Friday, November 25, 2016
Thursday, November 24, 2016
பிளஸ் 2, எஸ்.எஸ்.எல்.சி. தேர்வு எழுதும் மாணவர்கள் விவரம்: இணையதளத்தில் பதிய முடியாமல் தலைமை ஆசிரியர்கள் திணறல்
பிளஸ் 2, எஸ்.எஸ்.எல்.சி. தேர்வுகள் எழுத உள்ள மாணவர்களின் விவரங்களை இணையதளத்தில் பதிவு செய்ய முடியாமல் பள்ளி தலைமை ஆசிரியர்கள் திணறி வருகின்றனர். இதற்காக கல்வித்துறை கால அவகாசம் கொடுக்க வேண்டும் என கோரிக்கை வைத்துள்ளனர்.
2017 மார்ச், ஏப்ரலில் நடைபெறவுள்ள எஸ்.எஸ்.எல்.சி. மற்றும் பிளஸ் 2 பொதுத் தேர்வு எழுதும் பள்ளி மாணவர்களின் பெயர்ப் பட்டியலுக்கு தேவையான விவரங்கள் அனைத்தும் (நாமினல் ரோல்) சென்ற ஆண்டு போலவே உயர்நிலை, மேல்நிலைப் பள்ளி தலைமை ஆசிரியர்கள் கடந்த சில வாரங்களுக்கு முன்னதாகவே தயார் செய்து வைத்திருந்தனர். இந்நிலையில் எமிஸ் இணையதளத்தில் மாணவர்களின் பெயர், தந்தை பெயர், ஜாதி, பாலினம், குடும்ப அட்டை, ஆதார் அட்டை நெம்பர், வங்கிக் கணக்கு எண் உள்ளிட்ட 15 வகையான விவரங்களை பதிவு செய்ய வேண்டும் என கல்வித்துறை உத்தரவிட்டிருந்தது.
இதற்காக திருவள்ளூர் மாவட்டத்தின் அனைவருக்கும் கல்வி திட்ட இணை இயக்குநர் தலைமையில் கடந்த திங்கள்கிழமை ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது. இதில் பள்ளி தலைமை ஆசிரியர்கள், பள்ளி முதல்வர்கள் கலந்து கொண்டனர். இதில் 10 மற்றும் 12 ஆம் வகுப்பு பயின்று வரும் மாணவர்களின் பெயர் பட்டியல் விவரங்களை எமிஸ் இணையதளத்தில் பதிவுசெய்தல் தொடர்பான அறிவுரைகள் பள்ளி தலைமை ஆசிரியர்களுக்கு வழங்கி இப்பணிக்கு 23ஆம் தேதி (புதன்கிழமை) கடைசி நாள் என மாவட்ட கல்வித்துறை கூறியிருந்தது.
இதில் எமிஸ் இணையதள சேவை சர்வர் பழுதால் அனைத்து உயர்நிலை, மேல்நிலைப் பள்ளிகளில் இப்பணிகள் 40 சதவீதம் கூட முழுமையாக முடிக்க இயலவில்லை. இதனால் பள்ளித் தலைமை ஆசிரியர்கள் கூடுதல் அவகாசம் கொடுக்க வேண்டும் என கோரிக்கை வைத்துள்ளனர். இதுகுறித்து பள்ளி தலைமை ஆசிரியர் ஒருவர் கூறியதாவது: கல்வித்துறை உத்தரவின் பேரில் எஸ்.எஸ்.எல்.சி. மற்றும் பிளஸ் 2 மாணவர்களின் பெயர் பட்டியல் கடந்த சில வாரங்களுக்கு முன்னதாகவே தயார் செய்துவிட்டோம். இந்நிலையில் திங்கள்கிழமை புதிதாக எமிஸ் இணையதளத்தில் மாணவர்களின் விவரங்கள் அனைத்தும் மறுபடியும் பதிவு செய்ய வேண்டும் என்றால் அதற்கு கால அவகாசம் வேண்டும். ஏற்கெனவே ஒருசில பள்ளிகளில் இதுவரை கணினி ஆசிரியர் பணியிடங்கள் காலியாக உள்ள நிலையில் தலைமை ஆசிரியர்கள் நகரங்களில் இருக்கும் பிரவுசிங் சென்டர்களுக்கு சென்று மாணவர்கள் விவரங்கள் அனைத்தும் இணையதளத்தில் பதிவு செய்தும், பதிவிறக்கம் செய்கின்றனர்.
மேலும் குக்கிராமங்களில் இருக்கும் உயர்நிலை, மேல்நிலைப் பள்ளிகளில் இன்டர்நெட் வசதிகள் இல்லாமல் நகரங்களைத் தேடிச் சென்று இணையதளத்தில் பதிவு செய்து வருகின்றனர். தற்போது எல்லா பள்ளிகளிலும் எமிஸ் இணையதளத்தில் பதிவு செய்ய முயல்வதால் கடந்த 3 நாள்களாக சர்வர் டவுன் ஆனது. இதனால் மாணவர்கள் விவரங்களை எங்களால் பதிவு செய்ய முடியவில்லை. எனவே இதற்கு கால அவகாசம் கொடுக்க கல்வித்துறை உயர் அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றார் அவர். எனவே அனைத்துப் பள்ளிகளிலும் கணினி ஆசிரியர்கள் காலி பணியிடங்களை நிரப்ப வேண்டும். மேலும் அனைத்து பள்ளிகளிலும் இணையதள சேவைகளை அரசே இலவசமாக வழங்க வேண்டும். இவ்வாறு இருந்தால் மட்டுமே அரசின் நலத் திட்டங்களை இணைய தளத்தில் பதிவு செய்து குறித்த நேரத்தில் பணிகளை முடிக்க முடியும்.
அரசு ஊழியர் பாஸ்போர்ட் : மத்திய அரசு புது உத்தரவு
'அரசு ஊழியர்கள், புதிய பாஸ்போர்ட் பெறவோ, புதுப்பிக்கவோ விரும்பினால், அரசுக்கு முன்னதாக தெரிவிக்க வேண்டும்' என, தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது.
தமிழக அரசு ஊழியர்கள், புதிய பாஸ்போர்ட் பெறவோ, புதுப்பிக்கவோ, அரசிடம் இருந்து, தடையில்லா சான்றிதழ் மற்றும் அடையாள சான்றிதழ் பெற வேண்டும். அதற்காக, விண்ணப்பிக்கும் முறை உள்ளது. சமீபத்தில், மத்திய வெளியுறவுத் துறை அமைச்சகம், தமிழக அரசுக்கு கடிதம் எழுதியது. அதில், அரசு ஊழியர்கள், அரசிடம் இதற்கான அனுமதி பெறுவதற்கு முன், எதற்காக வெளிநாடு செல்கிறோம் என்பதற்கான முழு விபர கடிதம் வழங்க வேண்டும் என தெரிவித்துள்ளது.
மேலும், அரசிடம் அனுமதி கோரி விண்ணப்பிப்பதற்கான படிவ மாதிரியையும், மத்திய அரசு அளித்துள்ளது. எனவே, அரசு ஊழியர்கள், இதுபோன்ற விண்ணப்பத்துடன், தகவல் கடிதத்தையும் சேர்த்து வழங்க வேண்டும் என, தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது.
Wednesday, November 23, 2016
புதிய தொடக்க பள்ளிகள் : அரசு உத்தரவு
திண்டுக்கல் உட்பட ஐந்து மாவட்டங்களில், தலா ஒரு புதிய தொடக்கப்பள்ளிகள் துவங்க அரசு உத்தரவிட்டுள்ளது. திண்டுக்கல்லில் சின்ன மலையூர்; தர்மபுரியில் கடத்திக்குட்டை; ஈரோடில் ெகாமாரபாளையம்; திருவண்ணாமலையில் பூமாட்டு காலனி; விழுப்புரம் மாவட்டத்தில் கானிமேடு ஆகிய இடங்களில், தலா ஒன்று என ஐந்து தொடக்க பள்ளி துவங்க பள்ளிக்கல்வி செயலர் சபிதா உத்தரவிட்டுள்ளார்.
மீண்டும் போராட்டத்தில் ஆசிரியர் சங்கங்கள்
புதிய ஓய்வூதிய திட்டத்தை ரத்து செய்யக்கோரி, ஆசிரியர் சங்கத்தினர் போராட்டங்களை துவங்கியுள்ளதால், பள்ளி கல்வித்துறைக்கு, மீண்டும் நெருக்கடி ஏற்பட்டுள்ளது.
கோரிக்கை : புதிய பங்களிப்பு ஓய்வூதிய திட்டம் ரத்து, அகவிலைப்படி உயர்வு, ஆசிரியர்கள் பணியிடத்தை நிரப்புதல் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி, கடந்த ஆண்டு, ஆசிரியர்கள் நடத்திய தொடர் போராட்டம், தமிழக அரசுக்கும், பள்ளிக் கல்வித்துறைக்கும் கடும் நெருக்கடியை ஏற்படுத்தியது. சங்கங்களுடன் அரசு பேச்சு நடத்தி, பிரச்னையை தற்காலிகமாக முடிவுக்கு கொண்டு வந்தது. இந்நிலையில், ஆசிரியர் சங்கங்கள் மீண்டும் போராட்டத்தை துவங்கியுள்ளன.
தமிழ்நாடு முதுநிலை பட்டதாரி ஆசிரியர் கழகம், இரு வாரங்களுக்கு முன், போராட்டத்தை துவக்கியது. தமிழக ஆரம்ப பள்ளி ஆசிரியர் கூட்டணி, 20ம் தேதி, மாவட்ட தலை நகரங்களில், ஆர்ப்பாட்டம் நடத்தியது.
ஆலோசனை : தமிழ்நாடு உயர்நிலை மற்றும் மேல்நிலைப் பள்ளி பட்டதாரி ஆசிரியர் கழகம், வரும், 25ம் தேதியும், தமிழ்நாடு தொடக்கப்பள்ளி ஆசிரியர் மன்றம், வரும், 27ம் தேதியும், போராட்டங்களை அறிவித்துள்ளன. பிற ஆசிரியர் சங்கங்களும் போராட்டத்திற்கு தயாராகி வருகின்றன.
பள்ளிகளில், அரையாண்டு தேர்வு துவங்க உள்ளது. இறுதி மற்றும் பொதுத்தேர்வுக்கு மாணவர்கள் தயாராகும் நிலையில், ஆசிரியர் சங்கங்கள் மீண்டும், போராட்டத்தில் குதித்துள்ளது, கல்வி அதிகாரிகளை கவலையில் ஆழ்த்தியுள்ளது. இதற்கு, எப்படி தீர்வு காண்பது என, அவர்கள் ஆலோசித்து வருகின்றனர்.
முதுநிலை ஆசிரியர் நியமனம்: ஒரு வாரத்தில் அறிவிப்பு
தமிழ்நாடு ஆசிரியர் கல்வி வாரியமான, டி.ஆர்.பி., மூலம், 1,500 முதுநிலை பட்டதாரி ஆசிரியர்கள் நியமிக்கப்பட உள்ளனர். இதற்கான அறிவிப்பு, ஒரு வாரத்தில் வெளியாக உள்ளது. தமிழகத்தில், அரசு மேல்நிலை பள்ளி மாணவர்களுக்கு, பாடம் எடுக்கும், முதுநிலை பட்டதாரி ஆசிரியர்களில், 1,500 இடங்கள் காலியாக உள்ளன.
'விரைவில் நேரடி நியமனம் நடக்கும்' என, மார்ச்சில், டி.ஆர்.பி., அறிவித்தது. ஆனால், இதுவரை நியமன பணிகள் துவங்கவில்லை. இதுகுறித்து, பள்ளிக்கல்வி உயர் அதிகாரிகளிடமிருந்து, டி.ஆர்.பி.,க்கு கடிதம் அனுப்பப்பட்டுள்ளது. இதனால், முதுநிலை ஆசிரியர் நேரடி நியமனத்திற்கான அறிவிப்பை, டி.ஆர்.பி., ஒரு வாரத்தில் வெளியிடும் என, கல்வித்துறை வட்டாரங்கள் தெரிவித்தன
சிறப்பாக செயல்படாத மத்திய அரசு ஊழியர்களுக்கு ஊதிய உயர்வு கிடையாது
சிறப்பாக செயல்படாத மத்திய அரசு ஊழியர்களுக்கு ஊதிய உயர்வு கிடையாது என்று மத்திய இணை மந்திரி ஜிதேந்திர சிங் கூறியுள்ளார்.
இது குறித்து பாராளுமன்றத்தில் ஜிதேந்திர சிங் கூறியதாவது:
சிறப்பான செயல்பாடுக்கான வரையறையை எட்டிப்பிடிக்காத மத்திய அரசு ஊழியர்களுக்கு வருடாந்திர ஊதிய உயர்வு கிடையாது. 7–வது சம்பள கமிஷன் சிபாரிசு செய்திருந்தது. அந்த சிபாரிசை மத்திய அரசு ஏற்றுக்கொண்டுள்ளது.
இவ்வாறு அவர் கூறினார்.
Tuesday, November 22, 2016
வங்கியில் பணம் எடுக்கும் வரம்பு: இன்று கடைசி
வங்கிகளில் அதிகபட்சம் ரூ.24,000 பணம் எடுப்பதற்கான இந்த வார வரம்பு கெடு புதன்கிழமை (நவ.23) நிறைவடைகிறது. பழைய ரூ.500, ரூ.1,000 நோட்டுகள் செல்லாது என அறிவிக்கப்பட்டது முதல் வங்கி, ஏடிஎம் பண பரிவர்த்தனையில் பல்வேறு அறிவிப்புகளை மத்திய அரசு செய்து வருகிறது.
அதன்படி வங்கி சேமிப்புக் கணக்கில் வாரத்துக்கு அதிகபட்சம் ரூ.24,000, ஏடிஎம் மையங்களில் நாள் ஒன்றுக்கு அதிகபட்சம் ரூ.4,500 என நிர்ணயிக்கப்பட்டிருந்தது. தொடர்ந்து இந்த வரம்பு ரூ.2,000 என குறைக்கப்பட்டது. இந்நிலையில், வங்கி சேமிப்புக் கணக்கில் ஒருவர் கடந்த வியாழக்கிழமை தொடங்கி ஒரு வாரத்தில் இதுவரை ரூ.20,000 வரை எடுத்திருந்தால், புதன்கிழமையன்று (நவ.23) மீதித் தொகை ரூ.4,000 மட்டுமே எடுக்க முடியும் என்று அதிகாரிகள் தெரிவித்தனர்.
ஒருவரது வங்கி சேமிப்புக் கணக்கைப் பொருத்தவரை, அவர் ஏடிஎம் மையத்தில் எடுக்கும் பணத்தையும் கணக்கில் கொண்டே மீதித் தொகை மட்டுமே காசோலைக்கு அளிக்கப்படும் என்று அதிகாரிகள் தெரிவித்தனர். வங்கிகளில் தொடரும் பண பற்றாக்குறை: வங்கிகளுக்கு போதிய பணத்தை ரிசர்வ் வங்கி தராமல் இருப்பதால், நிர்ணயிக்கப்பட்டுள்ள அதிகபட்ச தொகையை (ரூ.24,000) அளிக்க முடியாமல் வங்கிகள் திணறி வருகின்றன. இந்த வாரம் தொடங்கிய திங்கள்கிழமையன்று (நவ.21) ஒரு வாடிக்கையாளருக்கு அதிகபட்சம் ரூ.5,000-மும் செவ்வாய்க்கிழமையன்று (நவ.22) அதிகபட்சம் ரூ.10,000 மட்டுமே வங்கிகள் அளித்தது குறிப்பிடத்தக்கது
பள்ளிகள் விளையாட்டு போட்டிக்கு ரூ.10 கோடி
பள்ளிகளுக்கு இடையிலான விளையாட்டு போட்டிகள் நடத்துவதற்கு ரூ.10 கோடியை பள்ளிக்கல்வித்துறை ஒதுக்கியுள்ளது. மாநிலத்திலுள்ள 67 கல்வி மாவட்டங்களில் அனைத்து பள்ளிகளிலும் ஆண்டுதோறும் குறுவட்ட விளையாட்டுப் போட்டிகள் நடத்தப்படுகின்றன.
பின் கல்வி மாவட்ட அளவிலும், மண்டல அளவிலும் விளையாட்டு போட்டிகள் நடக்கும். அதில் பங்கேற்று வெற்றி பெரும் மாணவ - மாணவிகள் மாநில அளவில் நடக்கும் போட்டிகளில் பங்கேற்கின்றனர். நிதிஒதுக்கீடு: குறுவட்ட அளவிலான விளையாட்டு போட்டிகளுக்கு ரூ.2 கோடியே 64 லட்சத்து 9 ஆயிரத்து 300ம், கல்வி மாவட்ட அளவிலான விளையாட்டு போட்டிகளுக்கு ரூ.79 லட்சத்து 83 ஆயிரத்து 50 ஒதுக்கப்பட்டுள்ளது. மண்டல அளவிலான போட்டிகளை நடத்துவதற்கு ரூ.2 கோடியே 58 லட்சத்து 12 ஆயிரத்து 600 ஒதுக்கப்பட்டுள்ளது.
அதேபோல் மாவட்ட குடியரசுதின, பாரதியார் தின குழு விளையாட்டுப் போட்டிகள் நடத்த ரூ.2 கோடி 16 லட்சத்து 4 ஆயிரத்து 300 ஒதுக்கப்பட்டுள்ளது. இந்திய பள்ளிகளுக்கான விளையாட்டு குழுமம் நடத்தும் போட்டிகளில் பங்கேற்கும் செலவினங்களுக்காக ரூ.ஒரு கோடியே 96 லட்சத்து 30 ஆயிரத்து 690 என மொத்தம் ரூ.10 கோடி ஒதுக்கப்பட்டுள்ளது.
Monday, November 21, 2016
POS எனும் கார்டு தேய்க்கும் கருவிகள் பெறுவது எப்படி?
கார்டு தேய்க்கும் கருவிகளைப் (POS கருவிகள்) பெறுவது எப்படி
//இந்தியாவில் நகரங்கள், நகர்ப்புற பகுதிகளைவிட கிராமங்களின் எண்ணிக்கை பல மடங்கு அதிகம். இருந்தாலும் கூட, கடந்த 5 ஆண்டுகளில் வங்கிகளின் பற்று அட்டை ("டெபிட் கார்டு'), கடன் அட்டை ("கிரெடிட் கார்டு') தேய்க்கும் சிறிய கருவிகள் (பி.ஓ.எஸ். எனப்படும் "பாயின்ட் ஆஃப் சேல்' கருவிகள்) மூலம் பணப் பரிவர்த்தனை 300 மடங்கு அதிகரித்துள்ளது.
நாடு முழுவதும் 2012-இல் 7.41 லட்சமாக இருந்த பற்று அல்லது கடன் அட்டை தேய்க்கும் கருவிகளின் எண்ணிக்கை, 2016-இல் 12 லட்சமாக அதிகரித்துள்ளது.
இந்த "பாயின்ட் ஆஃப் சேல்' கருவிகளைப் பெற்றுத் தங்களது கடைகளிலும், நிறுவனங்களிலும் நிறுவுவதற்கான நடவடிக்கைகளில் வர்த்தகர்கள் முழு வீச்சில் ஈடுபட்டுள்ளனர். இது தொடர்பான விசாரணைகள் வங்கிகளில் இப்போது அதிகரித்துள்ளன என்று அதிகாரிகள் தெரிவிக்கின்றனர்.
நாட்டின் மிகப் பெரிய அரசு வங்கியான பாரத ஸ்டேட் வங்கி, தனியார் துறையில் நாட்டின் மிகப் பெரிய வங்கியான ஐ.சி.ஐ.சி.ஐ. வங்கி, மற்றும் இந்தியன் வங்கி, எச்.டி.எஃப்.சி. வங்கி உள்ளிட்டவை இத்தகைய "பிஓஎஸ்' கருவி வசதியை அளித்து வருகின்றன.
இந்தக் கருவி வசதியைப் பெற குறிப்பிட்ட வங்கியில் நடப்புக் கணக்கைத் தொடங்க வேண்டும். அந்த வங்கிக் கணக்கில் மூன்று மாத சராசரியாக ரூ.5,000 டெபாசிட் தொகையைப் பராமரிக்க வேண்டும். அந்த நிறுவனம் "பாயின்ட் ஆஃப் சேல்' கருவி வேண்டும் என்று விண்ணப்பித்த ஒரு வாரத்துக்குள் கடையிலோ அல்லது நிறுவனத்திலோ தரைவழி தொலைபேசி இணைப்புடன் "பி.ஓ.எஸ்.' கருவியை வங்கி நிர்வாகமே இலவசமாக அமைத்துக் கொடுக்கும்.
ஒரு பொருளை வாங்கும் நுகர்வோர், ரொக்கத்துக்கு பதிலாக, அவரது பற்று அட்டையைப் பயன்படுத்தும் வசதியை இந்த "பி.ஓ.எஸ்.' கருவி அளிக்கிறது. இதன் மூலம் நுகர்வோர் - வணிகர் என இருவருக்கும் ஒரே நேரத்தில் பலன் கிடைக்கிறது. மேலும் பற்று அட்டை மூலம் நுகர்வோர் அளித்த தொகை வணிகரின் வங்கிக் கணக்கில் உடனடியாக சேர்க்கப்படுகிறது.
அது மட்டுமல்லாமல், தொகை வந்து சேர்ந்ததற்கு அந்த வங்கியிலிருந்து வணிகரின் செல்லிடப்பேசிக்கு குறுந்தகவலும் அனுப்பப்படுகிறது. மின்னணு முறையில் வணிகத்துக்கான பணப் பரிவர்த்தனைக்கு ஆதாரம் கிடைத்துவிடுகிறது. மாதந்தோறும் வங்கியிலிருந்து வரவு அறிக்கையும் அளிக்கப்படும். மேலும், அன்றாட விற்பனைத் தொகையை கடையில் அல்லது நிறுவனத்தில் ரொக்கமாக வைப்பதால் ஏற்படும் திருட்டு - கொள்ளை தடுக்கப்படுகிறது.//
நன்றி - தினமணி 21.11.2016
நெருங்கி வரும் மாத சம்பளம்: ஏ.டி.எம். மிஷின் சீரமைப்பு பணி தீவிரம்!
500, 1000 ரூபாய் நோட்டுகள் செல்லாது என மத்திய அரசு அறிவித்ததை அடுத்து மக்கள் பலரும் அவதிப்பட்டு வருகின்றனர். இந்நிலையில் மாதச் சம்பளம் பெறுவதிலும் குழப்பம் நிலவி வருகிறது. பெரும்பாலான தனியார் மற்றும் அரசு அலுவலகங்களில் நவம்பர் மாத ஊதியம் டிசம்பர் முதல்வாரத்தில் வழங்கப்படும் என்கிற நிலை ஏற்பட்டுள்ளது.
அதற்கு முன்பாக, அனைத்து ஏ.டி.எம்.களையும் மறு கட்டமைப்பு செய்யும் பணியை மேற்கொள்ள நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருவதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. இதற்கு காரணம் 2,000 ரூபாய் நோட்டின் அளவு சிறியதாக இருப்பதுதான். இதனால் ஏடிஎம் மிஷினுக்குள் வைப்பதில் சிரமம் ஏற்பட்டுள்ளது. தற்போது நாளொன்றுக்கு 10,000 க்கு மேற்பட்ட ஏ.டி.எம்.கள் வீதம் மறுகட்டமைப்பு செய்யப்பட்டு வருகிறது.
இருப்பினும் நவம்பர் மாத ஊதியத்தை பெறுவதில் மக்களுக்கு சிக்கல் ஏற்படக்கூடாது என்பதால் இந்த பணி மேலும் தீவிரப்படுத்தப்பட்டுள்ளன. நாட்டில் உள்ள 2 லட்சத்து 2000 ஏ.டி.எம்.களை, அடுத்த 10 அல்லது 12 நாட்களுக்குள் புதிய 500 மற்றும் 2000 ரூபாய் நோட்டுகளை வழங்கும் வகையில் மாற்றி அமைக்க மத்திய அரசு முடிவு செய்துள்ளதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.