இலவச SMS களை உடனுக்குடன் பெற ON tnptfmani என்று type செய்து 9870807070 என்ற எண்ணிற்கு அனுப்பி இலவச குறுந்தகவல்களை(SMS) பெறுங்கள். DND (Do NOT Disturb) சர்வீஸ்ல் உள்ள எண்கள் அதனை(DND) நீக்கிய பிறகே இச்சேவையை பெறமுடியும். plz call 1909

Monday, May 02, 2016

மே 5 முதல் 'பூத் சிலிப்' வினியோகம்


வாக்காளர்களுக்கு, 'பூத் சிலிப்' வரும், 5ம் தேதி முதல், வீடு வீடாகச் சென்று வழங்கப்படும்,'' என, தமிழகத் தலைமை தேர்தல் அதிகாரி ராஜேஷ் லக்கானி தெரிவித்தார்.இது குறித்து, அவர் மேலும் கூறியதாவது:

தமிழகத்தில் உள்ள அனைத்து வாக்காளர்களுக்கும், புகைப்படத்துடன் கூடிய, பூத் சிலிப் அச்சிடும் பணி முடிந்துள்ளது. அனைத்து வாக்காளர்களுக்கும், மே 5ம் தேதி முதல் பூத் சிலிப் வழங்கப்படும். ஓட்டுச்சாவடி அலுவலர்கள், வீடு வீடாகச் சென்று வழங்குவர். வாக்காளர் அடையாள அட்டை பெற விரும்புவோர், தேர்தல் கமிஷன் இணையதளத்தில், விரைவு தபால் மூலம் பெற விண்ணப்பிக்கலாம்.

வாக்காளர்களில், இரண்டு கோடி பேரின் மொபைல் போன் எண், தேர்தல் கமிஷனிடம் உள்ளது. அவர்களுக்கு, வாக்காளர் வரிசை எண், பாகம் எண், ஓட்டுச்சாவடி அமைந்துள்ள இடம் போன்ற விவரம், இன்று முதல், எஸ்.எம்.எஸ்., மூலம் அனுப்பி வைக்கப்படும். இவ்வாறு லக்கானி தெரிவித்தார்.

Saturday, April 30, 2016

மாணவ, மாணவியருக்கு உளவியல் ஆலோசனை:வருகிறது மேலும் 7 புதிய நடமாடும் மையம்


தமிழகத்தில், அரசு பள்ளி மாணவ, மாணவியருக்கு உளவியல் ஆலோசனை வழங்குவதற்காக, மேலும், ஏழு நடமாடும் மருத்துவ ஆலோசனை வாகனம் வாங்குவதற்கான நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

தமிழகத்தில், அரசு பள்ளிகளில் படிக்கும் மாணவ, மாணவியரின் கல்விக் கட்டணத்தில், மருத்துவக்கட்டணமாக தலா, ஒரு ரூபாய் ஒதுக்கப்படுகிறது. இந்நிதி நீண்டநாட்களாக பயன்படாமல் வைக்கப்பட்டிருந்த நிலையில், கடந்த இரு ஆண்டுகளுக்கு முன், நடமாடும் மருத்துவ ஆலோசனை வாகனங்கள் கொள்முதல் செய்யப்பட்டன. தமிழகம் முழுவதும், 10 வாகனங்களில், தலா ஒரு உளவியல் ஆலோசகர் நியமிக்கப்பட்டு, 9ம் வகுப்பு முதல், பிளஸ் 2 வரை, படிக்கும் மாணவ, மாணவியருக்கு ஆலோசனை வழங்கப்பட்டு வந்தது.

தற்போது, மூன்றுமாவட்டங்களுக்கு, ஒரு ஆலோசனை வாகனம் செயல்பட்டு வருகிறது. இந்நிலையில், நடப்பு கல்வியாண்டில், மேலும் ஏழு வாகனங்கள் கொள்முதல் செய்ய நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. இதன் மூலம், இரண்டு மாவட்டங்களுக்கு, ஒரு நடமாடும் ஆலோசனை வாகனம் என்ற நிலை மாறும். இதன் மூலம், இன்னும் கூடுதலாக மாணவ, மாணவியருக்கு ஆலோசனை வழங்கும் நிலை உருவாகியுள்ளது.

புத்தக சுமையை குறைக்க நடவடிக்கை:பள்ளிகளுக்கு சி.பி.எஸ்.இ., எச்சரிக்கை

'தேவையற்ற புத்தகங்களை குழந்தைகளுக்கு வழங்க வேண்டாம்' என, மத்திய இடைநிலை கல்வி வாரியமான சி.பி.எஸ்.இ., அறிவித்துள்ளது.சி.பி.எஸ்.இ., பள்ளி களில், ஏப்., 1 முதல் புதிய கல்வி ஆண்டுக்கான வகுப்பு கள் நடந்து வருகின்றன.

பாடத்திட்ட புத்தகங்கள் மட்டுமின்றி கூடுதல் புத்தகங்களும் வாங்க, மாணவர்களை பல பள்ளிகள் கட்டாயப்படுத்துகின்றன. இந்த நிலையில், அனைத்து பள்ளிகளுக்கும், சி.பி.எஸ்.இ., சார்பில் சுற்றறிக்கை அனுப்பப்பட்டு உள்ளது. சுற்றறிக்கை விவரம்:அனைத்து பள்ளிகளிலும் புத்தக சுமையை குறைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும். பாடத்திட்டப்படி மட்டுமே புத்தகங்களை கொண்டு வர, மாணவர்களுக்கு அறிவுறுத்த வேண்டும். பாடத்திட்டத்திற்கு தேவையில்லாத விளக்க புத்தகங்களை, பள்ளிகளுக்கு கொண்டு வர கட்டாயப்படுத்த வேண்டாம்.

இரண்டாம் வகுப்பு வரை, மாணவர்களின் புத்தகங்களை வகுப்பறையில் வைத்து இருந்து, பாட வேளைகளில் மட்டுமே கொடுக்க வேண்டும். வகுப்பறைகளில் நுாலகம் வைத்து, மாணவருக்கு படிக்கும் பழக்கத்தை ஏற்படுத்த வேண்டும்.மாணவர்களுக்கு உடல் ரீதியாக எந்த பாதிப்பும் ஏற்படாத வகையில், அவர்கள் வீட்டில் இருந்து வரும் போது புத்தக சுமையை குறைக்க, பெற்றோருக்கு அறிவுறுத்துவதுடன், தொடர் மதிப்பீட்டு முறையை சரியாக செயல்படுத்த வேண்டும்.இவ்வாறு சுற்றறிக்கையில் கூறப்பட்டு உள்ளது

Friday, April 29, 2016

வாக்காளர் பட்டியலில் நேற்று 29.4.16 முதல் வரிசை எண் மாறியுள்ளது, சரி பார்த்துக் கொள்ளவும்

Click below

http://electoralservicessearch.azurewebsites.net/searchbyname.aspx

அரசு கலை, அறிவியல் கல்லூரிகளில் மே 2 முதல் விண்ணப்பங்கள் விநியோகம்


அரசு கலை, அறிவியல் கல்லூரிகளில் 2016-17 கல்வி ஆண்டு மாணவர் சேர்க்கைக்கான விண்ணப்பங்கள் மே 2-ஆம் தேதி முதல் வழங்கப்பட உள்ளன. பிளஸ்-2 தேர்வு முடிவுகள் வெளியான அடுத்த 10 நாள்கள் வரை விண்ணப்பங்கள் விநியோகிக்கப்பட உள்ளன.

தமிழகம் முழுவதும் 62 அரசு கலை, அறிவியல் கல்லூரிகள் இயங்கி வருகின்றன. இந்தக் கல்லூரிகளில் 2016-17-ஆம் கல்வியாண்டுக்கு மாணவர் சேர்க்கைக்கான விண்ணப்ப விநியோகம் மே 2-ஆம் தேதி முதல் தொடங்கப்பட உள்ளது. விண்ணப்பக் கட்டணம் ரூ. 25, பதிவுக் கட்டணம் ரூ. 2 என மொத்தம் ரூ. 27 செலுத்தி விண்ணப்பத்தைப் பெற்றுக் கொள்ளலாம் என கல்லூரி முதல்வர்கள் தெரிவித்தனர்.

முன்கூட்டியே மாணவர் சேர்க்கை...:

பிளஸ்-2 தேர்வில் அதிக மதிப்பெண் எடுக்கக் கூடிய மாணவர்களை ஈர்க்கும் வகையில் அரசு கலை, அறிவியல் கல்லூரிகளில் கடந்த ஆண்டு முதல் முன்கூட்டியே மாணவர் சேர்க்கை நடத்தப்பட்டு வருகிறது. அதற்காக கடந்த ஆண்டு மே 4-ஆம் தேதி முதல் விண்ணப்ப விநியோகம் செய்யப்பட்டது. அதுபோல நிகழாண்டும் மே 2-ஆம் தேதியே விண்ணப்ப விநியோகத்தைத் தொடங்கி, சேர்க்கையையும் விரைவாக நடத்தி முடிக்க அரசு கல்லூரிகள் திட்டமிட்டுள்ளன.

கட்டணம் முறைப்படுத்தப்படுமா?: அரசு உதவி பெறும் மற்றும் சுயநிதி கலை - அறிவியல் கல்லூரிகளில் ரூ. 250 முதல் ரூ. 500 வரை விண்ணப்ப கட்டணம் வசூலிக்கப்படுவதாக ஆண்டுக்கு ஆண்டு புகார்கள் எழுந்து வருகின்றன. இதைத் தடுக்க கல்லூரி கல்வி இயக்குநர் அலுவலகம் நடவடிக்கை எடுக்குமா என்ற எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.

இ.பி.எப்., வட்டி 8.8 சதவீதம்


தொழிலாளர் வருங்கால வைப்பு நிதிக்கான வட்டியை, மத்திய அரசு, மீண்டும் 8.8 சத வீதமாக உயர்த்தியது.இ.பி.எப்., வட்டி விகிதத்தை, 2015 - 16ம் நிதியாண்டுக்கு, 8.8 சதவீதமாக, மத்திய தொழிலாளர் நலத்துறை அமைச்சர் பண்டாரு தத்தாத்ரேயா தலைமையிலான மத்திய வாரியம் பரிந்துரைத்தது.ஆனால், அதற்கு மாறாக, இ.பி.எப்., தொகைக்கு 8.7 சதவீத வட்டியை மட்டும் வழங்குவதற்கு மத்திய நிதியமைச்சகம், சில நாட்களுக்கு முன், ஒப்புதல் அளித்தது. இதனை கண்டித்து, நாடு முழுவதும் தொழிற் சங்கங்கள் எதிர்ப்பு தெரிவித்து போராட்டம் நடத்தின. இதையடுத்து, இ.பி.எப்., வட்டியை, 8.7 சதவீதத்தில் இருந்து 8.8 சதவீதமாக உயர்த்த, மத்திய அரசு ஒப்புதல் அளித்துள்ளது.

Thursday, April 28, 2016

தபால் ஓட்டுகளில் மீண்டும் குளறுபடி : செல்லாதவை அதிகரிக்கும் அபாயம்


தேர்தல் கமிஷன் குளறுபடியால், நடப்பு ஆண்டும், தபால் ஓட்டுகளில், செல்லாத ஓட்டுகள் அதிகரிக்கும் அபாயம் உருவாகியுள்ளது.தமிழகம் முழுவதும், சட்டசபை தேர்தல் பணிகளுக்காக, 3 லட்சத்துக்கும் மேற்பட்ட ஆசிரியர்கள் மற்றும் அரசு ஊழியர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர்.

அவர்கள், தங்கள் ஓட்டை, தபால் ஓட்டு மூலம் செலுத்துகின்றனர். கடந்த தேர்தல்களில், தாமதமாக படிவங்கள் வழங்கப்பட்டதால், பலர், தபால் ஓட்டு போட முடியாத நிலை உருவானது. இதனால், அதற்கான படிவங்களை முன்னதாகவே வழங்க வேண்டும் என, கோரிக்கை விடுக்கப்பட்டது. அதற்கேற்ப, ஏப்., 24ம் தேதி நடந்த முதல் தேர்தல் பயிற்சியின் போதே, ஆசிரியர்களுக்கு தபால் ஓட்டு படிவங்கள் வழங்கப்பட்டன. அதில், வாக்காளர் பட்டியலில் உள்ள வரிசை எண் உள்ளிட்ட விவரங்கள் பெறப்பட்டன. ஏற்கனவே, அந்த விவரங்களை தயார் நிலையில் வைத்திருந்த ஆசிரியர்கள் பலரும், படிவத்தை பூர்த்தி செய்து கொடுத்துள்ளனர்.

மற்றவர்கள், மே, 7ம் தேதி நடக்கும் இரண்டாம் கட்ட பயிற்சி வகுப்பின்போது, சமர்ப்பிக்க அறிவுறுத்தப்பட்டது. ஆனால், புதிய வேட்பாளர் பட்டியலில், பலரின் வாக்காளர் வரிசை எண் மாறியுள்ளது. வாக்காளர் அடையாள அட்டையை கொண்டு, இணைய தளத்தில் பரிசோதிக்கும்போது, பழைய வாக்காளர் வரிசை எண்ணே காட்டுகிறது. இதனால், எந்த வரிசை எண்ணை படிவத்தில் எழுதுவது என குழப்பம் நிலவுகிறது. அப்படி மாற்றி எழுதும்பட்சத்தில், செல்லாத ஓட்டாக கணக்கிடப்படும் என்பதால், பலரும் கவலையில் உள்ளனர். தவறான வரிசை எண் எழுதப்படும் பட்சத்தில், தபால் ஓட்டு கிடைக்காமல் போக வாய்ப்புள்ளது. மே, 7ம் தேதி படிவம் ஒப்படைத்து, அதன்பின் தேர்தல் கமிஷன், அந்த படிவங்களை ஆய்வு செய்து, தபால் ஓட்டுகளை அனுப்புவதற்குள், தேர்தல் பணிக்கு ஆசிரியர்கள் கிளம்ப வேண்டியிருக்கும்;

இதனால், இந்த ஆண்டும் ஆசிரியர்கள் பலரும், ஓட்டு போட முடியாத நிலை ஏற்படும் என, ஆசிரியர்கள் குற்றம் சாட்டுகின்றனர். தேர்தல் நடத்த உதவும் ஆசிரியர்கள், தங்கள் ஓட்டுகளை முன்னதாகவே பதிவு செய்ய வசதியாக, முன்கூட்டியே தபால் ஓட்டுகளை வழங்க, தேர்தல் கமிஷன் நடவடிக்கை எடுக்க வேண்டும் என கோரிக்கை விடுத்துள்ளனர்

குறள் விளக்கம்


துப்பார்க்குத் துப்பாய துப்பாக்கித் துப்பார்க்குத்
துப்பாய தூஉம் மழை.
இந்தக் குறளுக்குப் பொருள் கூறுங்கள், விளங்கினாற்போலும் விளங்காததுபோலும் இருக்கிறது என்று சிலர் கேட்கின்றனர்.
இந்தக் குறளுக்கான பொருளை எல்லாரும் ஓரளவு அறிவார்கள். உணவை உண்பவர்களுக்கு உணவை விளைவித்துத் தருவதும், உணவுண்போர்க்குத் தானே உணவாக ஆவதும் மழையே - என்பது அதன் பொருள்.
குறள்வழியே பொருளுணரும்படி சொல் சொல்லாகப் பிடித்து விளக்கினால்தான் உங்களுக்குக் குறளின் பெருமையும் பொருளின் அருமையும் புரியும். விளக்குகிறேன்.
இக்குறளில் பயிலும் துப்பு என்னும் சொல்லின் பொருள் ‘உணவு’.
துப்பு என்பதற்கு எண்ணற்ற பொருள்கள் காணப்படினும் இங்கு அதற்கு உணவு என்பதே பொருள்.
இப்போது குறளுக்குப் போவோம்.
துப்பு = உணவு
துப்பார்க்கு = உண்போர்க்கு.
பெயர்ச்சொல்லோடு அன், அள், ஆர் விகுதி சேர்த்தால் அப்பெயர்க்குரிய உயர்திணையைக் குறிப்பதாகிவிடும்.
எடுத்துக்காட்டாக, வம்பு என்பதோடு மேற்காணும் விகுதிகளைச் சேர்த்தால் வம்பன், வம்பினள், வம்பார் என வம்பு செய்வோரைக் குறிக்கிறோமே, அதுபோல.
ஆக, துப்பார்க்கு = உண்போர்க்கு
அடுத்து, துப்பாய’ என்றால் ‘உணவாகும்படியான’
தலையாய கடமை என்பதில் உள்ள தலையாய-விற்கு என்ன பொருள் கருதுகிறோம் ? ‘தலையாகும்படியான, தலையாகத்தக்க.’ அதுபோல துப்பாய என்றால் உணவாகும்படியான, உணவாகத்தக்க.
துப்பாக்கி = துப்பு + ஆக்கி = உணவாக்கி. இச்சொற்றொடர் உங்களுக்கு எளிமையாய் விளங்குகின்ற ஒன்று.
இதுவரை பார்த்தது குறளின் ஒரு பகுதி.
துப்பார்க்குத் துப்பாய துப்பாக்கி = உண்போர்க்கு உணவாகும்படியான உணவை ஆக்கி. (1)
அடுத்த பாதிக்குச் செல்வோம்.
குறளின் நான்காம் சீர் என்ன ? மீண்டும் துப்பார்க்கு.
இங்கும் அதே பொருள்தான்.
துப்பார்க்கு = உண்போர்க்கு.
துப்பாயதூஉம் = இந்தச் சொற்றொடரில் உ என்ற அளபெடையை நீக்கிக்கொள்ள வேண்டும்.
செய்யுளில் இதுபோல் எங்கே அளபெடையைக் கண்டாலும் அவ்வெழுத்தை நீக்கிவிட்டு அதற்கு முன்னுள்ள எழுத்தைக் குறிலாய்க் கருத வேண்டும்.
துப்பாயதூஉம் என்பதில் உ என்னும் அளபெடையை நீக்கினால் கிடைப்பது துப்பாதூ__ம். அதற்கு முன்னுள்ள நெடிலைக் குறிலாக்கினால் துப்பாயதும்.
இவ்வாறு கிடைக்கும் இறுதிச் சொற்றொடரைத்தான் நாம் பொருள்கொள்ளக் கருதவேண்டும். நமக்குக் கிடைத்துள்ள இறுதிச் சொற்றொடர் ‘துப்பாயதும்’.
துப்பாயதும் = துப்பு ஆயதும் = ஆயது என்றால் ஆவது.
துப்பாயதும் = உணவு ஆவதும்.
குறளின் இரண்டாம் பகுதிக்கு முழுப்பொருள் காண்போம்.
துப்பார்க்குத் துப்பாயதூஉம் மழை = உண்போர்க்கு உணவாவதும் மழை. (2)
இப்போது (1) மற்றும் (2) ஆகிய இவ்விரண்டு பொருள் முடிவுகளையும் ஒன்றாக்கிப் பாருங்கள்.
துப்பார்க்குத் துப்பாய துப்பாக்கி = உண்போர்க்கு உணவாகும்படியான உணவை ஆக்கி.
துப்பார்க்குத் துப்பாயதூஉம் மழை = உண்போர்க்கு உணவாவதும் மழை.
துப்பார்க்குத் துப்பாய துப்பாக்கித் துப்பார்க்குத்
துப்பாய தூஉம் மழை.
உண்போர்க்கு உணவாகும்படியான உணவையும் ஆக்கி, உண்போர்க்குத் தானே உணவும் ஆகும் மழை.
தெளிவாக விளங்கிக்கொண்டீர்களா ?

Wednesday, April 27, 2016

பிஎப்புக்கு 8.7% வட்டி தரக்கூட நிதியே இல்லை: நிதியமைச்சகம் திடீர் விளக்கம்


பிஎப்புக்கு 8.7 சதவீத வட்டி வழங்கக்கூட நிதியில்லை என நிதியமைச்சகம் தெரிவித்துள்ளது. தொழிலாளர் வருங்கால வைப்புநிதி சந்தாதாரர்களுக்கு 2015-16 நிதியாண்டுக்கான வட்டியாக 8.8 சதவீதம் அளிக்க வேண்டும் மத்திய அறக்கட்டளை வாரியம் பரிந்துரை செய்திருந்தது. ஆனால் நிதியமைச்சகம் 8.7 சதவீதம் வழங்க ஒப்புதல் அளித்தது.

பிஎப் நிறுவனம் கடந்த 2013-14 மற்றும் 2014-15 நிதியாண்டுகளுக்கான வட்டியாக 8.75 சதவீதம் வழங்கியது. இது 2012-13 நிதியாண்டில் 8.5 சதவீதமாகவும், 2011-12 நிதியாண்டில் 8.25 சதவீதமாகவும் இருந்தது. இதற்கு முன்பு கால் சதவீதம் அளவுக்கு வட்டி உயர்த்தப்பட்டது. அதோடு கடந்த பிப்ரவரி 16ம் தேதி 2015-16க்கான இடைக்கால பிஎப் வட்டி விகிதமாக 8.8 சதவீதமாக முடிவு செய்யப்பட்டது. இந்த இடைக்கால வட்டியை கூட தர மறுத்துள்ளது நிதியமைச்சகம். இந்த முடிவுக்கு தொழிற்சங்கங்கள் கடும் கண்டனம் தெரிவித்தன.

அதோடு, சிஐடியு, ஏஐடியுசி உள்ளிட்ட 10 தொழிற்சங்கங்கள் நாடு முழுவதும் நாளை ஆர்ப்பாட்டம் நடத்துவதாக அறிவித்துள்ளன. இதற்கிடையில், வட்டி குறைத்ததற்கு நிதி பற்றாக்குறையே காரணம் என நிதியமைச்சகம் கூறியுள்ளது. இதுகுறித்து நிதியமைச்சக வட்டாரங்கள் கூறியதாவது:கடந்த 2014-15 நிதியாண்டில் பிஎப் நிதி முதலீடு மூலம் கிடைத்த வருவாய் ரூ.1,604.05 கோடி உபரி இருந்தது. தற்போது 8.8 சதவீத வட்டி அளித்தால் இந்த உபரித்தொகை ரூ.673.85 கோடியாக குறைந்து விடும். இதே நிலை நீடித்தால் அடுத்த ஆண்டு இந்த அளவுக்கு கூட நிலையான வட்டி கொடுக்க முடியாத சூழ்நிலை ஏற்பட்டு விடும். 8.7 சதவீதம் கொடுத்தால் இந்த உபரி ரூ.1,000 கோடியாக இருக்கும்.

ஆனால் இதை தரக்கூட போதுமான நிதியில்லை. அதுமட்டுமின்றி, செயல்படாத 9 கோடி பிஎப் கணக்குகளில் உள்ள ரூ.35,000 கோடிக்கு மேற்பட்ட மூலனத தொகையில் கிடைத்த வட்டி வருவாய் மத்திய அறக்கட்டளை குழு முடிவின்படி தற்போது செயல்பாட்டில் உள்ள கணக்குகளுக்கு பகிர்ந்தளிக்கப்பட்டுள்ளது என தெரிவித்துள்ளனர்.

மே 9ம் தேதி பிளஸ் 2 ரிசல்ட்? கல்வித்துறை செயலாளர் முடிவுக்காக காத்திருப்பு


பிளஸ் 2 தேர்வு முடிவுகள் மே 9ம் தேதி வெளியிட பள்ளிக் கல்வித்துறை ஆலோசித்து வருகிறது. பிளஸ் 2 தேர்வுகள் மார்ச் 4ம் தேதி தொடங்கி ஏப்ரல் 1ம் தேதி முடிந்தன. தேர்வு விடைத்தாள்கள் திருத்தும் பணி மார்ச் 14ம் தேதி தொடங்கி ஏப்ரல் 23ம் தேதி வரை நடந்தது.

சென்னை கோட்டூர்புரத்தில் உள்ள டேட்டா சென்டரில் மதிப்பெண் பட்டியல் தயாரிக்கும் பணிகள் நடக்கிறது. கடந்த ஆண்டு நடந்த தேர்வின் முடிவுகள் மே 2வது வாரத்தில் வெளியிட்டனர். ஆனால் இந்த ஆண்டு சட்டப் பேரவை தேர்தல் அறிவிக்கப்பட்டு, தேர்தல் விதிமுறைகள் நடமுறையில் உள்ளன. ஆனாலும், தேர்தலுக்கு முன்னதாகவே பிளஸ் 2 தேர்வு முடிவை வெளியிட வேண்டும் என்று அரசு அழுத்தம் கொடுத்து வருகிறது.

தேர்வு முடிவுகள் வெளியாகும் தேதி குறித்து பள்ளிக் கல்வித்துறை செயலாளர் சபீதாவின் முடிவுக்காக தேர்வுத்துறை காத்திருக்கிறது. இதில் தேர்வுத்துறை ஏதும் செய்ய முடியாத நிலையில் உள்ளதாக தேர்வுத்துறை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

Monday, April 25, 2016

அடுத்த ஆண்டு ஜனவரி 1 முதல் அனைத்து மொபைல்களிலும் அவசர உதவி பட்டன் கட்டாயம்


புதிதாக தயாரிக்கப்படும் அனைத்து மொபைல் போன்களிலும் எச்சரிக்கை பட்டன் வசதி அடுத்த ஆண்டு ஜனவரி 1 முதல் கட்டாயம் என மத்திய அரசு உத்தரவிடப்பட்டுள்ளது. மத்திய தொலைத்தொடர்பு துறை அமைச்சர் ரவிசங்கர் பிரசாத் நேற்று வெளியிட்டுள்ள அறிக்கை:

தொழில் நுட்பம் மனித வாழ்க்கையை மேம்படுத்துகிறது. அதேநேரத்தில் மகளிர் பாதுகாப்புக்கு இது எந்த வகையில் பயன்படுத்தப்படுகிறது என்பதையும் உறுதி செய்ய வேண்டும். இந்த வகையில், 2017 ஜனவரி 1ம் தேதி முதல், அவசர உதவி பட்டன் இல்லாமல் எந்த மொபைலும் இந்தியாவில் விற்பனை செய்யப்பட கூடாது. இதுபோல் 2018 ஜனவரி 1ம் தேதியில் இருந்து விற்கப்படும் மொபைல் போன்களில் ஜிபிஎஸ் வசதி இருப்பதும் கட்டாயம் ஆக்கப்படுகிறது.

ஜிபிஎஸ் வசதி அல்லாத சாதாரண போன்களாக இருந்தாலும் அவற்றில் 5 அல்லது 9ம் எண் பட்டன்கள் அவசர உதவி அழைப்புக்கானதாக ஒதுக்கப்பட வேண்டும். மொபைல் போன்களை ஆன் அல்லது ஆஃப் செய்ய சில நொடிகளுக்கு நீண்ட நேரம் அழுத்துவதுபோல, இந்த அவசர உதவி பட்டன்களை நீண்ட நேரம் அழுத்துவதன் மூலம் அழைப்பு செல்வதுபோல் அமைக்க வேண்டும். அல்லது அதே பட்டனை மூன்று முறை தொடர்ந்து அழுத்துவதன் மூலமாகவும் அழைப்பு செல்வதுபோல் அமைக்கலாம். இவ்வாறு அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

அரசுப் பள்ளி மாணவர் சேர்க்கை 10 சதவீதம் அதிகரிக்க உத்தரவு


வரும் கல்வி ஆண்டில் அரசுப் பள்ளிகளில் மாணவர் சேர்க்கையை 10 சதவீதம் அதிகரிக்க கல்வித்துறை உத்தரவிட்டுள்ளது.தமிழக அரசு பள்ளிக்கல்வித்துறை சார்பில் தலைமை ஆசிரியர்களுக்கு அனுப்பியுள்ள சுற்றறிக்கை:அரசுப்பள்ளிகளில் கடந்த ஆண்டை விட வரும் ஆண்டில் 10 சதவீதம் மாணவர் சேர்க்கையை அதிகரிக்க வேண்டும். பள்ளிகள் திறக்கும் நாளில் மாணவர், ஆசிரியர் வருகையை பதிவு செய்யும் வகையில் வருகை பதிவேடு பராமரிக்க வேண்டும்.

பள்ளி திறக்கும் நாளிலேயே இலவச பஸ் பாஸ் கிடைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும். பள்ளிகளின் உள்கட்டமைப்பு வசதிகள், ஆங்கில வழிக் கல்வித்தரம், வழங்கப்படும் நலத்திட்ட உதவிகள், கடந்தாண்டு மாணவர்களின் தேர்ச்சி விகிதம், வளர்ச்சி குறித்து பெற்றோருக்கு எடுத்துக்கூறி மாணவர் சேர்க்கையை அதிகப்படுத்த வேண்டும்.பத்தாம் வகுப்பு வரை தொடர்ந்து அதே பள்ளியில் படித்த மாணவர்களை மதிப்பெண் குறைவை காரணம் காட்டி வேறு பள்ளிகளுக்கு அனுப்ப கூடாது. அதே பள்ளியில் பிளஸ் 1 வகுப்பில் சேர்க்க வேண்டும், என கூறப்பட்டுள்ளது.

அடுத்த ஆண்டுக்குள் புதிதாக 2 லட்சம் மத்திய அரசுப் பணிகள்: மத்திய அமைச்சர் ஜிதேந்திர சிங் தகவல்


அடுத்த ஆண்டுக்குள் (2017) புதிதாக 2 லட்சத்துக்கும் மேற்பட்ட மத்திய அரசுப் பணியிடங்கள் உருவாக்கப்படும் என்று மத்திய பணியாளர், பொதுமக்கள் குறைதீர்ப்புத் துறை இணையமைச்சர் ஜிதேந்திர சிங் தெரிவித்தார். தில்லியில் பிடிஐ செய்தி நிறுவனத்துக்கு திங்கள்கிழமை பேட்டியளித்த அவர் இது தொடர்பாக மேலும் கூறியதாவது:

சிறப்பான நிர்வாகத்தை அளிக்கும் வகையிலும், அரசின் பல்வேறு துறைகளை வலுப்படுத்தும் நோக்கிலும் மத்திய அரசு பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. இதன் ஒருபகுதியாக புதிதாக 2.18 லட்சம் மத்திய அரசுப் பணியிடங்களை உருவாக்கத் திட்டமிடப்பட்டுள்ளது. முக்கியமாக, மத்திய உள்துறை அமைச்சகத்தில் 5,635 பணிடங்களும், மத்திய பாதுகாப்புப் படைகளில் 47,264 பணியிடங்களும், பாதுகாப்புத் துறை அமைச்சகத்தில் 10,894 பணிடங்களும், விமானப் போக்குவரத்துத் துறை அமைச்சகத்தில் 1,080 பணியிடங்களும், அணுசக்தித் துறை அமைச்சகத்தில் 6,353 பணியிடங்களும், வெளியுறவுத் துறை அமைச்சகத்தில் 2,072 பணியிடங்களும், சுரங்கத்துறையில் 12,902 பணியிடங்களும் பணியாளர் நலத்துறை அமைச்சகத்தில் 1,796 பணிடங்களும் உருவாக்கப்பட்ட உள்ளன என்று அவர் தெரிவித்தார்.

Sunday, April 24, 2016

தேர்தல் பயிற்சி வகுப்பில் ஆசிரியர்கள் அவதி:அடிப்படை வசதிகள் செய்யப்படாததால் புலம்பல்


சட்டசபை தேர்தல் தொடர்பாக, ஆசிரியர்களுக்கான, முதல் கட்ட பயிற்சி வகுப்பு, தமிழகம் முழுவதும் நேற்று நடந்தது. இதில், தேர்தல் அதிகாரிகள், எந்த அடிப்படை வசதியையும் செய்யாததால், ஆசிரியர்கள் கடும் அவதிக்கு ஆளாகினர்.

சட்டசபை தேர்தல் அன்று, ஓட்டுச்சாவடி மையத்தில், தேர்தல் பணியில் ஈடுபடும் ஆசிரியர்கள், ஓட்டுப்பதிவு முடிந்ததும், ஓட்டுப் பதிவு இயந்திரங்களை ஒருங்கிணைத்து, ஓட்டு எண்ணும் மையத்துக்கு அனுப்புதல்; ஓட்டு எண்ணிக்கை போன்ற பணிகளிலும் ஈடுபடுத்தப்படுகின்றனர். இதற்காக, ஒவ்வொரு தேர்தலிலும், ஆசிரியர்களுக்கு, நான்கு கட்ட பயிற்சி வகுப்பு நடத்தப்படும். முதல் கட்ட பயிற்சி வகுப்பு, நேற்று தமிழகம் முழுவதும் நடந்தது; இதில், 1.5 லட்சம் ஆசிரியர்கள் பங்கேற்றனர்.

ஓட்டுப்பதிவு இயந்திரங்களை வைத்து, மாவட்ட தேர்தல் அதிகாரிகள், தேர்தல் பார்வையாளர்கள், தேர்தல் விதிமுறைகள் மற்றும் பணிகள் குறித்து விளக்கம் அளித்தனர். நாள் முழுவதும் நடந்த இந்த பயிற்சி வகுப்பில், பயிற்சி மையங்களில் எந்தவித அடிப்படை வசதிகளும் செய்யப்படவில்லை. பல இடங்களில், மைக் மற்றும் ஒலிபெருக்கி வசதி செய்யப்படவில்லை. அதனால், தேர்தல் அதிகாரி கூறிய விஷயங்கள் ஆசிரியர்களுக்கு தெளிவாக விளங்கவில்லை. ஆசிரியர்கள் அமர சரியான இட வசதி செய்யப்படவில்லை. கழிப்பறைகள் சுத்தம் செய்யப்படாமல் துர்நாற்றம் வீசியது. மதிய உணவு வழங்கியதில் பற்றாக்குறை ஏற்பட்டது; குடிநீர் வசதியும் சரிவர செய்யப்படவில்லை. இதுகுறித்து ஆசிரியர்கள் சிலர் கூறும்போது, 'பயிற்சி வகுப்பை திட்டமிட்டு செய்யவில்லை. பயிற்சி வகுப்பை நடத்திய வருவாய்த்துறை அலுவலர்கள், அடிப்படை வசதிகளை செய்யாமல், ஆசிரியர்களை மரியாதையின்றி தரக்குறைவாக நடத்தினர். இதே நிலை நீடித்தால், தேர்தல் பணிகளை புறக்கணிப்போம்' என்றனர்

இறுதி வாக்காளர் பட்டியல்29ம் தேதி வெளியீடு


''இறுதி வாக்காளர் பட்டியல், 29ம் தேதி வெளியிடப்படும்,'' என, தமிழக தலைமை தேர்தல் அதிகாரி ராஜேஷ் லக்கானி தெரிவித்தார்.தமிழகத்தில், அனைத்து சட்டசபை தொகுதிகளிலும், ஜன., 20ம் தேதி இறுதி வாக்காளர் பட்டியல் வெளியிடப்பட்டது. அதன்படி, 5.79 கோடி வாக்காளர்கள் உள்ளனர். அதன்பின், ஒன்றுக்கும் மேற்பட்ட இடங்களில் இருந்த வாக்காளர்களின் பெயர், இறந்தவர்களின் பெயர், என, ஆறு லட்சம் வாக்காளர்களின் பெயர்கள் நீக்கப்பட்டன.

சட்டசபை தேர்தலையொட்டி, சிறப்பு முகாம் நடத்தப்பட்டது. ஆன்லைனில் விண்ணப்பிக்க வசதி செய்யப்பட்டது. இதன் காரணமாக, பெயர் சேர்க்க, நீக்க, திருத்தம் செய்ய, முகவரி மாற்ற, 6.55 லட்சம் பேர் விண்ணப்பித்தனர்.இவ்விண்ணப்பங்களை சரி பார்க்கும் பணி நடந்து வருகிறது. இப்பணி, 22ம் தேதிக்குள் முடிந்து விடும் என எதிர்பார்க்கப்பட்டது.

ஆனால், சில மாவட்டங்களில், இன்னமும் பணி நிறைவு பெறவில்லை.எனவே, 29ம் தேதி, இறுதி வாக்காளர் பட்டியல் வெளியிடப்படும் என, தமிழக தலைமை தேர்தல் அதிகாரி ராஜேஷ் லக்கானி தெரிவித்தார்.