Friday, December 23, 2016
தனியார் சிபிஎஸ் இ பள்ளி முதல்வராக தேர்வு
தனியார் சிபிஎஸ்இ பள்ளிகள் தன்னிச்சையாக முதல்வர்களைத் தேர்ந்தெடுக்க முடியாது, தகுதித் தேர்வு எழுதிய பிறகு தேர்வுக்குழுதான் முதல்வர்களை நியமிக்கும் என்று சிபிஎஸ்இ அறிவித்துள்ளது.
முதல்வர்களுக்கான தகுதித் தேர்வு சிபிஎஸ்இ, மாநில அரசு மற்றும் சிபிஎஸ்இ பிரதிநிதிகள் ஆகியோருக்கு முதல்வர் தேர்வில் வீட்டோ அதிகாரம் உள்ளதாக சிபிஎஸ்இ தெரிவித்துள்ளது. இதனால் தனியார் சிபிஎஸ்இ பள்ளிகளின் தன்னாட்சி இழக்கப்படவுள்ளது.
எனவே பள்ளி முதல்வராக விரும்பும் ஆசிரியர்கள் முதல்வர் தகுதித் தேர்வு (Principal Eligibility Test-PET) எழுதியாக வேண்டும் என்று சிபிஎஸ்இ முடிவெடுத்துள்ளது.
ஏற்கெனவே முதல்வர்களாக இருப்பவர்களும் தேர்வு எழுதியாக வேண்டும். ஆனால் இந்த புதிய விதிமுறை அரசுப் பள்ளி முதல்வர்களுக்குப் பொருந்தாது.
புதிய விதிமுறைகளின் படி, முதல்வர் தேர்வுக்குழுவில் உள்ளவர் பள்ளிகள் நிர்வாகத்தில் அனுபவம் பெற்றவராகவோ அல்லது கல்விப்புலம் சார்ந்தவராகவோ இருப்பது அவசியம் இவர் நிர்வாகக் கமிட்டி, சிபிஎஸ்இ ஆலோசனையுடன் தேர்வுக்குக் குழுவுக்கு நியமிக்கப்படுவர். மேலும் இந்தக் குழுவில் சிபிஎஸ்இ பரிந்துரைக்கும் நபர் ஒருவரும் மாநில கல்விச் சட்டத்தின் படி மாநில அரசு நியமிக்கும் நபர் அல்லது நபர்களும் இடம்பெற்றாக வேண்டும்.
இதில் வீட்டோ அதிகாரம் என்ற தனிப்பட்ட அதிகாரம் மேற்கூறிய குழுவில் கடைசி 2 பிரிவுகளில் உள்ளவர்களுக்கே.
சுருக்கமாக சிபிஎஸ்இ அல்லது மாநில அரசு பிரதிநிதிகளால் மறுக்கப்படும் நபர் தனியார் பள்ளிகளில் கூட முதல்வராக முடியாது.
Thursday, December 22, 2016
ரயில் டிக்கெட் முன்பதிவு செய்ய வசதி
ரயில் டிக்கெட் பதிவு செய்வதற்கு புதிய வசதியை ரயில்வே துறை அறிமுகப்படுத்தியுள்ளது.
முன்னதாக, ஐஆர்சிடிசி புதிய ஆப் ஒன்றை அகிமுகப்படுத்தியது. அதன்மூலம் எளிதாக ரயில் டிக்கெட்டுகளை முன்பதிவு செய்யலாம். இதுபோன்று, ரயில் பயணிகளின் வசதிக்கு ஏற்றவாறு ரயில்வேயில் புதிய வசதிகளை ரயில்வேதுறை அறிவித்து வருகிறது. முன்பு, ரயில் டிக்கெட் முன்பதிவு செய்ய வேண்டுமென்றால் ரயில் நிலையங்களில் உள்ள டிக்கெட் கவுன்ட்டர்களில் நின்று முன்பதிவு செய்ய வேண்டும். அதன்பின், இணையம்வழியாக முன்பதிவு செய்யும் வசதி வந்தது. பின்பு, ரயில்வே ஆப் மூலம் முன்பதிவு செய்யும் வசதியும் அறிமுகப்படுத்தப்பட்டது. ஆனால் இதற்கெல்லாம் இணைய வசதி தேவை.
இனி, ரயில் டிக்கெட் முன்பதிவுசெய்ய யாரும் இன்டெர்நெட்டை தேடியோ அல்லது ரயில் நிலையத்துக்கோ அலைய வேண்டாம். ‘139’ என்ற எண்ணுக்கு மெசேஜ் அனுப்பி, எளிதாக டிக்கெட் முன்பதிவு செய்யும்வகையில் சிறந்த சேவையை ரயில்வே துறை அறிமுகப்படுதியுள்ளது. இதற்கு வங்கிக் கணக்குடன் செல்போன் எண்ணை இணைத்திருந்தால், டிக்கெட் கட்டணம் வங்கிக் கணக்கிலிருந்து எடுத்துக் கொள்ளப்படும். இந்த புதிய சேவையில் டிக்கெட் முன்பதிவு செய்பவர், எத்தனைபேர் பயணம் செய்ய இருக்கிறார்கள், பயணத் தேதி, எந்த வகுப்பில் பயணிக்க வேண்டும், பெயர், வயது, ரயில் எண் ஆகியவற்றை 139 என்ற எண்ணுக்கு எஸ்.எம்.எஸ். அனுப்ப வேண்டும்.
இதையடுத்து, ரயில்வே துறையிடமிருந்து கட்டணத்துக்கான பரிமாற்ற அடையாள எண் அனுப்பிவைக்கப்படும். டிக்கெட் முன்பதிவு செய்யப்பட்டுவிட்டது என்று, நமது அலைபேசிக்கு எஸ்.எம்.எஸ். மற்றும் டிக்கெட் கட்டணத் தொகையும் அனுப்பி வைக்கப்படும். அதன்பின், பணப் பரிமாற்ற பாஸ்வேர்டு அனுப்பப்படும். அதை உறுதிசெய்தால், கட்டணம் வங்கிக் கணக்கிலிருந்து பெற்றுக் கொள்ளப்படும். இதன்மூலம், எளிதாக ரயில் டிக்கெட்டை முன்பதிவு செய்துகொள்ளலாம். இணையம்மூலம் முன்பதிவு செய்பவர்களுக்கு ரூ.1௦ லட்சம் விபத்துக் காப்பீடு வழங்கும் திட்டம் இந்த புதிய சேவைக்கும் பொருந்தும் என ரயில்வேதுறை தெரிவித்துள்ளது. ஆனால் இதற்கு ஐஆர்சிடிசி-யில் முன்பதிவு செய்திருக்க வேண்டும். இணைய வசதி இல்லாமல் சாதாரண அலைபேசி வைத்திருப்பவர்களுக்கும், மின்னணு பணப் பரிவர்த்தனை செய்பவர்களுக்கும் இந்த வசதியை கொண்டுவந்துள்ளதாக ரயில்வேதுறை தெரிவித்துள்ளது.
கிரிஜா வைத்தியநாதன் புதிய தலைமை செயலர்
தமிழகத்தின் புதிய தலைமைச் செயலாளர் நியமனம்!
தமிழகத்தின் புதிய தலைமை செயலாளராக கிரிஜா வைத்தியநாதன் சற்றுமுன் நியமனம் செய்யப்பட்டுள்ளார். கூடுதல் தலைமைச் செயலாளர் அந்தஸ்தில் இருந்து அவருக்கு பதவி உயர்வு அளிக்கப்பட்டுள்ளது. மேலும், நிர்வாக சீர்திருத்தம், கண்காணிப்பு ஆணையர் பொறுப்பையும் கூடுதலாக கவனிப்பார் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இவர் 1981-ஆம் ஐஏஎஸ் பேட்ச் என்பது குறிப்பிடத்தக்கது.
posted from Bloggeroid
Wednesday, December 21, 2016
விதிகளை தளர்த்திய ரிசர்வ் வங்கி
விதிகளை மீண்டும் மாற்றியது ரிசர்வ் வங்கி
வங்கிக்கணக்கில் கேஒய்சி விவரங்கள் பூர்த்தி செய்யப்பட்டிருந்தால், ரூ.5,000க்கு மேல் செல்லாத நோட்டு டெபாசிட் செய்வதற்கு தடையில்லை. விசாரணை எதுவும் இருக்காது என ரிசர்வ் வங்கி தெரிவித்துள்ளது. பழைய ரூ.500 மற்றும் ரூ.1,000 நோட்டு செல்லாது என கடந்த நவம்பர் 8ம் தேதி அறிவிக்கப்பட்டது. இதன்பிறகு மக்கள் தங்களிடம் உள்ள பழைய ரூபாய் நோட்டை வங்கிக்கணக்கில் டெபாசிட் செய்து மாற்றிக்கொள்ளலாம் என மத்திய அரசு தெரிவித்தது. இருப்பினும் கணக்கில் ரூ.2.5 லட்சம் வரை டெபாசிட் செய்தால் கேள்வி இருக்காது. அதற்கு மேல் டெபாசிட் செய்பவர்கள் வருமான வரித்துறையிடம் வருவாய் ஆதாரங்களை சமர்ப்பிக்க வேண்டும் என தெரிவிக்கப்பட்டது.
பின்னர் மத்திய அரசு, ஜன்தன் உட்பட அனைத்து கணக்குகளிலும் டெபாசிட் செய்யப்படும் தொகை கண்காணிக்கப்படும். செயல்படாத அல்லது நீண்ட நாட்களாக பெரிய அளவில் பரிவர்த்தனை அல்லாத கணக்கில் டெபாசிட் உயர்ந்தால் விசாரணை நடத்தப்படும் என்று அறிவித்தனர். இப்படி நாளும் மாறும் விதிகளால் மக்கள் பெரும் குழப்பம் அடைந்து வருகின்றனர். பழைய நோட்டு டெபாசிட் செய்வதற்கான அவகாசம் இந்த மாதம் 30ம் தேதியுடன் முடிவடையும் நிலையில், ரிசர்வ் வங்கி கடந்த திங்கட்கிழமை புது அறிவிப்பு வெளியிட்டது. இதில், பழைய ரூ.500 மற்றும் ரூ.1,000 நோட்டை வங்கியில் இனி ரூ.5,000 மட்டுமே டெபாசிட் செய்ய முடியும். அதற்கு மேல் டெபாசிட் செய்பவர்களிடம் வங்கி அதிகாரிகள் 2 பேர் விசாரணை நடத்துவார்கள்.
இதில் தாமதமாக டெபாசிட் செய்வதற்கான காரணமும் கேட்கப்படும். விளக்கம் திருப்திகரமாக இருந்தால் மட்டுமே டெபாசிட் செய்ய அனுமதிக்கப்படும் என தெரிவித்தது. இதற்கு பொதுமக்கள் மத்தியில்கடும் எதிர்ப்பு எழுந்தது. பழைய நோட்டு செல்லாது அறிவிப்புக்கு பிறகு வங்கிகளில் கூட்டம் குவிந்தபோது, டிசம்பர் 30ம் தேதி வரை அவகாசம் உள்ளது. எனவே அவசரம் காட்ட வேண்டாம் என பிரதமரும், நிதியமைச்சரும் கூறியிருந்ததை சுட்டிக்காட்டி கேள்வி எழுப்பினர். இதை தொடர்ந்து நிதியமைச்சர் அருண்ஜெட்லி அளித்த விளக்கத்தில், மக்கள் தயக்கமின்றி ஒரே தவணையாக டெபாசிட் செய்யலாம்.
திரும்ப திரும்ப டெபாசிட் செய்யும்போது சந்தேகம் எழுகிறது என்றார். இதன்பிறகு ரிசர்வ் வங்கி நேற்று வெளியிட்ட உத்தரவில், ‘‘கேஒய்சி (உங்கள் வாடிக்கையாளரை தெரிந்து கொள்ளுங்கள்) விவரங்கள் முழுமையாக பூர்த்தி செய்யப்பட்டிருந்தால், ரூ.5,000க்கு மேல் தாராளமாக டெபாசிட் செய்யலாம். எந்த கேள்வியும் இருக்காது. கேஒய்சி விவரங்கள் உள்ளவர்களுக்கு முன்னர் அறிவித்த கட்டுப்பாடு பொருந்தாது’’ என தெரிவித்துள்ளது.
அந்நிய செலாவணி விதி மீறல்: 5 வங்கிகளுக்கு அபாராதம்
அந்நிய செலாவணி மேலாண்மை சட்டம் 1999ல் உள்ள விதி முறைகளை மீறி செயல்பட்ட 5 வங்கிகளுக்கு அபராதம் விதித்து ரிசர்வ் வங்கி நேற்று உத்தரவிட்டுள்ளது. இதன்படி, பாங்க் ஆப் அமெரிக்கா, பாங்க் ஆப் டோக்கியோ மிட்சுபிஷி, ராயல் பாங்க் ஆப் ஸ்காட்லாந்து, ஸ்டாண்டர்டு சார்டர்டு வங்கி ஆகியவற்றுக்கு தலா ரூ.10,000, டட்சு வங்கிக்கு ரூ.20,000 விதிக்கப்பட்டுள்ளது.
* ரூ.5,000க்கு மேல் டெபாசிட் செய்தால், 2 அதிகாரிகள் விசாரணைக்கு பிறகே அனுமதிக்கப்படும் என 19ம் தேதி உத்தரவு வெளியானது.
* வாடிக்கையாளரின் விளக்கம் பதிவு செய்யப்பட்டு, கணக்கு தணிக்கை செய்ய முடிவு செய்திருந்தது.
* கரீப் கல்யாண் திட்டத்துக்கு மட்டும் டெபாசிட் உச்சவரம்பு இல்லை என அறிவிக்கப்பட்டது.
* டிசம்பர் 30 வரை அவகாசம் என்ற முடிவில் திடீர் கெடுபிடி புகுந்ததால் மக்கள் கொதிப்பு
* கடும் எதிர்ப்புக்கு பிறகு, முடிவில் பின்வாங்கிய ரிசர்வ் வங்கி, கெடுபிடியை தளர்த்தியது.
* ரூபாய் நோட்டு விவகாரத்தில் 43 நாளில் 60 மாற்றங்கள் நிகழ்ந்துள்ளன.
நீட் தேர்வு
தமிழ் உட்பட 8 மொழிகளில் நீட் தேர்வு!
2017-18-ம் கல்வி ஆண்டுக்கான எம்.பி.பி.எஸ் மருத்துவ நுழைவுத்தேர்வான நீட் தேர்வை தமிழ் உட்பட 8 மொழிகள் எழுதலாம் என மத்திய சுகாதாரத்துறை அமைச்சகம் அறிவித்துள்ளது. தமிழ், ஆங்கிலம், இந்தி, தெலுங்கு, குஜராத்தி, மராத்தி, வங்காளம், அசாமி ஆகிய 8 மொழிகளில் இந்த நுழைவுத் தேர்வு நடைபெற உள்ளது.
பள்ளிக்கூட பிரார்த்தனை கூட்டத்தில் போக்குவரத்து விதிகள் பற்றி விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும்; பள்ளி கல்வி இயக்குனர் சுற்றறிக்கை
போக்குவரத்து விதிகள் குறித்து பள்ளிக்கூட பிரார்த்தனை கூட்டத்தில் மாணவர்களிடம் விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும் என்று தலைமை ஆசிரியர்களுக்கு பள்ளி கல்வி இயக்குனர் ச.கண்ணப்பன் சுற்றறிக்கை அனுப்பி உள்ளார். சுற்றறிக்கை போக்குவரத்து விதிகளை எல்லோரும் கடைபிடிக்க வேண்டும். குறிப்பாக மாணவர்கள் கடைபிடிக்க வேண்டும் என்று வலியுறுத்தி தமிழகத்தில் உள்ள அனைத்து பள்ளிகளுக்கும் முதன்மை கல்வி அதிகாரிகள் வழியாக பள்ளிக்கல்வி இயக்குனர் ச.கண்ணப்பன் சுற்றறிக்கை அனுப்பி உள்ளார். அதில் அவர் கூறியிருப்பதாவது:–
விழிப்புணர்வு பள்ளிக்கூட பிரார்த்தனை கூட்டத்தில் வாரம் இருமுறையாவது மாணவ–மாணவிகளுக்கு தலைமை ஆசிரியர்கள் போக்குவரத்து விதிமுறைகள் குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் பேச வேண்டும். அப்போது போக்குவரத்து விதிகளை கண்டிப்பாக கடைபிடிக்க வலியுறுத்துங்கள். மேலும் இதுகுறித்து மாணவ, மாணவிகள் உறுதிமொழி எடுக்க வைக்க வேண்டும். குறைந்தது 2 நிமிடங்கள் இதற்காக ஒதுக்க வேண்டும். இவ்வாறு அவர் கூறியுள்ளார். மேலும் மாணவர்கள் எடுத்துக்கொள்ள வேண்டிய உறுதிமொழியையும் அவர் கூறியுள்ளார்.
அதில் கூறியிருப்பதாவது:– போக்குவரத்து விதிகள் நான் போக்குவரத்து விதிகளை மதிப்பேன். நன்றாக பழகியபிறகே வாகனம் ஓட்டுவேன். டிரைவிங் லைசென்சு பெற்றபிறகே வாகனம் ஓட்டுவேன். என் பெற்றோர் வாகனம் ஓட்டும்போது இருசக்கர வாகனமாக இருந்தால் ஹெல்மெட் அணிந்து கொள்ள வேண்டும் என்று வற்புறுத்துவேன். பெற்றோர் கார் ஓட்டும்போது ‘சீட் பெல்ட்’ அணிந்து கொள்ள வேண்டும் என்று வலியுறுத்துவேன்.
நான் வேகமாக வாகனம் ஓட்ட மாட்டேன். ஓட்டும்போது செல்போன் பயன்படுத்த மாட்டேன். வாகனம் ஓட்டும்போது எனது பெற்றோரையும் செல்போன் பயன்படுத்த விட மாட்டேன். பஸ் படிக்கட்டில் பயணிக்க மாட்டேன். அசதியாக இருக்கும்போது வாகனம் ஓட்ட மாட்டேன். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
மாணவர்களுக்கு பாஸ்போர்ட் வழங்க 'ஸ்டூடண்ட் கனெக்ட்' சேவை
கல்லுாரி, பல்கலை மாணவர்களுக்கு பாஸ்போர்ட் வழங்க 'ஸ்டூடண்ட் கனெக்ட்' சேவை அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது,'' என, மதுரை மண்டல பாஸ்போர்ட் அலுவலர் மணீஸ்வரராஜா தெரிவித்தார். அவர் கூறியதாவது:
இச்சேவையின் மூலம் நாட்டில் 37 பாஸ்போர்ட் அலுவலகங்களுக்குட்பட்ட கல்லுாரி, பல்கலை மாணவர்களுக்கு பாஸ்போர்ட் வழங்க நடவடிக்கை எடுக்கப்படுகிறது. தற்போது 89 சேவை மையங்கள் மூலம் தினமும் 50 ஆயிரம் பேருக்கு பாஸ்போர்ட் வழங்கப்படுகிறது. 'ஸ்டூடண்ட் கனெக்ட்' மூலம் கல்லுாரி, பல்கலைகளில் சிறப்பு முகாம் நடத்தப்படும்.
மாணவர்கள் வேலைநாட்களில் அருகிலுள்ள சேவை மையத்திற்கு சென்று விண்ணப்பங்களை சமர்ப்பிக்கலாம். இந்த வசதியை கல்லுாரி, பல்கலை பேராசிரியர்கள், ஊழியர்கள் பயன்படுத்தி கொள்ளலாம். மாணவர்கள் தங்கியுள்ள முகவரி அல்லது பெற்றோர் நிரந்தர முகவரியில் பாஸ்போர்ட் பெறலாம். பிறப்பு சான்று, 10, 12ம் வகுப்பு மதிப்பெண் சான்று, முகவரி ஆதாரமாக ஆதார், வாக்காளர் அடையாள அட்டை உட்பட 12 ஆவணங்களில் ஏதேனும் ஒன்று இணைக்க வேண்டும். www.passportindia.gov.in என்ற இணையத்தில் மேலும் விவரங்களை அறியலாம். பாஸ்போர்ட் சேவை மையங்களில், தேவையான ஆவணங்களை சமர்ப்பிக்க விண்ணப்பங்கள் நிலுவையில் வைக்கப்படும்.
சமர்ப்பிக்காதவர்கள், 60 நாட்களுக்குள் தேவையான ஆவணங்களை சமர்ப்பிக்க வேண்டும். தவறினால் விண்ணப்பங்கள் நிராகரிக்கப்படும், என்றார்.
சாகித்திய அகாடமி விருது பெற்றோர் விபரம்
2016-ம் ஆண்டுக்கான அங்கீகரிக்கப்பட்ட 24 இந்திய மொழிகளுக்கு, சாகித்ய அகாடமி விருதுகள் அறிவிக்கப்பட்டுள்ளன. அத்துடன் அங்கீகரிக்கப்படாத 4 மொழிகளுக்கு ‛பாசா சம்மான்' விருதுகளும் அறிவிக்கப்பட்டன.
24 மொழிகளுக்கு..
தமிழ், மலையாளம், தெலுங்கு, கன்னடம், பெங்காலி உள்ளிட்ட அங்கீகரிக்கப்பட்ட 24 இந்திய மொழிகளில் வெளியான சிறுகதை, கவிதைகள், நாவல், கட்டுரை, திறனாய்வு உள்ளிட்ட படைப்புகளுக்கு சாகித்ய அகாடமி விருதுகள் வழங்கப்பட்டன. தமிழுக்கு நெல்லையை சேர்ந்த எழுத்தாளர் வண்ணதாசனுக்கு ‛ஒரு சிறு இசை' என்ற சிறுகதை தொகுப்பிற்காக விருது வழங்கப்பட்டது.
ரூ.1 லட்சம் பரிசு :
விருது பெறும் எழுத்தாளர்களுக்கு தலா ரூ.1 லட்சம் ரொக்கப் பரிசும், தாமிரப் பட்டயம் வழங்கப்படும். அடுத்த ஆண்டு(2017) பிப்.,22ம் தேதி டில்லியில் நடைபெறும் விழாவில் தேர்வானவர்களுக்கு விருதுகள் வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
விருது விபரம் :
* தமிழ் - வாணிதாசன் (சிறுகதை)
* தெலுங்கு - பாப்பி நனி சிவசங்கர் (கவிதை)
* கன்னடம் - கோலுவாரு முகம்மது குன்ஹி (நாவல்)
* மலையாளம் - பிரபா வர்மா (கவிதை)
* ஹிந்தி - நஸீரா சர்மா (நாவல்)
* பெங்காலி - நிரிசிங்கபிரசாத் பதூரி (கட்டுரை)
* ஆங்கிலம் - ஜெர்ரி பின்டோ (நாவல்)
* உருது - நிஜாம் சித்திக் (திறனாய்வு)
* சம்ஸ்கிருதம் - சித்தனாத் ஆச்சார்யா (கவிதை)
* அசாமி - ஜனான் புஜாரி (கவிதை)
* மணிப்பூரி - மொய்ரங்தம் ராஜன் (சிறுகதை)
* குஜராத்தி - கமல் வோரா (கவிதை)
* ஒடியா - பரிமிதா சத்பதி (சிறுகதை)
* பஞ்சாபி - சுவராஜ்பிர் (நாடகம்)
* காஷ்மீரி - அஜீஸ் ஹஜினி (திறனாய்வு)
* ராஜஸ்தானி - புலாஹி சர்மா (சிறுகதை)
* மராத்தி - அஸாராம் லொமேட் (சிறுகதை)
* நேபாளி - கீதா உபாத்யாய் (நாவல்)
* போடோ - அஞ்சு (கவிதை)
* சந்தாலி - கோவிந்த சந்திர மாஜி (கவிதை)
* சிந்தி - நந்த் ஜவேரி (கவிதை)
* டோக்ரி - சத்ரபால் (சிறுகதை)
* மைத்திலி - ஷியாம் தரிஹரே (சிறுகதை)
* கொங்கணி - எட்வின் ஜெ.எஃப். டி'சௌசா (நாவல்)
‛பாசா சம்மான்' விருது :
அங்கீகரிக்கப்படாத மொழிகளான குருக், லடாக்கி, ஹல்பி மற்றும் சவுராஷ்டிரா ஆகிய 4 மொழிகளின் வளர்ச்சிக்கு உதவிய எழுத்தாளர்களுக்கு ‛பாசா சம்மான்' விருதுகள் அறிவிக்கப்பட்டது. இதில் சவுராஷ்டிரா மொழிக்காக தமிழகத்தைச் சேர்ந்த டாக்டர் டி.ஆர்.தாமோதரன் மற்றும் டி.எஸ்.சரோஜா சுந்தரராஜன் ஆகியோர் விருது பெற தேர்வாகியுள்ளனர்.
கண் துடைப்பாகும் சிலாஷ் தேர்வு
கண்துடைப்பாகும் 'சிலாஸ்' தேர்வுகள் : 'சர்வே' முடிவால் சறுக்கும் கல்வித்துறை!
தமிழகத்தில் அனைவருக்கும் கல்வி திட்டம் (எஸ்.எஸ்.ஏ.,) சார்பில் நடத்தப்படும் மாணவர் திறனை மதிப்பீடு செய்யும் 'சிலாஸ்' (ஸ்டேட் லெவல் அச்சிவ்மென்ட் சர்வே) தேர்வுகள் கண்துடைப்பாகி விட்டது என குற்றச்சாட்டு எழுந்துள்ளது.
ஒவ்வொரு ஆண்டும், தொடக்க கல்வி மாணவர்கள் முந்தைய கல்வியாண்டில் பெற்ற, கற்றல் அடைவு திறன் (கற்றல் திறன்) தொடர்பான மதிப்பீட்டை, எஸ்.எஸ்.ஏ., மேற்கொள்கிறது. இதன்படி மூன்று, ஐந்து மற்றும் எட்டாம் வகுப்பு மாணவர்களுக்கு தமிழ், ஆங்கிலம் மற்றும் கணிதம் பாடங்களில் 'சிலாஸ்' தேர்வு நடத்தி அவர்கள் அடைவு திறன் குறித்து மாநில அளவில் சர்வே எடுக்கப்படுகிறது.
இந்தாண்டு இத்தேர்வு, டிச.,19ல் துவங்கி 22ல் (இன்று) முடிகிறது. இத்தேர்வு எழுத, ஒவ்வொரு ஆண்டும், ஒரே பள்ளிகளை தேர்வு செய்வதாகவும், ஒரு வகுப்பில் 25க்கு குறைவாக மாணவர் எண்ணிக்கை உள்ள பள்ளிகள் தேர்வு செய்யப்படுவதில்லை என குற்றச்சாட்டு எழுந்துள்ளது. மேலும், பெரும்பாலான பள்ளிகளில், 'வினாவிற்கான விடையை ஆசிரியர் சொல்லிக் கொடுப்பதால், மாணவர் அடைவு திறனை சோதிக்க வேண்டும் என்ற இத்தேர்வு நோக்கமே கேள்விக் குறியாகி விட்டது' எனவும் சர்ச்சை எழுந்துள்ளது. இதுதவிர, கல்வி செய்திகளை பதிவிடும் ஒருசில தனியார் 'வெப்சைட்'கள், இத்தேர்வு நடப்பதற்கு முன்பே வினாவிற்கான விடைகளை பதிவிடுகின்றன எனவும் ஆசிரியர்கள் குற்றம்சாட்டுகின்றனர்.
இதுகுறித்து ஆசிரியர் சங்க நிர்வாகி ஒருவர் கூறியதாவது: ஒரு யூனியனில் 1-5 வகுப்பில் 10 பள்ளிகள், 6-8 வகுப்பில் ஆறு பள்ளிகள் தேர்வு செய்து, இத்தேர்வு நடத்தி மாணவர் திறன் குறித்த சர்வே எடுக்கப்படும். மதிப்பெண் குறைந்தால் ஆசிரியர் கற்பித்தலில் கேள்வி எழும் என்பதால், மாணவர் விடையளிக்க ஆசிரியர் உதவி செய்கின்றனர் என பிரச்னை எழுந்தது.இதனால் 'ஒரு பள்ளியில் நடக்கும் தேர்வை மற்றொரு பள்ளியை சேர்ந்த ஆசிரியர், தலைமையாசிரியர் கண்காணிக்க வேண்டும்,' என கட்டுப்பாடு விதிக்கப்பட்டது. ஆனாலும் எந்த பள்ளிக்கு, எந்த ஆசிரியர் செல்கின்றனர் என்ற விவரம், முன்கூட்டியே தெரிந்து விடுகிறது. இதனால், அதிகாரிகள் கண்காணிப்பையும் மீறி 'மாணவர்களை நன்றாக தேர்வு எழுத வைத்து விடுகின்றனர்'. ஒவ்வொரு ஆண்டும் ஒரே பள்ளிகளை தேர்வு செய்யாமல் 25 பேருக்கு குறைவாக இருந்தாலும் அந்த பள்ளியையும் தேர்வு செய்ய வேண்டும். இதுபோன்ற குறைபாட்டை நீக்கினால் தான் 'சிலாஸ்' மூலம் உண்மையான சர்வேயை எதிர்பார்க்க முடியும், என்றார்.
Tuesday, December 20, 2016
பள்ளி, கல்லூரிகளில் மரம் வளர்ப்பை கட்டாயமாக்க கல்வித்துறை திட்டம்
வர்தா' புயலால், மரங்கள் சாய்ந்த நிலையில், எதிர்கால வெப்பநிலையை சமாளிக்க, பள்ளி, கல்லுாரி மற்றும் பல்கலைகளில், மரம் வளர்க்கும் திட்டத்தை கட்டாயமாக்க, தமிழக கல்வித்துறை முடிவு செய்துள்ளது. நான்கு ஆண்டுகளுக்கு முன், 'தானே' புயல், கடலுாரை கசக்கி விட்டு சென்றது போல, வங்கக்கடலில் உருவான, 'வர்தா' புயல், சென்னையை சின்னா பின்னமாக்கி விட்டது.
இப்புயல் கரையை கடந்த போது, 140 கி.மீ., வேகத்தில், சூறாவளி காற்று வீசியதால், பல ஆண்டு பழமையான மரங்கள் உட்பட, ஏராளமான மரங்கள் சாய்ந்தன. சென்னை, காஞ்சிபுரம், திருவள்ளூர் மாவட்டங்களில், வர்தா பாதிப்பால், ஒரு லட்சத்துக்கும் மேற்பட்ட மரங்கள் விழுந்துள்ளன. அதனால், பசுமையாக காட்சிஅளித்த பகுதிகள், பாலைவனம் போல மாறிவிட்டன. மரங்கள் முறிவால், பாதிக்கப்பட்டுள்ள சென்னையில், எதிர்காலத்தில், வெப்பத்தின் தாக்கம் அதிகரித்து, நோய்கள் பாதிக்கலாம் என, ஆய்வாளர்கள் கணித்துள்ளனர்.
இதனால், புதிதாக மரங்களை வளர்க்க, தமிழக அரசு ஆலோசித்து வருகிறது. பள்ளி கள், கல்லுாரிகள் மற்றும் பல்கலைகளில், விழுந்த மரங்களை கணக்கிட்டு, மூன்று மடங்கு அதிகமாக மரக்கன்றுகள் நட்டு, மாணவர்கள் மூலம் பராமரிக்க திட்டமிடப்பட்டுள்ளது. இத்திட்டத்தை, கல்வி நிறுவனங்களில் கட்டாயமாக்க, கல்வித்துறை முடிவு செய்துள்ளது.