பள்ளி மாணவர்களுக்கு விரைவில் விபத்துக் காப்பீடு திட்டம் கொண்டு வரப்படும் என்று பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையன் தெரிவித்தார். எம்ஜிஆர் நூற்றாண்டு விழாவையொட்டி திருவண்ணாமலையில் சிறப்பு புகைப்படக் கண்காட்சியை பள்ளில் கல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையன் திறந்து வைத்தார்.
அதற்குப் பிறகு அவர் பேசுகையில், ''மாணவர்களின் எதிர்காலத்தை கருத்தில் கொண்டு, பள்ளிக் கல்வித் துறை சார்பில் மாணவர்களுக்கு ஸ்மார்ட் கார்டுகள் வழங்கும் திட்டம் ஒரு மாதத்தில் தொடங்கப்படும். மாணவ மாணவிகளுக்கு விபத்துக் காப்பீடுகள் வழங்கப்படும்.
பொதுத் தேர்வுகளில் அதிக மதிப்பெண் பெற்று மாணவர்கள் தேர்ச்சி பெற, 54 ஆயிரம் வினா மற்றும் விடைத் தாள் அடங்கிய பதிப்புகள் வெளியிடப்படும். பிளஸ் 1 வகுப்பு பொதுத்தேர்வு குறித்து வினாத்தாள் மாதிரி வெளியிடப்படும். மேலும் பிளஸ் 2 வகுப்பு மாணவர்களுக்கு புத்தாக்க பயிற்சி வகுப்புகள் நடத்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
இதன்மூலம் மாணவர்களின் அச்சம் நீங்கி, எந்த தேர்வையும் எதிர்கொள்ள திறமை மாணவர்களுக்கு ஏற்படும்'' என்று அமைச்சர் செங்கோட்டையன் பேசினார்.