கடந்த மார்ச் மாதம் மேல்நிலை தேர்வெழுதிய மாணவர்களுக்கு கடந்த 10-ந்தேதி முதல் அசல் மதிப்பெண் சான்றிதழ்கள் வினியோகிக்கப்பட்டு வருகிறது. மேலும், மின்னணு மதிப்பெண் சான்றிதழ்களை மத்திய அரசின் மின் ஆவணக் காப்பகத்தின் (டிஜிட்டல் லாக்கர்) மூலம், அரசுத் தேர்வுகள் இயக்ககத்தின் தரவுக் களஞ்சியத்திலிருந்து நேரடியாகப் பதிவிறக்கம் செய்து கொள்ள வசதி ஏற்படுத்தப்பட்டுள்ளது.
மின்னணு மதிப்பெண் சான்றிதழ்களை மின் ஆவணக் காப்பகம் மூலம் மட்டுமே பதிவிறக்கம் செய்ய இயலும் என்பதால் மாணவர்கள் மின் ஆவணக் காப்பகத்தின் www.di-g-i-l-o-c-k-er.gov.in என்ற இணையதளத்திற்குச் சென்று, தங்கள் ஆதார் எண்ணுடன் இணைக்கப்பட்ட அலைபேசி எண்ணைப் பயன்படுத்தி தங்களுக்கான மின் ஆவணக் காப்பகக்கணக்கினைத் தொடங்க வேண்டும். மாணவர்கள் ஆதார் எண்ணுடன் அவர்களது செல்போன் எண் இணைக்கப்படாதபட்சத்தில் அருகாமையிலுள்ள அரசு இ-சேவை மையத்தை அணுகி ஆதார் எண்ணுடன் செல்போன் எண்ணை இணைத்து மின் ஆவணக் காப்பகக் கணக்கினைத் தொடங்கலாம்.
மாணவர்களின் மின்னணு மதிப்பெண் சான்றிதழ்களை மின் ஆவணக் காப்பகக் கணக்கு மூலமாகப் பதிவிறக்கம் செய்யும் வழிமுறைகள் www.dge.tn.gov.in என்ற இணையதளத்தில் அறிந்து கொள்ளலாம். மாணவர்கள் மின்னணு மதிப்பெண் சான்றிதழ்களை எந்த நேரத்திலும், எந்த இடத்திலிருந்தும் பதிவிறக்கம் செய்யலாம். மேலும், உயர்கல்வி மற்றும் வேலைவாய்ப்புக்கு மின்னணுச் சான்றிதழை இணையதள வழியாகவும் சமர்ப்பிக்க பயன்படுத்திக் கொள்ளலாம். இம்மின்னணுச் சான்றிதழ், அரசுத் தேர்வுகள் இயக்ககத்தின் தரவுக் களஞ்சியத்திலிருந்து மின்னணு முறையில் நேரடியாகப் பதிவிறக்கம் செய்துகொள்ளப்படுவதால், மாணவர்களின் மதிப்பெண் சான்றிதழ்களின் உண்மைத்தன்மை உறுதிப்படுத்தப்படுகிறது. இந்த தகவலை அரசு தேர்வு இயக்குனரகம் தெரிவித்துள்ளது.