இலவச SMS களை உடனுக்குடன் பெற ON tnptfmani என்று type செய்து 9870807070 என்ற எண்ணிற்கு அனுப்பி இலவச குறுந்தகவல்களை(SMS) பெறுங்கள். DND (Do NOT Disturb) சர்வீஸ்ல் உள்ள எண்கள் அதனை(DND) நீக்கிய பிறகே இச்சேவையை பெறமுடியும். plz call 1909

Monday, March 13, 2017

இன்று முதல் கொண்டாடுவோம், 'ஹேப்பி பை டே!'


'பை' என்றால் பொருட்கள் எடுத்துச் செல்லும் பை தான், அனைவருக்கும் ஞாபகத்துக்கு வரும். ஆனால் கணித நிபுணர்களிடம் கேட்டால், 'பை என்றால் கணிதத்தில் ஒரு முக்கிய எண் (π)' என்று, சரியாக சொல்லி விடுவார்கள்! ''எங்கெல்லாம் வட்ட வடிவம் தோன்றுகிறதோ, அங்கெல்லாம் 'π ' என்கிற இந்த முக்கிய எண் தோன்றுகிறது.

இதன் மதிப்பு, 3.14. பெரும்பாலான பொருட்கள், வட்ட வடிவத்தில் காணப்படுவதால், இயற்கையோடு, பை பின்னிப் பிணைந்துள்ளது,'' என்கிறார், கோவையை சேர்ந்த ஓய்வு பெற்ற கணித ஆசிரியர் உமாதாணு. 'கணிதம் இனிக்கும்' எனும், தனது சமீபத்திய புதிய கண்டுபிடிப்பின் வாயிலாக, பரவலாக அறியப்படுபவர் இவர். கணிதத்தில் மிக முக்கிய எண்ணாக, π விளங்குவதாலும், அதன் மதிப்பு தோராயமாக, 3.14 என வருவதாலும், மார்ச் 14 என்ற தேதி வாயிலாக, πயை அமெரிக்கர்கள் நினைவுகூர்கின்றனர். இது குறித்து உமாதாணு கூறியதாவது: கன வடிவங்களான கோளம், கூம்பு, உருளை போன்றவற்றின், மேற்பரப்பு, கொள்ளளவு ஆகியவற்றை கணக்கிட, பை பயன்படுத்தப்படுகிறது. ஒரு கோளத்தின் சுற்றளவை, விட்டத்தால் வகுத்தால் கிடைக்கும் மதிப்பே π. இதை கண்டு பிடித்த கிரேக்க கணித மேதை ஆர்க்கிமிடீஸ், அவரது மொழியில், π என அடையாளப்படுத்திக் கொண்டார். இந்த அடையாளத்துக்கு தோராயமாக, 3.14 என்ற எண்ணை பயன்படுத்தினார். π-ன் மதிப்பு, கோள்களின் சுழற்சிக் காலம் போன்ற எண்ணற்ற முக்கிய விஷயங்களுக்கு பயன்படுகிறது.

வில்லியம் ஜோன்ஸ் என்ற கணித அறிஞர், 1706-ல் π என்ற எண்ணுக்கு இன்று நாம் பயன்படுத்தும் குறியீட்டை அறிமுகப்படுத்தினார். அன்றாட வாழ்வில் இதன் முக்கியத்துவத்தை, உலகுக்கு உணர்த்த, 1988 முதல் லேரி ஷா என்ற அமெரிக்க இயற்பியல் அறிஞர், பை தினத்தை முதலில் கொண்டாடினார். அமெரிக்காவில் சில மாகாணங்களில், π தினத்தைக் கொண்டாட, விடுமுறையே அளிக்கப்படுகிறது. πக்கு வட்டத்துடன் நேரடிதொடர்புள்ளதால், வட்ட வடிவில் கேக்குகள் மற்றும் இனிப்பு வகைகளை தயார் செய்து, விழா நிறைவு பெற்றதும் உண்டு மகிழ்வார்கள்.

இதன் மதிப்பை, பாபிலோனியர்கள் 25/8 என்றும், எகிப்தியர்கள் 256/81 என்றும், டாலமி என்ற அறிஞர் 377/120 என்றும், கிரேக்கக் கணித மேதை ஆர்க்கிமிடிஸ் 22/7 என்றும், சீனர்கள் 355/113 என்றும், இந்தியாவின் ஆர்யபட்டர் 62832/20000 என்றும் பின்பற்றினர். கணினியின் துணை கொண்டு பல அறிஞர்கள் π-ன் மதிப்பை இன்று, 13 டிரில்லியன் தசம இலக்கங்களுக்கு மேல் கண்டறிந்துள்ளனர். ஒரு கணினி, முறையாக வேலைசெய்கிறதா எனத் தெரிந்துகொள்வதற்கு, π-ன் தசம இலக்க கணக்கீடுகள் பயன்படுகின்றன. தமிழகத்தில், வேலுார் பல்கலை மாணவர் ராஜ்வீர் மீனா, 2015 மார்ச் 21ல், π-ன் உண்மை மதிப்பை, கண்களை மூடிக்கொண்டு சரியாக ஒப்பித்து, புதிய கின்னஸ் சாதனை படைத்தார். கணிதத்தில் மிகவும் முக்கியமான π என்ற எண் குறித்து, நம் மாணவர்களிடம் விழிப்புணர்வு ஏற்பட வேண்டும். ஒவ்வொரு ஆண்டும் பை பிறந்த நாளை, நம் பள்ளிகளிலும் கொண்டாடும் வழக்கத்தை ஏற்படுத்தினால், இது போல் பல புதிய கணித கண்டுபிடிப்புகள், நம் மாணவர்களிடம் இருந்தும் உருவாகலாம். இவ்வாறு, உமாதாணு கூறினார்.

காதலர் தினம் போன்ற பயனற்ற நாட்களை கொண்டாடுவதை விட்டு, விட்டு, இன்று முதல் பள்ளிகள்தோறும், 'பை தினம்' கொண்டாடுவோம். எங்கே சொல்லுங்கள்... ஹேப்பி பை டே!

சிறப்பாசிரியர் தகுதித் தேர்வு: 50 ஆயிரம் பேர் எதிர்பார்ப்பு


தமிழகத்தில், இடைநிலை மற்றும் பட்டதாரி ஆசிரியர்களுக்கு நடத்தப்படும் டி.இ.டி., தேர்வுடன், சிறப்பாசிரியருக்கான தகுதி தேர்வும் நடத்த வேண்டும் என தொகுப்பாசிரியர்கள் எதிர்பார்க்கின்றனர்.கல்வித் துறையில் அரசு உயர்நிலை மற்றும் மேல்நிலைப் பள்ளிகளில் இசை, ஓவியம், உடற்கல்வி, கணினி, தையல் என 2 ஆயிரத்திற்கும் மேற்பட்ட சிறப்பாசிரியர் பணியிடங்கள், 2005ம் ஆண்டு முதல் காலியாக உள்ளன.

அரசு பள்ளிகளில் உள்ள நிரந்தர பணியிடங்களில், தேவை கருதி 2006ல் தொகுப்பூதியம் அடிப்படையில், பணி நியமனம் செய்யப்பட்ட பின், கல்வித்துறையில் 11 ஆண்டுகளாக இவ்வகை ஆசிரியர்களுக்கான நியமனங்கள் நடக்கவில்லை.மத்திய அரசின் கட்டாய கல்வி உரிமை சட்டத்தின் கீழ், 2012 முதல் தமிழகத்தில் டி.இ.டி., தேர்வுகள் நடத்த முடிவானபோது, சிறப்பாசிரியர் தகுதித் தேர்வும் நடத்த திட்டமிடப்பட்டது.இதற்காக மாநில கல்வி ஆராய்ச்சி மற்றும் பயிற்சி மையம் (எஸ்.சி.இ.ஆர்.டி.,) சார்பில் தேர்வுக்கான பாடத் திட்டங்கள் தயாரிக்கும் பணியும் முடுக்கிவிடப்பட்டது. ஆனால், அதுதொடர்பான முடிவுகள் இதுவரை வெளியிடப்படவில்லை.

மாநிலம் முழுவதும், தற்போது 50 ஆயிரம் பேர் சிறப்பாசிரியர் படிப்பு முடித்து காத்திருக்கின்றனர். இவர்களுக்கு, தகுதி தேர்வு நடத்த அப்போது இருந்த கல்வி அதிகாரிகள், அமைச்சர்கள் ஆர்வம் காட்டவில்லை. தற்போது டி.இ.டி., தேர்வு நடத்தவுள்ள நிலையில், சிறப்பு தகுதி தேர்வும் நடத்த நடவடிக்கை எடுக்க வேண்டும் என இவர்கள் வலியுறுத்தியுள்ளனர்.

இதுகுறித்து, தமிழ்நாடு இசை ஆசிரியர் கழக மாநில செயலாளர் பெரியசாமி, சட்ட ஆலோசகர் வெங்கடேஷன் கூறியதாவது: அனைத்து அரசு பள்ளிகளிலும் இசை, ஓவியம், உடற்கல்வி, கணினி ஆசிரியர் பணியிடங்கள் காலியாக உள்ளன. 2005ம் ஆண்டு முதல் ஓய்வு பெற்ற ஆசிரியர் பணியிடங்களில் நிரந்தர நியமனங்கள் நடக்கவில்லை. சிறப்பாசிரியர்கள் முறையே லோயர் மற்றும் ைஹயர் கிரேடு படிப்பு, பட்டயப் படிப்புகள் முடித்தவர்கள். பல ஆண்டுகளாக வேலைக்காக காத்திருக்கின்றனர்.டி.இ.டி., தேர்வுடன் 50 ஆயிரம் பேர் எதிர்பார்க்கும் சிறப்பாசிரியர் தகுதித் தேர்வும் நடத்த அமைச்சர் நடவடிக்கை எடுக்க வேண்டும், என்றனர்.

பொதுமக்கள் எதிர்ப்பை மீறி ஏப்ரல் 1முதல் அமல்-எஸ்.பி.ஐ


சேமிப்பு கணக்கில் குறைந்தது 5000 ரூபாய் இருக்க வேண்டும் என்ற ஸ்டேட் வங்கியின் திட்டம் ஏப்ரல் 1 முதல் அமலுக்கு வருகிறது. இது பொதுமக்களிடையே பெரும் எதிர்ப்பை ஏற்படுத்தி உள்ளது.

சில தினங்களுக்கு முன் வங்கி கணக்கில் குறைந்தபட்சம் 1000 முதல் 5000 ரூபாய் வரை இருக்க வேண்டும் ஸ்டேட் வங்கி தெரிவித்து இருந்தது. இதற்கு சமானிய பொதுமக்கள் பலர் பெரிதும் எதிர்ப்பு தெரிவித்து வந்தனர். 5000 ரூபாய் குறைவான சம்பளம் பெரும் ஊழியர்களும் ஸ்டேட் வங்கியில் கணக்கு வைத்துள்ளனர். அவர்களால் இந்த தொகையை வங்கி கணக்கில் வைத்திருப்பது சிரமம் என்று தெரிவித்தனர். இதனால் இந்த திட்டத்தை கைவிட வேண்டும் என்று பொதுமக்கள் பலர் கோரிக்கை விடுத்தனர்.

மத்திய அரசின் தன் யோஜனா திட்டத்தின் மூலம் பல கணக்குகள் ஸ்டேட் வங்கியிடம் தொடங்கப்பட்டு அதனை கையாள நேரம் அதிகரித்து உள்ளதால் இந்த அறிவிப்பு வெளியிடப்பட்டதாக ஸ்டேட் வங்கி தெரிவித்தது.

மேலும் சென்னை போன்ற பெருநகரங்களில் உள்ளவர்கள் கணக்குகளில் குறைந்தபட்சம் 5000 ரூபாயும், ஓரளவு குறிப்பிட்ட நகரங்களில் இருப்பவர்கள் 2000 ரூபாயும், கிராமப்புறங்களில் உள்ளவர்கள் வங்கி கணக்கில் 1000 ரூபாயும் வைத்திருக்க வேண்டும். அதற்கு குறைவாக வைத்திருப்பவர்களின் வங்கி கணக்கில் இருந்து பற்றாகுறைவுக்கு ஏற்ப சேவை வரியுடன் சேர்த்து கட்டணம் பிடித்து கொள்ளப்படும்.

இதேப்போன்று மாதம் மூன்று முறைக்கு மேல் பணம் எடுத்தாலோ, செலுத்தினாலோ பணம் பிடிக்கப்படும் என்று தெரிவித்துள்ளனார். இதற்கு வாடிக்கையாளர்க்ள் மற்றும் பொதுமக்கள் எதிர்ப்பு தெரிவித்து வரும் நிலையில் ஏப்ரல் 1ம் தேதி முதல் இந்த திட்டம் அமலுக்கு வரும் என்று ஸ்டேட் வங்கி தெரிவித்துள்ளது மேலும் அதிருப்தியை ஏற்படுத்தி உள்ளது.

டெட் தேர்வு குறித்து அறிவிப்பு

Sunday, March 12, 2017

அனைத்து துறை ஊழியர்கள் சங்கம் சார்பில் ஏப்ரல் 25ல் காலவரையற்ற வேலை நிறுத்தம்


பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி அரசு ஊழியர்கள் வரும் ஏப்ரல் 25ம் தேதி முதல் காலவரையற்ற வேலை நிறுத்த போராட்டத்தில் ஈடுபடுவது என்று சென்னையில் நடந்த அனைத்து துறை ஊழியர்கள் சங்க கூட்டத்தில் முடிவு செய்யப்பட்டது. தமிழ்நாடு அரசு அனைத்துத்துறை ஊழியர் சங்கங்களின் போராட்டக்குழு கூட்டம் மாநில அமைப்பாளர் மு. சுப்பிரமணியன் தலைமையில் சென்னையில் உள்ள தமிழ்நாடு அரசு ஊழியர் சங்க கட்டிடத்தில் நேற்று நடைபெற்றது. இதில், 64 துறைவாரி சங்கங்களின் நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.

இக்கூட்டத்தில் புதிய பென்சன் திட்டத்தை ரத்து செய்து பழைய பென்சனை வழங்க வேண்டும். 1.1.2016 முதல் 20 சதவிதம் இடைக்கால நிவாரணம் வழங்கிட வேண்டும். சிறப்பு காலமுறை ஊதியத்தை ஒழித்து வரையறுக்கப்பட்ட ஊதியம் மற்றும் ஓய்வூதியம் வழங்கிட வேண்டும். தொகுப்பூதியம், மதிப்பூதியம், தினக்கூலி, அவுட்சோர்சிங் முறையிலான பணி நியமனங்களை ரத்து செய்து காலியாகவுள்ள பணியிடங்களை காலமுறை ஊதியத்தில் நிரப்பிட வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகளை நிறைவேற்ற வலியுறுத்தி கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.

இக்கோரிக்கைகளை வலியுறுத்தி வரும் 15ம் தேதி மாவட்ட தலைநகரங்களில் மாபெரும் பேரணி நடத்தும் என்று அறிவிக்கப்பட்டது. மேலும். ஏப்ரல் 8ம் தேதி மாவட்டத் தலைநகரங்களில் வேலை நிறுத்த ஆயத்த மாநாடு நடத்துவது, ஏப்ரல் 15ம் தேதி திருச்சி நகரில் மாநில அளவிலான போராட்ட ஆயத்த மாநாடு நடத்துவது என்றும் முடிவு செய்யப்பட்டது. தொடர்ந்து ஏப்ரல் 25ம் தேதி முதல் காலவரையற்ற வேலை நிறுத்தம் மேற்கொள்வது என்றும் கூட்டத்தில் முடிவு செய்யப்பட்டது

தனி ஊதியத்தை பதவி உயர்வில் எப்படி நிர்ணயிக்க வேண்டும் என்ற திருச்சி மாவட்ட தொடக்க கல்வி அலுவலரின் மாதிரி நிர்ணயம் ..புதிய கணக்கீடு


Saturday, March 11, 2017

ஒரே மதிப்பெண்ணை பலர் பெற்றிருந்தால் காவலர் பணியிட தேர்வில் சீனியருக்கே முன்னுரிமை: சீருடைப்பணியாளர் குழுமம் அறிவிப்பு


தமிழ்நாடு சீருடைப் பணியாளர் தேர்வுக்குழுமம் சார்பில் 15,711 பணியிடங்களை நிரப்புவதற்கான தேர்வு ஜன.23ல் அறிவிக்கப்பட்டது. இதன்படி சிறப்பு காவல்படை, ஆயுதப்படை, சிறைக்காவலர் உள்ளிட்டவற்றில் பணியாளர்கள் தேர்வு செய்யப்பட உள்ளனர். எழுத்து, உடல்தகுதி, உடற்திறன் ஆகிய தேர்வின் அடிப்படையில் இப்பணியிடங்கள் நிரப்பப்படும்.

எழுத்துத்தேர்வில் 80 மதிப்பெண், உடற்திறன் தேர்வில் 15 மதிப்பெண், என்சிசி, என்எஸ்எஸ், விளையாட்டு சான்றிதழ்களுக்காக 5 மதிப்பெண் வழங்கப்படும். எழுத்துத்தேர்வில் குறைந்தபட்சம் 28 மதிப்பெண் பெற வேண்டும். இருப்பினும் அதிக மதிப்பெண் பெற்றவர்களின் எண்ணிக்கையின் அடிப்படையில், ஒரு பணிக்கு 5 பேர் என்ற விகிதத்தில், அடுத்தக்கட்ட தேர்வான உடல்கூறு அளத்தல், உடல்தகுதி, உடல்திறன் ஆகியவற்றுக்கு அழைக்கப்படுவர். இறுதியில் மொத்த உயர்ந்தபட்ச மதிப்பெண்கள் அடிப்படையிலும், பதவி விருப்ப முன்னுரிமை, வகுப்புவாரியான விகிதாச்சாரம் போன்றவற்றின் அடிப்படையில் பணியாளர்கள் தேர்வு செய்யப்படுவர்.

இதில் ஒன்றுக்கு மேற்பட்ட விண்ணப்பதாரர்கள் ஒரே மதிப்பெண் பெற்றிருந்தால், வயதில் மூத்தவருக்கு முன்னுரிமை அளிக்கப்படும். இதன்பின் மருத்துவ பரிசோதனை, தேர்வர்களின் குணநலன்கள், பழக்கவழக்கங்கள், காவல்துறை விசாரணைக்கும் உட்படுத்தப்படுவர் என்று தமிழ்நாடு சீருடைப்பணியாளர் தேர்வுக்குழுமம் தெரிவித்துள்ளது.

ஆசிரியர் தகுதித் தேர்வு 5 நாளில் 3 லட்சம் விண்ணப்பம் விற்பனை


ஏப்ரல் 29 மற்றும் 30ம் தேதிகளில் நடைபெறும் ஆசிரியர் தகுதித் தேர்வு எழுதுவதற்கு 5 நாட்களில் 3 லட்சம் பேர் விண்ணப்பம் பெற்றுள்ளனர். தமிழக அரசு சார்பில் ஆசிரியர் தகுதித் தேர்வு வருகிற ஏப். 29, 30ம் தேதிகளில் நடைபெறுகிறது. முதல் தாள் மற்றும் இரண்டாம் தாள் என தனித்தனியாக தேர்வுகள் நடத்தப்படுகின்றன. இத்தேர்வை சுமார் 8 லட்சம் முதல் 10 லட்சம் பேர் எழுதுவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.

இதற்கான விண்ணப்பங்கள் கடந்த 6ம்தேதி முதல் விநியோகிக்கப்பட்டு வருகின்றன. விண்ணப்ப கட்டணம் ரூ.50. அனைத்து மையங்களிலும் தினமும் ஆயிரக்கணக்கான ஆசிரியர்கள் வந்து விண்ணப்பங்களைப் பெற்றுச் செல்கின்றனர். நெல்லை மாவட்டத்தில் இதுவரை முதல் தாளுக்கு 11 ஆயிரம் பேரும், இரண்டாவது தாளுக்கு 20 ஆயிரத்து 398 பேரும் விண்ணப்பங்களை பெற்றுள்ளனர். இதேபோல் அனைத்து மாவட்டங்களிலும் 25 ஆயிரம் முதல் 30 ஆயிரம் வரையிலான எண்ணிக்கையில் விண்ணப்பங்கள் வழங்கப்பட்டுள்ளன.

கடந்த 5 நாட்களில் சுமார் 3 லட்சம் பேர் விண்ணப்பங்களை பெற்றுள்ளனர். மேலும் 10 நாட்கள் தொடர்ந்து விண்ணப்பங்கள் வழங்கப்பட உள்ளதால் இந்த எண்ணிக்கை 8 லட்சத்தை கடக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. பால் பாயிண்ட் பேனாவால் விண்ணப்பம் நிரப்ப வேண்டும்: விண்ணப்பம் ‘ஓஎம்ஆர்’ வடிவத்தில் வழங்கப்பட்டுள்ளது. எனவே விண்ணப்பத்தில் கேட்ட விவரங்களை கருப்பு நிற அல்லது நீல நிற பால்பாயின்ட் பேனாவால் நிரப்ப வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

பிளஸ் 2 தேர்வு விடைக்குறிப்பு தயாரிப்பு தேர்வுத்துறைக்கு ஆசிரியர்கள் யோசனை


பிளஸ் 2 தேர்வில், விடைக் குறிப்புகளை பிழையின்றி தயாரிக்க, தேர்வுத்துறைக்கு, ஆசிரியர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.பிளஸ் 2 மற்றும், 10ம் வகுப்பு பொது தேர்வுகள் நடந்து வருகின்றன. இதில், 20 லட்சம் பேர் பங்கேற்றுள்ளனர். மொழி பாடங்களுக்கு தேர்வு முடிந்து, முக்கிய பாடங்களுக்கு தேர்வு துவங்கியுள்ளது. ஒவ்வொரு ஆண்டும் தேர்வு நடக்கும் போதே, முந்தைய நாளில் முடிந்த பாடங்களுக்கு, விடை திருத்தம் துவங்கி விடும். இந்த ஆண்டு, அனைத்து தேர்வுகளும் முடிந்த பிறகே, ஏப்., 1 முதல் விடை திருத்தம் துவங்குகிறது.

இந்நிலையில், விடைக் குறிப்புகள் தயாரிக்கும் பணி, வரும், 15 முதல் துவங்குகிறது. இதுகுறித்து ஆசிரியர்கள் கூறியதாவது:பொது தேர்வுக்கான விடை திருத்தம் துவங்கும் நாளில், விடைக் குறிப்புகள் அதிகாரப்பூர்வமாக வழங்கப்படும். அப்போது தான், விடைக் குறிப்பில் இருக்கும் தவறுகள் தெரியவரும். ஆனால், உடனடியாக தவறுகள் திருத்தப்படாது என்பதால், முதலில் திருத்தப்படும் விடைத்தாள்களில், சரியான விடை இருந்தாலும், விடைக் குறிப்பு தவறாக இருப்பதால், அந்த மாணவருக்கு மதிப்பெண் கிடைக்காது. எனவே, தேர்வை சரியாக எழுதும் மாணவர்களும், அதற்கான மதிப்பெண்ணை பெறாமல் பாதிக்கப்படுவது உண்டு.

சில மாணவர்கள் தேர்வு முடிவு வந்ததும், மறுமதிப்பீடுக்கு விண்ணப்பித்தால் மட்டுமே, அவர்களுக்கு முறையே சேர வேண்டிய மதிப்பெண் கிடைக்கும். எனவே, விடைக்குறிப்பை தயாரித்து, அதை விடைத்தாள் திருத்தம் துவங்கும் முன்னரே சரிபார்த்தால், எந்த மாணவரும் பாதிக்கப்பட மாட்டார்.இவ்வாறு அவர்கள் கூறினர்.

Friday, March 10, 2017

8ம் வகுப்பு மற்றும் அதற்கு மேல் படித்த இளைஞர்கள், பெண்களுக்கு தையல் ஓட்டுநர் உள்ளிட்ட 8 வகை பயிற்சி: தமிழக அரசு அறிவிப்பு


தமிழ்நாடு குடிசைப்பகுதி மாற்று வாரியம் சார்பில் 8ம் வகுப்பு மற்றும் அதற்கு மேல் கல்வித்தகுதி உள்ள இளைஞர்கள், பெண்களுக்கு தையல், நான்கு சக்கர வாகனம் பழுது பார்த்தல் உள்ளிட்ட 8 வகையான பயிற்சி அளிக்கப்படுகிறது. இதுகுறித்து, தமிழக அரசு நேற்று வெளியிட்டுள்ள அறிக்கை:

8ம் வகுப்பு மற்றும் அதற்கு மேல் கல்வித்தகுதி உள்ள சென்னை, கோயம்புத்தூர், சேலம் மற்றும் திருநெல்வேலி ஆகிய மாவட்டங்களில் உள்ள குடிசைப்பகுதி, திட்டப்பகுதி வாழ் இளைஞர்கள், பெண்கள் 4200 பேர்களுக்கு, ஒன்றுக்கு ரூ.100, போக்குவரத்து செலவுடன் இலகுரக வாகன ஓட்டுநர் பயிற்சி, ஆயத்த ஆடைகள் தயாரித்தல், அழகுக்கலை, காலணிகள் தயாரித்தல், தையல் பயிற்சி, மருத்துவமனை பராமரிப்பு, செவிலியர் உதவியாளர் பயிற்சி, நான்கு சக்கர வாகனங்கள் பழுது பார்ப்பதற்கான பயிற்சி அளிக்கப்படுகிறது்.

பயிற்சி முடிந்தவுடன் வேலைவாய்ப்பிற்கு பயிற்சி நிறுவனங்கள் நடவடிக்கை மேற்கொள்ளும். முதற்கட்டமாக, நான்கு சக்கர வாகனங்கள் பழுது பார்த்தல், செவிலியர் உதவியாளர் பயிற்சி, மருத்துவமனை பராமரிப்பு, காலணிகள் தயாரித்தல் மற்றும் அழகுக்கலை பயிற்சிகள் தொடங்கப்பட்டு தமிழ்நாடு குடிசைப்பகுதி மற்றும் குடிசை மாற்று வாரிய குடியிருப்பிலுள்ள இளைஞர்களுக்கு 1500 நபர்களுக்கு தமிழ்நாட்டு திறன் மேம்பாட்டு கழகத்தினால் அங்கீகரிக்கப்பட்ட நிறுவனங்களின் வாயிலாக சென்னை, கோயம்புத்தூர், சேலம், மதுரை மற்றும் திருநெல்வேலி ஆகிய இடங்களில் பயிற்சி அளிக்கப்பட்டு வருகிறது. எனவே, பயிற்சியில் சேர விரும்பும் விண்ணப்பதாரர்கள் தங்களது பெயர், முகவரி மற்றும் திட்டப்பகுதியின் பெயர், பிறந்த தேதி, வயது, கல்வித்தகுதி, சேர விரும்பும் பயிற்சியின் பெயர், கைபேசி எண், ஆதார் அட்டை எண் ஆகியவைகளை எழுதி, தமிழ்நாடு குடிசைப்பகுதி மாற்று வாரியம், தலைமை அலுவலகத்தில் சமர்ப்பிக்கலாம்.

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது. ப்ளஸ் தமிழ்நாடு குடிசைப்பகுதி மாற்று வாரியம், 2016ம் ஆண்டு முதல் தமிழ்நாடு திறன் மேம்பாட்டு கழகத்துடன் இணைந்து 18 வயது முதல் 35 வயதிற்குட்பட்ட இளைஞர்கள் மற்றும் பெண்களுக்கு இப் பயிற்சிகளை அளித்து வருகிறது.

ஆசிரியர் பணிக்கு ஆதார் எண் சேகரிப்பு


அரசு பள்ளிகளில், 1,111 ஆசிரியர்கள் நியமனத்துக்கு, 'ஆதார்' எண் உட்பட, ஏழு வகையான விபரங்களை பதிவு செய்ய, ஆசிரியர் தேர்வு வாரியமான, டி.ஆர்.பி., அவகாசம் அளித்துள்ளது.அரசு பள்ளிகளில், 1,111 பட்டதாரி ஆசிரியர் பணியிடங்களை நிரப்ப, டி.ஆர்.பி., அறிவிப்பு வெளியிட்டுள்ளது.

ஏற்கனவே, 'டெட்' தேர்வில் தேர்ச்சி பெற்றவர்களின் மதிப்பெண், கல்வித் தகுதி அடிப்படையில், தரவரிசை பட்டியல் தயாரிக்கப்படும்; அதன்படி, நியமனம் நடக்கும் என, டி.ஆர்.பி., தெரிவித்து உள்ளது. இந்நிலையில், தரவரிசை பட்டியலுக்கான சுயவிபரங்களை, டி.ஆர்.பி., நேற்று வெளியிட்டது. இதில், தேர்வரின் ஆதார் எண் கேட்கப்பட்டுள்ளது.

பிறந்த தேதி, கூடுதலாக பெற்ற பட்டப் படிப்பு; தமிழ் வழி பி.எட்., படிப்பு; மாற்றுத்திறனாளிகள் குறித்த தகவல்; சிறப்பு கல்வியில், பி.எட்., படிப்பு; பட்டப் படிப்புகளில் பெற்ற மதிப்பெண் உள்ளிட்டவற்றை, தேர்வர்கள் திருத்தம் செய்யலாம் என, கூறப்பட்டு உள்ளது. தேர்வரின் சமீபத்திய புகைப்படம், 'டிஜிட்டல்' கையெழுத்து போன்றவற்றையும், பதிவேற்றம் செய்ய வேண்டும். 'ஆன்லைன்' வழி திருத்தங்களை, மார்ச், 20 இரவு, 10:00 மணிக்குள் முடிக்க வேண்டும் என, அறிவிக்கப்பட்டு உள்ளது.

41 பாடங்களை கைவிட சி.பி.எஸ்.இ., முடிவு


மத்திய இடைநிலை கல்வி வாரியமான, சி.பி.எஸ்.இ., பள்ளிகளில், 41 பாடங்கள், வரும் கல்வி ஆண்டில் கைவிடப்படுகின்றன. சி.பி.எஸ்.இ., பள்ளிகளில், பிளஸ் 1 மற்றும் பிளஸ் 2 படிப்பில், விருப்பப் பாடம் மற்றும் தொழிற்கல்வி பாடங்கள் நடத்தப்படுகின்றன. முக்கிய பாடங்களுடன், இந்த கூடுதல் பாடங்களையும் மாணவர்கள் தேர்வு செய்வது வழக்கம். இந்நிலையில், பல தொழில் பாடங்களுக்கு, போதிய வரவேற்பு இல்லாமல், ஒன்றிரண்டு மாணவர்களே படிக்கும் நிலை ஏற்பட்டது. இதையடுத்து, 41 படிப்புகளுக்கு, வரும் கல்வி ஆண்டில் மாணவர்கள் சேர்க்கப்படமாட்டார்கள் என, சி.பி.எஸ்.இ., அறிவித்துள்ளது. இதில், ஏழு விருப்பப் பாடம் மற்றும், 34 தொழிற்கல்வி பாடங்கள் அடங்கும்.

ஸ்காலர்ஷிப்' மாணவர்களை தேடும் பள்ளிகள்


எட்டாம் வகுப்பு மாணவர்களுக்கு, மூன்று ஆண்டுகளுக்கு பின், 'ஸ்காலர்ஷிப்' வழங்கப்பட உள்ளது. அதற்கான மாணவர்களை தேடும் பணி துவங்கியுள்ளது. பள்ளிப் படிப்பை பாதியில் நிறுத்துவதை தடுக்கும் வகையில், திறன் அடிப்படையில், 8ம் வகுப்பு மாணவர்களுக்கு, தமிழக அரசால், கல்வி உதவித்தொகை வழங்கப்படுகிறது.

இதற்கு தேசிய வருவாய் வழி மற்றும் திறன் தேர்வு நடத்தப்பட்டு, மாணவர்கள் தேர்வு செய்யப் படுகின்றனர்.அவர்களுக்கு, பிளஸ் 2 வரை, மாதம், 500 ரூபாய் கல்வி உதவித்தொகை வழங்கப்படும். இத்திட்டத்தில், கடந்த மூன்றாண்டுகளாக தேர்வு பெற்றவர்களுக்கு, நிதி உதவி வழங்கப்படவில்லை. பல மாணவர்கள், படிப்பை முடித்து வெளியேறி விட்டனர்.

இந்நிலையில், உதவித்தொகை வழங்குவற்காக, தேர்வு பெற்ற பழைய மாணவர்களின், 'ஆதார்' எண்களை சேகரிக்க, பள்ளி களுக்கு கல்வித் துறை உத்தரவிட்டு உள்ளது. அவர்களின் வங்கி எண்களுடன், ஆதார் எண்ணை இணைத்து, பட்டியல் வழங்க, அதிகாரிகள் உத்தரவிட்டு உள்ளனர். அதனால், பள்ளியிலிருந்து வெளியேறிய மாணவர்களை, ஆசிரியர்கள் தேடி வருகின்றனர்.

மகப்பேறு கால சட்ட திருத்த மசோதா நிறைவேற்றம்

மகப்பேறு காலச் சட்டத் திருத்த மசோதா நாடாளுமன்றத்தில் நிறைவேற்றப்பட்டுள்ளது. இதன் மூலம் மகப்பேறு கால பெண்கள் விடுப்பு 12 வாரத்தில் இருந்து 26 வாரங்களாக அதிகரிக்கப்பட்டுள்ளது.

நிறைவேற்றப்பட்ட இந்த மசோதா மூலம், இந்தியாவில் கிட்டத்தட்ட 18 லட்ச பெண்கள் பயனடைய உள்ளனர். ஒரு நிறுவனத்தில் பத்துக்கு மேல் ஊழியர்கள் இருக்கும் பட்சத்தில் இந்தச் சட்டத்தை அந்த நிறுவனம் அமல்படுத்த வேண்டும். 26 வாரங்களாக அதிகரிக்கப்பட்டுள்ள இந்த விடுப்பு முதல் இரண்டு குழந்தைகளுக்கு மட்டுமே பொருந்தும். மூன்றாவது குழந்தைக்கு 12 வாரங்கள் விடுப்பு மட்டுமே வழங்கப்படும்.

குழந்தைகளைத் தத்தெடுப்போருக்கு 12 வாரம் மகப்பேறு கால விடுப்பாக வழங்கப்படும். நாடாளுமன்றத்தில் தந்தைகளுக்கான விடுப்பு பற்றியும் விவாதித்த போதிலும் அதற்கான விதிகள் பற்றிய முடிவு எடுக்கப்படவில்லை. இந்த சட்டத்தில் மாநில அரசுகள் திருத்தங்கள் கொண்டுவரலாம் என மத்திய தொழிலாளர்த்துறை அமைச்ச்ர் பந்தாரு தத்தரேயா அறிவித்துள்ளார். அதனால் மாநில அரசுகள் விரும்பினால் மகப்பேறு கால விடுப்பை 26 வாரங்கள் மேல் அதிகரிக்கலாம்.

உலகில் முதன் முதலில் மகப்பேறு கால விடுப்பை அறிமுகப்படுத்தியது ஸ்வீடன். இந்த மசோதா நிறைவேற்றப்பட்டதால் உலகில் மகப்பேறு கால பெண்கள் விடுப்பு தருவதில் இந்தியா மூன்றாவது இடத்திற்கு முன்னேறி உள்ளது. முதல் இடத்தில் 50 வாரங்கள் விடுப்புடன். கனடாவும், இரண்டாவது இடத்தில் 44 வாரங்கள் விடுப்புடன் நார்வேயும் உள்ளன என்பது குறிப்பிடத்தக்கது.

தேசிய திறனாய்வுத்தேர்வு முடிவு

Click below

http://218.248.44.57/ntse_rst16/LoginForm.aspx

Thursday, March 09, 2017

ஐந்தாம் தலைமுறை அலைக்கற்றை

தொலைத்தொடர்பு நிறுவனங்களுக்கான ஐந்தாம் தலைமுறை அலைக்கற்றை ஏலத்தை இந்த ஆண்டில் நடத்த அரசு முடிவு செய்துள்ளது.

3,000 மெகா ஹெர்ட்சுக்கும் மேற்பட்ட அலைவரிசை கொண்ட ஐந்தாம் தலைமுறை அலைக்கற்றைகளை முதன்முறையாகத் தொலைத்தொடர்பு நிறுவனங்களுக்கு ஏலம்விட அரசு திட்டமிட்டுள்ளது. இது தொடர்பான கோப்பைத் தொலைத் தொடர்பு ஒழுங்குமுறை ஆணையத்துக்குத் தொலைத்தொடர்பு அமைச்சகம் அனுப்பியுள்ளது.

3,300 மற்றும் 3,400 மெகா ஹெர்ட்ஸ் அலைவரிசை கொண்ட இந்தக் கற்றைகள் மூலம் அதிகத் துல்லியம் கொண்ட படக்காட்சிகளை உடனடியாக அனுப்பவும் பதிவிறக்கம் செய்யவும் முடியும்.

ஐந்தாம் தலைமுறை (5G) அலைக்கற்றை ஏலத்தை இந்த ஆண்டு இறுதிக்குள் நடத்தத் திட்டமிடப்பட்டுள்ளது. ஏலம் எடுக்கும் நிறுவனங்கள் 2020ஆம் ஆண்டில் இதன்மூலம் வாடிக்கையாளர்களுக்குத் தகவல் தொடர்பை அளிக்க முடியும்.

TRB TET candidates list


http://tetupdation.examsonline.co.in/

தேசிய திறனாய்வு தேர்வு : இன்று வெளியாகுது 'ரிசல்ட்'


பத்தாம் வகுப்புக்கான தேசிய திறனாய்வு தேர்வு முடிவுகள், இன்று வெளியாகின்றன.பத்தாம் வகுப்பு மாணவர்கள், உயர் கல்வி படிக்க, மத்திய அரசு கல்வி உதவித்தொகை வழங்குகிறது. இதற்கு தேசிய திறனாய்வு தேர்வு, மாநில அளவிலும், பின், தேசிய அளவிலும் நடத்தப்படுகிறது.மாநில அளவிலான தேர்வு, நவ., 5ல், தமிழகம் முழுவதும் நடந்தது. 6,580 பள்ளிகளை சேர்ந்த, 1.55 லட்சம் பேர் பங்கேற்றனர். இவர்களுக்கான தேர்வு முடிவு, இன்று பிற்பகல், 2:00 மணிக்கு வெளியாகிறது.'இதன் விபரங்களை, www.dge.tn.gov.in என்ற, இணைய தளத்தில், அறிந்து கொள்ளலாம். மாநில அளவில் தேர்வு செய்யப்படுவோர், மே, 14ல் நடக்கும், தேசிய தேர்வில் பங்கேற்கலாம்' என, தேர்வுத்துறை இயக்குனர் வசுந்தராதேவி தெரிவித்துள்ளார்.