத்துக்கொள்வதைவிட வேரோரு அருமையான வழி நமக்கில்லை.

பூமியின் மறுபக்கத்திற்கு அல்ல, பூமியின் நடுப்பகுதியை கூட நம்மால் நெருங்க முடியாது என்பதே நிதர்சனம். பூமிக்குள் போடப்படும் துளையானது, பயங்கரமான வழிகளில் நம்மை கொன்றுவிடும் என்பது ஒருபக்கமிருக்க பூமிக்கு நடுவே துளையொன்றை போட்டால் - கோட்பாட்டளவில் என்ன நடக்கும்?


வெளிப்படையாக கூற வேண்டுமெனில், பூமியின் மையத்தின் வழியாக துளையிட முடியாது. இந்த மிகப்பெரிய சாதனையை நிறைவேற்றுவதற்கான தொழில்நுட்ப திறன்களை 'தற்போது' நாம் கொண்டிருக்கவில்லை. சரி, அதிகபட்சம் எவ்வளவு ஆழமாக நம்மால் பூமியில் துளைகளைப்போட முடியும்.?

இன்றுவரை, உலகில் இடப்பட்ட ஆழமான துளை - கோலா சூப்பர்டீப் போர்ஹோல் (Kola Superdeep Borehole) ஆகும். 1970-களில் துளையிடலை துவங்கி 20 ஆண்டுகளுக்கு பின்னர் 40,230 அடி (12,262 மீட்டர்) ஆழத்தை அடைந்தது. அதாவது சுமார் 7.5 மைல்கள் அல்லது 12 கி.மீ ஆழம். பூமியின் விட்டத்தோடு ஒப்பிடும்போது அது ஒரு முடி அகலம் கூட இல்லை. சரி அதற்குமேல் ஏன் துளையிடவில்லை.? அது ஏன் நிறுத்தப்பட்டது.?


புவியின் மையப்பகுதியை நாம் நெருங்கி வருகையில் விடயங்கள் 'சூடுபிடிக்கும்'. ஏனென்றால் பூமியின் மையம், திரவ உலோகதினால் நிரம்பியுள்ளது மற்றும் அதன் வெப்பநிலை 9700° ஃபாரன்ஹீட் (5400° செல்சீயஸ்) என்ற அளவை தாண்டிச் செல்கிறது. ஆக சுமார் 7.5 மைல் ஆழத்தை அடைந்ததுமே 350° ஃபாரன்ஹீட் (170° செல்சீயஸ்) வெப்பத்தை விட அதிக வெப்பநிலைகளை எதிர்கொள்ள நேர்ந்தது.

அந்த அளவிலான வெப்பம் நிச்சயம் நுழையும் எவரையும் கொன்றுவிடும் என்பதை நான் உங்களுக்கு சொல்லவேண்டிய அவசியம் இல்லை. ஒருவேளை அதையும் மீறி இன்னும் ஆழமாக சென்றால், அதாவது கிரகத்தின் மேற்பரப்பில் இருந்து 30 மைல் (48 கிமீ) ஆழத்தை அடைந்தால் அங்கு கொதிக்கும் மேக்மாவை சந்திப்போம். அது நம்மை சாம்பலாக்கி விளையாடும் என்பதில் சந்தேகமேயில்லை.

கொதிக்கும் மேக்மா என்ற பெரும்தடையை சமாளிக்க ஒரு சூப்பர் திட்டம் இருக்கிறது, அதாவது மிகவும் பலமான குழாய் ஒன்றை உருவாக்கி பாதுகாப்பாக சூடான மேக்மாவை நாம் கடந்து செல்கிறோம் என்று கற்பனை செய்துகொள்வோம். கடந்து செல்வோமா.?? - மாட்டோம். இதை நிகழ்த்தினாலும் நாம் மரணிப்பது உறுதி. இந்த பயணத்தில் காற்று, அதாவது காற்றின் அழுத்தம் நம்மை கொல்லும்.

அதென்ன அழுத்தம்.? நீங்கள் தண்ணீருக்குள் ஆழமாக நீந்தும்போது அழுத்தம் ஏற்படும் அல்லவா.? அதே போலத்தான். உங்களுக்கு மேல் அதிக காற்று இருக்கும் காரணத்தினால் கீழ் செல்லும் நாம் அழுத்தத்தை உணர்வோம். ஆக, குழாய் மூலம் பூமிக்குள் நுழைந்து மறுபக்கத்தை அடையலாம் என்ற திட்டம் உங்களிடம் இருந்தால் - 31 மைல்கள், அதாவது 50 கிமீ ஆழத்திலேயே பெருங்கடல்களின் கடைமட்ட ஆழத்தில் உணரும் அழுத்தத்தை விட பல மடங்கு அதிக அழுத்தத்தை உணர்வீர்கள் என்பதை நினைவில் வைத்துக்கொள்ளவும்.

ஒருவேளை கொதிக்கும் மேக்மா வழியாக செல்ல அனுமதிக்கும் ஒரு குழாயை செய்ய முடிந்து, அந்த குழாயிலிருந்து அனைத்து காற்றையும் உறிஞ்சி வெளியே எடுத்து, ஒரு பிரத்யேக உடை அணிந்து குழாயினுள் நம்மால் சுவாசித்து பயணிக்க முடியும் என்றாலும் கூட, கிரகத்தின் சுழற்சியினால் நாம் சிக்கல்களை சந்திப்போம்.

கிரகத்தின் பாதி ஆழத்தை அடைந்ததும் நாம் உருவாக்கிய குழாயின் சுவர்களைவிட கிரகத்தின் சுழற்சி வேகமானதாக இருக்கும். அதாவது மணிக்கு 1,500 மைல்கள் (மணிக்கு 2400 கிமீ) என்ற வேகத்தில் பூமி கிரகம் சுழலும். இது கடுமையான உடல் நல பாதிப்பு, குழாய்களுக்குள் துள்ளுவது, அதன் மீது மோதுவது போன்ற கட்டுப்படுத்த முடியாத சூழ்நிலைகள் தொடங்கி மரணம் வரையிலான சிக்கல்களை சந்திப்போம்.

சரி, பூமிக்குள் துளையிட்டு பயணிப்பதில் உள்ள யதார்த்த விவகாரங்கள் அனைத்தையும் ஒதுக்கிவிட்டு கண்மூடித்தனமாக பூமிக்கு நடுவே துளையிட்டு ஒரு பக்கத்தில் இருந்து மறுபக்கத்திற்கு குதித்தால் என்னவாகும்.?? - வெறும் 42 நிமிடங்கள் மற்றும் 12 நொடிகளுக்குள் நாம் மறுபக்கத்தை அடைவோம். எனினும், இதோடு வேடிக்கை முடிந்து விடாது.

பூமியின் தீவிர ஈர்ப்பு மற்றும் உங்களின் தீவிர வேகத்தின் காரணமாக துளையின் வழியாக நீங்கள் மறுபுறம் வந்தாலும் கூட நீங்கள் மீண்டும் பூமிக்குள் வந்த வழியாகவே சரிவீர்கள். ஆரம்பித்த இடத்திற்கே வருவீர்கள் மற்றும் மீண்டும் உள்நோக்கி சரிவீர்கள். இப்படியாக நீங்கள் முன்னும் பின்னுமாக ஊசலாடப்பட்டுக்கொண்டே இருப்பீர்கள், முடிவே இருக்காது.

#படிச்சது

Thursday, August 24, 2017

ஒரே நாளில் 16 ஐஏஎஸ் அதிகாரிகள் மாற்றம் : பள்ளி கல்வித்துறைக்கு முதன்மை செயலாளர் பதவி


தமிழகத்தில் நான்கு மாவட்ட கலெக்டர்கள் மாற்றப்பட்டுள்ளனர். மேலும், பள்ளி கல்வித்துறைக்கு தற்காலிக முதன்மை செயலாளர் பதவி உருவாக்கப்பட்டுள்ளது. அதே சமயம் உதயசந்திரன் பள்ளிக் கல்வித்துறையின் செயலாளராக தொடர்வார் என்றும் அரசு உத்தரவிட்டுள்ளது.

தமிழக அரசு நேற்று இரவு கடலூர், சேலம், திருவண்ணாமலை, சிவகங்கை ஆகிய நான்கு மாவட்ட கலெக்டர்களை அதிரடியாக மாற்றி உள்ளது. மேலும், தற்காலிக முதன்மை செயலாளார் என்ற பதவி பள்ளிக் கல்வித் துறை, கால்நடை, பால்வளம் மற்றும் மீன்வளம் உள்பட சில துறைகளில் ஏற்படுத்தப்பட்டுள்ளது. பள்ளி கல்வித்துறையில் பல்வேறு மாற்றங்களை செய்து வரும் துறை செயலாளர் உதயசந்திரன் இருந்து வருகிறார். இந்நிலையில் அத்துறையில் முதன்மை செயலாளர் பதவி ஒன்றை தற்காலிகமாக உருவாக்கி, அதற்கு ஐஏஎஸ் அதிகாரி பிரதீப் யாதவ் நியமிக்கப்பட்டுள்ளார். அவரின் கீழ் பள்ளி கல்வித்துறை செயலாளர் உதயசந்திரன் செயல்படுவார் என்று அரசு செய்திக்குறிப்பில் கூறப்பட்டுள்ளது.

உதயசந்திரன் பாடதிட்டங்கள் ெதாடர்பான பணிகளை மேற்கொள்வார் என்றும் அதில் கூறப்பட்டுள்ளது. எல்காட் மேலாண்மை இயக்குனர் ராஜேந்திரகுமார் தொழில் மற்றும் வர்த்தக துறையில் தற்காலிகமாக உருவாக்கப்பட்டுள்ள முதன்மை செயலாளர் பதவியில் நியமிக்கப்பட்டுள்ளார். தாட்கோ முதன்மை செயலாளர் குமார் ஜெயந்த் உணவு மற்றும் நுகர்வோர் பாதுகாப்பு துறையின் முதன்மை செயலாளராக மாற்றப்பட்டுள்ளார். கால்நடை, பால்வளம் மற்றும் மீன்வளத்துறையின் துணை செயலாளர் பழனிச்சாமி பேரூராட்சிகள் இயக்குனராக நியமிக்கப்பட்டுள்ளார். தமிழ்நாடு நுகர்பொருள் வாணிப கழகத்தின் முதன்மை செயலாளர் கோபால் கால்நடை, பால்வளம் மற்றும் மீன்வளத்துறையில் தற்காலிகமாக உருவாக்கப்பட்டுள்ள முதன்மை செயலாளர் பதவியில் நியமிக்கப்பட்டுள்ளார்.

தமிழ்நாடு விளையாட்டு ஆணைய உறுப்பினர் செயலாளர் அசோக் டோங்ரே ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நல வாரியத்துறையின் முதன்மை செயலாளராக நியமிக்கப்பட்டுள்ளார். பூம்புகார் கப்பல் போக்குவரத்து கழக இயக்குனர் ராஜேந்திர ரத்னு பேரிடர் மேலாண்மை ஆணையராக நியமிக்கப்பட்டுள்ளார். பழனிசாமி ஐஏஎஸ் தொழில்நுட்ப கல்வியின் இயக்குனராகவும் கூடுதல் பொறுப்பை வகிப்பார். மாவட்ட முகமை திட்ட அலுவலர் ரோகினி சேலம் கலெக்டராக நியமிக்கப்பட்டுள்ளார். சேலம் கலெக்டர் சம்பத் சமூக பாதுகாப்பு திட்ட இயக்குனராக நியமிக்கப்பட்டுள்ளார். பேரிடர் மேலாண்மை இயக்குனர் லதா சிவகங்கை கலெக்டராக நியமிக்கப்பட்டுள்ளார். சிவகங்கை கலெக்டர் மலர்விழி, தமிழக உள்துறை, கலால் துறையின் துணை செயலாளராக நியமிக்கப்பட்டுள்ளார்.

திருவண்ணாமலை கலெக்டர் பிரசாத் வாட்நீரே கடலூர் கலெக்டராக நியமிக்கப்பட்டுள்ளார். கடலூர் கலெக்டர் ராஜேஷ் தொழிற்சாலைகள் மற்றும் வர்த்தக கூடுதல் ஆணையராக நியமிக்கப்பட்டுள்ளார். சென்னை மாநகராட்சியின் துணை ஆணையர்(கல்வி) கந்தசாமி திருவண்ணாமலை கலெக்டராக நியமிக்கப்பட்டுள்ளார். காதி மற்றும் கிராமஉத்யோக் பவன் மேலாண்மை இயக்குனர் சுடலை கண்ணன் எல்காட் தலைவராக நியமிக்கப்பட்டுள்ளார். சமூக பாதுகாப்பு திட்ட இயக்குனர் சுதா தேவி தமிழ்நாடு நுகர்பொருள் வாணிப கழக மேலாண்மை இயக்குனராக நியமிக்கப்பட்டுள்ளார். தொழில்சாலை மற்றும் வர்த்தக துறையின் கூடுதல் ஆணையராக இருந்த ரீடா ஹரிஸ் தாக்கர் தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணைய உறுப்பினர் செயலாளராக நியமிக்கப்பட்டுள்ளார். பூம்புகார் கப்பல் போக்குவரத்து கழக தலைவராக அண்ணாமலை ஐஏஎஸ் நியமிக்கப்பட்டுள்ளார் என்று அரசின் செய்தி குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

நீட் தேர்வு: சிறப்பு ஆசிரியர்களை நியமிக்க அரசுக்கு உத்தரவு


பள்ளிகளில் நீட் தேர்வுக்கு மாணவர்களைத் தயார்படுத்தும் விதமாக சிறப்பு ஆசிரியர்களை நியமிக்குமாறு தமிழக அரசுக்கு சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. உடுமலைப்பேட்டையைச் சேர்ந்த எஸ்.கிருத்திகா என்ற மாணவி, உயர் நீதிமன்றத்தில் தாக்கல் செய்த மனுவில்,

'நான் பிளஸ் 2 தேர்வில் 1,184 மதிப்பெண்களுடன் 199.25 கட்-ஆஃப் மதிப்பெண்ணும், நீட் தேர்வில் 154 மதிப்பெண்ணும் பெற்றுள்ளேன். எனவே, மருத்துவ படிப்புக்கான கலந்தாய்வில் என்னை அனுமதிக்க அரசுக்கு உத்தரவிட வேண்டும்' என்று கோரியிருந்தார். இந்த மனு நீதிபதி என்.கிருபாகரன் முன்பு விசாரணைக்கு வந்தது. இருதரப்பு வாதங்களுக்கு பின்னர் நீதிபதி பிறப்பித்த உத்தரவு: நீட் தேர்வை எதிர்கொள்ளும் வகையில், கடந்த கல்வியாண்டில் போதிய பயிற்சி மற்றும் சிறப்பு வகுப்புகளை நடத்தியிருக்க வேண்டும்.

ஆனால், அவ்வாறு மாநில அரசு மேற்கொள்ளவில்லை. ஆகையால் தான் நீட் தேர்வில் தமிழக மாணவர்கள் அதிகமானோர் தேர்ச்சி பெற முடியவில்லை. மருத்துவர் ஆக வேண்டும் என்ற கனவு மனுதாரருக்கு தற்போதும் கனவாகவே உள்ளது. நீட் விவகாரத்தில் கடைசி நேரத்தில் மத்திய அரசு எதிர்மறையான நிலைப்பாட்டை எடுத்துள்ளது. இதுதான் மாநிலத்தில் தற்போது ஏற்பட்டுள்ள குழப்பத்துக்கு பிரதான காரணமாகும். நீட் உள்பட போட்டி தேர்வுகளை எதிர்கொள்ளும் வகையிலும், சர்வதேச தரத்துக்கு இணையாக பாடத்திட்டத்தை மாற்றியமைக்கும் முயற்சியில் தமிழக அரசு ஈடுபட்டு வருகிறது. இதற்காக குழு அமைக்கப்பட்டுள்ளது. வரும் கல்வியாண்டுகளில் (2018-19, 2019-20) பாடத்திட்டத்தைச் சீரமைக்க எடுக்கப்பட்டு வரும் முயற்சிகள் குறித்து பள்ளிக் கல்வித் துறை செயலாளர், தமது பதில் மனுவில் விரிவாக குறிப்பிட்டுள்ளார்.

எதிர்காலத்தில் நீட் தேர்வுக்கு பள்ளி மாணவர்களைத் தயார்படுத்தும் விதமாக சிறப்பு ஆசிரியர்களை தமிழக அரசு நியமிக்க வேண்டும் என்று நீதிபதி உத்தரவிட்டார். மேலும், அரசு பயிற்சி மையங்களின் எண்ணிக்கையை அதிகரிப்பத்துடன், கிராமப்புற மாணவர்களுக்கு சிறப்பு பயிற்சியை வழங்க வேண்டும் என உத்தரவிட்ட நீதிபதி கிருபாகரன், நீட் தேர்வு அடிப்படையிலேயே மருத்துவ மாணவர் சேர்க்கை நடத்த வேண்டும் என்று உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளதால், மாணவி கிருத்திகாவின் மனுவை தள்ளுபடி செய்வதாக தெரிவித்தார்.

பள்ளிக்கல்வித்துறை முதன்மை செயலாளராக பிரதீப் யாதவ் நியமனம் - உதயசந்திரன் மாற்றமில்லை

பள்ளிக்கல்வித்துறையின் முதன்மைத்துறை செயலாளராக பிரதீப் யாதவ் நியமனம் செய்யப்பட்டுள்ளார். பள்ளிக்கல்வித்துறைக்கு தற்காலிக முதன்மை செயலாளர் என்ற பணியிடம் உருவாக்கப்பட்டுள்ளது.

ஒரு நாள் ஊதிய பிடிப்பு சேலம் மாவட்ட தொடக்க கல்வி அலுவலர் உத்தர வு.

Wednesday, August 23, 2017

பிளஸ்-1 மாணவர்களுக்கு புதிய பாடத்திட்ட புத்தகங்கள் மே மாதம் வழங்கப்படும்ஐகோர்ட்டில், தமிழக அரசு பதில் மனு


காஞ்சீபுரத்தை சேர்ந்த ராமலிங்கம், ஐகோர்ட்டில் தாக்கல் செய்துள்ள மனுவில், ‘சி.பி.எஸ்.இ. பாடத்திட்டத்துக்கு இணையாக மாநில பாடத்திட்டத்தை மாற்றியமைக்க நிபுணர் குழுக்கள் அமைக்கப்பட்டு உள்ளன. இப்பணி விரைவாக முடிவடையும் விதமாக, இந்த குழுக்களில் இடம் பெற்றுள்ளவர்களை வேறு பணிக்கு மாற்றக்கூடாது என்று உத்தரவிட வேண்டும்’ என்று கூறியிருந்தார்.

இந்த மனுவை விசாரித்த நீதிபதி என்.கிருபாகரன், நிபுணர் குழுக்களில் இடம்பெற்றுள்ள பள்ளி கல்வித்துறை செயலாளர் உதயச்சந்திரன் உள்ளிட்ட நிபுணர்களை மாற்ற தடைவிதித்தார். மேலும் பாடத்திட்டம் மாற்றியமைக்கும் குழுக்கள் மேற்கொண்டுள்ள பணிகள் குறித்து அறிக்கை தாக்கல் செய்ய வேண்டும் என்று பள்ளி கல்வித்துறை செயலாளருக்கு நீதிபதி உத்தரவிட்டிருந்தார். இந்த வழக்கு நேற்று மீண்டும் விசாரணைக்கு வந்தது. அப்போது பள்ளி கல்வித்துறை செயலாளர் உதயச்சந்திரன் தாக்கல் செய்த பதில் மனுவில் கூறியிருப்பதாவது:-

எந்த அச்சமும் இல்லாமல் தேசிய அளவிலான போட்டி தேர்வுகளில் மாணவர்கள் பங்கேற்கும் வகையில் புதிய பாடத்திட்டங்களை மாற்றியமைக்க அரசு நடவடிக்கை எடுத்துள்ளது. பாடத்திட்டம் மற்றும் தேர்வு சீர்திருத்தம் தொடர்பாக பரிந்துரை அளிக்க 3 துணை குழுக்கள் அமைக்கப்பட்டு உள்ளன. புதிய பாடத்திட்டம், தமிழ்மொழிக்கு முக்கியத்துவம் கொடுத்து சி.பி.எஸ்.இ. பாடத்திட்டத்தை விட சிறப்பாக அமைக்கப்படும். இதற்காக செப்டம்பர் முதல் வாரத்தில், சர்வதேச மற்றும் தேசிய அளவில் உள்ள பாடத்திட்டங்கள் குறித்து ஆய்வு செய்யப்படும். இதன் அடிப்படையில் உருவாக்கப்படும் புதிய வரைவு பாடத்திட்டம், செப்டம்பர் 2-வது வாரத்தில் வெளியிடப்படும்.

அந்த புதிய பாடத்திட்டம் குறித்து ஆசிரியர்கள் மற்றும் மாணவர்களின் கருத்தை தெரிந்துகொள்ள ஒவ்வொரு பள்ளியிலும் கருத்துகேட்பு பெட்டிகள் வைக்கப்படும். இதைதொடர்ந்து, அக்டோபர் 2-வது வாரத்தில் மாநில பாடத்திட்டம் குறித்து ஆய்வு செய்து, 3-வது வாரத்தில், பாடப்புத்தகத்தை எழுதும் குழுவினர் மத்தியில், பாடத்திட்டம் குறித்து கருத்தரங்கு நடத்தப்படும். பின்னர், 1, 6, 9 மற்றும் பிளஸ்-1 வகுப்புகளுக்கு பாடப்புத்தகங்கள் எழுதும் பணி அக்டோபர் 4-வது வாரத்தில் தொடங்கி, ஜனவரி முதல் வாரத்தில் முடிக்கப்படும். 2018-ம் ஆண்டு ஜனவரி மாதம் அந்த பாடப்புத்தகங்கள் வடிவமைக்கும் பணியும், பிப்ரவரி முதல் ஏப்ரல் மாதம் வரை அந்த புத்தகங்களை அச்சடிக்கும் பணியும் மேற்கொள்ளப்படும்.

மே முதல் வாரத்தில், புதிய பாடத்திட்டத்தின் அடிப்படையில் உருவாக்கப்பட்டுள்ள பாடப்புத்தகங்கள் மாணவர்களுக்கு வழங்கப்படும். அதேபோல, 2, 7, 10 மற்றும் பிளஸ்-2 வகுப்புகளுக்கு புதிய பாடத்திட்டத்தை உருவாக்கி, அதன்படி புத்தகங்கள் அச்சடிக்கப்பட்டு 2019-ம் ஆண்டு மே முதல் வாரம் மாணவர்களுக்கு வழங்கப்படும்.

3, 4, 5, 8-ம் வகுப்புகளுக்கு புதிய பாடத்திட்டத்தை உருவாக்கி, அதன்படி புத்தகங்களை அச்சிட்டு, 2020-ம் ஆண்டு மே முதல் வாரத்தில் வினியோகம் செய்யப்படும். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது. பதில் மனுவை படித்து பார்த்த நீதிபதி என்.கிருபாகரன், இந்த வழக்கை செப்டம்பர் 18-ந் தேதிக்கு தள்ளிவைத்து உத்தரவிட்டார்.

பிளஸ் 1க்கு வினா வங்கி தயாரிப்பு பணிகள் தீவிரம்


பிளஸ் 1 பொதுத் தேர்வின் புதிய விதிகளின் படி, 32க்கும் மேற்பட்ட, வினாத் தொகுப்பு அடங்கிய வினா வங்கி வெளியிடப்படுகிறது. தமிழக தனியார் பள்ளிகளில், பிளஸ் 1ல், பிளஸ் 2வுக்கான வகுப்புகளை நடத்தியதால், மாணவர்கள் போட்டி தேர்வுகள், நுழைவு தேர்வுகளில் தேர்ச்சி பெற முடியவில்லை.

புதிய திட்டம் : வரும் ஆண்டுகளில், 'நீட்' மற்றும் ஜே.இ.இ., நுழைவு தேர்வுகளில், தமிழக மாணவர்கள் வெற்றி பெற, பள்ளிக் கல்வித் துறை புதிய திட்டங் களை வகுத்துள்ளது. இதன்படி, பிளஸ் 1க்கும் இந்த ஆண்டு முதல், பொது தேர்வு அறிவிக்கப்பட்டுள்ளது. மேலும், பிளஸ் 1 மதிப்பெண், பிளஸ் 2 தேர்ச்சிக்கு சேர்க்கப்படும் என, அறிவிக்கப்பட்டுள்ளது. அதேபோல், இந்த ஆண்டு பிளஸ் 1க்கும், அடுத்த ஆண்டு பிளஸ் 2வுக்கும், பாடவாரியாக தலா, 100 மதிப்பெண்ணாக குறைக்கப் பட்டுள்ளது.

வினாக்கள் அமையும் முறை, அகமதிப்பீட்டு மதிப்பெண் முறை, வினாத்தாள் தயாரிப்பு விதிகள் போன்றவை மாற்றப்பட்டு உள்ளன. இந்த விதிகளின்படி, பிளஸ் 1 பொது தேர்வு எப்படி இருக்கும் என, மாணவர்கள் குழப்பம் அடைந்துள்ளனர். அதற்கு தீர்வு காண, பிளஸ் 1 வகுப்புக்கு, வினா வங்கி புத்தகம் வெளியிடப்படுகிறது. உத்தரவு : இதுகுறித்து, மாநில கல்வியியல் ஆராய்ச்சி மற்றும் பயிற்சி நிறுவன இயக்குனர், அறிவொளி கூறியதாவது: மாவட்ட முதன்மை கல்வி அதிகாரிகள் மூலம், 32 மாவட்டங்களிலும், பிளஸ் 1 பாடத்திற்கு, பாட வாரியாக மாதிரி வினாக்கள் தயாரிக்க, பள்ளிக் கல்வித் துறை அமைச்சர் செங்கோட்டையன் மற்றும் செயலர் உதயசந்திரன் உத்தரவிட்டுள்ளனர். இந்த பணி முடிந்ததும், இரண்டு மாதங்களுக்குள், வினா வங்கி புத்தகம் வெளியிடப்படும்.இவ்வாறு அவர் கூறினார்.

வேலைவாய்ப்பு அலுவலக நடைமுறைகள் -2011முதல்2015 வரையிலான ஆண்டுகளில் பதிவு புதுப்பிக்கத் தவறியவர்களுக்கு சிறப்பு புதுப்பித்தல் சலுகை வழங்குதல்


Tuesday, August 22, 2017

இன்றைய தி இந்து-மாயாபஜார் பகுதியில் எம் பள்ளி மாணவியின் ஓவியம்

அரசு ஊழியர்கள், ஆசிரியர்கள் வேலைநிறுத்தம்: வெறிச்சோடிய அலுவலகங்கள்; கற்றல்-கற்பித்தல் பாதிப்பு


பழைய ஓய்வூதியத் திட்டத்தை மீண்டும் அமல்படுத்துவது உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி தமிழகத்தில் செவ்வாய்க்கிழமை நடைபெற்ற வேலைநிறுத்தப் போராட்டத்தில் 10 லட்சத்துக்கும் மேற்பட்ட ஆசிரியர்கள், அரசு ஊழியர்கள் கலந்துகொண்டனர். இதனால் அரசு அலுவலகங்கள் வெறிச்சோடி காணப்பட்டன. பள்ளிகளில் கற்பித்தல்- கற்றல் பாதிக்கப்பட்டது. புதிய ஓய்வூதியத் திட்டத்தைக் கைவிட்டு பழைய ஓய்வூதியத் திட்டத்தை தொடர வேண்டும். மத்திய அரசின் 7-வது ஊதியக்குழு பரிந்துரையை அமல்படுத்த வேண்டும்.

காலமுறை ஊதியம் வழங்க வேண்டும் என்பது உள்பட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி சென்னையில் கடந்த 5-ஆம் தேதி அரசு ஊழியர்கள், ஆசிரியர்கள் போராட்டம் நடத்தினர். ஒரு நாள் அடையாள வேலை நிறுத்தத்தில் செவ்வாய்க்கிழமை (ஆக.22) ஈடுபட்டனர். சென்னை நுங்கம்பாக்கம் டிபிஐ வளாகத்தில் நடைபெற்ற போராட்டத்தில் ஆயிரக்கணக்கான அரசு ஊழியர்கள், ஆசிரியர்கள் கலந்துகொண்டு கோரிக்கைகளை வலியுறுத்தி முழக்கமிட்டனர். இதனால் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

அலுவலக பணிகள் பாதிப்பு: போராட்டம் காரணமாக மாநிலம் முழுவதும் உள்ள வருவாய்த்துறை, கிராமநிர்வாகம், கல்வித்துறை என அரசுத்துறை சார்ந்த பெரும்பாலான அரசு அலுவலகங்கள் வெறிச்சோடிக் காணப்பட்டன. சென்னை தலைமைச் செயலகம், எழிலகம், மாவட்ட ஆட்சியர்அலுவலகங்களில் எந்தப் பணிகளும் நடைபெறவில்லை. இதனால் பல்வேறு விஷயங்களுக்காக அரசு அலுவலகங்களுக்கு வந்திருந்த பொதுமக்கள் ஏமாற்றத்துடன் திரும்பிச் சென்றனர்.

கற்றல்-கற்பித்தல் நடைபெறவில்லை: அரசுப் பள்ளிகளில் 90 சதவீத ஆசிரியர்கள் பணிக்கு வராததால் வகுப்புகள் நடைபெறவில்லை. இதனால் பகுதி நேர ஆசிரியர்கள், ஆசிரியர் பயிற்சி மற்றும் கல்வியியல் கல்லூரி மாணவர்கள் பள்ளிக்கு வந்தனர். ஈரோடு உள்ளிட்ட சில மாவட்டங்களில் தனியார் பள்ளி ஆசிரியர்கள் ஒருநாள் மட்டும் அரசுப் பள்ளிகளில் பணியில் ஈடுபட்டனர். எனினும் கற்றல், கற்பித்தல் பணிகள் பெரிதும் பாதிக்கப்பட்டன.

மாவட்டங்களில்... பல மாவட்டங்களில் உள்ள ஓராசிரியர் மற்றும் ஈராசிரியர் தொடக்கப் பள்ளிகளில் ஆசிரியர்கள் போராட்டத்தில் கலந்துகொண்டனர். இதனால் மாணவர்கள் வீடு திரும்பினர். வேலைநிறுத்தத்தையொட்டி சேலத்தில் அரசு ஊழியர்கள், ஆசிரியர்கள் உண்ணாவிரதப் போராட்டத்தில் ஈடுபட்டனர். சத்துணவுப் பணியாளர்களும் இந்தப் போராட்டத்தில் கலந்து கொண்டதால் பல பள்ளிகளில் மதிய உணவு வழங்கும் பணி பாதிக்கப்பட்டது.

போராட்டங்கள் தொடரும்... வேலைநிறுத்தப் போராட்டம் குறித்து ஜாக்டோ- ஜியோ கூட்டமைப்பு ஒருங்கிணைப்பாளர்கள் பெ.இளங்கோவன், ஜெ. கணேசன் ஆகியோர் செய்தியாளர்களிடம் கூறியது: போராட்டங்களுக்கு இதுவரை தமிழக அரசு செவி சாய்க்கவில்லை. இதனால் அடுத்தடுத்த போராட்டங்களைத் தொடர்ந்து நடத்தி வருகிறோம். கோரிக்கைகளை அரசு ஏற்காவிட்டால்...தமிழகம் முழுவதும் செவ்வாய்க்கிழமை நடைபெற்ற ஒருநாள் வேலைநிறுத்தப் போராட்டம் மிகப் பெரிய வெற்றி பெற்றுள்ளது. இதற்குப் பின்னரும் கோரிக்கைகளை அரசு ஏற்காவிட்டால், வரும் செப்டம்பர் 7-ஆம் தேதி முதல் காலவரையற்ற தொடர் வேலைநிறுத்தப் போராட்டத்தில் ஈடுபடுவோம் என்றனர். போராட்டம் காரணமாக தமிழகம் முழுவதும் 50 சதவீத அரசுப் பணியாளர்கள் பணிக்கு வரவில்லை என்று அரசுத்துறை அதிகாரிகள் தெரிவித்தனர்.

அரசு பள்ளிகள் கல்வி தரம் உயர மாநிலங்களுக்கு உதவ புது திட்டம்


மாணவர்கள் பாதியிலேயே படிப்பை நிறுத்துவதை தடுக்கும் வகையில், அரசு பள்ளிகளின் கல்வித் தரத்தை உயர்த்துவது குறித்து, மாநிலங்களுடன் இணைந்து செயல்பட, மத்திய அரசு புதிய திட்டத்தை வகுத்து வருகிறது. புதிய திட்டம் குறித்து, மத்திய மனிதவள மேம்பாட்டு துறை அமைச்சரும், பா.ஜ., மூத்த தலைவருமான, பிரகாஷ் ஜாவடேகர், நமது நாளிதழுக்கு அளித்துள்ள சிறப்பு பேட்டி:

ஐ.நா.,வின் 'யுனெஸ்கோ' எனப்படும், ஐ.நா., கல்வி, அறிவியல் மற்றும் கலாசார அமைப்பின் புள்ளி விபரங்களின்படி, நாட்டில், உயர்நிலை மற்றும் மேல்நிலைப் பள்ளி படிக்க வேண்டிய வயதில் உள்ள, 4.7 கோடி பேர், படிப்பை பாதியில் நிறுத்தி உள்ளனர். 'நிடி ஆயோக்' நடத்திய ஆய்வில், அருணாச்சல பிரதேசம், பீஹார், ஜம்மு - காஷ்மீர், ஜார்க்கண்ட், மத்திய பிரதேசம், மணிப்பூர், மேகாலயா, ராஜஸ்தான் மற்றும் உ.பி.,யில், பள்ளி படிப்பை பாதியில் நிறுத்துவோர் எண்ணிக்கை அதிகமாக உள்ளது. மதிய உணவுக்காக மட்டுமே, பள்ளிக்கு வருவோரும் உள்ளனர். மாணவர்களுக்கு படிப்பில் ஆர்வத்தை ஏற்படுத்தும் வகையில், பாடத்திட்டங்கள் இருக்க வேண்டும்.

அந்தந்த மாநிலத்தின் தன்மைக்கு ஏற்ப, இந்த பிரச்னைக்கு தீர்வு காணும் வகையில், அரசு பள்ளிகளின் கல்வித் தரத்தை உயர்த்த உள்ளோம். தற்போது, முதல்வர் யோகி ஆதித்யநாத் தலைமையிலான, பா.ஜ., ஆட்சி நடக்கும், உ.பி., அரசுடன், இதற்கான ஆலோசனைகள் நடக்கின்றன. தமிழகம் உள்ளிட்ட தென் மாநிலங்களை விட, வட மாநிலங்களில், கல்வித் தரம் மோசமாக உள்ளது. அதனால், வட மாநிலங்களில், முதலில் இந்த திட்டத்தை செயல்படுத்த உள்ளோம். மாநில அரசு களுடன் ஆலோசனை நடத்தி, அந்தந்த மாநிலத்தில் கல்வித் தரத்தை உயர்த்துவதற்கு தேவையான நிபுணர்களின் ஆலோசனைகள் வழங்கப்படும்; தேவைப்பட்டால், நிதியும் ஒதுக்கப்படும்.

அரசு பள்ளிகளின் கல்வித் தரம் உயர்ந்தால், மாணவர்கள் படிப்பை பாதியிலேயே நிறுத்துவதை தடுக்க முடியும். அது தான், நாட்டு மக்களுக்கு நாம் செய்யும் நியாயம். இத்திட்டத்தின் கீழ், கற்பிக்கும் திறனை வளர்க்க, ஆசிரியர்களுக்கும் வாய்ப்பு தரப்படும். மாணவர்களின் கற்கும் திறனை வளர்ப்பதற்கான வழிமுறைகள் அடங்கிய கையேடுகள், ஆசிரியர்களுக்கு வழங்கப்படும். இதுதவிர, துவக்கப் பள்ளி ஆசிரியர்களுக்கான, 'டிப்ளமா' படிப்பும் அறிமுகப்படுத்தப்பட்டு உள்ளது; இதற்கு பதிவு செய்வதற்கு, செப்., 15 வரை அவகாசம் உள்ளது. இவ்வாறு அவர் கூறினார். கூடுதல் கே.வி., பள்ளிகள் : மத்திய அரசின் மனிதவள மேம்பாட்டு துறை சார்பில், நாடு முழுவதும், 1,094 கேந்திரிய வித்யாலயா பள்ளிகளும், வெளிநாடுகளில், மூன்று பள்ளிகளும் இயங்குகின்றன. கேந்திரிய வித்யாலயா பள்ளிகளை, அதிகளவில் துவக்க வேண்டும் என்ற கோரிக்கைகள் அதிகரித்துள்ளன.

அதனால், கூடுதல் பள்ளிகள் துவக்க திட்டமிடப்பட்டு உள்ளது. ''அதிக முதலீடுகள் இல்லாமல், கேந்திரிய வித்யாலயா பள்ளிகளின் எண்ணிக்கையை உயர்த்துவது குறித்து ஆராய்ந்து வருகிறோம்,'' என்றார், பிரகாஷ் ஜாவடேகர்.

ஜனவரிக்குள் புதிய பாடத்திட்டம் கலைத்திட்ட குழு தலைவர் தகவல்


வரும், ஜனவரிக்குள் புதிய பாடத்திட்டம் உருவாக்கப்படும்,'' என, பள்ளிக்கல்வி கலைத்திட்ட குழு தலைவர், அனந்த கிருஷ்ணன் தெரிவித்து உள்ளார். புதிய பாடத்திட்டம் குறித்து, எட்டு மாவட்டங் களுக்கான கருத்தறியும் கூட்டம், சென்னையில் நேற்று நடந்தது. இதில், பங்கேற்ற கலைத்திட்ட குழு தலைவரும், அண்ணா பல்கலை முன்னாள் துணைவேந்தருமான, அனந்த கிருஷ்ணன் கூறியதாவது:

தமிழக பள்ளிகளில், இதுவரை மதிப்பெண் பெறுவதற்காக மட்டும், பாடங்களை நடத்தி வந்துள்ளனர். தேசிய நுழைவு தேர்வு அதனால், படிப்பின் மீது, மாணவர்களுக்கு ஈர்ப்புஇல்லாமல் போய்விட்டது. மேலும், தேசிய நுழைவுத் தேர்வு மற்றும் போட்டித் தேர்வுகளையும் எதிர்கொள்ள முடியவில்லை.இதை, மாற்றும் வகையில், தமிழக பள்ளிகளில் கல்வித்திட்டம் மாற்றி அமைக்கப்படும்; அதற்கான முயற்சிகளில் ஈடுபட்டுள்ளோம். வரும் கல்வி ஆண்டில், ஒன்று, ஆறு, ஒன்பது மற்றும் பிளஸ் 1 வகுப்புகளுக்கு, புதிய பாடத்திட்டம் அறிமுகமாகும். இந்த வகுப்புகளுக்கு, ஜனவரிக்குள், பாடத்திட்ட தயாரிப்பை முடிக்க திட்டமிட்டுள்ளோம்.

மதிப்பீட்டு முறை தேர்வு முறையிலும், மதிப்பீட்டு முறையிலும் மாற்றம் கொண்டு வரப்படும். பள்ளிகளின் உள் கட்டமைப்பு மேம்பாடு, பள்ளிக்கல்வி வளர்ச்சிக்கு தேவையான நிதி மற்றும் செலவு திட்டங்கள், தேர்வு நடத்தும் முறை ஆகியவற்றுக்கும், அரசுக்கு வழிகாட்டுதல் வழங்கப்படும். கருத்தறியும் கூட்டங்களில், ஆசிரியர்கள், மாணவர்கள் மற்றும் பெற்றோர் கூறிய கருத்துக்கள் ஆராயப்பட்டு, அவற்றையும் இந்த பாடத்திட்டத்தில் கொண்டு வர முயற்சிப்போம்.இவ்வாறு அவர் கூறினார்.