இலவச SMS களை உடனுக்குடன் பெற ON tnptfmani என்று type செய்து 9870807070 என்ற எண்ணிற்கு அனுப்பி இலவச குறுந்தகவல்களை(SMS) பெறுங்கள். DND (Do NOT Disturb) சர்வீஸ்ல் உள்ள எண்கள் அதனை(DND) நீக்கிய பிறகே இச்சேவையை பெறமுடியும். plz call 1909

Sunday, August 28, 2016

கட்டாய இடம் மாற்றத்தால் பயனில்லை:மாணவர்களுக்கு மீண்டும் திண்டாட்டம்


அரசு பள்ளிகளில், கூடுதலாக உள்ள பட்டதாரி ஆசிரியர்களுக்கான கட்டாய இடம் மாற்றம் இன்று முடிகிறது. கூடுதல் ஆசிரியர்கள், வெளி மாவட்டங்களுக்கு மாற்றப்படாததால், பல பள்ளிகளில் ஆசிரியர் பற்றாக்குறை நீடிக்கிறது.அரசு பள்ளிகளில், 6ம் வகுப்பு முதல், 10ம் வகுப்பு வரையிலான உயர்நிலைப் பள்ளிகளில், மாணவர்களின் விகிதத்தை விட, 2,500 பட்டதாரி ஆசிரியர்களின் அதிகம் இருப்பது தெரிய வந்தது.

இவர்களை, பற்றாக்குறை உள்ள இடங்களுக்கு, கட்டாய இடம் மாற்றம் செய்யும் பணி நிரவல் கலந்தாய்வு, நேற்று முன்தினம் துவங்கியது. ஆசிரியர்கள் எதிர்ப்பை சமாளிக்க, மாவட்டத்திற்குள் இடம் மாற்றம் செய்ய உத்தரவிடப்பட்டது. திருநெல்வேலி, கன்னியாகுமரி, துாத்துக்குடி, சிவகங்கை, ராமநாதபுரம், விருதுநகர் போன்ற மாவட்டங்களில், அதிக எண்ணிக்கையில் ஆசிரியர்கள் உள்ளனர். பற்றாக்குறை உள்ள பள்ளிகள் குறைவாகவே இருந்தன. எனவே, சொற்பமான ஆசிரியர்களே இடம் மாற்றம் செய்யப்பட்டனர். மற்றவர்கள் மீண்டும் அதே பள்ளிகளில், கூடுதல் ஆசிரியர்களாகவே நீடிக்க அனுமதிக்கப்பட்டு உள்ளது.

ஆனால், வட மாவட்டங்களான கிருஷ்ணகிரி, தர்மபுரி, சேலம், விழுப்புரம், திருவண்ணாமலை, வேலுார் போன்ற மாவட்டங்களில், அதிக எண்ணிக்கையில் ஆசிரியர்கள் தேவை உள்ளது. இந்த மாவட்டங்களுக்கு வர, பிற மாவட்ட ஆசிரியர்கள் தயாராக இல்லாததால், தென் மாவட்டங்களில் கூடுதலாக உள்ள ஆசிரியர்கள், வட மாவட்டங்களுக்கு மாற்றப்படவில்லை. இதுபோன்ற குழப்பங்களால், சில மாவட்டங்களில், மாணவர்கள் எண்ணிக்கையை விட கூடுதலான ஆசிரியர்கள் பணியில் இருக்கும் நிலை தொடர்கிறது. மறுபுறத்தில், பல மாவட்டங்களில் போதிய ஆசிரியர்கள் இன்றி, வகுப்புகள் நடக்காமல் மாணவர்கள் பாதிக்கப்படும் நிலை தொடர்கிறது

பள்ளி, கல்லூரிகளுக்கு 'டெங்கு' எச்சரிக்கை

பள்ளி, கல்லுாரி மற்றும் பல்கலைகளில், டெங்கு நோய் தடுப்பு நடவடிக்கை மேற்கொள்ள உத்தரவிடப்பட்டுள்ளது.தமிழகத்தில் தென் மேற்கு பருவமழை இறுதி கட்டத்தை எட்டியுள்ளது; வடக்கு, கிழக்கு மாவட்டங்களில், பரவலாக மழை பெய்து வருகிறது.

மழை பெய்து, தண்ணீர் ஆங்காங்கே தேங்குவதால், டெங்கு காய்ச்சலும் பரவ துவங்கியுள்ளது. திருவள்ளூர் மாவட்டத்தில், அடுத்தடுத்த நடந்த இறப்புகள் மாணவ, மாணவியரை அச்சமடைய வைத்துள்ளது. சென்னையில், நிலவேம்பு குடிநீர் வழங்க, சென்னை மாநகராட்சி உத்தரவிட்டுள்ளது.

அத்துடன், அனைத்து பள்ளி, கல்லுாரி மற்றும் பல்கலைகளில், டெங்கு காய்ச்சல் தடுப்பு நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும் என்றும், உத்தரவிடப்பட்டுள்ளது. இதுகுறித்து, பள்ளி, கல்லுாரிகளுக்கு சுகாதாரத்துறை செயலர் டாக்டர் ராதாகிருஷ்ணன் அனுப்பியுள்ள சுற்றறிக்கை: பள்ளி, கல்லுாரி, பல்கலைகளின் வளாகங்களை தினமும் சுத்தம் செய்து, குப்பைகள் இல்லாமலும், தேவையற்ற பொருட்கள் குவியாமல் பார்த்து கொள்ள வேண்டும் டெங்கு காய்ச்சல் ஏற்படுத்தும், 'ஏடிஸ்' கொசுக்கள் நன்னீரில் உற்பத்தியாகும் என்பது குறித்து, மாணவ, மாணவியருக்கு விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும்.

மாணவ, மாணவியரும் அருகில் உள்ள பகுதிகளில், விழிப்புணர்வு பிரசாரம் செய்ய வேண்டும் விடுதிகள், சத்துணவு கூடங்கள் மற்றும் உணவு அறைகளில், நீர் தேங்காமல் சுத்தமாக பார்த்துக்கொள்ள வேண்டும். மேல்நிலை, கீழ்நிலை குடிநீர் தேக்க தொட்டிகளை சுத்தமாக வைத்திருக்க வேண்டும் அருகில் உள்ள மருத்துவமனைகள், சுகாதார மையங்களின் விபரங்கள் அறிந்து, மாணவர்களுக்கு காய்ச்சல் போன்ற உடல்நலக்குறைவு ஏற்பட்டால், உடனே, ரத்த மாதிரி எடுத்து சோதனை செய்ய வேண்டும் கல்வி நிறுவனங்களில், நிலவேம்பு, மலை வேம்பு மற்றும் பப்பாளி இலை கசாயம் தயாராக வைத்திருக்க வேண்டும் குளோரின் கலக்கப்பட்ட குடிநீரையும், காய்ச்சி வடிகட்டிய குடிநீரையுமே மாணவர்களுக்கு வழங்க வேண்டும்.

Friday, August 26, 2016

'வாட்ஸ் ஆப்' முடிவு - 'நெட்டிசன்'கள் கவலை


அலைபேசி செயலியான, 'வாட்ஸ் ஆப்' தன் வாடிக்கையாளர்களின் மொபைல் போன் எண்களை, 'பேஸ்புக்' வலைதள நிறுவனத்துடன் பகிர முடிவெடுத்து உள்ளது. இதனால், 'வாட்ஸ் ஆப்' உபயோகிப்பாளர்கள் கவலையடைந்து உள்ளனர். 'அலைபேசி இன்டர்நெட்' மூலமான தகவல் பரிமாற்றத்திற்கு, உலகெங்கிலும் பல்வேறு நிறுவனங்கள் செயல்பட்டு வருகின்றன.

எனினும், 'வாட்ஸ் ஆப்' அலைபேசி செயலியை, 100 கோடிக்கும் அதிகமானோர் பயன்படுத்தி வருகின்றனர். இலவசமாக செய்தி, புகைப்படம், வீடியோ அனுப்புவதுடன், தொலை பேசியாகவும் பயன்படுவதால், நாளுக்கு நாள் அதன் வாடிக்கையாளர்கள் பெருகி வருகின்றனர். அதன் பிரபலத்தை பார்த்து, 'பேஸ்புக்' நிறுவனம், இரு ஆண்டுகளுக்கு முன் அதை வாங்கியது. முன்னதாக, வாட்ஸ் ஆப் நிறுவனம், 'விளம்பரங்களை வெளியிட்டு, தொல்லை தர மாட்டோம்' என, வாக்குறுதி அளித்திருந்தது;

பேஸ்புக் வாங்கிய பின்னும், அதே நிலை நீடித்து வந்தது. இந்நிலையில், புதிய விதிமுறைகளை வாட்ஸ் ஆப் வெளியிட்டு உள்ளது. அதன்படி, வாடிக்கையாளர் அலைபேசி எண்கள், பேஸ்புக்கிற்கு பகிரப்படும். பின், தனியார் நிறுவனங்கள், அந்நபர்களின் பேஸ்புக் பக்கத்திற்கு, தனிப்பட்ட முறையில் விளம்பரங்களை அனுப்பும் என, தெரிகிறது. வாடிக்கையாளர்களுக்கு, இது தொடர்பான விதிமுறைகளை, வாட்ஸ் ஆப் அனுப்ப துவங்கியுள்ளது. அதை ஏற்காவிட்டால், வாட்ஸ் ஆப்பை தொடர்ந்து பயன்படுத்த முடியாது என, தெரிகிறது. அதை ஏற்காதவர்கள், 30 நாட்களுக்குள் இறுதி முடிவை எடுக்க, வாட்ஸ் ஆப் அவகாசம் தந்துள்ளது.

சமீபத்தில் தான், வாட்ஸ் ஆப், தங்கள் வாடிக்கையாளர்கள், அவர்களுக்குள் அனுப்பும் தகவலை, வேறு யாரும் பார்க்காத வகையில் நடவடிக்கை எடுத்தது. அந்த மகிழ்ச்சி நீடிக்காத வகையில், தனிநபர் உரிமையில், வேறு விதமாக தலையிட துவங்கி உள்ளது. அதனால், 'வைபர், வீசாட், ஐமோ' போன்ற போட்டி நிறுவனங்களுக்கு, வாடிக்கையாளர்கள் தாவும் நிலை ஏற்பட்டு உள்ளது.

பட்டதாரி ஆசிரியர் கவுன்சலிங்: இன்று தொடங்குகிறது


அரசு உயர்நிலை மற்றும் நடுநிலைப் பள்ளிகளில் பணியாற்றும் பட்டதாரி ஆசிரியர்களுக்கான பணியிட மாறுதல் கவுன்சலிங் இன்று தொடங்குகிறது. பள்ளிகளில் அ திகமாக உள்ள ஆசிரியர்கள் வேறு மாவட்டங்களுக்கு மாற்ற பள்ளிக் கல்வித்துறை முடிவு செய்துள்ளது.

பள்ளிக் கல்வித்துறை மற்றும் தொடக்க கல்விித்துறையின் கீழ் பணியாற்றும் ஆசிரியர்களுக்கு பணியிட மாறுதல் கவுன்சலிங் பகுதிப் பகுதியாக நடக்கிறது. தற்போது பள்ளிக் கல்வித்துறை மற்றும் தொடக்கக் கல்வித்துறையின் கீழ் செயல்படும் நடுநிலைப் பள்ளிகளில் பணியாற்றும் பட்டதாரி ஆசிரியர்களுக்கான கவுன்சலிங் இன்று தொடங்குகிறது.இதையடுத்து, ஒவ்வொரு பள்ளியிலும் மாணவர் எண்ணிக்கை–்க்கு ஏற்ப இருக்க வேண்டிய ஆசிரியர்கள் எத்தனை பேர், கூடுதலாக உள்ள ஆசிரியர்கள் எத்தனை பேர் என்ற பட்டியலை அனுப்ப வேண்டும் என்று அனைத்து மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர்களுக்கும் பள்ளிக் கல்வி இயக்குநர் உத்தரவிட்டு இருந்தார்.

இதன்படி அனைத்து மாவட்டத்தில் இருந்தும் கூடுதல் ஆசிரியர்கள் பட்டியல்களை ஒவ்வொரு தலைமை ஆசிரியர்களும் தயாரித்து அனுப்பியுள்ளனர். இந்த பட்டியலில் சீனியாரிட்டிபடி ஆசிரியர்களுக்கு பணியிட மாறுதல் முதலில் வழங்கப்பட உள்ளது.

10 ஆண்டுகளாக ஒரே பள்ளியில் பணியாற்றி வரும் ஆசிரியர்கள் அதிரடியாக வேறு மாவட்டங்களுக்கு அனுப்ப பள்ளிக் கல்வித்துறை முடிவு செய்துள்ளது. அதனால் வேறு மாவட்டம் என்பதற்கு பதிலாக, மாவட்டத்துக்குள் மாவட்டம் பணியிட மாறுதல் வழங்க வேண்டும் என்று ஆசிரியர்கள் கேட்கின்றனர். ஆனால், மலைப் பிரதேசங்களுக்கு பெரும்பாலான ஆசிரியர்களை அனுப்ப பள்ளிக் கல்வித்துறை முடிவு செய்துள்ளது.

RBSK

ஆரம்ப மற்றும் நடுநிலைப்பள்ளி ஆசிரியர்கள் தமிழ்,ஆங்கிலம்,கணக்கு, அறிவியல்,மற்றும் சமுகவியல் பாடங்களில் உயர்கல்வி தகுதி பெற்றால் மட்டுமே ,ஊக்க ஊதியம் மற்றும் பதவி உயர்வு வழங்கப்படும்.

பொது மாறுதல் மூலம் மாறுதல் மற்றும் பதவி உயர்வு பெற்ற ஆசிரியர்களுக்கு முன் ஊதியச்சான்று வழங்குதல் சார்ந்து தொடக்கக் கல்வி இயக்குநரின் செயல்முறைகள்

Thursday, August 25, 2016

புத்தகம் எடுத்து வராததை கண்டித்த ஆசிரியைக்கு மாணவன் ‘பளார்’ : திருப்பூரில் ஆசிரியர்கள் அதிர்ச்சி


புத்தகம் எடுத்து வராததை கண்டித்த ஆசிரியைக்கு மாணவன் ‘பளார்’ விட்ட சம்பவம் ஆசிரியர்கள் மத்தியில் கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. திருப்பூரில், பள்ளி மாணவர்கள் 2 கோஷ்டிகளாக பிரிந்து ஒருவரை ஒருவர் தாக்கிக் கொள்வதும், ரோடுகளில் விரட்டி விரட்டி அடித்துக் கொள்வதும் அடிக்கடி நடந்து வருகிறது. இதில் சில மாணவர்கள் பலத்த காயமடைந்த சம்பவங்களும் நடந்துள்ளன.

இதுபோன்ற சம்பவங்களில் பெரும்பாலும் அரசு மற்றும் மாநகராட்சிப் பள்ளி மாணவர்களே ஈடுபட்டு வருகின்றனர். இதற்கு, கல்வித்துறை அதிகாரிகள் உரிய நடவடிக்கை எடுக்காமல் இருந்து வருகின்றனர். கடந்த 23ம் தேதி, திருப்பூரில் உள்ள ஒரு அரசு பள்ளியில் பிளஸ்-2 மாணவர்களுக்கு, ஆசிரியை ஒருவர் பாடம் நடத்திக் கொண்டிருந்துள்ளார். அப்போது, மாணவன் ஒருவன் புத்தகம் எடுத்து வரவில்லை. இதை அறிந்த ஆசிரியை அந்த மாணவனை கண்டித்ததோடு, அவன் கன்னத்தில் அறைந்ததாக கூறப்படுகிறது. இதனால், ஆத்திரமடைந்த அந்த மாணவன், ஆசிரியையின் கன்னத்தில் திருப்பி ‘பளார்’, ‘பளார்’ என அறைந்துள்ளான்.

இதில் ஆசிரியைக்கு லேசான காயம் ஏற்பட்டுள்ளது. இதுகுறித்து தலைமை ஆசிரியர் கல்வித்துறை அதிகாரிகளுக்கு தகவல் தெரிவித்துள்ளார். இதையடுத்து அந்த மாணவனுக்கு மாற்றுச்சான்றிதழ் கொடுத்து பள்ளியை விட்டு வெளியேற்றியதாக கூறப்படுகிறது. இச்சம்பவம் ஆசிரியர்கள் மற்றும் கல்வித்துறை அதிகாரிகள் மத்தியில் கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

சுயநிதி கல்லூரிகளில் ஒருங்கிணைந்த 4 வருட பி.எட் படிப்பு


தமிழ்நாட்டில் 7 அரசு பி.எட். கல்லூரிகளும், 14 அரசு உதவிபெறும் பி.எட். கல்லூரிகளும், 703 சுயநிதி பி.எட். கல்லூரிகளும் என மொத்தம் 724 பி.எட். கல்லூரிகள் உள்ளன.

சுயநிதி பி.எட். கல்லூரிகளில் 2 வருட பி.எட். படிப்பில் சேர மாணவர் சேர்க்கை நடந்து வருகிறது. அந்தந்த கல்லூரி நிர்வாகமே மாணவர் சேர்க்கையை நடத்தி வருகிறது. அரசு மற்றும் அரசு உதவி பெறும் கல்வியல் கல்லூரிகளில் மட்டும் மாணவர் சேர்க்கை கலந்தாய்வு மூலம் நடந்து வருகிறது.

மாணவர்கள் கலை, அறிவியல் படிப்பில் பட்டம் பெற 3 ஆண்டுகள் ஆகும். அதன்பிறகு அவர்கள் பி.எட். படிக்க 2 ஆண்டுகள் ஆகும். மொத்தம் 5 ஆண்டுகள் ஆவதை ஒருவருடம் குறைத்து ஒருங்கிணைந்த 4 வருட கால பி.எட். படிப்பு அறிவிக்கப்பட்டுள்ளது.

அதாவது பிளஸ்-2 முடித்த மாணவர்கள் பி.ஏ., அல்லது பி.எஸ்சி. பட்டப்படிப்புடன் கூடிய பி.எட். படிப்பை 4 வருட ஒருங்கிணைந்த பி.எட். படிப்பாக படிக்கலாம் என்று கடந்த 23-ந் தேதி தமிழக சட்டசபையில் முதல்-அமைச்சர் ஜெயலலிதா அறிவித்தார். தமிழ்நாடு ஆசிரியர் கல்வியியல் பல்கலைக்கழகத்தால் 4 வருட ஒருங்கிணைந்த பி.ஏ., பி.எட்., பி.எஸ்சி., பி.எட். படிப்புகள் இந்த ஆண்டு முதல் கல்வியல் கல்லூரிகளில் அறிமுகப்படுத்தப்படும் என்றும் அப்போது அவர் அறிவித்தார். அதன்படி இந்த வருடம் 4 வருட ஒருங்கிணைந்த பி.எட். படிப்பு அறிமுகப்படுத்தப்படுகிறது.

இது குறித்து சம்பந்தபட்ட அதிகாரி ஒருவர் கூறியதாவது:

4 வருட பி.எட். படிப்பு தொடங்க தேசிய ஆசிரியர் கல்வி குழுவில் அனுமதி பெறவேண்டும். பின்னர் தமிழ்நாடு ஆசிரியர் பல்கலைக்கழகம் அனுமதி கொடுக்கவேண்டும்.

இந்த ஒருங்கிணைந்த 4 வருட பி.எட். படிப்பு கொண்டு வர 13 சுயநிதி பி.எட். கல்லூரிகள் தேசிய ஆசிரியர் கல்விக்குழுவில் அனுமதி பெற்றுவிட்டன. அந்த கல்லூரிகள் தமிழ்நாடு ஆசிரியர் கல்வி பல்கலைக்கழகத்திடம் அனுமதிக்காக விண்ணப்பித்துள்ளன. உடனடியாக அந்த அனுமதி கொடுக்கப்படுகிறது. 

ஆனால் ஒருங்கிணைந்த 4 வருட பி.எட். படிப்பு கொண்டு வர அரசு பி.எட். கல்லூரிகள் மற்றும் அரசு உதவி பெறும் பி.எட். கல்லூரிகள் தேசிய ஆசிரியர் கல்விக்குழுவில் விண்ணப்பிக்கவில்லை.

தேசிய ஆசிரியர் கல்விக்குழு வருகிற கல்வி ஆண்டில் அரசு கல்லூரிகளில் ஒருங்கிணைந்த 4 வருட பி.எட். படிக்க அனுமதி வழங்கும். அவ்வாறு வரும்போது கண்டிப்பாக கலந்தாய்வு நடத்தப்படும். அதனால் அரசு பி.எட். கல்லூரிகள் இந்த வருடம் ஒருங்கிணைந்த பி.எட். படிப்புகளை தொடங்குவது சிரமம்.

எனவே அனுமதி பெற்றுள்ள 13 சுயநிதி பி.எட். கல்லூரிகளில் ஒருங்கிணைந்த 4 வருட பி.எட். படிப்பில் மாணவர் சேர்க்கை விரைவில் நடைபெற உள்ளது. சுயநிதி பி.எட். கல்லூரிகள் அந்த கல்லூரிகளில் மாணவர் சேர்க்கை குறித்து விளம்பரம் செய்வார்கள். அதன்பிறகு அந்த கல்லூரிகளில் மாணவர்கள் சேரலாம். ஒரு கல்லூரிக்கு தலா 100 இடங்கள் வீதம் 13 கல்லூரிகளிலும் 1,300 இடங்கள் உள்ளன. 4 வருடங்கள் கழித்து ஒவ்வொரு கல்லூரியிலும் 400 பேர் இருப்பார்கள். முதல் ஆண்டில் இருந்து 4 ஆண்டுகளும் ஆசிரியர் பயிற்சி குறித்து பாடம் நடத்தப்படும். ஆனால் கடைசி வருடம்தான் அதிக முக்கியத்துவம் அளிக்கப்படும். 

இந்த படிப்புக்கு பாடத்திட்டம் பல்கலைக்கழக நிபுணர்குழுவால் தயாரிக்கப்பட்டு தயாராக உள்ளது.

6-வது வகுப்பு முதல் 10வது வகுப்பு வரை ஆசிரியராக வேண்டும் என்ற விருப்பம் உள்ள மாணவர்களை ஊக்கப்படுத்தவேண்டும். ஆசிரியராக வேண்டும் என்று உயரிய நோக்கம் உள்ளவர்கள் ஒருங்கிணைந்த 4 வருட பி.எட். படிப்பில் சேர்ந்து படிப்பது நல்லது.
இவ்வாறு அதிகாரி தெரிவித்தார்.

ரெயிலில் 92 பைசா இன்சூரன்ஸ் பிரிமீயர் திட்டம் வரும் 31-ந்தேதியில் இருந்து அறிமுகமாகிறது.


ரெயிலில் பயணம் செய்து கொண்டிருக்கும்போது திடீரென விபத்து ஏற்பட்டால், அவர்களுக்கு ரெயில்வே நிர்வாகம் இழப்பீடு வழங்கும். இது ஒவ்வொரு விபத்தை பொறுத்து இழப்பீடு மாறுபடும்.

இதனால் ரெயில்வே துறைக்கு இழப்பு ஏற்படுகிறது. இதை சரிகட்டுவதற்காக பயணிகளுக்கான இன்சூரன்ஸ் திட்டம் அறிமுகப்படுத்தப்படும் என்று ரெயில்வே பட்ஜெட்டின்போது மத்திய மந்திரி சுரேஷ் பிரபு அறித்திருந்தார்.

இந்த திட்டம் வரும் 31-ந்தேதியில் இருந்து அறிமுகப்படுத்தப்பட இருக்கிறது.

இதன்படி, ரெயில்வே துறையின் அதிகாரப்பூர்வ ஆன்லைன் இணையத்தளமான IRCTC-ல் டிக்கெட் பதிவு செய்யும்போது ஒவ்வொரு நபர்களுக்கு 92 காசுகள் இன்சூரன்ஸ் பிரிமீயமாக பிடித்தம் செய்யப்படும். இந்த பிரிமீயர் புறநகர் ரெயில் பயணம் செய்யும் பயணிகளுக்கும் அடங்கும்.

ஆனால், ஐந்து வயதிற்குட்பட்டோருக்கும், வெளிநாட்டு பயணிகளுக்கும் அடங்காது. உறுதி செய்யப்பட்ட டிக்கெட், ஆர்.ஏ.சி. மற்றும் காத்திருப்போர் பட்டியலில் இருப்போரும் இந்த வசதியை பெறலாம்.

இந்த பிரிமீயம்படி தற்செயலான ரெயில் விபத்திற்குள்ளாகி, உயிரிழக்க நேரிட்டால் 10 லட்சம் ரூபாய் இழப்பிடாக வழங்கப்படும். உடலின் பாகங்கள் செயலிழ்ந்தால் 7.5 லட்சம் ரூபாயும், சிறிய காயம் ஏற்பட்டு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டால் 2 லட்சம் ரூபாய் வழங்கப்படும்.

அதேபோல் துப்பாக்கி சூடு, தீவிரவாத தாக்குதல் போன்ற சம்பவத்தால் உயிரிழந்தவர்களின் உடல்களை சொந்த ஊருக்கு எடுத்துச் செல்ல 10 ஆயிரம் ரூபாய் வழங்கப்படும்.

ஐசிசிஐ லம்பா்டு ஜெனரல் இன்சூரன்ஸ், ராயல் சுந்தரம் ஜெனரல் இன்சூரன்ஸ் மற்றும் ஸ்ரீராம் ஜெனரல் இன்சூரன்ஸ் ஆகிவற்றிளுடன் இணைந்து IRCTC  இந்த திட்டத்தை செய்ய இருக்கிறது.

Wednesday, August 24, 2016

கட்டாய இடமாற்றம்:ஆசிரியர்கள் பதற்றம்


ஆசிரியர்கள் இடமாறுதல் கவுன்சிலிங், முடிவு கட்டத்தை எட்டியுள்ளது. வரும், 27ம் தேதி கட்டாய இடமாற்றம் நடக்கிறது; இதில், ஆசிரியர்கள், பல்வேறு மாவட்டங்களுக்கு அதிரடியாக மாற்றப்பட உள்ளனர். அரசு பள்ளி ஆசிரியர்களுக்கு, ஆண்டுக்கு ஒருமுறை விருப்ப இடமாறுதல் கவுன்சிலிங் நடக்கிறது. கடந்த, 20 ஆண்டுகளில் இல்லாத அளவுக்கு, இந்த ஆண்டு கவுன்சிலிங்கில், முக்கிய காலியிடங்கள் மறைக்கப்படாமல், ஆசிரியர்கள் இடமாற்றம் செய்யப்பட்டனர். வரும், 27 முதல், 29ம் தேதி வரை, அரசு உயர்நிலை மற்றும் மேல்நிலைப் பள்ளிகளில், பணி நிரவல் எனப்படும், கட்டாய இடமாற்றம் செய்யப்படுகிறது.

அதிக அளவில்... : ஒவ்வொரு பள்ளியிலும், மாணவர்கள் எண்ணிக்கைக்கு ஏற்ப, இத்தனை ஆசிரியர்கள் இருக்க வேண்டும் என்ற விகிதாச்சாரம் உள்ளது. அதையும் மீறி, சில மாவட்டங்களில், அதிகளவில் ஆசிரியர்கள் பணியில் உள்ளனர். அவர்களை கணக்கெடுத்து, ஆசிரியர் பற்றாக்குறை உள்ள மாவட்ட பள்ளிகளுக்கு மாற்றுவதே, பணி நிரவல் கலந்தாய்வு என, கூறப்படுகிறது.

அதன்படி, பள்ளிக் கல்வித்துறை எடுத்துள்ள பட்டியலில், 3,000 ஆசிரியர்கள் வரை, சில மாவட்டங்களில், கூடுதலாக பணியாற்றுவது தெரியவந்துள்ளது. எனவே, கூடுதல் ஆசிரியர் இடங்களை, ஆசிரியர் தேவைப்படும் பல்வேறு மாவட்ட பள்ளிகளுக்கு மாற்ற முடிவு செய்துள்ளனர். விழுப்புரம், திருவண்ணாமலை, கிருஷ்ணகிரி, திருவள்ளூர், தர்மபுரி போன்ற மாவட்டங்களில், காலியிடங்கள் அதிகமாக உள்ளன. எனவே, தென் மாவட்டங்கள் மற்றும் மத்திய மாவட்டங்களைச் சேர்ந்த ஆசிரியர்கள், வரும், 27ம் தேதி முதல், எந்த மாவட்டத்திற்கும் அதிரடியாக மாற்றப்படலாம்.

எப்படியாவது... : அதேநேரம், பள்ளிக் கல்வித் துறையில் அதிகமாக பணியாற்றும் தென் மாவட்ட ஆசிரியர்கள், எப்படியாவது, சொந்த மாவட்டம் அல்லது அதையொட்டிய பகுதிகளுக்கு செல்ல, அதிகாரிகளை அணுகியுள்ளனர். ஆனால், சிபாரிசு கூடாது என, அரசிடமிருந்து கண்டிப்பான உத்தரவு உள்ளதால், அதிகாரிகளுக்கு நெருக்கடியான நிலையும், ஆசிரியர்கள் மத்தியில் பதற்றமான சூழலும் ஏற்பட்டுள்ளது.

Querterly exam

'பத்தாம் வகுப்பு மற்றும் பிளஸ் 2 மாணவர்களுக்கு, செப்., 8 முதல், 23ம் தேதி வரை, காலாண்டு தேர்வுகள் நடக்கும்' என, அறிவிக்கப்பட்டுள்ளது. பத்தாம் வகுப்பு மற்றும் பிளஸ் 2 மாணவர்களுக்கு, ஆண்டு இறுதி பொதுத் தேர்வை போல, காலாண்டு, அரையாண்டு தேர்வுகளை, அனைவருக்கும் பொதுவான வினாத்தாளுடன் நடத்த, பள்ளிகளுக்கு கல்வித்துறை உத்தரவிட்டுள்ளது. செப்., 8ல், 10ம் வகுப்பு மற்றும் பிளஸ் 2 மாணவர்களுக்கு, காலாண்டு தேர்வு துவங்குகிறது. பிளஸ் 2வுக்கு, செப்., 8 முதல், 12 வரை, மொழி பாடங்களுக்கும்; மற்ற தேர்வுகள், செப்., 14 முதல், 23 வரையிலும் நடத்தப்பட உள்ளன. பத்தாம் வகுப்புக்கு, செப்., 8 முதல், 14 வரை மொழி பாட தேர்வுகளும்; மற்ற தேர்வுகள், செப்., 15 முதல், 23 வரையிலும் நடத்தப்படும் என, அறிவிக்கப்பட்டுள்ளது.

Tuesday, August 23, 2016

எஸ்.எஸ்.எல்.சி, பிளஸ் 2 மாணவ- மாணவிகளுக்கு செல்போன் அப்ளிகேஷன் மூலம் பாடம் படிக்கும் திட்டம்;


எஸ்.எஸ்.எல்.சி., பிளஸ்-2 மாணவ-மாணவிகள் செல்போன் ‘அப்ளிகேஷன்’ மூலம் பாடம் படிக்கும் புதிய திட்டம் ஏற்படுத்தப்பட்டுள்ளது. அதன் உபயோகம் குறித்து ஆசிரியர்களுக்கு செயல்விளக்கம் அளிக்கப்பட்டது.

ஆசிரியர்களுக்கு செயல்விளக்கம்

எஸ்.எஸ்.எல்.சி., பிளஸ்-2 பாட திட்டத்தில் சிலவற்றை தேர்ந்தெடுத்து நவீன தொழில்நுட்பம் மூலம் மாணவ-மாணவிகள் படிக்க செல்போன் ‘அப்ளிகேஷன்’ ஒன்றை தமிழக அரசின் பள்ளிக்கல்வி துறை தயார் செய்துள்ளது. இதன் உபயோகம் குறித்து ஆசிரியர்கள் தெரிந்து கொள்ள காணொலி காட்சி மூலம் செயல்விளக்கம் அளிக்கப்பட்டது. சென்னை நுங்கம்பாக்கத்தில் உள்ள டி.பி.ஐ. வளாகத்தில் இருந்தபடி, 32 மாவட்டங்களில் உள்ள 32 மாவட்ட ஆசிரியர் கல்வி மற்றும் பயிற்சி நிறுவன மையங் கள், 16 அரசு மேல்நிலைப்பள்ளிகளில் செயல்விளக்கம் வழங்கப்பட்டது.

பதிவிறக்கம் செய்யலாம்

இது குறித்து மாநில கல்வியியல் ஆராய்ச்சி மற்றும் பயிற்சி நிறுவன இயக்குனர் ராமேஸ்வர முருகன் கூறியதாவது:-

தமிழக அரசின் பள்ளிக்கல்வி துறை மூலம் ‘ TN SC-H-O-O-LS LI-VE ’ என்ற அப்ளிகேஷனை செல்போனின் ‘பிளே ஸ்டோரில்’ சென்று பதிவிறக்கம் செய்து கொள்ளலாம். மேலும், இது தொடர்பாக சி.டி.யிலும் நாங்கள் பதிவு செய்து ஒவ்வொரு பள்ளிகளுக்கும் வழங்கி இருக்கிறோம். மாணவ-மாணவிகள் தேவைப்பட்டால் அதை கேட்டு பெற்றுக்கொண்டு தங்களுடைய செல்போனில் பதிவேற்றம் செய்து கொள்ளலாம். இந்த அப்ளிகேஷனை கொண்டு பாடத்திட்டத்தில் குறிப்பிடப்பட்டுள்ள பகுதியின் படத்தின் மீது வைத்தால் அந்த படம் முப்பரிமாண தோற்றத்தில் (3-டி) காட்சி அளிக்கும்.

141 பாடங்கள்

பின்பு அந்த படத்தின் மூலம் மாணவ-மாணவிகள் தெரிந்து கொள்ள வேண்டிய அனைத்து விளக்கங்களையும் அதில் பெற்று படித்து கொள்ளலாம். இதுவரை 5 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் இந்த அப்ளிகேஷனை பதிவிறக்கம் செய்து இருக்கிறார்கள். எஸ்.எஸ்.எல்.சி. அறிவியல் புத்தகத்தில் 57 பாடங்களையும், கணித புத்தகத்தில் 6 பாடங்களையும், பிளஸ்-2 இயற்பியல் புத்தகத்தில் 5 பாடங்களையும், வேதியியல் புத்தகத்தில் 16 பாடங்களையும், உயிரியியல் புத்தகத்தில் 20 பாடங்களையும், கணித புத்தகத்தில் 7 பாடங்களையும், கணினி அறிவியல் புத்தகத்தில் 10 பாடங்களையும், விலங்கியல் புத்தகத்தில் 20 பாடங்களையும் என மொத்தம் 141 பாடங்களை படித்து தெரிந்து கொள்ளலாம்.

இவ்வாறு அவர் கூறினார்.