இலவச SMS களை உடனுக்குடன் பெற ON tnptfmani என்று type செய்து 9870807070 என்ற எண்ணிற்கு அனுப்பி இலவச குறுந்தகவல்களை(SMS) பெறுங்கள். DND (Do NOT Disturb) சர்வீஸ்ல் உள்ள எண்கள் அதனை(DND) நீக்கிய பிறகே இச்சேவையை பெறமுடியும். plz call 1909

Thursday, March 16, 2017

பள்ளிக்குச் செல்லாத 36,930 குழந்தைகளை வரும் கல்வியாண்டில் மீண்டும் சேர்க்க நடவடிக்கை பள்ளிக் கல்விக்கு ரூ.26,932 கோடி ஒதுக்கீடு


தமிழகத்தில் கண்டறியப்பட்டுள்ள பள்ளிக்குச் செல்லாத 36,930 குழந்தைகளை 2017-2018-ஆம் கல்வியாண்டில் மீண்டும் சேர்க்க நடவடிக்கை எடுக்கப்படும் என நிதிநிலை அறிக்கையில் கூறப்பட்டுள்ளது. மாணவர்களின் பள்ளிக் கல்விக்காக ரூ.26,932 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. இது குறித்து தமிழக நிதிநிலை அறிக்கையில் கூறியிருப்பதாவது:

புவியியல் தகவல் முறைமையின்படி தயாரிக்கப்பட்ட பள்ளி இருப்பிட வரைபடச் செயலி உதவியுடன் கல்வி வசதி இல்லாத பகுதிகள் கண்டறியப்பட்டு கடந்த 2011-ஆம் ஆண்டு முதல் இதுவரை 226 புதிய ஆரம்ப பள்ளிகள் தொடங்கப்பட்டுள்ளன. புதிய பள்ளிகள் தொடங்குவதற்கு சாத்தியமற்ற பகுதிகளில் வசிப்பிடங்களுக்கு அருகே உள்ள பள்ளிகளில் குழந்தைகளின் சேர்க்கையை உறுதி செய்யும் வகையில் போக்குவரத்து உதவிகள் வழங்கப்படுகின்றன. தமிழக அரசால் கண்டறியப்பட்டுள்ள பள்ளிக்குச் செல்லாத 36,930 குழந்தைகளை வரும் கல்வியாண்டில் (2017-2018) மீண்டும் சேர்க்க நடவடிக்கை எடுக்கப்படும்.

250 பள்ளிகள் தரம் உயர்த்தப்படும்: கடந்த 2011-ஆம் ஆண்டு முதல் 113 தொடக்கப் பள்ளிகள் நடுநிலைப் பள்ளிகளாகவும், 829 நடுநிலைப் பள்ளிகள் உயர்நிலைப் பள்ளிகளாகவும், 402 உயர்நிலைப் பள்ளிகள் மேல்நிலைப் பள்ளிகளாகவும் தரம் உயர்த்தப்பட்டுள்ளன. இதைத் தொடர்ந்து 2017-2018-ஆம் கல்வியாண்டில் 150 நடுநிலைப் பள்ளிகள் உயர்நிலைப் பள்ளிகளாகவும், 100 உயர்நிலைப் பள்ளிகள் மேல்நிலைப்பள்ளிகளாகவும் தரம் உயர்த்தப்படும். பள்ளிகளில் வகுப்பறைகள், அறிவியல் ஆய்வுக்கூடங்கள், குடிநீர் வசதி, சாய்வுதளங்கள், மாணவ-மாணவியருக்கான தனித்தனி கழிப்பறைகள் உள்ளிட்ட தேவையான உட்கட்டமைப்பு வசதிகளை மேம்படுத்த 2016-2017-ஆம் ஆண்டில் ரூ.440.98 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. பள்ளிகளில் சுகாதாரத்தை பேணுவதற்காக உள்ளாட்சி அமைப்புகள் மூலம் பள்ளிகளுக்கு ரூ.57.63 கோடி வழங்கப்பட்டுள்ளது.

வரும் கல்வியாண்டில் உட்கட்டமைப்பு வசதிகளை மேம்படுத்த வரவு-செலவுத் திட்ட மதிப்பீடுகளில் ரு.352 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. தனியார் பள்ளிகளில் 3.28 லட்சம் குழந்தைகள் சேர்ப்பு: குழந்தைகளுக்கான இலவச கட்டாய கல்விச் சட்டத்தின் கீழ் சமுதாயத்தில் பின்தங்கிய, பொருளாதாரத்தில் நலிவடைந்த பிரிவுகளைச் சேர்ந்த குழந்தைகள் தனியார் பள்ளிகளில் சேர நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. இந்தத் திட்டம் தொடங்கப்பட்டதில் இருந்து இதுவரை 3 லட்சத்து 28,910 குழந்தைகள் பயனடைந்துள்ளனர். அரசு, அரசு உதவி பெறும் பள்ளிகளில் 10, 11, பிளஸ் 2 வகுப்பு மாணவிகளின் பள்ளி இடைநிற்றலைக் குறைக்கும் வகையில் சிறப்பு ஊக்கத் தொகையாக ஒவ்வொருவருக்கும் ரூ.5,000 வழங்க ரூ.314 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. மாணவர்களின் பள்ளிக் கல்விக்காக 2017-2018-ஆம் நிதியாண்டில் ரூ.26,932 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது என அதில் கூறப்பட்டுள்ளது.

பொதுத் தேர்வுக்கு பின்னர், மதிப்பெண் சான்றிதழ்களில் பிறந்த தேதி, பெயர் திருத்தம் செய்ய முடியாது: உயர்நீதிமன்றம் உத்தரவு


பத்தாம் வகுப்பு பொதுத் தேர்வு எழுதிய பின்னர், மதிப்பெண் சான்றிதழ்களில் பிறந்த தேதி, பெயர் ஆகியவற்றில் திருத்தம் செய்ய முடியாது என்று சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. விழுப்புரம் மாவட்டம், செங்கமேடு கிராமத்தை சேர்ந்தவர் பி.கருணாகரன். இவர், சென்னை உயர் நீதிமன்றத்தில் தாக்கல் செய்துள்ள மனு: நான் 1992-ம் ஆண்டு ஜனவரி 16-ந் தேதி பிறந்தேன். ஆனால், சட்டவிவரங்கள் தெரியாத என் பெற்றோர், 1989-ம் ஆண்டு ஜனவரி 19-ஆம் தேதி பிறந்ததாக பள்ளியில் சேர்க்கும்போது குறிப்பிட்டு விட்டனர்.

நான் 10-ஆம் வகுப்பு தேர்வு எழுதும்போது எனக்கு பிறப்பு சான்றிதழ் இல்லாததால், பள்ளி மாற்றுச்சான்றிதழில் உள்ள பிறந்த தேதியையே குறிப்பிட்டு விட்டேன். அதன்பின்னர் கடந்த 2010-ஆம் ஆண்டு வானூர் குற்றவியல் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தேன். வழக்கில், 1992-ஆம் ஆண்டு ஜனவரி 16-ஆம் தேதி நான் பிறந்ததாக பதிவு செய்யவேண்டும் என்ற நீதிமன்ற உத்தரவை பெற்றேன். குற்றவியல் நீதிமன்றம் பிறப்பித்த உத்தரவின் அடிப்படையில் வருவாய் துறை அதிகாரியிடம், பிறப்பு சான்றிதழ் பெற்றேன். அதன்பின்னர், நான் படித்த பள்ளி நிர்வாகத்திடம் இருந்து, 1992-ஆம் ஆண்டு பிறந்தேன் என்று புதிய மாற்றுச் சான்றிதழை பெற்றேன். இந்த ஆவணங்களை எல்லாம் வைத்து, என்னுடைய 10 மற்றும் பிளஸ் 2 மதிப்பெண் சான்றிதழ்களில் பிறந்த தேதியை மாற்றித் தரும்படி தமிழக தேர்வுத்துறை செயலாளரிடம் மனு செய்தேன். ஆனால் பிறந்த தேதியை திருத்தம் செய்து தர தேர்வுத்துறை செயலாளர் மறுக்கிறார். எனவே, என்னுடைய உண்மையான பிறந்த தேதியைக் குறிப்பிட்டு புதிய மதிப்பெண் சான்றிதழ்களை வழங்கும்படி உத்தரவிட வேண்டும் என்று மனுவில் குறிப்பிட்டு இருந்தார்.

விதிகளில் இடமில்லை: இந்த மனுவை விசாரித்த நீதிபதி என்.கிருபாகரன், பிறப்பித்த உத்தரவில் கூறியிருப்பதாவது: எஸ்.எஸ்.எல்.சி. விதிகள், பிரிவு 5-ன் படி, வயது மற்றும் பெயர்களில் ஏதாவது திருத்தம் இருந்தால், அந்த திருத்தத்தை எஸ்.எஸ்.எல்.சி. பொதுத் தேர்வு எழுதுவதற்கு முன்பே செய்து விட வேண்டும். தேர்வுக்கு பின்னர், திருத்தங்களை செய்ய முடியாது என்று விதி, தெளிவாக கூறுகிறது. எனவே, மனுதாரரின் மதிப்பெண் சான்றிதழ்களில் பிறந்த தேதியை திருத்தம் செய்வதற்கு, தேர்வுத்துறை செயலாளருக்கு அதிகாரமே கிடையாது.

மேலும், பிறந்த தேதியை மாற்ற வேண்டும் என்று தேர்வு துறை செயலாளருக்கு உத்தரவிட குற்றவியல் நீதிமன்றத்துக்கு அதிகாரமே கிடையாது. இதுபோன்ற நடவடிக்கைகளை ஊக்குவித்தால், எதிர்காலத்தில் யார் வேண்டுமானாலும், குற்றவியல் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்து, தன்னுடைய பிறந்த தேதியை மாற்றிக் கொள்ளும் நிலை ஏற்பட்டு விடும். எனவே, இந்த வழக்கை ஏற்க முடியாது என்று நீதிபதி உத்தரவிட்டுள்ளார்.

ஆய்வக உதவியாளர் தேர்வுஇம்மாத இறுதியில் முடிவு


தமிழக அரசு உயர்நிலை மற்றும் மேல்நிலைப் பள்ளிகளில், ஆய்வக உதவியாளர் பணிக்கு, 4,362 இடங்களை நிரப்ப, 2015 மே, 31ல் தேர்வு நடந்தது. இதில், எட்டு லட்சம் பேர் பங்கேற்றனர். இந்த தேர்வில், நேர்முகத் தேர்வு மதிப்பெண் அடிப்படையில் மட்டும், பணி நியமனம் இறுதி செய்யப்படும் என, அறிவிக்கப்பட்டது.

இதை எதிர்த்து தொடர்ந்த வழக்கில், எழுத்துத் தேர்வு மதிப்பெண்ணையும் கணக்கில் எடுத்து, இறுதிப் பட்டியல் வெளியிட வேண்டும் என, உயர் நீதிமன்றம் உத்தரவிட்டது. இதையடுத்து, தேர்வு முடிவுகள், இரு ஆண்டுகளாக நிறுத்தி வைக்கப்பட்டன. தற்போது, தேர்வு முடிவுகள் பற்றிய வதந்திகள் குறித்து, தேர்வுத் துறையிடம், பள்ளிக்கல்வித் துறை அதிகாரிகள் விசாரணை நடத்தினர். தேர்வு முடிவுகளை, மார்ச் இறுதிக்குள் வெளியிட நடவடிக்கை எடுக்குமாறு உத்தரவிடப்பட்டு உள்ளது.

தமிழக பட்ஜெட் -2017 தமிழில்

Click below

https://app.box.com/s/enfpgi5ot8hcsh5g8zwf227yqgal73f4

Wednesday, March 15, 2017

TN budjet

💥TNPTF MANI💥

நிதி அமைச்சர் ஜெயக்குமாரின் உரையில் இருந்து.....

* ஏழைக்குடும்பங்களுக்கு 3.5 லட்சம் வீட்டுமனைப் பட்டா வழங்கப்படும்.

* 10,500 புதிய காவலர்கள் தேர்வு செய்யப்படுவார்கள்.

* தீயணைப்புத்துறைக்கு ரூ.253 கோடி

* இளைஞர் நலன், விளையாட்டுத்துறைக்கு ரூ.165 கோடி.

* ஆதி திராவிடர் நலன்துறைக்கு ரூ.3,009 கோடி

* இ- சேவை மையங்கள் மூலம் 500 விதமான சேவைகள்

* மெட்ரோ ரயில் திட்டத்துக்கான 2-ம் கட்ட பணிக்கான திட்ட அறிக்கை விரைவில் மத்திய அரசிடம் சமர்ப்பிக்க வேண்டும்.

* அவினாசி அத்திக்கடவு திட்டத்துக்கு மத்திய அரசின் அனுமதியை, மாநில அரசு எதிர்நோக்கியுள்ளது.

* சுகாதாரத்துறைக்கு ரூ.10, 158 கோடி

* சிறைத்துறைக்கு ரூ.282 கோடி

* காவல்துறைக்கு ரூ 1,483 கோடி

* உள்ளாட்சி தேர்தல் நடத்த ரூ.174 கோடி நிதி.

* மின்சாரம் எரிசக்தி துறைக்கு ரூ.16,998 கோடி

* கோவை, திருச்சி, மதுரையில் 1 லட்சம் இளைஞர்களுக்கு திறன் வளர்ப்பு பயிற்சி

* நகராட்சி நிர்வாகத்துறைக்கு ரூ. 13,996 கோடி

* தமிழ்வளர்ச்சிக்கு ரூ.48 கோடி ஒதுக்கீடு

* தமிழ்பல்கலைக்கழகத்துக்கு ரூ.6 கோடி ஒதுக்கீடு

* தொழில்துறைக்கு ரூ.2,088 கோடி ஒதுக்கீடு

* 100 நாள் வேலை திட்டத்திற்கு ரூ. 1,000 கோடி

*  கால்நடை பராமரிப்புக்கு ரூ. 1,161 கோடி

*  தமிழக அரசின் மொத்த கடன் ரூ 3,14,166 கோடி

*  உட்கட்டமைப்பு மேம்பாட்டு நிதியாக ரூ. 200 கோடி ஒதுக்கீடு.

*  மாநில சமச்சீர் வளர்ச்சி நிதியம் ஏற்படுத்தப்பட்டுள்ளது

*  ஊரகப்பகுதிகளில் 135 இடங்களில் சிறப்பு திட்டம் செயல்படுத்தப்படும்.

* ஐடி துறைக்கு ரூ.116 கோடி

*  போக்குவரத்துறைக்கு ரூ.2,191 கோடி

*  வணிகவரி மூலம் ரூ.77,234 கோடி வருவாய் கிடைக்கும்.

*  நெடுஞ்சாலை துறைக்கு 10,067 கோடி ஒதுக்கீடு

* குடிநீர் பற்றாக்குறையை சமாளிக்க ரூ.615 கோடி.

* அரசின் மொத்த செலவு ரூ. 1,75,351 கோடி.

* 2017-18-ல் பொருளாதார வளர்ச்சி 9 சதவிகிதமாக இருக்கும்

* ஜெயலலிதா அளித்துள்ள 164 வாக்குறுதிகளில் 60 வாக்குறுதிகள் நிறைவேற்றம்.

* கூட்டுறவுத்துறைக்கு ரூ.1,830.50 கோடி.

* மகப்பேறு உதவி ரூ.12,000 முதல் 18,000 ஆக உயர்வு

* கூட்டுறவு வங்கிகள் மூலம் விவசாயிகளுக்கு ரூ.7,000 கோடி புதிய கடன் வழங்க நடவடிக்கை.

* மீன்வளத்துறைக்கு ரூ.768 கோடி

* மாநிலத்தின் வரி அல்லாத வருவாய் ரூ.12,318 கோடி.

* மாநிலத்தின் சொந்த வருவாய் ரூ. 99,590 கோடி.

* தமிழகத்தில் ரூ. 3, 14, 366 கோடி கடன்.

* தமிழகத்தில் ரூ. 41,977 கோடி நிதிப்பற்றாக்குறை.



* 2017-18-ல் ரூ.15,930 கோடி வருவாய் பற்றாக்குறை இருக்கும் என்று ஜெயக்குமார் பட்ஜெட் தாக்கல் செய்தபோது கூறினார்.

50 ரூபாயில் சேமிப்புக்கணக்கு- இருக்கவே இருக்கு போஸ்ட் ஆபீஸ்


வெறும் 50 ரூபாயில் சேமிப்புக் கணக்கை தொடங்க முடியும். 500 ரூபாய் வைப்புத் தொகையாக இருந்தால் செக் புக் வசதி கொடுக்கிறார்கள். வைப்புத் தொகைக்கு ஆண்டுக்கு 4 சதவீதம் வட்டி வழங்கப்படுகிறது.

• எந்த வித கட்டணம் இல்லாமல் ஏடிஎம் கார்டும் கொடுக்கிறார்கள். ஏடிஎம் கார்டுக்கு ஆண்டுக்கட்டணம் எதுவும் கிடையாது.

• போஸ்ட் ஆபீஸில் உள்ள ஏடிஎம்மில் கட்டணமின்றி எத்தனை தடவை வேண்டுமானாலும் பணம் எடுத்துக் கொள்ளலாம்.

• கோயமுத்தூர் நகரில் மட்டும் நான்கு ஏடிஎம்கள் போஸ்ட் ஆபீஸ் வளாகத்தில் இயங்குகின்றன. கோவை மண்டலத்தில் 22 ஏடிஎம்கள் உள்ளன. அது போல் தமிழகம் முழுவதும் பல ஏடிஎம்கள் போஸ்ட் ஆபிஸ் வளாகத்தில் இயங்குகின்றன.

• தவிர எந்த போஸ்ட் ஆபிஸிலும் அடையாள அட்டை காட்டி, பணம் பெற்றுக்கொள்ளவோ, டெபாசிட் செய்யவோ முடியும்.

• உதாரணமாக பெற்றோர் கணக்கில் மகனோ மகளோ சென்னையில் பணம் செலுத்தினால், கன்னியாகுமரி மாவட்டத்தில் உள்ள கிராமத்து தபால் நிலையத்தில் பெற்றோர்கள் உடனடியாக பணம் எடுத்துக் கொள்ளலாம்.

• அவசரத்திற்கு எந்த வங்கி ஏடிஎம்மிலும் எடுக்கலாம்.

• வங்கிகள் இல்லாத ஊர்களிலும் தபால் நிலையங்கள் மூலம் பண பரிவர்த்தனை எளிதாகிறது. 150 வயதாகும் இந்திய தபால் துறைக்கு நாடு முழுவதும் ஒரு லட்சத்து 55 ஆயிரம் போஸ்ட் ஆபீஸ்கள் உள்ளன.

• போஸ்ட் ஆபிஸ் ஏடிம் இல்லாத ஊரில், அலுவலக நேரத்திற்கு பிறகு பணம் தேவைப்பட்டால் அருகில் உள்ள எந்த வங்கியின் ஏடிஎம்மிலும் பணம் எடுத்துக் கொள்ளலாம். ஆனால் அந்த வங்கிக்கான குறிப்பிட்ட கட்டணம் பிடித்தம் செய்யப்படும்.

• தலைமை மற்றும் துணை தபால் நிலையங்கள் இன்டெர்நெட் மூலம் இணைக்கப் பட்டுள்ளன. மீதம் உள்ள அலுவலகங்கள் இன்னும் ஓராண்டுக்குள் இன்டெர் நெட் மூலம் இணைக்கப்பட உள்ளன.

• சேமிப்பு வங்கிக் கணக்கு தவிர இப்போதெல்லாம் மணி ஆர்டரில் ஒரே நாளில் பணம் கிடைக்கும் வசதியும் உள்ளது.

• காலை பத்தரை மணிக்குள் மணி ஆர்டருக்கான பணத்தை செலுத்தி விட்டால், சேர வேண்டிய ஊரின் போஸ்ட்மேன் அன்றே பணத்தை உரியவருக்கு பட்டுவாடா செய்து விடுவார்.

• அலுவலகத்தை விட்டு போஸ்ட் மேன் சென்று விட்டால், பணத்திற்குரியவர் அந்த தபால் நிலையத்தில் நேரில் பெற்றுக் கொள்ளலாம்.

• விரைவில் அனைத்து போஸ்ட்மேன்களுக்கும் டிஜிட்டல் கருவிகள் வழங்கும் திட்டம் உள்ளதாகவும், அதன் மூலம் சேமிப்புக் கணக்கில் பணம் செலுத்துவது, பணம் எடுப்பது, போன்ற வசதிகளும் வர இருப்பதாக ஆறுமுகம் தெரிவித்தார்.

• வங்கிகளின் ஏகபோக கெடுபிடிக்களுக்கு மத்தியில், 50 ரூபாய்க்கு ஏடிஎம் கார்டுடன் கூடிய போஸ்ட் ஆபீஸ் சேமிப்புக் கணக்கு நடுத்தர வர்க்கத்தினருக்கு வரப்பிரசாதம்தானே!

கம்ப்யூட்டர் சயின்ஸ் தேர்வில் கறுப்பு மை: தேர்வுத்துறை உத்தரவு


பிளஸ் 2 கம்ப்யூட்டர் சயின்ஸ் தேர்வில் இந்தாண்டு ஓ.எம்.ஆர்., ஷீட்டில் கறுப்பு நிற பால் பாயின்ட் பேனாவால் மட்டுமே விடை நிரப்ப வேண்டும்' என தேர்வுத்துறை உத்தரவிட்டுள்ளது.இத்தேர்வு நாளை (மார்ச் 17) நடக்கிறது. 150 மதிப்பெண்கள் வினாக்களில், 75 ஒரு மதிப்பெண் வினாக்கள் 'அப்ஜெக்டிவ்' வகையாக கேட்கப்படும்.

இதற்கான விடைகள், தேர்வு அறையில் வழங்கப்படும் ஓ.எம்.ஆர்., ஷீட்டில் நிரப்ப வேண்டும். கடந்தாண்டு புளு அல்லது கறுப்பு நிற பால் பாயின்ட் பேனாக்களால் மாணவர்கள் விடை நிரப்பலாம் என அறிவுறுத்தப்பட்டது. ஆனால், இந்தாண்டு கறுப்பு நிற பால் பாயின்ட் பேனாவால் மட்டும் தான் நிரப்ப வேண்டும் என்ற புதிய உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. 'ஆன்சர் கீ' வெளியிடப்படுமா: பொது தேர்வுக்கு பின், மாணவர் நலன் கருதி அனைத்து தேர்வு வினாக்களுக்கும், 'ஆன்சர் கீ' விவரம், ஆன்லைனில் தேர்வுத்துறையால் வெளியிடப்படும். ஆனால், கம்ப்யூட்டர் சயின்ஸ் தேர்வுக்கு மட்டும் இதுவரை வெளியிடப்படவில்லை.

மேலும் மறுமதிப்பீட்டின் போது விடைத்தாள் புகைப்பட நகல் கேட்டு விண்ணப்பித்தால் 'தியரி' பகுதிக்கு மட்டுமே வழங்கப்படுகிறது. 75 மதிப்பெண் பகுதியான 'ஓ.எம்.ஆர்., ஷீட்' நகல் வழங்குவதில்லை. எனவே, இந்தாண்டு முதல் 'ஆன்சர் கீ' வெளியிட்டு, ஓ.எம்.ஆர்., ஷீட் புகைப்பட நகல் வழங்க வேண்டும் என மாணவர்கள் எதிர்பார்க்கின்றனர்.

ஆய்வக உதவியாளர் தரவரிசை தயார்


ஆய்வக உதவியாளர் தேர்வு முடிந்து, இரு ஆண்டுகள் நெருங்கும் நிலையில், தேர்வர்களின் தரவரிசை பட்டியல் தயாரிப்பு பணிகள் துவங்கியுள்ளன. அரசு உயர், மேல்நிலை பள்ளிகளில், 4,362 ஆய்வக உதவியாளர் பணியிடங்களை நிரப்ப, 2015 மே, 31ல் எழுத்துத் தேர்வு நடந்தது; எட்டு லட்சம் பேர் பங்கேற்றனர்.

எழுத்துத் தேர்வுக்கு பின், 'நேர்முகத் தேர்வில், அதிக மதிப்பெண் பெறுவோருக்கு பணி ஒதுக்கப்படும்' என, தேர்வுத் துறை அறிவித்திருந்தது. ஆனால், 'எழுத்துத் தேர்வு மதிப்பெண்ணையும் சேர்த்து, பணி ஒதுக்கீடு பட்டியல் வெளியிட வேண்டும்' என, உயர் நீதிமன்றம் உத்தரவிட்டது. இப்போது, உயர் நீதிமன்ற உத்தரவுப்படி, தேர்வு முடிவை அறிவிக்க, தேர்வுத் துறைக்கு, அரசு உத்தரவிட்டுள்ளது. எனவே, தேர்வர்களின் மதிப்பெண்படி, நேர்முகத் தேர்வுக்கான தரவரிசை பட்டியல் தயார் செய்யும் பணி துவங்கியுள்ளது. -

Tuesday, March 14, 2017

விலையில்லா அரிசிக்குப் பதில் கோதுமை: ரேஷன் கடைகளில் புதிய திட்டம் அமல்


ரேஷன் கடைகளில் விலையில்லா அரிசி பெறும் குடும்ப அட்டைதாரர்களுக்கு மாநகராட்சிப் பகுதியில் 10 கிலோ கோதுமையும், நகராட்சி, கிராம ஊராட்சிகளில் 5 கிலோ கோதுமையும் வழங்கும் திட்டம் கொண்டு வரப்பட்டுள்ளது. கோதுமை தேவையில்லையெனக் கருதுவோருக்கு நியாயவிலைக் கடைகளில் நிர்ணயிக்கப்பட்ட அளவில் விலையில்லா அரிசி விநியோகிக்கப்படும். எவ்வித ஆதரவும் இல்லாமல் தனித்து வாழ்வோர் குடும்ப அட்டை பெறுவதில் எவ்விதத் தடையும் இல்லை.

'டெட்' தேர்வு அறிவிப்பு : ஆசிரியர்கள் குழப்பம்


ஆசிரியர் தேர்வு வாரியமான, டி.ஆர்.பி., அறிவிப்பும், பள்ளிக்கல்வி இயக்குனர் அலுவலகக் குறிப்பும், 'டெட்' தேர்வு குறித்த குழப்பத்தை அதிகரித்துள்ளன. மூன்றாண்டுகளுக்கு பின், 'டெட்' எனப்படும், ஆசிரியர் தகுதித் தேர்வு அறிவிக்கப்பட்டு உள்ளது. ஏப்., 29, 30ல், இரு நாட்கள் தேர்வு நடக்கிறது. அதற்கான விண்ணப்ப வினியோகம், 6ல் துவங்கியது. வரும், 22 வரை விண்ணப்பம் பெறலாம்; 23க்குள் பூர்த்தி செய்த விண்ணப்பத்தை ஒப்படைக்க வேண்டும்.

இது குறித்து, டி.ஆர்.பி., வெளியிட்ட அறிவிக்கையில், 2011 நவ., 15ம் தேதியிட்ட அரசாணைப்படி, டெட் தேர்வு நடத்தப்படுவதாக கூறப்பட்டுள்ளது. ஆனால், பள்ளிக்கல்வி இயக்குனர் வெளியிட்ட சுற்றறிக்கையில், '2010 ஆக., 23க்கு பின், அரசு பள்ளிகளில் பணியில் சேர்ந்த ஆசிரியர்கள், டெட் தேர்வில் கட்டாயம் தேர்ச்சி பெற வேண்டும். தேர்ச்சி பெறாதவர்கள், பணியிலிருந்து விடுவிக்கப்படுவர்' என, எச்சரித்துள்ளார்.அதனால், ஆசிரியர்கள் கடும் குழப்பம் அடைந்துள்ளனர்.

இது குறித்து, தமிழ்நாடு உயர், மேல்நிலை பட்டதாரி ஆசிரியர் கழக நிர்வாகி, இளங்கோ கூறுகையில், ''டெட் தேர்வே, 2011க்கு பின் தான், தமிழகத்தில் நடத்தப்படுகிறது. 2010 முதல், பணியில் சேர்ந்தவர்கள், எப்படி தேர்வு எழுத முடியும். இது குறித்து, பள்ளிக்கல்வித் துறை தெளிவான விளக்கம் தர வேண்டும்,'' என்றார்.

Monday, March 13, 2017

20 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி மத்திய அரசு ஊழியர்கள் வேலை நிறுத்தம்

நாடு முழுவதும் 20 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி 16–ந் தேதி (நாளை மறுநாள்) மத்திய அரசு ஊழியர்கள் அடையாள வேலை நிறுத்தத்தில் ஈடுபட உள்ளனர்.

இந்த வேலை நிறுத்த போராட்டத்தில் தமிழகத்தை சேர்ந்த 1¼ லட்சம் மத்திய அரசு ஊழியர்கள் பங்கேற்கிறார்கள்.

20 அம்ச கோரிக்கைகள்
புதிய ஓய்வூதிய திட்டத்தை உடனடியாக கைவிட வேண்டும், பழைய ஓய்வூதிய திட்டத்தை நிபந்தனை இன்றி அரசு தொடர வேண்டும், ஊழியர் அடிப்படை ஊதியமாக ரூ.26 ஆயிரம் நிர்ணயிக்கப்பட வேண்டும் உள்பட 20 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி நாடு முழுவதும் மத்திய அரசு ஊழியர்கள் 16–ந் தேதி (நாளை மறுநாள்) ஒருநாள் அடையாள வேலை நிறுத்தத்தில் ஈடுபட உள்ளனர். மத்திய அரசு ஊழியர்கள் நடத்தும் இந்த வேலைநிறுத்தம் காரணமாக அரசு பணிகள் கடுமையாக பாதிக்கப்பட வாய்ப்பு உள்ளது.

மத்திய அரசு ஊழியர்கள் இந்த வேலை நிறுத்த போராட்டத்தில் ஈடுபடுவது ஏன்? என்பது குறித்து மத்திய அரசு அலுவலர்கள் மற்றும் ஊழியர்கள் கூட்டமைப்பின் பொதுச்செயலாளர் எம்.துரைப்பாண்டியன் ‘தினத்தந்தி’ நிருபரிடம் கூறியதாவது:–

பேச்சுவார்த்தை
7–வது ஊதியக்குழு அறிவிப்பை எதிர்த்து கடந்த ஆண்டு (2016) வேலை நிறுத்த அறிவிப்பு வெளியிட்டதையடுத்து, சங்க பிரதிநிதிகளுடன் அரசு பேச்சுவார்த்தை நடத்தியது. இதில் கமிட்டிகள் அமைக்கப்பட்டன. இதையடுத்து பேச்சுவார்த்தை வாக்குறுதிகளை நம்பி போராட்டம் தற்காலிகமாக ஒத்திவைக்கப்பட்டது.

ஆனால் இந்த கமிட்டிகள் அமைக்கப்பட்டு 8 மாதங்கள் ஆகியும் நம்பிக்கை தரும் எந்தவித அறிக்கையும் அதிகாரபூர்வமாக வெளியிடப்படவில்லை. வீட்டு வாடகைப்படி, போக்குவரத்துபடி உள்ளிட்டவையும் மத்திய அரசு ஊழியர்களுக்கு கிடைக்கவில்லை.

1¼ லட்சம் பேர் பங்கேற்பு
இதையடுத்து மத்திய அரசுக்கு ஒரு அழுத்தம் தரவேண்டும் என்ற வகையில் ஒருநாள் அடையாள வேலை நிறுத்த போராட்டத்தை கையில் எடுக்க முடிவு எடுத்துள்ளோம். தபால்துறையில் கிராமப்புற ஊழியர்கள் 2½ லட்சம் பேருக்கு கமிட்டி பரிந்துரைகளின் படி பணிஆணை வழங்கவேண்டும், புதிய ஓய்வூதிய திட்டத்தை உடனடியாக கைவிட வேண்டும், பழைய ஓய்வூதிய திட்டத்தை நிபந்தனையின்றி அரசு தொடர வேண்டும், அடிப்படை ஊதியமாக ரூ.26 ஆயிரம் வழங்கப்பட வேண்டும் உள்பட 20 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி நாடு முழுவதும் 16–ந் தேதி (வியாழக்கிழமை) ஒருநாள் அடையாள வேலை நிறுத்தம் நடைபெற உள்ளது.

இதில் தபால் துறையின் அனைத்து சங்கங்கள், வருமான வரித்துறை சங்கங்கள், கல்பாக்கம் அணு ஆராய்ச்சி நிலைய அலுவலர்கள்–ஊழியர்கள், ராஜாஜி பவன், சாஸ்திரி பவன் ஊழியர்கள் என 105 சங்கங்களின் அமைப்புகளை சேர்ந்தவர்கள் பங்கேற்கிறார்கள். இதில் தமிழகத்தை சேர்ந்த 1¼ லட்சம் பேர் உள்பட நாடு முழுவதும் 12½ லட்சம் மத்திய அரசு ஊழியர்கள் பங்கேற்க உள்ளனர்.  இவ்வாறு அவர் கூறினார்.

தமிழகம் முழுவதும் மே மாதம் பள்ளிசெல்லா குழந்தைகள் கணக்கெடுப்பு நடக்குமா?


அனைவருக்கும் கல்வி இயக்கம் சார்பில், ஒவ்வொரு கல்வியாண்டிலும் ஏப்ரல் மற்றும் மே மாதத்தில் பள்ளி செல்லா குழந்தைகள் கணக்கெடுப்பு நடத்தப்படுகிறது. இவ்வாறு கணக்கெடுக்கப்படும் குழந்தைகள், ஜூன் முதல் வாரத்தில் பள்ளிகளில் சேர்க்கப்படுகின்றனர். வீடு வீடாக சென்று கணக்கெடுப்பு பணிகள் நடத்தப்படும்.

இதற்கான சுற்றறிக்கை மார்ச் மாதத்தில் வட்டார வள மையங்களுக்கு அனுப்பப்படும். அதன் அடிப்படையில் குழு அமைத்து பணிகளை தொடங்குகின்றனர். நடப்பு ஆண்டுக்கான சுற்றறிக்கை வட்டார வள மையங்களுக்கு அனுப்பப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. அதில் குழு அமைத்து பள்ளி செல்லா குழந்தைகளை கணக்கெடுக்கும் பணி வரும் மே மாதம் தொடங்கப்பட வேண்டும் என்று அறிவுறுத்தப்பட்டுள்ளது.

இதுகுறித்து கல்வி அதிகாரிகளிடம் கேட்டபோது, `உள்ளாட்சி தேர்தலை மே மாதத்திற்குள் நடத்தி முடிக்க வேண்டும் என்று கோர்ட் உத்தரவிட்டுள்ளது. ஆசிரியர் பயிற்றுனர்களுக்கும் தேர்தல் பணிகள் வழங்குவதால் கணக்கெடுப்பு மே மாதம் தொடங்குமா என்பதுசந்தேகம்.’’ என்றனர்.

கணினி அறிவியல் பாட ஆசிரியர்கள் அரசு பள்ளிகளில் நியமிக்கப்படுவரா?


அரசு பள்ளிகளில், கணினி அறிவியல் பாட ஆசிரியர்கள் நியமிக்கப்படாததால், மாணவர்கள் பாதிக்கப்பட்டு உள்ளனர். கடந்த, 1992ல், பிளஸ் 1 மற்றும் பிளஸ் 2 வகுப்புகளில், கணினி அறிவியல் அறிமுகமானது. அப்போது, கணினி இயக்கத் தெரிந்த, 'டிப்ளமோ' பட்டம் பெற்றவர்கள், கணினி ஆசிரியர்களாக நியமிக்கப்பட்டனர்.

பின், கணினி அறிவியல் படித்த, மற்ற பாட ஆசிரியர்கள், வகுப்பு எடுக்க உத்தரவிடப்பட்டது. அதனால், 1992ல் பணியில் சேர்ந்தவர்கள், 2008ல் நீக்கப்பட்டனர்; அவர்கள், நீதிமன்றத்திற்கு சென்றனர். அவர்களில் பட்டப்படிப்பு முடித்தவர்களுக்கு மட்டும், சிறப்புத் தேர்வு நடத்தி, 1,652 பேர் பணியில் நியமிக்கப்பட்டனர். அவர்களின் பணியிடம், 'சார் நிலை பணியாளர்' என, அறிவிக்கப்பட்டது. இதுகுறித்து, கணினி அறிவியல் வேலையில்லா பட்டதாரி ஆசிரியர் சங்க மாநிலத் துணை அமைப்பாளர் முத்து வடிவேல் கூறியதாவது:

கடந்த, 15 ஆண்டுகளாக, கணினி அறிவியல் பட்டதாரிகளுக்கு, அரசு பள்ளிகளில், ஆசிரியர் பணி வழங்கப்படவில்லை. ஆசிரியராக சேரலாம் என, பி.எட்., முடித்த, 40 ஆயிரம் பேரின் எதிர்காலம் கேள்விக்குறியாகி உள்ளது. எனவே, மற்ற பாடங்களைப்போல, கணினி அறிவியலுக்கும், பிளஸ் 1, பிளஸ் 2 வகுப்புகளுக்கு, முதுநிலை பட்டம் முடித்தவர்களை, ஆசிரியர்களாக நியமிக்க வேண்டும்.இவ்வாறு அவர் கூறினார்.

ஏப்., 15 வரை விடுப்பு எடுக்க ஆசிரியர்களுக்கு தடை


அரசு உயர்நிலை மற்றும் மேல்நிலைப் பள்ளிகளில், ஏப்., 15 வரை, ஆசிரியர்கள் விடுப்பு எடுக்க தடை விதிக்கப்பட்டு உள்ளது. தமிழகத்தில், மார்ச் 2ல், பிளஸ் 2; மார்ச் 8ல், 10ம் வகுப்பு பொதுத் தேர்வு துவங்கி நடந்து வருகிறது. இரு தேர்வுகளிலும், 20 லட்சம் பேர் பங்கேற்கின்றனர். விடைத்தாள் திருத்தம், ஏப்., 1ல் துவங்க உள்ளது. ஏப்., 15க்குள் விடை திருத்தங்களை முடிக்க வேண்டும் என, ஆசிரியர்களுக்கு, 'கெடு' விதிக்கப்பட்டு உள்ளது.

பல ஆசிரியர்கள் விடை திருத்தத்தில் இருந்து தப்பிக்க, மருத்துவ விடுப்பு, காது குத்து, கல்யாணம் என, பல சாக்கு போக்குகளை சொல்லி, விடுப்பு கேட்பதாக புகார் எழுந்துள்ளது.அதனால், அனைத்து அரசு பள்ளிகளிலும், 9ம் வகுப்பு முதல், பிளஸ் 2 வரை பாடம் எடுக்கும் ஆசிரியர்கள், ஏப்., 15 வரை, விடுப்பு எடுக்க தடை விதிக்கப்பட்டு உள்ளது. மாவட்ட முதன்மை கல்வி அதிகாரிகள் மூலம், இதற்கான உத்தரவு, தலைமை ஆசிரியர்களுக்கு அனுப்பப்பட்டு உள்ளது.