மாவட்டம் சதவீதம்
திருவள்ளூர் 71.20
சென்னை 60.99
காஞ்சிபுரம் 68.77
வேலுார் 77.24
கிருஷ்ணகிரி 78.38
தர்மபுரி 85.03
திருவண்ணாமலை 82.99
விழுப்புரம் 79.44
சேலம் 80.09
நாமக்கல் 82.10
ஈரோடு 79.39
நீலகிரி 70.53
கோவை 68.13
கரூர் 83.09
திருச்சி 75.77
பெரம்பலுார் 79.54
கடலுார் 78.64
நாகப்பட்டினம் 76.05
திருவாரூர் 78.04
தஞ்சாவூர் 77.45
புதுக்கோட்டை 77.07
மதுரை 71.09
திண்டுக்கல் 79.62
தேனி 75.29
ராமநாதபுரம் 67.78
சிவகங்கை 69.80
விருதுநகர் 76.36
திருநெல்வேலி 71.94
துாத்துக்குடி 71.17
கன்னியாகுமரி 66.32
அரியலுார் 83.77
திருப்பூர் 72.68
Tuesday, May 17, 2016
மாவட்ட வாரியாக ஓட்டுப்பதிவு சதவீதம்
அரசு பள்ளிகளில் தேர்ச்சி விகிதம் அதிகரிப்பு: தனியார், மெட்ரிக் பள்ளிகள் பின்னடைவு
பிளஸ் 2 தேர்வு முடிவுகள் நேற்று வெளியாயின. அதில், அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளில், கடந்த ஆண்டை விட, இம்முறை மாணவ, மாணவியரின் தேர்ச்சி சதவீதம் அதிகரித்துள்ளது. அதே நேரம், தனியார், மெட்ரிக் மற்றும் ஆங்கிலோ இந்தியன் பள்ளிகளில் தேர்ச்சி குறைந்துள்ளது.
தமிழகத்தில், 2011ம் ஆண்டு, அனைத்து பள்ளிகளிலும், சமச்சீர் கல்வி முறை அறிமுகம் செய்யப்பட்டது. இதன் படி, அரசு, அரசு உதவி பெறும், தனியார் மற்றும் மெட்ரிக் உள்ளிட்ட அனைத்து பள்ளிகளிலும், சமச்சீர் 1 2 பாடத்திட்டத்தின் படியே மாணவர்களுக்கு பாடம் நடத்தப்படுகிறது. சி.பி.எஸ்.இ., மற்றும் ஐ.சி.எஸ்.இ., பள்ளிகள், பிளஸ் 1, பிளஸ் 2வில் மட்டும், மாநில பாடத்திட்டத்தில் பாடங்கள் நடத்தியுள்ளன. இந்த பள்ளிகளின் பட்டியலும், முதல் முறையாக தேர்வுத்துறை பட்டியலில் தனியாக குறிப்பிடப் பட்டுள்ளன.
நேற்று வெளியான பிளஸ் 2 தேர்வு முடிவுகளின் படி, தனியார் பள்ளிகளில் படித்த மாணவர்களில், 97.89 சதவீதம் பேர் தேர்ச்சி அடைந்துள்ளனர். எனினும், கடந்த ஆண்டை ஒப்புடுகையில், இந்த ஆண்டு தனியார், மெட்ரிக், ஆங்கிலோ இந்தியன் உள்ளிட்ட பள்ளிகளின் மாணவர் தேர்ச்சி விகிதம் குறைந்துள்ளது. அதே நேரம், அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளில், மாணவர் தேர்ச்சி சதவீதம் கடந்த ஆண்டை விட சற்று அதிகரித்துள்ளது.
248 அரசு பள்ளிகளில் 100 சதவீத தேர்ச்சி: பிளஸ் 2 தேர்வில், தமிழகம் முழுவதும், 248 அரசு பள்ளிகள், 100 சதவீத தேர்ச்சியை பெற்று உள்ளன. தமிழகம் முழுவதும், 2,704 அரசு பள்ளிகளைச் சேர்ந்த, 3 லட்சத்து, 47 ஆயிரத்து, 478 பேர் பிளஸ் 2 தேர்வு எழுதினர். அவர்களின், இரண்டு லட்சத்து, 97 ஆயிரத்து, 641 பேர் தேர்ச்சி பெற்றுஉள்ளனர். இதுகுறித்து, பள்ளிக்கல்வி இயக்குனர் கண்ணப்பன் கூறியதாவது:
பிளஸ் 2 தேர்வில், அரசு பள்ளிகள், கடந்த ஆண்டை விட அதிக தேர்ச்சி பெற்றுள்ளன. இந்த ஆண்டு, 85.71 சதவீதம் பேர் தேர்ச்சி பெற்றுள்ளனர். 248 அரசு பள்ளிகள், 100 சதவீதம் தேர்ச்சி பெற்றுஉள்ளன. கடந்த ஆண்டு, 196 பள்ளிகள் தேர்ச்சி பெற்ற நிலையில், இந்த ஆண்டு, பள்ளிக்கல்வித் துறையின் முயற்சியால், கூடுதலாக, 52 பள்ளிகள், 100 சதவீத தேர்ச்சி பெற்று உள்ளன.
வளர்ச்சி பாதையில்...:கடந்த, 2012ல், 41 அரசு பள்ளிகள் மட்டுமே, 100 சதவீத தேர்ச்சி பெற்ற நிலையில், ஒவ்வொரு ஆண்டும் இந்த எண்ணிக்கை அதிகரித்து, இந்த ஆண்டு, 248 அரசு பள்ளிகள், 100 சதவீத தேர்ச்சியை பெற்றுள்ளன
Saturday, May 14, 2016
பள்ளி செல்லா குழந்தைகள் கணக்கெடுப்பில் 21,755 பேர்
கடந்த, ஒரு மாதத்தில் எடுத்த கணக்கெடுப்பில், 21 ஆயிரத்து, 755 பள்ளி செல்லா குழந்தைகள் கண்டறியப்பட்டுள்ளனர். பள்ளிக் கல்வித்துறை சார்பில், 6 முதல், 14 வயதுடைய குழந்தைகள், 100 சதவீதம் ஆரம்பக் கல்வியை கற்க வேண்டும் என்பதற்காக, ஆண்டுதோறும், அனைவருக்கும் கல்வி இயக்ககம் மூலம், பள்ளி செல்லாத குழந்தைகள் கணக்கெடுக்கும் பணி நடத்தப்படுகிறது.
இதுகுறித்து கல்வி அதிகாரிகள் கூறியதாவது: நடப்பாண்டு மாநிலம் முழுவதும், 79 ஆயிரத்து, 844 நகர, கிராமங்களில் கணக்கெடுப்பு பணி முடிக்கப்பட்டுள்ளது. அதன்படி, ஏப்., 5ம் தேதி முதல், இம்மாதம், 5ம் தேதி வரை நடந்த கணக்கெடுப்பில், மாநிலம் முழுவதும், 21 ஆயிரத்து, 755 பள்ளி செல்லா குழந்தைகள் கண்டறியப்பட்டுஉள்ளனர்.இதில், கிருஷ்ணகிரி, அதிகபட்சமாக, 1,949, திருநெல்வேலி, 1,386, விழுப்புரம், 1,384, கோவை, 1,381, குறைந்தபட்சமாக கன்னியாகுமரி, 109, நாகப்பட்டினம், 131 என, பள்ளி செல்லா குழந்தைகள் உள்ளனர். இவர்களை, பள்ளியில் சேர்க்க நடவடிக்கை எடுக்கப்படும். இவ்வாறு அவர்கள் கூறினர்
கதை, கவிதை சேகரிக்க உத்தரவுதலைமை ஆசிரியர்கள் அதிருப்தி
பள்ளிகளுக்கு விடுமுறை விடப்பட்டுள்ள நிலையில், மாணவர்கள் மற்றும் ஆசிரியர்களிடமிருந்து, கதை, கவிதை உள்ளிட்டவற்றை சேகரித்து அனுப்ப, தலைமை ஆசிரியர்களுக்கு உத்தரவிடப்பட்டுள்ளது.
தேர்தல் நடைபெறும் நேரத்தில், இந்த உத்தரவு ஆசிரியர்களை அதிருப்திக்குள்ளாக்கியுள்ளது. தமிழ்நாடு மாநில பெற்றோர் ஆசிரியர் கழகம் வெளியிடும் இதழுக்காக, மாணவர்களுக்கு பயன்படும் கதைகள், கவிதைகள், கட்டுரைகள், துணுக்குகள், பல்வேறு செயல்பாடுகள் மற்றும் சிறப்பாக செயல்படும் பெற்றோர் ஆசிரியர் கழகம் குறித்த விவரங்கள் ஆகியவற்றை அனுப்பி வைக்க, அனைத்து வகை பள்ளி தலைமை ஆசிரியர்களுக்கும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.
இவற்றை மாணவர்கள் மற்றும் ஆசிரியர்களிடம் சேகரித்து, மே 18ம் தேதி மாலைக்குள், மாவட்டக்கல்வி அலுவலருக்கு அனுப்பி வைக்க, சேலம் மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் ஞானகவுரி உத்தரவிட்டுள்ளார். மாணவர்களுக்கு கோடை விடுமுறையும், ஆசிரியர்களுக்கு தேர்தல் பயிற்சி மற்றும் பணியும் உள்ள நிலையில், கதை, கவிதை, துணுக்குகளை சேகரிக்கும் பணி, தலைமை ஆசிரியர்களை அதிருப்திக்கு உள்ளாக்கியுள்ளது.
Friday, May 13, 2016
வரும் 17ல் பிளஸ் 2 'ரிசல்ட்': 19ல் தற்காலிக சான்றிதழ்
மே, 17ல் பிளஸ் 2 பொதுத் தேர்வு முடிவுகள் வெளியிடப்படுகின்றன. தற்காலிக மதிப்பெண் சான்றிதழ், 19ல் வழங்கப்படுகிறது.இது குறித்து, அரசு தேர்வுத் துறை இயக்குனர் வசுந்தராதேவி வெளியிட்ட செய்திக்குறிப்பு:
பிளஸ் 2 பொதுத் தேர்வு முடிவுகள், மே, 17 காலை, 10:31 மணிக்கு வெளியிடப்படும். தேர்வர்கள், பிறந்த தேதி மற்றும் பதிவு எண் மூலம், www.tnresults.nic.in, www.dge1.tn.nic.in, www.dge2.tn.nic.in என்ற இணையதளங்களில் தேர்வு முடிவுகளை அறிந்து கொள்ளலாம்.பள்ளிகளிலும், மாவட்ட கலெக்டர் அலுவலகங்களில் உள்ள தேசிய தகவலியல் மையங்கள், அனைத்து மைய மற்றும் கிளை நுாலகங்களிலும் தேர்வு முடிவுகளை கட்டணமின்றி தெரிந்து கொள்ளலாம்.
தேர்வர்கள் மே, 19ல் தற்காலிக மதிப்பெண் சான்றிதழை, இணையதளத்தில் தாங்களே பதிவிறக்கம் செய்யலாம். மே, 21 முதல், தேர்வர்கள் தாங்கள் படித்த, தேர்வு எழுதிய பள்ளியில், தற்காலிக மதிப்பெண் சான்றிதழை பெறலாம். விடைத்தாள் நகல் மற்றும் மதிப்பெண் மறுகூட்டலுக்கு விண்ணப்பிக்க விரும்பும் மாணவர்கள், தாங்கள் படித்த பள்ளிகள் மூலமும்; தனித்தேர்வர்கள் தேர்வு மையங்கள் மூலமும், மே, 17, 18ம் தேதிகளில் விண்ணப்பிக்கலாம். விடைத்தாள் நகல் பெற்றவர்கள் மட்டுமே, மறுமதிப்பீடு கோரி விண்ணப்பிக்க முடியும்.
விடைத்தாளின் நகல் கோரி விண்ணப்பிப்போர், அதே பாடத்திற்கு மதிப்பெண் மறுகூட்டலுக்கு தற்போது விண்ணப்பிக்கக் கூடாது. விடைத்தாளின் நகல் பெற்ற பின், மறுகூட்டல் மற்றும் மறுமதிப்பீட்டிற்கு விண்ணப்பிக்க வாய்ப்பு அளிக்கப்படும். விடைத்தாளின் நகல் மற்றும் மறுகூட்டலுக்கான கட்டணத்தை, விண்ணப்பிக்க உள்ள பள்ளியிலேயே பணமாகச் செலுத்த வேண்டும். விடைத்தாளின் நகல் மற்றும் மறுகூட்டலுக்கு விண்ணப்பிக்கும் போது வழங்கப்படும் ஒப்புகைச் சீட்டை, மாணவர் பாதுகாப்பாக வைத்துக் கொள்ள வேண்டும். ஒப்புகைச் சீட்டிலுள்ள விண்ணப்ப எண்ணை பயன்படுத்தியே, விடைத்தாள் நகலை மாணவர்கள் இணையதளத்தில் பதிவிறக்கம் செய்ய முடியும்.சிறப்பு துணைத்தேர்வு ஜூன் மாத இறுதியில் நடக்கும். விண்ணப்ப தேதி விரைவில் அறிவிக்கப்படும். இவ்வாறு செய்திக் குறிப்பில் தெரிவிக்கப்பட்டு உள்ளது.
Thursday, May 12, 2016
பூத் சிலிப் வழங்கும் பணி.ஆசிரியர்கள் வேதனை
வாக்காளர்களுக்கு பூத் சிலிப் விநியோகிப்பதில் பணிச் சுமை ஏற்பட்டு வாக்குச் சாவடி நிலை அலுவலர்கள் அதிருப்தி அடைந்துள்ளதாக தமிழ்நாடு ஆரம்பப் பள்ளி ஆசிரியர் கூட்டணி தெரிவித்துள்ளது.
சட்டப் பேரவைத் தேர்தலில் ஆள் மாறாட்டத்தைத் தடுக்க, வாக்குப் பதிவு தினத்துக்கு நான்கு நாள்களுக்கு முன்னதாகவே வாக்காளர்களுக்கு பூத் ஸ்லிப் வழங்கும் பணியை நிறுத்திவிட தேர்தல் ஆணையம் அறிவுறுத்தியிருந்தது. அதாவது பூத் ஸ்லிப் வழங்கும் பணியை மே 12-ஆம் தேதியுடன் நிறைவு செய்ய அறிவுறுத்தப்பட்டது.
இந்நிலையில், திருப்பூர் வடக்கு மற்றும் தெற்குத் தொகுதிகளில் மே 8-ஆம் தேதியே வாக்குச் சாவடி நிலை அலுவலர்களான ஆசிரியர்களிடம் பூத் சிலிப்வழங்கப்பட்டதாம்.
இதில், ஒவ்வொரு ஆசிரியருக்கும் சுமார் ஆயிரத்து இருநூறுக்கும் மேற்பட்ட பூத் சிலிப்களை விநியோகிக்கும் பணி தரப்பட்டதாகக் கூறப்படுகிறது.
தொழிலாளர்கள் அதிகம் உள்ள பகுதிகளில், அவர்கள் வேலைக்குச் சென்று விடுவதால் பூத் சிலிப் வழங்குவதில் சுணக்கம் ஏற்பட்டதாகவும், புதன்கிழமை இரவு 12 மணி வரை இப்பணியில் ஆசிரியர்கள் ஈடுபட்டதாகவும், இதனால் ஆசிரியைகள் மிகவும் பாதிக்கப்பட்டதாகவும் தமிழ்நாடு ஆரம்பப்பள்ளி ஆசிரியர் கூட்டணி நிர்வாகிகள் தெரிவித்தனர்.
இதுகுறித்து மேலும் அவர்கள் கூறியதாவது:
இடம் பெயர்ந்தோர் மற்றும் இறந்த வாக்காளர்கள் குறித்து வழங்கப்பட்டுள்ள படிவங்களில் அவர்களின் வரிசை எண், பாகம் எண், உறவினர் பெயர், ஆண் மற்றும் பெண், வாக்காளர் அடையாள அட்டை எண், விடுபட்டதற்கான காரணம் உள்ளிட்டவற்றை எழுதித் தர வேண்டிய நிலை உள்ளது.
வாக்காளர்களின் வீடுகளுக்குச் செல்லும்போது, பலர் வேலைக்குச் சென்று விடுகின்றனர். குறுகிய நாள்களுக்குள் இப்பணியை செய்து முடிப்பதில் பணிச் சுமை ஏற்பட்டுள்ளது. இதனால், பெண் ஆசிரியர்கள் மிகவும் பாதிக்கப்பட்டுள்ளனர். இத்தகைய பாதிப்புக்குத் தேர்தல் ஆணையத்தின் புதிய அறிவிப்பே காரணம். இதற்கு, உரிய நிவாரணம் கிடைக்க தேர்தல் ஆணையம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றனர்
ஓட்டுச்சாவடிகளில்சாமியானா பந்தல்
வெயில் அதிகமாக இருப்பதால், தேவைப்படும் ஓட்டுச்சாவடிகளின் முன், சாமியானா பந்தல் அமைத்துக் கொள்ள, தேர்தல் கமிஷன் அனுமதி வழங்கி உள்ளது. பொது மக்கள் ஓட்டு போடுவதற்கு வசதியாக, 66,001 ஓட்டுச் சாவடிகள் அமைக்கப்பட்டுள்ளன.
தொகுதிக்கு, ஒரு ஓட்டுச்சாவடி, பெண்களுக்கானதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த ஓட்டுச்சாவடி அலுவலர்கள் அனைவரும் பெண்களாகவே இருப்பர். அதேபோல், மாநிலம் முழுவதும், 968 மாதிரி ஓட்டுச் சாவடிகள் அறிவிக்கப்பட்டுள்ளன. அந்த ஓட்டுச் சாவடிகளில், வாக்காளர்கள் அமர சோபா போடப்படும். முன்புறம் பந்தல் போடப்பட்டு, வாழை மரம் நடப்படும். தமிழகம் முழுவதும், வெயில் அதிகமாக உள்ளது. பெரும்பாலான ஓட்டுச்சாவடிகளில், அருகிலேயே காலி வகுப்பறைகள் இருக்கும். எனவே, அங்கு வாக்காளர்கள் அமர வைக்கப்படுவர்.
அந்த வசதி இல்லாத ஓட்டுச் சாவடிகளில், சாமியானா பந்தல் அமைக்க, தேர்தல் கமிஷன் அனுமதி வழங்கி உள்ளது. அதேபோல், அனைத்து ஓட்டுச் சாவடிகளிலும், குடிநீர் வசதி செய்யவும், தேர்தல் கமிஷன் உத்தரவிட்டுள்ளது
'டிப்ளமோ' தேர்வுஅறிவிப்பு
அரசு தேர்வுகள் இயக்குனர் வசுந்தராதேவி வெளியிட்ட செய்திக்குறிப்பு:தொடக்க கல்வி, 'டிப்ளமோ' தேர்வுக்கான, முதலாம் ஆண்டு தேர்வு, ஜூலை, 1ல் துவங்கி, ஜூலை, 16ல் முடிகிறது. இரண்டாம் ஆண்டுக்கான தேர்வு, ஜூன், 30ல் துவங்கி, ஜூலை, 15ல் முடிகிறது. இந்த தேர்வுகள், காலை, 10:00 மணி முதல் பகல், 1:00 மணி வரை நடக்கும். இவ்வாறு செய்திக்குறிப்பில் கூறப்பட்டுள்ளது.
Wednesday, May 11, 2016
தேர்தல் பணியால்ஆசிரியர்கள் அவஸ்தை
தேர்தல் பணிகளில், ஆண், பெண் ஆசிரியர்கள் நியமிக்கப்பட்டு உள்ளனர். ஓட்டுச்சாவடி அதிகாரி, அலுவலர் பணிகளில், பள்ளி ஆசிரியர்கள் நியமிக்கப்பட்டு உள்ளனர். இவர்கள், வரும் 15ம் தேதி முதல், 16ம் தேதி இரவு வரை, தேர்தல் பணியாற்ற வேண்டும். இதற்கான உத்தரவுகள் அனைத்து ஆசிரியர்களுக்கும் அனுப்பப்பட்டு உள்ளன.
அதில், சில ஆசிரியைகளுக்கு, அவர்களது வீட்டிலிருந்து, 80 கி.மீ., துாரத்தில் உள்ள ஓட்டுச்சாவடிகளில், பணி ஒதுக்கப்பட்டு உள்ளது. தேர்தல் நாளில் ஓட்டுப்பதிவு, மாலை 6:00 மணிக்கு முடிந்து, மின்னணு ஓட்டுப் பெட்டிகளை, ஓட்டு எண்ணும் மையத்துக்கு அனுப்ப, இரவு 9:00 மணி ஆகிவிடும். அதன்பின், நகர்ப்புறம் அல்லாத மற்ற பகுதிகளிலிருந்து, வீடுகளுக்கு திரும்ப போக்குவரத்து வசதி கிடைக்காது.
பணி முடித்து, வீட்டுக்கு வந்து சேர நள்ளிரவை தாண்டி விடும் என்பதால், அவர்கள் அச்சமடைந்து உள்ளனர். இதுகுறித்து, பட்டதாரி ஆசிரியர் கூட்டமைப்பு பொதுச் செயலர் பேட்ரிக் ரைமண்ட் கூறியதாவது:தேர்தல் பணிக்கான சம்பளம், மிக குறைவாக இருந்தாலும், ஜனநாயக கடமை என்ற அடிப்படையில், ஆசிரியர்கள் தேர்தல் பணியில் ஈடுபடுகின்றனர். ஆனால், பணி இடங்களை ஒதுக்குவதில், அதிகாரிகள் உரிய விதிமுறைகளை கடைபிடிப்பதில்லை. இதனால், 80 கி.மீ., துாரத்தில், தேர்தல் பணி ஒதுக்கப்படுவதால், பெண் ஆசிரியர்கள் கடுமையாக பாதிக்கப்படுகின்றனர். இரவில், தாமதமாக தேர்தல் பணி முடியும் நிலையில், அவர்கள் வீடு திரும்புவதற்கான போக்குவரத்து வசதி களை, தேர்தல் அதிகாரிகள் செய்து கொடுப்பதில்லை.இதேபோல், காலை 5:00 மணிக்கு, தேர்தல் பணி துவங்கும் நிலையில், இரவு 7:00 மணிக்கு முடியும் வரையில், ஆசிரியர்களுக்கு எந்த இடைவேளையும் ஒதுக்கப்படுவதில்லை.
அதனால், கழிப்பறைக்கு கூட செல்ல முடியாத நிலை ஏற்பட்டு, தேர்தல் பணியில் அவர்களது கவனம் சிதறும் நிலை உள்ளது. எனவே, உரிய வசதிகள் செய்து தரவும், மாற்று பணியாளர்கள் நியமித்து, ஆசிரியர்களுக்கு சில நிமிடங்கள் இடைப்பட்ட ஓய்வு தர வேண்டும். இவ்வாறு அவர் கூறினார்.
Monday, May 09, 2016
அரசுப் பள்ளிகளில் பயிலும் மாணவர்களின் விவரங்களை சமர்ப்பிக்க அவகாசம் வேண்டும்: தலைமை ஆசிரியர்கள் கோரிக்கை
அரசுப் பள்ளிகளில் படிக்கும் மாணவ, மாணவிகள் சார்ந்த தகவல் தொகுப்பு விவரங்களை சமர்ப்பிக்க உரிய கால அவகாசம் வேண்டும் என தலைமை ஆசிரியர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
தமிழகம் முழுவதும் உள்ள அரசுப் பள்ளிகளில் படிக்கும் மாணவ, மாணவிகள் சார்ந்த தகவல் தொகுப்பு விவரங்கள் ஆண்டுதோறும் கல்வி தகவல் மேலாண்மை முறையில்(இஎம்ஐஎஸ்) இணையதளத்தில் பதிவேற்றம் செய்யப்படுகிறது. இதன் மூலம் மாணவ, மாணவிகளுக்கு வழங்கப்படும் குறியீட்டு எண் மூலம் அவரின் முழுமையான விவரங்களை அறிய முடியும். இந்த திட்டத்தை கல்வித்துறை கடந்த சில ஆண்டுகளாக மேற்கொண்டு வருகிறது. அதன்படி, 2015-16-ஆம் கல்வியாண்டிற்கான, மாணவ, மாணவிகளின் தகவல் தொகுப்பு விவரங்களை பதிவுசெய்ய அறிவுறுத்தப்பட்டிருந்தது.
அந்தந்த மாவட்டங்களில் செயல்படும் அரசு உதவிபெறும், சுயநிதி, மத்திய அரசுப்பாடத்திட்டத்தின் கீழ் செயல்படும் பள்ளிகள், செவ்வாய்கிழமைக்குள் (மே 10) இந்த விவரங்களை மின்னஞ்சல் மூலம் இடைநிலைக் கல்வி இணை இயக்குநருக்கு அனுப்பி வைக்க வேண்டும் என்று கல்வித்துறை உத்தரவிட்டிருந்தது. ஆனால், விவரங்களை பதிவு செய்ய கால அவகாசம் போதவில்லை என்று தலைமை ஆசிரியர்கள் கூறுகின்றனர். இது குறித்து தலைமை ஆசிரியர்கள் சிலர் கூறியதாவது:-
இந்தத் தகவல் தொகுப்பில், மாணவர்களின் புகைப்படங்கள் அண்மைக்கால படங்களாக மாற்றப்பட வேண்டும். அத்துடன் பள்ளியளவில் மாற்றம் செய்த மாணவர்களின் விவரங்களில் ஏற்படும் குழப்பம் தவிர்க்கப்பட வேண்டும். இவற்றை எங்களுக்கு வழங்கப்பட்ட 4 நாள்களில் முடிக்க முடியாது. எனவே, இப்பணிகளை நிறைவு செய்ய கூடுதல் கால அவகாசம் வழங்க வேண்டும். அல்லது பள்ளிகள் திறந்தபின் ஜூலை, ஆகஸ்ட் மாதங்களில் இப்பணிகளை மேற்கொண்டால் துல்லியமான விவரங்கள் அளிக்க முடியும் என்றனர்.
Saturday, May 07, 2016
144 தடை உத்தரவு கிடையாது ராஜேஷ் லக்கானி திட்டவட்டம்
'தமிழகத்தில், சட்டசபை தேர்தலை ஒட்டி, 144 தடையுத்தரவு பிறப்பிக்கப்படாது,'' என, தமிழக தலைமை தேர்தல் அதிகாரி ராஜேஷ் லக்கானி தெரிவித்தார். இது குறித்து, அவர் கூறியதாவது:ஓட்டுப்பதிவுக்கு அனைத்து ஏற்பாடுகளும் தயார். பாதுகாப்பு பணிக்கு, 68 கம்பெனி, மத்திய ரிசர்வ் போலீசார்; 64 கம்பெனி, எல்லை பாதுகாப்பு படை; 71 கம்பெனி, மத்திய தொழில் பாதுகாப்பு படை; 20 கம்பெனி, இந்திய - திபெத் பாதுகாப்பு படையினர்; 33 கம்பெனி, சிறப்பு பாதுகாப்பு படை; 20 கம்பெனி, ரயில்வே பாதுகாப்பு படை வீரர்கள் வந்துள்ளனர். எனவே, 144 தடையுத்தரவு பிறப்பிக்கப்பட மாட்டாது. கோவா, மஹாராஷ்டிரா, தெலுங்கானா, ஆந்திரா ஆகிய மாநிலங்களில் இருந்து, 22 கம்பெனி, துணை ராணுவ வீரர்கள் வர உள்ளனர்.
Friday, May 06, 2016
வாக்காளர் அடையாள அட்டைக்கு மாற்று ஆவணங்கள் அறிவிப்பு
சட்டசபை தேர்தலில், வாக்காளர்கள் அடையாள அட்டையாக, 11 ஆவணங்களை பயன்படுத்த, தேர்தல் கமிஷன் அனுமதி அளித்துள்ளது.சட்டசபை தேர்தலில், ஓட்டு போட செல்லும் வாக்காளர்கள், தங்களுடைய அடையாளத்தை மெய்ப்பிப்பதற்கு, வாக்காளர் புகைப்பட அடையாள அட்டையை அளிக்க வேண்டும்.
அதை அளிக்க இயலாதவர்கள், தங்களின் அடையாளத்தை மெய்ப்பிக்க, மாற்று புகைப்பட அடையாள ஆவணமாக, 11 ஆவணங்களில், ஏதேனும் ஒன்றை காண்பிக்கலாம். அவற்றின் விவரம்:
* கடவுச்சீட்டு (பாஸ்போர்ட்)
* ஓட்டுனர் உரிமம்
* மத்திய, மாநில அரசின் பொதுத்துறை நிறுவனங்களால், தொழிலாளர்களுக்கு வழங்கப்பட்ட, புகைப்படத்துடன் கூடிய பணி அடையாள அட்டை
* வங்கி அல்லது அஞ்சலக கணக்கு புத்தகம் (புகைப்படத்துடன் கூடியது)
* பான்கார்டு
* தேசிய மக்கள் தொகை பதிவேட்டின் கீழ், இந்திய தலைமைப் பதிவாளரால் வழங்கப்பட்ட ஸ்மார்ட் கார்டு
* மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதியளிப்பு திட்டத்தின் பணி அட்டை * தொழிலாளர் நல அமைச்சக திட்டத்தின் கீழ் வழங்கப்பட்ட மருத்துவ காப்பீட்டு ஸ்மார்ட் கார்டு
* புகைப்படத்துடன் கூடிய ஓய்வூதிய ஆவணம்
* தேர்தல் நிர்வாகத்தினரால் வழங்கப்பட்ட, அனுமதியளிக்கப்பட்ட வாக்காளர் புகைப்படச் சீட்டு
* லோக்சபா, சட்டசபை, சட்ட மேலவை உறுப்பினர்களுக்கு வழங்கப்பட்டுள்ள, அலுவலக அடையாள அட்டை
இத்தனை ஆவணங்கள் இருந்தாலும், வாக்காளர் பட்டியலில் பெயர் இருந்தால் மட்டுமே, அவர் ஓட்டு போட முடியும்.
Thursday, May 05, 2016
தபால் ஓட்டு செலவு குறைக்க தேர்தல் கமிஷன் புது முயற்சி
தபால் செலவை குறைக்க, அனைத்து தொகுதிகளிலும் தபால் ஓட்டுப்பதிவு மையம் அமைக்க, தேர்தல் கமிஷன் உத்தரவிட்டுள்ளது. அரசு அலுவலர்கள் தேர்தலில் தபால் மூலமாக, தங்கள் ஓட்டுக்களை பதிவு செய்கின்றனர்.
ஓட்டை பதிவு செய்து, சம்பந்தப்பட்ட தொகுதிக்கு அனுப்புவது வழக்கமாக உள்ளது. தபால் ஓட்டுக்களை, அஞ்சல் துறை மூலமாக அனுப்புவதால் அதிக செலவு ஏற்படுகிறது. செலவை கட்டுப்படுத்த, தபால் ஓட்டுப்பதிவுக்கு, சேவை மையம் அமைக்க, தேர்தல் கமிஷன் உத்தரவிட்டுள்ளது. தேர்தல் பிரிவு அதிகாரிகள் கூறியதாவது: தபால் ஓட்டு நடவடிக்கையால், தொகுதிக்கு, 50 ஆயிரம் ரூபாய் வரை செலவு ஏற்படுகிறது. செலவை குறைக்க, ஒவ்வொரு தொகுதியிலும் தபால் ஓட்டுப்பதிவு சேவை மையம் அமைக்க, உத்தரவிடப்பட்டுள்ளது.
இதன்படி, தொகுதியில் பணியாற்றும் அரசு அலுவலர்களுக்கு, ஓட்டுச்சீட்டு வழங்கப்படும். 'சீல்' வைத்த பெட்டியில் ஓட்டுச்சீட்டு அடங்கிய தபால் உறை பெறப்படும். பின், அந்தந்த தொகுதிகளுக்கான தேர்தல் நடத்தும் அலுவலருக்கு அனுப்பப்படும். இதனால், தேர்தல் அலுவலர்களின் சிரமம் குறையும்; தபால் ஓட்டுப்பதிவு, 100 சதவீதம் நடக்கும். இவ்வாறு, அவர்கள் கூறினர்.
Tuesday, May 03, 2016
234 தொகுதிகள் உருவானது எப்படி?
இந்தியா சுதந்திரம் பெற்ற பிறகு, இந்திய அரசியல் அமைப்பு சட்டத்தின் அடிப்படையில், 1952ம் ஆண்டு, முதல் பொதுத்தேர்தல் நடந்தது. இந்த தேர்தல், முந்தைய மதராஸ் பிரசிடென்சியை உள்ளடக்கியதாக நடந்தது.
இதில் தமிழகம், ஆந்திரா, கர்நாடகா, கேரளா, ஆகிய மாநிலங்களின் பல பகுதிகள் இடம் பெற்றன. மொத்தம், 375 தொகுதிகளைக் கொண்டிருந்தது. தமிழகத்தில், 188 தொகுதிகள் இடம் பெற்றிருந்தன. அதன்பின், 1957ம் ஆண்டு மாநிலங்கள் சீரமைப்புக்கு பின், மதராஸ் மாகாண சட்டசபை, 205 உறுப்பினர்களைக் கொண்டதாக இருந்தது. இதில், 130 ஒற்றை உறுப்பினர் தொகுதிகள், 37 இரட்டை உறுப்பினர் தொகுதி கள் இருந்தன. ஒருவர் நியமன உறுப்பினர்.
அடுத்து, 1962ம் ஆண்டு தேர்தலில், இரு உறுப்பினர் தொகுதிகள் நீக்கப்பட்டு, 38 கூடுதல் ஒரு உறுப்பினர் தொகுதிகள் உருவாக்கப்பட்டன. இவற்றில், 37 தொகுதிகள் தாழ்த்தப்பட்டோருக்கும், ஒரு தொகுதி பழங்குடியினருக்கும் ஒதுக்கீடு செய்யப்பட்டது.
அந்த ஆண்டு பிப்ரவரி மாதம் நடந்த, பொதுத் தேர்தலை தொடர்ந்து, மார்ச், 3ம் தேதி, மூன்றாவது சட்டசபை அமைக்கப்பட்டது. 1965ம் ஆண்டு தொகுதி சீரமைப்பு நடவடிக்கைகளின் விளைவாக, சென்னை மாகாண சட்டசபை உறுப்பினர்கள் எண்ணிக்கை, 234ஆக உயர்த்தப்பட்டது.
இவற்றில், 42 தொகுதிகள், தாழ்த்தப்பட்டோருக்கும், இரண்டு தொகுதிகள் பழங்குடியினருக்கும் ஒதுக்கீடு செய்யப்பட்டன. கூடுதலாக ஒரு இடத்திற்கு, ஆங்கிலோ - இந்திய உறுப்பினர் நியமனம் செய்யப்பட்டார்.
தொடர்ந்து, 1969ம் ஆண்டு ஜனவரி, 14ம் தேதி, மதராஸ் மாநிலம், தமிழ்நாடு மாநிலமாக பெயர் மாற்றம் செய்யப்பட்டது. எட்டாவது சட்டசபை, 1985 ஜனவரி 16ல் அமைக்கப்பட்டது. இதற்கான பொதுத்தேர்தல், 1984 டிசம்பர் மாதம் நடந்தது.
எட்டாவது சட்டசபையில், 1986 மே, 14ம் தேதி, சட்ட மேலவையை நீக்கும் அரசு தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. இதன்மூலம், தமிழக சட்ட மேலவை, 1986 நவ., 1ம் தேதி முதல் அடியோடு ரத்து செய்யப்பட்டது. 14வது சட்டசபை தற்போது முடிந்துள்ளது. நடைபெற உள்ள தேர்தலில், வெற்றி பெறும் கட்சி அமைக்கப் போவது, 15வது சட்டசபை.