இலவச SMS களை உடனுக்குடன் பெற ON tnptfmani என்று type செய்து 9870807070 என்ற எண்ணிற்கு அனுப்பி இலவச குறுந்தகவல்களை(SMS) பெறுங்கள். DND (Do NOT Disturb) சர்வீஸ்ல் உள்ள எண்கள் அதனை(DND) நீக்கிய பிறகே இச்சேவையை பெறமுடியும். plz call 1909

Sunday, July 02, 2017

கல்வி உதவித்தொகைக்கு விண்ணப்பிக்க அழைப்பு


சிறுபான்மையினர் கல்வி உதவித்தொகை பெற, ஆக., 31க்குள் விண்ணப்பிக்க வேண்டும். மத்திய அரசால், சிறுபான்மையினராக அறிவிக்கப்பட்டுள்ள, முஸ்லிம், கிறிஸ்தவர், சீக்கியர், பார்சி, புத்த மதத்தினர் மற்றும் ஜெயின் உள்ளிட்ட சமூகத்தைச் சேர்ந்த மாணவர்களுக்கு, மத்திய, மாநில அரசால் கல்வி உதவித் தொகை வழங்கப்படுகிறது.

ஒன்று முதல், 1௦ம் வகுப்பு வரை படிக்கும், மாணவ, மாணவியருக்கு கல்வி உதவித்தொகையும்; பிளஸ் 1 முதல், ஆராய்ச்சி படிப்பு வரை படிப்போருக்கு, மேல் படிப்பு உதவித்தொகையும் வழங்கப்படுகிறது. தொழிற்கல்வி மற்றும் தொழில்நுட்ப படிப்பு படிப்போருக்கு, தகுதி மற்றும் வருவாய் அடிப்படையில், உதவித்தொகை தரப்படுகிறது. இதை பெற தகுதி உள்ளவர்கள், ஆக., ௩௧க்குள் விண்ணப்பிக்க வேண்டும். ஏற்கனவே, உதவித்தொகை பெறுவோர், புதுப்பித்துக் கொள்ள, ஜூலை, ௩௧க்குள் விண்ணப்பிக்க வேண்டும்.இதன் விபரங்கள், www.scholarships.gov.in என்ற இணையதளத்தில் உள்ளன. மேலும், www.minorityaffairs.gov.in என்ற தளத்திலும் தெரிந்து கொள்ளலாம் என, தமிழக சிறுபான்மையினர் நலத்துறை இயக்ககம் அறிவித்துள்ளது.

439 தொடக்க பள்ளிகளுக்கு மின் வசதி செய்து தர உத்தரவு


தமிழகத்தில், மின்சார வசதி இல்லாத, 439 பள்ளிகளுக்கு, மத்திய அரசு திட்டத்தில், மின் வசதி செய்து தர உத்தரவிடப்பட்டு உள்ளது. தமிழகத்தில் உள்ள அனைத்து பள்ளிகளிலும், மின் வசதி, குடிநீர், பாதுகாப்பு வசதி போன்ற அடிப்படை வசதிகளை மேம்படுத்த, பள்ளி கல்வித்துறை அமைச்சர், செங்கோட்டையன் உத்தரவிட்டுள்ளார்.

இதன்படி, ஒவ்வொரு மாவட்டத்திலும், அடிப்படை வசதியில்லாத பள்ளிகளின் பட்டியல் தயாரிக்கப்பட்டுள்ளது. இதில், கிராமப்புறங்களில் உள்ள, ௪௩௯ தொடக்கப் பள்ளிகளில், மின் வசதி இல்லாதது தெரிய வந்துள்ளது. எனவே, இந்த பள்ளிகளுக்கு, மத்திய அரசின், தீனதயாள் உபாத்யாய் கிராம ஜோதி திட்டத்தின் கீழ், மின் இணைப்பு வழங்க, பள்ளி கல்வித்துறை நடவடிக்கை மேற்கொண்டுள்ளது. அதனால், மின் வசதியற்ற பள்ளிகளின் விபரங்களை அனுப்பும்படி, மாவட்ட கல்வி அதிகாரிகளுக்கு, தொடக்க கல்வி இயக்குனர் கார்மேகம் சுற்ற றிக்கை அனுப்பி உள்ளார்.

டெட்' தகுதி தேர்வில் 4.64 சதவீதம் தேர்ச்சி


ஆசிரியர் பணிக்கான 'டெட்' தகுதி தேர்வு எழுதிய 7.53 லட்சம் பேரில், 4.64 சதவீதம் பேர் தேர்ச்சி பெற்றுள்ளனர். கணிதம், அறிவியல் பாடப்பிரிவில் தேர்ச்சி குறைந்துள்ளது. தமிழக அரசு பள்ளிகளில் காலியாக உள்ள ஆசிரியர் பணியிடங்களில் புதிய ஆசிரியர்களை நியமிப்பதற்கான 'டெட்' தகுதி தேர்வு ஏப்ரல் 29,30ல் நடந்தது.

இதில் இடைநிலை மற்றும் பட்டதாரி ஆசிரியர் பணியிடங்களுக்கு தனித்தனியாக தேர்வு நடந்தது. முதல் தாளில் 2.41 லட்சம் பேரும்; இரண்டாம் தாளில் 5.12 லட்சம் பேரும் பங்கேற்றனர். அவர்களில் 4.64 சதவீதமான 34 ஆயிரத்து, 979 பேர் தேர்ச்சி பெற்றுள்ளனர். அதாவது முதல் தாள் எழுதியவர்களில் 6.71 சதவீதத்தினரும்; இரண்டாம் தாள் எழுதியவர்களில் 3.66 சதவீதத்தினரும் மட்டுமே தேர்ச்சி பெற்றுள்ளனர்.குறிப்பிட்ட பாடங்களில் தேர்வு எழுதியோரில் கணிதம் மற்றும் அறிவியல் பாடத்தை தேர்வு செய்தவர்களில் 2.72 சதவீதம் பேர் தேர்ச்சி பெற்றுள்ளனர்.தமிழகத்தில் 2012ல், 'டெட்' தேர்வு அறிமுகமான போது 7.14 லட்சம் தேர்வு எழுதி 2.448 பேர் மட்டுமே தேர்ச்சி பெற்றனர்.

அதனால் கேள்வித்தாள் மிக கடினமாக இருப்பதாக மறு தேர்வுக்கு பட்டதாரிகள் கோரிக்கை விடுத்தனர். இதையடுத்து எளிமையாக்கப்பட்ட வினாத்தாளுடன் துணை தேர்வு நடத்தப்பட்டது. இதில் 2.99 சதவீதம் பேர் மட்டுமே தேர்ச்சி பெற்றனர்.பின் 2013ல் நடந்த தேர்வில் இரண்டு தாள்களிலும் சேர்த்து 6.62 லட்சம் பேர் பங்கேற்றதில் 4.45 சதவீதம் பேர் தேர்ச்சி பெற்றனர். இந்த ஆண்டு நடந்த தேர்வில், தேர்ச்சி சதவீதம் 4.64 சதவீதமாக உயர்ந்துள்ளது

பட்டதாரி ஆசிரியர்கள் பணி நிரவல்


தென் மாவட்ட அரசு பள்ளிகளில் உபரியாக உள்ள, 5,000 பட்டதாரி ஆசிரியர்களை, வட மாவட்டங்களுக்கு மாற்ற, பள்ளி கல்வித்துறை முடிவு செய்துள்ளது. தமிழகத்தில், ஆண்டுதோறும் மே மாதம் நடத்தப்படும் கவுன்சிலிங் மூலம், அரசு பள்ளி ஆசிரியர்கள் இடமாற்றம் செய்யப்படுவர். ஆனால், 2011க்கு பின், பள்ளிகள் திறந்த பின், ஜூலையில், இந்த கவுன்சிலிங் நடத்தப்பட்டது.

இதனால், பாதி பாடங்களை ஒரு ஆசிரியரும், மீதி பாடத்தை மற்றொரு ஆசிரியரும் நடத்தும் நிலை ஏற்பட்டது; மாணவர்களுக்கு கற்பித்தலில் சிக்கல் ஏற்பட்டது. இதற்கு தீர்வு காண, இந்தாண்டு, பள்ளிகள் திறக்கும் முன், மே மாதமேஆசிரியர்கள் இடமாறுதல் கவுன்சிலிங் நடத்தப் பட்டது. இதில், 10 ஆயிரம் பேர் வரை, இட மாறுதல் பெற்றனர். இந்நிலையில், சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம் உள்ளிட்ட வட மாவட்டங் களிலும், வேலுார், கிருஷ்ணகிரி, தர்மபுரி, அரியலுார், பெரம்பலுார் போன்ற மாவட் டங்களிலும், போதிய மாணவர்கள் இருந்தும், பட்டதாரி மற்றும் முதுநிலை பட்டதாரி ஆசிரியர் பணியிடங்கள் காலியாகஉள்ளன.

அதேநேரத்தில், தென் மாவட்டங்களில், 5,000க்கும் மேற்பட்ட ஆசிரியர்கள் உபரியாக உள்ளதாக, பள்ளி கல்விதுறை கண்டறிந்துள்ளது. மாவட்ட முதன்மை கல்வி அதிகாரிகள் மூலம், பட்டியல் தயாரிக்கப்பட்டு உள்ளது. பள்ளிகளில், தற்போது மாணவர் சேர்க்கை நடந்து வருகிறது; ஆக., 31க்குள், மாணவர் சேர்க்கையை முடிக்க உத்தரவிடப்பட்டுள்ளது. இதைத் தொடர்ந்து, மாணவர்களின் எண்ணிக்கையை கணக்கிட்டு, அவர்களின் விகிதத்தை விட அதிகமாக உள்ள உபரி ஆசிரியர்களை, வட மாவட்டங்களுக்கு மாற்ற, பள்ளிக் கல்வித்துறை முடிவு செய்துள்ளது

அரசு அலுவலகங்களில் மட்டும் இனி ஆதார் மையங்கள்


நாடு முழுதும், செப்டம்பர் முதல், அரசு அலுவலகங்களில் மட்டுமே ஆதார் மையங்கள் செயல்படும்' என அறிவிக்கப்பட்டுள்ளது. மானிய உதவி, வங்கி கணக்கு என அனைத்திற்கும், தற்போது, 'ஆதார்' எண் கட்டாயமாக்கப்பட்டுள்ளது. எனவே, அனைவருக்கும் முழுமையாக ஆதார் எண் வழங்கும் பணி வேகமாக நடந்து வருகிறது.

இதற்காக, அரசு நிறுவனங்கள் மட்டுமல்லாமல், தனியார் நிறுவனங்களும், ஆதார் தகவல்களை பதிவு செய்யும் பணியில் ஈடுபட்டு உள்ளன.ஆனால், தனியார் ஆதார் மையங்களில் கூடுதல் கட்டணம் வசூலிப்பதாக புகார் எழுந்துள்ளது; மேலும் பல குளறுபடிகள் நடைபெறுவதாகவும் கூறப்படுகிறது.எனவே, ஆதார் வழங்கும் பணியை, அரசு மற்றும் அது சார்ந்த நிறுவனங்களிடம் மட்டுமே, வழங்குவது குறித்து ஆதார் வழங்கும் அமைப்பான இந்திய தனிப்பட்ட அடையாள ஆணையம் முடிவு செய்துள்ளது. இதுதொடர்பாக, அதன், தலைமை செயல் அதிகாரி அஜய் பூஷண், மாநில அரசுகளுக்கு கடிதம் எழுதியுள்ளார்.

'செப்டம்பர் முதல் தேவைப்பட்டால், தனியார் ஆதார் ஏஜன்சிகளும், அரசு அலுவலகங்களில், அரசு அதிகாரிகளின் நேரடி கட்டுப்பாட்டில் மட்டுமே செயல்பட வேண்டும்' என அறிவுறுத்தப்பட்டுள்ளது.

Saturday, July 01, 2017

காலவரையற்ற வேலை நிறுத்தம் அரசு ஊழியர் சங்கம் எச்சரிக்கை


ஜூலை மாதத்திற்குள், ஊதிய மாற்றம் வராத நிலையில், பேச்சின் போது ஒப்புக்கொண்டபடி, 20 சதவீதம் இடைக்கால நிவாரணம் வழங்காவிட்டால், காலவரையற்ற வேலை நிறுத்தம் உறுதி' என, தமிழ்நாடு அரசு ஊழியர் சங்கம், அரசுக்கு எச்சரிக்கை விடுத்துள்ளது. சங்க பொதுச் செயலர் அன்பரசு விடுத்துள்ள அறிக்கை:

அரசு ஊழியர்களின், ஊதிய மாற்றத்திற்காக அமைக்கப்பட்ட, அலுவலர் குழுவின் பதவிக்காலத்தை, மூன்று மாதங்களுக்கு நீட்டித்து, தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது. மத்திய அரசுக்கு இணையான, அனைத்து படிகளையும் வழங்க வேண்டும். தமிழக அரசு ஊழியர்களுக்கான ஊதிய மாற்றத்தை, உடனே அமல்படுத்த வேண்டும். ஊதிய மாற்றம் ஏற்படும் வரை, தற்போது வாங்கும் ஊதியத்தில், 20 சதவீதத்தை, இடைக்கால நிவாரணமாக வழங்க வேண்டும் என்பது உட்பட, பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி, ஏப்., 25 முதல், காலவரையற்ற வேலை நிறுத்தப் போராட்டத்தில் ஈடுபடப் போவதாக அறிவித்தோம்.

போராட்டம் துவங்கிய இரண்டாம் நாள், அமைச்சர்கள் சங்க நிர்வாகிகளை அழைத்து பேசினர். அப்போது, ஜூலைக்குள், ஊதிய மாற்றம் செய்யப்பட்டு விடும் என, உறுதி அளித்தனர். ஜூன், 30க்குள்,அலுவலர் குழு பரிந்துரைகளை அளிக்காவிட்டால், 20 சதவீதம் இடைக்கால நிவாரணம் வழங்குவது குறித்து பரிசீலிப்பதாக தெரிவித்தனர். அதை ஏற்று, தமிழ்நாடு அரசு ஊழியர் சங்கம், வேலை நிறுத்தப் போராட்டத்தை, தற்காலிக மாக நிறுத்தி வைத்தது. ஆனால், ஜூன், 30க்குள், அலுவலர் குழு, பரிந்துரை களை வழங்கவில்லை. எனவே, அரசு ஊழியர்களுக்கு, இடைக்கால நிவாரணமாக, 20 சதவீத ஊதியத்தை, ஜூலை, 17க்குள் வழங்க வேண்டும். இல்லையெனில்,தற்காலிகமாக நிறுத்தி வைக்கப்பட்ட, வேலை நிறுத்தப் போராட்டத்தை, தமிழகம் முழுவதும் தொடர வேண்டிஇருக்கும்.இவ்வாறு அவர் கூறி உள்ளார்

Friday, June 30, 2017

நடப்பு கல்வியாண்டில் பொறியியல் படிப்புகளுக்கான கல்வி கட்டணம் அதிரடி உயர்வு!


சுயநிதி கல்லூரிகளுக்கான பொறியியல் படிப்புகளின் கல்வி கட்டணம் உயர்த்தி அறிவிக்கப்பட்டுள்ளது. தனியார் கல்லூரிகளில் பொறியியல் படிப்புகளுக்கான கட்டணத்தை 2012-ம் ஆண்டுக்கு பிறகு உயர்த்தி கட்டண நிர்ணயக்குழு அறிவித்துள்ளது. அதன்படி சுயநிதி கல்லூரிகளில் அரசு ஒதுக்கீட்டுக்கான தரச்சான்று அல்லாத பாடப்பிரிவுக்கு கட்டணம், ரூ.40 ஆயிரத்திலிருந்து ரூ.50 ஆயிரமாக உயர்த்தப்பட்டுள்ளது.

தரச்சான்று அல்லாத நிர்வாக ஒதுக்கீட்டுக்கான பாடப்பிரிவு கட்டணம், ரூ.70 ஆயிரத்திலிருந்து ரூ.85 ஆயிரமாக உயர்த்தப்பட்டுள்ளது. தரச்சான்று பெற்ற நிர்வாக ஒதுக்கீட்டுக்கு ரூ.87 ஆயிரம் கட்டணம் வசூலிக்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. கல்வி கட்டண உயர்வு தனியார் பொறியியல் கல்லூரிகளுக்கானது மட்டும் எனவும் கல்வி கட்டண நிர்ணய குழு தெரிவித்துள்ளது.

அரசு பள்ளிகளுக்கு கழிப்பிடம் கட்டி தந்தால் புதிய பள்ளி தொடங்க அனுமதி


தமிழகத்தில் மாநிலப் பாடத்திட்டம், மெட்ரிக்குலேஷன் பாடத்திட்டம், ஓரியண்டல் பாடத்திட்டம், ஆங்கிலோ இந்தியன் பாடத்திட்டம் என நான்கு பாடத்திட்டங்களின் கீழ் பள்ளிகள் இயங்கி வந்தன. இந்நிலையில், கடந்த 2008ம் ஆண்டு மேற்கண்ட பாடத்திட்ட முறைகள் கலைக்கப்பட்டு பொதுப் பள்ளி முறையை அரசு கொண்டு வந்தது. அதற்கு பிறகு அனைத்து பள்ளிகளிலும் சமச்சீர் கல்வி முறை நடைமுறைக்கு வந்தது.

இந்நிலையில், அரசுப் பள்ளிகள் தவிர தனியார் பள்ளிகள் இயங்குவதற்கு கடுமையான கட்டுப்பாடுகள் கொண்டு வரப்பட்டன. அங்கீகாரம் பெறுவதற்கு 5 துறைகளிடம் இருந்து சான்று பெற வேண்டும் என்றும் அரசு தெரிவித்துவிட்டது. மேலும், தனியார் பள்ளிகள் தமிழை முதன்மைப் பாடமாக நடத்த வேண்டும் என்றும் தெரிவிக்கப்பட்டது. இதனால், தமிழ் மொழியைப் படிக்க விரும்பாத பெற்றோர் தங்கள் குழந்தைகளை ஆங்கில வழிக்கல்வி நடத்தும் பள்ளிகளில் சேர்க்க ஆர்வம் காட்டி வருகின்றனர். அதனால் சிபிஎஸ்இ பள்ளிகளுக்கு பெரிய அளவில் மவுசு கூடத் தொடங்கிவிட்டது.

சிபிஎஸ்இ பள்ளிகளில் சேர்ந்து படிக்கும் போது தமிழை படிக்காமலேயே உயர் கல்விக்கு சென்றுவிட முடியும் என்ற நிலை நீடிக்கிறது. இதனால் சிபிஎஸ்இ பள்ளிகளுக்கு மவுசு அதிகரித்து வருகிறது. இதையடுத்து, தமிழகத்தில் ஒவ்வொரு ஆண்டும் புதிய பள்ளிகள் தொடங்க விரும்புவோர் சிபிஎஸ்இ பாடத்திட்டத்தின் கீழ் இயங்கும் பள்ளிகளை தொடங்க ஆர்வம் காட்டி வருகின்றனர். அதனால் ஆண்டுக்கு சுமார் 50 பள்ளிகள் தொடங்க விண்ணப்பங்கள் மத்திய அரசுக்கு வருகிறது. இருப்பினும், மாநில அரசுகள் பள்ளிகள் தொடங்க தடையில்லா சான்றுகள் வழங்க வேண்டும் என்று மத்திய அரசு தெரிவித்துவிட்டது. இதை தொடர்ந்து, மெட்ரிக்குலேஷன் பள்ளிகள் இயக்ககத்திடம் தடையில்லா சான்று கேட்டு தனியார் விண்ணப்பித்து வருகின்றனர். கடந்த காலங்களில் புதிய பள்ளிகள் தொடங்க 20 லட்சம் வரை செலவு செய்ய வேண்டிய நிலை இருந்தது. ஆனால், தற்போது அந்த அளவுக்கு செலவு செய்ய வேண்டியதில்லை என்று பள்ளிக் கல்வி அமைச்சர் செங்கோட்டையன் அறிவித்தார்.

இதனால் புதிய பள்ளிகள் தொடங்குவோர் மகிழ்ச்சி அடைந்தனர். இந்த ஆண்டு சிபிஎஸ்இ பள்ளிகள் தொடங்க 50 பேர், தடையில்லா சான்று கேட்டு விண்ணப்பித்துள்ளனர். இதற்கும் தேதி மாலை வரை கடைசி நாளாக மெட்ரிக்குலேஷன் பள்ளிகள் இயக்ககம் அறிவித்துள்ளது. கடந்த ஆண்டு இந்த கடைசி தேதி ஜூலை 31ம் தேதி வரை நீட்டிக்கப்பட்டது. இந்த ஆண்டு நீட்டிக்கப்படுமா என்று தனியார் எதிர்பார்த்துள்ளனர். இதற்கிடையே, அரசுப் பள்ளிகளில் தனியார் பங்களிப்புடன் கழிப்பிடம் கட்டித் தரப்படும் என்று சட்டப் பேரவையில் அமைச்சர் செங்கோட்டையன் அறிவித்தார். தனியார் பங்களிப்பு எப்படி அரசுப் பள்ளிக்கு பொருந்தும் என்று பலர் எதிர்பார்த்து இருந்த நிலையில், தற்போது அதற்கு விளக்கம் கிடைத்துள்ளது. அதாவது, புதிதாக மெட்ரிக்குலேஷன் பள்ளிகள் தொடங்கவும், சிபிஎஸ்இ பள்ளிகள் தொடங்க தடையில்லா சான்று பெறவும் விண்ணப்பித்தவர்கள் அரசுப் பள்ளிகளில் கழிப்பிடம் கட்டித் தருதல் மற்றும் குடிநீர் வசதிகள் செய்து தர வேண்டும் என்று மெட்ரிக்குலேஷன் இயக்ககம் கேட்கிறது.

அமைச்சரின் ஆலோசனையின் பேரில் அதை ஒரு விதியாகவும் வைத்துள்ளது. அதனால் தடையில்லா சான்று கேட்டு விண்ணப்பித்தவர்கள் கலக்கம் அடைந்துள்ளனர். சிலர் கழிப்பிடம் கட்டித்தருவதாக ஒப்புக் கொண்டுள்ளனர். ஏற்காதவர்களுக்கு தடையில்லா சான்று கிடைக்காத நிலை ஏற்பட்டுள்ளது.

மத்திய அரசின் 7வது ஊதியக்குழு பரிந்துரைப்படி தமிழக அரசு ஊழியர்களின் ஊதிய மாற்று குழுவின் பதவிக்காலம் 3 மாதம் நீட்டிப்பு


மத்திய அரசின் ஏழாவது ஊதியக்குழு பரிந்துரைத்துள்ள திருத்திய ஊதிய விகிதங்கள் குறித்து மத்திய அரசு எடுத்துள்ள முடிவுகளை தொடர்ந்து தமிழ்நாடு அரசு அலுவலர்கள், ஆசிரியர்கள் மற்றும் உள்ளாட்சி நிறுவனங்களில் பணியாற்றும் பணியாளர்களுக்கு ஊதிய விகிதங்களை மாற்றியமைப்பதற்கான பரிந்துரைகளை அளிக்க அலுவலர் குழு ஒன்றை முதல்வர் எடப்பாடி கடந்த பிப்ரவரி மாதம் 22ம் தேதி அறிவித்தார்.

அந்த குழுவில், நிதித்துறை கூடுதல் தலைமை செயலாளர், உள்துறை முதன்மை செயலாளர், பள்ளி கல்வித்துறை முதன்மை செயலாளர், பணியாளர் மற்றும் நிர்வாக சீர்திருத்தத்துறை செயலாளர், பி.உமாநாத் உறுப்பினர் செயலாளர் ஆகியோர் இடம்பெற்று இருந்தனர். இந்த குழுவினர், மத்திய அரசின் ஏழாவது ஊதியக் குழு பரிந்துரைத்துள்ள திருத்திய ஊதிய விகிதங்கள் குறித்து மத்திய அரசு எடுத்துள்ள முடிவுகளை ஆராய்ந்து, அவற்றை தமிழ்நாடு அரசு அலுவலர்கள், ஆசிரியர்கள் மற்றும் உள்ளாட்சி நிறுவனங்களில் பணியாற்றும் அலுவலர்களுக்கு ஊதிய விகிதங்களை மாற்றியமைப்பதற்கான பரிந்துரைகளை வழங்க ஜூன் 30ம் தேதிக்குள் (நேற்று) அரசுக்கு அளிக்கும்படி உத்தரவிடப்பட்டிருந்தது.

அதன்படி, அந்த குழுவினர் கடந்த மாதம், அங்கீகரிக்கப்பட்ட அலுவலர் மற்றும் ஏனைய சங்கங்கள் சந்தித்து ஆலோசனை நடத்தினர். ஆனால், திட்டமிட்டபடி தமிழக அரசுக்கு இந்த குழுவினர் நேற்று அறிக்கை அளிக்கவில்லை. இந்நிலையில், தமிழ்நாடு அரசு அலுவலர்கள், ஆசிரியர்கள் மற்றும் உள்ளாட்சி நிறுவனங்களில் பணியாற்றும் பணியாளர்களுக்கு ஊதிய விகிதங்களை மாற்றியமைப்பதற்கான பரிந்துரைகளை அளிக்க அலுவலர் குழுவுக்கு மேலும் 3 மாதம், அதாவது செப்டம்பர் 30ம் தேதி வரை கால அவகாசம் அளித்து தமிழக அரசின் நிதித்துறை செயலாளர் சண்முகம் நேற்று உத்தரவிட்டுள்ளார்.

18 முதல் 20 வயது வரை உள்ள இளைஞர்கள் வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்க்க இன்று முதல் 30ம் தேதி வரை சிறப்பு முகாம்


தமிழகத்தில் 18 முதல் 20 வயது வரை உள்ள இளைஞர்களை வாக்காளர் பட்டியலில் சேர்க்க 1,500 கல்லூரிகளில் இன்று முதல் 30ம் தேதி வரை சிறப்பு முகாம் நடக்கிறது. சென்னை, தலைமை செயலகத்தில் தமிழக தலைமை தேர்தல் அதிகாரி ராஜேஷ் லக்கானி நேற்று நிருபர்களிடம் கூறியதாவது: இந்தியா முழுவதும் 18 வயது முதல் 20 வயது வரை உள்ள இளைஞர்கள் அதிக அளவில் வாக்காளர் பட்டியலில் இடம் பெறவில்லை.

இதை கருத்தில் கொண்டு இந்திய தேர்தல் ஆணையம், இளைஞர்களை வாக்காளர் பட்டியலில் சேர்க்க நாடு முழுவதும் ஒரு மாதம் சிறப்பு முகாம் நடத்த ஏற்பாடு செய்துள்ளது. அதன்படி, தமிழகத்தில் இன்று முதல் வருகிற 30ம் தேதி வரை இளைஞர்களை வாக்காளர் பட்டியலில் சேர்ப்பதற்கான சிறப்பு முகாம் நடைபெற உள்ளது. தமிழகம் முழுவதும் சுமார் 1,500 கலை மற்றும் அறிவியல் கல்லூரிகள், இன்ஜினியரிங் கல்லூரிகள், பாலிடெக்னிக், ஆசிரியர் பயிற்சி கல்லூரிகளுக்கு மாவட்ட தேர்தல் அதிகாரிகள் நேரடியாக சென்று ஒவ்வொரு கல்லூரியிலும் 5 பேருக்கு ஆன்லைன் மூலமாகவே மாணவர்கள் வாக்காளர் பட்டியலில் விண்ணப்பம் செய்வது எப்படி என்று பயிற்சி அளிப்பார்கள்.

அதேபோல், தமிழகம் முழுவதும் இளைஞர்களை வாக்காளர் பட்டியலில் சேர்ப்பதற்கான இரண்டு நாள் சிறப்பு முகாம் ஜூலை 9 மற்றும் 23ம் தேதி (ஞாயிறுக்கிழமை) அனைத்து வாக்குச்சாவடிகளிலும் நடக்கிறது. இவ்வாறு அவர் கூறினார்.

அரசு பள்ளி ஆசிரியர் பணிக்கு நாளை தேர்வு : கைக்குட்டை எடுத்து செல்ல தடை


தமிழக அரசு பள்ளிகளில் காலியாக உள்ள, 1,663 முதுநிலை பட்டதாரி ஆசிரியர் பணியிடங்களுக்கு, நாளை போட்டி தேர்வு நடக்கிறது. மொத்தம், 2.19 லட்சம் பேர் பங்கேற்கும் இத்தேர்வுக்கு, கைக்குட்டை கொண்டு செல்ல தடை விதிக்கப்பட்டுள்ளது. தமிழக அரசு மேல்நிலை பள்ளிகளில், காலியாக உள்ள முதுநிலை பட்டதாரி ஆசிரியர் மற்றும் உடற்கல்வி இயக்குனர் நிலை - ௧ பதவியில், 1,663 இடங்களுக்கு, ஆசிரியர் தேர்வு வாரியமான, டி.ஆர்.பி., மூலம் போட்டித்தேர்வு அறிவிக்கப்பட்டு உள்ளது.

இந்த தேர்வு, தமிழகம் முழுவதும், 601 மையங்களில் நாளை நடக்கிறது. மொத்தம், 2.19 லட்சம் பேர் விண்ணப்பித்துள்ளனர். சென்னையில், 41 மையங்களில், 15 ஆயிரத்து, 105 பேர் பங்கேற்கின்றனர். காலை, 10:00 மணி முதல், பகல், 1:00 மணி வரை தேர்வு நடக்கும். தேர்வர்கள், காலை, 9:00 மணிக்கே, தேர்வு மையங்களுக்குள் செல்ல வேண்டும்; அதற்கு மேல் அனுமதி கிடையாது. தேர்வறைக்குள், இரண்டு, 'பால் பாய்ண்ட்' பேனா, ஹால் டிக்கெட் மற்றும் அடையாள அட்டை மட்டுமே எடுத்துச் செல்ல அனுமதி உண்டு.

தேர்வு மையத்திற்குள் வரும் தேர்வர்களை, கல்வித்துறை பணியாளர்களும், போலீசாரும் சோதனையிடுவர். சோதனை முடித்து, 9:30 மணி முதல் தேர்வு துவங்கும் வரை, ஆண்கள் மற்றும் பெண்களுக்கான காத்திருப்பு அறையில் இருக்க வேண்டும். தேர்வர்கள், கணினி, கால்குலேட்டர், மொபைல்போன், மின்னணு கடிகாரம், கைக்குட்டை உட்பட எந்த பொருளையும், தேர்வறைக்குள் எடுத்துச் செல்ல அனுமதியில்லை என, டி.ஆர்.பி., அறிவித்துள்ளது. ஹால் டிக்கெட்டில் புகைப்படம் இல்லாதோர், ஒரு பாஸ்போர்ட் மற்றும் தபால்தலை அளவு புகைப்படம் எடுத்துச் செல்ல வேண்டும். மேலும், பிற்சேர்க்கை படிவம் - 8-ஐ, www.trb.tn.nic.in என்ற இணையதள முகவரியில் பதிவிறக்கம் செய்து, பூர்த்தி செய்து, சான்றொப்பம் பெற்று எடுத்துச் செல்லவும் அறிவுறுத்தப்பட்டுள்ளனர்.

முதுநிலை பட்டதாரி ஆசிரியர் பணியிடங்களுக்கு தேர்வு


தமிழக அரசு மேல்நிலைப் பள்ளிகளில், காலியாக உள்ள, ௧,௬௬௩ முதுநிலை பட்டதாரி ஆசிரியர் மற்றும் உடற்கல்வி இயக்குனர் நிலை - ௧ இடங்களை நிரப்ப, நாளை, தமிழகம் முழுவதும் போட்டி தேர்வு நடத்தப்படுகிறது. இந்த அறிவிப்பு வெளியான பின், கூடுதல் காலி பணியிடங்களில் ஆட்களை நியமிக்க, அரசு அனுமதி அளித்தது. இதற்கான அரசாணை, நேற்று முன்தினம் வெளியானது. இதை தொடர்ந்து, நாளை நடக்கவுள்ள போட்டி தேர்வு மூலம், ஏற்கனவே அறிவிக்கப்பட்ட, ௧,௬௬௩ இடங்களுடன், கூடுதலாக, ௧,௭௧௨ இடங்கள் சேர்த்து, ௩,௩௭௫ பணியிடங்கள் நிரப்பப்படும் என, டி.ஆர்.பி., பொறுப்பு தலைவர் ஜெகநாதன் தெரிவித்துள்ளார்.

Tamil Nadu Teachers Eligibility Test (TNTET) - 2017 - Please click here for Examination Results and Final Key Answers

Click below

http://trb.tn.nic.in/TET2017/30062017/msg1.htm

1732 முதுகலை ஆசிரியர் பணியிடங்கள் கூடுதலாக நிரப்ப ஆசிரியர் தேர்வு வாரியம் அறிவிக்கை வெளியீடு."


Thursday, June 29, 2017

பி.எட் விண்ணப்பம் பெற இன்று கடைசி நாள்


தமிழகம் முழுவதும் இரண்டு ஆசிரியர் கல்வியியல் நிறுவனங்கள், அரசு மற்றும் அரசு உதவி பெறும் கல்லூரிகளில் உள்ள அரசு ஒதுக்கீட்டின்கீழ் உள்ள 1777 இடங்களுக்கான ஒற்றை சாளர முறையிலான மாணவர் சேர்க்கை கலந்தாய்வு 2017-18 நடைபெற உள்ளது. இதற்கான விண்ணப்ப விற்பனை ஜூன் 21ம் தேதி தொடங்கியது. அதில் 5737 விண்ணப்பங்கள் விற்பனை செய்யப்பட்டுள்ளன. விண்ணப்ப விற்பனை இன்று நிறைவடைகிறது. பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்களை ஜூலை 3ம் தேதிக்குள் மாணவர் சேர்க்கைக்காக சமர்பிக்க வேண்டும். இதுதொடர்பான செயல் வழிமுறைகள் www.ladywillingdoniase.com என்ற இணையதளத்தில் இடம்பெற்றுள்ளன.

என்ஜினீயரிங் கலந்தாய்வு தள்ளிப்போகிறது? ஜூலை 3-வது வாரத்தில் தொடங்க வாய்ப்பு


தமிழ்நாட்டில் 584 என்ஜினீயரிங் கல்லூரிகள் உள்ளன. இவற்றில் சேருவதற்கு 1 லட்சத்து 41 ஆயிரத்து 77 பேர் விண்ணப்பித்துள்ளனர். இவர்களுக்கான கலந்தாய்வை அண்ணா பல்கலைக்கழகம் நடத்த உள்ளது. இவர்களுக்கு ரேண்டம் எண்ணும், ரேங்க் பட்டியலும் வெளியிடப்பட்டன.

கலந்தாய்வு கடந்த 27-ந் தேதி தொடங்குவதாக இருந்தது. ஆனால் தொடங்கவில்லை. சில மாணவர்கள் மருத்துவம், என்ஜினீயரிங் என இரண்டு படிப்புகளுக்கும் விண்ணப்பித்து உள்ளனர். மருத்துவத்தில் இடம் கிடைக்காத பட்சத்தில் அவர்கள் என்ஜினீயரிங் சேருவார்கள். எனவே எப்போதுமே மருத்துவ கலந்தாய்வு தொடங்கிய பின்னர்தான் என்ஜினீயரிங் கலந்தாய்வு தொடங்குவது வழக்கம்.

இந்த ஆண்டு மருத்துவ மாணவர் சேர்க்கைக்கான கலந்தாய்வு ஜூலை 17-ந் தேதி தொடங்குகிறது. கடந்த வருடம் மருத்துவ கலந்தாய்வுக்கும், என்ஜினீயரிங் கலந்தாய்வுக்கும் இடையே ஒரு வாரம் இடைவெளி இருந்தது. எனவே இந்த ஆண்டு என்ஜினீயரிங் கலந்தாய்வு, ஜூலை மாதம் 3-வது வாரம் இறுதியில் தொடங்க வாய்ப்பு உள்ளது. இதற்கான அதிகாரப்பூர்வ தேதி அறிவிப்பு விரைவில் வருகிறது. என்ஜினீயரிங் கலந்தாய்வு எப்படியும் 28 நாட்களாவது நடக்கும். எனவே என்ஜினீயரிங் கல்லூரிகளில் வகுப்புகள் தாமதமாக தொடங்கினால் அதற்கான அனுமதியை அகில இந்திய தொழில்நுட்ப கல்வி கவுன்சிலில்(ஏ.ஐ.சி.டி.இ.) பெறப்படும். இந்த தகவலை அண்ணா பல்கலைக்கழக அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.