Sunday, May 28, 2017
ஆட்டோ,மைக் செட் மூலம் மாணவர் சேர்க்கை பிரச்சாரம்
தொடக்கக் கல்வித்துறையின் கீழ் இயங்கும் தொடக்க மற்றும் நடுநிலைப் பள்ளிகளில் மாணவர்களை சேர்க்க ஆட்டோக்களில் மைக்-செட் பொருத்தி பிரச்சாரம் செய்ய வேண்டும். இதற்காக ஒரு ஒன்றியத்துக்கு ரூ.3 ஆயிரம் ஒதுக்கி தொடக்க கல்வித்துறை உத்தரவிட்டுள்ளது.
இது குறித்து தொடக்க கல்வித்துறை நேற்று வெளியிட்ட உத்தரவு: தொடக்க கல்வி இயக்ககத்தின் கீழ் செயல்படும் அனைத்து அரசு மற்றும் நடுநிலைப் பள்ளிகளில் மாணவர்கள் சேர்க்கையை அதிகரிக்க மாவட்ட தொடக்க கல்வி அலுவலர்கள் விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும். அதற்காக பின்வரும் நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும்.
* மாவட்ட ஆட்சியர் தலைமையில் கூட்டங்கள் நடத்தி, அதில் உள்ளூர் முக்கிய பிரமுகர்கள் கலந்து கொள்ள ஏற்பாடு செய்ய வேண்டும். அப்போது கட்டணம் இல்லாமல் மாணவர்களுக்கு அரசுப் பள்ளிகளில் கல்வி கற்பிக்கப்படுவது குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும். விளம்பரங்கள் செய்ய வேண்டும்.
* இலவச கல்வி குறித்து பொதுமக்கள் அறியும்படி பேனர்கள் வைக்க வேண்டும். துண்டுப் பிரசுரங்கள் வினியோகம் செய்ய வேண்டும்.
* ஒரு ஒன்றியத்துக்கு 2 ஆட்டோக்கள் வீதம், 3 நாட்களுக்கு கிராமம் மற்றும் நகர்ப்புறங்களில் பிரசாரம் செய்ய வேண்டும். 31ம் தேதி முதல் ஜூன் 4ம் தேதி வரை இதை செய்து முடிக்க வேண்டும்.
* ஒரு ஒன்றியத்துக்கு 2 ஆட்டோ வீதம் 413 ஒன்றியங்களுக்கு 826 ஆட்டோக்களுக்கு ஆகும் செலவின விவரம்: ஆட்டோ வாடகை ரூ.1500, ஆட்டோ பின்னால் பேனர் வைக்க ரூ.500, ஒலிபெருக்கி, மைக் செட் வாடகை ரூ.1000, செலவிட வேண்டும்.
* டிவி, வாட்ஸ் ஆப், ரேடியோ மூலம் விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும். இதை ஜூன் 6ம் தேதிக்குள் முடிக்க வேண்டும்.
இவ்வாறு அந்த உத்தரவில் கூறப்பட்டுள்ளது.
Saturday, May 27, 2017
வங்கிகளில் கல்வி கடன் பெற ஆன்லைனில் விண்ணப்பிக்கலாம்
இன்ஜினியரிங், மருத்துவம் உள்ளிட்ட மேற்படிப்புகளுக்கு கடன் பெற, வங்கி வாசலில் மாணவர்கள் காத்திருக்க தேவையில்லை. ஆன்லைனில் விண்ணப்பிப்பதற்கான பிரத்யேக இணையதளத்தை, மத்திய அரசு அறிமுகம் செய்துள்ளது.
பிரதமரின் கல்வித் திட்டத்தின் கீழ், www.vidyalakshmi.co.in என்ற இணையதளம், 2015 இறுதியில் துவங்கப்பட்டது. இதை, என்.எஸ்.டி.எல்., என்ற மத்திய அரசு நிறுவனம் நிர்வகித்து வருகிறது. அந்த இணையதளத்தில் பதிவு செய்தால், அனைத்து வித கல்விக் கடன் மற்றும் உதவித்தொகைக்கு விண்ணப்பிக்கலாம். இதன் மூலம், இந்தியன் வங்கி, இந்தியன் ஓவர்சீஸ் வங்கி மற்றும் ஐ.சி.ஐ.சி.ஐ., உள்ளிட்ட, 40 பொது மற்றும் தனியார் துறை வங்கிகளில் கடன் பெறலாம்.
தங்கள் மனுவின் நிலை பற்றியும், மாணவர்கள், இணையதளத்தில் அறியலாம். கடனுக்கு ஒப்புதல் கிடைத்துவிட்டால், அதையும் பார்க்கலாம். சரியாக ஒத்துழைக்காத, வங்கி அதிகாரிகள் மீது, புகாரும் தரலாம். இந்த வசதி பற்றி, பெரும்பாலான மாணவர்களுக்கு தெரியவில்லை. அதற்கு காரணம், சில வங்கிகள், வித்யாலட்சுமி இணையதளத்தை சரியாக பயன்படுத்துவதில்லை. இதுபற்றி, மத்திய நிதி அமைச்சகத்திற்கு, புகார்கள் சென்றன.
அதை தொடர்ந்து, வங்கிகளுக்கு புதிய சுற்றறிக்கை அனுப்பப்பட்டு உள்ளது. அதில், 'அனைத்து கல்விக் கடன் மனுக்களை, இந்த இணையதளம் வழியாகவே பெற வேண்டும். 'இந்த வசதி பற்றி, கல்வி நிறுவனங்களில் விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும். மேலும், 2015 முதல், இதுவரை வழங்கிய கடன் பற்றி, இணையதளத்தில், வங்கிகள் பதிவேற்றம் செய்ய வேண்டும்' என, கூறப்பட்டு உள்ளது.
Friday, May 26, 2017
எம்.பி.ஏ., எம்.சி.ஏ சேர்க்கை: ஜூன் 1 முதல் பதிவு செய்யலாம்
தமிழகத்திலுள்ள அனைத்துப் பல்கலைக்கழகங்கள், அவற்றின் கீழ் இயங்கி வரும் அரசு, தனியார் கல்லூரிகளில் வழங்கப்படும் எம்.பி.ஏ., எம்.சி.ஏ. படிப்புகளில் மாணவர் சேர்க்கைக்கான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இந்தச் சேர்க்கையை கோவை அரசு பொறியியல் கல்லூரி நடத்துகிறது. இதுகுறித்து அரசின் அறிவிப்பு:
எம்.பி.ஏ., எம்.சி.ஏ. படிப்புகளில் சேர விரும்புவோர் www.gct.ac.in, www.tn-mbamca.com ஆகிய இணையதளங்கள் மூலம், வரும் ஜூன் 1 -ஆம் தேதி முதல் விண்ணப்பிக்கலாம். இந்த ஆன்-லைன் பதிவுக்கு ஜூன் 30 கடைசி நாளாகும். பதிவு செய்த விண்ணப்பத்தைப் பதிவிறக்கம் செய்து, உரிய சான்றிதழ் நகல்களை இணைத்து, ரூ. 300-க்கான விண்ணப்பக் கட்டணத்துக்கான வரைவோலையையும் இணைத்து அனுப்ப வேண்டும்.
"செயலர், தமிழ்நாடு எம்.பி.ஏ., எம்.சி.ஏ. மாணவர் சேர்க்கை-2017, அரசு பொறியியல் கல்லூரி, கோவை 641013' என்ற முகவரிக்கு விண்ணப்பம் அனுப்பப்பட வேண்டும். மேலும் விவரங்களை சம்மந்தப்பட்ட இணையத்தில் தெரிந்து கொள்ளலாம்.
அரசு பள்ளிகளில் 'பிளாஷ் கார்ட்'
அரசு தொடக்கப் பள்ளிகளில், மாணவர்களின் ஆங்கில திறனை வளர்க்க, பல வண்ண, 'பிளாஷ் கார்ட்' அட்டைகள் பயன்படுத்தப்பட உள்ளன. பொதுத்தேர்வில், 'ரேங்கிங்' முறை ஒழிப்பு, பிளஸ் 1க்கு பொதுத்தேர்வு போன்ற, பல்வேறு நடவடிக்கைகள், பள்ளிக்கல்வித் துறையில் மேற்கொள்ளப்பட்டுள்ளன.
அதை தொடர்ந்து, தொடக்கப் பள்ளிகளில், மாணவர் சேர்க்கையை அதிகரிக்கவும், தனியார் நர்சரி பள்ளிகளுக்கு நிகராக, கற்பித்தல் முறையில் மாற்றம் கொண்டு வரவும் முடிவு செய்யப்பட்டுள்ளது. அதேபோல, ஆங்கில மொழியில் பேச்சு மற்றும் எழுத்து பயிற்சிக்காக, பெரும்பாலான பெற்றோர், தங்கள் பிள்ளைகளை, தனியார் பள்ளிகளில் சேர்க்கின்றனர். இந்த நிலையை மாற்ற, அரசு பள்ளிகளில், ஒன்றாம் வகுப்பில் இருந்தே, ஆங்கில மொழி திறனை வளர்க்கவும், முடிவு செய்யப்பட்டுள்ளது.
இதற்காக, முதல் கட்டமாக, தொடக்கப் பள்ளிகளில், பிளாஷ் கார்ட் அட்டைகள் பயன்படுத்தப்பட உள்ளன. ஆங்கில எழுத்து, பழம், காய்கறி, விலங்கு, பறவை போன்றவற்றின் பெயர்களை விவரிக்க, வண்ண படங்களுடன் கூடிய அட்டைகளை பயன்படுத்தி, வகுப்புகள் நடத்தப்பட உள்ளன.
ஏழாவது ஊதியக்குழு கருத்துக்கேட்பு துவக்கம்
ஏழாவது ஊதியக் குழு பரிந்துரை தொடர்பான, கருத்துக்கேட்பு கூட்டம், சென்னையில், நேற்று துவங்கியது.மத்திய அரசு ஊழியர்களுக்கு, ஏழாவது ஊதியக் குழு பரிந்துரைகள், ௨௦௧௬ல், அமல்படுத்தப்பட்டன. அதை தங்களுக்கும் செயல்படுத்த வேண்டும் என, தமிழக அரசு ஊழியர்கள் கோரிக்கை விடுத்தனர்.
இது தொடர்பாக, பரிந்துரைகளை அளிக்க, நிதித்துறை செயலர் சண்முகம் தலைமையில், ஐந்து பேர் குழு அமைக்கப்பட்டது. இக்குழு, அரசு ஊழியர் சங்கங்களிடம், கருத்துக்கள் கேட்க முடிவு செய்தது.அதன்படி, கருத்து கேட்பு கூட்டம், சென்னை, கடற்கரை சாலையில் அமைந்துள்ள, லேடி வெலிங்டன் பள்ளியில் நேற்று துவங்கியது; இன்றும் நடக்கிறது. இது குறித்து, நிதித்துறை செயலர், சண்முகம் கூறியதாவது:
அரசு அங்கீகாரம் பெற்ற, 149 சங்கங்களிடம், மனுக்களை பெற உள்ளோம். அதன்பின், ஜூன், 2 மற்றும் 3ல், ஓய்வூதியர் சங்கங்கள் மற்றும் அங்கீகாரம் பெறாத சங்கங்களிடமும், மனுக்கள் பெறப்படும். ஜூன் இறுதிக்குள், அறிக்கை சமர்ப்பிக்கப்படும். இவ்வாறு அவர் கூறினார்.
அரசு பஸ்களில் பழைய பாஸ்களில் பள்ளி மாணவர்கள் செல்ல அனுமதி
அரசு பஸ்களில், பழைய பாஸ் பயன்படுத்தி, மாணவர்கள் பள்ளிக்கு சென்று வரலாம்' என்று, அரசு போக்குவரத்துக் கழக அதிகாரிகள் தெரிவித்தனர். தமிழகத்தில் கோடை விடுமுறை முடிந்து, வழக்கம்போல், ஜூன் 1ல் பள்ளிகள் திறக்கப்படும் என, எதிர்பார்க்கப்பட்டது.
ஆனால், 'கொளுத்தும் வெயில் காரணமாக, ஜூன் 7ல் பள்ளிகள் திறக்கப்படும்' என்று, பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையன் நேற்று அறிவித்துள்ளார். இந்நிலையில், ஏற்கனவே பள்ளி மாணவர்களுக்கு வழங்கப்பட்ட இலவச பஸ் பாசை பயன்படுத்துவதற்கான காலக்கெடு முடிந்து விட்டது. இந்நிலையில், இந்த கல்வியாண்டுக்கான பஸ் பாஸ், பள்ளிக்கூடம் திறந்த பின்தான் வழங்கப்படும்.
வரும், 7ல் இருந்து பள்ளிக்கு செல்லவுள்ள மாணவர்கள், பழைய பாசில் செல்லலாமா என்பதை அறிவதில் ஆர்வமாக உள்ளனர். இது குறித்து, அரசு போக்குவரத்துக் கழக அதிகாரிகளிடம் கேட்ட போது, 'பள்ளி மாணவர்களுக்கு புதிய பஸ் பாஸ் வழங்கும் வரை, பழைய பாசில், வரும் ஜூலை மாதம் இறுதி வரை சென்று வரலாம்' என்றனர்.
பிறப்பு, இறப்பு பதிவு சான்று : தமிழக அரசு புது உத்தரவு
ஓராண்டுக்கு மேல் பிறப்பு, இறப்புக்களை பதிவு செய்யாவிட்டாலும், அதற்கான சான்றிதழ் பெற, நீதிமன்றம் செல்லாமல், கோட்டாட்சியர்களான, ஆர்.டி.ஓ.,க்களிடம் விண்ணப்பிக்கலாம்' என, தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது.
வேலுார், திருவண்ணாமலை, கடலுார், விழுப்புரம், கிருஷ்ணகிரி மற்றும் திருவாரூர் மாவட்டங்களைச் சேர்ந்த, ஆர்.டி.ஓ.,க்களுக்கு, பிறப்பு, இறப்பு பதிவு செய்வது தொடர்பான, சிறப்பு பயிற்சி முகாம், வேலுார் மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில், சமீபத்தில் நடந்தது. இது குறித்து, பிறப்பு, இறப்பு கூடுதல் பதிவாளரும், பொது சுகாதாரத் துறை இணை இயக்குனருமான, ஈஸ்வரன் கூறியதாவது:
பிறப்பு, இறப்பை ஓராண்டுக்கு மேல் பதிவு செய்யாமல் இருந்தால், நீதிமன்ற அனுமதி பெற்றே, பதிவு செய்ய வேண்டும் என்ற நடைமுறை இருந்தது. தற்போது, அதில் மாற்றம் செய்யப்பட்டுள்ளது. இனி, நீதிமன்றம் செல்ல வேண்டியதில்லை. சம்பந்தப்பட்ட, ஆர்.டி.ஓ.,க்களிடம் விண்ணப்பிக்கலாம். அதை, கிராம நிர்வாக அலுவலர், வருவாய் ஆய்வாளர் ஆய்வு செய்த பின், ஆர்.டி.ஒ., பிறப்பு, இறப்பை பதிவு செய்து, சான்றிதழ் வழங்குவார்.இவ்வாறு அவர் கூறினார்.
சிபிஎஸ்இ 12-ம் வகுப்பு தேர்வு முடிவுகள் 28-ம் தேதி வெளியீடு
நாடு முழுவதும் 10.98 லட்சத்துக்கும் அதிகமான மாணவ மாணவிகள் பிளஸ் 2 சிபிஎஸ்இ தேர்வை எழுதினர். கடினமான கேள்விகளுக்கு அவர்களுக்கு வழங்கப்பட்டு வந்த கருணை மதிப்பெண்கள் கடந்த ஏப்ரல் மாதம் சிபிஎஸ்இ ரத்து செய்தது. இதனால் மாணவ மாணவிகள் அதிர்ச்சி அடைந்தனர்.
சிபிஎஸ்இ-யின் முடிவை எதிர்த்து டெல்லி நீதிமன்றத்தில் வழக்கு தொடுக்கப்பட்டது. இந்த வழக்கில் இத்தனை ஆண்டுகளாக மாணவர்களுக்கு வழங்கப்பட்டு வந்த கருணை மதிப்பெண்களை ரத்து செய்வது பொறுப்பற்ற, நியாயமற்ற செயலாகும். இந்த முடிவை நடப்பாண்டே அமல்படுத்தினால் மாணவர்கள் கடுமையாக பாதிக்கப்படுவர். எனவே கருணை மதிப்பெண்கள் அவர்களுக்கு வழங்கப்பட வேண்டும் நீதிபதி உத்தரவிட்டார்.
இந்நிலையில் சிபிஎஸ்இ கூறியிருப்பதாவது: சிபிஎஸ்இ 12-ம் வகுப்பு தேர்வு முடிவுகள் நாளை மறுநாள் 28-ம் தேதி வெளியிடப்படுகின்றன. cbse.nic.in என்ற இணையதளத்தில் +2 பொதுத்தேர்வு முடிவுகள் வெளியிடப்படும். டெல்லி ஐகோர்ட் உத்தரவை பின்பற்றி தேர்வு முடிவுகள் வெளியிடப்படும். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
Thursday, May 25, 2017
கலங்கடிக்கும் பருவமுறை தேர்வுகள்! : எளிமைப்படுத்துமா கல்வித்துறை
பள்ளி மாணவர்களை கலங்கடிக்கும் வகையில் உள்ள பருவமுறை தேர்வுகளில் மாற்றம் கொண்டு வர வேண்டும்' என கல்வியாளர்கள் எதிர்பார்க்கின்றனர். தமிழக பள்ளிகளில் மெட்ரிக், ஓரியன்டல், ஆங்கிலோ இண்டியன், மாநில பாடத்திட்டங்கள் நடைமுறையில் இருந்தன.
இவற்றை நீக்கிய அரசு, 2010 - 11ல் சமச்சீர் கல்வித்திட்டத்தை அமல்படுத்தியது. அதே ஆண்டில் ஒன்று மற்றும் ஆறாம் வகுப்பிற்கு சமச்சீர் கல்வி முறை நடைமுறைக்கு வந்தது; அடுத்த ஆண்டில் இரண்டாம் வகுப்பு முதல் ஐந்தாம் வகுப்பு மற்றும் ஏழாம் வகுப்பு முதல் பத்தாம் வகுப்பு வரை விரிவு படுத்தப்பட்டது. இதையடுத்து, மாணவர்களின் புத்தக சுமையை குறைக்க, 2012 - 13ல் ஒன்று முதல் எட்டாம் வகுப்பு வரை முப்பருவ கல்வி முறை அமல்படுத்தப்பட்டது. இதன்படி, ஒரு ஆண்டுக்கான பாடங்களை, மூன்று கட்டங்களாக பிரித்து தேர்வுகள் நடந்தன. 2013- 14ல் ஒன்பதாம் வகுப்புக்கும் விரிவுபடுத்தப்பட்டது.
தொடர்ச்சியாக '2014- 15 கல்வி ஆண்டில், பத்தாம் வகுப்பிற்கும் இம்முறை அமல்படுத்தப்படும்' என கல்வித்துறை அறிவித்தது; ஆனால், தற்போது வரை நடைமுறைப்படுத்தப் படவில்லை. இதனால் ஒன்பதாம் வகுப்பு வரை முப்பருவ கல்வி முறையில் தேர்வு எழுதும் மாணவர்கள், பத்தாம் வகுப்பு சென்றவுடன் ஒரு ஆண்டு பாடங்களை படித்து தேர்வு எழுத வேண்டியுள்ளது. தற்போது இதற்கு தீர்வாக சி.பி.எஸ்.இ., பாடத்திட்டத்தில் சில மாற்றங்கள் கொண்டு வரப்பட்டுள்ளன.
இதே முறையை சமச்சீர் பாடத்திட்டத்திற்கும் கொண்டு வந்தால் எளிய முறையில் மாணவர்கள் தேர்வை எதிர்கொள்ள முடியும். சி.பி.எஸ்.இ.,ல் மாற்றம் சி.பி.எஸ்.இ., பாடத்திட்டத்தில் ஆறு முதல் எட்டாம் வகுப்பு வரை, இருபருவ முறையில் வரும் கல்விஆண்டு முதல் சில மாற்றங்கள் செய்யப்பட்டுள்ளன. இதன்படி, ஆறாம் வகுப்பில் முதல் பருவ பாடத்தின் 10 சதவீத பகுதிகள், இரண்டாம் பருவத் தேர்வில் சேர்க்கப்படும்; ஏழாம் வகுப்பில் முதல் பருவ பகுதியின் 20 சதவீத பாடமும், எட்டாம் வகுப்பில் முதல் பருவ பகுதியின் 30 சதவீத பாடங்களும் இரண்டாம் பருவத் தேர்வில் சேர்க்கப்படும். மேலும் ஒன்பது, பத்தாம் வகுப்பில் ஓராண்டு பாடங்களை படித்து தேர்வு எழுதும் முறை அமல்படுத்தப்பட்டுள்ளது. 'இதே முறையை தமிழக கல்வித்துறையும் பின்பற்றினால், பத்தாம் வகுப்பு பொதுத்தேர்வை மாணவர்கள் எளிய முறையில் எதிர்கொள்ள முடியும்' என கல்வியாளர்கள், ஆசிரியர்கள் வலியுறுத்துகின்றனர்.
ப்ளூ பிரின்ட்' வினாத்தாள்: கைவிடுகிறது கல்வி துறை
பத்தாம் வகுப்பு மற்றும் பிளஸ் 2 பொதுத் தேர்வில், 'ப்ளூ பிரின்ட்' முறைப்படி, வினாத்தாள் தயாரிப்பதை மாற்ற, பள்ளிக்கல்வித் துறை முடிவு செய்துள்ளது. பத்தாம் வகுப்பு மற்றும் பிளஸ் 2 பொதுத் தேர்வில், வினாத்தாள் தயாரிப்பில் மாற்றம் கொண்டு வர, தமிழக அரசு முடிவு செய்துஉள்ளது.
இதற்காக, தேர்வு சீர்திருத்தக் குழு ஆய்வு செய்து அறிக்கை தர, அரசு உத்தரவிட்டுள்ளது.தற்போது, வினாத்தாளை பொறுத்தவரை, அறிவுத்திறனை சோதிக்க, 19 சதவீதம்; பாடத்தை புரிந்து கொள்வதை ஆய்வு செய்ய, 31; படித்ததை பயன்படுத்தும் முறைக்கு, 23; திறனை ஆய்வு செய்ய, 27 சதவீதம் என, 100 சதவீத கேள்விகள் இடம் பெறுகின்றன. அதேபோல், 12 சதவீதம் கடினம், 60 சதவீதம் எளிமை மற்றும், 28 சதவீதம் மிதமான கேள்விகள் தயாரிக்கப்பட வேண்டும் என்ற விதி பின்பற்றப்படுகிறது. இதன்படி, 'ப்ளூ பிரின்ட்' என்ற வினா வடிவமைப்பு முறை பின்பற்றப்படுகிறது.
இந்த வினா வடிவமைப்பு அட்டவணை, ஒவ்வொரு பாட புத்தகத்திலும் இடம் பெறும். அதன்மூலம், ஒவ்வொரு பாடத்திலும், எந்த பிரிவில் எத்தனை மதிப்பெண் கேள்விகளை படிக்க வேண்டும்; எந்த பாடத்தில், புத்தகத்தின் பின்பக்க கேள்விகள், எடுத்துக்காட்டுகள், பயிற்சிகளை படிக்க வேண்டும் என்ற விபரம் அறியலாம். பெரும்பாலான பள்ளிகளில், ப்ளூ பிரின்ட் படியே, மாணவர்களை தேர்வுக்கு தயார்படுத்து கின்றனர். அதனால், பல பாடங்கள் மற்றும் வினாக்களை, மாணவர்கள் படிக்காமல் விட்டு விடுகின்றனர்.
இப்படி அரைகுறையாக படிப்போர், 'நீட்' ஜே.இ.இ., போன்ற நுழைவுத் தேர்வு களில் தேர்ச்சி பெற முடிவது இல்லை. எனவே, ப்ளூ பிரின்ட் முறையை நீக்க, தமிழக அரசுக்கு, அண்ணா பல்கலை பரிந்துரைத்து உள்ளது. அதன்படி, அடுத்த கல்வி ஆண்டு முதல், ப்ளூ பிரின்ட் படி, பொதுத்தேர்வு வினாத்தாள் தயாரிக்கப்படாது என, கல்வித்துறை வட்டாரங்கள் தெரிவித்து உள்ளன.
61 லட்சம் மாணவருக்கு இலவச காலணிகள்
அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளின், 61 லட்சம் மாணவர்களுக்கு, கருப்பு மற்றும் காக்கி நிற காலணிகள் வழங்கப்பட உள்ளன. ஐந்து ஆண்டுகளாக, பள்ளி மாணவர்களுக்கு, 14 வகை இலவச நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டு வந்தன. இரண்டு ஆண்டுகளாக, புத்தகம், நோட்டு தவிர, மற்ற இலவச பொருட்கள் சரியாக வழங்கப்படவில்லை.
இந்த ஆண்டு, அனைத்து இலவச பொருட்களையும், விடுபடாமல் வழங்க முடிவு செய்யப்பட்டு, கூடுதல் நிதியும் ஒதுக்கப்பட்டுள்ளது. பள்ளிகள் திறந்தவுடன், பாட புத்தகங்களும், நோட்டு புத்தகங்களும் வழங்கப்பட உள்ளன. இதைத் தொடர்ந்து, மாணவர்களுக்கு காக்கி நிறத்திலும், மாணவியருக்கு கருப்பு நிறத்திலும், 'பெல்ட்' வைத்த, பி.வி.சி., காலணிகள் வழங்கப்பட உள்ளன. கடந்த ஆண்டுகளில், காலணிகளை கொள்முதல் செய்ததில் முறைகேடுகள் நடந்ததாக புகார்கள் எழுந்தன; துறை ரீதியாக விசாரணை நடந்து வருகிறது.
இந்நிலையில், வரும் கல்வி ஆண்டில், எந்த முறைகேடுமின்றி, தரமான காலணிகளை மாணவர்களுக்கு வழங்க, பள்ளிக் கல்வித் துறை உத்தரவிட்டு உள்ளது. வரும், 28ம் தேதி, இதற்கான, 'டெண்டர்' இறுதி செய்யப்பட உள்ளது. செப்டம்பருக்குள் காலணிகளை தயாரித்து முடிக்க, முடிவு செய்யப்பட்டுள்ளது. உற்பத்தியாகும் காலணிகளை, ஆகஸ்ட் முதல், ஒன்றாம் வகுப்பு முதல், 10ம் வகுப்பு வரையிலான மாணவர்களுக்கு வழங்க, கல்வித்துறை முடிவு செய்துள்ளது. மொத்தம், 61.22 லட்சம் பேருக்கு, காலணிகள் வழங்கப்பட உள்ளன.
பிளஸ் 2 மாணவர்களுக்கு சிறப்பு துணைத் தேர்வு : ஜூன் 23 முதல் ஜூலை 6 வரை நடக்கிறது
பிளஸ் 2 மாணவர்களுக்கான சிறப்பு துணைத் தேர்வு, ஜூன், 23ல் துவங்குகிறது. மார்ச்சில் நடந்த பிளஸ் 2 பொதுத் தேர்வில், சில பாடங்களில் தேர்ச்சி அடையாதவர்கள்,பங்கேற்காதவர்களுக்கு, சிறப்பு துணைத் தேர்வு அறிவிக்கப்பட்டுள்ளது.
இது குறித்து தேர்வுத் துறை இயக்குனர் வசுந்தராதேவி வெளியிட்ட செய்திக்குறிப்பு: ஜூன், 23ல் இந்த தேர்வு துவங்குகிறது. ஜூன், 23, 24ல் மொழி பாடத் தேர்வு, 26ல் ரமலான் பண்டிகை விடுமுறை, 27, 28ல் ஆங்கிலம்; 29ல், வேதியியல், கணக்கு பதிவியல், 30ல், வணிகவியல், மனை அறிவியல், புவியியல் தேர்வுகள் நடத்தப்படுகின்றன. ஜூலை 1ல், கணிதம், விலங்கியல், மைக்ரோ பயாலஜி, நியூட்ரிஷியன் அன்ட் டயபெடிக்ஸ்; 3ம் தேதி, தொடர்பு ஆங்கிலம், இந்திய கலாசாரம், கணினி அறிவியல், பயோ கெமிஸ்ட்ரி, முன்னேறிய தமிழ், ஜூலை 4ல், அனைத்து தொழிற்கல்வி, அரசியல் அறிவியல், நர்சிங் (பொது) மற்றும் புள்ளியியல்; 5ம் தேதி, உயிரியல், வரலாறு, தாவரவியல், வணிக கணிதம்; ஜூலை 6ல் இயற்பியல் மற்றும் பொருளியல் தேர்வுகள் நடத்தப்படுகின்றன.
காலை, 10:00 மணி முதல், 1:15 மணி வரை, தேர்வுகள் நடக்கும். தேர்வில் பங்கேற்க விரும்புவோர், மே, 29 முதல் ஜூன், 1 வரை, பள்ளிகள், தேர்வு மையங்களுக்கு நேரில் சென்று, ஆன்லைனில் விண்ணப்பிக்க வேண்டும். தனியார் பிரவுசிங் மையங்கள் மூலம் விண்ணப்பிக்க முடியாது. ஒரு பாடத்திற்கு, 50 ரூபாயும், இதர கட்டணமாக, 35 ரூபாயும், ஆன்லைன் பதிவு கட்டணமாக, 50 ரூபாயும் செலுத்த வேண்டும். இவ்வாறு அதில் கூறப்பட்டு உள்ளது.
Wednesday, May 24, 2017
கல்வி அமைச்சரின் அறிவிப்பு 'பணால்' : புத்தக கட்டு சுமந்த ஆசிரியர்கள்
இலவசங்களை அரசே வினியோகிக்கும்' என, அமைச்சர் செங்கோட்டையன் கூறிய நிலையில், மீண்டும் ஆசிரியர்களையே புத்தகத்தை சுமக்க வைத்துள்ளனர். தமிழகத்தில், 2011 முதல், அரசு பள்ளி மாணவர்களுக்கு, 14 இலவச திட்டங்கள் மூலம், பாடப் புத்தகம், நோட்டு புத்தகம், வண்ண பென்சில்கள் போன்றவை, பள்ளிகளுக்கு ஆசிரியர்கள் மூலம் வினியோகிக்கப்படும்.
விடுமுறை காலத்தில், ஆசிரியர்கள் புத்தக கட்டுகளை சுமந்து செல்வது வழக்கம்.'இந்த முறைக்கு முற்றுப்புள்ளி வைக்க வேண்டும்' என, ஆசிரியர்கள் கோரிக்கை விடுத்தனர். 'இந்த ஆண்டே, இலவச திட்டங்களுக்காக, ஆசிரியர்களை அழைக்க மாட்டோம்' என, அமைச்சர் செங்கோட்டையன் அறிவித்தார்.
ஆனால், அமைச்சரின் அறிவிப்புக்கு மாறாக, இலவச திட்டங்களை வினியோகிக்க, அனைத்து பள்ளிகளில் இருந்தும், ஆசிரியர்கள் அழைக்கப்பட்டனர். அதனால், விடுமுறையில் இருந்த ஆசிரியர்கள், முக்கிய பள்ளிகளுக்கு வந்து, புத்தக கட்டுகளை சுமந்து செல்லும் பணியில் திடீரென ஈடுபடுத்தப்பட்டதால், அதிர்ச்சி அடைந்தனர்.