பள்ளிகளில் சத்துணவு மைய சமையல் கூடங்களில் மட்டுமே மதிய உணவைத் தயார் செய்ய வேண்டும் என தொடக்கக் கல்வித் துறை இயக்குநர் ஆர்.இளங்கோவன் அறிவுறுத்தினார். இதுகுறித்து அவர் வெளியிட்ட செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-
தமிழகத்தில் உள்ள அரசு, அரசு உதவி பெறும் பள்ளிகளில் முன்னாள் முதல்வர் எம்.ஜி.ஆர். சத்துணவு திட்டம் சிறப்பாகச் செயல்படுத்தப்படுகிறது. தொடக்கக் கல்வித் துறையின் கீழ் இயங்கும் அனைத்து வகைத் தொடக்க, நடுநிலைப் பள்ளிகளில் செயல்படும் சத்துணவு மையங்களை தூய்மையாகப் பராமரித்தல் தொடர்பாக ஏற்கெனவே ஆய்வுக் கூடங்களில் மாவட்டத் தொடக்கக் கல்வி அலுவலர்களுக்கு அறிவுரைகள் வழங்கப்பட்டுள்ளன.
அத்துடன் சத்துணவு மைய சமையல் கூடங்களில் மட்டுமே மதிய உணவை தயார் செய்ய வேண்டும். புகை போன்றவற்றைக் காரணம் காட்டி திறந்தவெளியில் சத்துணவு தயாரிப்பது முற்றிலும் தவிர்க்கப்பட வேண்டும். சத்துணவு மையத்தில் பல்லி, கரப்பான் பூச்சி போன்றவை இருப்பின் அவற்றை அகற்ற நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும். எரிபொருள்கள் சமையல் கூடத்தில் இருப்பு வைத்தல் கூடாது. சமையல் செய்பவர்கள், உதவியாளர்கள் தன்னையும், சமையல் பாத்திரங்களையும் சுத்தமாக வைத்திருக்க வேண்டும்.
இதுகுறித்து தலைமை ஆசிரியர்களுக்குத் தக்க அறிவுரைகளை உதவி, கூடுதல் உதவித் தொடக்கக் கல்வி அலுவலர்கள் மூலம் வழங்க வேண்டும். இதில் ஏதேனும் குறைபாடுகள் கண்டறியப்பட்டால் தொடர்புடைய வட்டார வளர்ச்சி அலுவலர் வாயிலாக தக்க நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் என்று கூறப்பட்டுள்ளது.