வங்கி சேமிப்பு கணக்குக்கு தினமும் வட்டி கணக்கிட்டு, 90 நாட்களுக்கு, ஒரு முறை அளிக்கும் நடைமுறை வாடிக்கையாளருக்கு கூடுதல் பயன் அளிக்கும்; வாடிக்கையாளர்கள் எண்ணிக்கை அதிகரிக்கும்' என, வங்கியாளர்கள் தெரிவித்துள்ளனர்.
கடந்த காலங்களில், வங்கிகளில் உள்ள சேமிப்பு கணக்குக்கு, 3.5 சதவீத வட்டி அளிக்கப்பட்டது. சேமிப்புக் கணக்கில், மாதத்தின், 10ம் தேதி முதல், 30ம் தேதி வரை உள்ள குறைந்த பட்ச சேமிப்பு தொகைக்கு வட்டி கணக்கிடப்பட்டது. இந்த வட்டித்தொகையை, ஆறு மாதங்களுக்கு, ஒரு முறை வங்கிகள் அளித்தன. தற்போது சேமிப்பு கணக்கில் உள்ள தொகைக்கான வட்டி, 4 சதவீதமாக உயர்த்தப்பட்டுள்ளது. மேலும், 24 மணி நேரத்துக்கு, ஒரு முறை வட்டி கணக்கிடப்படுகிறது.
இந்த வட்டித் தொகை, மூன்று மாதத்துக்கு, ஒரு முறை அளிக்கப்படும். இதுகுறித்து, இந்தியன் வங்கி மூத்த அதிகாரி சீனிவாசன் கூறியதாவது:வாடிக்கையாளர்கள், 'டெர்ம் டிபாசிட்' எனப்படும், பருவ கால வைப்புத் தொகையை செலுத்தி வட்டி பெற, பருவ காலம் முடியும் வரை காத்திருக்க வேண்டும். பருவ காலம் முடிவதற்கு முன், வைப்புத் தொகையை திரும்ப எடுக்கும் போது முழு வட்டி கிடைக்காது. சில வங்கிகள், வைப்புத் தொகை காலம் முடிவதற்கு முன் எடுக்கப்படும் பணத்துக்கு அபராதமும் விதிக்கின்றன.
இந்த நிலையில் சேமிப்பு கணக்கு வட்டி விகிதம் உயர்த்தப்பட்டுள்ளது; 24 மணி நேரத்துக்கு ஒரு முறை, வட்டி கணக்கிட்டு, மூன்று மாதங்களுக்கு, ஒரு முறை வழங்குவது வாடிக்கையாளர்களுக்கு பலன் தரும். வங்கியும், சேமிப்பு கணக்கில் உள்ள தொகையை தேவையான வகையில் பயன்படுத்த முடியும்.வாடிக்கையாளர்களை ஈர்க்க, சில தனியார் வங்கிகள், சேமிப்பு கணக்குக்கு, 6 சதவீதம் வரை வட்டி அளிக்கின்றன. சேமிப்புக் கணக்கில் இருக்கும் முதல், 10 ஆயிரம் ரூபாய்க்கும், அதற்கான வட்டிக்கும் வருமான வரி விலக்கும் உண்டு. இவ்வாறு அவர் கூறினார்