Friday, December 09, 2016
Thursday, December 08, 2016
பிளஸ் 2 அரையாண்டு தேர்வு ரத்தா? : அதிகாரிகள் மெத்தனத்தால் குழப்பம்
பிளஸ் 2 அரையாண்டு தேர்வுகள், இன்று நடக்குமா அல்லது ரத்து செய்யப்படுமா என்ற குழப்பம் ஏற்பட்டுள்ளது. ஜெயலலிதா மறைவையொட்டி, மூன்று நாட்களுக்கு, பள்ளிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டது. அதனால், டிச., 7ல் துவங்க வேண்டிய, பிளஸ் 2 அரையாண்டு தேர்வு நடக்கவில்லை. இன்று பள்ளிகள் திறக்கப்படும் நிலையில், பிளஸ் 2 அரையாண்டு தேர்வு நடக்குமா என்பது குறித்து, பள்ளிக் கல்வித் துறை அறிவிப்பு வெளியிடவில்லை.
ஜெயலலிதாவின் இறுதிச் சடங்கு ஏற்பாடுகளில், கல்வித் துறை செயலர் சபிதா ஈடுபட்டிருந்ததால், அவரிடம் அனுமதி பெற முடியவில்லை என, கூறப்படுகிறது. அதிகாரிகளின் மெத்தனத்தால், அரையாண்டு தேர்வு எப்போது என தெரியாமல், மாணவர்கள் குழப்பத்தில் உள்ளனர். 'ஆங்கிலம் முதல் தாள் தேர்வை, இன்று நடத்துங்கள்' என, சில பள்ளிகளின் தலைமை ஆசிரியர்களுக்கு மட்டும் உத்தரவிட்டுள்ளனர். ஆனால், மாணவர்களுக்கு, எந்த தகவலும் தெரிவிக்கப்படவில்லை.
முதுநிலை பட்டதாரி ஆசிரியர் கழக தலைவர், கே.பி.ஓ.சுரேஷ் கூறுகையில், ''பள்ளிக் கல்வி அதிகாரிகளின் மெத்தனமான செயல், வருத்தத்தை தருகிறது. ''ஆசிரியர்களுக்கு சுற்றறிக்கை அனுப்பும் அதிகாரிகள், தேர்வை எழுதப் போகும் மாணவர்களுக்கு தான், முன்கூட்டியே தகவல் தெரிவிக்க வேண்டும். எனவே, அரையாண்டு தேர்வு தேதியை, புதிதாக அறிவிக்க வேண்டும்,'' என்றார். உயர்நிலை, மேல்நிலைப் பள்ளி தலைமை ஆசிரியர்கள் சங்கத் தலைவர், சாமி.சத்தியமூர்த்தி கூறுகையில்,
''விடுமுறைக்கு பின், எந்த தேர்வு நடக்கும் என்பதை, மாணவர்களுக்கு அறிவித்திருந்தால், அவர்கள் தேர்வுக்கு தயாராகியிருப்பர். இந்த குழப்பத்தை தவிர்க்க, பிளஸ் 2 அரையாண்டு தேர்வுக்கான புதிய தேதியை நிர்ணயிக்க வேண்டும்,'' என்றார்.
தனியார் பள்ளிகளை பாருங்கள்! : தனியார் பள்ளிகள், எல்.கே.ஜி., முதல் பிளஸ் 2 வரை, அனைத்து மாணவர்களுக்கும், டிச ., 9ல், எந்த தேர்வு நடக்கும் என்பதை, மொபைல் போன் குறுஞ்செய்தி மற்றும் 'இ - மெயில்' வாயிலாக தெரிவித்து விட்டன. அதனால், மூன்று நாள் விடுமுறையை வீணடிக்காமல், அந்த மாணவர்கள் தேர்வுக்கு தயாராகியுள்ளனர். தனியார் பள்ளிகளை பார்த்தாவது, அரசு பள்ளிகளை நிர்வகிக்கும் கல்வித் துறை அதிகாரிகள் கற்றுக்கொள்ள வேண்டும் என்கின்றனர்.
மத்திய அரசு அறிவிப்பு
டெபிட், கிரெடிட் கார்டுகள் பயன்படுத்தி பெட்ரோல் மற்றும் டீசல் வாங்கினால் 0.75 தள்ளுபடி செய்யப்படும் என்று மத்திய நிதிமந்திரி அருண்ஜேட்லி அறிவித்துள்ளார்.
இது குறித்து அவர் செய்தியாளர்களிடம் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறப்பட்டுள்ளதாவது:
# ரெயில்வே பயணச்சீட்டு மின்னனு முறையில் பதிவு செய்தால் ரூ.10 லட்சம் வரை காப்பீடு
# புறநகர் ரெயில்களில் மின்னணு முறையில் சீசன் டிக்கெட் வாங்கினால் 0.5 % தள்ளுபடி
# கிசான் கிரெடிக் கார்டு வைத்திருப்போருக்கு நபார்டு வங்கி மூலம் ரூபே கார்டு வழங்கப்படும்
# இந்த திட்டங்களுக்கான தள்ளுபடி ஜனவரி 1-ம் தேதி முதல் அமல்படுத்தப்படும்
# பெட்ரோல்,டீசல் நிலையங்களில் மின்னணு முறையில் பரிவர்த்தனை செய்தால் 0.75 % தள்ளுபடி
# பணமில்லா பரிவர்த்தனையே பொருளாதார வளர்ச்சிக்கான முதுகெலும்பு
# டோல்கேட்டில் கார்டு பயன்படுத்தினால் 0.5 % கட்டணச்சலுகை
# ரெயில்வே நிலையங்களில் ரொக்கமில்லா பரிவர்த்தனை செய்தால் 5 % சலுகை
# சுங்கச்சாவடிகளில் மின்னணு முறையில் பணம் செலுத்தினால் 10 % தள்ளுபடி
# எல்.ஐ.சி.காப்பீடுக்கு டிஜிட்டல் முறையில் பணம் செலுத்தினால் 8 % தள்ளுபடி
# மின்னணு முறைக்கு நுகர்வோர்களை மாற்ற வேண்டிய அவசியம் உள்ளது
# மின்னணு பணப்பரிமாற்றமே பண மதிப்பிழப்பு அறிவிப்பின் இலக்கு
# ரிசர்வ் வங்கி திட்டமிட்டபடி புதிய பண தாள்களை வெளியிட்டு வருகிறது.
# ரெயில்களில் மின்னணு முறையில் டிக்கெட் வாங்கினால் ரூ.10 லட்சத்திற்கு காப்பீடு
# ரெயில்களில் உணவு வாங்க மின்னணு முறையில் பணம் செலுத்தினால் 5 % தள்ளுபடி
# கடந்த ஒரு மாதத்தில் மட்டும் மின்னணு பரிவர்த்தனை 40 சதவீதம் அதிகரித்துள்ளது
விரைவில் தள்ளுபடி அமல்படுத்தப்படும். இவ்வாறு அவர் கூறியுள்ளார்.
TNPSC group ஒன் தேர்வுக்கு விண்ணப்பிக்க காலக்கெடு நீட்டிப்பு
குரூப்-1 தேர்வுக்கு விண்ணப்பிக்க கால அவகாசம் டிச.12 வரை நீட்டிக்கப்பட்டுள்ளதாக டிஎன்பிஎஸ்சி அறிவித்துள்ளது.
இது தொடர்பாக தமிழ்நாடு அரசுப்பணியாளர் தேர்வாணையம் வெளியிட்ட செய்திக்குறிப்பில், ''தமிழ்நாடு அரசுப்பணியாளர் தேர்வாணையம் தொகுதி-1ல் அடங்கிய பல்வேறு பதவிகளில் 85 காலிப்பணியிடங்களை நிரப்பும் பொருட்டு, தேர்வுக்கு விண்ணப்பிக்க ஒரு மாத கால அவகாசம் வழங்கப்பட்டு, கடைசி நாளாக டிசம்பர் 8 வரை என நிர்ணயிக்கப்பட்டிருந்தது.
விண்ணப்பதாரர்கள் விண்ணப்பிக்கக் குறிப்பிட்டுள்ள கடைசி நாள் வரை காத்திருக்காமல் அதற்கு முன்னரே போதிய கால அவகாசத்தில் விண்ணப்பிக்குமாறு அறிவுறுத்தப்பட்டிருந்தபோதிலும் விண்ணப்பதாரர்கள் கடைசிநேரம் வரை விண்ணப்பிக்க முற்பட்டுவருகின்றனர்.
இதைத்தொடர்ந்து பல்வேறுதரப்பினரிடமிருந்து பெறப்பட்ட கோரிக்கைகளின் அடிப்படையில், இந்த தொகுதி-1 தேர்விற்கு விண்ணப்பிக்க டிசம்பர் 12 வரை கால நீட்டிப்பு வழங்கப்பட்டுள்ளது.
அதைத் தொடர்ந்து தேர்விற்கான கட்டணம் செலுத்த டிசம்பர் 15 வரையும் கால நீட்டிப்பு வழங்கப்பட்டுள்ளது. எனினும் முதனிலைத் தேர்விற்கான தேதியில் மாற்றம் இல்லை.
இதற்கு மேல் எக்காரணம் கொண்டும் கால நீட்டிப்பு வழங்கப்படமாட்டாது என்றும் அறிவுறுத்தப்படுகிறது. ஆகையால் விண்ணப்பதாரர்கள் இந்த வாய்ப்பினைப் பயன்படுத்தி இறுதி நாள் வரை காத்திருக்காமல் முன்னதாகவே விண்ணப்பிக்க அறிவுறுத்தப்படுகிறார்கள்'' என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
Wednesday, December 07, 2016
ரூ.2000 வரையிலான டெபிட், கிரெடிட் கார்டு பரிவர்த்தனைகளுக்கு இனிமேல் சேவை வரியில்லை!
ரூபாய் 2000 வரையிலான டெபிட் கார்டு மற்றும் கிரெடிட் கார்டு பரிவர்த்தனைகளுக்கு சேவை வரியில்லை என அறிவிக்கப்பட்டுள்ளது. ரொக்கமற்ற பரிவர்த்தனையை ஊக்குவிக்க இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. பிரதமர் மோடி கடந்த நவம்பர் 8ஆம் தேதி முதல் 500 மற்றும் 1000 ரூபாய் நோட்டுகள் செல்லாது என அறிவித்தார். கறுப்புப்பணத்தை ஒழிப்பதற்காக அதிரடி நடவடிக்கை எடுக்கப்பட்டதாகவும் அவர் கூறினார்.
இதைத்தொடர்ந்து நாடு முழுவதும் மின்னனு பரிவர்த்தனையை நடைமுறை படுத்த மத்திய அரசு நடவடிக்கை எடுத்து வருகிறது. இதற்காக மானிய விலையில் வணிகர்களுக்கு ஸ்வைப் மிஷின்கள் வழங்க வங்கிகள் முனைப்பு காட்டி வருகின்றன. இந்நிலையில் டெபிட் மற்றும் கிரெடிட் கார்டுகளில் 2000 ரூபாய் வரை பரிவர்த்தனை செய்ய சேவை வரியில்லை என தெரிவிக்கப்பட்டுள்ளது.
ரொக்கமற்ற பணபரிவர்த்தனையை ஊக்குவிக்கும் வகையில் இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாகவும் மத்திய அரசு தெரிவித்துள்ளது. இதற்கு முன்னர் டெபிட் மற்றும் கிரெடிட் கார்டுகளுக்கான பரிவர்த்தனைக்கு 15 சதவீதம் சேவை வரி வசூலிக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.
முதல்வருக்கு பிடித்த நாவல் -ஜெ.பிரகாஷ்
சென்னையில் பள்ளியில் படிக்கும்போதே ஜெயலலிதா ஆங்கில காமிக்ஸ் புத்தகங்களை அதிகம் விரும்பிப் படித்தார். தன் மகள் படிப்பதற்காக தாய் சந்தியா ஏராளமான ஆங்கில காமிக்ஸ் புத்தகங்களை வாங்கிக் கொடுப்பார். ஒரே மூச்சில் பல காமிக்ஸ் புத்தகங்களைப் படிக்கும் ஆர்வம் அவருக்கு இருந்தது. தமிழில் வெளியான மூதறிஞர் ராஜாஜி எழுதிய, ‘சக்கரவர்த்தி திருமகன்’ நாவலை அவர் படித்தார். ஜெயலலிதாவுக்குப் பிடித்த இலக்கிய நூல் மகாபாரதம். அதுகுறித்து அவர், ‘‘அது வெறும் இலக்கியப் படைப்பு அல்ல; வாழ்க்கை முறையினை எவ்வாறு அமைத்துக்கொள்ள வேண்டுமென்று உணர்த்தும், வழிகாட்டும் அருள்வாக்கு. பண்பாடு, கலாசாரம், சமூகவியல், அரசியல், யுத்த சாஸ்திரம் உள்பட அனைத்து சாஸ்திர அம்சங்களையும் உள்ளடக்கிய முழுமையான வாழ்க்கைக்குத் தேவையான பொக்கிஷம் அது’’ என்று ஒருமுறை கருத்துத் தெரிவித்திருந்தார்.
ஜெ-வை மிகவும் கவர்ந்த நாவல்!
படப்பிடிப்புத் தளத்தில் ஒரு ஷாட் முடிந்து இன்னொரு ஷாட்டுக்கு தயாராகும் முன்பு, ஆங்கில நாவல்களுடன் மூழ்கியிருப்பார். சார்லன்ஸ் டிக்கன்ஸ், ஜேன் ஆஸ்டேன், ஷிட்னி ஷெல்டன் போன்ற ஆங்கில எழுத்தாளர்கள் எழுதிய நாவல்களை ஜெயலலிதா விரும்பிப் படிப்பார். நாவல்களைப் போலவே கவிதைகளைப் படிப்பதிலும் அவர் ஆர்வம் கொண்டிருந்தார். கவிஞர் சாமர்ஸெட்டின் கவிதைகளையும் விரும்பிப் படிப்பார். படப்பிடிப்புத் தளத்தில் ஒரு நிமிடத்தைக்கூட வீணடிக்கமாட்டார். ஐந்து அல்லது பத்து நிமிடங்களில் ஏதாவது ஓர் ஆங்கில நாவலைப் படிக்க ஆரம்பித்துவிடுவார். ‘1960-70-ம் ஆண்டுகளில் அவ்வப்போது வெளிவந்த ஆங்கில நாவல்களைப் படிக்கும் ஒருசில திரை நட்சத்திரங்களில் ஜெயலலிதாவும் ஒருவர். அன்றைய சமயத்தில், ஆங்கிலத்தில் வெளியான திரில்லர், சமூகம், குடும்ப உறவுகள் கலந்த உணர்வு சம்பந்தமான நாவல்களை அதிகம் விரும்பிப் படித்தார். ‘‘புகழ்பெற்ற ஆங்கில நாவலாசிரியரான ஜங் சாங் (jung chang) எழுதிய ‘வைல்டு ஸ்வான்ஸ்: த்ரி டாட்டர்ஸ் ஆஃப் சைனா’ (Wild Swans: Three Daughters of china) என்கிற நாவல்தான் தன்னை மிகவும் கவர்ந்தவைகளில் ஒன்று’’ என ஓர் இதழுக்குப் பேட்டியளித்திருந்தார் ஜெயலலிதா. போயஸ் கார்டனில் உள்ள அவருடைய வீட்டில் ஒரு பெரிய நூலகம் இருக்கிறது. அதில், பெரும்பாலான புத்தகங்கள் எல்லாமே நாவல்கள்தான். அதிலும் ஆங்கில நாவல்கள்தான் அதிகம். அதேபோன்று, கொடநாடு எஸ்டேட்டிலும் ஒரு பெரிய நூலகம் உள்ளது. ஆரம்ப காலத்தில் ஹிக்கின்பாதம்ஸ் போன்ற பெரிய புத்தகக் கடைகளுக்குச் சென்று தனக்கு வேண்டிய ஆங்கில நாவல்களை வாங்கிவந்திருக்கிறார் ஜெயலலிதா.
‘‘அழகாக இருக்கும் பெண்கள் புத்திசாலியாக இருக்கமாட்டார்கள்!''
ஒருமுறை ஊட்டியில் உள்ள ஹிக்கின்பாதம்ஸுக்கு, ஜெயலலிதாவே நேரில் சென்று புத்தகங்கள் வாங்கிய நினைவலைகளை அந்த நிறுவனத்தாரிடம் பேட்டியெடுத்து ஒரு பத்திரிகை வெளியிட்டது. அவருடைய காரில் உடைகள், பொருட்கள் போன்றவற்றோடு புத்தகங்களும் அதிகம் இருக்கும். ‘‘தன்னை மிகவும் கவர்ந்த எழுத்தாளர்களில் குஷ்வந்த் சிங்கும் ஒருவர்’’ என்று ஜெயலலிதா ஒருமுறை கூறியிருந்தார். 1992-ம் ஆண்டில் சட்டசபை நடவடிக்கைகளை விமர்சித்த ‘இல்லஸ்ட்ரேட்டேட் வீக்லி’ (illustrated weekly) இதழ் குறித்து பேரவையில் பேசிய ஜெயலலிதா, ‘‘ ‘இல்லஸ்ட்ரேட்டேட் வீக்லி’ இதழில் குஷ்வந்த் சிங் பணியாற்றிய வரை தரமானதாக இருந்தது. தற்போது தரம் குறைந்துள்ளதாக எண்ணுகிறேன்’’ என்று விமர்சனம் செய்தார். ஜெயலலிதா எம்.பி-யாக இருந்த காலத்தில் எழுத்தாளர் குஷ்வந்த் சிங்கும் ராஜ்யசபா எம்.பி-யாக இருந்தார். அவர், ‘‘அழகாக இருக்கும் பெண்கள் புத்திசாலியாக இருக்கமாட்டார்கள் என நினைத்தேன். ஆனால், உங்களைப் (ஜெயலலிதாவை) பார்த்தவுடன் அந்தக் கருத்தை மாற்றிக்கொண்டேன்’’ என்று சொன்னது குறிப்பிடத்தக்கது.
எழுத்துகள் உயிரானவை!
ஜெயலலிதா எழுத்தாளராகவும் கோலோச்சினார். ‘துக்ளக்’ இதழில், ஜெயலலிதா எழுதிய கட்டுரைகளுக்கு வாசகர்கள் மத்தியில் ஏகப்பட்ட வரவேற்பு. ஆரம்பத்தில் தமிழ்நாட்டு அரசியல் பற்றி கட்டுரையை எழுதத் தொடங்கி, பின்னர் இந்திய அரசியல், சர்வதேச விவகாரங்கள் என அனைத்து விஷயங்கள் குறித்தும் எழுத ஆரம்பித்தார். ‘இந்திய மருத்துவர்களின் அலட்சியம்’, ‘கர்ப்பிணிகளுக்கான இத்தாலிய சட்டம்’, ‘ஜோஸ்யத்தின் சாத்தியம்’ என அவர் ஆழமான கட்டுரைகள் எழுதினார். இது தவிர, ‘குமுதம்’ வார இதழிலும் எழுத ஆரம்பித்தார். ‘தாய்’ பத்திரிகையில், ‘எனக்குப் பிடித்தவை’ என்ற தலைப்பில் வாரம் ஒரு கட்டுரை, ஓராண்டு காலம் எழுதினார். தாய் இதழின் முக்கிய எழுத்தாளர்களில் ஒருவராக ஜெயலலிதா இருந்தார். ‘பொம்மை’ இதழில் ‘அழகுக்கலை’ பற்றி எழுதினார். 1980-ம் ஆண்டு ‘கல்கி’ இதழில், ‘உறவின் கைதிகள்’ என்ற தொடரை எழுதினார்.
posted from Bloggeroid
அரையாண்டு தேர்வு நாளை துவங்குமா?- மாணவர்கள் குழப்பம்
திடீர் விடுமுறை முடிந்து, பள்ளிகள் நாளை திறக்கப்படுவதால், அரையாண்டு தேர்வு திட்டமிட்டபடி நாளை நடக்குமா என, மாணவர்கள் குழப்பத்தில் உள்ளனர்.
மெட்ரிக், ஆங்கிலோ இந்தியன் மற்றும் தனியார் அரசு உதவிபெறும் பள்ளிகளில், சமச்சீர் கல்வி பாடத்திட்டம் பின்பற்றப் படுகிறது. பெரும்பாலான தனியார் பள்ளிகளில், ஒன்பதாம் வகுப்பு வரையிலான, இரண்டாம் பருவ தேர்வு, டிச., 5ல், துவங்கியது; டிச., 23 வரை நடக்கிறது.
'பிளஸ் 2வுக்கு, நேற்றும்; 10ம் வகுப்புக்கு, நாளையும் அரையாண்டு தேர்வு துவங்கும்' என, பள்ளிக்கல்வித் துறை அறிவித்திருந்தது. ஆனால், முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் திடீர் மறைவால், டிச., 6 முதல், இன்று வரை பள்ளிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டதால், நேற்று தேர்வு துவங்கவில்லை.
வெளியிடவில்லை
விடுமுறை முடிந்து, நாளை பள்ளிகள் திறக்கப்படுகின்றன. 'திட்டமிட்டபடி, 10ம் வகுப்பு தேர்வு நாளை துவங்குமா; நேற்று துவங்க இருந்த, பிளஸ் 2 அரையாண்டு தேர்வு எப்போது துவங்கும்' என தெரியாமல், மாணவர்கள் குழப்பத்தில் உள்ளனர். இதுகுறித்து, பள்ளிக்கல்வித்துறை புதிய அறிவிப்பை வெளியிடவில்லை.
திடீர் விடுமுறையால், ஏற்கனவே அறிவித்த தேதியில், தேர்வுகள் நடத்த முடியாத சூழல் ஏற்பட்டுள்ளது. வங்க கடலில், புயல் சின்னம் மிரட்டுவதும், தேர்வை திட்டமிட்டபடி நடத்த முடியுமா என்ற சந்தேகத்தை ஏற்படுத்தி உள்ளது.
புதிய அட்டவணை
விடுமுறைக்குப்பின், உடனடி தேர்வு மாணவர்களுக்கு சிக்கலாகும் என, ஆசிரியர்கள்
கூறுகின்றனர்.'எனவே, புதிய தேர்வு கால அட்டவணையை, பள்ளிக்கல்வித்துறை வெளியிட வேண்டும். டிச., 10 அல்லது 12ல், தேர்வை துவங்க வேண்டும்' என, பெற்றோர் கோரிக்கை விடுத்துள்ளனர்.
தனியார் பள்ளிகள் 'அலர்ட்'
தனியார் பள்ளிகளில், டிச., 5ல் தேர்வு துவங்கியது. 'விடுமுறை நாட்களில் நடக்கவிருந்த தேர்வுகள், புதிய தேதியில் நடத்தப்படும். மற்ற தேர்வுகள்
ஏற்கனவே அறிவித்த தேதியில் நடத்தப்படும்' என, அறிவித்துள்ளது.
இத்தகவல்கள் பெற்றோருக்கு, மொபைல் போனில், எஸ்.எம்.எஸ்., மற்றும் 'இ - மெயில்' வழியாக தெரிவிக்கப்பட்டுள்ளது. அதனால், மாணவர்கள் விடுமுறையை வீணாக்காமல், தேர்வுக்கு தயாராகி வருகின்றனர்.
தமிழகம் முழுவதும் அரிசி கார்டு குறைக்க திட்டம்
தமிழகத்தில் 2 கோடியே 3 லட்சத்து 64 ஆயிரம் ரேஷன் கார்டுகள் உள்ளன. இதில் பச்சை கார்டுகள் அரிசி கார்டாகவும், வெள்ளை கார்டு சீனி கார்டாகவும், வெள்ளை மற்றும் மஞ்சள் நிற கார்டுகள் எப்பொருளும் வேண்டாத ‘என்’ கார்டகாவும், காக்கி கலர் கார்டு போலீசாருக்கான ரேஷன் கார்டாக பிரிக்கப்பட்டுள்ளது. இதில் சுமார் 1.76 கோடி கார்டு அரிசி கார்டாக உள்ளது. இந்த கார்டுகளுக்கு மாதந்தோறும் இலவசமாக 20 கிலோ அரிசி (புழுங்கல் அரிசி 17 கிலோ, பச்சை அரிசி 3 கிலோ வீதம்) வழங்கப்படுகிறது.
மத்திய அரசு உணவு பாதுகாப்பு சட்டத்தை நிறைவேற்றியுள்ளது. இதனால் தமிழகத்தில் இலவச அரிசி வழங்கும் திட்டத்திற்கு பெரும் நெருக்கடி ஏற்பட்டது. இந்த சட்டத்தின் அடிப்படையில் மத்திய அரசு, மாநிலத்திற்கு வழங்கும் உணவு பொருளுக்கான மானியத்தை குறைத்தது. இதனால் மாநில அரசுகள் அதிக நெருக்கடியை சந்திக்க துவங்கின.
இந்த நெருக்கடியிலிருந்து தப்பிக்க அரிசி கார்டுகளின் எண்ணிக்கையை குறைக்க மாநில உணவுப்பொருள் வழங்கல் ஆணையர் அலுவலகம் உத்தரவிட்டது. தற்போது மாநிலத்தில் உள்ள அனைத்து ரேஷன் கடைகளின் விற்பனை ஆன்லைனில் இணைக்கப்பட்டது. இதற்காக விற்பனை முனையம் (பிஓஎஸ்) என்ற கம்ப்யூட்டர் கருவி ரேஷன் கடைகளுக்கு வழங்கப்பட்டுள்ளன. கடந்த ஜூலை மாதம் முதல் ஆன்லைனில் பில் போடப்படுகிறது. ரேஷன் கடைகளில் கார்டுதாரர்கள் தங்களுடைய ஆதார் எண், செல்போன் எண்ணை பதிவு செய்து வருகின்றனர். இதுவரை 70 சதவீதம் பேர் மட்டுமே ஆதார் எண் பதிவு செய்துள்ளனர். மீதி 30 சதவீதம் பேர் ஆதார் எண் பதிவு செய்யவில்லை. ஆதார் பதிவு செய்யாத ரேஷன் கார்டுகளை சென்னையில் உள்ள மாநில உணவுப்பொருள் வழங்கல் துறை ஆணையர் அலுவலகம் கடந்த மாதம் 25ம் தேதி தற்காலிகமாக முடக்கி வைத்துள்ளது.
ரேஷன் கடைகளில் உள்ள கம்ப்யூட்டரில் சரியாக கார்டுதாரர்களின் ஆதார் எண், செல்போன் எண் பதிவு செய்யப்பட்டுள்ளதா என அதிகாரிகள் கணக்கெடுப்பு நடத்தி வருகின்றனர். பின் வீடு வீடாக சென்று ஆய்வு செய்யப்பட உள்ளது. இதில் குடும்ப உறுப்பினர் எண்ணிக்கை, சொந்த வீடு உள்ளதா, ஒத்தி வீடா, கார் வசதி உள்ளதா, அரசு பணியில் உள்ளவரா, மாதம் சம்பளம் ரூ.1 லட்சத்திற்கு மேல் வாங்குபவரா என கணக்கு எடுக்கப்பட உள்ளது. தற்போது இவர்களுக்கு அரிசி கார்டு அதிகளவில் வழங்கப்பட்டுள்ளது. கணக்கெடுப்பின்படி இவற்றில் ஏதேனும் ஒரு வசதி இருந்தாலும் அரிசி கார்டு ரத்து செய்யப்பட உள்ளது. ரத்து செய்யப்படும் அரிசி கார்டுக்கு பதில் சீனி கார்டு வழங்கப்படும். இப்பணியை வரும் வாரத்தில் துவக்க உணவுப்பொருள் வழங்கல் ஆணையர் அலுவலகம் உத்தரவிட்டுள்ளது.
அரிசி கார்டு எண்ணிக்கையை குறைக்க மாநிலம் முழுவதும் வீடு வீடாக சென்று கணக்கெடுப்பு பணி நடக்க உள்ளது. இதில் விஏஓ, கிராம தலையாரி, அங்கன்வாடி பணியாளர்கள், பில் கலெக்டர்கள் ஈடுபட உள்ளனர். இப்பணிக்கான ஊதியம் தரப்படமாட்டாது என உணவுத்துறை ஆணையர் அலுவலகம் தெரிவித்தது. இதற்கு எதிர்ப்பு தெரிவித்து வருவாய்த்துறையினர் போராட்டம் நடத்த திட்டமிட்டனர். வருவாய்த்துறையினரின் போராட்ட அறிவிப்பு எதிரொலியாக ஒரு மாவட்டத்திற்கு ரூ.50 ஆயிரம் வீதம் வழங்கப்பட்டுள்ளது. இந்த நிதி போதாது. இந்த நிதியை எப்படி பிரித்து பணியாளர்களுக்கு கொடுத்து வேலை பார்க்க சொல்வது என மாவட்ட வழங்கல் துறை அதிகாரிகள் புலம்பி வருகின்றனர். கூடுதல் நிதி ஒதுக்க கோரியுள்ளனர்.
தமிழகத்தில் ஒவ்வொரு மாவட்டத்திலும் அரிசி கார்டு எண்ணிக்கை அதிகளவில் உள்ளது. இலவச அரிசி திட்டத்தால் அதிக செலவு ஆகிறது. இதனை குறைக்க வேண்டும். இதனால் அரிசி கார்டுகள் தற்போது உள்ள எண்ணிக்கையை விட 30 சதவீத கார்டுகளை குறைக்க திட்டமிடப்பட்டுள்ளது. இதனால் சொந்த வீடு, ஒத்திக்கு வீட்டில் குடியிருப்போருக்கும் அரிசி கார்டு இனிமேல் இல்லை. இந்த கணக்கீடு அடிப்படையில் பல சலுகையை இவர்கள் இழக்க நேரிடும் நிலை உருவாகியுள்ளது.
உங்கள் பாதுகாப்பை உறுதி செய்யும் ஆப்
உங்கள் பாதுகாப்பை உறுதி செய்யும் கூகுளின் புதிய ஆப்! #TrustedContacts
கடந்த ஆண்டு சென்னை வெள்ளத்தில் மக்கள் தத்தளித்த போது, ஃபேஸ்புக் நமக்கு பயன்பட்ட விதத்தை யாரும் மறந்திருக்க முடியாது. மக்களிடையே செய்திகள் பரிமாறிக்கொள்வதில் அது முக்கியப்பங்கு வகித்தது. அத்துடன் நண்பர்கள் மற்றும் உறவினர்களிடம், தாங்கள் பாதுகாப்பாக இருக்கிறோம் என்பதையும் உணர்த்த ஃபேஸ்புக்கின் 'Safety Check' வசதி உதவியது. இதைப் போலவே ஒருவர் ஆபத்தில் இருக்கும்போது, உதவிக்கு மற்றவர்களை தொடர்பு கொள்வதற்காக ஒரு புதிய ஆண்ட்ராய்டு ஆப்பை வெளியிட்டுள்ளது கூகுள். Trusted Contacts என்னும் இந்த ஆப் மூலம், நீங்கள் எங்கே இருக்கிறீர்கள் என்பதனை உங்கள் நண்பர்களோ, உறவினர்களோ எளிதில் அறிந்துகொள்ள முடியும்.
எப்படி செயல்படுகிறது இந்த ஆப்?
வழக்கம்போலவே இதனை கூகுள் ப்ளே ஸ்டோரில் இருந்து டவுன்லோடு செய்துகொள்ள வேண்டும். அடுத்து உங்கள் கூகுள் ஐ.டி மூலம் லாகின் செய்துவிட்டால் ஆப் பயன்படுத்த ரெடி. அடுத்ததாக நீங்கள் ஆபத்து நேரத்தில் அதுகுறித்து தகவல் தெரிவிக்க விரும்பும் நபர்களை இதில் இணைக்க வேண்டும்.
1. இதன்மூலம் உங்கள் பெற்றோர்கள், நண்பர்கள் மற்றும் உறவினர்கள் ஆகியோரால், நீங்கள் எந்த இடத்தில் இருக்கிறீர்கள் என்பதனை தெரிந்து கொள்ள முடியும். அதேபோல அவர்களும் நீங்கள் எங்கே இருக்கிறீர்கள் என்பதனை அறிய நினைத்தால், அந்த தகவல் உங்கள் மொபைலுக்கு வரும். நீங்கள் ஓகே சொன்னால், உங்கள் லொக்கேஷன் விவரம் அவர்களுக்கு செல்லும். அல்லது நீங்கள் 5 நிமிடங்களுக்குள் பதிலளிக்கா விட்டால், இந்த ஆப் தானாகவே உங்கள் இருப்பிடத்தை அவர்களுக்கு தெரிவித்துவிடும்.
2. அதேபோல நீங்கள் ஆபத்தில் இருப்பதாக உணரும்போதோ, அல்லது உதவி தேவைப்படும் போதோ நீங்கள் இருக்கும் இடத்தினை நெருங்கியவர்களுடன் பகிர்ந்துகொள்ள முடியும்.
3. உதாரணத்திற்கு இந்த ஆப்பை உங்கள் நண்பர் பயன்படுத்துகிறார் என வைத்துக் கொள்வோம். அவர் உங்களை இந்த எமெர்ஜென்சி கான்டாக்ட் லிஸ்டில் வைத்திருக்கிறார்.
தற்போது இரவு நீண்ட நேரமாகியும் அவர் வீடு திரும்பவில்லை. எனவே இந்த ஆப் மூலம் அவரை விசாரிக்க நினைக்கிறீர்கள். அப்போது இந்த ஆப் மூலம் அவரது இருப்பிட விவரங்களை கேட்க முடியும். இதைப் பார்த்த உங்கள் நண்பரும் உடனே தனது இருப்பிட விவரங்களை உங்களுடன் பகிர முடியும். ஒருவேளை நீங்கள் குறிப்பிட்ட நேரத்திற்குள் உங்கள் இருப்பிட விவரத்தை பகிரவில்லை எனில், தானாகவே அந்த தகவல் உங்கள் நண்பருக்கு சென்றுவிடும். அதேபோல உங்கள் போன் இணையவசதி இல்லாமல், ஆஃப்லைனில் இருந்தாலும் இது செயல்படும் எனக் குறிப்பிட்டுள்ளது கூகுள்.
நீங்கள் அவசர காலத்தில் தகவல் தெரிவிக்க விரும்பும் எமர்ஜென்சி கான்டாக்ட் லிஸ்ட், அவர்களுக்கு உங்களது இருப்பிடத்தை கூகுள் மேப்ஸ் மூலம் பகிர்ந்துகொள்வது, அவர்களும் உங்கள் இருப்பிடத்தை அறிந்துகொள்வது ஆகிய மூன்றும்தான் இதன் பணிகள் எனலாம்.
தற்போதைய நிலையில் இணையவழி செய்திப் பரிமாற்றங்கள் அதிகமாக இருந்தாலும் கூட, வாய்ஸ்-கால்கள்தான் நமக்கு வசதியாக இருக்கின்றன. ஒருவர் எங்கே இருக்கிறார் என்பதை அறிய, உடனே அவருக்கு போன் போட்டு கேட்பதுதான் நமக்கு எளிது. அதேபோல நம்முடைய இருப்பிட தகவல்களை நமக்கு நெருக்கமானவராகவே இருந்தாலும் ஒருவர் கேட்டவுடன் தருவோமோ என்பது நமது சுயவிருப்பத்தை பொறுத்தது. இவற்றை எல்லாம் சார்ந்துதான் இந்த ஆப்பின் தேவை இருக்கிறது.
ஆப் டவுன்லோடு செய்ய லிங்க்: https://play.google.com/store/apps/details?id=com.google.android.apps.emergencyassist&hl=en
posted from Bloggeroid
Tuesday, December 06, 2016
தமிழக முதல்வர்கள்
*💐தமிழக முதல்வர்கள் பட்டியல்* தெரிந்து கொள்வோமா.
👇👇👇👇👇👇👇
1)ஏ. சுப்பராயலு-
17.12.1920 - 11.07.1921.
2) பனகல் ராஜா
11.07.1921- 3.12.1926.
3) பி. சுப்பராயன்
04 .12.1926- 27.10.1930
4)பி. முனுசுவாமி நாயுடு
27.10.1930 -4.11.1932
5) ராமகிருஷ்ண ரங்காராவ்
5.11.1932 -04.04.1936
6)பி. டி. இராஜன்
4.4. 1936- 24.08. 1936
7) ராமகிருஷ்ண ரங்காராவ்
24.08.1936 -1.04.1937
8) கூர்மா வெங்கட ரெட்டி நாயுடு
1.04.1937 -14.07.1937
9) இராஜகோபாலாச்சாரி
14 .07.1937- 29.10.1939
10) த. பிரகாசம்
30.04.1946 - 23.03. 1947
11) ஓமந்தூர் ராமசாமி ரெட்டியார்
23.03.1947- 6.04. 1949
12) பூ.ச.குமாரசுவாமி ராஜா
6.4.1949
13)பூ.ச. குமாரசுவாமிராஜா
26.01. 1950 - 9.4. 1952
14) இராஜகோபாலாச்சாரி 10.4.1952 -13.4. 1954
15)கே. காமராஜ்
13.4.1954- 31.03. 1957
16) கே. காமராஜ்
13.04.1957 -1.03. 1962
17) கே. காமராஜ்
15.03.1962 -2.10. 1963
18)எம். பக்தவத்சலம்
2.10.1963- 6.03.1967
19) சி. என். அண்ணாத்துரை
6.03. 1967- . .08. 1968
20)சி. என். அண்ணாத்துரை
...08- 1968- 3.02.1969
21) இரா. நெடுஞ்செழியன் (தற்காலிக முதல்வர்)
3.02.1969 -10.02. 1969
22) மு. கருணாநிதி
10.02.1969- 4.01. 1971
23) மு. கருணாநிதி
15.03. 1971- 31.01. 1976
*குடியரசுத் தலைவராட்சி*
31.01.1976- 30.06.1977
24)எம். ஜி. இராமச்சந்திரன் 30.06.1977- 17.02. 1980
*குடியரசுத் தலைவர் ஆட்சி*
17.02.1980 -9.06.1980
25)எம். ஜி. இராமச்சந்திரன் 9.06.1980- 15.11. 1984
26)எம். ஜி. இராமச்சந்திரன் 10.02.1985 -24.12.1987
27) இரா. நெடுஞ்செழியன் (தற்காலிக முதல்வர்)
24.12.1987- 7.01. 1988
28)ஜானகி இராமச்சந்திரன்
7.01.1988- 30.01. 1988
*குடியரசுத் தலைவர்*
30.01. 1988- 27.01. 1989
29)மு. கருணாநிதி
27.01.1989 -30.01. 1991
*குடியரசுத் தலைவர்*
30.01.1991 -24.06.1991
30) ஜெ. ஜெயலலிதா
24.06.1991 -12.05.1996
31) மு. கருணாநிதி
13.05.1996- 13.05. 2001
32)ஜெ. ஜெயலலிதா
14.05.2001- 21.09. 2001
33.ஓ. பன்னீர்செல்வம்
21.09.2001 -01.03. 2002
34)ஜெ. ஜெயலலிதா
2.03.2002 -12.05.2006
35) மு. கருணாநிதி
13.05. 2006- 15.05. 2011
36)ஜெ. ஜெயலலிதா
16.05. 2011- 27.09. 2014
37) ஓ. பன்னீர்செல்வம்
28.09.2014 -23.05. 2015
38) ஜெ. ஜெயலலிதா
23.05. 2015 - 06.12. 2016
39) ஓ. பன்னீர்செல்வம்
6.12. 2016 -*
முதல்வர் ஜெயலலிதா மறைவு எதிரொலி : அரையாண்டு தேர்வுகள் ஒத்திவைப்பு
முதல்வர் ஜெயலலிதா மறைவால் அரசு மற்றும் தனியார் பள்ளி மாணவர்களுக்கு அரையாண்டு தேர்வுகள் ஒத்தி வைக்கப்பட்டுள்ளது. தமிழகத்தில் அரசு, அரசு நிதியுதவி மற்றும் தனியார் பள்ளிகளில் பத்தாம் வகுப்பு மற்றும் பிளஸ் 2 மாணவர்களுக்கு இன்றும், 6 மற்றும் 9ம் வகுப்பு மாணவர்களுக்கு வருகிற 9ம் தேதியும் அரையாண்டு தேர்வு தொடங்கும் என்று அரசு தேர்வுகள் இயக்ககம் ஏற்கனவே அறிவித்திருந்தது.
இந்நிலையில், முதல்வர் ஜெயலலிதா ேநற்று முன்தினம் இரவு உடல் நலக்குறைவால் காலமானார். இதைத்தொடர்ந்து அனைத்து பள்ளி மற்றும் கல்லூரிகளுக்கும் 3 நாட்களுக்கு விடுமுறை அளிக்கப்பட்டது. இதனால் 10ம் வகுப்பு மற்றும் பிளஸ் 2 மாணவர்களுக்கு இன்று நடக்க இருந்த அரையாண்டு தேர்வு வருகிற 9ம் தேதியும் 6 முதல் 9ம் வகுப்பு மாணவர்களுக்கு அரையாண்டு தேர்வு தேதி குறிப்பிடாமலும் ஒத்தி வைக்கப்பட்டுள்ளது. இதற்கான தேதி பின்னர் அறிவிக்கப்படும் என்று அதிகாரிகள் தெரிவித்தனர்.
உச்சநீதிமன்ற அடுத்த நீதிபதி
உச்சநீதிமன்றத்தின் அடுத்த தலைமை நீதிபதியாக, ஜே.எஸ்.கேஹர் இருப்பார் என அறிவிக்கப்பட்டுள்ளது. தற்போது தலைமை நீதிபதியாக இருக்கும் டி.எஸ்.தாக்கூரின் பதவி காலம் ஆடுத்த ஆண்டு ஜனவரி 3 ஆம் தேதியுடன் முடிவடைவதையொட்டி இந்த அறிவிப்பு வெளியாகி உள்ளது. 2015 டிசம்பர் மாதம் 3ம் தேதியிலிருந்து தாக்கூர் உச்சநீதிமன்றத்தின் தலைமை நீதிபதி பதவியை வகித்து வருகிறார்.
கேஹர், உச்சநீதிமன்றத்தில் 2011 செப்டம்பர் மாதத்தில் இருந்து நீதிபதியாக செயல்பட்டு வருகிறார்.
posted from Bloggeroid
Monday, December 05, 2016
தமிழகத்தில் 3 நாட்கள் பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை
தமிழக முதல்வர் ஜெயலலிதா மறைவையொட்டி செவ்வாய், புதன் , வியாழன் ஆகிய 3 நாட்கள் பள்ளி மற்றும் கல்லூரிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. உடல்நலக் குறைவு காரணமாக கடந்த 75 நாட்களாக அப்போலோ மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த முதல்வர் ஜெயலலிதாவின் உயிர் திங்கட்கிழமை இரவு 11.30 மணிக்கு பிரிந்தது.
முதல்வர் ஜெயலலிதாவின் உயிர் பிரிந்த தகவல், அப்போலோ மருத்துவமனை நிர்வாகம் நள்ளிரவில் அதிகாரபூர்வமாக வெளியிட்ட செய்திக் குறிப்பில் தெரிவிக்கப்பட்டது. இதையடுத்து, ஒட்டுமொத்தமே தமிழகமே சோகத்தில் ஆழ்ந்துள்ளது. முதல்வர் ஜெயலலிதா மறைவையொட்டி செவ்வாய், புதன், வியாழன் ஆகிய 3 நாட்களுக்கு தமிழகம் முழுவதும் பள்ளி மற்றும் கல்லூரிகளுக்கு அரசு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. மேலும், தமிழகத்தில் 7 நாட்களுக்கு அரசு முறை துக்கம் அனுசரிக்கப்படுகிறது.