இலவச SMS களை உடனுக்குடன் பெற ON tnptfmani என்று type செய்து 9870807070 என்ற எண்ணிற்கு அனுப்பி இலவச குறுந்தகவல்களை(SMS) பெறுங்கள். DND (Do NOT Disturb) சர்வீஸ்ல் உள்ள எண்கள் அதனை(DND) நீக்கிய பிறகே இச்சேவையை பெறமுடியும். plz call 1909

Friday, August 18, 2017

பிளஸ் 1 மதிப்பெண் முறையில் புதிய மாற்றங்கள் : அரசு உத்தரவு வெளியீடு


பிளஸ் 1 வகுப்பில் மாணவர்களின் வருகைப் பதிவுக்கும் மதிப்பெண் வழங்கப்படவுள்ளது. இதுகுறித்து அரசாணையில் கூறப்பட்டுள்ளதாவது: தொடர்ச்சியான கற்றலுக்கு மாணவர்களின் வருகைப்பதிவு முக்கியமானதாகும். இதைக் கருத்தில் கொண்டு, தொழிற்கல்வி செய்முறைத் தேர்வு இல்லாத பாடத்துக்கு அகமதிப்பீடு மதிப்பெண்ணாக 10 மதிப்பெண்கள் வழங்கலாம்.

அவற்றில் மாணவர்கள் வருகைப் பதிவுக்கு அதிகபட்சமாக 3 மதிப்பெண்கள் வழங்கப்படும். 85 சதவீதத்திற்கு மேல் வருகை புரிந்த மாணவர்களுக்கு 3 மதிப்பெண்கள், 80 -85 சதவீதம் வரை வருகைப் புரிந்தவருக்கு 2 மதிப்பெண்களும், 75 - 80 சதவீதம் வரை வருகை புரிந்தவர்களுக்கு 1 மதிப்பெண்கள் வழங்கப்படும். உள்நிலைத்தேர்வில் அதிகபட்சமாக 5 மதிப்பெண்கள் வழங்கப்படும். சிறந்த ஏதேனும் 3 தேர்வுகளின் சராசரி மதிப்பெண்ணை 5 மதிப்பெண்களுக்குக் கணக்கிடப்பட்டு வழங்கப்பட வேண்டும். ஒப்படைவு, செயல் திட்டம், களப்பயணம் ஆகியவற்றில் அதிகபட்சமாக 2 மதிப்பெண்கள் அளிக்கப்பட வேண்டும்.

தொழிற்கல்வி செய்முறைப் பாடத்துக்கான அகமதிப்பீட்டு மதிப்பெண்கள் அதிகபட்சம் 25 வழங்கலாம். அவற்றில் மாணவர்கள் வருகைப்பதிவுக்கு அதிகபட்சமாக 5 மதிப்பெண்கள் வழங்கப்படும். 85 சதவீதத்திற்கு மேல் வருகைப் புரிந்த மாணவர்களுக்கு 5 மதிப்பெண்கள், 80 - 85 சதவீதம் வரை வருகை புரிந்தவருக்கு 4 மதிப்பெண்களும், 75 -80 சதவீதம் வரை வருகை புரிந்தவர்களுக்கு 2 மதிப்பெண்கள் வழங்கப்படும். உள்நிலைத் தேர்வில் அதிகப்பட்சமாக 15 மதிப்பெண்கள் வழங்கப்படும். சிறந்த ஏதேனும் 3 தேர்வுகளின் சராசரி மதிப்பெண்ணை 15 மதிப்பெண்களுக்குக் கணக்கிடப்பட்டு வழங்கப்பட வேண்டும். ஒப்படைவு, செயல்திட்டம், களப்பயணம் ஆகியவற்றில் அதிகப்பட்சமாக 5 மதிப்பெண்கள் அளிக்கப்பட வேண்டும்.

வினாத்தாள் வடிவமைப்பு: வினாத்தாள் வடிவமைப்பினைப் பொருத்தவரையில், உயிரியல் பாடத்தில் (தாவரவியல், விலங்கியல்) ஆகிய 2 பாடத்துக்கு தலா 35 மதிப்பெண்கள் கணக்கிடப்பட்டுள்ளது. அதில் ஒரு மதிப்பெண் வினாக்கள் 8, இரு மதிப்பெண் வினாக்கள் 4, மூன்று மதிப்பெண் வினாக்கள் 3, ஐந்து மதிப்பெண் வினாக்கள் 2 என கேட்கப்பட வேண்டும். வினாத்தாள் வடிவமைப்பு தொழிற்கல்விக்கு ஒரு மதிப்பெண்ணில் 15-ம், மூன்று குறுவினாக்கள் மதிப்பெண்ணில் 10-ம், சிறுவினாக்கள் 5 மதிப்பெண்ணுக்கு 5-ம், பெருவினாக்கள் 10 மதிப்பெண்ணுக்கு 2-ம் என 90 மதிப்பெண்ணிற்கு கேட்கப்பட உள்ளது. செய்முறைத் தேர்வு இல்லாத பாடங்களுக்கு ஒரு மதிப்பெண்ணில் 20 கேள்வியும், குறுவினாக்களுக்கு 2 மதிப்பெண்ணில் 7 கேள்வியும், சிறு வினாக்களுக்கு 3 மதிப்பெண்ணில் 7 கேள்வியும், பெரு வினாக்கள் 5 மதிப்பெண்ணில் 7 கேள்வியும் என 90 மதிப்பெண்ணிற்கு வினாக்கள் இடம் பெறும். செய்முறைத் தேர்வு உள்ள பாடங்களுக்கு ஒரு மதிப்பெண்ணில் 15 கேள்வியும், குறுவினாக்களுக்கு 2 மதிப்பெண்ணில் 6 கேள்வியும், சிறு வினாக்களுக்கு 3 மதிப்பெண்ணில் 6 கேள்வியும், பெரு வினாக்கள் 5 மதிப்பெண்ணில் 5 கேள்விகளும் என 70 மதிப்பெண்ணிற்கு கேள்விகள் இடம் பெறும். கற்றலின் நோக்களை மதிப்பெண்களாக அறிந்து கொள்வதற்கு 30 சதவீதமும், புரிந்து கொள்வதற்காக 40 சதவீதமும், பயன்படுத்துதல் 20 சதவீதமும், திறனடைதல், படைப்பாற்றல் 10 சதவீதமும் அளிக்கப்படும். ஒரு மதிப்பெண், 2 மதிப்பெண், 3 மதிப்பெண், 5 மதிப்பெண் வினாக்கள் என ஒவ்வொரு பிரிவிலும் வினாக்கள் வடிவமைக்கப்படும்போது கற்றல் நோக்கங்களுக்காக ஒதுக்கீட்டு செய்யப்பட்டுள்ள மதிப்பெண்களின் அடிப்படையில், ஒவ்வொரு பிரிவிலும் வினாக்கள் இடம் பெறும் வகையில் வினாத்தாள் வடிவமைக்கப்பட வேண்டும் என்று தனது உத்தரவில் உதயச்சந்திரன் தெரிவித்துள்ளார்.

ஆசிரியர் சங்கங்கள் தொடங்குவதை தடை செய்ய முடியாது: உயர்நீதிமன்றத்தில் பள்ளிக் கல்வித் துறை தகவல்


ஆசிரியர் சங்கங்கள் தொடங்குவதைத் தடை செய்ய முடியாது என சென்னை உயர்நீதிமன்றத்தில் பள்ளிக் கல்வித் துறை தெரிவித்துள்ளது. தஞ்சாவூர் மாவட்டம், பந்தநல்லூரில் உள்ள அரசு உதவி பெறும் நடுநிலைப் பள்ளியில் ஆங்கில வழி வகுப்புகள் தொடங்க அனுமதி மறுத்து அரசு பிறப்பித்த உத்தரவை எதிர்த்து சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்குத் தொடரப்பட்டது.

இந்த வழக்கை விசாரித்த நீதிபதி என். கிருபாகரன், அரசுப் பள்ளி ஆசிரியர்கள் தங்கள் குழந்தைகளை அரசு பள்ளியிலே சேர்க்க வேண்டும் என்பதை கட்டாயம் ஆக்காதது ஏன்? ஆங்கில வழி வகுப்பை நடத்த பயிற்சி பெற்ற ஆசிரியர்கள் நியமிக்கப்பட்டிருக்கிறார்களா? அரசுப் பள்ளி, அரசு உதவி பெறும் பள்ளிகளில் ஆசிரியர்கள் சங்கங்கள் தொடங்குவதை ஏன் தடை செய்யக் கூடாது என்பன உள்ளிட்ட 20 கேள்விகளுக்குப் பதிலளிக்குமாறு கடந்த ஜூன் 27-ஆம் தேதி உத்தரவிட்டிருந்தார். இதற்கு தமிழக அரசின் பள்ளிக் கல்வித் துறை சார்பில் அளிக்கப்பட்ட பதில் விவரம்:

முன்பு அரசுப் பள்ளிகளில்தான் உள்கட்டமைப்பு வசதிகள் அதிகளவில் இருந்தன. அப்போது, பெரும்பான்மையாக மிஷனரிகள்தான் தனியார் பள்ளிகளை நடத்தி வந்தன. தற்போது, தனியார் பள்ளிகள் அதிகரித்துள்ளன. இந்தப் பள்ளிகளில் கல்வித் தரம், செயல்பாடு, ஒழுக்கம் இருப்பதாக பெற்றோர் கருதுகின்றனர். முன்பு, சமூகக் கண்ணோட்டத்துடனும், சேவை மனப்பான்மையுடனும் தனியார் பள்ளிகள் தொடங்கப்பட்டன. ஆனால், தற்போது அந்த நோக்கமே இல்லாமல் போய் விட்டது. அரசுப் பள்ளிகள் பற்றிய பொதுமக்களின் பார்வையும் மாற வேண்டும். மாநில அரசின் கல்வி நிர்வாகத்துக்குப் பொதுமக்கள் முக்கியத்துவம் கொடுக்க வேண்டும். தனியார் பள்ளிகளில் படித்தால்தான் ஆங்கிலப் புலமை கிடைக்கும் என்ற எண்ணம் பெற்றோர் மத்தியில் உள்ளது. இது தவறான புரிதல். தமிழகத்தில் 64.16 சதவீதத்தினர் அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளில்தான் படிக்கின்றனர். தனியார் பள்ளிகளில் 35.84 சதவீதத்தினர் மட்டுமே படிக்கின்றனர்.

அரசுப் பள்ளிகளில் கல்வித் தரத்தை அதிகரிக்க அரசு அனைத்து முயற்சிகளையும் எடுத்து வருகிறது. 2017 - 18-ஆம் ஆண்டில் மாநிலம் முழுவதும் உள்ள 3 ஆயிரம் பஞ்சாயத்து ஒன்றிய தொடக்கப் பள்ளிகளில் நவீன வகுப்புகளை ('ஸ்மார்ட் க்ளாஸ்') தொடங்க அரசு திட்டமிட்டுள்ளது. சுமார் 3 ஆயிரத்து 90 உயர் நிலைப் பள்ளிகளிலும், 2 ஆயிரத்து 939 மேல்நிலைப் பள்ளிகளிலும், ரூ.437 கோடியே 78 லட்சம் செலவில் அதி நவீன ஆய்வகங்கள் தொடங்கவும் அரசு திட்டமிட்டுள்ளது. அரசுப் பள்ளி ஆசிரியர்கள் அவர்களின் குழந்தைகளை அரசுப் பள்ளிகளில் சேர்த்தால், அரசுப் பள்ளிகளின் தரத்தை மேம்படுத்த முடியும் என்ற உயர் நீதிமன்றத்தின் எதிர்பார்ப்பு நியாயமானதுதான்.

ஆனால், ஆசிரியரும் ஒரு பெற்றோர் தான். அந்த வகையில், அவர்கள் விருப்பப்படி குழந்தைகள் படிக்கும் பள்ளியைத் தேர்ந்தெடுக்கும் உரிமை அவர்களுக்கு உள்ளது. அந்த உரிமை அடிப்படை உரிமையும் கூட. அரசுப் பள்ளி ஆசிரியர்கள் மத்தியில் மனமாற்றம் ஏற்பட்டு, அவர்களாகவே தங்கள் குழந்தைகளை அரசுப் பள்ளிகளில் சேர்த்தால் மட்டுமே நீதிமன்றத்தின் கருத்து நினைவாகும். தற்போதுகூட, பல அரசுப் பள்ளி ஆசிரியர்கள், தங்கள் குழந்தைகளை அரசுப் பள்ளிகளில் சேர்த்துள்ளனர். கடந்த 2011 முதல் 2016-ஆம் ஆண்டு வரை 19 ஆயிரத்து 716 பட்டதாரி ஆசிரியர்களும், 11 ஆயிரத்து 459 இடைநிலை ஆசிரியர்களும் நியமிக்கப்பட்டுள்ளனர். தவறிழைக்கும் ஆசிரியர்களிடம் மெமோ கொடுத்தல், ஊதிய உயர்வு நிறுத்தம் உள்ளிட்ட தண்டனைகள் விதிக்கப்படுகின்றன. இது தவிர, தொடர்ந்து கடமையைச் செய்யத் தவறுவோருக்கு எதிராக இடைநீக்கம், பணி நீக்கம் போன்ற நடவடிக்கைககளும் எடுக்கப்படுகின்றன. அந்த வகையில் 32 மாவட்டங்களிலும், கடந்த 2013 முதல் 2017-ஆம் ஆண்டு வரை, சரியான நேரத்திற்கு பள்ளிக்கு வராத 300 ஆசிரியர்கள் மீதும், கடமை தவறியதாக 610 ஆசிரியர்கள் மீதும் என மொத்தம் 910 ஆசிரியர்களுக்கு எதிராக ஒழுங்கு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. ஏற்கெனவே பள்ளி நேரத்தில் ஆசிரியர்கள் செல்லிடப்பேசிகள் பயன்படுத்தத் தடை விதித்து, கடந்த 2016-ஆம் ஆண்டு தொடக்கக் கல்வி இயக்குநர் உத்தரவு பிறப்பித்துள்ளார்.

அந்த உத்தரவு தீவிரமாக அமல்படுத்தப்பட்டு வருகிறது. காவல் துறையினர் மற்றும் ராணுவத்தினர் சங்கம் அமைக்க தடை விதிக்கப்பட்டுள்ளதைப் போல, ஆசிரியர்கள் சங்கம் அமைக்கத் தடை விதிக்க வேண்டும் என்பது ஏற்றுக் கொள்ளத்தக்கதல்ல. பிற அமைப்பு சார்ந்த தொழிலாளர்களுக்கு உள்ள உரிமைகள் ஆசிரியர்களுக்கு மறுக்க முடியாது. அவ்வாறு மறுப்பது, பாரபட்சமானது. தேவைகள், குறைகள் குறித்து சம்பந்தப்பட்ட அதிகாரிகளின் கவனத்திற்குக் கொண்டு சென்று தீர்வு பெற சங்கங்கள் அவசியம். ஜனநாயக சமுதாயத்தில் ஒவ்வொரு பிரிவும் சங்கம் அமைக்க உரிமை உள்ளது. தடை விதிப்பதால், எந்தப் பலனும் இருக்கப் போவதில்லை. அப்படித் தடை விதித்தால் அதை எதிர்த்து ஏராளமான வழக்குகள் தாக்கல் செய்ய வாய்ப்புள்ளது. மாணவர்கள் கவனிக்கக் கூடும் என்பதால் ஆசிரியர் சங்கங்களின் போராட்டங்கள் கண்ணியத்துடன் இருக்க வேண்டும் எனவும் அரசு அறிவுறுத்தியுள்ளதாக நீதிபதி எழுப்பிய 20 கேள்விகளுக்கு விரிவான பதிலை கல்வித்துறை அளித்துள்ளது.

நிறைவுபெற்றது ஒட்டுமொத்த பி.இ. கலந்தாய்வு: 90 ஆயிரம் காலியிடங்கள்


ஒட்டுமொத்த பி.இ. கலந்தாய்வு வெள்ளிக்கிழமையுடன் (ஆக.18) நிறைவு பெற்ற நிலையில் , 90 ஆயிரம் இடங்கள் மாணவர் சேர்க்கை இன்றி காலியாக உள்ளன. 2017-18 கல்வியாண்டுக்கான பி.இ. கலந்தாய்வை அண்ணா பல்கலைக்கழகம் நடத்தியது. கலந்தாய்வு கடந்த ஜூலை 17-ஆம் தேதி தொடங்கியது.

முதலில் பிளஸ் 2 தொழில் பிரிவு மாணவர்களுக்கு சேர்க்கை நடத்தப்பட்டது. இதில் 1,481 பேர் சேர்ந்தனர். அதனைத் தொடர்ந்து மாற்றுத்திறனாளி மாணவர்களுக்கு சேர்க்கை நடத்தப்பட்டது. இதில் 162 பேர் சேர்ந்தனர். பின்னர், விளையாட்டுப் பிரிவு மாணவர்களுக்கு நடைபெற்ற சேர்க்கையில் 371 பேர் சேர்ந்தனர். 86,355 மாணவர்கள் சேர்ந்தனர்: பொதுப் பிரிவு மாணவர்களுக்கான கலந்தாய்வு கடந்த ஜூலை 23-ஆம் தேதி தொடங்கி ஆகஸ்ட் 11-ஆம் தேதி வரை நடைபெற்றது. இதில் 86,355 மாணவ, மாணவிகள் சேர்ந்தனர். பின்னர் பிளஸ் 2 பொதுத் தேர்வில் தோல்வியடைந்து, உடனடித் தேர்வு மூலம் தேர்ச்சி பெற்றவர்களுக்கான பி.இ. துணைக் கலந்தாய்வு கடந்த ஆகஸ்ட் 17-ஆம் தேதி நடத்தப்பட்டது.

இதில் 3,708 பேர் சேர்ந்தனர். இறுதியாக, நிரம்பாத அருந்ததியினர் (எஸ்சிஏ) இடங்களில் எஸ்.சி. பிரிவு மாணவர்களைச் சேர்ப்பதற்கான கலந்தாய்வு வெள்ளிக்கிழமை நடத்தப்பட்டது. இதில் 106 பேர் சேர்ந்தனர். கலந்தாய்வில் இடம்பெற்றிருந்த அரசு ஒதுக்கீட்டு இடங்களில் 90 ஆயிரம் இடங்கள் மாணவர் சேர்க்கை இன்றி காலியாக உள்ளன. இதில் சுயநிதிப் பொறியியல் கல்லூரிகளின் 89 ஆயிரம் இடங்களும் அடங்கும்.

கல்வி உதவித்தொகை பெற இறுதி தேதி அறிவிப்பு


பள்ளி மற்றும் கல்லுாரி மாணவர்களுக்கான, கல்வி உதவித்தொகைக்கு விண்ணப்பிக்க, கடைசி தேதியை மத்திய அரசு அறிவித்துள்ளது. பள்ளி, கல்லுாரி மாணவர்களுக்கு, மாநில அரசு பல்வேறு திட்டங்களின் கீழ், கல்வி உதவித்தொகைகளை வழங்கி வருகிறது. பெரும்பாலான கல்வி உதவித்தொகை திட்டங்களை, மத்திய அரசு வழங்குகிறது. ஆனால், சில பள்ளிகள், மாணவர்களை கணக்கு காட்டி உதவித்தொகை பெற்று, அவற்றை மாணவர்களிடம் வழங்காமல், ஏமாற்றுவதாக புகார்கள் எழுந்தன.இதை தொடர்ந்து, கல்வி உதவித்தொகையை மாணவர்களின் வங்கிக்கணக்கில் நேரடியாக செலுத்தும் திட்டத்தை, சில ஆண்டுகளுக்கு முன், மத்திய அரசு அறிமுகம் செய்தது.

அதேபோல், மாணவர்கள் நேரடியாக விண்ணப்பிக்கும் வகையில், ஆன் - லைன் விண்ணப்ப பதிவு முறையும் துவங்கப்பட்டது.மாணவர்கள், scholarships.gov.in என்ற இணையதளத்தில், கல்வி உதவித்தொகைக்கு விண்ணப்பிக்கலாம். ஒவ்வொரு திட்டத்திலும் வழங்கப்படும் தொகை எவ்வளவு; தகுதியானவர்கள் யார் போன்ற விபரங்கள், இணையதளத்தில் உள்ளன.ஏற்கனவே, இணையதளத்தில் பதிவு செய்து, உதவித்தொகை பெறும் மாணவர்கள், இந்த ஆண்டுக்கு புதுப்பிக்க, வரும், 31ம் தேதிக்குள் பதிவு செய்ய வேண்டும். அதே போல், புதிதாக விண்ணப்பிப்போர், அக்., 31க்குள் விண்ணப்பிக்க வேண்டும் என, மத்திய மனிதவள அமைச்சகம் அறிவித்துள்ளது

பிளஸ் 1 பொதுத்தேர்வில் தேர்ச்சி பெற 35 மதிப்பெண்கள்் : தமிழக அரசு உத்தரவு


பிளஸ் 1 பொதுத் தேர்வில், தேர்ச்சி பெற, ஒவ்வொரு பாடத்திலும், குறைந்தபட்சம், 35 மதிப்பெண்கள் எடுக்க வேண்டும் என, அரசு உத்தரவிட்டுள்ளது. நடப்பாண்டு, பிளஸ் 1 வகுப்பிற்கு, மாநில அளவில், பொதுத் தேர்வு நடைபெற உள்ளது. இதற்கான வழிகாட்டு நெறிமுறைகள் நேற்று அரசால் வெளியிடப்பட்டது. அதில் கூறியிருப்பதாவது:l

தேர்ச்சி பெற, மொழிப் பாடங்களில், தாள் ஒன்று மற்றும் தாள் இரண்டை, கண்டிப்பாக எழுத வேண்டும். இரு தாள்களிலும் சேர்த்து, எழுத்து தேர்வில், சராசரியாக கணக்கிடப்படும், 100 மதிப்பெண்களுக்கு, குறைந்தபட்சம், 35 மதிப்பெண்கள் பெற்று இருக்க வேண்டும். தாள்களும் சேர்த்து, எழுத்து தேர்வின், சராசரி மதிப்பெண்ணான 90 மதிப்பெண்களுக்கு, குறைந்தபட்சம், 25 மதிப்பெண்கள் பெற்றிருக்க வேண்டும் l செய்முறைத் தேர்வு உள்ள பாடங்களில், எழுத்து தேர்வில், 70 மதிப்பெண்களுக்கு, குறைந்தபட்சம், 15 மதிப்பெண்கள் பெற வேண்டும். செய்முறை வகுப்புகளில் பங்கேற்று, செய்முறை பொதுத் தேர்வு எழுதி இருக்க வேண்டும்.எழுத்து தேர்வு, அக மதிப்பீடு, செய்முறைத் தேர்வு ஆகியவற்றில், ஒட்டுமொத்தமாக குறைந்தபட்சம், 35 மதிப்பெண்கள் பெற்று இருக்க வேண்டும்

செய்முறைத் தேர்வு இல்லாத பொதுப்பாடங்கள் மற்றும் தொழிற்கல்வி எழுத்துத் தேர்வு பாடங்களில், தேர்ச்சி பெற, எழுத்து தேர்வில், 90 மதிப்பெண்களுக்கு, குறைந்தபட்சம், 25 மதிப்பெண்கள் பெற வேண்டும். அக மதிப்பீடு, எழுத்து தேர்வு ஆகியவற்றில், ஒட்டுமொத்தமாக, குறைந்த பட்சம், 35 மதிப்பெண்கள் பெற்றிருக்க வேண்டும் l தொழிற்கல்வி செய்முறை தேர்வில், 75 மதிப்பெண்களுக்கு, குறைந்தபட்சம், 20 மதிப்பெண்கள் பெற வேண்டும். அக மதிப்பீடு, செய்முறைத் தேர்வு ஆகியவற்றில், ஒட்டுமொத்தமாக, குறைந்த பட்சம், 35 மதிப்பெண்கள் பெற்றிருக்க வேண்டும் எழுத்து தேர்விற்கு, செய்முறைத் தேர்வு உள்ள பாடங்களில், 70 மதிப்பெண்களும், செய்முறைத் தேர்வு இல்லாத பொதுப்பாடங்கள் மற்றும் தொழிற்கல்வி பாடங்களின் எழுத்து தேர்விற்கு, 90 மதிப்பெண்களும், ஒதுக்கீடு செய்யப் பட்டுள்ளன.

மொழிப் பாடங்களில், எழுத்து தேர்விற்கான, இரு தாள்களுக்கும், தலா, 90 மதிப்பெண்கள் ஒதுக்கீடு செய்யப்பட்டு உள்ளது. l செய்முறைத் தேர்வு இல்லாத பாடங்களுக்கான வினாத்தாளில், ஒரு மதிப்பெண் வினாக்கள், 20; இரு மதிப்பெண் குறு வினாக்கள் ஏழு; மூன்று மதிப்பெண், சிறு வினாக்கள் ஏழு; ஐந்து மதிப்பெண் பெரு வினாக்கள் ஏழு, ஆகியவற்றுக்கு விடை அளிக்க வேண்டும் l செய்முறைத் தேர்வு உள்ள பாடங்களுக்கான வினாத்தாளில், ஒரு மதிப்பெண் வினாக்கள்,15; இரு மதிப்பெண் குறு வினாக்கள் ஆறு; மூன்று மதிப்பெண் சிறு வினாக்கள் ஆறு, ஐந்து மதிப்பெண் பெரு வினாக்கள் ஐந்து ஆகியவற்றுக்கு விடை அளிக்க வேண்டும். இவ்வாறு அரசாணையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Part time teachers salary increased to Rs.7700/- from Rs.7000. GO

Thursday, August 17, 2017

திட்டமிட்டபடி ஆக.22 -இல் வேலை நிறுத்தம்: ஜாக்டோ ஜியோ அறிவிப்பு


அரசு ஊழியர்கள், ஆசிரியர்களுக்கு பழைய ஓய்வூதியத் திட்டத்தை மீண்டும் நடைமுறைப்படுத்த வேண்டும் என்பது உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி, திட்டமிட்டபடி ஆகஸ்ட் 22 -ஆம் தேதி ஒருநாள் அடையாள வேலைநிறுத்தப் போராட்டம் நடைபெறும் என அரசு ஊழியர், ஆசிரியர் கூட்டமைப்பான ஜாக்டோ -ஜியோ அறிவித்துள்ளது. 'பங்களிப்பு ஓய்வூதியத் திட்டத்தை ரத்து செய்துவிட்டு, அரசு ஊழியர்கள், ஆசியர்களுக்கு ஏற்கெனவே நடைமுறையில் இருந்த பழைய ஓய்வூதிய திட்டத்தை செயல்படுத்த வேண்டும்; ஊதிய முரண்பாடுகளைக் களைந்து, ஊதியக்குழுவின் பரிந்துரைகளை முழுமையாக அமல்படுத்த வேண்டும்; இடைப்பட்ட காலத்தில் இடைக்கால நிவாரணமாக 20 சதவீத ஊதியம் வழங்கப்பட வேண்டும்' ஆகிய 3 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி இந்த வேலை நிறுத்தம் நடைபெறவுள்ளது.

இதுகுறித்து ஜாக்டோ ஜியோ அமைப்பின் ஒருங்கிணைப்பாளர்கள் ஜெ.கணேசன், பெ.இளங்கோவன் ஆகியோர் செய்தியாளர்களிடம் வியாழக்கிழமை கூறியது:

எங்களது கோரிக்கைகளை வலியுறுத்தி கடந்த 5 -ஆம் தேதி, சென்னை சேப்பாக்கத்தில் பிரமாண்ட ஆர்ப்பாட்டத்தை நடத்தினோம். பல்வேறு தடைகளைக் கடந்து நடைபெற்ற இந்த ஆர்ப்பாட்டத்தில் பல்லாயிரக்கணக்கான ஆசிரியர்கள், அரசு ஊழியர்கள் கலந்துகொண்டு கோரிக்கைகளை வலியுறுத்தி குரல் கொடுத்தனர். இதற்குப் பிறகாவது எங்களுடன்அரசு பேச்சுவார்த்தை நடத்தும் என காத்திருந்தோம்.

ஆனால் அது நடைபெறவில்லை. இதனால் திட்டமிட்டபடி ஆகஸ்ட் 22 -ஆம் தேதி, தமிழகம் முழுவதும் அரசு ஊழியர்கள், ஆசிரியர்களின் ஒரு நாள் அடையாள வேலை நிறுத்தம் நடைபெறும். இதற்காக கூட்டமைப்பில் இடம்பெற்றுள்ள அனைத்து சங்கங்களின் நிர்வாகிகள், உறுப்பினர்களைச் சந்தித்து அழைப்பு விடுத்து வருகிறோம். மேலும் அடையாள வேலை நிறுத்தத்தின்போது, அனைத்து தாலுகாக்களிலும் ஆர்ப்பாட்டங்கள் நடத்தவும் முடிவு செய்யப்பட்டுள்ளது. இதில் லட்சணக்கான ஊழியர்கள் பங்கேற்கவுள்ளனர்.

அதன் பின்னரும் எங்களது கோரிக்கைகள் நிறைவேற்றப்படாவிட்டால், செப்டம்பர் 7 -ஆம் தேதி முதல், காலவரையற்ற வேலை நிறுத்தப் போராட்டத்தில் ஈடுபடுவோம் என அவர்கள் தெரிவித்தனர்.

மாணவர்களுக்கு அப்துல்கலாம் விருது


அப்துல்கலாம் விருதுக்கு, புதிய கண்டுபிடிப்பு மற்றும் ஆராய்ச்சிகளை சமர்ப்பிக்கலாம்' என, மத்திய அறிவியல் தொழில்நுட்பத்துறை அறிவித்துள்ளது. இந்திய முன்னாள் ஜனாதிபதி அப்துல் கலாமின், பிறந்த நாளான, அக்., 15, குழந்தைகளின் படைப்புத்திறன் மற்றும் கண்டுபிடிப்புக்கான நாளாக கொண்டாடப்படுகிறது. இதற்காக, மத்திய அறிவியல் தொழில்நுட்பத் துறை சிறப்பு திட்டங்களை வகுத்துள்ளது. இந்த துறையின் கீழ் செயல்படும், தேசிய புதிய கண்டுபிடிப்புக்கான அறக்கட்டளை, அப்துல் கலாம் பெயரில், அறிவியல் விருது வழங்குகிறது.

இந்த ஆண்டுக்கான விருதுக்கு, மாணவர்கள் விண்ணப்பிக்கலாம். தினசரி வாழ்க்கையில் உள்ள பிரச்னைகளை சரி செய்வதற்கான கண்டுபிடிப்புகள்; கலாசார ரீதியாக, முன்னோரிடம் புதுமையானவற்றை கற்று, அவற்றை பின்பற்றும் முறை; தங்களுக்கு தெரிந்த, புதிய கண்டுபிடிப்புகளில் ஈடுபடுவோர் பற்றிய குறிப்புகள் போன்றவற்றை அனுப்பலாம்.இந்த விருதுக்கு, ignite@nifindia.org என்ற, இ - மெயில் முகவரிக்கு, வரும், 31ம் தேதிக்குள் விண்ணப்பிக்க வேண்டும். தேர்வு செய்யப்படும் மாணவர்களுக்கு, ஜனாதிபதி விருது வழங்குவார். இதன் விபரங்களை, nif.org.in என்ற இணையதளத்தில் தெரிந்து கொள்ளலாம்.

சத்துணவு சமைக்க 'பிரஷர் குக்கர்'


சத்துணவு மையங்களுக்கு, 'பிரஷர் குக்கர்' வாங்க, 4.80 கோடி ரூபாய் ஒதுக்கப்பட்டு உள்ளது.தமிழகத்தில் நடப்பாண்டு, 19 ஆயிரத்து, 230 சத்துணவு மையங்களுக்கு வழங்க, 12 லிட்டர் கொள்ளளவு கொண்ட, அலுமினியம் அல்லது, 'இண்டோலியம் பிரஷர் குக்கர்' வாங்க, அரசு முடிவு செய்துள்ளது. இதற்காக, 4.80 கோடி ரூபாய் ஒதுக்கப்பட்டுள்ளது.பிரஷர் குக்கர் வாங்க, சமூக நலத்துறை சார்பில், 'டெண்டர்' கோரப்பட்டுள்ளது. டெண்டர் சமர்ப்பிக்க, செப்., 11ம் தேதி கடைசி நாள் என அறிவிக்கப்பட்டுள்ளது.

Wednesday, August 16, 2017

தொடக்ககல்வி பட்டயப்படிப்பு கலந்தாய்வு ஆக 31வரை நீட்டிப்பு


கிராமப்புற ஏழை மாணவர்கள் பயன்பெறும் வகையில் தொடக்கக் கல்வி பட்டயப் படிப்புக்கான மாணவர் சேர்க்கை கலந்தாய்வு வரும் ஆகஸ்ட் 31-ஆம் தேதி வரை நீட்டிக்கப்பட்டுள்ளது. இதுகுறித்து மாநிலக் கல்வியியல் ஆராய்ச்சி மற்றும் பயிற்சி நிறுவன இயக்குநர் (எஸ்இஆர்டி) க.அறிவொறி புதன்கிழமை விடுத்துள்ள செய்திக் குறிப்பு: தொடக்கக் கல்வி பட்டயப் படிப்பில் சேருவதற்கு ஒற்றைச் சாளரமுறை கலந்தாய்வு கடந்த ஆகஸ்ட் 7 முதல் 9-ஆம் தேதி வரை நடத்தி முடிக்கப்பட்டுள்ளது.

தொடக்கக்கல்வி பட்டயப்படிப்பில் அதிகளவில் காலிப் பணியிடங்கள் இருப்பதால் கிராமப்புற ஏழை மக்களின் குழந்தைகள் இந்தப் பயிற்சியில் சேர வாய்ப்புள்ளது. எனவே, அவர்கள் பயன்பெறத் தக்க வகையில் மீண்டும் ஒற்றைச் சாளர முறை கலந்தாய்வு புதன்கிழமை தொடங்கியது. இது ஆகஸ்ட் 31 வரை நடத்தப்படவுள்ளது. தகுதியுள்ள மாணவர்கள் அந்தந்த மாவட்டங்களில் உள்ள மாவட்ட ஆசிரியர் கல்வி மற்றும் பயிற்சி நிறுவனத்துக்கு தங்களது உண்மைச் சான்றிதழ்களுடன் நேரில் சென்று உரிய கட்டணத்தைச் செலுத்தி சேர்க்கை ஆணை பெறலாம்

ஆக.21-லிருந்து குடிமைப் பணிகள் : முதல் நிலை தேர்வுக்கு விண்ணப்பங்களை பெறலாம்


தமிழகத்தில் நவம்பர் 5-ஆம் தேதி நடைபெறவுள்ள இந்திய குடிமைப் பணிகள் முதல் நிலை தேர்வுக்கான விண்ணப்பங்களை ஆகஸ்ட் 21 முதல் செப்டம்பர் 20 வரை பெறலாம் என மாவட்ட ஆட்சியர் பா.பொன்னையா அறிவித்துள்ளார். இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பு:

அகில இந்திய குடிமைப் பணி தேர்வுப் பயிற்சி மையத்தில் இந்திய குடிமை பணிகளுக்கான முதல் நிலை தேர்வுக்கு பயிற்சிக்கு மாணவர்களை சேர்த்திட நுழைவுத் தேர்வு நவம்பர் 5 -ஆம் தேதி நடைபெறவுள்ளது. இதற்கான விண்ணப்பங்களை அனைத்து மாவட்ட பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சிறுபான்மையினர் நல அலுவலர்களின் மூலமாக ஆண்டுதோறும் வழங்கப்படுகிறது. மேலும் WWW.CIVILSERVICECOACHING.COM என்ற இணையதளத்தில் விண்ணப்பிக்கலாம். ஆன்லைனில் விண்ணப்பித்தவர்கள், நேரில் விண்ணப்பிக்கத் தேவையில்லை. (ஆன்லைன் மற்றும் ஆப்லைன்) இரண்டிலும் விண்ணப்பித்தால் இரண்டும் நிராகரிக்கப்படும்.

தேர்வு எழுத தகுதியுடையவர்கள் உரிய விண்ணப்பங்களை காஞ்சிபுரம் மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகத்தில் இயங்கி வரும் மாவட்ட பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சிறுபான்மையினர் நல அலுவலரிடம் கீழ்க்கண்ட ஆவணங்களை சமர்ப்பித்து ஆகஸ்ட் 21 காலை 10 மணி முதல் செப்டம்பர் 20 மாலை 5.45 வரை விண்ணப்பங்களைப் பெற்றுக் கொள்ளலாம். விண்ணப்பங்களை திரும்பப் பெற கடைசி நாள் செப்டம்பர் 20 மாலை 5.45 என நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

கல்வித் தகுதிகள்: பிஏ, பிஎஸ்சி, பி.காம், பிஇ, எம்பிபிஎஸ், பிடிஎஸ், பிஎஸ்சி அக்ரி மற்றும் அங்கீகரிக்கப்பட்ட பட்டப் படிப்புகள். வயது வரம்பு: தாழ்த்தப்பட்டவர்கள், பழங்குடியினர் 21 முதல் 37 வயது வரையிலும், சிறுபான்மையினர், சீர்மரபினர் 21 முதல் 35 வரையிலும், இதர வகுப்பினர் 21 முதல் 32 வரையிலும் விண்ணப்பிக்கலாம். இதில் கல்வி, ஜாதி, வயது சான்றிதழ் ஆகியவற்றை சமர்ப்பித்து, விண்ணப்பங்களை மாவட்ட பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சிறுபான்மை நல அலுவலகத்தில் பெற்று விண்ணப்பிக்கலாம்.